May 29, 2012
May 26, 2012
இடமுடியா முத்தங்கள் கடவுள் போன்றது
முத்தங்களை
விழுங்கும்
வலி
எத்தகையது
என்பதை
அறிய மாட்டீர்கள்
நீங்கள்
அந்நியமாகிப்
போன கருவறையின்
வழியாக
குருதியென
வழிந்தோடுகிறது
அம்முத்தங்கள்
இடமுடியா
முத்தங்கள்
கடவுள்
போன்றது
புகைப்பட
உதடுகள்
உறிஞ்சுகிறது
ஈரமற்ற
முத்தங்களை
பாரம்
தாளாமல்
மன்றாடுகிறது
விழித்திரை
கடந்த
கால நினைவுகளும்
அவளது
புகைப்படங்களும்
அவ்வப்போது
அவளது தொலைபேசி
அழைப்பும்
மரணத்தை
தள்ளிப்போடுகின்றன
உயிரறுத்து
கிடக்கும் வேளையில்
புதையுங்கள்
என்னை
அவளது
கருவறையில்
Apr 25, 2012
மாசெஸ் எனும் அமைப்பின் துவக்க நிகழ்வுக்காக தயார் செய்திருந்த உரை
அனைவருக்கும் வணக்கம்,
இந்த கணத்தை, இந்தக் களத்தை நான் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. இன்று, இங்கு வந்து அதை சாத்தியப் படுத்தியிருக்கும் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள். சர்வதேசிய உழைக்கும் மகளிர் தினத்தின் 101வது வருடம் நடைபெற்று வருகிறது. பெண் விடுதலைப் பாதையில் செயல்படுவதற்கான ஒரு சிறிய அமைப்புருவாக்கத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
குறுகிய காலத்தில் வைக்கப்பட்ட அழைப்பு என்பதை பொருட்படுத்தாமல் இங்கு வந்திருக்கும் பேச்சாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள், பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு பெரிய தொடர்பு வட்டங்கள் கிடையாது, இந்த அமைப்பு உருவாக்கத்திற்கு இணையத்தின் நட்பு வட்டங்கள் கொடுத்த ஊக்கம் அளப்பரியது. எல்லோருக்கும் எனது நன்றிகள்.
அமைப்பு பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தும் முன்னர் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கவிதையிலிருந்து சில இறுதி வரிகளை படித்து துவங்க விரும்புகிறேன்
எனக்கு உன்னிடம் கேட்டுவாங்க
வரங்கள் எதுவுமில்லை.
உனது ஒளியால் நிரப்பிக்கொள்ள
இதயவறுமையும் எனக்கில்லை.
ஒரு சக்கரவர்த்தி
இன்னொரு சக்கரவர்த்தியைச் சந்திப்பதுபோல
ஒரு நண்பன்
மற்றொரு நண்பனைச் சந்திப்பதுபோல
சம உணர்வுடன் வா.
ஒரு புல்லாங்குழல்
ராகத்தைத் தேடுவதுபோலவோ
ஒரு கேள்வி
பதிலைத் தேடுவதுபோலவோ
இயல்பாக இருக்கட்டும் அது.
- ரோஸ்மேரி, ( பெண் வழிகள், காலச்சுவடு,
மலையாளத்திலிருந்து தமிழில் சுகுமாரன்.)
இழப்பதற்கு எதுவுமேயில்லை, அடிமை விலங்குகளைத் தவிர. அடைவதற்கோ பொன்னுலம் இருக்கிறது.
மார்க்ஸ்- எங்கெல்ஸ். – கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை.
என் பெயர் நிர்மலா நான் 1995ம் ஆண்டு லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்தேன். தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். பெண் என்ற ஒரே காரணத்திற்காக, தொடர்ந்து என்னைச் சுற்றி ஏன் ஒரே மாதிரியான சுரண்டல்கள் நிகழ்கிறது எனும் கேள்வி எழுந்தபோதே நான் ‘பெண்ணியம்’ என்று ஏதோ சொல்லப்படுகிறதே அது என்ன என்று தேடினேன். எனது தனிப்பட்ட கோபங்களுக்கு வடிகாலாக சிற்பம் செய்வது, தனிமையை குலைக்கும் வகையில் மேட்டுக்குடி பெண்கள் படிக்கும் ஏதோ சில பட்டயப் படிப்புகளைப் பயில்வது , கவிதை எழுதுவது, புலம்பல்களை வலைப்பதிவில் எழுதுவது என்றிருந்தேன். அப்போது பெரியார் நினைவுக்கு வந்தார். பெண் ஏன் அடிமையானாள் புத்தகம் என் கண்ணில் பட்டது (அல்லது அதை வசுமித்ர அறிமுகம் செய்து வைத்தாரா என்று நினைவில்லை). அந்த சூழலில் வசுமித்ரவை சந்திக்கவும் நேர்ந்தது. அதைத் தொடர்ந்து என்னுடைய வசை கவிதைகள் குறித்த விவாதம் பெண்ணியக் கல்வியாக, மார்க்சியக் கல்வியாக விரிவடைந்தது. என்னை மீட்டெடுக்க உதவிய ஒருவரோடே என் வாழ்வை அமைத்துக்கொள்ள முடிவெடுத்தேன். வசுவை சந்திக்காமல் போயிருந்தால் முற்போக்கு சிந்தனையை சுயநலத்திற்காகவும், தனிப்பட்ட வாழ்வுக் கொண்ட்டாட்டமாகவுமே பயன்படுத்தியிருந்திருப்பேன்….அதை சமூக அக்கறையாக மாற்ற காரணமாய் இருந்தது எங்களுக்குள் அன்றாடம் நடக்கும் விவாதங்கள்….அதுவே இப்போது ஒரு அமைப்பை உருவாக்கம் செய்வது வரை என்னைக் கொண்டுவந்திருக்கிறது.
மாசெஸ் – பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வாதத்திற்கான அமைப்பு –
பாலியல் சுரண்டல் மற்றும் பாகுபாடு என்பது சமூகத்தில் பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருகிறது. வெகுஜன ஊடகங்களின் வழியாக அதிதீவிரமாக இது கட்டிக்காக்கப்படுகிறது, போற்றப்படுகிறது. அரசியல் இயக்கமாக செயல்படும் இயக்கங்கள் அன்றாட நிகவுகளுக்கு / பிரச்சனைகளுக்கு வினை புரிய வேண்டியிருக்கும் சூழலில் வெகுஜன ஊடக மாயையிலிருந்து மக்களை மீட்பதற்கான விழிப்புணர்வு ‘ஒரு முழு கவனத்தோடு’ எடுத்துச்செல்லப்படாமல் உள்ளது, குறிப்பாக பெண்ணியப் பாதையில். ஆகவே இவ்வியக்கம் சாதி, மத, இன, அரசியல் கொள்கைகள், கட்சிகள், இன்னும் இதர குழுக்கள் எனும் பாகுபாடில்லாமல் அணைவரும் பங்கு பெறக்கூடிய பெண்ணிய இயக்கமாக செயல்பட விழைகிறது. இவ்வியக்கம் பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல்வாதத்திற்கு எதிரான இயக்கமாக மட்டுமே செயல்படும். வெகுஜன ஊடகங்களின் பாலியல் சுரண்டலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும். மற்ற சமூகப் பிரச்சனைகளுக்கெதிராக செயல்படும் இயக்கங்களோடு அவர் அவர் விருப்பப்படி தேர்வு செய்து கலந்துகொள்வது என்ற முடிவுக்கு விடப்படுகிறது.
அமைப்பின் முன் வரைவை தோழர் சிவகாமி அவர்கள் வெளியிட அ.மார்க்ஸ் பெற்றுக்கொண்டார். அன்றைய கூட்டத்திற்கு கோ. சுகுமாரன், மோனிகா, பத்மினி ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் ஓவியம் வரைந்தவர்கள்:
தோழர்கள் விஸ்வம், ராஜன், வசந்த், ஏழுமலை, ஆனந்த், கிரிஸ்டி, ரோஹினி மணி, விதார்த்தி, மோனிகா, திலிப், சூரஜ், யுகன். கிரன் துளசி என்பவரின் ’பாலுறுப்பு அடையாளம் அழித்த’ புகைப்படம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டது
தோழர்களுக்கு நன்றி.
பாலியல் போரின் ஒரு பகுதியாக ஆணாதிக்க பெண் உடல் சித்தரிப்பு:
பாலியல் போர் என்பது பல்லாயிர வருடப் போர்… அதற்கு ஆண் மட்டுமே காரணம் என்பதல்ல நம் வாதம். பெண் ஒடுக்கப்பட்டிருக்கிறாள், இங்கு நிலவுவது ஆணாதிக்க சமூக அமைப்பு என்பதைக் கூட உணர முடியாமல் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள் என்பதே எமது வாதம். பல்வேறு புறச் சூழல்கள் இந்த பாலியல் போருக்கு காரணமாக இருந்திருக்கின்றன. அதில் முதன்மையானது பரிணாம வளர்ச்சி, அதன் விளைவாக மரபணு மாற்றங்கள். இந்த மரபணுவானது அழிவிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள பல்வேறு தூண்டுதல்களை ஓர் உயிரில், உடலில் ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம்…அதேவேளை சுற்றுச்சூழலியல் மாற்றம், அதன் விளைவாக தொழில் முறை மாற்றங்கள், பொருளாதார சூழலில் மாற்றம், இயற்கையை, அதிகாரத்தை, மரணத்தை வெல்ல மனிதனுக்கே (ன் விகுதி ஆண் விகுதி தானே) உரித்தான எதையாவது உருவாக்கி கொண்டே இருக்கும் பேராசை ஆகியவை மனித உறவு முறைகளை மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கிறது. அதை சுற்றி ஓர் உளவியல் கட்டமைக்கப்படுகிறது. அதற்கேற்றார் போல் ஒரு பண்பாட்டு சிந்தனைகளும் உருவாகின்றன. இதுவே யதார்த்தம்… இதை புரிந்து கொண்டு, அவற்றை கணக்கில் கொண்டு மானுட சுதந்திரத்திற்கு தேவைப்படும் சீர்திருத்தங்களை வகுப்பதற்கு, அது குறித்து பேசுவதற்கு கூட தடையாக இருப்பது கருத்து பற்று அதாவது கருத்துமுதல்வாதம். பெரும்பாண்மை நலன் என்ற பெயரில் உருவாகப்பட்டு விட்ட கோட்பாடுகளுக்கு விசுவாசமாய் இருப்பது..ஆனால் இங்கு நாம் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. திட்டமிட்டே சிறுபான்மையினர் உருவாக்கபபடுகின்றனர். அதாவது ஒரு குறிப்பிட்ட சாரரின் உரிமை மறுப்பு, சாதியக் கொடுமைகள் நிகழும் இந்த சமூகத்தில் இதை நாம் நன்றாக அறிவோம். அதேபோல் பெரும்பான்மை என்பது எப்போதும் சரியாக சிந்திக்கும் என்று நாம் சொல்ல முடியாது என்று கார்ல் மார்க்ஸ் சுட்டிக்காட்டியதையும் நினைவில் கொள்வோம்.
உண்மை தான் – அதிகாரம் படைத்த சிலர் ஒன்றிணைந்து ஒரு சில கருத்தாக்கங்களை தங்கள் நலனுக்காக அல்லது தங்களின் வட்டார, சமூக, சாதி, இன நலனுக்காக உருவாக்குகின்றனர். அதை பரப்புரை செய்கின்றனர். பின்னர் அது சமூக கருத்தாக்கமாக மாறுகிறது. அவற்றை மறுப்பவர் தரங்கெட்டவர், மோசமான விதிகளை போற்றும் கலகக்காரர், தீவிரவாதி, என்று தூற்றப்படுகின்றனர். சில வேளைகளில் கொல்லவும் படுவோம் என்ற பயம் கருதி தலையை ஆட்டிக் கொண்டு போய்விடுவதால் அதிகார வர்க்கத்தின் கருத்தாக்கம் அப்படியே நிலைத்து விடுகிறது, காலத்திற்கேற்றார்போல் அது தன்னை தகவமைத்தும் கொள்கிறது.
அந்த தகவமைப்பின் முக்கியப் பண்பு ஆணாதிக்கம். பாலியல் அடையாளத்தின் படி ஆண் அதிகாரத்தை, போகத்தை, சுதந்திரத்தை அனுபவிக்க பெண்கள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெண்ணிய சிந்தனைகள், முற்போக்கு சிந்தனைகளை அறிந்திராதவர் இதை கேட்டு நகைப்பர். பெண்கள் எங்கே ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று. அதற்கு போதுமான விளக்கங்களை சமத்துவ ஆர்வலர்கள் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கார்ல் மார்க்ஸ் சொல்வது போல் அறிந்திராத அவர்களுக்கும் (ஆண், பெண், மாற்றுப் பாலினத்தவர் இதில் அடக்கம்) சேர்த்துத்தான் போராட வேண்டியிருக்கிறது. ஏனென்றால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆணாதிக்கம் வேறூன்றி விட்டது. பெண் மட்டும் என்ன ஒழுங்கா, பெண்கள் எவ்வளவு சுதந்திரம் பெற்று விட்டாரக்ள் தெரியுமா என்று சொல்லும் சில எளிய உள்ளங்கள் படித்து வந்திருப்பது ஆணாதிக்க வரலாற்றை, படைப்புகளை. அதை ஏன் ஆணாதிக்கம் என்று சொல்கிறீர்கள் வல்லாதிக்கம் என்று சொல்லுங்கள் என்பர். வல்லாதிக்கம் என்பதும் ஆணாதிக்க சிந்தனையே. வல்லமை என்று சொல்லும் போதும் போர் களம், வல்லமை, புரட்சி, வீரம், எதிர்த்து நில், கலகம் செய் என்று சொல்லும் போது நம் மனது எந்த பாலினத்தை காட்சிப்படுத்துகிறது. ஆக போரை விரும்புபவராக, வல்லாதிக்கத்தை, எல்லை விரிவாக்கத்தை, இயந்திரமயமாக்கலை விரும்பியது துவக்கத்தில் ஆண் இனமே… பின்னர் அது சமூக நடைமுறையாகிப்போனது.
தாய் வழிச் சமூகம், ஆண் தலைமையிலான குடும்ப அமைப்பாக, தந்தை வழிச் சமூகமாக மாறியது. எந்த ஒடுக்குமுறைகளிலும் இல்லாத வகையில் ஒடுக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரியாத வகையில் அதை பெண்ணே ஏற்றுக்கொள்ளுமாறு செய்தது. அதற்காக உருவான கருத்தாக்கமே மதம், புனித வாதம், கற்பு ஆகியவை. சொர்கம், நரகம், பத்தினித் தன்மை என்பதன் பெயரால் அச்சுறுத்தல் விடப்பட்டது. நீ கற்பு தவறினால் தீ குளிக்க நேரும் என்று எச்சரித்தால் எந்த பெண் தான் பயப்படாமல் இருப்பாள்.* இந்த தந்தை வழிச் சமூகத்தினை எதிர்த்த பெண்களை சூனியக்காரி என்று முத்திரை குத்தி, கடுமையான தண்டனைகளும் கொடுக்கப்பட்டது. உலகம் முழுமைக்கும் இது பொருந்தும்.
தாங்கள் ஒடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதே தெரியாத பெண்ணினம் ஒரு புறம், ஆணாதிக்க அறிவூட்டத்திற்கு இரையாகி பெண்களை பெண்மை, கற்பு, தாய்மை, இல்லாள் என்று ஒடுக்கும் ஆணினம் மறு புறம். இந்த ஒடுக்குமுறையை அறிந்து கொண்டு சமத்துவத்திற்கு குரல் கொடுக்கும் பிரிவோ மிகச் சிறிது. இப்படியிருக்கும் சூழலில், ஆணாதிக்க சமூகம் வளர்த்துவிட்டிருக்கும் பாலியல்வாதத்தை அப்படியே பயன்படுத்திக்கொள்ளும் படைப்புகள், சித்தரிப்புக்கள் வெகுஜன ஊடகத்தில், பிரதிகளில் நிகழும் போது பெண் விடுதலைச் சிந்தனையை வளர்த்தெடுப்பது பெரும் சவாலுக்குரியதாய் இருக்கிறது. ஒடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறியவேண்டும், என்ன வகையான ஒடுக்குமுறை என்று அறியவேண்டும் அப்போது தானே அறிவை மீட்டெடுக்க முடியும். ஆனால் அதற்குள் உலகமயமாக்கல் சூழலில், ஆணாதிக்க முதலாளித்துவம் பெண் சுதந்திரம் பெற்றுவிட்டாள் என்பது போன்ற ஒரு மாயாவாத தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
ஆண்களே பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்ட சக்தியாக இருப்பதால் அவர்கள் வழங்கும் இந்த பெண் சுதந்திரவாதம் முழுக்க முழுக்க பெண் உடல் சார்ந்ததாக, பொருளாதார சுதந்திரத்தின் மூலம் அவர்களும் பயனடையும் சுதந்திரமாக இருக்கிறது. அவளது பாலியல் உறுப்புகளை இச்சைக்குத் திறம்பட பயன்படுத்திக்கொள்வதில் மட்டுமே இருக்கிறது. இதை ஆணாதிக்கம் என்பதோடு ஆண் துய்ப்பு வாதம் என்றும் அழைக்கலாம். தவிர்க்கவியாலது இது, இரையை கொழுக்க வைப்பது அடித்து உண்ணவே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஆணின் துய்ப்பானது பெண்ணுக்கு சுதந்திரம் வழங்குவது உண்மைதான். அவள் பணிந்து போவதற்கான சுதந்திரம், அடிமையாக இருப்பதற்கான சுதந்திரம், வதைபடுதலுக்கான சுதந்திரம். ஆனால் சுயம் சார்ந்த கருத்துச் சுதந்திரம் என்பதை இவை ஒரு போதும் பிரதிபலிப்பதில்லை. வெகு அரிதாகவே அவை காட்சியளிக்கின்றன.
உடலைக் கொண்டாடுதல் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு, ஆனால் என் உடலை எப்படி கொண்டாடவேண்டும் என்பதை நான் தீர்மானிக்க வேண்டும். உடலைக் கொண்டாடுதல் என்பது நேரடியாக மார்பையும், தொப்புளையும், இடுப்பையும் காட்டுவதில் தான் உள்ளது என்று சொல்வது பெண் என்றாலே அவ்வுறுப்புகள்தான் என்ற வணிகவாதிகள், முதலாளிகளின் கருத்தையே பிரதிபலிக்கிறது. அதனால் களிப்படைவது ஆண்கள், ஆணின் பெண்ணாகிப் போன பெண்கள். உடலை வெளிக்காட்டுவதே கொண்டாட்டம் என்றால் இரு பாலாருக்கும் அதை நான் முன் மொழிகிறேன். இன்று முதல் நாம் நிர்வானத்தை மேற்கொள்வோம். உடையே அணியாமல் இருந்தால் பாலியல் போரில் கால் பகுதி வென்று விடலாம். வேறு வழியில்லை. ஆணின் நிர்வாணத்தை மதங்களும் இதிகாசங்களும் துறவு என்று கைதொழுகையில் பெண்ணின் மன்னிக்கமுடியாத தவறு, அதி சிறந்த ஒழுக்கக்கேடு எனப்படுகிறது.
பாலியல் வியாபாரம் தடை செய்யப்படுகிறது. ஆணால் திறந்த வெளியில் நிகழும் இந்த பாலியல் வியாபாரத்தை, பெண் உடலின் மேல் வைக்கப்படும் பார்வைச் சுரண்டலை என்ன வென்று சொல்வது. தமிழ் உணர்வு, நாட்டுப் பற்று, சமூக அநீதிகளை தட்டிக் கேட்டு கொதித்தெழும் அதே கதாநாயக ‘ஆண்’ தான் பெண்ணின் இடுப்பை சுற்றி அவளை பாலியல் பண்டமாக நுகர்ந்தவாறு ஆடுகிறார். ஆனால் இதில் பெண்ணை நோக்கியே எல்லக் குற்றச்சாட்டுகளும் நீள்கிறது. இல்லையேல், காலம் கெட்டுப் போச்சு என்னத்த சொல்ல என்று ஆணின் விதிக் கூற்றாக, காலத்தின் அங்காலாய்ப்பாக, அதுவும் இல்லையென்றால் அவ அழகா இருக்கா, காட்டுறா இதுல உங்களுக்கு என்ன பிரச்சன என்ற அளவில் இது நீள்கிறது.
இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். பெண்ணின் மார்பளவை வைத்துத்தான் பெண்ணுக்கு மதிப்பு, சிறப்பு என்று இலக்கியம் முதல் திரைப்படங்கள், விளம்பரங்கள் வரை பரைசாற்றுகின்றன. இதனை உட்செறிக்கும் ஆண்கள் பெண்ணின் மார்பளவை ‘ஐந்து காசு கொய்யாக்கா, பத்து காசு கொய்யாக்கா’ என்றும், இதர கனிகளின் பெயர்களையும் சொல்லி கிண்டல் செய்கின்றனர். இதனால் மன உளைச்சல் அடையும் பெண் கைகுட்டைகளை உள்ளாடைக்குள் செருகி வைத்தாவது செயற்கையாக தனது மார்பளவை கூட்டிக் காட்டும் மன நிலைக்கு தள்ளப்படுகிறாள். பெண்ணின் மார்புக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவமானது சந்தையில் எண்ணற்ற ‘பேடட் பிராக்களை’ நிரப்பியுள்ளது. (இந்த வகையில் ஆணாதிக்கமானது ஆண்களின் குறியின் நீளத்தை வைத்தே அவனுக்கு மதிப்பளிக்கிறது. அறிவியலுக்கு சற்றும் பொறுத்தமற்ற வகையில் ஆண்குறியின் நீளத்தை இன்ப உணர்வோடு ஒப்பிட்டு ஏமாற்றுகிறது, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, என் நேரமும் ஒரு ஆண் தன் ஆண்மை குறித்தே கவலை கொள்ளும் நிலைக்கு தள்ளுகிறது. பின்னர் அது ஆபாச நுகர்வாகவும், பெண் உடல் மீதான வன்முறையாகவும் மாறுகிறது.)
வார்த்தைகள் எப்பொழுதும் புரிந்து கொள்வதையே மையமாகக் கொண்டிருப்பதால் அது மிகவும் தடுமாற்றத்துடனயே அர்த்தங்களை வழங்கிவிடுகிறது. எடுத்துக்காட்டாக கதா நாயாகன் என்பவன் சமூக ஆணாக இருக்கையில் கதாநாயகி என்பவள் அந்த ஆணுக்கு வெறும் துனைக்கருவி மட்டுமே என்ற அர்த்தத்தை வழங்குவது எப்படி. உண்மையில் அவள் கதையின் நாயகியல்ல ஒரு போதும் அவளை ஒரு பெண்ணை கதை நாயகியாக ஆணின் மனம் ஏறுக்கொள்ளாது. இருப்பின் அது ஆணின் நேர்மையை, ஆணின் அறத்தை உலகுக்குச் சுட்டிக்காட்டவுமே. அவள் கதையின் நாயகில்ல. கதாநாயகனின் நாயகி. கண்டு கேட்டு உண்டு புணர்ந்து கதாநாயாகனின் தாபத்தைத் தீர்க்க பேருதவி புரியும் ஒரு உடல். அவ்வுடலில் உள்ள மூளையை அவ்வளவு சீக்கிரத்தில் சிந்திக்கவிட ஆணாதிக்கவாதிகள் ஒன்றும் அவ்வளவு மோசமான முட்டாள்கள் அல்ல.
கதாநாயகியின் உடைக்கும், தன் ரசிகர்களின் பாலியல் விருப்பங்களுக்கும் அத்தனை சுதந்திரம் கொடுக்கும் நாயகர்கள் ஏன் தங்கள் வீட்டுப் பெண்களை பொத்தி பொத்தி வெளியில் அழைத்து வருகிறார்கள், முன்னாள் நடிகையாக இருந்தால் கூட உடலை மூடிக் கொண்டு தானே வெளியில் வரவேண்டியுள்ளது. சினிமா ஒரு தொழில் என்றால் மற்ற தொழில்களைப் போல் திருமணத்திற்கு பின்னரும் ஏன் அப்பெண்கள் நடிப்பை அதே போல் கவர்ச்சி காட்டித் தொடர முடிவதில்லை…(குறிப்பாக கற்பு போற்றும் தமிழ் நாட்டில்). திருமணத்திற்கு முன் அவள் பொது சொத்து, பிறகு தனிச்சொத்தா. இது அயோக்கியத்தனம் இல்லையா. ஏதோ சில ‘நிதியுதவிகளை’ செய்துவிடுவதால் பெண் உடல் மீது திறைத் துறையினர் சிலர் செய்யும் இந்த சுரண்டலை அப்படியே மன்னித்து விடலாமா. ஆணாதிக்க சமூக அறிவின் மீதுதான் எத்தனை பெரிய நம்பிக்கை இவர்களுக்கு.
திரைப்படத்தில் நல்லவராக, தமிழ் உணர்வாளராக, சமூக அநீதிகளை தட்டிக் கேட்பவராக, தாய், தங்கை, காதலி, மனைவி, ஊர், மாநிலம், நாடு இப்படி எல்லாவற்றையுமே ஒற்றை ஆளாக காப்பாற்றுபவராக தோன்றும் இவர்கள் நிஜத்தில் அதிகார வர்க்கத்திற்கெதிராக எத்தனை முறை தைரியமாக கேள்வி கேட்டிருப்பார்கள். வீரவசனமெல்லாம் சினிமாவோடு போய் விடுகிறது. நிஜத்தில், கலைஞன் ( ன்…விகுதி சிரமத்தைக் கொடுக்கிறது…இருந்தாலும் வேறு வழியில்லை) என்பவன் அரசுக்கு எதிராகவும் சுதந்திரத்தின் ஊற்று கண்ணாகவும் இருப்பவனே என்றால் திரைத் துறையில் சுரண்டல்வாதம் செய்பவர்களை நாம் கலைஞர்கள் என்றழைக்க முடியுமா. அப்பெடியெனின் தனது கலையின் மூலமாக சிந்தனைகளை ஏற்படுத்திய கலைஞர்கள் வெட்கித் தலைகுனிய மாட்டார்களா. இனி குரைந்த பட்சமாவது வியாபாரிகளையும், சுரண்டலாளர்களையும் கலைஞர்கள் என்றழைக்காது இருப்போம். ஆணின் செயல்களான இதை அப்படியே பற்றிக்கொள்ளும் சமூகம் மிக சௌகரியமாக பெண் உடலை வைத்து நடக்கும் பாலியல் சுரண்டலை மறந்தும், அதே சமயம் மன்னித்தும் விடுகிறது.
உலகில் அதிக பத்திரிக்கைகள் வெளி வரும் நாடாக இந்தியாவைச் சொல்கிறார்கள். இதை பத்திரிக்கைச் சுதந்திரத்தின் தேவை என நாம் நினைத்தோமானால் அதை விட வெட்கமடையச் செய்யும் விசயம் வேறு எதுவும் இல்லை. வெளிவரும் பத்திரிக்கைகளில் 90 சதமான பத்திரிக்கைகள் நாம் சாலையில் காணும் பெண்ணொத்த இன்னொரு பெண்ணின் அங்கங்களை நடுப்பக்கத்தில், அட்டையில் என்று பக்கம் பக்கமாக பெண்ணின் அங்கங்களை மிக நேர்த்தியாக முலாம் பூசி உறையிட்டு பார்வைக்கு வைக்கிறது. பெண்ணின் மார்போ, தொடையோ, இடுப்போ காட்டாத அட்டைப்படங்கள் வெகு சில. இதில் ஒரு பெண்ணிய வாசகராக சம்பந்தப்பட்ட இடங்களில்தான் பெண்ணின் உணர்ச்சியும் அதைச் சம்பந்தப்பட்ட ஆண் பார்ப்பதனால் அவன் உணர்ச்சியும் தூண்டப்படுகிறது என்பதை ஆண் அறிவியலின் உச்சபட்ச கயமையாகவே கருதுகிறேன். புலனாய்வு பத்திரிகைகள் என்றால் நடுப்பக்கம். அதெப்படி சமூக அக்கறை என்பது கூட ஆண்களுக்கான சமூக அக்கறை மட்டும் தானா. எனக்கு புரியவில்லை. அதில் வகைகள் வேறு; ‘குடும்ப பெண்கள்’ பத்திரிகை என்றால் ‘மூடிய பெண்கள்’ போன்ற பெண்ணின் படம். ஆண் நுகர்வோருக்கான பொதுவான இதழ்கள் என்றால் அதில் உடலை வெளிக்காட்டும் நடிகையின், பெண்ணின் படம்.
அதேபோல் திரைப்படங்களில் வீரம், மொழிப்பற்று, நாட்டுப்பற்று வெளிப்படுத்துவதும் யார், ஆண். பெண்ணுக்கு நாட்டுப்பற்றோ, சமூகப்பற்றோ கிடையாதா. எல்லாவற்றையும் காக்கும் சக்தி ஆணுக்கு மட்டும் தான் உள்ளதா. பெண்ணும் ஆண் கருதும் அதே வீர உணர்வை தன் மகன் வாயிலாக, கணவன் வாயிலாக வெளிப்படுத்த வேண்டும். வென்று வா மகனே என்று கொக்கரிக்க வேண்டும். மகள் வென்று வர மாட்டாளா. போர்களங்களில் வரலாறு படைத்த மங்கைகள் எத்தனை பேர் உள்ளனர். ஆணாதிக்கத்தின் விளைவே போர் என்றாலும், அதிலும் பெண்கள் சாதித்திருக்கிறார்களா இல்லையா?
சில தினங்களுக்கு முன் ஒரு புதிய படப் பாடல் பார்த்தேன், அதில் கதாநாயகனை சுற்றி அவனைப் போலாக முடியாத எளிய ஆண்கள் அரிவாளால் சுற்றி வளைக்கின்றனர். அவர்களை கதாநாயகன் பந்தாடுவான், அதை பார்த்துகொண்டு நாயகி நடனமாடி ரசிப்பாள். என்ன வகை மனநிலை இது. மற்றும் சில தொழிலாளர் வர்க்க பெண்களும் அவரை சுற்றி நடனமாடுகின்ரனர். கொன்று குவிப்பதை வீரம் என்று சொல்லி அதைத்தான் பெண் ரசிப்பாள் என்று சொல்வதும் ஆண்கள் மனதில் வன்முறையை விதைப்பதும் செவ்வனே நடந்து வருகிறது. பெண் மனதிலும் அப்படிப்பட்ட நாயகனே உன்னைக் காக்க வல்லவன், உன்னை உன்னால் காத்துக்கொள்ள முடியாது, என்றைக்குமே ஆணைசார்ந்தே இரு என்று சொல்வதாகாதா. உண்மையைச் சொன்னால் தனக்கென்று ஒரு சொந்தக் குற்றத்தைக் கூட செய்ய முடியாதவள் பெண். அவள் செய்யும் நல்லது அணைத்தும் ஆணைச் சென்று சேர்கையில், அவள் அவளுக்காக மட்டும் செய்யும் சில குற்றங்கள் அவளை மட்டுமே காயப்படுத்துகிறது. ஆகக் கூடிய குரூரம் என்றால் என்னால் இப்பொழுது இதை மட்டுமே சொல்ல முடியும்.
சமூகத்தில் அதிக வன்முறை செயலில் ஈடுபடுவது எந்த பால். அவர்கள் ஏன் அப்படி இருக்றார்கள், அதற்கு காரணமாய் இருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகள் என்ன என்பாவை எல்லாம் விவாதத்திற்குரியவை.
ஆனால் ஆணாதிக்க சமூகத்தின் விளைவால் ஆண் சக ஆணிடமிருந்தே தனக்கு விருப்பமான பெண்ணை காக்க வேண்டிய, கண்காணிக்க வேண்டிய மன உளைச்சலுக்களாகிறான் இல்லையா?
பெண்மை எனும் குணத்தின் வரையரை கொண்டு ஆண்கள் பெண்களை மதிப்பிடுவதுபோல், அதனடிப்படையில் தனக்கான துணையை தேடுவது போல் ஆண்மை எனும் வரையரை கொண்டு பெண்ணும் தனக்கான துணையை தேர்வு செய்ய நிணைத்தால் பெரும்பாலான ஆண்களுக்கு துணையே கிடைக்காது. ‘ஆண்மையை’ சோதிக்கும் வகையில் வீர சாகசங்கள் புரியச் செய்து, காளையை அடக்கச் செய்து, வீரக் கல்லை தூக்க செய்து, ஒரு கட்டத்திற்கு மேலே போய் அநீதிகளை தட்டிக் கேட்டு வா, அமெரிக்காவை ஒழித்து விட்டு வா பிறகு தான் கல்யாணம் என்று பெண் சொல்ல நேர்ந்தால் என்ன நடக்கும். காலத்திற்கேற்ப ஆணுக்கான ’ஆண்மை’ வெளிப்பாடு மாறிப்போனது போல் பெண்ணுக்கு மாறியுள்ளதா? ஆண்மை சலுகைகள் ஆணுக்கு மட்டுமே.
இவ்வாறாக நம்மை சுற்றி நடக்கும் இந்த பாலியல் போர், ஏற்றத்தாழ்வு, சாதிய ஒடுக்குமுறை, ஏகாதிபத்திய வளர்ச்சி இது பற்றியெல்லாம் கவலையே இல்லாமல் அது எவரோ ஒரு சிலரின் விதண்டாவாதம், வெட்டி வேலை, தீவிரவாதம் என்று பொது புத்தி நினைப்பதற்கு காரணமாய் இருப்பது எது?
குடும்பம் எனும் அமைப்பு – வழக்கமாக சொல்லப்படும் ’மதவாத’ / உடல் சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கப்பால் நான் இரண்டு விஷயங்களை சுட்டுக் காட்ட விரும்புகிறென். ஒன்று: குடும்பம் சுயநலத்தின் கிடங்கு. ஆம், அது தன் வீடு, தன் உறவு என்று கவலை கொள்ளும் மனப்பான்மையை விதைக்கிறது. தன் உறவுகளுக்காக பொருள் ஈட்டி காக்கும் நெருக்கடியில் மற்றவர் பற்றி கவலை கொள்வதை புறந்தள்ளுகிறது. இரத்த உறவு நிலவுவதால் அவர்களுக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்று பயம் கொள்ளச் செய்கிறது. இரத்த உறவல்லாதவர் பற்றி இரக்கம் கொண்டு தானங்கள் செய்வதோடு நிறுத்திக்கொள்கிறது. பெண்களுக்கென்று வீட்டுப் பொறுப்பில் ஒதுக்கப்பட்டிருக்கும் துறைகள் அவளை அரசியல் களத்தில், சமூக பங்களிப்பில் தொடர்ந்து செயல்பட முடியாதவளாக்குகிறது. குழந்தை பெற்று விட்டால் குறைந்தது 16 ஆண்டுகள் அவள் தனது ’பொறுப்புகளை’ தட்டி கழிக்க முடியாதவளாகிவிடுகிறாள். இச்சூழலில் பெண்கள் அரசியலுக்கு வர விரும்புவதில்லை எனும் விமர்சனம் பொருளற்றதாகிப் போகிறது.
எப்படி குடும்பத்தில் ஒவ்வொரு பொறுப்பு ஒவ்வொருவருக்கனாதோ அதேபோல் சமூக தளத்தில் சமூக பொறுப்பு ஒரு சிலருக்கானது என்று பிரதி செய்கிறது. அதாவது நம்மை காக்கும் பொறுப்பு மற்றவர்களுக்கானது, அதற்கு நாம் ஓட்டு போடுவது, வரி கட்டுவதும் மட்டும் போதுமானது. காக்கும் பணியை செய்ய வேண்டியது ஒரு சிலரின் பொறுப்பு, அவரே தலைவர், அதுவே அரசியல் என்று ஒதுங்கிகொள்ளச் செய்கிறது. நம் அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றி நடப்பவை எல்லாம் அரசியலே என்று கூட உணரமுடியாமல் நான் அரசியல்வாதி இல்லப்பா, குடும்பஸ்தன் என்பது.
அந்த எவரோ சிலர் அடித்துக் கொள்ளட்டும், முட்டிக் கொள்ளட்டும், செத்து மடியட்டும் என்று பொறுப்பை தாரை வார்த்துவிட்டு பொழுதுபோக்கை வாழ்வின் பகுதியாக்கி கொள்வது. குடும்பம் சிதையாமல் இருக்கும் வரையே முதலாளிகளுக்கு, அதிகார வர்க்கத்திற்கு அறிவு பெறாத அடிமைகள் கிடைப்பர். அதை உடைத்தெரிந்து மாற்று சிந்தனையாளர்கள் உருவாகியிருந்தாலும், பெண்ணுக்கு அது எந்த அளவுக்கு சாத்தியமாகி இருக்கிறது.
அரசியல், புரட்சி, சமூக அக்கறை இவையெல்லாம் மறைமுகமாக அணின் களம். பெண் அதில் பங்கேற்க விரும்பினால் அவள் பரத்தை, அடங்காப்பிடாரி, படித்த திமிர்…ஒழுங்கா பொம்பளையா கல்யாணம் பண்ணி,குழந்தையப் பெத்துக்குற வழியப்பாரு… இதுதான் விதி.
பெரும் போராட்டங்களுக்குப் பிறகு இன்று பெண்களுக்கு கல்வி, வேலைக்கு போகும் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அதுவும் குடும்ப அமைப்பிற்கான பொருளாதார நலன் கருதி, ஆனால் அரசியலில், சமூக மாற்றத்திற்கான கருத்தியல் தளத்தில் பங்கு பெருவதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெரும் பெண்களின் விகிதாச்சாரம் மிக மிக குறைவு, அப்படி கிடைத்தாலும், குடும்ப பொறுப்புகளையும் சுமந்து கொண்டு, பிள்ளையையும் பெற்று விட்டு எவ்வளவு தூரம் பெண்ணால் இதில் தாக்கு பிடிக்க முடியும். அந்த களத்தில் அவள் எதிர் கொள்ளும் பாலியல் ரீதியான ஒடுக்குமுறை, அத்துமீறல்கள் என்ன?
மற்றொன்று குடும்ப அமைப்பே ஒரு வகையில் சாதியத்தை மறைமுகமாக தக்கவைத்துக் கொள்கிறது. எல்லோரும் கல்வி பெறுவதற்கு எதிராக இருக்கிறது. உலகமயமாக்கல் சூழலில், நுகர்வு கலாச்சாரம், வாழ்வுமுறை போகங்கள் நம் மேல் திணிக்கபப்டுகிறது, அதறகான பொருள் ஈட்ட இரண்டு துணைகளும் உழைக்க வேண்டியுள்ளது, அப்போது வீட்டுப் பணிகளை செய்ய நமக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். ஆதிக்க சாதி சமூகத்தை சேர்ந்த எவரும் வீட்டுப் பணிகளுக்கு வருவதில்லை, குறிப்பாக பெண்களை சொல்கிறேன். அப்படியே இருந்தாலும், பார்ப்பன பெண்கள், பார்ப்பன வீடுகளில் சமையல் வேலை செய்வர், அல்லது ஆதிக்க சாதி முதலாளிகளின் வீட்டில் வேலை செய்வர், அதுவும் பெரும்பாலும் சமையல் வேலையாகத்தான் இருக்கும். அழுக்கு களையும் மற்ற வேலைகளை பார்ப்பன சாதி பெண்கள் செய்வதில்லை. வீடுகளில் கூட கழிப்பறை கழுவும் பணியை செய்ய ஆள் வேண்டும் அத்தகையோருக்கு.
எல்லோரும் கல்வி பெற்று விட்டால், படிநிலையில் வளர்ந்து விட்டால் சாதி ஒழிந்து விட்டால் எப்படி அடிமைகள் கிடைப்பார்கள்.
அதே போல் முதலாளித்துவ அமைப்புக்கு உழைக்கவும், நுகர்வோராக இருக்கவும் அடிமைகள் தேவை, அதை உற்பத்தி செய்யும் கூடம் குடும்பம். அந்த குடும்ப அமைப்பு சிதையாமல் இருப்பதற்கு அவர்களை ‘தாஜா’ செய்து வைப்பது அவசியம். அவர்களை மகிழ்விக்கும் சாதனங்கள் தேவை. அதுவே பொழுதுபோக்கு எனும் கருவி.
பொழுது போக்கு வாதம் மூலம் நாட்டு நடப்புகளில் இருந்து கவனம் திசை திருப்பப்படுகிறது. எல்லாம் சரியாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது எனும் மாயை உருவாக்கப்படுகிறது.
இந்த மாயாவாதங்கள் மூலம் படிநிலையை தக்கவத்துக்கொண்டு குடும்ப அமைப்புக்கான அடிமைகளை, முதலாளித்துவ தொழிலுக்கு தேவைப்படும் அடிமைகளை தக்கவைத்துக்கொள்ளவும், கல்வி அறிவை முடக்குவது அவர்களுக்கு அவசியமாகிறது. நேரடியாக கல்வியை மறுத்தால் குட்டு வெளிப்பட்டுவிடுமே. கல்வித் துறையை தனியார்மயமாக்கிவிட்டது அரசு எனும் இயந்திரம். மேலும், கவனத்தை சிதறடித்தால் போதுமே மற்றவற்றை நுகர்வோர் பார்த்துக்கொள்வர், அவர்களின் பணியும் சுலபமாகிவிடுகிறது. அதுவும் நல்லவர் எனும் போர்வையின் கீழ். பொருளாதார நெருக்கடியால் மானவர்கள் பள்ளிக் கல்வியை துண்டித்துக் கொள்வதோடு, மனிதப் பண்புக்கு எந்த வகையிலும் உதவாத முதலாளித்துவ வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படும் கல்வியின் அழுத்தத்தை தாங்க முடியாமல், பொழுது போக்கினால் கவனம் சிதறி படிக்க முடியாமல் போகும் பிள்ளைகளும் ஏராளம்.
ஆனால் இவை எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கச் செய்கிறது திரைப்பட மாயை, பொழுது போக்கு நிகழ்ச்சிகள் சார்ந்த வெகுஜன உடக மாயை. அதில் வழிந்தோடும் காமம், பெண் உடல் மீதான பாலியல் சுரண்டல், ஆணாதிக்க சமூக பிரதி.
இவற்றை புரிந்து கொள்ள, நிலவும் சமூக அமைப்பை சந்தேகம் கொள்ள, கேள்வி எழுப்ப சமத்துவ சிந்தனைகளை வழிகாட்டியாகக் கொண்ட மார்க்சிய பெண்ணிய சிந்தனைகள் உதவுகின்றன. இந்திய சமூகத்தின் கூடுதல் பலம் அம்பேத்கரிய, பெரியாரிய சிந்தனைகள். இவற்றை ஓரளவுக்கு கற்றதன் மூலம் கேள்வி எழுப்பி அறிவை மீட்டெடுத்துக் கொண்ட ஒரு பெண்னாக இன்று நான் உங்கள் முன்னால் நிற்கிறேன்… என்னை போன்ற ஓரிருவர் மத்தியில் இத்தகைய அறிவூட்டத்தை ஏற்படுத்தினால் கூட போதும் இந்த அமைப்பு துவங்கிய நோக்கம் நிறைவேறியதாக கொள்வேன்…
சமத்துவத்திற்காக போராடிவரும் கட்சிகள், அமைப்புகளின் பங்கு அளப்பரியது. அதிலும் ஒரு சிறு குறையுள்ளது. அக்கட்சிகள், அமைப்புகள் ஆண் புரட்சியாளரை முன் நிறுத்தும் அளவுக்கு முக்கியமான பெண் புரட்சியாளர் ஒருவரை நிறுத்துவதில்லை. அக்கட்சிகளின் பதிப்பகங்கள் அவரைப் பற்றிய புத்தகங்களை வெளிட்டாலும், அக்கட்சிகளின் பெண்கள் அமைப்புகளில் கூட கோட்பாட்டு அடையாளச் சொற்களிலும் அந்த ‘இயத்தை’ காண முடியவில்லை…மற்ற ஆண் புரட்சியாளர்களின் கோட்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ள அளவுக்கு பெண்களின் கோட்பாடுகள், எழுத்துக்கள் ஆய்வு செய்யப்படவில்லை.
எடுத்துக்காட்டாக ரோசா லுக்சம்பர்க். தொலை நோக்குப் பார்வை கொண்ட சிறந்த தர்க்கவாத திறனாய்வு அறிவு கொண்டிருந்த புரட்சிகர போராளி ரோசா லுக்சம்பர்க். மார்க்சியம், லெனினியம், ஸ்டாலினியம், ட்ராட்ஸ்கியம், மாவோயிசம் என்று இருப்பது போல் லுக்சம்பர்க்கிசம் (Luxemburgism) என்பது போதுமான அளவுக்கு முன்னெடுக்கப்படவில்லை. லெனினோடு சில கருத்துக்களில் அவர் முரண்பட்டிருந்தாலும், ருஷிய புரட்சி காலத்தில் அப்பெண்மனியின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆயுத புரட்சி எனும் சிந்தனைக்கப்பார்பட்டு மக்கள் சக்தியின் மகத்தான பண்புக்கு அதிக அழுத்தம் கொடுத்தவர் அவர். அவர் செய்த தர்க்கவாதம் மார்க்சியத்தை வளர்த்தெடுக்க உதவியது. மற்ற நாடுகளில் மார்க்சிய- லெனியிய-லுக்சம்பர்கிசம் என்பது ஒரு அரசியல் கோட்பாடாக உள்ளது. எதிர்ப்புரட்சி அரசால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார் ரோசா லுக்சம்பர்க்*
The accumulation of Capital, Socialism or Barbarism, Spartacus உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதங்கள் வெளிவரவிருக்கிறது என்று அறிகிறேன்.
”ரோசா லுக்சம்பர்கை மீள் கண்டுபிடிப்பு செய்தல்” எனும் புத்தகத்தில் பீட்டர் ஹூடிஸ் எழுதியிருக்கும் அறிமுகம்: ஆழ்ந்த அறிவு வாய்ந்த ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர். நவீன முற்போக்குவாதத்தின் அசல் ஆளுமை. சமூக உருமாற்றத்திற்கான முயற்சிகளில் இன்றைய காலகட்டம் எதிர்கொள்ளும் சிக்கல்களின் ஒளியில் ரோசா லுக்சம்பர்க்கின் சிந்தனைகளை நோக்கி ஒரு புதிய செவிசாய்ப்பு தேவை… கடுமையான உழைப்பை செலுத்தி அவர் செய்திருக்கும் ஆய்வுகள், முதலீட்டியத்திற்கெதிராக அவர் செய்த தர்க்கவாதம் ஆகியவை அரசியல், பொருளாதார, சூழலியல் பேரழிவுகளுக்கிடையில் நாம் ஊசலாடிக்கொண்டிருக்கும் இன்றைய நிலைக்கு சூழலுக்கு சக்திவாய்ந்த வழிகாட்டி….
லுக்சம்பர்க் ஒரு சுதந்திரமான அறிவுஜீவி, சமரசத்திற்கிடமற்ற அவரது மானுட விடுதலைவாதம் எக்காலத்தையும் விட நமது காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவை.
ரோசா லுக்சம்பர்க்கின் காலம் இப்போதைக்கானது………..
“இடி முழக்கம் போல் நான் மக்களிடம் தாக்கம் ஏற்படுத்த விழைகிறேன், வெறும் பேச்சினால் மனங்களை கொழுந்து விட்டு எரியச் செய்வதல்ல என் நோக்கம், எனது உள்ளரிவின் சுவாசத்தால், திட நம்பிக்கையின் பலத்தால், எனது உயிர்பண்பின் சக்தியால் அதைச் செய்வேன்” – ரோசா லுக்சம்பர்க்
இறுதியாக தோழர்களே, உழைக்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மெரினா கடற்கரைக்குச் செல்லும் எவரும் ஒரு அற்புதமான சிற்பத்தைக் காணலாம்.அது மாபெரும் சிற்பியும் ஆளுமையுமான தேபி பிரசாத் ராய் சௌத்திரி அவர்களால் வடிக்கப்பட்ட உழைப்பாளர் சிலை. நாட்டுக்கு உழைத்தவர்களுக்கு ஒரு மரியாதை நிமித்தமும், அவர்களைப் போல் ஊருக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கவுமே சிலைகள் நிறுவப்படன.
உழைக்கும் மக்களுக்கென்று நிறுவப்பட்ட உழைப்பாளர் சிலையை நான் கடக்கும் போதெல்லாம் மானுட உழைப்பின் பாரத்தைத்தான் அவர்கள் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என நினைப்பேன். ஆனால் சம்பந்தப்பட்ட சிலையில் ஒரு பெண் உழைப்பாளி கூட ஏன் இல்லை என என்னை நானே கேட்டுக்கொண்டதுண்டு.
எத்தனையோ ஆளூமைகளை, கலைஞர்களை ஆணாதிக்க சமூகம் தின்று தீர்த்திருக்கிறது. அந்த வகையில் சிற்பி ராய் சௌத்ரியும் ஒரு பெண் உழைப்பாளியை செதுக்காமல் விட நேர்ந்தது. இன்னும் சொல்லப்போனால் ஒரு பெண் இரட்டை உழைப்பாளி. வீட்டிலும் வெளியிலும் அவள் சுமக்கும் பாரங்கள் அதிகம்.
இரட்டை உழைப்பு செலுத்தும் பெண் உழைப்பாளர்களுக்கென்று ஒரு சிலை வேண்டாமா. இன்றைய இந்த கூட்டத்தின் வாயிலாக பெண் உழைப்பாளர்கள் சிலைக்கான கோரிக்கை வைக்கப்படுகிறது. அது பெண்கள் மட்டும் இருக்கும் சிலையாக இல்லாமல், ஆணும் பெண்ணும் இணைந்து இருக்க வேண்டும். அதே போல் மூன்றாம் பாலினத்தாருக்கு வேலை வாய்ப்பு இல்லை என்பதை உணர்த்தும் வகையிலும் சிலைகள் அமைக்க வேண்டும் என்ற எளிய கோரிக்கையையும் வைக்கிறோம்.
(10.3.2012 மாசெஸ் எனும் அமைப்பின் துவக்க நிகழ்வுக்காக நான் தயார் செய்திருந்த உரை. நேர குறைபாடு காரணமாக அன்று பேசமுடியாமல் போனது. பின்னர் அதை கட்டுரையாக மாற்றுவதா, அப்படியே உரையாக பதிவு செய்வதா எனும் குழப்பத்தின் காரணமாக அப்படியே வைத்திருந்தேன். அதை பிறகு முடிவுசெய்து கொள்ளலாம் என்ற முடிவின் படி இப்போது இங்கு பதிவுசெய்கிறேன்.)
- கொற்றவை
குறிப்புகள்: பெண்ணின் மறுபக்கம், மருத்துவர் ஷாலினி, விகடன் வெளியீடு.
ரோசா லுக்சம்பர்க் (வாழ்க்கை வரலாறு) , தமிழில் அ. பட்டாபிராமன், என்.சி.பி.எச் வெளியீடு,
Related Links: https://plus.google.com/photos/109970729142100867469/albums/5718585182920780209?banner=pwa
இம்மாத உயிர் எழுத்து இதழில் கட்டுரை எனும் வடிவத்திற்காக சிறிய மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது.

Apr 12, 2012
அவளை உங்களுக்கு தெரியாது
அவளை உங்களுக்கு தெரியாது
உழுது பயிர் செய்த தூர தேசத்து கோதுமையாய்
புவியின் நரம்புகள் அறுக்கப்பட்ட போதிலும்
கசியாமல் உறைகிறது வெண் குருதி
சொற்களற்ற அகராதி நிறைந்திருக்கும்
வீடு அது
வெற்று பக்கங்களில்
ஆண் சிலந்திகள்
வழ வழப்பான திரவத்தை இட்டு நிரப்பின
யானைகளுக்கு சிறகு வரைந்தாள் அவள்
வீடுகள் பறந்தன அவள் தூரிகையில்
என் முகம் மட்டும் காட்டும்
கண்ணாடி ஒன்றை பரிசளித்தாள்
அகராதிகளை ஒளித்து வைத்து
அக்கண்ணாடியை அணிந்து கொண்டோம்
பிம்பங்கள் பிம்பமானது
குட்டி இளவரசனின்
பறக்கும் தட்டை களவாடினோம்
சிறகு முளைத்த யானையும்
சேர்ந்து கொண்டது எங்களுடன்
அன்று மழை பெய்யவில்லை
சிரிப்பலையால் நிரம்பி வழிந்தது பால் வீதி
சொற்கள் கோர்த்து பனிக்குடம் செய்கிறாள்
அந்த வெம்மைக்குள் என்னை பொதிந்து வைக்கிறாள்
உங்களுக்கு அவளை தெரியாது
உங்கள் பள்ளிக்கூடத்திற்கு வருவதில்லை அவள்.
Mar 31, 2012
நிமிர்ந்து ஒரு முத்தம் தருகிறாள்

உங்கள் அதிகார மொழி உங்களை கைவிடும்போது
அவளை
குழந்தையாக மாற்றுங்கள்
குழைந்து விட்டதாக அறிவித்துக்கொள்ளுங்கள்
விலங்குகளினும் சிறந்த முகரும் தன்மையுடன்
இரத்த வாடையை மோப்பமிட்டு
தயார் நிலையை களி கொண்டு
முரசு கொட்டுகிறது ஊர்
பட்டாம்பூச்சியுடன் சிறகை விரித்து அவள் பறக்கையிலே
வயதின் சுருக்கங்களை முன் வைத்து
பாதுகாப்பு வளையத்திற்குள்
நிறுத்தப்படுகிறாள்
ஒவ்வொரு இரவின் முடிவிலும்
தசைகள் நெகிழும் முன்பே
உடலெங்கும்
ஒற்றைப் பாதையில் பயணித்து வரும்
கம்பளிப் பூச்சிகள்
அது கடந்து
மண்ணை நுகர்ந்து நடக்கையில்
பார்வைகளால் அங்ககளை அளவிட்டு
கூற முடியா வார்த்தைகளின் முடிவில்....
மற்றொருநாள்
அலுவலக அறை
சுழலும் நாற்காலி
கோப்புகள் எடுக்கும் ஆணை
குனிகிறாள்
பெண்
புட்டம் தடவிய கைகள்
பச்சைக் காகிதத்தில் சுற்றுகிறது
ஆண்மையை
எல்லா முனைப்புகளும் தோற்றுப்போகையில்...
கடவுளாக்கி வழிபடுகிறது....
நிமிர்ந்து ஒரு முத்தம் தருகிறாள்
நீலம் பாவுகிறது
உங்கள் உடல்.
(2010 இல் எழுதியது...அதை மறுவாசிப்பு செய்கையில் சில வரிகள் வெறும் உரைநடை வாசகமாக இருப்பதாக தோன்றியது...அவ்வரிகளை மாற்றி இப்போது வெளியிடுகிறேன்...)
Mar 29, 2012
முப்பொழுதும் உன் கற்பனைகள் – ஆணாதிக்கத்தின் கற்பனாவாதச் சிறகு
காட்சியமைப்பு, ஒளிப்பதிவு இன்னும் இதர தொழில்நுட்பத் துறைகளில் எவ்வளவு முன்னேறினாலும் ’காதல்’ எனும் குண்டு சட்டியை விட்டு தமிழ் திரைப்படங்கள் வெளியேறவில்லை என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் மு.உ.க. தாய் மீது பிடிப்பு, அதனால் பாதிக்கப்படும் மனநலம், அதைத் தொடர்ந்து தன் வாழ்வில் நுழையும் பெண் மீதான பிடிப்பு என்ற வழக்கமான ’ஈர்ப்புக்கூடிய மிகையுணர்ச்சிக் காதல்’ (obsessive Romantic Love). கதைகளில் வரும் அதே அலுப்புத் தட்டும் கதாப்பாத்திர சித்தரிப்புகள்.
பி.பி.ஓவில் பணியாற்றும் ஓர் இளைஞனின் காதல், அவனது பின்னணி, காதலில் பிரச்சனை, எப்படி அவ்விளைஞன் பிரச்சனைகளை எதிர்கொள்கிறான், அதன் தொடர்ச்சியான முடிவு என்று ஓரிரு வரிகளில் கதையை சுருக்கிவிடலாம். பி.பி.ஓ இளைஞர்கள், இளைஞிகள்!! என்றால் அவர்களுக்கென்று ஒரு சித்தரிப்பை தற்போதைய சினிமாக்கள் செய்து வருகின்றன. இக்கதையில் வரும் ராமும் அப்படி ஒரு ’ஹாண்ட்சம்’ இளைஞர், அவரின் ‘கதாநாயகத் தன்மை, அழகு, கவர்ச்சி, ஒழுக்கவாதம்’ இவற்றை சித்திரிக்கும் வகையில் முதல் காட்சி – சக பணியாளரான ஒரு பெண், குட்டைப் பாவாடையில் (அது சீருடை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்) ராமை சுற்றி வந்து, ‘டேக் மீ’ ராம், அதாவது என்னை எடுத்துக்கோ ராம் என்பார் அதுவும் சாதாரணமாக இல்லை, ‘முற்போக்கு உடல் மொழியுடன்’. ஆம் அப்பெண் தன் மேல் சட்டையின் முதல் இரு பொத்தான்களை அவிழ்த்து விட்டு, தன் மார்புக் கோட்டை காட்டியாவது ‘ஹாண்ட்சம்’ ராமை கவர்ந்து விட வேண்டும் என்று வலை வீசுகிறார். ஹீரோ ‘ராம்’ (ராமர்) இல்லையா அதனால் அப்பெண்ணிடம் ‘மூட’ சொல்லிவிட்டு, தான் வேறொரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொல்லி மறுத்துவிடுவார். படம் முழுக்க பி.பி.ஓ பெண்கள் அல்லது தற்போதைய ’படித்த ’, ‘நாகரீக’, ‘முற்போக்கு’ பெண்கள் பற்றிய ஆணாதிக்க சித்தரிப்பே வழிந்தோடுகிறது. பெண்கள் குடிப்பதை சந்தானம் கிண்டல் செய்வது, மீண்டும் மீண்டும் அப்பெண் ராமை சுற்றி வருவது, ராம் வேறொருவனை திருமணம் செய்து கொண்டாலும், விவாகரத்து வாங்க வைத்து திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வது, மனநல மருத்துவராக வரும் ஜெயப்பிரகாஷின் ‘எள்ளல்கள்’, பெண்கள் பற்றிய சந்தானத்தின் மற்ற ‘நகைச்சுவை’ வசனங்கள் என்று எல்லாம் ஆணாதிக்க பெண் கருத்தாக்கங்கள்.
ஹீரோ ராம் ஒரு பெண்ணை (சாரு) தீவிரமாக விரும்புகிறார். பணி காரணமாக ஏற்படும் நட்பு ஆழமாக வளரும் சூழலில் அப்பெண்ணுக்கு சில ரவுடிகளால் தொந்தரவு ஏற்படுகிறது. அப்பெண் ராமை நல்ல நண்பராகவே கருதி பழகி வருகிறார் (வழக்கம் போல), தீவிர ஈர்ப்பின் காரணமாக (obsession) ராம் சாருவை எவரும் ஏதாவது சொல்லி விட்டால் ‘கொலை’ கூட செய்யத் தயங்காதவர். சாருவும் ராமும் சேர்ந்து ஒரு மென்பொருளை உருவாக்கி, அதை ஒரு போட்டியில் விவரிக்க வேண்டிய அன்று சாரு ஒரு காரில் சிலரால் இழுத்து செல்லப்படுகிறார். அதை பார்க்கும் ராம் முன்பு ரவுடி ஒருவர் சாருவை எச்சரிக்கும் காட்சியோடு தொடர்புபடுத்தி பதறி ஓடுகிறார். விபத்து நேர்கிறது. சித்தப் பிரமை பிடித்தவராகி வீடு திரும்புகிறார். உட்கார்ந்த இடத்திலேயே சில நாட்கள் உட்கார்ந்திருக்கிறார். பிறகு சாரு வருகிறார். அவருடன் அந்த வீட்டிலேயே வாழ்கிறார். வாரக் கடைசியில் காதலியோடு பெங்களூருவில் கழிக்கிறார். மற்ற நாட்களில் சென்னையில் வேலை.
சென்னையில் புதிய CEO (லதா) வருகிறார், அவர் சாருவைப் போல் இருக்கிறார். ஆனால் ராம் அவரைக் கண்டு எந்த உணர்வையும் வெளிப்படுத்தாததைத் தொடர்ந்து லதா அவரைப் பற்றிய பின்னணியை ஒரு மனநல மருத்துவரிடம் பகிர, மீதி கதை நகர்கிறது. சாருவுக்கும், லதாவுக்குமான தொடர்பு தெரியவருகிறது. ராமின் பின்னணிக் கதையைச் சொல்ல கிராமத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறார்கள். கணவனை இழந்த ஒரு பெண் மகனை எவ்வளவு சிரமங்களுக்கிடையில் வளர்க்கிறாள் என்று சொல்ல நிணைத்த இயக்குனர் அதற்கு ஆணாதிக்க தாய்மைவாத சித்தரிப்புகளை மட்டுமே கைகொண்டுள்ளார். இளம்பிள்ளைவாதம் கண்டுள்ள சிறுவயது மகனுடன் இளமை நிறைந்த பெண் விதவையாகி நிற்கிறாள். ஆண்களால் அவளுக்குத் தொல்லை நேர்கிறது. உடனே அவள் அந்த ஆணைத் அடித்து துரத்திவிட்டு அடுத்த நாள் தன் அழகை சிதைத்துக் கொள்கிறாள். பார்ப்பன புரோகிதர் அவளுக்கு நலம் விரும்பி (well wisher). ஒரு பெண் இளம் வயதில் விதவையானால் மொட்டையடித்து, சுடு பூசனியை கொடுத்து கடிக்கச் சொல்லி பற்கள் உதிரச் செய்து அவள் அழகை சிதைக்க வேண்டும், அவள் அழகற்றவளாக இருந்தால் தான் அவள் வேறொரு ஆணை நாடமாட்டாள், வேறொரு ஆணும் அவளை நாடமாட்டாள் எனும் பெண்களுக்கெதிரான பார்ப்பன (மனுஸ்மிருதி உள்ளிட்ட) பரிந்துரையை நயம்பட எடுத்துரைக்கிறார் இயக்குனர். பல இடங்களில் பார்ப்பனிய ஆதரவை இயக்குனர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆம் நிறைய ‘கெட்டவர்களை’ காட்டும் படங்களில் பெரும்பாலும் ‘புரோகிதர்கள்’ ரொம்ப நல்லவர்களாக காட்டப்படுவதும் அவர்களைத் தவிர இரட்சகர்களே இல்லை எனும் சித்தரிப்பும் பார்ப்பன-இந்துத்துவப் பிடிப்பன்றி வேறில்லை. அவள் பிழைப்புக்கு பார்ப்பனப் புரோகிதர் பரிந்துரைப்பது ‘வட்டிக்கு விட்டுப் பிழைத்தல்’ உடல் உழைப்பின்றி பிழைக்கும் புரோகிதக் கும்பல் உடல் உழைப்பை, வேறொரு தொழிலை பரிந்துரைக்கும் சாத்தியம் குறைவுதான் போலும். வட்டியை வசூலிப்பதற்கான ’கெட்டப்சேஞ்’, அதைத் தொடரும் அவரது உடல் மொழி. இங்கு ஆதிக்கச் சாதி கருத்தியலை வைப்பது யதார்த்தமாக இல்லை. சாம பேத தாண தண்டம் நாலும் தோத்துப் போகும் போது தகிடு தத்தம் என்ற இன்னொரு குரலும் சேர்ந்தே ஞாபகத்திற்க்கு வருகிறது. மற்ற சாதிகளிடத்தில் பிராமணியம் வரையறுக்கும் கடமைகளை பிராமணியம் கறாராக கைக்கொள்ளும் போது அது தனக்குத் தானே மீறலின் பொருட்டு வைத்திருக்கும் பரிகாரங்கள் ஏறாளம். எரிச்சல் குமட்டிக் கொண்டு வந்த இடங்களில் இதுவும் ஒன்று. ஆணால் கொடுக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரத்தில் அந்தப் பெண் சிறப்பாக நடித்துள்ளார்.
இத்தகைய ' மிகையுணர்ச்சி தாய்மை' சித்தரிப்பின்றி வந்த தென் மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தைப் பற்றி இங்கு சொல்வது அவசியமாகிறது. அதில் தாயாக வரும் பெண் தன்னம்பிக்கையின் உருவமாய் இருப்பாள். எவரையும் நம்பாமல் தன் உடல் உழைப்பை நம்புவாள். தாய்வழிச் சமூகத்தின் எச்சமாக இருக்கும் கிராமங்களில் பெண்கள் ‘பார்ப்பனியச்’ ஒடுக்குமுறைகளுக்கு இசையாமல் தன்னம்பிக்கையுடன் உழைத்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியுள்ள வரலாறும் உள்ளது. தெ.மே.ப வில் காட்டப்படும் பெண் அத்தகையவள். வன்முறையை எதிர் கொண்ட பின்னரும் வழக்கமான ‘வீரத் தாய்களைப்’ போல் இல்லாமல் மகனுக்கு ’வாழ்வு’ காத்திருக்கிறது, பகையை பகையால் வெல்ல முடியாது, அதை கவனி, அடிதடி வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டு மடிவாள். அறுத்துக் கட்டும் பண்பாடு கொண்டது ‘தமிழ்ச் சமூகம்’ ஆனால் விதவைக்கு மொட்டையடித்து மூலையில் உட்கார வைத்தது பார்ப்பனியப் பண்பாடு. மதவாதக் கருத்தாக்கங்களால் அக்காலக்கட்டத்தில் பண்பாட்டு இறுக்கம் காரணமாக பெண்கள் மறுமணம் செய்யவில்லை. இயக்குனர்கள் தங்களின் மற்ற மிகையுணர்சிப் புனைவுகளுக்கிடையே பெண் / பண்பாடு பற்றிய சித்தரிப்புகளை, ஆணாதிக்க, முதலாளித்துவ சமூக அமைப்பின் உளவியல்களை ஏன் கட்டுடைக்க முயல்வதில்லை. அரை நிர்வானப் பாடல்காட்சிகள் வடிவமைக்க செலவிடும் நேரத்தில் சிறிதளவை இவர்கள், தங்கள் ஆணாதிக்க அறிவு நிலையை மீட்டுக்கொள்ள செலவிடலாம்.
பெரும் சிரமத்துக்கு மத்தியில் மகனை வளர்க்கும் அந்த தாய் மகன் வளர்ந்து பி.பி.ஓவில் சேர்ந்து ‘செட்டில்’ ஆன பின்னர் மடிந்துபோகிறாள். அதனால் சித்த பிரமை பிடித்தவன் போல் ஆகிறான் மகன். உடனே சாரு வந்து அவனை தோளில் சாய்த்து ‘நான் இருக்கேண்டா உனக்கு, எப்பவும் உன் கூடயே இருப்பேன்’ என்று சொன்னவுடன் தாய் மீது ‘அளவற்ற பாசம்’ கொண்ட ராம் சாருவின் மீது ‘சாய்ந்துவிடுகிறார்’. எத்தனை காலங்களுக்கு இந்த நுரைதள்ளும் புளித்துப் போன அரைத்த மாவை சகித்துக் கொள்வது. ( பகலில் தாய், இரவில் வேசி, முற்பகலில் தோழி, பிற்பகலில் சகோதரி, இத்யாதி இத்யாதி....) பெண் என்பவள் எப்பொழுதும் ஒரு ஆணுக்கு ஆதரவான சொற்களையே சொல்லவேண்டும், உடலைச் சத்திரம் போன்று திறந்து வைத்திருக்க வேண்டும், அந்த சத்திரத்தில் ஒருவனுக்கு மட்டுமே, அதுவும் வீர சாகசங்கள் செய்யும் ‘கதாநாயகனுக்கு’ மட்டுமே திறந்து வைத்திருக்க வேண்டும். ஒரு பெண்ணின் தோளில் சமூகத்தால் பாதிப்புக்குள்ளான ‘so called bad people’ அத்துணை பேரும் ஏன் சாய்ந்து கொள்ளக்கூடாது. அன்பு அத்தகையவர்களுக்கும் கிடைத்தால் அவர்களும் இந்தக் கதாநாயகர்கள் போல் ‘நல்லவர்’ ஆகி விடலாமே. அது தவறு என்று சொல்வீர்களானல் இதற்குப் பெயர் ‘அன்பு’, ‘காதல்’ என்பது வெறும் ஆணாதிக்க வெற்றுச் சொற்கள், வெற்றுக் கருத்தாக்கம். அப்படியென்றால் அதற்குப் பெயர் காதல் இல்லை, அது காமம் எனும் உடல் தேவைக்கும், தன் விந்தணுவை ‘தூய்மையாக விதைத்து’ வாரிசு பெற்றெடுக்கும் தேவைக்கு ‘சிறந்த பெண்மை’ நிறைந்த பெண்ணைக் கண்டடையும் ஒரு வேட்டை. அதேபோல் ஏன் ஒரு பெண் தாய்மை கூடிய அன்பை பலருக்கும் கொடுக்கக் கூடாது எனும் விதி நிலவுகிறது. தாய்மை எனும் அந்த பரந்த உணர்வு ஏன் ஒருவருக்கு மட்டுமே உடமையாக்கப்படுகிறது? ‘தாய்மை’ எனும் அன்பு உலகளாவிய பரந்த செயல்பாட்டுக்கு ஏன் அனுமதிக்கப்படுவதில்லை. தாய் என்பவளில் ஒரு சிறந்த வேலைக்காரி, அதுவும் தனக்கு மட்டுமான வேலைக்காரியை தக்கவைத்துக்கொள்ளும் மனப்பான்மையன்றி வேறென்ன?
தங்களை கவனித்துக் கொள்ளும் சுயநலத் தேவை, பாதுக்காப்பின்மை உணர்வின் வெளிப்பாடு ஆகியவையே தன் தாய் போல் ‘பொறுமை’ நிறைந்த பெண்ணைத் தேடச்செய்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் பெண்கள் கூட தங்களுக்கு துணை தேடும்போது தந்தை போல் ஒருவர் வேண்டும் என்று தேடுவது குறைவாகத்தான் இருக்கிறது, அவளுக்கும் தாய் போல் ஒருவனே தேவைப்படுகிறார். இது அறிவியலா, கற்பிதமா அல்லது ‘தந்தையாகிய’ ஆண்கள் பெரும்பாலும் அத்தகைய குணங்களைக் கொண்டிருப்பதில்லையா? அல்லது தந்தைகளுக்கென்று பொருளீட்டுவதைத் தவிர அன்பு, அடக்கம், பொறுமை, அரவணைத்து தோள் கொடுத்து காக்கும் எந்த ‘கடமை’யும் இல்லையா. அப்படி இருப்பின் ஆண்கள் வருத்தப்படவேண்டிய விசயம் இது.
அப்படியில்லையென்றால் ஆணாதிக்க தாக்கமின்றி அன்பு, பாசம், அரவணைப்பு, என்று பெண்ணுக்கு தாங்கள் கொடுக்கும் இடம் ஆகியவை திரைப்படங்களில் மதிக்கப்படுவதில்லை, யதார்த்தமாக காட்டப்படுவதில்லை என்று ஆண்கள் கோபம் கொண்டு ஆணாதிக்க திரைப்படங்களுக்கு எதிர்வினையாற்றலாம்.
பல மில்லியன் வருட பரிணாமப் பின்னணியில் ஆண், பெண் எனும் உயிரியல் (மற்ற உயிரியல்களும்) எண்ணற்ற மரபியல் மாற்றங்களைக் கண்டுள்ளது. கடுமையான சுற்றுச்சூழல் மாற்றங்கள், வேட்டைமூலம் உணவு சேகரிப்பு குறைதல் அதைத் தொடர்ந்த உற்பத்தி முறையில் மாற்றங்கள், ‘விதைப்பு’, ‘வேளான்மை’ ஆகியவற்றைப் பெண்கள் கண்டுபிடித்தல் என்று மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்ணே கலவிக்கு, உயிர் மறு உற்பத்திக்கு தகுதியான ஆணைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றிருந்தாள் என்று வரலாற்றாசிரியர்கள் நிறுவியுள்ளனர். வேளான் பொருளாதாரம் தோன்றிய பின்னர், கடுமையான உடல் உழைப்பு குறைந்து குறைவான உழைப்பில் பொருள் சேர்ப்பு நடக்கிறது. ஒரு கட்டத்தில் கலவி ’பொழுதுபோக்காகிறது’, பெண் பெரும் ‘சொத்து’ படைத்தவள் ஆகிறாள். அவளது அதிகாரம் மேலும் கூடுகிறது. தனக்கும் தன் பிள்ளைகளுக்கும், சொத்துக்கும் ‘ஒழுங்கான’ பாதுகாப்பு வழங்கும் ஆணை மட்டுமே அக்காலத்தியப் பெண்கள் கலவி கொள்ள தேர்ந்தெடுத்தனர். அதுவரை சுதந்திரக் காதல் (கலவி) மட்டுமே இருந்து வந்துள்ளது. பெண்ணைக் கவரும் சாதனைகள் செய்ய ஆணுக்கு ‘டெஸ்டோஸ்டிரோன்’ எனும் சுரபி அதிகமாக சுரப்பது அவசியமாகிறது. அச்சுரபியும் அவன் பெண்ணோடு கலவி கொள்ளும்போதோ அல்லது பெண்ணின் அருகாமையில் இருக்கும்போதோ இன்னும் அதிகமாக சுரக்கச் செய்யும் தன்மையில் இருக்கிறது.
அச்சுரபி இரண்டு நரம்பு தூதர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு இயங்கும் என்று விளக்குகிறார் மருத்துவர் ஷாலினி. டோபமைன், என்டார்ஃபின் எனும் அச்சுரபிகள் பேரானந்தத்தை உணரச்செய்பவை. வேட்டை, விளையாட்டு பெண் வழிச்சேறல் ஆகியவற்றில் ஈடுபடும்போது ஆணுக்கு இச்சுரபிகளின் அளவு அதிகரிக்கும். அதனால் ஆண் பெண்ணின் பாராட்டைப் பெற எல்லா முயற்சியையும் மேற்கொண்டான் என்கிறார். அது இன்றும் தொடர்கிறது. பெண்களுக்கும் அத்தகைய உணர்ச்சிகள், வேட்கைகள் உண்டு. அதை கட்டுபடுத்த வேண்டும் எனும் கட்டளைகளால் அவளது மரபணுவிலேயே பெறும் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
அத்தோடு ஆணுக்கு தன் மரபணு சுத்தமாக எந்த கலப்பும் இல்லாமல் பிறந்து பெண்ணின் ‘சொத்துக்களை’ தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனும் எண்ணம் வளர்கிறது. உற்பத்தி முறை மாற்றம், தனிச்சொத்து பேணும் முறை வளரத் தொடங்குகிறது. ஆகவே ‘தனித்த’ மரபணு விதைப்புக்கு ஆணின் தலைமையில் ‘உறவு – ஒப்பந்தத்தை’ ஏற்படுத்திக்கொள்ளும் வழிமுறையை உருவாக்குகிறான். அதுவே திருமணம்.
மாதவிடாய் பொறாமை, கர்ப்பப் பொறாமை, செல்வாக்குப் பொறாமை, மரபுவளப் பொறாமைகள் இருப்பதாக பட்டியலிடுகிறார் மருத்துவர் ஷாலினி பெண்ணை, அவளது மறு உற்பத்தி சக்தியை, அவள் சம்பாதித்த சொத்துக்களை உடமையாக்கிக் கொள்ளுதல் எனும் தேவை, சூழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக பெண் அடிமையாக்கப்பட்டாள், அவளுக்கென்று கடமைகள் வகுக்கப்பட்டன, ஆணுக்கு ஆறுதலான தோளை சுமந்து நிற்பதைத் தவிர வேறு தேர்வுகள் அவளுக்கு கொடுக்கப்படவில்லை. நாள் பட நாள் பட ஆணைச் சார்ந்தே வாழும் நிலைக்கு பெண் தள்ளப்பட்டாள். பெண் மீது ஆண் கொண்டிருந்த சார்பு, அவனது பாதுகாப்பின்மை உணர்வு, பெண்ணின் உடல் பலத்தின் மீது அவன் கொண்டிருந்த பொறாமை பெண்ணைப் பெண்ணாக இல்லாமல் செய்ததுவே வரலாற்றின் வெற்றி. அத்தகையப் பெண் திரைப்படங்களில் ஆணின் ‘காதல்’ பொருள் மட்டுமே ஆகிப்போனது அவல நிலை.
ஆணின் பொறாமைகள், அவர்களின் இயலாமை ஆகியவை பெண் மீது ஏற்றி வைத்த ‘கடமை’ உணர்ச்சிகளை பெண்மை என்று சித்தரிக்கும் ஆணாதிக்க மனோபாவமே இத்தகைய பெண் கதாப்பாத்திரங்களில் தெரிகிறது. உற்பத்தி முறையில் மாற்றம், தனிச்சொத்துக் காரணமாக ஏற்பட்ட பொறாமை, பெண் பற்றிய சித்தரிப்புகள் ஆகியவை பெண்ணையே பெண்ணுக்கு எதிராக நிற்கவைத்துள்ளது.
விதவைத் தாய் பற்றிய சித்தரிப்பு அலுப்புத் தட்டுகிறதென்றால், வேறொருவனுக்கு நிச்சயிக்கப்பட்டப் பெண் மற்றொருவனைக் காதலிக்க ‘அழுத்தமான’ காரணங்கள் தேவைப்படுகிறது இயக்குனர்களுக்கு. ஆணாதிக்கப் பழமைவாத, மதவாத ‘கற்பு’ கருத்தாக்கத்திலிருந்து இவர்களால் வெளியேறமுடிவதில்லை. ஆகையால் ஆணுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் பெண் ‘கொடூரமானவனாக, கெட்டவனாக’ இருக்க வேண்டும். முன் பின் பழக்கமில்லாத ஒரு ஆணுடன் நிச்சயம் செய்யப்படும்போது ஒரு பெண் யாரையும் காதலிக்கவில்லை, சந்தர்ப்பவசத்தால் வேறொரு ஆணை சந்திக்க நேர்ந்து அவனது குணங்கள் பிடித்துப் போனால் அவள் காதலில் விழுவது இயல்பு. இதில் என்ன ஒழுக்க மீறல் இருக்கிறது. அப்படி வேறொருவனைக் காதலிக்க நேர்ந்தால் அப்பெண் அதை நேர்மையாக வெளிபடுத்தி, சம்பந்தப்பட்ட நிச்சயிக்கப்பட்ட அணிடம் தன் காதலை விளக்கி நடக்கவிருக்கும் திருமணத்தை ரத்து செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளும் விதமாக இதுவரை ஏதாவது திரைப்படங்கள் வெளிவந்துள்ளனவா.
அப்படி வெளிப்படையாக சொன்னால் அந்த ஆண் அதை ஏற்றுக்கொள்வானா எனும் கேள்வி எழலாம், அவனை ஏற்றுக்கொள்ள விடாமல் இருப்பது சமூக அமைப்பே. திருமணம் என்பது ’ஆண்மைக்கான’ ஒரு சான்றிதழாக கருதப்படுகிறது. அதிலும் பணக்கார படிநிலையென்றால் அது அந்தஸ்து சார்ந்த விசயமாகிவிடுகிறது. ஒடுக்கபப்ட்ட சமூகம் என்றால் ‘கற்பு’ சார்ந்த விசயமாகிவிடுகிறது. சாதியும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால் ‘பையன்’ வீட்டார் அதை ஒரு ‘ஈகோ’ பிரச்சனையாக எடுத்துக் கொள்ளும் சூழல் நிலவுகிறது. எப்படிப்பட்ட நெருக்கடிகள் இருந்தாலும், காதல்வயப்பட்ட ஆணும், பெண்ணும் தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் உரிமை இருக்கிறது, அதற்கான முயற்சிகளை, போராட்டங்களை அவர்கள் மேற்கொள்கிறார்கள் என்று மாற்று பார்வை கொண்ட கதைகள் மிகக் குறைவு. பெரும்பாலான இயக்குனர்கள் பெண்ணியச் சிந்தனையை, மானுட சமத்துவ சிந்தனையை பெற்றிருக்கவில்லை என்றே தோன்றுகிறது. ‘கெட்ட’ கதாப்பாத்திரப் புனைவுகள், அதைத் தொடர்ந்து கதாநாயகின் மனமாற்றம் அதுவும் ஒரு ஆண் ‘சாகங்கள்’ செய்து தன்னை நிரூபித்த பின்னர் ஏற்படும் மனமாற்றம் பிற்போக்குத்தனம் நிறைந்தது. அது முழுமையான ‘ஆண்மை’ வாதம் மட்டுமே.
தமிழ் திரைப்படங்கள் (இந்தியத் திரைப்படங்களும்) ’ஆண்மை’ சாகசத்தை தவிர வேறெதையும் பிரகடனம் செய்வதில்லை. மிகவும் அரிதாகவே பெண் விடுதலையை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆண்மை, பெண்மை எனும் பாலினவாத சித்தரிப்பு மட்டுமல்லாமல் மூன்றாம் பாலினத்தவர் பற்றிய சித்தரிப்பும் ஆணாதிக்க மதவாதக் கருத்தாங்களை கொண்டேப் புனையப்படுகின்றன. நாயகனையும், நாயகியையும் சேர்த்து வைத்து கதையை முடிக்கும் இறுதிக் கட்டத்தில் சில நீதிகளைப் பரிந்துரைப்பர் நமது இயக்குனர்கள் . அவ்வகையில் மு.உ.க வில் ’நல்லவர்களான’ ஆணும், பெண்ணும் சேர்வதற்கு பலியாகும் ‘கெட்ட வில்லன்கள்’ யார் தெரியுமா, ’நம்பிகள்’ (gay) எனும் ஓரினச்சேர்கையாளர்கள். (அது ஒரு கனாக் காலம் திரைப்படத்திலும், தனுஷ் சிறையில் இருக்கும் போது ஒரு ‘கே’ அவரை ‘உறவுக்கு’ அழைப்பார்...அது கொலை அளவுக்கு சென்று விடும்..10 வருட ஜெயில் தண்டனை கிடைக்கிறது.....)
சாருவுக்கு நிச்சயிக்கப்பட்ட அந்தப் பணக்கார மாப்பிள்ளை ஓரினச்சேர்கை பழக்கம் கொண்டவர். அவரது ‘ஆண்’ காதலர்கள், தன் காதலன் ஒரு ‘பெண்ணை’ திருமணம் செய்து கொள்வதை சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு பொறாமை கொண்டவர்கள். நட்பைத் தாண்டி ‘வேறு சில பழக்கங்களை’ கொண்டிருப்பவர்கள். ‘நம்பி’ காதலனுக்கு நிச்சயம் செய்யப்படும் பெண்களைத் துரத்தி துரத்தி கொலை செய்துவிடுவார்கள். அப்படித்தான் அவர்கள் சாருவையும் தூக்கிச் செல்கிறார்கள். அப்போது ‘ஆணாகிய’ ஹீரோ அவளைக் காப்பாற்ற பறந்தோடி வருகிறார். அடி உதைகளை வாங்கி பெண்ணைக் காப்பாற்றுகிறார். ஓரினச்சேர்கையாளர்கள் கொடூரமானவர்கள், சமூக விரோதிகள், சைக்கோக்கள் எனும் அச்சு வார்ப்பு ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. தீவிரவாதிகள் என்றால் இஸ்லாமியர்கள், பாலியல் வியாபாரம் செய்யும் பெண் தாதா என்றால் தெலுங்குக்காரி, ஓரினச்சேர்கையாளர்கள் என்றால் கட்டாயப்படுத்தியாவது ஆணை புணர்பவர்கள், போதைப்பழக்கம் உடையவர்கள், காதலனுக்காக பெண்களைக் கொலை செய்யத் தயங்காதவர்கள் எனும் சித்தரிப்புகள் எத்தகைய ஆபத்தான கருத்தாக்கங்களை உருவாக்குகின்றன, அதன் விளைவுகள் என்ன என்பதை நாம் கண்டு வருகிறோம். 23.2.2012 அன்று ‘கே’ உரிமைகள் தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி. மல்ஹோத்ரா ஆஜராகி “ஓரினச்சேர்க்கை ஒழுக்கக்கேடானது......எனவே இருநபர் சம்மதத்துடனான ஓரினச் சேர்க்கை குற்றம் அல்ல என்ற ஐக்கோர்ட்டு தீர்ப்பினை ஏற்க இயலாது” என்று வாதிட்டுள்ளார். எதிர்பால் உறவுகளில் எந்த அத்துமீறலும், நோயும் ஒழுக்கக்கேடும் விளைவதில்லையா. உலகில் உள்ள எயிட்ஸ் நோய் முழுமையும் ஓரினச் சேர்க்கையாளர்களால் தான் பரவியுள்ளது என்பதற்கு ஆதார பூர்வ தரவுகள் ஏதேனும் உள்ளனவா. நோய் வருவதால் அவர்கள் உறவு கொள்ளக் கூடாதென்றால் எதிர்வாதமாக ஒரு கேள்வி எழுகிறது. இன்று பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களால் புற்று நோய் உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்கள் வருகின்றன, அதனால் உண்பதையே நிறுத்திவிடலாமா, தொழில் நிறுவனங்களின் விஷக் கழிவுகளால் காற்று மாசுபட்டு உயிர் கொல்லி நோய்கள் வருகின்றன, சுவாசிப்பதையே நிறுத்திவிடலாமா. வேடிக்கையாக இருக்கிறது.
மூன்றாம் பாலினம் பற்றிய எந்த அறிவும் வெகு ஜனத்தளத்தில் இல்லாதபோது அவர்களை சதா 24 மணி நேரங்களிலும் வெறுமனே புணர்ச்சிக்காக மட்டும் அலையும் வெறி பிடித்தவர்களாய் காட்டப்படுகிறது. இவற்றை பொது மக்கள் எப்படி பார்ப்பார்கள் என்ற ஒரு சிறிய கவலையாவது அவர்களிடம் இருக்க வேண்டும். வெறி பிடித்து கொலை செய்யும் அளவுக்கு எத்தனை தொழிலதிபர்கள், அரசு சார் அதிகாரிகள் மற்றும் விதிவிலக்கல்லாத திரைப்பட இயக்குனர்கள் இருக்கிறார்கள் அவர்களின் காம வெறியை இன்னும் ஆழமாகச் சொல்லி பொது ஜனத்துக்கு உதவலாமே. மூன்றாம் பாலினத்தவர் கொலை செய்ய மாட்டர்கள் என்று நாம் இங்கு விளக்க வரவில்லை. சம்பந்தப்பட்ட கதையே மூன்றாம் பாலினம் சம்பந்தப்பட்ட கதையாக இருந்து அவர்கள் கொள்ளும் நெருக்கடிகள் அதன் விளைவாக வரும் கொலை மற்றும் தற்கொலைகளை புரிந்து கொள்ளவாவது செய்யலாம். இது ஏதோ கொலைக்காரராக குப்பத்துக்காரர்களை சித்தரிப்பது, தேச விரோதியாக இஸ்லாமியர்களைச் சொல்லுவது என்பது போல் ஆகி இயக்குனர் புது மாதிரியாக இருக்க வேண்டும் என மாற்றுப் பாலியல்காரர்ககளை வைத்திருக்கிறார். இதைத்தான் இதுவரை யாரும் சொல்லாத கதை என இயக்குனர்கள் பொதுவாகச் சொல்லுகிறார்கள் போலும்.
நோய் வராமல் இருக்கும் தடுப்பு முறைகளைப் பரிந்துரைப்பதே முறையான வழிமுறை, அதைவிடுத்து சமூக நலன் எனும் பெயரில் உயிரியல் மாற்றங்களை மறுப்பது இயற்கைக்கெதிரானது, மனித உரிமைகளுக்கெதிரானது, அறிவியலுக்கெதிரானது. வெகுஜன ஊடக சித்தரிப்பின் மூலம் தேவையற்ற அச்ச உணர்வு, கருத்தாக்கங்கள் பரவும் அபாயம் உள்ளது. பின்பு அவையே சமூக விதியாக, யதார்த்தம், உண்மை என்று கருத்தப்படும் போக்கும் உள்ளது. ஆகவே பாலினவாத சித்தரிப்புக்களை கூறுணர்வோடு, அறிவியல் பூர்வமாக அணுகுவது அவசியமாகிறது.
இறுதியாக, திரைப்படங்களில் பெண்களைக் காப்பாற்ற பெண்கள் அல்லது மாற்றுப்பாலினத்தவர் ஏன் வருவதில்லை. ஒற்றை ஆள் மட்டுமே இரட்சகராக இருப்பது யதார்த்தத்தில் எந்தளவுக்கு சாத்தியம். திரைப்படம் வெறும் புனைவு தானே, இதுவெல்லாம் வெற்று வாதம் என்று சொல்வோரிடம் ஒரு கேள்வியை முன்வைக்க வேண்டியுள்ளது. அத்தகையப் புனைவுகளில் கூட பெண்கள் பறந்து வந்து காப்பாற்றுவது போல் காட்டப்படுவதில்லையே. ஏன். ஆணைத்தவிர பெண்களை, சமூகத்தை எவரும் காப்பாற்ற முடியாதா. பெண் தன்னைத் தானே தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளே இல்லையா எனும் கேள்விகளுக்கு ஆணாதிக்கவாதிகளிடம் நேர்மையான, அறிவியல்பூர்வ பதில்கள் கிடைப்பதில்லை. இந்த திரைப்படம் வெளியிடப்பட்ட துவக்க காலத்தில் விதியாசமான காதல் கதையெனும் ’நிலைப்படுத்துதல்’ (Positioning) மேற்கொள்ளப்பட்டது. இப்போது ‘தாய்மை’ தூக்கிப்பிடிக்கப்பட்டு வருகிறது. மொட்டையடித்து ஒரு ‘தாதா’ போல் மாறிய தாயின் ‘உருமாற்ற’ புகைப்படங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சுவரொட்டிகள் காணப்படுகின்றன. வணிக நோக்கங்களுக்காக பெண் எல்லா வகையிலும் பயன்படுகிறாள். ‘சதைப் பிண்டமாக, காமத் தூண்டுதலுக்கான கவர்ச்சிப் படங்களோடு ஒரு இடத்தில், அடி உதை பெறும் - கதாநாயகன் வந்து காப்பாற்றும் பரிதாபத்துகுறிய பிறவியாக, அதுவுமல்லாமல் போனால், ஆணைக் காத்து நிற்க வேண்டிய தாயாக என்று வனிக தேவைக்கேற்ப அவளது ‘இடம்’, ‘பாத்திரம்’ விளம்பர முன்வைப்புக்கு பயன்படுகிறது.
ஆணின் சாகசங்கள், அவனுக்கான பரிதாபங்கள், இரக்க உணர்வுகள் என எல்லாம் பெண்ணை நோக்கிச் சொல்வது “நீங்கள் எங்கள் அடிமைகள், எங்களுக்காக உருவாக்கப்பட்டவர்கள், எங்களை மகிழ்விப்பதும், கவனித்துக்கொள்வதும், வாழ்வைத் தியாகம் செய்வதுமே உங்கள் பணி. அதனால் உங்களுக்கான குணாதியங்களையும் நாங்களே வடிவமைப்போம். எங்கள் காதலை மறுக்கும் அதிகாரம் உங்களுக்குக் கிடையாது. அப்படி மறுத்தாலும் நாங்கள் செயற்கரிய சாகசங்கள் செய்தால் எங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இல்லையென்றால் முகத்தில் அமிலம் வீசுவோம், இவற்றை மறுப்பீர்களானால் நீங்கள் தத்தாரிகள், வேசிகள்...... சுருங்கச் சொல்வதானால்....சமூகத்தை சீர்குலைக்கும் பெண்ணியவாதிகள்.....எங்களை நாங்கள் நல்லவர்களாக, சாகச வீரர்களாக காட்டிக்கொள்ள ஆணல்லாத எந்த பாலின அடையாளத்தையும் எங்களுக்கு எதிரானவர்களாகவே சித்தரிப்போம்.....” வாழ்க பாலின சமத்துவம்.
(* மருத்துவர் ஷாலினி சொன்ன குறிப்புகள் - பெண்ணின் மறுபக்கம், விகடன் வெளியீடு).
இக்கட்டுரை 361 டிகிரி மார்ச் மாத இதழில் வெளிவந்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)