அனைவருக்கும் வணக்கம்,
இந்த கணத்தை, இந்தக் களத்தை நான் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. இன்று, இங்கு வந்து அதை சாத்தியப் படுத்தியிருக்கும் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள். சர்வதேசிய உழைக்கும் மகளிர் தினத்தின் 101வது வருடம் நடைபெற்று வருகிறது. பெண் விடுதலைப் பாதையில் செயல்படுவதற்கான ஒரு சிறிய அமைப்புருவாக்கத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
குறுகிய காலத்தில் வைக்கப்பட்ட அழைப்பு என்பதை பொருட்படுத்தாமல் இங்கு வந்திருக்கும் பேச்சாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள், பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு பெரிய தொடர்பு வட்டங்கள் கிடையாது, இந்த அமைப்பு உருவாக்கத்திற்கு இணையத்தின் நட்பு வட்டங்கள் கொடுத்த ஊக்கம் அளப்பரியது. எல்லோருக்கும் எனது நன்றிகள்.
அமைப்பு பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தும் முன்னர் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கவிதையிலிருந்து சில இறுதி வரிகளை படித்து துவங்க விரும்புகிறேன்
எனக்கு உன்னிடம் கேட்டுவாங்க
வரங்கள் எதுவுமில்லை.
உனது ஒளியால் நிரப்பிக்கொள்ள
இதயவறுமையும் எனக்கில்லை.
ஒரு சக்கரவர்த்தி
இன்னொரு சக்கரவர்த்தியைச் சந்திப்பதுபோல
ஒரு நண்பன்
மற்றொரு நண்பனைச் சந்திப்பதுபோல
சம உணர்வுடன் வா.
ஒரு புல்லாங்குழல்
ராகத்தைத் தேடுவதுபோலவோ
ஒரு கேள்வி
பதிலைத் தேடுவதுபோலவோ
இயல்பாக இருக்கட்டும் அது.
- ரோஸ்மேரி, ( பெண் வழிகள், காலச்சுவடு,
மலையாளத்திலிருந்து தமிழில் சுகுமாரன்.)
இழப்பதற்கு எதுவுமேயில்லை, அடிமை விலங்குகளைத் தவிர. அடைவதற்கோ பொன்னுலம் இருக்கிறது.
மார்க்ஸ்- எங்கெல்ஸ். – கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை.
என் பெயர் நிர்மலா நான் 1995ம் ஆண்டு லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்தேன். தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். பெண் என்ற ஒரே காரணத்திற்காக, தொடர்ந்து என்னைச் சுற்றி ஏன் ஒரே மாதிரியான சுரண்டல்கள் நிகழ்கிறது எனும் கேள்வி எழுந்தபோதே நான் ‘பெண்ணியம்’ என்று ஏதோ சொல்லப்படுகிறதே அது என்ன என்று தேடினேன். எனது தனிப்பட்ட கோபங்களுக்கு வடிகாலாக சிற்பம் செய்வது, தனிமையை குலைக்கும் வகையில் மேட்டுக்குடி பெண்கள் படிக்கும் ஏதோ சில பட்டயப் படிப்புகளைப் பயில்வது , கவிதை எழுதுவது, புலம்பல்களை வலைப்பதிவில் எழுதுவது என்றிருந்தேன். அப்போது பெரியார் நினைவுக்கு வந்தார். பெண் ஏன் அடிமையானாள் புத்தகம் என் கண்ணில் பட்டது (அல்லது அதை வசுமித்ர அறிமுகம் செய்து வைத்தாரா என்று நினைவில்லை). அந்த சூழலில் வசுமித்ரவை சந்திக்கவும் நேர்ந்தது. அதைத் தொடர்ந்து என்னுடைய வசை கவிதைகள் குறித்த விவாதம் பெண்ணியக் கல்வியாக, மார்க்சியக் கல்வியாக விரிவடைந்தது. என்னை மீட்டெடுக்க உதவிய ஒருவரோடே என் வாழ்வை அமைத்துக்கொள்ள முடிவெடுத்தேன். வசுவை சந்திக்காமல் போயிருந்தால் முற்போக்கு சிந்தனையை சுயநலத்திற்காகவும், தனிப்பட்ட வாழ்வுக் கொண்ட்டாட்டமாகவுமே பயன்படுத்தியிருந்திருப்பேன்….அதை சமூக அக்கறையாக மாற்ற காரணமாய் இருந்தது எங்களுக்குள் அன்றாடம் நடக்கும் விவாதங்கள்….அதுவே இப்போது ஒரு அமைப்பை உருவாக்கம் செய்வது வரை என்னைக் கொண்டுவந்திருக்கிறது.
மாசெஸ் – பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வாதத்திற்கான அமைப்பு –
பாலியல் சுரண்டல் மற்றும் பாகுபாடு என்பது சமூகத்தில் பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருகிறது. வெகுஜன ஊடகங்களின் வழியாக அதிதீவிரமாக இது கட்டிக்காக்கப்படுகிறது, போற்றப்படுகிறது. அரசியல் இயக்கமாக செயல்படும் இயக்கங்கள் அன்றாட நிகவுகளுக்கு / பிரச்சனைகளுக்கு வினை புரிய வேண்டியிருக்கும் சூழலில் வெகுஜன ஊடக மாயையிலிருந்து மக்களை மீட்பதற்கான விழிப்புணர்வு ‘ஒரு முழு கவனத்தோடு’ எடுத்துச்செல்லப்படாமல் உள்ளது, குறிப்பாக பெண்ணியப் பாதையில். ஆகவே இவ்வியக்கம் சாதி, மத, இன, அரசியல் கொள்கைகள், கட்சிகள், இன்னும் இதர குழுக்கள் எனும் பாகுபாடில்லாமல் அணைவரும் பங்கு பெறக்கூடிய பெண்ணிய இயக்கமாக செயல்பட விழைகிறது. இவ்வியக்கம் பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல்வாதத்திற்கு எதிரான இயக்கமாக மட்டுமே செயல்படும். வெகுஜன ஊடகங்களின் பாலியல் சுரண்டலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும். மற்ற சமூகப் பிரச்சனைகளுக்கெதிராக செயல்படும் இயக்கங்களோடு அவர் அவர் விருப்பப்படி தேர்வு செய்து கலந்துகொள்வது என்ற முடிவுக்கு விடப்படுகிறது.
அமைப்பின் முன் வரைவை தோழர் சிவகாமி அவர்கள் வெளியிட அ.மார்க்ஸ் பெற்றுக்கொண்டார். அன்றைய கூட்டத்திற்கு கோ. சுகுமாரன், மோனிகா, பத்மினி ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் ஓவியம் வரைந்தவர்கள்:
தோழர்கள் விஸ்வம், ராஜன், வசந்த், ஏழுமலை, ஆனந்த், கிரிஸ்டி, ரோஹினி மணி, விதார்த்தி, மோனிகா, திலிப், சூரஜ், யுகன். கிரன் துளசி என்பவரின் ’பாலுறுப்பு அடையாளம் அழித்த’ புகைப்படம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டது
தோழர்களுக்கு நன்றி.
பாலியல் போரின் ஒரு பகுதியாக ஆணாதிக்க பெண் உடல் சித்தரிப்பு:
பாலியல் போர் என்பது பல்லாயிர வருடப் போர்… அதற்கு ஆண் மட்டுமே காரணம் என்பதல்ல நம் வாதம். பெண் ஒடுக்கப்பட்டிருக்கிறாள், இங்கு நிலவுவது ஆணாதிக்க சமூக அமைப்பு என்பதைக் கூட உணர முடியாமல் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள் என்பதே எமது வாதம். பல்வேறு புறச் சூழல்கள் இந்த பாலியல் போருக்கு காரணமாக இருந்திருக்கின்றன. அதில் முதன்மையானது பரிணாம வளர்ச்சி, அதன் விளைவாக மரபணு மாற்றங்கள். இந்த மரபணுவானது அழிவிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள பல்வேறு தூண்டுதல்களை ஓர் உயிரில், உடலில் ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம்…அதேவேளை சுற்றுச்சூழலியல் மாற்றம், அதன் விளைவாக தொழில் முறை மாற்றங்கள், பொருளாதார சூழலில் மாற்றம், இயற்கையை, அதிகாரத்தை, மரணத்தை வெல்ல மனிதனுக்கே (ன் விகுதி ஆண் விகுதி தானே) உரித்தான எதையாவது உருவாக்கி கொண்டே இருக்கும் பேராசை ஆகியவை மனித உறவு முறைகளை மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கிறது. அதை சுற்றி ஓர் உளவியல் கட்டமைக்கப்படுகிறது. அதற்கேற்றார் போல் ஒரு பண்பாட்டு சிந்தனைகளும் உருவாகின்றன. இதுவே யதார்த்தம்… இதை புரிந்து கொண்டு, அவற்றை கணக்கில் கொண்டு மானுட சுதந்திரத்திற்கு தேவைப்படும் சீர்திருத்தங்களை வகுப்பதற்கு, அது குறித்து பேசுவதற்கு கூட தடையாக இருப்பது கருத்து பற்று அதாவது கருத்துமுதல்வாதம். பெரும்பாண்மை நலன் என்ற பெயரில் உருவாகப்பட்டு விட்ட கோட்பாடுகளுக்கு விசுவாசமாய் இருப்பது..ஆனால் இங்கு நாம் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. திட்டமிட்டே சிறுபான்மையினர் உருவாக்கபபடுகின்றனர். அதாவது ஒரு குறிப்பிட்ட சாரரின் உரிமை மறுப்பு, சாதியக் கொடுமைகள் நிகழும் இந்த சமூகத்தில் இதை நாம் நன்றாக அறிவோம். அதேபோல் பெரும்பான்மை என்பது எப்போதும் சரியாக சிந்திக்கும் என்று நாம் சொல்ல முடியாது என்று கார்ல் மார்க்ஸ் சுட்டிக்காட்டியதையும் நினைவில் கொள்வோம்.
உண்மை தான் – அதிகாரம் படைத்த சிலர் ஒன்றிணைந்து ஒரு சில கருத்தாக்கங்களை தங்கள் நலனுக்காக அல்லது தங்களின் வட்டார, சமூக, சாதி, இன நலனுக்காக உருவாக்குகின்றனர். அதை பரப்புரை செய்கின்றனர். பின்னர் அது சமூக கருத்தாக்கமாக மாறுகிறது. அவற்றை மறுப்பவர் தரங்கெட்டவர், மோசமான விதிகளை போற்றும் கலகக்காரர், தீவிரவாதி, என்று தூற்றப்படுகின்றனர். சில வேளைகளில் கொல்லவும் படுவோம் என்ற பயம் கருதி தலையை ஆட்டிக் கொண்டு போய்விடுவதால் அதிகார வர்க்கத்தின் கருத்தாக்கம் அப்படியே நிலைத்து விடுகிறது, காலத்திற்கேற்றார்போல் அது தன்னை தகவமைத்தும் கொள்கிறது.
அந்த தகவமைப்பின் முக்கியப் பண்பு ஆணாதிக்கம். பாலியல் அடையாளத்தின் படி ஆண் அதிகாரத்தை, போகத்தை, சுதந்திரத்தை அனுபவிக்க பெண்கள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெண்ணிய சிந்தனைகள், முற்போக்கு சிந்தனைகளை அறிந்திராதவர் இதை கேட்டு நகைப்பர். பெண்கள் எங்கே ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று. அதற்கு போதுமான விளக்கங்களை சமத்துவ ஆர்வலர்கள் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கார்ல் மார்க்ஸ் சொல்வது போல் அறிந்திராத அவர்களுக்கும் (ஆண், பெண், மாற்றுப் பாலினத்தவர் இதில் அடக்கம்) சேர்த்துத்தான் போராட வேண்டியிருக்கிறது. ஏனென்றால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆணாதிக்கம் வேறூன்றி விட்டது. பெண் மட்டும் என்ன ஒழுங்கா, பெண்கள் எவ்வளவு சுதந்திரம் பெற்று விட்டாரக்ள் தெரியுமா என்று சொல்லும் சில எளிய உள்ளங்கள் படித்து வந்திருப்பது ஆணாதிக்க வரலாற்றை, படைப்புகளை. அதை ஏன் ஆணாதிக்கம் என்று சொல்கிறீர்கள் வல்லாதிக்கம் என்று சொல்லுங்கள் என்பர். வல்லாதிக்கம் என்பதும் ஆணாதிக்க சிந்தனையே. வல்லமை என்று சொல்லும் போதும் போர் களம், வல்லமை, புரட்சி, வீரம், எதிர்த்து நில், கலகம் செய் என்று சொல்லும் போது நம் மனது எந்த பாலினத்தை காட்சிப்படுத்துகிறது. ஆக போரை விரும்புபவராக, வல்லாதிக்கத்தை, எல்லை விரிவாக்கத்தை, இயந்திரமயமாக்கலை விரும்பியது துவக்கத்தில் ஆண் இனமே… பின்னர் அது சமூக நடைமுறையாகிப்போனது.
தாய் வழிச் சமூகம், ஆண் தலைமையிலான குடும்ப அமைப்பாக, தந்தை வழிச் சமூகமாக மாறியது. எந்த ஒடுக்குமுறைகளிலும் இல்லாத வகையில் ஒடுக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரியாத வகையில் அதை பெண்ணே ஏற்றுக்கொள்ளுமாறு செய்தது. அதற்காக உருவான கருத்தாக்கமே மதம், புனித வாதம், கற்பு ஆகியவை. சொர்கம், நரகம், பத்தினித் தன்மை என்பதன் பெயரால் அச்சுறுத்தல் விடப்பட்டது. நீ கற்பு தவறினால் தீ குளிக்க நேரும் என்று எச்சரித்தால் எந்த பெண் தான் பயப்படாமல் இருப்பாள்.* இந்த தந்தை வழிச் சமூகத்தினை எதிர்த்த பெண்களை சூனியக்காரி என்று முத்திரை குத்தி, கடுமையான தண்டனைகளும் கொடுக்கப்பட்டது. உலகம் முழுமைக்கும் இது பொருந்தும்.
தாங்கள் ஒடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதே தெரியாத பெண்ணினம் ஒரு புறம், ஆணாதிக்க அறிவூட்டத்திற்கு இரையாகி பெண்களை பெண்மை, கற்பு, தாய்மை, இல்லாள் என்று ஒடுக்கும் ஆணினம் மறு புறம். இந்த ஒடுக்குமுறையை அறிந்து கொண்டு சமத்துவத்திற்கு குரல் கொடுக்கும் பிரிவோ மிகச் சிறிது. இப்படியிருக்கும் சூழலில், ஆணாதிக்க சமூகம் வளர்த்துவிட்டிருக்கும் பாலியல்வாதத்தை அப்படியே பயன்படுத்திக்கொள்ளும் படைப்புகள், சித்தரிப்புக்கள் வெகுஜன ஊடகத்தில், பிரதிகளில் நிகழும் போது பெண் விடுதலைச் சிந்தனையை வளர்த்தெடுப்பது பெரும் சவாலுக்குரியதாய் இருக்கிறது. ஒடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறியவேண்டும், என்ன வகையான ஒடுக்குமுறை என்று அறியவேண்டும் அப்போது தானே அறிவை மீட்டெடுக்க முடியும். ஆனால் அதற்குள் உலகமயமாக்கல் சூழலில், ஆணாதிக்க முதலாளித்துவம் பெண் சுதந்திரம் பெற்றுவிட்டாள் என்பது போன்ற ஒரு மாயாவாத தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
ஆண்களே பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்ட சக்தியாக இருப்பதால் அவர்கள் வழங்கும் இந்த பெண் சுதந்திரவாதம் முழுக்க முழுக்க பெண் உடல் சார்ந்ததாக, பொருளாதார சுதந்திரத்தின் மூலம் அவர்களும் பயனடையும் சுதந்திரமாக இருக்கிறது. அவளது பாலியல் உறுப்புகளை இச்சைக்குத் திறம்பட பயன்படுத்திக்கொள்வதில் மட்டுமே இருக்கிறது. இதை ஆணாதிக்கம் என்பதோடு ஆண் துய்ப்பு வாதம் என்றும் அழைக்கலாம். தவிர்க்கவியாலது இது, இரையை கொழுக்க வைப்பது அடித்து உண்ணவே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஆணின் துய்ப்பானது பெண்ணுக்கு சுதந்திரம் வழங்குவது உண்மைதான். அவள் பணிந்து போவதற்கான சுதந்திரம், அடிமையாக இருப்பதற்கான சுதந்திரம், வதைபடுதலுக்கான சுதந்திரம். ஆனால் சுயம் சார்ந்த கருத்துச் சுதந்திரம் என்பதை இவை ஒரு போதும் பிரதிபலிப்பதில்லை. வெகு அரிதாகவே அவை காட்சியளிக்கின்றன.
உடலைக் கொண்டாடுதல் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு, ஆனால் என் உடலை எப்படி கொண்டாடவேண்டும் என்பதை நான் தீர்மானிக்க வேண்டும். உடலைக் கொண்டாடுதல் என்பது நேரடியாக மார்பையும், தொப்புளையும், இடுப்பையும் காட்டுவதில் தான் உள்ளது என்று சொல்வது பெண் என்றாலே அவ்வுறுப்புகள்தான் என்ற வணிகவாதிகள், முதலாளிகளின் கருத்தையே பிரதிபலிக்கிறது. அதனால் களிப்படைவது ஆண்கள், ஆணின் பெண்ணாகிப் போன பெண்கள். உடலை வெளிக்காட்டுவதே கொண்டாட்டம் என்றால் இரு பாலாருக்கும் அதை நான் முன் மொழிகிறேன். இன்று முதல் நாம் நிர்வானத்தை மேற்கொள்வோம். உடையே அணியாமல் இருந்தால் பாலியல் போரில் கால் பகுதி வென்று விடலாம். வேறு வழியில்லை. ஆணின் நிர்வாணத்தை மதங்களும் இதிகாசங்களும் துறவு என்று கைதொழுகையில் பெண்ணின் மன்னிக்கமுடியாத தவறு, அதி சிறந்த ஒழுக்கக்கேடு எனப்படுகிறது.
பாலியல் வியாபாரம் தடை செய்யப்படுகிறது. ஆணால் திறந்த வெளியில் நிகழும் இந்த பாலியல் வியாபாரத்தை, பெண் உடலின் மேல் வைக்கப்படும் பார்வைச் சுரண்டலை என்ன வென்று சொல்வது. தமிழ் உணர்வு, நாட்டுப் பற்று, சமூக அநீதிகளை தட்டிக் கேட்டு கொதித்தெழும் அதே கதாநாயக ‘ஆண்’ தான் பெண்ணின் இடுப்பை சுற்றி அவளை பாலியல் பண்டமாக நுகர்ந்தவாறு ஆடுகிறார். ஆனால் இதில் பெண்ணை நோக்கியே எல்லக் குற்றச்சாட்டுகளும் நீள்கிறது. இல்லையேல், காலம் கெட்டுப் போச்சு என்னத்த சொல்ல என்று ஆணின் விதிக் கூற்றாக, காலத்தின் அங்காலாய்ப்பாக, அதுவும் இல்லையென்றால் அவ அழகா இருக்கா, காட்டுறா இதுல உங்களுக்கு என்ன பிரச்சன என்ற அளவில் இது நீள்கிறது.
இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். பெண்ணின் மார்பளவை வைத்துத்தான் பெண்ணுக்கு மதிப்பு, சிறப்பு என்று இலக்கியம் முதல் திரைப்படங்கள், விளம்பரங்கள் வரை பரைசாற்றுகின்றன. இதனை உட்செறிக்கும் ஆண்கள் பெண்ணின் மார்பளவை ‘ஐந்து காசு கொய்யாக்கா, பத்து காசு கொய்யாக்கா’ என்றும், இதர கனிகளின் பெயர்களையும் சொல்லி கிண்டல் செய்கின்றனர். இதனால் மன உளைச்சல் அடையும் பெண் கைகுட்டைகளை உள்ளாடைக்குள் செருகி வைத்தாவது செயற்கையாக தனது மார்பளவை கூட்டிக் காட்டும் மன நிலைக்கு தள்ளப்படுகிறாள். பெண்ணின் மார்புக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவமானது சந்தையில் எண்ணற்ற ‘பேடட் பிராக்களை’ நிரப்பியுள்ளது. (இந்த வகையில் ஆணாதிக்கமானது ஆண்களின் குறியின் நீளத்தை வைத்தே அவனுக்கு மதிப்பளிக்கிறது. அறிவியலுக்கு சற்றும் பொறுத்தமற்ற வகையில் ஆண்குறியின் நீளத்தை இன்ப உணர்வோடு ஒப்பிட்டு ஏமாற்றுகிறது, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, என் நேரமும் ஒரு ஆண் தன் ஆண்மை குறித்தே கவலை கொள்ளும் நிலைக்கு தள்ளுகிறது. பின்னர் அது ஆபாச நுகர்வாகவும், பெண் உடல் மீதான வன்முறையாகவும் மாறுகிறது.)
வார்த்தைகள் எப்பொழுதும் புரிந்து கொள்வதையே மையமாகக் கொண்டிருப்பதால் அது மிகவும் தடுமாற்றத்துடனயே அர்த்தங்களை வழங்கிவிடுகிறது. எடுத்துக்காட்டாக கதா நாயாகன் என்பவன் சமூக ஆணாக இருக்கையில் கதாநாயகி என்பவள் அந்த ஆணுக்கு வெறும் துனைக்கருவி மட்டுமே என்ற அர்த்தத்தை வழங்குவது எப்படி. உண்மையில் அவள் கதையின் நாயகியல்ல ஒரு போதும் அவளை ஒரு பெண்ணை கதை நாயகியாக ஆணின் மனம் ஏறுக்கொள்ளாது. இருப்பின் அது ஆணின் நேர்மையை, ஆணின் அறத்தை உலகுக்குச் சுட்டிக்காட்டவுமே. அவள் கதையின் நாயகில்ல. கதாநாயகனின் நாயகி. கண்டு கேட்டு உண்டு புணர்ந்து கதாநாயாகனின் தாபத்தைத் தீர்க்க பேருதவி புரியும் ஒரு உடல். அவ்வுடலில் உள்ள மூளையை அவ்வளவு சீக்கிரத்தில் சிந்திக்கவிட ஆணாதிக்கவாதிகள் ஒன்றும் அவ்வளவு மோசமான முட்டாள்கள் அல்ல.
கதாநாயகியின் உடைக்கும், தன் ரசிகர்களின் பாலியல் விருப்பங்களுக்கும் அத்தனை சுதந்திரம் கொடுக்கும் நாயகர்கள் ஏன் தங்கள் வீட்டுப் பெண்களை பொத்தி பொத்தி வெளியில் அழைத்து வருகிறார்கள், முன்னாள் நடிகையாக இருந்தால் கூட உடலை மூடிக் கொண்டு தானே வெளியில் வரவேண்டியுள்ளது. சினிமா ஒரு தொழில் என்றால் மற்ற தொழில்களைப் போல் திருமணத்திற்கு பின்னரும் ஏன் அப்பெண்கள் நடிப்பை அதே போல் கவர்ச்சி காட்டித் தொடர முடிவதில்லை…(குறிப்பாக கற்பு போற்றும் தமிழ் நாட்டில்). திருமணத்திற்கு முன் அவள் பொது சொத்து, பிறகு தனிச்சொத்தா. இது அயோக்கியத்தனம் இல்லையா. ஏதோ சில ‘நிதியுதவிகளை’ செய்துவிடுவதால் பெண் உடல் மீது திறைத் துறையினர் சிலர் செய்யும் இந்த சுரண்டலை அப்படியே மன்னித்து விடலாமா. ஆணாதிக்க சமூக அறிவின் மீதுதான் எத்தனை பெரிய நம்பிக்கை இவர்களுக்கு.
திரைப்படத்தில் நல்லவராக, தமிழ் உணர்வாளராக, சமூக அநீதிகளை தட்டிக் கேட்பவராக, தாய், தங்கை, காதலி, மனைவி, ஊர், மாநிலம், நாடு இப்படி எல்லாவற்றையுமே ஒற்றை ஆளாக காப்பாற்றுபவராக தோன்றும் இவர்கள் நிஜத்தில் அதிகார வர்க்கத்திற்கெதிராக எத்தனை முறை தைரியமாக கேள்வி கேட்டிருப்பார்கள். வீரவசனமெல்லாம் சினிமாவோடு போய் விடுகிறது. நிஜத்தில், கலைஞன் ( ன்…விகுதி சிரமத்தைக் கொடுக்கிறது…இருந்தாலும் வேறு வழியில்லை) என்பவன் அரசுக்கு எதிராகவும் சுதந்திரத்தின் ஊற்று கண்ணாகவும் இருப்பவனே என்றால் திரைத் துறையில் சுரண்டல்வாதம் செய்பவர்களை நாம் கலைஞர்கள் என்றழைக்க முடியுமா. அப்பெடியெனின் தனது கலையின் மூலமாக சிந்தனைகளை ஏற்படுத்திய கலைஞர்கள் வெட்கித் தலைகுனிய மாட்டார்களா. இனி குரைந்த பட்சமாவது வியாபாரிகளையும், சுரண்டலாளர்களையும் கலைஞர்கள் என்றழைக்காது இருப்போம். ஆணின் செயல்களான இதை அப்படியே பற்றிக்கொள்ளும் சமூகம் மிக சௌகரியமாக பெண் உடலை வைத்து நடக்கும் பாலியல் சுரண்டலை மறந்தும், அதே சமயம் மன்னித்தும் விடுகிறது.
உலகில் அதிக பத்திரிக்கைகள் வெளி வரும் நாடாக இந்தியாவைச் சொல்கிறார்கள். இதை பத்திரிக்கைச் சுதந்திரத்தின் தேவை என நாம் நினைத்தோமானால் அதை விட வெட்கமடையச் செய்யும் விசயம் வேறு எதுவும் இல்லை. வெளிவரும் பத்திரிக்கைகளில் 90 சதமான பத்திரிக்கைகள் நாம் சாலையில் காணும் பெண்ணொத்த இன்னொரு பெண்ணின் அங்கங்களை நடுப்பக்கத்தில், அட்டையில் என்று பக்கம் பக்கமாக பெண்ணின் அங்கங்களை மிக நேர்த்தியாக முலாம் பூசி உறையிட்டு பார்வைக்கு வைக்கிறது. பெண்ணின் மார்போ, தொடையோ, இடுப்போ காட்டாத அட்டைப்படங்கள் வெகு சில. இதில் ஒரு பெண்ணிய வாசகராக சம்பந்தப்பட்ட இடங்களில்தான் பெண்ணின் உணர்ச்சியும் அதைச் சம்பந்தப்பட்ட ஆண் பார்ப்பதனால் அவன் உணர்ச்சியும் தூண்டப்படுகிறது என்பதை ஆண் அறிவியலின் உச்சபட்ச கயமையாகவே கருதுகிறேன். புலனாய்வு பத்திரிகைகள் என்றால் நடுப்பக்கம். அதெப்படி சமூக அக்கறை என்பது கூட ஆண்களுக்கான சமூக அக்கறை மட்டும் தானா. எனக்கு புரியவில்லை. அதில் வகைகள் வேறு; ‘குடும்ப பெண்கள்’ பத்திரிகை என்றால் ‘மூடிய பெண்கள்’ போன்ற பெண்ணின் படம். ஆண் நுகர்வோருக்கான பொதுவான இதழ்கள் என்றால் அதில் உடலை வெளிக்காட்டும் நடிகையின், பெண்ணின் படம்.
அதேபோல் திரைப்படங்களில் வீரம், மொழிப்பற்று, நாட்டுப்பற்று வெளிப்படுத்துவதும் யார், ஆண். பெண்ணுக்கு நாட்டுப்பற்றோ, சமூகப்பற்றோ கிடையாதா. எல்லாவற்றையும் காக்கும் சக்தி ஆணுக்கு மட்டும் தான் உள்ளதா. பெண்ணும் ஆண் கருதும் அதே வீர உணர்வை தன் மகன் வாயிலாக, கணவன் வாயிலாக வெளிப்படுத்த வேண்டும். வென்று வா மகனே என்று கொக்கரிக்க வேண்டும். மகள் வென்று வர மாட்டாளா. போர்களங்களில் வரலாறு படைத்த மங்கைகள் எத்தனை பேர் உள்ளனர். ஆணாதிக்கத்தின் விளைவே போர் என்றாலும், அதிலும் பெண்கள் சாதித்திருக்கிறார்களா இல்லையா?
சில தினங்களுக்கு முன் ஒரு புதிய படப் பாடல் பார்த்தேன், அதில் கதாநாயகனை சுற்றி அவனைப் போலாக முடியாத எளிய ஆண்கள் அரிவாளால் சுற்றி வளைக்கின்றனர். அவர்களை கதாநாயகன் பந்தாடுவான், அதை பார்த்துகொண்டு நாயகி நடனமாடி ரசிப்பாள். என்ன வகை மனநிலை இது. மற்றும் சில தொழிலாளர் வர்க்க பெண்களும் அவரை சுற்றி நடனமாடுகின்ரனர். கொன்று குவிப்பதை வீரம் என்று சொல்லி அதைத்தான் பெண் ரசிப்பாள் என்று சொல்வதும் ஆண்கள் மனதில் வன்முறையை விதைப்பதும் செவ்வனே நடந்து வருகிறது. பெண் மனதிலும் அப்படிப்பட்ட நாயகனே உன்னைக் காக்க வல்லவன், உன்னை உன்னால் காத்துக்கொள்ள முடியாது, என்றைக்குமே ஆணைசார்ந்தே இரு என்று சொல்வதாகாதா. உண்மையைச் சொன்னால் தனக்கென்று ஒரு சொந்தக் குற்றத்தைக் கூட செய்ய முடியாதவள் பெண். அவள் செய்யும் நல்லது அணைத்தும் ஆணைச் சென்று சேர்கையில், அவள் அவளுக்காக மட்டும் செய்யும் சில குற்றங்கள் அவளை மட்டுமே காயப்படுத்துகிறது. ஆகக் கூடிய குரூரம் என்றால் என்னால் இப்பொழுது இதை மட்டுமே சொல்ல முடியும்.
சமூகத்தில் அதிக வன்முறை செயலில் ஈடுபடுவது எந்த பால். அவர்கள் ஏன் அப்படி இருக்றார்கள், அதற்கு காரணமாய் இருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகள் என்ன என்பாவை எல்லாம் விவாதத்திற்குரியவை.
ஆனால் ஆணாதிக்க சமூகத்தின் விளைவால் ஆண் சக ஆணிடமிருந்தே தனக்கு விருப்பமான பெண்ணை காக்க வேண்டிய, கண்காணிக்க வேண்டிய மன உளைச்சலுக்களாகிறான் இல்லையா?
பெண்மை எனும் குணத்தின் வரையரை கொண்டு ஆண்கள் பெண்களை மதிப்பிடுவதுபோல், அதனடிப்படையில் தனக்கான துணையை தேடுவது போல் ஆண்மை எனும் வரையரை கொண்டு பெண்ணும் தனக்கான துணையை தேர்வு செய்ய நிணைத்தால் பெரும்பாலான ஆண்களுக்கு துணையே கிடைக்காது. ‘ஆண்மையை’ சோதிக்கும் வகையில் வீர சாகசங்கள் புரியச் செய்து, காளையை அடக்கச் செய்து, வீரக் கல்லை தூக்க செய்து, ஒரு கட்டத்திற்கு மேலே போய் அநீதிகளை தட்டிக் கேட்டு வா, அமெரிக்காவை ஒழித்து விட்டு வா பிறகு தான் கல்யாணம் என்று பெண் சொல்ல நேர்ந்தால் என்ன நடக்கும். காலத்திற்கேற்ப ஆணுக்கான ’ஆண்மை’ வெளிப்பாடு மாறிப்போனது போல் பெண்ணுக்கு மாறியுள்ளதா? ஆண்மை சலுகைகள் ஆணுக்கு மட்டுமே.
இவ்வாறாக நம்மை சுற்றி நடக்கும் இந்த பாலியல் போர், ஏற்றத்தாழ்வு, சாதிய ஒடுக்குமுறை, ஏகாதிபத்திய வளர்ச்சி இது பற்றியெல்லாம் கவலையே இல்லாமல் அது எவரோ ஒரு சிலரின் விதண்டாவாதம், வெட்டி வேலை, தீவிரவாதம் என்று பொது புத்தி நினைப்பதற்கு காரணமாய் இருப்பது எது?
குடும்பம் எனும் அமைப்பு – வழக்கமாக சொல்லப்படும் ’மதவாத’ / உடல் சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கப்பால் நான் இரண்டு விஷயங்களை சுட்டுக் காட்ட விரும்புகிறென். ஒன்று: குடும்பம் சுயநலத்தின் கிடங்கு. ஆம், அது தன் வீடு, தன் உறவு என்று கவலை கொள்ளும் மனப்பான்மையை விதைக்கிறது. தன் உறவுகளுக்காக பொருள் ஈட்டி காக்கும் நெருக்கடியில் மற்றவர் பற்றி கவலை கொள்வதை புறந்தள்ளுகிறது. இரத்த உறவு நிலவுவதால் அவர்களுக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்று பயம் கொள்ளச் செய்கிறது. இரத்த உறவல்லாதவர் பற்றி இரக்கம் கொண்டு தானங்கள் செய்வதோடு நிறுத்திக்கொள்கிறது. பெண்களுக்கென்று வீட்டுப் பொறுப்பில் ஒதுக்கப்பட்டிருக்கும் துறைகள் அவளை அரசியல் களத்தில், சமூக பங்களிப்பில் தொடர்ந்து செயல்பட முடியாதவளாக்குகிறது. குழந்தை பெற்று விட்டால் குறைந்தது 16 ஆண்டுகள் அவள் தனது ’பொறுப்புகளை’ தட்டி கழிக்க முடியாதவளாகிவிடுகிறாள். இச்சூழலில் பெண்கள் அரசியலுக்கு வர விரும்புவதில்லை எனும் விமர்சனம் பொருளற்றதாகிப் போகிறது.
எப்படி குடும்பத்தில் ஒவ்வொரு பொறுப்பு ஒவ்வொருவருக்கனாதோ அதேபோல் சமூக தளத்தில் சமூக பொறுப்பு ஒரு சிலருக்கானது என்று பிரதி செய்கிறது. அதாவது நம்மை காக்கும் பொறுப்பு மற்றவர்களுக்கானது, அதற்கு நாம் ஓட்டு போடுவது, வரி கட்டுவதும் மட்டும் போதுமானது. காக்கும் பணியை செய்ய வேண்டியது ஒரு சிலரின் பொறுப்பு, அவரே தலைவர், அதுவே அரசியல் என்று ஒதுங்கிகொள்ளச் செய்கிறது. நம் அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றி நடப்பவை எல்லாம் அரசியலே என்று கூட உணரமுடியாமல் நான் அரசியல்வாதி இல்லப்பா, குடும்பஸ்தன் என்பது.
அந்த எவரோ சிலர் அடித்துக் கொள்ளட்டும், முட்டிக் கொள்ளட்டும், செத்து மடியட்டும் என்று பொறுப்பை தாரை வார்த்துவிட்டு பொழுதுபோக்கை வாழ்வின் பகுதியாக்கி கொள்வது. குடும்பம் சிதையாமல் இருக்கும் வரையே முதலாளிகளுக்கு, அதிகார வர்க்கத்திற்கு அறிவு பெறாத அடிமைகள் கிடைப்பர். அதை உடைத்தெரிந்து மாற்று சிந்தனையாளர்கள் உருவாகியிருந்தாலும், பெண்ணுக்கு அது எந்த அளவுக்கு சாத்தியமாகி இருக்கிறது.
அரசியல், புரட்சி, சமூக அக்கறை இவையெல்லாம் மறைமுகமாக அணின் களம். பெண் அதில் பங்கேற்க விரும்பினால் அவள் பரத்தை, அடங்காப்பிடாரி, படித்த திமிர்…ஒழுங்கா பொம்பளையா கல்யாணம் பண்ணி,குழந்தையப் பெத்துக்குற வழியப்பாரு… இதுதான் விதி.
பெரும் போராட்டங்களுக்குப் பிறகு இன்று பெண்களுக்கு கல்வி, வேலைக்கு போகும் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அதுவும் குடும்ப அமைப்பிற்கான பொருளாதார நலன் கருதி, ஆனால் அரசியலில், சமூக மாற்றத்திற்கான கருத்தியல் தளத்தில் பங்கு பெருவதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெரும் பெண்களின் விகிதாச்சாரம் மிக மிக குறைவு, அப்படி கிடைத்தாலும், குடும்ப பொறுப்புகளையும் சுமந்து கொண்டு, பிள்ளையையும் பெற்று விட்டு எவ்வளவு தூரம் பெண்ணால் இதில் தாக்கு பிடிக்க முடியும். அந்த களத்தில் அவள் எதிர் கொள்ளும் பாலியல் ரீதியான ஒடுக்குமுறை, அத்துமீறல்கள் என்ன?
மற்றொன்று குடும்ப அமைப்பே ஒரு வகையில் சாதியத்தை மறைமுகமாக தக்கவைத்துக் கொள்கிறது. எல்லோரும் கல்வி பெறுவதற்கு எதிராக இருக்கிறது. உலகமயமாக்கல் சூழலில், நுகர்வு கலாச்சாரம், வாழ்வுமுறை போகங்கள் நம் மேல் திணிக்கபப்டுகிறது, அதறகான பொருள் ஈட்ட இரண்டு துணைகளும் உழைக்க வேண்டியுள்ளது, அப்போது வீட்டுப் பணிகளை செய்ய நமக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். ஆதிக்க சாதி சமூகத்தை சேர்ந்த எவரும் வீட்டுப் பணிகளுக்கு வருவதில்லை, குறிப்பாக பெண்களை சொல்கிறேன். அப்படியே இருந்தாலும், பார்ப்பன பெண்கள், பார்ப்பன வீடுகளில் சமையல் வேலை செய்வர், அல்லது ஆதிக்க சாதி முதலாளிகளின் வீட்டில் வேலை செய்வர், அதுவும் பெரும்பாலும் சமையல் வேலையாகத்தான் இருக்கும். அழுக்கு களையும் மற்ற வேலைகளை பார்ப்பன சாதி பெண்கள் செய்வதில்லை. வீடுகளில் கூட கழிப்பறை கழுவும் பணியை செய்ய ஆள் வேண்டும் அத்தகையோருக்கு.
எல்லோரும் கல்வி பெற்று விட்டால், படிநிலையில் வளர்ந்து விட்டால் சாதி ஒழிந்து விட்டால் எப்படி அடிமைகள் கிடைப்பார்கள்.
அதே போல் முதலாளித்துவ அமைப்புக்கு உழைக்கவும், நுகர்வோராக இருக்கவும் அடிமைகள் தேவை, அதை உற்பத்தி செய்யும் கூடம் குடும்பம். அந்த குடும்ப அமைப்பு சிதையாமல் இருப்பதற்கு அவர்களை ‘தாஜா’ செய்து வைப்பது அவசியம். அவர்களை மகிழ்விக்கும் சாதனங்கள் தேவை. அதுவே பொழுதுபோக்கு எனும் கருவி.
பொழுது போக்கு வாதம் மூலம் நாட்டு நடப்புகளில் இருந்து கவனம் திசை திருப்பப்படுகிறது. எல்லாம் சரியாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது எனும் மாயை உருவாக்கப்படுகிறது.
இந்த மாயாவாதங்கள் மூலம் படிநிலையை தக்கவத்துக்கொண்டு குடும்ப அமைப்புக்கான அடிமைகளை, முதலாளித்துவ தொழிலுக்கு தேவைப்படும் அடிமைகளை தக்கவைத்துக்கொள்ளவும், கல்வி அறிவை முடக்குவது அவர்களுக்கு அவசியமாகிறது. நேரடியாக கல்வியை மறுத்தால் குட்டு வெளிப்பட்டுவிடுமே. கல்வித் துறையை தனியார்மயமாக்கிவிட்டது அரசு எனும் இயந்திரம். மேலும், கவனத்தை சிதறடித்தால் போதுமே மற்றவற்றை நுகர்வோர் பார்த்துக்கொள்வர், அவர்களின் பணியும் சுலபமாகிவிடுகிறது. அதுவும் நல்லவர் எனும் போர்வையின் கீழ். பொருளாதார நெருக்கடியால் மானவர்கள் பள்ளிக் கல்வியை துண்டித்துக் கொள்வதோடு, மனிதப் பண்புக்கு எந்த வகையிலும் உதவாத முதலாளித்துவ வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படும் கல்வியின் அழுத்தத்தை தாங்க முடியாமல், பொழுது போக்கினால் கவனம் சிதறி படிக்க முடியாமல் போகும் பிள்ளைகளும் ஏராளம்.
ஆனால் இவை எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கச் செய்கிறது திரைப்பட மாயை, பொழுது போக்கு நிகழ்ச்சிகள் சார்ந்த வெகுஜன உடக மாயை. அதில் வழிந்தோடும் காமம், பெண் உடல் மீதான பாலியல் சுரண்டல், ஆணாதிக்க சமூக பிரதி.
இவற்றை புரிந்து கொள்ள, நிலவும் சமூக அமைப்பை சந்தேகம் கொள்ள, கேள்வி எழுப்ப சமத்துவ சிந்தனைகளை வழிகாட்டியாகக் கொண்ட மார்க்சிய பெண்ணிய சிந்தனைகள் உதவுகின்றன. இந்திய சமூகத்தின் கூடுதல் பலம் அம்பேத்கரிய, பெரியாரிய சிந்தனைகள். இவற்றை ஓரளவுக்கு கற்றதன் மூலம் கேள்வி எழுப்பி அறிவை மீட்டெடுத்துக் கொண்ட ஒரு பெண்னாக இன்று நான் உங்கள் முன்னால் நிற்கிறேன்… என்னை போன்ற ஓரிருவர் மத்தியில் இத்தகைய அறிவூட்டத்தை ஏற்படுத்தினால் கூட போதும் இந்த அமைப்பு துவங்கிய நோக்கம் நிறைவேறியதாக கொள்வேன்…
சமத்துவத்திற்காக போராடிவரும் கட்சிகள், அமைப்புகளின் பங்கு அளப்பரியது. அதிலும் ஒரு சிறு குறையுள்ளது. அக்கட்சிகள், அமைப்புகள் ஆண் புரட்சியாளரை முன் நிறுத்தும் அளவுக்கு முக்கியமான பெண் புரட்சியாளர் ஒருவரை நிறுத்துவதில்லை. அக்கட்சிகளின் பதிப்பகங்கள் அவரைப் பற்றிய புத்தகங்களை வெளிட்டாலும், அக்கட்சிகளின் பெண்கள் அமைப்புகளில் கூட கோட்பாட்டு அடையாளச் சொற்களிலும் அந்த ‘இயத்தை’ காண முடியவில்லை…மற்ற ஆண் புரட்சியாளர்களின் கோட்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ள அளவுக்கு பெண்களின் கோட்பாடுகள், எழுத்துக்கள் ஆய்வு செய்யப்படவில்லை.
எடுத்துக்காட்டாக ரோசா லுக்சம்பர்க். தொலை நோக்குப் பார்வை கொண்ட சிறந்த தர்க்கவாத திறனாய்வு அறிவு கொண்டிருந்த புரட்சிகர போராளி ரோசா லுக்சம்பர்க். மார்க்சியம், லெனினியம், ஸ்டாலினியம், ட்ராட்ஸ்கியம், மாவோயிசம் என்று இருப்பது போல் லுக்சம்பர்க்கிசம் (Luxemburgism) என்பது போதுமான அளவுக்கு முன்னெடுக்கப்படவில்லை. லெனினோடு சில கருத்துக்களில் அவர் முரண்பட்டிருந்தாலும், ருஷிய புரட்சி காலத்தில் அப்பெண்மனியின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆயுத புரட்சி எனும் சிந்தனைக்கப்பார்பட்டு மக்கள் சக்தியின் மகத்தான பண்புக்கு அதிக அழுத்தம் கொடுத்தவர் அவர். அவர் செய்த தர்க்கவாதம் மார்க்சியத்தை வளர்த்தெடுக்க உதவியது. மற்ற நாடுகளில் மார்க்சிய- லெனியிய-லுக்சம்பர்கிசம் என்பது ஒரு அரசியல் கோட்பாடாக உள்ளது. எதிர்ப்புரட்சி அரசால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார் ரோசா லுக்சம்பர்க்*
The accumulation of Capital, Socialism or Barbarism, Spartacus உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதங்கள் வெளிவரவிருக்கிறது என்று அறிகிறேன்.
”ரோசா லுக்சம்பர்கை மீள் கண்டுபிடிப்பு செய்தல்” எனும் புத்தகத்தில் பீட்டர் ஹூடிஸ் எழுதியிருக்கும் அறிமுகம்: ஆழ்ந்த அறிவு வாய்ந்த ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர். நவீன முற்போக்குவாதத்தின் அசல் ஆளுமை. சமூக உருமாற்றத்திற்கான முயற்சிகளில் இன்றைய காலகட்டம் எதிர்கொள்ளும் சிக்கல்களின் ஒளியில் ரோசா லுக்சம்பர்க்கின் சிந்தனைகளை நோக்கி ஒரு புதிய செவிசாய்ப்பு தேவை… கடுமையான உழைப்பை செலுத்தி அவர் செய்திருக்கும் ஆய்வுகள், முதலீட்டியத்திற்கெதிராக அவர் செய்த தர்க்கவாதம் ஆகியவை அரசியல், பொருளாதார, சூழலியல் பேரழிவுகளுக்கிடையில் நாம் ஊசலாடிக்கொண்டிருக்கும் இன்றைய நிலைக்கு சூழலுக்கு சக்திவாய்ந்த வழிகாட்டி….
லுக்சம்பர்க் ஒரு சுதந்திரமான அறிவுஜீவி, சமரசத்திற்கிடமற்ற அவரது மானுட விடுதலைவாதம் எக்காலத்தையும் விட நமது காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவை.
ரோசா லுக்சம்பர்க்கின் காலம் இப்போதைக்கானது………..
“இடி முழக்கம் போல் நான் மக்களிடம் தாக்கம் ஏற்படுத்த விழைகிறேன், வெறும் பேச்சினால் மனங்களை கொழுந்து விட்டு எரியச் செய்வதல்ல என் நோக்கம், எனது உள்ளரிவின் சுவாசத்தால், திட நம்பிக்கையின் பலத்தால், எனது உயிர்பண்பின் சக்தியால் அதைச் செய்வேன்” – ரோசா லுக்சம்பர்க்
இறுதியாக தோழர்களே, உழைக்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மெரினா கடற்கரைக்குச் செல்லும் எவரும் ஒரு அற்புதமான சிற்பத்தைக் காணலாம்.அது மாபெரும் சிற்பியும் ஆளுமையுமான தேபி பிரசாத் ராய் சௌத்திரி அவர்களால் வடிக்கப்பட்ட உழைப்பாளர் சிலை. நாட்டுக்கு உழைத்தவர்களுக்கு ஒரு மரியாதை நிமித்தமும், அவர்களைப் போல் ஊருக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கவுமே சிலைகள் நிறுவப்படன.
உழைக்கும் மக்களுக்கென்று நிறுவப்பட்ட உழைப்பாளர் சிலையை நான் கடக்கும் போதெல்லாம் மானுட உழைப்பின் பாரத்தைத்தான் அவர்கள் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என நினைப்பேன். ஆனால் சம்பந்தப்பட்ட சிலையில் ஒரு பெண் உழைப்பாளி கூட ஏன் இல்லை என என்னை நானே கேட்டுக்கொண்டதுண்டு.
எத்தனையோ ஆளூமைகளை, கலைஞர்களை ஆணாதிக்க சமூகம் தின்று தீர்த்திருக்கிறது. அந்த வகையில் சிற்பி ராய் சௌத்ரியும் ஒரு பெண் உழைப்பாளியை செதுக்காமல் விட நேர்ந்தது. இன்னும் சொல்லப்போனால் ஒரு பெண் இரட்டை உழைப்பாளி. வீட்டிலும் வெளியிலும் அவள் சுமக்கும் பாரங்கள் அதிகம்.
இரட்டை உழைப்பு செலுத்தும் பெண் உழைப்பாளர்களுக்கென்று ஒரு சிலை வேண்டாமா. இன்றைய இந்த கூட்டத்தின் வாயிலாக பெண் உழைப்பாளர்கள் சிலைக்கான கோரிக்கை வைக்கப்படுகிறது. அது பெண்கள் மட்டும் இருக்கும் சிலையாக இல்லாமல், ஆணும் பெண்ணும் இணைந்து இருக்க வேண்டும். அதே போல் மூன்றாம் பாலினத்தாருக்கு வேலை வாய்ப்பு இல்லை என்பதை உணர்த்தும் வகையிலும் சிலைகள் அமைக்க வேண்டும் என்ற எளிய கோரிக்கையையும் வைக்கிறோம்.
(10.3.2012 மாசெஸ் எனும் அமைப்பின் துவக்க நிகழ்வுக்காக நான் தயார் செய்திருந்த உரை. நேர குறைபாடு காரணமாக அன்று பேசமுடியாமல் போனது. பின்னர் அதை கட்டுரையாக மாற்றுவதா, அப்படியே உரையாக பதிவு செய்வதா எனும் குழப்பத்தின் காரணமாக அப்படியே வைத்திருந்தேன். அதை பிறகு முடிவுசெய்து கொள்ளலாம் என்ற முடிவின் படி இப்போது இங்கு பதிவுசெய்கிறேன்.)
- கொற்றவை
குறிப்புகள்: பெண்ணின் மறுபக்கம், மருத்துவர் ஷாலினி, விகடன் வெளியீடு.
ரோசா லுக்சம்பர்க் (வாழ்க்கை வரலாறு) , தமிழில் அ. பட்டாபிராமன், என்.சி.பி.எச் வெளியீடு,
Related Links: https://plus.google.com/photos/109970729142100867469/albums/5718585182920780209?banner=pwa
இம்மாத உயிர் எழுத்து இதழில் கட்டுரை எனும் வடிவத்திற்காக சிறிய மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது.

கொற்றவை,
ReplyDeleteஇந்த அமைப்பு உருவாக நீங்கள் எவ்வளவோ சிரமப்பட்டிருக்கலாம், எத்தனையோ ஏளனங்களை எதிர்கொண்டிருக்கலாம், சில இரவுகள் தூக்கத்தைத் தொலைத்திருக்கலாம், சில நாட்களை, வாரங்களை, மாதங்களை இதற்காகவே அர்பணித்து இருக்கலாம், தங்களைது அந்த எல்லா சிரத்தைகளுக்கும் நான் முதலில் தலைவணங்குகிறேன். ஒரு பாமரனாக, புரையோடிப் போன இந்த சமூக அவலங்களின் எச்சமாக எனக்கு சில கருத்துக்கள் இருக்கின்றன.
இந்தக் கட்டுரை முழுக்க நீங்கள் சாடுகிறீர்கள், கைநீட்டி குற்றம் சாட்டுகிறீர்கள், விரல் சொடுக்கி சவால் விடுகிறீர்கள், நிமிர்ந்து நின்று அறைகூவல் விடுக்கிறீர்கள், ஆனால் ஏன் இந்த அணுகுமுறை ? " நீ திருடினாய் தானே ? " என்று ஒரு திருடனை ஆவேசமாக சுட்டுவிரல் நீட்டிக்குற்றம் சாட்டுவதை விட, " ஏன் திருடினாய் ? " என்று அமைதியாகக் கேட்பது சில ஆக்கப் பூர்வமாற்றங்களை உருவாக்கும் என்பது எனது கருத்து ! அந்த அணுகுமுறை இந்த அமைப்பில் சாத்தியம் இல்லையா ?
" பெண் மட்டும் என்ன ஒழுங்கா, பெண்கள் எவ்வளவு சுதந்திரம் பெற்று விட்டாரக்ள் தெரியுமா என்று சொல்லும் சில எளிய உள்ளங்கள் " என்கிறீர்கள் ! சுதந்திரம் பெறுவதோடு ஒழுக்கத்தை ஏன் சம்பந்தப் படுத்துகிறீர்கள் ? ( மன்னிக்கவும் ! )
" ஆணால் திறந்த வெளியில் நிகழும் இந்த பாலியல் வியாபாரத்தை, பெண் உடலின் மேல் வைக்கப்படும் பார்வைச் சுரண்டலை என்ன வென்று சொல்வது " என்கிறீர்கள், இந்த இடத்தில் " அதிர்வலைகள் " பற்றிச் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு மனிதனைச் சுற்றி அவனது அதிர்வலைகள் இருக்கும். சூட்சம சரீரம் என்று பெயர். தொடர்ச்சியான எண்ணங்களால் உருவாவது அது. ஒரு பெண்ணைக் காமக் கண்ணோட்டத்தில் பார்க்க ஒருவனைத் தூண்டுவது அந்தப் பெண்ணின் காம அதிர்வலைகள்தான். பார்ப்பதை அவன் விரும்புவது போலவே பார்க்கப் படுவதை அவள் விரும்புவாள். இந்த இடத்தில், பார்ப்பவனின் சட்டையைப் பிடித்து இழுத்து அவன் பார்ப்பதைத் தடை செய்தால், அது அந்த இருவருக்குமே இழைக்கப் படும் அநீதி ! அந்த இருவருக்குமான அந்த கணநேர அந்தரங்கத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. இது இந்துத்துவ பார்ப்பனீயம் அல்ல. அறிவியல் !
பார்க்கப்படுவதை விரும்பாத பெண்ணை எந்த ஆணும் பார்க்க மாட்டான். ஒரு சராசரி ஆணாக இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
" பெண்மை எனும் குணத்தின் வரையரை கொண்டு ஆண்கள் பெண்களை மதிப்பிடுவதுபோல், அதனடிப்படையில் தனக்கான துணையை தேடுவது போல் ஆண்மை எனும் வரையரை கொண்டு பெண்ணும் தனக்கான துணையை தேர்வு செய்ய நிணைத்தால் பெரும்பாலான ஆண்களுக்கு துணையே கிடைக்காது. " என்கிறீர்கள், கொற்றவை, தகுந்த துணை கிடைக்காமல் இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் எத்தனையோ சராசரி ஆண்களில் ஒருவனாகச் சொல்கிறேன், தயவு செய்து அப்படிச் சொல்லாதீர்கள்.
ReplyDelete" குடும்ப அமைப்பே ஒரு வகையில் சாதியத்தை மறைமுகமாக தக்கவைத்துக் கொள்கிறது " என்கிறீர்கள் ! குடும்ப அமைப்பு முற்றிலும் இல்லாத ஒரு சமூகத்தைக் கற்பனை செய்து பார்க்க முயல்கிறேன், ஒரு சாமானியனாக என்னால் அது முடியவில்லை. எனது கண்களுக்கு ஒரு பெரிய மண்டபம் தெரிகிறது, அரசு மருத்துவமனைகளில் படுத்திருப்பது போல, பள்ளிக்கூட விடுதிகளில் படுத்திருப்பது போல உழைத்துக் களைத்த மனிதர்கள் அந்த மண்டபத்தின் வராண்டாக்களில் படுத்திருக்கிறார்கள்............நினைக்கவே சற்று பயமாக இருக்கிறது ! குடும்ப அமைப்பு என்பது ஒரு மனிதனின் அந்தரங்கம், தனிமை, வடிகால் ! நாளெல்லாம் பொதுவிடத்தில் உழைத்துக் களைத்து வரும் ஒரு மனிதனுக்கு ஒரு மாறுதல் தேவைப்படுகிறது ! அவனுக்கே அவனுக்கென்று சில, அவனுக்குத் தேவைப்படுகின்றன. வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் ஒரு பெண் எவ்வாறு வெளிஉலகத்தைப் பார்க்கத் துடிக்கிறாளோ, அதே போலத்தான் வெளி உலகில் வேலை செய்த ஒரு ஆண், தனந்தனிமையான ஒரு அறைக்குள் முடங்கிக் கொள்ளத் துடிக்கறான். தயவு செய்து பெண்ணியப் பார்வையோடு இதனைப் பார்க்க வேண்டாம் ! மனிதத்தின் மனசாட்சியோடு பாருங்கள் !
போராட்ட குணம் ஆண்களுக்கு மட்டும் அல்ல, பெண்களுக்கும் இருக்கிறது. தன் குஞ்சுகளைக் கவர வரும் பருந்திடம் இறக்கை விரித்து ஆக்ரோஷமாகச் சண்டை இடுகிறதே கோழி ! என்னைப் பொறுத்தவரை தாய்மை என்பது தான் உயர்ந்த பட்ச வீரம் !
உழைப்பாளர் சிலையில் பெண்கள் இல்லாதது குறித்த தங்களது கருத்துக்களில் எனக்கு உடன்பாடே ! பெண்கள் மிகச் சிறந்த உழைப்பாளிகள் ! நாளெல்லாம் உழைத்துக் களைத்து வரும் ஒரு பெண் வீட்டு வேலைகளையும் அவளே செய்ய வேண்டும் என்பதில் எனக்குத் துளியும் சம்மதம் இல்லை ! ஆனால், கிராமப் புறங்களில் பல குடும்பங்களில் இன்று பெண்களின் நிலை அப்படித்தான் இருக்கிறது. உங்கள் விழிப்புணர்வு முயற்சி, நம் தமிழகத்தின் கிராமங்களில் நடைபெற வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து ! அப்படி நடைபெறும் பட்சத்தில் அது விழிப்புணர்வாக மட்டுமே இருக்கவேண்டுமே அன்றி ஆண்களை நோக்கிய எதிர்ப்புணர்வாக இருக்கக்கூடாது.
" இருவரும் சமமாக வாழ வேண்டும் " என்பதற்கும் " அவன் உன்னை அடிமையாக வைத்திருக்கிறான் " என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது கொற்றவை !
கடைசியில் என் வழக்கமான புலம்பல் : நாட்டில் ஆண் பெண் விகிதம் 10 : 7 என்று சமீபத்திய புள்ளி விபரம் ஒன்று புளியைக் கரைக்கிறது ! அதற்கு ஏதாவது வழிவகை செய்யுங்கள். எனக்கு வாழ்க்கையில் திருமணமே ஆகவில்லை என்பதற்காகத் தான் இந்த அக்கறையா என்றால் எனது பதில் " ஆம் ! " எனது சுயநலம் தான். பெண்களே இல்லாத ஒரு உலகத்தில் சில நூறு ஆண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் அவர்களில் நானும் ஒருவனாகவே இருப்பேன். நன்றி !
This comment has been removed by the author.
ReplyDeleteகுருசந்திரன்... கட்டுரைகளை வாசித்து கருத்து சொன்னமைக்கு நன்றி...
ReplyDeleteசராசரியை மீறிய பெண்ணாக இருப்பதையே நான் விரும்புகிறேன், ஏனென்றால் சராசரி என்பதற்குள் ஆணாதிக்க பூனை ஒளிந்து கொண்டிருக்கிறது.
ஆண் தலைமையிலான குடும்ப அமைப்பு உங்களுக்கு பிடித்திருக்கலாம், ஆனால் அது பெண்களுக்கோ, சமூகத்துக்கோ எவ்வித சமத்துவத்தையும் வழங்கப்போவதில்லை.
நான் சாடுகிறேன், குற்றம் சாட்டுகிறேன்.... 2000 வருடமாக நாங்கள் கொட்டு வாங்கிக்கொண்டு தானே இருக்கிறோம்... இப்போதும் வெறுமென்றே பேசிக் கொண்டும், சமாதானத்திற்கு தூதும் விட்டுக் கொண்டிருக்கிறோம்.... ’புரட்சி’ என்ற பெயரில் வன்முறையில் இறங்கவில்லையே.....
துணையில்லாமல் வாழ வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அதிதீவிரவாதியல்ல நான். அந்த துணை எப்படிப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதே எனது பேச்சு.
என்னை இப்படி எழுத வைத்திருப்பதே காதல் தான், அது நான் மானுடத்தின் மேல் கொண்டுள்ள காதல், அதில் எவ்வித ஆதிக்கத்திற்கும் இடமில்லை அது ஆணாயினும், பெண்ணாயினும், முதலாளியாயினும், சாதி ஆயினும்.......
அப்படி ஒரு சமத்துவத்தை அடைய, நிலவும் அமைப்பின் ஆதிக்க தோலை உரித்து வீச வேண்டியுள்ளது.
கொற்றவை,
Deleteபின்னூட்டத்திற்கு பதில் அளித்தமைக்கு நன்றி ! ஒப்பந்தங்களின் அடிப்படையிலா அன்பு செலுத்துதல் ? நிபந்தனைகளின் அடிப்படையிலா நேசித்தல் ? " நீ எனக்கு இன்னின்ன வெல்லாம் செய்தால் நானும் பதிலுக்கு உனக்கு இன்னின்ன வெல்லாம் செய்வேன் " என்பது போன்ற எதிர்பார்ப்புகள் கொண்ட கொடுக்கல் வாங்கல் வியாபாரம் தானா தாம்பத்தியம் ? மன்னிக்கவும், நீங்கள் வேறு கண்ணோட்டத்தில் சொல்ல வந்திருக்கலாம். ஆனால் ஒரு பாமரனாக என்னால் இப்படித்தான் புரிந்து கொள்ள முடிகிறது !
கொற்றவை,
ReplyDeleteபின்னூட்டத்திற்கு பதில் அளித்தமைக்கு நன்றி ! ஒப்பந்தங்களின் அடிப்படையிலா அன்பு செலுத்துதல் ? நிபந்தனைகளின் அடிப்படையிலா நேசித்தல் ? " நீ எனக்கு இன்னின்ன வெல்லாம் செய்தால் நானும் பதிலுக்கு உனக்கு இன்னின்ன வெல்லாம் செய்வேன் " என்பது போன்ற எதிர்பார்ப்புகள் கொண்ட கொடுக்கல் வாங்கல் வியாபாரம் தானா தாம்பத்தியம் ? மன்னிக்கவும், நீங்கள் வேறு கண்ணோட்டத்தில் சொல்ல வந்திருக்கலாம். ஆனால் ஒரு பாமரனாக என்னால் இப்படித்தான் புரிந்து கொள்ள முடிகிறது !
idhu idhu seiyavendum enra oppandham irukkiratho illaiyo, edhaiyellaam naan seiya virumbukireno athaiyellaam neeyum seyyalaam, ethu seithaal enakku pidikkaatho, athai naanum unakku seiyya maatten enum oppandham... nichaiyam thevai....
ReplyDeleteanbai romanticize seivathu waste enpathu en anubavam.... suyamariyaathaiyai mathikkum thunai seluththum anbe unmaiyaanathu... athu iruvarukkum podhuvaanathaaka irukka vendum...