Jun 8, 2020

உலகக் கண்ணோட்டம்




உங்களுடைய / உங்கள் தலைவர்களுடைய உலகக் கண்ணோட்டம் எத்தகையது என்பதிலிருந்து உங்கள் தேடலைத் தொடங்குங்கள்!

உலகக் கண்ணோட்டம் என்றால் என்ன? எது ஒன்றையும் விளங்கிக் கொள்ளும் அல்லது காணும் போக்கு! நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும்/ பிரச்சினைகள் பற்றிய காரண, காரியங்களுக்கு விளக்கம் கான்பது என்பதாகும்.

எல்லாவற்றுக்கும் மூலம் எண்ணமே என்று விளக்கம் கொடுப்பது கருத்துமுதல்வாதம்! அதாவது மனிதனுக்கு முதலில் ஒரு எண்ணம் / கருத்து உண்டாகிறது... (உ. ம் பேராசை, கர்வம் / சாதி வெறி, மத வெறி போன்றவை) அது அவனது செயலில் வெளிப்படுகிறது, அதற்கேற்ற அதிகாரங்களை அவன் படைக்கிறான் என்று காண்பது கருத்துமுதல்வாதம்! இது மதயவய்ப்பட்டது! உலகம் தோன்றியது எப்படி என்பதற்கு “கடவுளின் சித்தம்” என்னும் வாதம்!

கடவுள் உலகைப் படைத்தார், உடலுக்கு வெளியே பிரம்மம், ஆண்மா. இருக்கிறது, அது பரிசுத்தமானது, மதம் அதனை ஒழுங்குபடுத்தவல்லது, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம், இப்படியான concepts அதன் வழிவகைப் பட்டவை! ஒருவன் தன்னை நல்வழிப்படுத்திக் கொள்வதன் மூலம் எல்லாம் நண்மையாக நடக்கும் என்னும் வகையிலான அகவயப்பட்ட (தனி மனித மன மாற்றம்) நன்நெறிகளை இது போதிக்கும்! ஆனால் மனிதர்களின் கூட்டுச் சமூக வாழ்வையும், நிலைமைகளையும் புறக்கணித்து யதார்தத்திலிருந்து விலகி இருக்கும்! எது ஒன்றும் நிலையானது என்றும் வாதிடக் கூடியது! புலன்களால் உணரமுடியாதவற்றை கடவுள் தன்மையில் கொண்டு நிறுத்தக் கூடியது!

புலன்களால் உணர முடியாதது, படைப்பாளி என்னும் கருத்தாக்கங்கள் மூலம் தமக்கு மேலே ஒரு சக்தி உண்டு என்று வாதிட்டு அந்த சக்தியை மேலானதாக தரித்து வணங்கச் செய்வதோடு, மனிதர்களை அதற்கு அடிபணியவும் சொல்கிறது! இந்தப் புள்ளியிலிருந்தே உயர்வு தாழ்வு, சக்தி வாய்ந்தவர், சக்தியற்றவர் என்னும் ஏற்றத்தாழ்வு எண்ணங்கள் உருபெறுகின்றன.

மனிதனின் பிறப்பே துயரானது! துக்கமயமானது! முன்சென்ம வினை என்று சர்வத்தையும் துக்கமயமாக சித்திரப்படுத்தி, உன் இன்பம் உன் கையில் என்று எல்லாப் பிரச்சினைகளுக்கும், தீர்வுகளுக்கும் தனி மனிதனையே பொறுப்பாக்குகிறது! (உண்மையில் இது மோசடி).

நம்மைக் காக்க மேலே ஒரு சக்தி இருக்கிறது. அது சர்வ வல்லமைப் படைத்தது. நன்மை தீமை என்பது கர்ம வினை! தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டும் சக்தி அந்த ‘நிர்வாகிக்கே’ உண்டு! எனவே அவன் ஆயுதம் தரிக்கலாம்! மக்கள் அந்த சக்தியிடம் மண்டியிட்டு சமாதானமாக மன்றாட வேண்டும் என்பது SUBTEXT!

நிர்வாகி சரியில்லை, அவன் படைத்த அமைப்பும் சரியில்லை என்று எதிர்த்தால் உங்களை Anti-National ஆக்கி ஆயுதங் கொண்டு அழிக்கவும் அந்த சக்திக்கே உரிமை இருக்கிறது! மக்கள் அப்போதும் அகிம்சையுடன் மன்றாட வேண்டும்! (தேவர்-அரக்கர் கதைகள் இத்தகையவை).

*****

மாறாக எல்லாம் பொருள்மையமானது! பொருளிலிருந்து உலகம் தோன்றியது. பொருள்களின் இயக்கப் போக்கு முடிவற்றது. நிலையானதென்று எதுவுமில்லை. ஒன்று இன்னொன்றாக மாறும் தன்மை கொண்டது என்று இயற்கையை பிரதிபலிக்கும் சிந்தனை முறை பொருள்முதல்வாதமாகும். இது அறிவியல் வழிப்பட்டது.

பகுத்தறிவென்பது பொருள்முதல்வாத அடிப்படையிலானது. பொருளை (பருப்பொருள், அணுக்கள் உள்ளிட்டவை) மையப்படுத்தி எதையும் அனுகுவது. புலன் செயல்பாடுகளால் உணர்தலை முன் நிறுத்துவது! புலன்களால் உணரமுடியாததை ஆய்வின் மூலம் அறிய முடியும் என்னும் நம்பிக்கையூட்டக்கூடிய அறிவியல்வயப்பட்டது.

இயற்கையே பிரதானம். மனிதனும் அதில் ஒரு பொருள். தனக்கு மேலானதுமில்லை, கீழானதும் ஏதுமில்லை. எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது. தேவைக்காக மனிதன் இயற்கையோடு உறவாடுகிறான். எனவே இதில் வணங்கவும், பணியவும் ஏதுமில்லை என்பது பகுத்தறிவுக் கொள்கை! கடவுள் மறுப்பு, மத மறுப்பு, ஏற்றத்தாழ்வு மறுப்பு இவையெல்லாம் இதிலிருந்து ஊற்றுபெறுகின்றன.

பகுத்தறிவென்பது பொருள்முதல்வாத அடிப்படையில் செயல்படுகிறது. உலகம் தோன்றியது எப்படி என்பதற்கு விடை காணும் பகுத்தறிவுக்கு அடுத்ததாக மனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்பை, வாழ்வை ஆய்வு செய்வது சமூக விஞ்ஞானம். மனிதன் தன் வாழ்வாதாரத் தேவைகளுக்காக சமூகமாக இணையும்போது ஏற்படும் சமூக உறவுகள், மனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்பின் நிகழ்முறை, இயக்கப் போக்கு மற்றும் வரலாற்று வளர்ச்சியின் தொடர்போடு மனிதர்களின் சிந்தனைகள், வாழ்க்கை முறைகள் மற்றும் சமூக அமைப்புகள் பற்றிய பொருள்விளக்கங்களைத் தரவல்லது சமூக விஞ்ஞானம்.

பொருள்களின் இயக்கப் போக்கில் காணப்படும் உள்ளார்ந்த ஐக்கியம், முரண்பாடு மற்றும் உருமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது இயக்கவியல் பொருள்முதல்வாதம். அதேபோல் இயற்கைக்கும் மனிதனுக்குமான வாழ்வாதார உறவில் இதுகாரும் நிலவியது என்ன, அதன் இயக்கப் போக்கு, வளர்ச்சிப் போக்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மனித சமூகத்தை விளக்குவது வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனப்படுகிறது. இதுவே மார்க்சியம் என்னும் சமூக விஞ்ஞானம்.

மார்க்சியம் மூன்று உள்ளடக்கங்களைக் (துறைகளைக்) கொண்டிருக்கிறது:
1. மெய்யியல் / தத்துவம் –இயக்கவியல் பொருள்முதல்வாதம்.
2. அரசியல் பொருளாதாரம் – வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையிலான மார்க்சிய அரசியல் பொருளாதாரம்.
3. விஞ்ஞான சோஷலிசம் (கம்யூனிசம்) – மேம்பட்ட ஒரு சமூக அமைப்புக்கான மாதிரி (Model) – புரட்சிக்கான கோட்பாடு.

கருத்துமுதல்வாதமானது எண்ணம் போல் வாழ்க்கை என்று போலியாக சொல்வது போல் இன்றி, மனிதர்களின் வாழ்நிலையே மனிதர்களின் சிந்தனைகளை, உணர்வுகளை வடிவமைக்கிறது என்று விளக்குவது மார்க்சியம். வாழ்நிலை என்னும் போது மனிதர்கள் தம் தேவைகளுக்காக ஈடுபடும் பொருள் உற்பத்தி முறை, அதனால் உண்டாகும் மனித – சமூக உறவுகள் (உற்பத்தி உறவுகள்) மற்றும் பொருள் விநியோக வடிவங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. இதுவே பொருளாயத அடிப்படை என்பதன் பொருளாகும். ஆனால் இதனை பொருளாதாரம், பணம், பரிவர்த்தனை என்று புரிந்துகொள்கின்றனர்.

உற்பத்தி முறையில் ஒருவர் எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பதே அவரது நிலையைத் தீர்மானிக்கிறது. அதுவே அவரது அடையாளம். அதுவே வர்க்கம் எனப்படுகிறது. ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனிதர்கள் வர்க்கங்களாகப் பிரிந்துள்ளனர். இந்த வர்க்க முரண்பாடுகளே அனைத்து முரண்பாடுகளுக்கும் அடிப்படை. ஒவ்வொரு சமூக உறவையும் / நிலைமைகளையும் தீர்மானிப்பது இதுவே என்பதை மார்க்சியம் விளக்குகிறது.

புராதன பொதுவுடைமை முறையில் பொருளீட்டி, பகிரும் முறை மறைந்து அடுத்தடுத்து உண்டான உற்பத்தி முறைகள் உற்பத்திக்குத் தேவையானப் பொருள்கள் ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இருப்பதை; அவை செல்வக் குவிப்பை, உழைப்புச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டவை என்பதை மார்க்சியம் விளக்குகிறது. இதன் மூலம் மனிதனின் சொல்லும் செயலும் சிந்தனையும் (வாழ்வும், நிலையும்) இந்த உற்பத்தி முறையினால் (அடிக்கட்டுமானம்) கட்டியெழுப்பப்படும் சமூக அமைப்பினால் (மேற்கட்டுமானம்) உருவாகிறது. அது சுரண்டல் தன்மையிலானது (துக்கமல்ல!). இது ஒரு கூட்டுச் சமூக விளைவு! எனவே சமூகத்தின் அடித்தளமாக இருக்கும் உற்பத்தி முறையை மாற்றாமல் தனி மனித மாற்றம் என்பது முழுமுற்றாக சாத்தியமில்லை, அதனால் சமூக மாற்றம் என்பதும் சாத்தியமில்லை என்பதை நாம் கண்டுணர முடியும்.

அனைவரையும் உள்ளடக்கிய முழுமையானதொரு சமூக மாற்றம் என்பது நிலவும் சமூக அமைப்பை தலைகீழாக மாற்றுவதில் உள்ளது என்பது மார்க்சியத்தின் மூலம் விளங்கும்.

பகுத்தறிவிற்கு அப்பால் மேற்சொன்ன இந்த மூன்று துறைகளையும் உள்ளடக்கியக் கண்ணோட்டமே மார்க்சிய உலகக் கண்னோட்டம்!
கருத்துமுதல்வாதத்திற்கு நேர் எதிரானது பொருள்முதல்வாதம்.

பண்டைய பொருள்முதல்வாதத்திலிருந்து மேம்பட்ட சிந்தனைகளை, ஆய்வுமுறையைக் கொண்டது மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம். பகுத்தறிவாளர்களுக்கும், மார்க்சியர்களுக்கும் கூட சில விசயங்களில் ஏற்படும் முரண்பாடு இதன் அடிப்படையிலானது. இது நட்பு முரண்பாடு தான்!
ஒவ்வொரு மனிதனின் சிந்தனையும், நம்பிக்கையும் மேற்சொன்ன உலகக் கண்ணோட்டங்களுக்குள் பொருந்தும். (கலவைகளும் இருக்கலாம்!).
எனவே எந்த ஒன்றைப் பற்றிய கருத்தையும் விளக்கவோ / விவாதிக்கவோ வரும்முன் அவரவர் தம் உலகக் கண்ணோட்டத்தை முதலில் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

எந்த ஒரு பிரச்சினை குறித்தும் அல்லது எவர் பற்றிய விமர்சனத்தை மார்க்சியர்கள் முன்வைக்கும் போதும் மார்க்சிய உலகக் கண்ணோட்டம் பற்றிய புரிதல் அவசியம்.
விமர்சிக்கப்படுபவரின் கண்ணோட்டத்தை மேற்சொன்ன உலகக் கண்னோட்டங்களை ஒரு எளிய அடிப்படையாகக் கொண்டு புரிந்துகொள்ள முற்பட வேண்டும். இல்லையெனில், எது ஒன்றையும் அறிவுவயப்பட்ட கருத்தியல் ரீதியாக அனுகாமல் உணர்ச்சிவயப்பட்ட தனிமனிதப் பற்றிலிருந்து அணுக நேரும். அது அறிவு மறுப்பிற்கு வழிவகுக்குமே ஒழிய சமூக மாற்றத்திற்கு அல்ல!

எனவே மார்க்சியர்களோடு முரன்படுபவர்கள், மார்க்சியத் திறனாய்வுகளோடு முரண்படுபவர்கள் அவர்களது / தலைவர்களது உலகக் கண்ணோட்டத்தை முதலில் கண்டடையுமாறு வலியுறுத்த வேண்டியுள்ளது. மார்க்சியம் கற்பது அதற்கு முன் நிபந்தனை தோழர்களே!

மார்க்சியம் கற்றிருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதென்பது வர்க்க நலனோடு தொடர்புடையது. அது தனி விவாதம்! அதேபோல் கேள்விஞானமாக, சில வழிகாட்டிகள் வழியாக மார்க்சியத்தின் மீதான எதிர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டவர்களிடம் படிங்க என்று சொல்வதைத் தவிர விவாதிக்க ஏதுமில்லை.


No comments:

Post a Comment