Jun 13, 2020

மத மாற்றமும் தூய்மைவாதச் சிக்கலும்
















//நம்முடைய நல்வாழ்வை விழைந்து, நம் இன்பத்தை நாடி, கருணையுடன் எவ்வகையான கணவர்க்கு நம்மை நம் பெற்றோர் மணமுடித்துக் கொடுப்பினும், அவர்பால் அன்புடைமையின் விளைவாய், முன் எழுந்து, பின் உறங்குவோராய், விரும்பி உழைப்போராய், கோருபவற்றை இன்சொற்களால் இனிமையாய் கோருபவராய் இருத்தல் வேண்டும். குழந்தைகளே! இவ்வாறு உம்மை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.// - அம்பேத்கரின் புத்தர்!

#வசுமித்ர எழுதிய அம்பேத்கரறிதல் கவிதைகளும், #அம்பேத்கரும்_அவரது_தம்மமும் நூல் முன்னுரையும் எப்படி அம்பேத்கரின் துயரை, அவரின் மதிப்பை, அம்பேத்கர் மீதான சாதிய சமூக வன்மத்தை பதிவு செய்கிறதோ அதே போல் தான் வசுவின் நூல் அம்பேத்கரின் மத நம்பிக்கையை கேள்வி எழுப்புகிறது. சாதி ஒழிப்பிற்கான தீர்வாக பௌத்தத்தை முன்வைக்கும் போக்கில் அம்பேத்கர் புத்தரை கடவுளாக்கும் நிலைக்கு சென்று பகுத்தறிவை கைவிட்டு தூய்மைவாதப் பிடியில், சொல்லப்போனால் பார்ப்பனியத்திற்கு நிகரான தூய்மைவாதப் பிடியில் சிக்கிக் கொண்டார் என்பதை முன் வைக்கிறது. மதவாத ஒழுக்கவாதமும் ஆணாதிக்கமும் பிரிக்கவியலாதவை! அதன் விளைவாக அம்பேத்கரின் புத்தர் மூலமாக நமக்கு அதுவும் தென்படுகிறது..

இதைக் கண்டு கோபப்படுவதை விட வருந்த வேண்டியுள்ளது! சாதியமைப்பால் அவமதிப்பிற்கும், விலக்கலுக்கும், கொடுமைகளுக்கும் உள்ளாகும் ஆன்மா தன்னை “அழுக்கானவன்’, “தீண்டத்தகாதவன்” என்று ஒதுக்கி அவன் வாழ்நிலையையே கேள்விக்கு உள்ளாக்கும் போது, உன்னைவிட நான் தூய்மையானவன் தான் என்று மெய்ப்பிக்கும் கொந்தளிப்பு ஏற்படும்… அது தன்னை அவமதிக்கும் மதத்திற்கு எதிரான ஒரு புதியதோர் தூய்மையான மதத்தை கலகமாக, தீர்வாக முன்வைக்க முற்படும். அம்பேத்கர் கைக் கொண்டதும் அதுவே!

ஆணாதிக்கத்திற்கு ஆண் வெறுப்பு எப்படி தீர்வாகாதோ அதேபோல் ஒரு மத வெறுப்பிற்கு (மதப் பிரச்சினைக்கு) இன்னொரு மதம் மாற்றாகாது! ஏனென்றால் வர்க்கப் பகைமைகளுக்கு இணக்கம் காண முடியாததன் விளைவாக எப்படி அரசு தோன்றுகிறதோ, அதேபோல் அவர்களுக்குரிய கருத்தியல் பிரச்சாரக் கருவியாக, ஒடுக்குமுறை கருவியாக மதங்கள் தோன்றுகின்றன. மதம் என்பது என்றைக்கும் ஆளும் வர்க்க உருவாக்கமே! ஆளும் வர்க்கத் தேவையே! உழைக்கும் வர்கத் தேவையன்று!

மேலும், சாதியை ஒழிக்க மதமாற்றம் தீர்வல்ல! அது கலகமும் அல்ல! புரட்சியும் அல்ல என்னும் கசக்கும் உண்மையை நாம் சீரணித்தே ஆக வேண்டும்! மதம் பற்றிய மார்க்சியப் பார்வை மட்டுமின்றி யதார்த்ததில் மதங்கள் என்ன செய்கின்றன என்பதை கணக்கில் கொண்டாவது பௌத்த அம்பேத்கரியர்கள் இதை உனர முற்பட வேண்டும். பௌத்தம் தோன்றிய அன்றைய காலச் சூழல், அதன் வர்க்கச் சார்பு, அது இயங்கிய விதம் அனைத்தையும் கணக்கில் கொண்டு பார்க்கையில் தெளிவு ஏற்படும்…



No comments:

Post a Comment