Showing posts with label கொற்றவை கவிதைகள். Show all posts
Showing posts with label கொற்றவை கவிதைகள். Show all posts

May 26, 2012

இடமுடியா முத்தங்கள் கடவுள் போன்றது




முத்தங்களை விழுங்கும்
வலி எத்தகையது
என்பதை அறிய மாட்டீர்கள்
நீங்கள்

அந்நியமாகிப் போன கருவறையின்
வழியாக
குருதியென வழிந்தோடுகிறது
அம்முத்தங்கள்

இடமுடியா முத்தங்கள்
கடவுள் போன்றது
புகைப்பட உதடுகள்
உறிஞ்சுகிறது
ஈரமற்ற முத்தங்களை

பாரம் தாளாமல்
மன்றாடுகிறது விழித்திரை

கடந்த கால நினைவுகளும்
அவளது புகைப்படங்களும்
அவ்வப்போது அவளது தொலைபேசி
அழைப்பும்
மரணத்தை தள்ளிப்போடுகின்றன

உயிரறுத்து கிடக்கும் வேளையில்
புதையுங்கள்
என்னை
அவளது கருவறையில்

Aug 11, 2011

உடலே சினை முட்டையாய்



அதிகாரம் பற்றிய உரையாடலை 
நிகழ்த்திக் கொண்டிருந்தேன் 
உடலிடம் 
ஆயுதம் ஏந்திய சிவப்பு தேவதை 
எலும்புகளுக்குள் 
வாள் பயிர்ச்சி செய்யும் நாட்களில் 
சினை முட்டைகளின் இருப்பிடத்தை 
மாற்றச் சொல்லிக் கேட்டேன் 

 மரணத்தின் கரிய நகங்களைப் பிடுங்கி 
தசைகளுக்கடியில் ஒவ்வொன்றாய் பதித்தாள் தேவதை 
பெண் உடலுக்கும் போர்களத்திற்கும் 
இருக்கும் ஒற்றுமை பற்றிய பாடல் ஒன்று தயாரானது 

 சிதைவுகள் 
முனகல்கள் 
காற்றைக் கிழித்து வரும் ஈனக் குரல்கள் 
பெருக்கெடுத்தோடும் குருதி 
இவற்றால் நிரம்பி வழிந்ததந்த நதி 

 அடித்து தள்ளப்படும் சினை முட்டைகளை 
ஒவ்வொன்றாக 
சேகரிக்கிறாள் மும்முலைக்காரி 

 குழந்தையின் சிரிப்பொலியை 
இசை குறிப்பென பெயர்த்து 
மரப் பொந்துக்குள் குருவியோடு 
பாடல் இசைத்துக் கொண்டிருந்த வேளையில் 
கிடத்தியிருந்த எனதுடலில் எவரும் அறியா வண்ணம் 
முட்டைகளை வைத்து சென்றாள் அவள் 

 உடலே சினை முட்டையாய் மாறிப்போனதை 
பார்த்துக்கொண்டிருக்கிறோம் 
மரப்பொந்துக்குள் இருக்கும் குருவியும் நானும் 

 மாதவிடாய் நாட்களில் 
எரிமலைக் குழம்பென 
வழிந்தோடும் 
 குருதி 
சொற்கள் 
படிமங்கள் 
இவற்றோடு கண்ணீரும் கலக்கையில் 
உறுதி செய்து கொள்கிறேன்
இதுவரை நான்
எழுதியது
கவிதை
என்று.

Oct 7, 2010

நெளியும் எதிர்பார்ப்புகள்



எதிர்பார்ப்புகள்
நிறமற்ற தன் கைகளால் வருடிக்கொடுக்க
நீண்ட குறிகள் பெற்றெடுக்கிறது
கட்டளை எனும் சாத்தான்களை
மஞ்சள் நிற பாம்பின் முடிச்சுகளின் கீழ்
சேமச்சக்கரம்
தாய்க்குப் பின் தாரம்

தாங்கி நிற்கும் மார்புச்சுனை நீர்
பகலில் இசைக்கிறது உலகெங்கிற்குமாய்
கண்ணுறங்கும்
தாலாட்டுப் பாடலை

அந்திச்சூரியன் மலைகளை முத்தமிட்டு
மறையும்
அவ்விருள் பொழுதில்
பெயர்க்கிறது
பெருவெள்ளமாய்
உடலெங்கும் வெண்ணிற பூரான் மயிர்களை

இடைப்பொழுதில் மனம் தேடியலைகிறது
அறைந்து மூடப்பட்ட சன்னல்களின் கீழ்
விரியும் சூர்யக்கதிர்களினூடே
ஓர்
புன்னகை
ஓர் சொல்
ஓர் பார்வை
ஓர் முத்தம்

அப்பொன்னிற புகை
தூதனுப்பியது
ஏற்ற
நேரம் கேட்டு

விட்டுச்சென்ற நிழலில்
நெளிகிறது
அதே
பூரான்கள்.

இது தவிர இன்னும் 2 கவிதைகள் இம்மாதம் உயிரெழுத்தில்....