Dec 30, 2016

சாதியப் பிரச்சினையும் அதற்கான தீர்மானங்களும்: ஒரு மார்க்சியக் கண்ணோட்டம் கட்டுரையிலிருந்து


சாதியப் பிரச்சினையும் அதற்கான தீர்மானங்களும்: ஒரு மார்க்சியக் கண்ணோட்டம்
- ஆய்வுக் குழு, அர்விந்த் மார்க்சியக் கல்வியகம்

............. திட்டவட்டமான நடைமுறையை நோக்கி நகரும்பொழுது பலப் பிரச்சினைகளை  நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆளும் வர்க்கம் எனும் பிரிவில் அடங்கும் - முதலாளிகள், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், குலாக்குகள், விவசாயிகள், நடுத்தர வர்க்கப் பிரிவினர் மற்றும் இதர ஒட்டுண்ணி சமூகங்கள் மற்றும் அதன் ஆதரவு வர்க்கங்கள் - தங்கள் நலன்களில் முரண்பட்டாலும்கூட அரசியல் கொள்கை முடிவுகள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்று வரும்போது ஒற்றுமையுடன் கைகோர்த்துக் கொள்கின்றன. மறுபுத்தில், மற்ற பிரச்சினைகளுக்கிடையில், புரட்சியின் ஆணிவேராக திகழக்கூடிய பாட்டாளி வர்க்கம் மற்றும் கிராமப்புறங்கள், நகரங்களில் உள்ள அரை பாட்டாளி வர்க்கம், கீழ்-மத்தியத்தர வர்க்கம் மற்றும் கீழ்-மத்தியத்தட்டு விவசாயிகள் ஆகியோரை ஒற்றுமைப்படுத்தும் பாதையில் நாம் எதிர்கொள்ளும் சவால் என்னவெனில், அவர்கள் சாதியரீதியாக பிளவுபடுத்தப்பட்டுள்ளனர், எண்ணற்ற சமூகப் பாகுபாடு பல்வேறு அடுக்குகளில் நிலவுகின்றது. இச்சூழலில், சாதி ஆதிக்கமும், ஏதோ ஒரு வடிவில் இந்திய சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் முரண்பாடுகள் மேற்கட்டுமானத்தோடு (பழைய மதிப்பீடுகள் அல்லது சிலர் கூறுவது போல் பிராமணிய பண்பாட்டு தாக்கம்) மட்டும் தொடர்புடையதா அல்லது அம்மேற்கட்டுமானத்திற்கு ஆதரவும் பலமும் கொடுக்கக்கூடிய பொருளாதாரக் காரணிகளும் இருக்கக்கூடுமா என்று பரவலாக விவாதிக்கப்படுகிறது.

சாதிய மோதல் மற்றும் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளுக்குப் பின்னணியில் மாறுபடும் தீவிரத்தன்மையோடு, வர்க்கங்களுக்கிடையிலான பொருளாதார நலன்களின் மோதல்கள் முக்கியப் பங்கு வகிப்பதை நாம் காண முடிகிறது. ஆனால் அத்தகைய சூழல்களில் நிகழும் அணிதிரட்டலானது (போலரைசேஷன்) சாதிய அடிப்படையிலேயே நிகழ்கிறது.  பூர்ஷுவா பாராளுமன்ற ஓட்டு வங்கி அரசியலானது சாதிய ரீதியான அணிதிரட்டல்களை தன்னுடைய முக்கியக் கருவிகளில் ஒன்றாகப் பயன்படுத்துகிறது. கூரிய சாதிய முரண்பாடுகளின் பின்னிருக்கும் மையக் காரணி இதுதானா? சாதி என்பது கடந்தகாலச் சுமை, நிலப்பிரபுத்துவ நீட்சி அல்லது “பிராமணிய கலாச்சாரத் தாக்கம் என்று மட்டுமிருந்தால் காலப்போக்கில் சில முற்போக்கு சமூக இயக்கங்கள் மூலம் அது தூக்கி எறியப்பட முடியும். ஆனால் அதற்கான சாத்தியங்கள் தென்படவே இல்லை.

சாதியமைப்பானது புறத் தோற்றத்தில் காணப்படுவது போல் அப்படியொன்றும் மாறாத் தன்மை கொண்டதல்ல. அது ஒரு உள்ளார்ந்த மாறும் தன்மை (டைனமிசம்) கொண்டதாகவே இருக்கிறது. அதனால்தான் பண்டைய இந்தியாவில் தோன்றி, மத்திய காலம், காலனிய சகாப்தங்கள் (ஈரா) எல்லாம் தாண்டி இன்றைக்கும் தன்னுடைய சக்திவாய்ந்த இருப்பை நிரூபித்து வருகிறது. ஒவ்வொரு சமூக-பொருளாதார உருவாக்கத்திற்கும் ஏற்றவாறு சாதி தன்னை தகவமைத்துக்கொள்ளும் தன்மையோடு இருக்கிறது. அதனால்தான் வெவ்வேறு வரலாற்று காலகட்ட வர்க்கங்கள் அதனை தங்கள் நலனுக்கேற்றவாறு தகவமைத்துக்கொள்ள முடிகிறது.

சாதி மற்றும் வர்க்க இடையுறவு (இண்டர்-ரிலேஷன்ஷிப்) குறித்த குழப்பங்களுக்கு ஏட்டறவு அறிஞர்கள் ஒரு பகுதி காரணம்; ஒடுக்கப்பட்ட சாதிகளின் தலைவர்களின் அறியாமையின் காரணமாகவும், முன்முடிவுகளாலும் மார்க்சியம் பற்றிய எதிர்மறை கருத்துகள் கொண்டு ஏற்படுத்திய தாக்கம் ஒரு பகுதி காரணம்; அமெரிக்க சோஷலிச சிந்தனைகள் மற்றும் பூர்ஷுவா பின்நவீனத்துவ கருத்தியல்களான ‘அடையாள அரசியல்’ போன்றவை ஏற்படுத்திய குழப்பங்கள்; தங்கள் வர்க்க நலனை மனதில் கொண்டு குட்டி பூர்ஷுவா அறிவுஜீவிகள் உருவாக்கிய கோட்பாடுகள்; டிலடண்டே மற்றும் சீர்திருத்தவாத மார்க்சிஸ்டுகளின் இயந்திரத்தனமான பொருள்முதல்வாத ஆய்வுகளாலும், தவறுகளாலும் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் புரட்சிக்கான அடிப்படைப் பிரச்சினைகளைத் தவறவிட்டது போன்றே சாதியப் பிரச்சினைகளை முழுமையாக ஆய்வு செய்து ஒரு திட்டவட்டமான செயல்திட்டத்தை வகுக்காமல் போன கம்யூனிஸ்டுகளின் கடந்தகாலத் தவறுகளினால் விளைந்த குழப்பங்கள் ஆகியவை காரணமாகின்றன. இருப்பினும், வலுவார்ந்த புறரீதியான அடித்தளங்களும் இக்குழப்பங்களுக்குக் காரணமாக இருக்கின்றன. பெரும்பான்மையான தலித் சாதியினர் பாட்டாளி வர்க்கம் அல்லது அரை பாட்டாளி வர்க்கத்தின் (பெரும்பாலும் கிராமம், ஆனால் நகரங்களில் அதிகமாக) கீழ் வருகின்றனர் என்றாலும் பெரும்பான்மையான பாட்டாளி வர்க்கமோ அல்லது அரை பாட்டாளி வர்க்கமோ தலித் சாதியினராக இல்லை என்பது ஒரு உடனடிப் புறக்காரணி.

கிராமப்புற குலாக்குகளில் பெரும்பாலர் இன்று இடைநிலைச் சாதியினர். தலித்துகளை ஒடுக்குவதில் அவர்கள் நிலக்கிழார்களையும் ஆதிக்கச் சாதி நிலவுடைமையாளர்களையும் கூட மிஞ்சிவிடுகின்றனர். ஆனால்,  இந்த இடைநிலைச் சாதி மக்களிலும்கூட பெரும்பான்மை மக்கள் ஏழைகளாகவோ அல்லது கீழ்-மத்தியத்தர விவசாயிகளாகவே இருக்கின்றனர். அவர்கள் தொழிலாளி வர்க்கப் பிரிவினர் ஆகின்றனர். அனைத்துச் சாதிகளிலிருந்தும் நாம் முதலாளிகளைக் காண முடிகிறது (தலித்துகள் அரிதாகவே காணப்படுகின்றனர்).  ஆனால் இன்றைக்கும் ஆதிக்கச் சாதியினரையே அரசாங்கத்தில், அறிவுத்துறையில், குறிப்பாக உயர் பதவிகளில் காண முடிகிறது. இடஒதுக்கீட்டின் காரணமாக தலித்துகள் மற்றும் இடைநிலைச் சாதிகளில் சிலர் இந்த வட்டத்திற்குள் நுழைய முடிந்தது. ஆனால் அவர்களின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது இது சொற்பமானதே. அதுமட்டுமின்றி, இந்த விகிதமும் தற்போது குறைந்து வருகிறது. இச்சூழலில், சாதியமைப்பிற்கு எதிராக ஒரு பொது முன்னணியை எப்படிக் கட்டி எழுப்புவது எனும் நடைமுறை சார்ந்த கேள்வி எழுகிறது.

புரட்சிகர பரப்புரைகள் மூலம் ஆதிக்க சாதி மற்றும் இதர சாதி ஏழை மக்களிடையே ஜனநாயக உணர்வை பரப்பாமல், பொதுவான பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை முன்வைத்து அவர்களை ஒருங்கிணைக்காமல் இது சாத்தியமா? இந்த ஒருங்கிணைப்பு முன்னெடுக்கப்படாமல் புரட்சிகர அணிதிரட்டல் மற்றும் மூலஉத்தியுடன் கூடிய  ஒருங்கிணைந்த முன்னணியை கட்டியெழுப்புதல் சாத்தியப்படுமா? தலித்துகளை மட்டும் ஒருங்கிணைப்பதன் மூலம் சாதியை ஒழித்துவிட முடியுமா? உண்மையான விடுதலையைப் பெற்றிட முடியுமா?

மேலும் நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால், சில சிறப்புரிமைகள், நிவாரணங்கள் மற்றும் தலித் சாதியினருக்கான பாதுப்புகள் ஆகியவை ஒரு சில மாற்றங்களுக்கு உதவலாம் என்பது ஒருபுறம் ஆனால் தலித்துகள் மீதான ஒடுக்குமுறை, சமூக பாகுபாடு மற்றும் மிகவும் அவலத்துக்குரிய அவர்களது சமூக நிலைமையை மாற்றியமைத்தல், சாதியமைப்பை ஒழித்திடுதல்  என தலித் பிரச்சினைக்கு ஒட்டுமொத்தமாக முடிவு கட்டுதல் என்பது வேறானது. இடஒதுக்கீடு போன்ற திட்டங்கள் தலித்துகளின் விடுதலையை நோக்கியோ அல்லது சாதியை ஒழித்திடவோ வழிவகுக்குமா?  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வரம்புக்குள் அத்தகைய சாத்தியங்கள் ஏதேனும் தென்படுகிறதா (நம் கண்முன் 62 வருட அனுபவங்கள் இருக்கிறது) அல்லது காலனியாக்கத்தின் கருவிலிருந்து பிறந்து, ஏகாதிபத்திய சகாப்தத்தில் வளர்ச்சி பெரும் - மிகுந்த வரையறைகளுடனும், பக்கச் சார்புகளுடநும் சிதைந்து போயிருக்கும் இந்திய முதலாளித்துவ ஜனநாயகத்தின் வரம்பிற்குள்ளிருந்து அது சாத்தியமா? கடந்த 6 பத்தாண்டுகளில் இடஒதுக்கீடின் மூலம் எத்தனை தலித்துகள் பயன்பெற்றுள்ளனர்? இதே ரீதியில் சென்றால், அவர்களது அவல நிலையை மாற்றியமைக்க இன்னும் எத்தனைக் காலம் பிடிக்கும்? இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டபோது, பூர்ஷுவா ஜனநாயக உரிமையாக அது அப்போது பொறுத்தமாக இருந்தது, ஆனால் இப்போது அது பூர்ஷுவா ஜனநாயக உரிமை என்பதைக் காட்டிலும் பூர்ஷுவா ஜனநாயக மாயையை உருவாக்கக் கையாளப்படும் ஒரு கருவி ஆகிவிடவில்லையா? இடஒதுக்கீட்டின் மூலம் மேலெழுந்துவிட்ட, நகர மத்தியத்தர வர்க்கத்தின் ஓர் அங்கமாகிவிட்ட தலித் அறிவுஜீவிகள் கிராமங்கள் மற்றும் நகர தலித் பாட்டாளி வர்க்க நலனில் எந்த அக்கறையும் கொள்வதில்லை என்பதும், அரசாங்கம் அளிக்கும் சலுகைகளை அப்பிரிவு தலித்துகள் மட்டுமே அனுபவித்து வருகின்றனர் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினையில்லையா? உண்மையில், சாதியமைப்பை எதிர்த்தாலும், சாதி ஒழிப்புக்கும், இடஒதுக்கீடு மற்றும் இந்திய அரசமைப்பின் வரம்புக்கு அப்பாற்பட்டு எந்த ஒரு திட்டத்தையும் சிந்திக்க அவர்கள் தயாராக இல்லை என்பதற்கும், தலித் இயக்கங்களின் கடந்தகாலம் குறித்தும், தங்களது தத்துவார்த்த அடிப்படை மற்றும் தங்களின் கோட்பாட்டாளர்களின் பாத்திரம் குறித்தும் எவ்வித ஆய்வுகளுக்கும் அவர்கள் தயாராக இல்லை  என்பதற்கும் அதுவே காரணம்........ 

நூல்: சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம்


No comments:

Post a Comment