Showing posts with label CPIM. Show all posts
Showing posts with label CPIM. Show all posts

Sep 21, 2026

எங்கே செல்லும் இந்த பாதை!


ஐஐடி ஒரு சித்திரவதைக் கூடாரமாகவும், சாதிய வன்கொடுமைக் கூடாரமாகவும் செயல்படுவதை நாம் பல்லாண்டு காலங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தற்போது ஒரு 19-20 வயது தலித் மாணவர் த..லை! 7 மாதத்தில் ஐஐடி மும்பையில் 3 மாணவர்கள் த..கொலை என்கிறார்கள்.


இதையெல்லாம் நாம் காத்திரமாக பேசி வந்தோம்.

அதுமட்டுமா தேசிய அளவில் என்ன நடக்கிறது என்பது பெரும் விவாதமாகிக் கொண்டே இருக்கும். பிஜேபி அரசு (மோடி அவர்கள்) "ஒரு பைசா தொட விட மாட்டேன்,  தொட்டவனையும் விடமாட்டேன்" என்று தொடங்கி (அண்ணனும் அதே வசனத்தை சொல்கிறார் அல்லவா) இன்று எங்கு பார்த்தாலும் ஊழல்! எந்த ராமனை வைத்து அரசியல் செய்து ஆட்சிக்கு வந்தார்களோ, அந்த ராமனின் கோவிலையும் விட்டு வைக்க வில்லை! 

"பதவியேற்று நான்கு ஆண்டுகளே ஆன நிலையில், ஊழலை முற்றிலுமாக ஒழிப்பது சாத்தியமற்றது என்பதை மோடி உணர்ந்தார். எனவே, தனது நிர்வாகத்தின் கீழ் நடைபெற்ற பெரும் முறைகேடுகள் மற்றும் மோசடிகளின் அனைத்துத் தடயங்களையும் திறம்பட ஒடுக்குவதற்கான விரிவான நடவடிக்கைகளை அவர் ஆரம்பத்திலிருந்தே மேற்கொண்டார்." - https://thewire.in/politics/scams-chaos-grip-bjp-ruled-states-as-power-brokers-and-influence-pedlars-rule-the-roost

அதே போல் மதவாத பிளவுகள்-அணிதிரட்டல்கள், சிறுபான்மையினர், தலித்துகள் மீதான வன்முறை, இடதுசாரிகள் மீதான அரசியல் ஒடுக்குமுறைகள், வழக்குகள், தேர்தலை மையப்படுத்தி SIR மூலம் அரசியல் நீக்கம், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை பறிப்பு, EVM முறைகேடு! இது தொடர்பாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் தேர்தல் ஆணையம் மீது வழக்கு தொடர்ந்து FIR பதிவு செய்ய வேண்டும் என்று காவல் துறையை அணுக இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.  https://www.facebook.com/share/v/1CF9ifdz4e/

மேற்கு வங்கத் அரசியலில் பெரும் கூத்து நடக்கிறது.

பாஜகவின் பொருளாதாரக் கொள்கை, இந்தி திணிப்பு மற்றும் தனியார்மயத்தை உள்ளடக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்த மாநில அரசுகளை "வழிக்கு கொண்டுவருதல்" என்று ஒரு பக்கம்.  (தொடர்கிறது)

திருப்பதி லட்டு விவகாரத்தில் விலங்கின் (மாடு, பன்றி) கொழுப்பு இல்லை, கலப்பட நெய் என்று அறிக்கை வந்துள்ளது. இதை வைத்து பெரிய அரசியல் செய்து...

இன்னொரு பக்கம் பள்ளிக்கூடங்களின் அவலம் குறித்த அதிர்ச்சிகர அறிக்கைகளும், காணொளிகளும் #CJP & Team மூலம் வெளிவந்து கொண்டிருக்கிறது. 


ABVP போன்ற மாணவர் அமைப்பு மூலம் கல்லூரி வளாகங்களையும் விட்டுவைப்பதில்லை.

எல்லாரையும் பணமற்ற பரிவர்த்தனைக்கு மாற செய்து தற்போது மக்களின் அடி வயிற்றில் கை வைப்பது போல் #UPI செயலிக்கு கட்டணம் என்கிறது பாஜக அரசு (முதலாளிகளுக்காக, அதுவும் பன்னாட்டு முதலாளிகளுக்காக). உத்திரபிரதேசத்தில் சிறு வியாபாரிகள் அதை எதிர்க்கத் தொடங்கி விட்டார்கள். நியாயமாக முதல்வர் விஜய் இந்த கட்டணக் கொள்ளையை கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும். (செய்தாரா??)
 

நீதியரசர் உஜ்ஜல் புயான் மதவாத பண்பாட்டு அராஜகம், காவலில் நிகழும் வன்முறை மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொ..கள், ஜனநாயக விரோத போக்கு குறித்தெல்லாம் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

இப்படி பல நிகழ்வுகள். (நானே Track வைத்துக்கொள்ளவில்லை. following https://www.facebook.com/thewire.in may help you stay updated) 


இப்படி தேசிய அளவில் எதிரொலிக்கும் குரல் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும். ஆனால் தற்போது தேசிய அளவில் என்ன நடக்கிறது என்பது  தமிழ் நாட்டில் பேசு பொருளாகவே இல்லை. 

உலக அரசியலும் கூட பேசி வந்துள்ளோம். ஏகாதிபத்தியங்களின் இன அழிப்பை கண்டித்திருக்கிறோம். தற்போது இடதுசாரிகள், முற்போக்கு, ஜனநாயக இயக்க அறிக்கைகள் வருகின்றன. (தாக்கம் ஒன்றும் பெரிதாக இல்லை) ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் மறந்தும் பாஜக என்கிற பெயரையோ, அவர்களின் அரசியலையோ, கொள்கையையோ விமர்சிக்கக் கூடாது என்னும் "கொள்கையில்" இருப்பதால் பொதுச் சமூகத்திலிருந்து பாசிச விவாதம் பாயசமாகி விட்டது. 


பாசிச எதிர்ப்பை தீவிரமாகக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசியல், பாசிச எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ-ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்டிருக்கும் இடதுசாரி கூட்டணி அல்லாத ஓர் ஆட்சி தமிழ்நாட்டில் “அவர்களுக்கு” தேவைப்படுகிறது. நல்லவர் என்று மக்கள் நம்பும் ஒரு பிம்பம்! (ரஜினிகாந்த் ஒதுங்கி விட்டார்) அப்படிப்பட்டவரை  முன்னால் வைத்து ஆட்சி நடக்கிறது. அதற்கு ஆதாரமாக - எழுதிக் கொண்டு வந்ததைத் தாண்டி முதல்வர்  எதுவும் பேசுவதில்லை. அவரைத் தவிர முதல்வர் சார்பாக பிரதானமாக 4 பேர் தான் எதைப் பற்றியும் பேசுகின்றனர். (அதிலும் குறிப்பாக ஒருவர்!). இடதுசாரிகளை கணக்கெடுக்கச் சொல்லும் சுற்றறிக்கைகள். தலித்துகளின் இயக்க ரீதியான ஒற்றுமையை, இஸ்லாமிய இயக்கங்களின் ஒற்றுமையை உடைத்தாயிற்று. (எதிர்கட்சி ஆதரவு இயக்கங்கள், ஆளும் கட்சி ஆதரவு இயக்கங்கள்).


#தாவெகவினர் ஈடுபடுவது BINARY வெறுப்பு அரசியல், திசை திருப்பும் அரசியல், DE-Faming அரசியல், வரலாற்றையே திரிக்கும் அரசியல். தமிழ் நாட்டில் தற்போது பலமாக இருக்கும் “அவர்களது” எதிரியை குறிவைத்து அரசியல் செய்கின்றனர். இடதுசாரிகள் பக்கமும் அவ்வப்போது “moral questions” கேட்டு வந்து செல்கின்றனர். வேறு எந்த திட்டங்கள், மக்கள் பிரச்சினைகள் குறித்தும்  பேசுவதே இல்லை. 


தமிழ் நாட்டின் நிதிநிலை தற்போது வெளிவந்துள்ளது. PARTY FUND ஊழல் பணமெல்லாம் கஜானாவுக்கு வந்து விட்டது என்றார்கள். கடன் தான் ஏறியுள்ளது. 3 மாதங்களில்! மின்வெட்டினால் மக்கள் பெரிதும் அல்லல் படுகின்றனர். முன்பு திமுக என்றனர் தற்போது BSNL என்றதும் எனக்கு பகீர் என்றது. அடுத்த என்ன திட்டத்தை வைத்திருக்கிறார்கள் என்று! ஏனென்றால் நம் அனுபவம் அப்படி!  (மழை குறைந்தது, காத்து வரலை என்பது நேற்றைய காரணம்)! 


சாலையிலேயே வெ.டிக் கொ.ம் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சாதி ஆணவக் கொலைகளும் தொடரத்தான் செய்கின்றன, காவல் மரணங்களும் தொடர்கின்றன. சாதி ஆணவக் கொலையாக பதிவு செய்ய போராடினால் ஒடுக்குமுறை, மாணவர்கள் நீதி கேட்டு போராடினால் கடுமையான ஒடுக்குமுறை.  பெண்கள் பாதுகாப்பு குறித்து பெருமை பேசினர். சமரசம் சந்தி சிரிக்கிறது. 


இது ஒரு பக்கம் என்றால்… 


எந்த திட்டமும் முறைப்படி மக்களிடமும், அனைத்து கட்சிகளிடமும் கலந்து பேசி அறிவிக்கப்படுவதில்லை. எதேச்சிகாரப் போக்கில் அறிவிக்கப்படுகிறது. பின்பு போராட்டம் நடக்கிறது. திரும்பப்பெறப்படும் என்று அறிவிப்பு வருகிறது. அரசாணை வெளிவந்தாலும், முதல்வர் முடிவே எடுக்கல என்று ஒரு அமைச்சர் துணிச்சலுடன் தவறான தகவலை சொல்ல முடிகிறது. இந்த திரும்ப பெறுதல் எல்லாம் கூட இடைத் தேர்தல் வரை இருக்கலாம். போகப் போக என்ன நடக்கும் என்பது “அவர்களுக்கே” வெளிச்சம்! 


மக்களுடைய அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன, பாஜகவிவின் அரசியல் பொருளாதார கொள்கைகள் பற்றிய விவாதங்களே இல்லை - அது தமிழ்நாட்டையும் தானே பாதிக்கும். கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயிகள் பிரச்சினை, குடிதண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள், மேகதாது, வருசநாடு மேகமலை மக்கள் நிலை (வனத்துறை அமைச்சராவது சென்று சந்தித்தாரா?), நவோதையா பள்ளி திறக்க வேண்டும் என்கிற ஆணை என்று பல பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சில பிரச்சினைகளில் தவெக அரசு நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. ஆனால் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதித்தல், மக்கள் மத்தியில் இதை விவாத பொருளாக்குதல், மக்களை அணிதிரட்டி நம் உரிமைக்காக கடுமையான எதிர்வினைகளை பதிவு செய்து மாநில உரிமைக்காக அரணாக நிற்கும் அரசு என்று நிறுவுதல்  வேண்டாமா? 


அதற்கு முதல்வர் என்பவர் “ஆதிக்க சக்திகளை” நோக்கி காத்திரமாக எதிர்வினை ஆற்றக்கூடியவராக இருக்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பது என்ன? வெறுப்பரசியல். விஸ்வகுரு போலவே! தாவெகாவில் யார் பேசினாலும் வெறுப்பரசியலை உமிழ்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி அதை ஓட்டாக்கி வண்டி ஓட்ட நினக்கிறார்கள். செய்யட்டும். எல்லாரும்  செய்வது தான். But these people are going over board! Without any Political Ethics. Distorting History! 


அதையும் தாண்டி தமிழ்நாட்டின் நலன், மக்கள் நலன் என்று ஒன்று இருக்கிறது. அது ஒன்றிய அரசின் கொள்கைகளோடு தொடர்புள்ளது. அதைப் பற்றியும் பேசுவதும் எதிர்வினையாற்றுவதும் இல்லாதபோது, இவர்கள் யார் என்னும் ஐயம் எழத்தானே செய்யும்? 


இதில் விமான நிலைய மேலாண்மையை தனியார்மயமாக்க (ரகசிய) கடிதத்தை பிரதமருக்கு எழுதுவதெல்லாம் என்ன மாதிரியான போக்கு? பொதுச்சொத்து அனைத்தையும் தனியார்மயமாக்க எதற்கு ஓர் அரசு? அது எந்த அரசாக இருந்தாலும் சரி! (On June 18, 2026, GMR Group Chairman (Airports) and senior executives met with the Tamil Nadu Chief Minister, C. Joseph Vijay) https://tamil.oneindia.com/news/chennai/from-gmr-chief-meeting-in-june-to-privatization-letter-in-august-what-transpired-in-cm-vijay-airpor-832121.html


பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்ய சொன்ன காரணம் என்ன? தற்போது அங்கு சிப்காட் அமைக்கப்படும் என்கிறார்கள். இதையெல்லாம் எப்படி நியாயப்படுத்துகிறார்கள்? இதை கேள்வி கேக்கும் நிலையில் மக்கள் இல்லாத அளவுக்கு இணையத்திலும், வெளியிலும் abusive attacks நடக்கிறது. திசை திருப்பும் அரசியல், ஊழல் ஒழிப்பு என்னும் ஒற்றை கூச்சலில் அனைத்தையும் சுருக்கி விட்டார்கள். இன்னும் எவ்வளவு எழுதுவது என்று தெரியவில்லை! 


தமிழ்நாட்டின் அரசியல் போக்கு அச்சமூட்டுவதாக உள்ளது! ஒன்றிய அரசின் அழுத்தங்களைத் தாண்டி நாம் கல்வி, வேலை வாய்ப்பு, கட்டுமான வளர்ச்சி என்று சாதித்துக் கொண்டிருந்தோம்.. இனிமேல்??????  


இதில் என்ன கொடுமை என்றால் அன்றாடம் இந்த ஆட்சியின் அவலத்தைப் பற்றி எழுதவே நம் பொழுதும் ஆற்றலும் முழுமையாக செலவாகிறது. (அதுலையும் பாதி தான் முடியுது) மற்ற செய்திகளையோ, உலக அரசியலையோ கவனிக்கக் கூட நேரமில்லாத அளவுக்கு இவர்கள் நம் நேரத்தையும், கவனத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் என்ன பேச வேண்டும் என்பதையே இவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள் என்பது போல் உள்ளது. 


நம் வீடு பற்றி எரியும் போது நாம் அண்டை வீட்டைப் பற்றி கவலைப்பட முடியுமா என்று நாமும் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கே செல்லும் இந்த பாதை என்று இளையராஜாவிண் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது… 


ஊழல் ஒழிப்பு என்பது சாமானிய மக்களை எளிதில் சென்றடையும் கோஷம். ஊழல் ஒழிந்தால் தம் வாழ்வு சிறந்திடும் என்று மக்கள் நம்புகிறார்கள். அவர்களுக்கு அவ்வளவு தான் புரிதல். ஒவ்வொரு புதிய கட்சிகள் தோன்றும் போதும் இதைத்தான் முழுக்கமாக வைக்கின்றன. திரு மோடி தொடங்கி அண்ணன் விஜய் வரை. ஆனால் இவர்களுக்கு புரியாதது என்னவென்றால், முதலாளித்துவம் தான் ஊழலின் ஊற்று. இந்த ஆட்சியாளர்கள் அனைவரும் முதலாளிகளுக்கு ஆதரவான தனியார்மயக் கொள்கைகளை எதேச்சிகாரப் போக்கில் நிறுவுபவர்களாக இருக்கிறார்கள். இது ஊழல் இல்லையா? இதனால் பாதிக்கப்படப் போவது யார். ஏழைகளும், நடுத்தர வர்க்க மக்களும் தான். இது வளர்ச்சி அல்ல! “லாபம் என்றால் என்ன என்பதை படிக்காத வரை அல்லது இடதுசாரிகள் எடுத்து சொல்வதை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் என்ற அவதூறை நம்பும் வரை மக்களை ஏமாற்றுவது சுலபம்” 


#PPP என்பதும் அது போல தான் ஏமாற்று வேலை. நான் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்த்திருக்கிறேன். தனியார்-அரசு கூட்டு வேலைத்திட்ட முன்மொழிவு அனுப்பும் போதே இதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும், எவ்வளவு நிலத்தை கையகப்படுத்த முடியும் என்று என் முதலாளி கணக்கு போடுவார். அப்போது எனக்கு மார்க்சியமெல்லாம் தெரியாது. அரசியல் பக்கம் வராத ஒரு சராசரி “குடும்பப் பெண்” நான். 


உழைப்பாளிகளை முதலாளிகளிடம் அடகு வைப்பதுதான் இருப்பதிலேயே மிகப் பெரிய ஊழல்! அதற்கு துணை நிற்கும் எந்த கழகமும் ஊழல் கழகமே! 


ஒரு குட்டிக் கதை சொல்றேன்:


முதலாளிக்கும் டானுக்கும் சண்டை என்றால் அந்த இடத்தில் ஒரு புதிய டான் தேவைப்படுவான். மக்கள் ஒவ்வொரு டானையும் ஹீரோன்னு நினைச்சுக்குறாங்க! அடுத்தடுத்த டான்கள் தயாராகிட்டு இருக்காங்க. இதுக்கு நடுவுல இருக்குற டான் சூப்பர் ஹீரோவாக எல்லா முயற்சியும் போடுவாரு. அதனாலதான் “மேலிடத்த” பகச்சிக்காம அரசியல் செஞ்சு “செல்லுபடியாகுற அரசியல் மூலமா” மக்கள் ஆதரவும், தனியார்மயம் மூலமா முதலாளிகள் ஆதரவும் ஏகபோகமா கிடைக்குற வரைக்கும் கொஞ்சம் அடக்கி வாசிச்சுட்டு, அப்புறம் ஒரு ஆட்டம் ஆடலாம்னு நினைக்கும் போது இன்னொரு டான் இறக்கப்படுவார். 


இதுக்கு முடிவே இல்லையான்னு கேட்டீங்கன்னா, முடிவு உங்க கிட்ட தான் இருக்கு எந்த முதலாளிகளும் பேரம் பேச முடியாத இடதுசாரிகளை உங்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுப்பது. தமிழ்நாடு இடதுபக்கம் திரும்பும் நேரம் வந்துவிட்டது. அதுவே உண்மையான மாற்றம். 



 

Oct 31, 2021

கம்யூனிஸ்ட் யார் என்று டி.என்.ஏ டெஸ்டிங் லேப் நடத்துபவர்களின் கவனத்திற்கு

 


முத்துராமலிங்கத் தேவர் சாதியத் தலைவரா? அவரை ஒற்றை சிமிழிற்குள் அடைக்கப் பார்கிறீர்களே! அவரை படித்திருக்கிறீர்களா? அவரின் வரலாற்றுப் பாத்திரம் தெரியுமா? மொட்டையாக அணுகுறீர்களே நீங்களெல்லாம் ஒரு கம்யூனிஸ்டா!? (இப்படி கேட்பது மார்க்சியவாதிகள்)

சரியான கேள்விதான்!

 ஆனால் இதே நிலைப்பாட்டை அம்பேத்கரை விமர்சிக்கையில் ஏன் இவர்களால் வைக்க இயலவில்லை!

 தேவரை மட்டுமல்ல எவர் ஒருவரையும் மார்க்சியக் கண்ணோட்டத்தில் அவரின் வரலாற்று பாத்திரம் என்ன என்பதை வரலாற்று பொருள்முதல்வாதப் பார்வையில் தான் அணுக வேண்டும்! தேவரைப் பற்றிய திறனாய்வு செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! சாதி ஒழிப்பின் அடையாளமாக அவர் இல்லை! 

 பெரியாரையும் அம்பேத்கரையும் அப்படி அணுகினால் இங்கு நடப்பது என்ன?

 இவர்கள் இருவரை மட்டும் குறிப்பாக ஏன் பேசுகிறோம்? ஏனென்றால் சாதி ஒழிப்பிற்கு அவர்களிடம் தான் தீர்வு உள்ளது என்று மீண்டும் மீண்டும் முன் வைக்கிறார்கள்.

 அவர்களை முன் வைத்து சாதியை ஒழிக்க மார்க்சியத்தில் தீர்வில்லை! கம்யூனிஸ்டுகளுக்கு இந்த மண் புரியவில்லை! அவர்களுக்கு சாதி ஒழிப்பில் அக்கறை இல்லை! என்ன பெரிதாக செய்துவிட்டார்கள் கம்யூனிஸ்டுகள் போன்ற வாதங்களை வைப்பது யார்? பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள் (பலரின்) இந்த சாடலுக்கு யார் காரணம்? இந்த வெறுப்பை அல்லது தவறான புரிதலை ஏற்படுத்துவதில் அந்த தலைவர்களின் பங்கு என்ன? யாரை விமர்சித்தாலும் வந்து பாடம் நடத்தும் “மார்க்சிய நடுநிலைவாதிகள்” இதுகுறித்து என்ன அறிவிக்கை வைத்திருக்கிறார்கள்?

 தேவரின் வரலாற்றுப் பாத்திரம் இருக்கட்டும்! தேவர் ஜெயந்தியின் வரலாற்று நிகழ்காலம் என்ன? அதன் பொருத்தப்பாடு என்ன? அதன் தேவை என்ன? அது அவசியா? இல்லையா போன்ற கேள்விகளையும் கேட்கலாமே?

நாங்கள் எடுத்துக் கொண்ட ஆய்வு சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு யாரிடம் உள்ளது என்பதுதானே! அதற்கு தீர்வு உள்ளதாக கூறியது அம்பேத்கர்! புத்தரா கார்ல் மார்க்ஸா என்ற ஒப்பீட்டை செய்தவர். பௌத்த மதமாற்றம் சாதியை ஒழிக்கும் என்கின்ற பிரச்சாரத்தையெல்லாம் நீங்களும் தானே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?

 இந்த பின்னணியில் அம்பேத்கரின் சிந்தனைகளை திறனாய்வு செய்யத் தொடங்கினோம்! அதனை இங்கே எப்படி எதிர்கொண்டார்கள்?

மீண்டும் சொல்கிறேன், தலித் அறிவுஜீவிகள், அம்பேத்கரின் அபிமானிகள் (தலித்துகள்) கோபம் கொள்வதை, வசைபாடுவதை, வழக்கு தொடுப்பதை புரிந்துகொள்கிறோம்! ஆனால் வசுமித்ர மீது வழக்கு தொடுத்தது சிபிஎம் – அதன் பிரிவான தீண்டாமை ஒழிப்பு முன்னணி! இவர்களைப் பார்த்து நீங்கள் ஒரு கம்யூனிஸ்டா? இது ஒரு கம்யூனிஸ்ட் அமைப்பா என்று கேட்டீர்களா?

 குறைந்தபட்சம் பொதுவெளியில் அத்தகைய பாசிச நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தீர்களா? அமைப்பு பாசத்தில் எங்களுக்கு பாடம் நடத்துகிறீர்கள்! கற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறோம்! ஆனால் இதே அரசியல் நேர்மை உங்கள் அமைப்பை நோக்கியும், மார்க்சிய தத்துவம் மீதும்.. எல்லாவற்றுக்கும் மேல் உழைக்கும் வர்க்க விடுதலை மீதும் இருக்கட்டும்!

 ”உங்களுக்கு மட்டுமே எல்லாம் இருக்கிறதா?” – நாங்கள் அப்படி மார் தட்டிக்கொள்வதில்லை!

 எங்கள் கேள்விகள் தேவரை எப்படி மதிப்பிடுவது என்பது பற்றி அல்ல சிபிஎம்மில் (ஒரு சிலரிடம்) காணப்படும் பாசாங்கு / சால்ஜாப்பு / இரட்டை வேடம் / அடையாள அரசியல் மற்றும் தனி நபர் வன்மம் பற்றியது! கருத்துச் சுதந்திரத்தை போட்டு நசுக்கிய மிக மோசமான ஒரு செயலுக்கு அமைப்பு காட்டும் கள்ள மௌனம் பற்றியது.

 சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரிடம், பெரியாரிடம் தீர்வு உள்ளதா என்பது குறித்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஏன் வெளிப்படையாக கராரான மதிப்பீட்டை வைக்க தயங்குகின்றன. அம்பேத்கர் மார்க்ஸ் தொடரும் உரையாடல் என்கிற பெயரில் வைக்கப்படும் ”உரையாடல்கள்” குறித்த திறனாய்வு என்ன?

 இவற்றை பற்றி கேள்வி கேட்டாலே எங்களை வசைபாடுவதும், சாதிய முத்திரை குத்துவதும், ஆபாசமாக கமெண்ட் செய்வதும், வழக்கு தொடுத்து மிரட்டப் பார்ப்பதும் சரியா? குறிப்பாக கம்யூனிஸ்டுகள் இதை செய்யலாமா என்னும் கேள்வியை முதலில் அவர்களை நோக்கி எழுப்புங்கள். திறனாய்வுக்கான எதிர்வினைகள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு பாடம் நடத்துங்கள்.

 நீங்கள் ஒரு கம்யூனிஸ்டே இல்லை என்று முகநூல் டி.என்.ஏ டெஸ்டிங் லேப் நடத்துவதற்கு பதில் மார்க்சியக் கண்ணோட்டத்தில் சாதியப் பிரச்சினையை எப்படி அணுகுவது! பெரியார், அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர் உள்ளிட்ட முன்வைக்கப்படும் சாதி ஒழிப்பு “ஐகான்கள்” பற்றிய திறனாய்வையும் செய்யலாம்.

 இதை செய்யாதவர்களுக்கு எங்களை கேள்வி கேட்க எந்த அதிகாரமும் இல்லை! பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கில்லை!

 

Oct 24, 2020

தேனி மாவட்ட தமுஎகச குறித்து


இன்றைக்கு இந்துத்துவ கும்பல் தோழர் திருமாவளவனுக்கு என்ன செய்கிறதோ அதைத்தான் ‘தலித்தியவாதிகள்’ சிலர் எங்களுக்கு 4 வருடங்களாக செய்து வருகின்றனர். பா.ஜ.க கல்யாணுக்கு நிகராக ஆபாசமாகப் பேசியுள்ளனர்!

 தமுஎகச, சிபிஎம் போன்ற ‘கம்யூனிஸ்ட் அமைப்புகள்’ ‘பிரபலங்கள்’ என்றால் ஒரு நிலைப்பாடு மார்க்சியத்திற்காக வாதிடும் தோழர்கள் என்றால் வேறொரு நிலைப்பாடு எடுப்பதை காலம் பதிவு செய்திருக்கிறது. எப்படி, பெரியார், அம்பேத்கர், தற்போது தோழர் திருமா உட்பட சாதிய அதிகாரத்திற்கு அடங்கமறுத்து சீறி எழுகிறார்களோ அதேபோல் அடையாள அரசியல் கும்பல்களுக்கு எதிராக, மார்க்சியத்தை வீழ்த்த நினைக்கும் சீர்குலைவு முயற்சிகளுக்கு எதிராக நாங்களும் கிளர்ந்தெழுவோம் :)

 கீழுள்ள பதிவை எழுதியவர் Vasu Mithra

தமுஎகசவின் மதிப்புறு தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு,
அன்புடன் வசுமித்ர எழுதிக்கொள்வது.....

வணக்கம்.

தமுஎகசவின் மீதும் ஆதவன் தீட்சண்யா மீதும் ஜெயமோகன் வைத்த குற்றச்சாட்டுக்களும், அவ்வமைப்பின் மதிப்புறு தலைவராக நீங்கள் எழுதியதையும், படித்தேன். உங்கள் இருவரின் கடிதங்களிலும் எனது பெயர் இருப்பதால் இந்த விளக்கத்தைக் கொடுக்க நினைக்கிறேன். ஜெயமோகனுக்கு என்னைக் கவிஞர் என்று. தெரிந்திருக்கிறது நல்ல விசயம்தான். ஆனால் தாங்களோ என்னை முன்பின் தெரியாதவன், பார்த்திராதவன் போல் வசுமித்ர ‘என்பவர்’ என்று சுட்டும்போது உங்கள் மனம் எவ்வாறு செயல்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.

தமுஎகச என் மீது வழக்குத் தொடுத்தது என்று ஜெயமோகன் கேள்விப்பட்டது தவறுதான். ஆனால் அது குறித்து நீங்கள் எழுதியது இன்னமும் சிக்கலாக மாறுகிறது. தங்கள் அமைப்பு வழக்குத் தொடுக்கவில்லை என்பதைக் கம்பீரமாக அறிவிக்கும் நீங்கள், உங்களது கட்சியின் வெகுஜன அமைப்பான தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழக்குத் தொடுத்ததை ஏன் சொல்ல தயங்குகிறீர்கள். ஏதோ ஒரு அமைப்பு தொடுத்த வழக்கு போல் ஏன் கடந்து செல்ல நினைக்கிறீர்கள். கருத்துச் சுதந்திரத்துக்கு உங்கள் கட்சியின் வெகுஜன அமைப்பு மட்டும் விதிவிலக்கா?

நீங்கள் அவ்வமைப்பில் இருந்த 25 ஆண்டுகாலமாக தமுஎகச மட்டுமல்ல, சிபிஎம் கட்சியும் யார் மீதாவது தனிப்பட்ட வழக்கை, அதுவும் வன்கொடுமை வழக்கை பதிவு செய்திருக்கிறதா என்ன? பிள்ளை கொடுத்தாள் விளை கதைக்குப் பிறகு ஆதவன் அத்தகைய மிரட்டலை எங்கும் வைத்ததில்லை என்பதை எந்த வகையில் உறுதி செய்துகொண்டீர்கள். அப்படியெனில் அந்தக் கதை மீது அவர் வைத்த வன்கொடுமை வழக்கு மிரட்டல் சரியானதுதான் என்கிற தோற்றத்தையே உங்களது கடிதத்தில் பார்க்கமுடிகிறது. அவரது விமர்சனம் குறித்து இன்றைய தினம் கூட உங்கள் விமர்சனங்களை வைக்கத் தடுப்பது எது தமுஎகசவின் மதிப்புறு தலைவர் என்கிற பதவியா?

ரங்கநாயகம்மா புத்தகம் வந்ததும் ஆதவன் தீட்சண்யா அவதூறைத் தொடங்கி வைத்தார். மார்க்ஸ் அவசியம் என்கிற நூலை பீயிக்கு ஒப்பாகச் சொன்னதுடன். கொற்றவை மீது வன்கொடுமை வழக்கு என்கிற மிரட்டலையும் மறைமுகமாக விடுத்தார். அதன்பின் அவரது வகையாறக்கள் என்னையும், கொற்றவையையும் முகநூலில் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்குக் கீழாக வசைகளாலும் ஏளனங்களாலும் எதிர்கொண்டனர். அந்த வகையறாக்கள் யார் என்று நீங்கள் கேட்டால் பெயர்களோடு, அவர்கள் வைத்த வார்த்தைகளையும் ஆதாரமாக முன்வைக்க நான் தயாராக இருக்கிறேன். தமுஎகசவின் மதிப்புறு தலைவராக நீங்கள் அந்த வார்த்தைகளுக்குப் பொறுப்பெடுத்துக் கொள்வீர்களா. அப்படி இருந்தால் சொல்லுங்கள். அத்தனை வார்த்தைகளையும் முன்வைத்தே நான் உரையாடத் தயார்.

பாரதி புத்தகாலயப் பொறுப்பாளர்கள் முதல்கொண்டு 'ஏன் வாப்பா ஒரு ரௌடி இல்லை' என்பது போன்ற வார்த்தைகளால்தான் தங்களது மார்க்சிய அறிவை முன்வைத்தார்கள். இதில் தமுஎகச போராளிகள் சிலர் ‘வக்காலி’ என்றெல்லாம் எழுதி தமுஎகசவின் அறிவை பறைசாற்றினார்கள். அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆதவன் தீட்சண்யா தனது சாதி அடையாள அரசியலைத்தான் தலித்தியம் என முன்வைப்பார். அதை அம்பேத்கரியமாக சித்தரித்து, அதனடிப்படையில் எவரின் மீதும் வசைகளையும் அவதூறுகளையும் எழுதுவார். வன்கொடுமை வழக்கு போட்டுவிடுவோம் என்கிற பயத்தில்தான் கொற்றவை கவனமாக எழுதியதாக சித்தரிக்கும் அளவுக்கு அவரது சாதிய வன்மம் தலைகாட்டியிருக்கிறது. இது கிட்டத்தட்ட வன்கொடுமை வழக்கை வைத்து மிரட்டுவோம் என்கிற மறைமுக மிரட்டலன்றி வேறென்ன. மார்க்ஸை முன்வைத்து அம்பேத்கரை விமர்சித்ததை, சாதியப் புரிதலின் அடிப்படையில் அவர் திரித்துப் பேசியதை எல்லாம் தாங்கள் அறியவில்லையா என்ன?

பிள்ளை கொடுத்தாள் விளை கதையில் ஆதவன் தீட்சண்யா போன்றவர்களின் பார்வையை முன்வைத்துத்தான் ரவிக்குமார் “தலித்துக்களுக்கு இலக்கியத்தை புரிந்துகொள்ளும் அறிவு கிடையாது, அவர்கள் சாதியைச் சொல்லி ‘பிளாக் மெயில்’ செய்யக் கூடியவர்கள்” என்பது போன்ற தவறான கருத்துக்கள் வலுப்படவே வழிவகுக்கும். அது நிச்சயமாக தலித்துகளுக்கு உதவக்கூடியதல்ல.” என்று எழுதினார். ஆனால் ஆதவன் தீட்சண்யா அதை இன்னமும் செய்து கொண்டுதான் இருக்கிறார். ரங்கநாயகம்மா நூல் விசயத்தில் கொற்றவை நோக்கி அவர் வைத்த கருத்தும் அதுதான். ஆதவன் அப்படிப் பேசியதில்லை என்று உறுதியாகக் கூறும் நீங்களே இதற்கும் விளக்கம் அளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வளவு ஏன்? மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழுவில் பார்ப்பனர்கள் அதிகம் உள்ளார்கள் என்பதெல்லாம் கூட பொதுவெளியில் அவர் வைத்த விமர்சனங்கள்தான். இதனடிப்படையில் சிபிஎம் கட்சி பார்ப்பனக் கட்சி என்ற அவதூறுக்கு வலுச் சேர்க்கிறது. இதற்குக் கூட நீங்கள் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. தமுஎகசவில் இருப்பதால் ஒரு மார்க்சிஸ்ட் கட்சியை சாதிக் கட்சி எனச் சித்தரிக்கும் அவதூறுகளையெல்லாம் நீங்கள் ஏன் கடந்து செல்ல விளைகிறீர்கள் என்பதும் புரியவில்லை. தமுஎகசவை ஜெயமோகன் குறைச் சொல்லும்போது மட்டும் மதிப்புறு தலைவராக முன் வருகிறீர்களே ஏன்?

மேலாக ஜெயமோகனுக்கு கடிதம் எழுதியவர் தேனியில் நடந்த கூட்டத்தில் எஸ்வி.ராஜதுரையை நான் அவதூறு செய்ததாக தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். அப்படி அவதூறு செய்தால் ராஜதுரை சும்மா இருப்பாரா என்று அவரையே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். கூட்டத்தில் நான் பேசியதற்கு வீடியோ ஆதாரம் எனது முகநூல் பக்கத்திலேயே உள்ளது. ராஜதுரையை மார்க்சிய அறிஞர் இல்லை எனச் சொல்வது தமுஎகசவுக்கு அவதூறாகத் தெரிந்தால் அது அவர்களது மார்க்சிய அறிவு அவ்வளவே. அவதூறுக்கும், வசைக்கும், அறிவார்ந்த விமர்சனத்துக்கும் தமுஎகசவில் இடமில்லை என்பதை அந்தக் கூட்டத்திலேயே உணர்ந்துகொண்டேன்.

இவ்வளவு ஏன், ராஜதுரை முன்னிலையில் நான் வைத்த விமர்சனத்தை அதே மேடையில் ராஜதுரை திரித்துத்தான் பேசினார். ‘ராஜதுரை மார்க்சிய அறிஞர் அல்ல’ என்ற எனது விமர்சனத்தை ‘நான் ராஜதுரையை மார்க்சிஸ்ட் அல்ல என்று சொன்னதாக தனது மனம் போக்கில் பேசினார். விளைவு ஆதவனது வகையாறாக்கள் முகநூலில் என் மீதும் கொற்றவை மீதும் வசைகளை வைத்தனர்.

மேடையிலையே என்னை மனநோயாளி என்றெல்லாம் பேசும் ஆதவன் தீட்சண்யா தமுஎகசவின் தலைவர் பொறுப்பில் இருப்பதால் அவை ஆய்வு வார்த்தைகள் என்று மதிக்கப்படுமா? இதுகுறித்து தாங்கள் இன்று வரை பேசியதே இல்லையே ஏன்? இப்பொழுதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போட்ட வழக்கை தமுஎகச போட்டது என்று ஜெயமோகன் எழுதியதும், ஆகா! கிடைத்தது ஒரு பாயிண்ட் என்றுதான் எழுத வந்திருக்கிறீர்களே தவிர இதுவரை ஆதவன் தீட்சண்யா வைத்த அவதூறுகளுக்கும், வசைகளுக்கும் நீங்கள் எந்த இடத்திலும் பதில் சொல்லியதில்லை. உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் எது சொன்னாலும் வேதவாக்கு என்று நம்புவதெல்லாம் எதன் அடிப்படையில்?

சம்பந்தப்பட்ட தேனிக் கூட்டத்தில், நீங்கள் என்னிடம் சொன்னது ‘தம்பி இங்க உன் கருத்துக்கும் சப்போர்ட் இருக்குப்பா நீ சொன்ன கருத்தைத்தான் தி.சு.நடராசனும் சொன்னார் என்று என்னிடம் சொன்னீர்களே. அப்படியென்றால் தோழர் நடராசன் ராஜதுரை மீது வைத்தது அவதூறா? தோழர் தி.சு.நடராஜனிடம் இதைக் குறித்து நான் பேசினேன்.

எல்லாம் போக கூட்டம் முடிந்து அவர் வெளியே வந்த போது கூட ராஜதுரையிடம் நான் பல விசயங்கள் குறித்துப் பேசினேன். அவரை அவதூறு செய்திருந்தால் அத்தகைய உரையாடல் எங்களுக்குள் சாத்தியமாயிருக்காது. எனக்கு அவர் முத்தமும் கொடுத்திருக்க மாட்டார். அந்த முத்தமும் அவதூறு முத்தமாகத்தான் ஆதவனது வகையாறாக்களால் ஏசப்பட்டது.

கூட்டம் முடிந்தபின் தோழர் சீருடையானிடம் கூட பேசினேன். ராஜதுரையை எந்தவகையில் மார்க்சிய அறிஞர் என்று அழைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் செம்மலரின் ஒரு கட்டுரை படித்தேன் அதன் மூலம் அவரை மார்க்சிய அறிஞர் என்று சொன்னோம் என்றார். அதே செம்மலரில்தானே தோழர் தோதாத்ரி அவரை திரிபுவாதி என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் என்று கூற அதற்குப் பதில் அவரிடம் எதுவும் இல்லை. இதற்கெல்லாம் மேலாக கூட்டம் தொடங்கும் முன்பாகவே எனது கேள்விகளைக் குறித்து தோழர் சு.வெங்கடேசனிடம் சொன்னேன். அவரும் பேசுங்கள் என்றார். ஆனால் ராஜதுரையை லோக குருவாக நினைத்து அந்த மண்டபத்தில் ஆதவன் தீட்சண்யா செய்த ஆர்ப்பாட்டங்களை நீங்கள் பார்க்கவில்லையா என்ன? ஆதவன் மேடையில் ரங்கநாயகம்மா குறித்தும் என்னைக் குறித்தும் பேசியபோது, பேசுனதையே எதுக்குப்பா பேசிக்கிட்டு என்று நீங்கள் அங்கு எரிச்சல் அடைந்ததாக சக தோழர்களும் சொன்னார்கள்.

ஆதவன் தீட்சண்யா சாதி அடையாள அரசியலையே தனது முற்போக்கு முகமாக காட்டுபவர். அவரது எழுத்துக்களை வாசிக்கும் யாரும் இதை உணர்ந்து கொள்ள முடியும். நீங்கள் இலக்கியவாதி வேறு. “அடித்தால் திருப்பியடி என்ற ஆவேச முழக்கமெல்லாம் சுவற்றில் எழுதப்படும் வெற்று வாசகங்களாக தேய்ந்து தலித்துகள் எப்போதுதான் சுயமரியாதையோடு வாழத்தொடங்குவது என்பது பற்றி மீசையை முறுக்கி போஸ் கொடுப்பதிலேயே பொழுதைக் கழிக்கும் பிற தலித் தலைவர்கள்” என்றெல்லாம் எழுதுவது அவரது வாடிக்கை. இது ஒரு உதாரணத்துக்குத்தான். அவரது சாதி அடையாள அரசியலின் வார்த்தைகளையும் வசவுகளையும் தொகுத்தால் அதுவே தனித் தொகுப்பாக மாறும்.

தீண்டமை ஒழிப்பு முன்னணி குறித்து உங்களுக்கு தெரியாதென்றே எடுத்துக்கொண்டு இந்தக் கடிதத்தின் வாயிலாக ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். கருத்துச் சுதந்திரம் குறித்தான வரையறைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனது வார்த்தைகளைத் திரித்து என்னை மிரட்டுவதற்காக தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்கிற ஒரு அமைப்பே என் மேல் சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் என்னைக் கைது செய்யுமாறு புகார் தொடுத்தது ஏன்? வழக்கிற்கான முகாந்திரமாக நான் என்ன சொல்லி உள்ளேன் அவர்கள் என்னவிதமாகத் திரித்துள்ளனர் என்பதை உங்கள் அமைப்பில் உள்ளவர்களோடு கேட்டு நீங்கள் விவாதிக்கத் தயாரா?

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்பான கலை இலக்கியப் பெருமன்றம் அவ்வழக்குக்கு எதிரான தங்களது கருத்தை முன்வைத்ததையும் நீங்கள் அறியவில்லை அப்படித்தானே? உங்கள் கருத்துச் சுதந்திரம் பெருமாள் முருகனோடு முடிந்து விட்டது என்றால் அது உங்கள் கருத்துச் சுதந்திரம். எனக்கு அப்படி அல்ல.

அம்பேத்கரும் அவரது தம்மமும் நூல் வெளியான ஓரிரு நாட்களிலேயே எனக்கு முகநூலில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அது குறித்தான எதிர்வினையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் முன்வைத்தும் பேசியது.

மிரட்டல்களுக்கு இணையான வசைகளையும், அவதூறுகளையும் ஆதவன் தீட்சண்யா வகையறாக்கள் வைத்திருக்கிறார்கள். அதற்கும் மேலாக என் மீது, சிபிஎம்மின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி எனது கருத்தையே திரித்து வன்கொடுமை வழக்குச் சட்டத்தின் மூலமாக என்னைக் கைது செய்யத் துடிக்கிறது. கருத்துச் சுதந்திரமென்றால் என்ன என்று நீங்கள் பொதுவெளியில் மற்றவர்களுக்கு வகுப்பு எடுக்கும் முன் தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்.

என் மீதான தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வழக்கை எதிர்கொள்வதற்கான அறிவை எனக்கு மார்க்சியம் வழங்கியுள்ளது. அதை எதிர்கொள்வேன். அதே சமயம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என் மீது போட்ட வழக்கு குறித்தான உங்களது கருத்துச் சுதந்திர வியாக்கியானங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். அவ்வளவே.

சிறுகுறிப்பு;

ஆதவன் தீட்சண்யா வகையாறா என்பது தவறாக இருந்தால் எஸ்.வி.ராஜதுரை வகையறாக்கள் என்றுகூடப் புரிந்துகொள்ளலாம். ஏனெனில் எஸ்.வி.இராஜதுரை ‘ சிபிஎம் கட்சியின் தேசியச் செயலாளரான, பிரகாஷ் காரட்டுக்கு அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதெனச் சொல்லியவர். பாரதிய ஜனதாவுக்கும், சிபிஎம்முக்கும் வேறுபாடுகள் இல்லை எனச் சொன்னவர். அனைத்திற்கும் மேலாக அம்பேத்கருக்கு ஏபிசிடி மார்க்சியம்தான் தெரியும் என்றவர். அதற்கு இன்றுவரை சிபிஎம் எந்தப் பதிலும், விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால், உங்களது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவருக்கு தேனி மாவட்டத்தில் மார்க்சிய அறிஞர் பட்டம் கொடுத்தது. இது குறித்து சிபிஎம் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளராக இருந்த தோழர் ராமகிருஷ்ணனுக்கு பகிரங்கமாக கடிதம் கூட எழுதியுள்ளேன். அதையும் அறிந்திருக்க மாட்டீர்கள். இணைப்பைத் தந்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

https://makalneya.blogspot.com/2017/10/blog-post_29.html?m=0

மேலதிக குறிப்பு:

தேனி மாவட்ட தமுஎகச குறித்து அதன் மதிப்புறு தலைவராக இருக்கும் உங்களை விட நான் கொஞ்சம் நன்கறிவேன் என்பதைப் பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன்.

தேனி மாவட்ட தமுஎகசவில் தலைவர்களாக, செயலாளர்களாக, உறுப்பினர்களாக இருப்பவர்கள், இருந்தவர்களில் பெரும்பாலோர் அவரவர்கள் சார்ந்த சாதிச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நீங்களோ முற்போக்கு என்ற பெயரில் சாதியை ஒழிப்போம் என்பதை அமைப்பின் விதியாக வைக்க, உங்களது உறுப்பினர்களோ அதை வெற்றுக்கோஷமாக புன்னகையுடன் கடந்து செல்கிறார்கள்.

தேனி மாவட்ட தமுஎகசவின் இலக்கியப் பெருந்தூண்களாக நீங்கள் கருதும் தோழர்! ம.காமுத்துரை உட்பட சாதிச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவ்வளவு ஏன்? தேனி மாவட்ட சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கூட சாதிச் சங்க உறுப்பினராக இருக்கிறார். இது தகவல் அல்ல. உண்மையை உள்ளபடியே இலக்கியவாதிக்குரிய மனநிலையோடு காமுத்துரைதான் தெரியப்படுத்தினார்.

சாதிச் சங்கத்தில் உறுப்பினராக இருப்பது குறித்து அவரது மனம் குற்றவுணர்ச்சி கொள்கிறது. அத்தகைய குற்றவுணர்ச்சிக்கும், சாதிச் சங்கத்தில் இருப்பது அவமானம் என்பதற்குமான அந்த குற்றவுணர்ச்சியை மிக மோசமாக வளர்த்துவிட்டது அடியேன்தான். அதை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். சாதிச் சங்கத்தில் இருந்துகொண்டே தமுஎகசவை வளர்க்கும் நபர்களின் நீண்ட பட்டியல் வெளிவரும். அதில் உங்கள் அமைப்பின் விருதுபெற்றவர்கள் கூட இருக்கலாம்.

‘அடைவதற்கோர் பொன்னுலகம் இருக்கிறது’ என்ற மார்க்சின் வார்த்தைகள், தேனி மாவட்ட தமுஎகசவைப் பொறுத்தவரை ‘அடைவதற்கோர் சாதிச் சங்கம் இருக்கிறது’ என்பதாகத்தான் இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் எப்படியோ? நீங்களோ, தீண்டாமை ஒழிப்பு முன்னணியோ, அல்லது சிபிஎம் கட்சியோ இதை உடனடியாக கவனத்தில் கொண்டு, பேரிடர் பணியாக கருதி இதை முடித்து வையுங்கள். மத அமைப்புகளிலும் உங்களது உறுப்பினர்கள் இருக்கலாம். கவனியுங்கள்.

தமுஎகசவின் முற்போக்குப் போர் எப்பவும் முன்னணியில் நிற்க வேண்டும். அதன் இலக்கிய வளம்! தமிழகத்துக்கு அவசியம். அன்றாடத் தேவைகளில் ஒன்று. இதுநாள் வரை இலக்கியத்தில் அது ஆற்றிய பணிகளை இது போன்ற செயல்கள் பின்னுக்கு இழுத்துவிடக் கூடாது என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமுஎகச வாழ்க! வளர்க! தமுஎகச நாமம் வாழ்க.

சாதியை ஒழிப்போம், தீண்டாமையை ஒழிப்போம் என்ற கோஷங்களுக்கு, குறைந்தபட்ச முன்நிபந்தனை சாதிச் சங்கத்தில் இருந்து வெளியேறுவதே. செய்யுமா தமுஎகச? செய்யுமா தீண்டாமை ஒழிப்பு முன்னணி? செய்வீர்களா தமுஎகசவின் மதிப்புறு தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களே...செய்வீர்களா!

பிரியத்திற்குரிய தம்பியும் தோழனுமாகிய
வசுமித்ர

 

 

Oct 29, 2017

அமைப்பதிகாரம்



தோழர்களே,

ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினை நூல் வந்த நாள் முதல், இடதுசாரிகள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பிரிவினரின் தாக்குதல்கள் ஆர்.எஸ்.எஸ். ஒடுக்குமுறையை விடவும், ஆபாசமானப் பேச்சைவிடவும் மிகவும் பயங்கரமானதாக இருக்கிறது. ஆதவன் தீட்சன்யா, கருப்பு கருணா, முகமது சிராஜுதீன், சம்சுதீன் ஹீரா, பெரோஸ் பாபு (ஆதரவாளர்) என்று தொடங்கிய இந்த கும்பல் தாக்குதல்களை செய்தவர்கள் சிபிஎம் - தமுஎகச என்று அறிய முடிந்தது.

அமைப்பின் அதிகாரத்திலிருந்து இவர்கள் கேவலமானப் பேச்சுக்களை பேசியும் முகநூலில் எழுதியும் வந்தார்கள். தேனியில் நடந்த  கூட்டத்தில் பேசவிடாமல் வெளியேற்றப்பட்டு வசுமித்ர - வை ஒரு ரவுடி போல் சித்தரித்து தள்ளிவிட்டார்கள்.

இதெல்லாம் குறித்து நாங்கள் பதிவு செய்து வந்தோம். அவ்வப்போது பகடி செய்து பதில்கள் அளித்து வந்தோம். அவர்கள் பாணியில். ஆனால் அறிவுபூர்வமாக எங்களை எதிர்கொள்ள முடியாத இவர்கள் முகநூல் எங்கிலும் ஒரு கும்பலாக சேர்த்துக்கொண்டு எங்களுக்கு சாதி முத்திரை குத்தும் வேலைகளை செய்துவந்தனர்... வருகின்றனர். குறிப்பாக வசுமித்ர யாரிடமாவது உரையாடினாலோ அல்லது எங்களின் நண்பர்கள் ஏதேனும் பதிவெழுதினாலோ அங்கு சென்று "தேவர் ஜெயந்தி 30 ஆம் நீதி என்பது", "பசுமித்ரா, குசுமித்ரா" என்றெல்லாம் தரம் கெட்ட  முறையில் வம்பிழுப்பது போல் எழுதி மன உளைச்சலை எற்படுத்தி வந்தார்கள்.

பலமுறை கண்டும் காணாமலும் இருந்த நாங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் பாணியில் 'தரமிறங்கி' பதிலடி கொடுக்கத் தொடங்கினோம். ஏனென்றால் நாங்கள் தனி நபர்கள். எங்களை நாங்கள் தான் தற்காத்துக் கொள்ள வேண்டும். அவர்களை காக்க 'அமைப்பாகத் திரண்டு' மார்க்சியத்தைக் காக்கும் 'பலம்' அவர்களுக்கு இருக்கிறது.

பொதுவாக இது போன்ற சில்லறை அவதூறுகளுக்கு பதில் சொல்லாமல் நான் விலகியே இருந்துளேன். அல்லது தொகுத்து நூலாக  பதிலடி கொடுத்துள்ளேன். இம்முறை முகநூலில் பதிலடி கொடுக்கும் அவசியம் ஏற்பட்டது, ஏனெனில் இந்துத்துவத்தை கடுமையாக, குறிப்பாக தேவருக்கு தங்க கவசம் வழங்கிய நிகழ்வை விமர்சித்து எழுதிக்கொண்டிருக்கையில், சிராஜுதீன் என்பவர் கார்த்திக் மேகா பக்கத்தில் மீண்டும் பசுமித்ரா, குசிக்குமார் என்று ஆபாசமாகப் பதிவெழுதினார் .

பொறுமைக்கும் ஊர் எல்லை உண்டு!

இவர், தான் அமைப்பில் வேலை செய்வதை தியாகத்திற்கு  இணையாகவும், புரடசிகரப் பனி எனவும், வசு  மானங்கெட்ட பிழைப்பு பிழைக்கிறார் என்றும் எழுதியவர். இதற்கு பதில் கொடுத்த போது சின்னையா காசி என்பவர் மிகவும் ஆபாசமாகப் பேசினார். சரளமாக ஒருமையில் தான் இவர்கள் பேசுவார்கள். இதுதான் இவர்கள் கற்ற மார்க்சியம்.

தனி நபர் கருத்து என்பார்கள் ஆனால் நாங்கள் பதிலடி கொடுத்தால் அமைப்பாக திரண்டு ஆபாசமாகப் பேசுவதுடன் மிரட்டலும் விடுவார்கள். எல்லாவற்றுக்கும் முகநூலில் ஆதாரம் உண்டு.

நேற்றும் இதே தான் நடந்தது. நெல்சன் பாபு என்பவர் இம்முறை களம்  இறங்கினார்.மிக ஆபாசமாக பேசவும் தொடங்கினார். அதை முன்வைத்து, விமர்சனப் பண்பை வளர்க்கத்  தெரியாத சிபிஎம், எப்படி மார்க்சியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்று தொடங்கி, சாதி ஒழிப்பில் பின்னடைவு - சிபிஎம் போன்ற அமைப்பில் உள்ள அடையாள அரசியல் என்று நான் பதிவிடத் தொடங்கினேன்.

தொடக்கத்தில்  நாங்கள் நடந்ததை சொல்லி முறையிட்டோம். ஒவ்வொரு முறையும் அமைப்பைக் காட்டி மிரட்டுவதால் அமைப்பிடம் கேள்வி கேட்கிறோம், உண்மையில் ஒரு பண்புள்ள அமைப்பானது எங்களை அழைத்தோ அல்லது அலுவலகம் வாருங்கள் பேசுவோம் என்று சொல்வதுதான் தார்மீகம். ஆனால் அதற்குள் நெல்சன் பாபு என்பவர் தாக்குதலைத் தொடங்கினர். இனியும் அமைதியாக சென்றால் அமைப்பின் அதிகாரம் ஓங்கிவிடும் என்பதால் நாங்களும் அவர்களின் 'தரத்திற்க்கு' இறங்கினோம்.

கொற்றவை பெண் தோழர் அவரை விட்டுவிடுவோம் என்னும் 'சமத்துவ' கருத்துக்களை உதிர்த்த அவர் வழக்கம் போல் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலி , உளவாளி என்று தொடங்கி அரிக்குதா, வா பார்க்கலாம்,உங்க அப்பனையெல்லாம் பார்த்தவங்க என்று தொடர்ந்தார். அவரின் ஒவ்வொரு வசைக்கும், நான் சி.பி.எம்மின் வரலாற்று துரோகங்களை முன் வைத்து கேள்வி கேட்கத் தொடங்கினேன். ஏனென்றால் இவர்கள் அமைப்பாகத் திரண்டும் அமைப்பின் பெயரைச் சொல்லியும் தானே மிரட்டுகிறார்கள். அதுமட்டுமின்றி தொடர்ந்து இந்த அவதூறுகளை செய்து எங்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்.

பொதுவெளியில் எப்படி உரையாடவேண்டும், விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்னும் பண்புகளை, வழிகாட்டுதலை செய்யும் பொறுப்பு அமைப்பிற்கு உள்ளதா இல்லையா என்பதே என் கேள்வி. இதற்கு முன்பே  அமைப்பில் உள்ளவர்களிடம் கடிதம் வாயிலாக முறையிட்டோம், பதிலுக்கு அவர்கள் கேவலத்தை உதிர்த்ததைத் தவிர வேறேதும் செய்யவில்லை. அவர்கள் அமைப்பினர் பேசினால் தனிநபர் கருத்தென்பதும் அவர்களை நாங்கள் பேசினால் அமைப்பாகத் திரண்டு ஆபாசத் தாக்குதல் தொடுப்பதும்  ஒடுக்குமுறை இல்லையா?. இவர்கள் தான் நடிகர் விஜய்க்காக கருத்து சுதந்திரம் என்று போராடுபவர்கள்.

தோழர்களே, நான் இடது களத்திற்கு வந்த நாள் முதல் 'இடது ஒடுக்குமுறையை' கடுமையாக எதிர்கொண்டுள்ளேன். ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டதாலேயே என்னைப் பற்றிய முன் முடிவுகளுக்கு வந்து, தொடக்கத்தில் ஒரு புரட்சிகர அமைப்பு தாக்குதல் தொடுத்தது. ஆரம்பத்தில் நான் மிகுந்த வேகத்தோடு செயல்பட்டேன், ஆனால் எனக்கு சோர்வை ஏற்படுத்தி தனிமைப்படுத்தி விலக்கச்  செய்தவர்கள் இடதின் பெயரால் இயங்கும் ஒரு சில தோழர்களும், அமைப்பும் தான். ஒரு நிகழ்ச்சியில் தோழர்கள் எனக்களித்தப் பணியை செய்துகொண்டு இருந்தேன். மேடையில் தொகுத்தளிக்கும் வேலை, "இவங்களை எல்லாம் ஏங்க மேடை ஏத்துறீங்க, நம்ம அமைப்புலருந்து யாரையாவது ஏத்துங்க, இவங்கல்லாம் விளம்பரம் தேடுறவங்க" என்று பேசினார்.ஒரு 'தோழர்'. இது போல் பல சம்பவம் "பாப்பாத்தியோட சேர்ந்து சொந்த சாதியை காட்டிக்கொடுக்குறீங்களா".... வசு முரடன், சாதி வெறி பிடித்தவன், ரவுடி இப்படியாக.. எங்கள் தனிப்பட்ட வாழவை 'இலக்கியவாதிகள்' எழுதி மன உச்சம் அடைந்தனர். அதிலும் விளம்பரம் தேடவே என் மக்களைக் கூட விட்டு விட்டு வந்ததாக எழுதினார்கள். இவர்கள் 'தலித்திய, முற்போக்காளர்கள்....

இதையெல்லாம் கண்டு நான் மேலும் ஒதுங்கி நின்றேன். நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க மறுத்தேன். தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என எது வந்தாலும் (அவர்களின் வியாபார நோக்கமும் ஒரு காரணம்).

இந்துத்துவவாதிகள், அரசியல் கட்சிகள் , தலித்திய நம்பிக்கை உடைய தோழர்களைக் காட்டிலும் இந்த இடதுசாரி நபர்களின் வன்மமும், பண்பும், மிரட்டலும் தான் எனக்கு வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளது. மேற்சொன்னவர்கள் கூட எங்களிடம் இவ்வளவு ஆபாசமாகவும், வன்மத்தோடும் உரையாடியதில்லை. ஆனால் இந்த சி.பி.எம் நபர்கள், ஒரு சில புரட்சிகரக் கட்சிகளில் உள்ள 'தோழர்கள்' செய்யும் இந்த அராஜகத்தைக் கண்டிக்க இங்கு மற்ற அமைப்புகளுக்கு விருப்பமில்லை என்பது விளங்கி விட்டது. ஒரே காரணம் நாங்கள் அமைப்பில் இல்லை.

தோழர்களே இங்கு இதுதான் அமைப்பின் வாயிலாக நாம் அடையக்கூடிய நன்மை என்றால் மன்னித்து விடுங்கள் நாங்கள் விலகியே  இருக்கிறோம்.

இதுவரை நான் முகநூலில் இருந்து விலகியது, எழுத்திலிருந்து விலகப் போகிறேன் என்று அறிவித்தது என்று எல்லாவற்றிற்கும் காரணம் சி.பி.எம் நபர்கள்... ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் பேசுவதாகக் சொல்லி அடையாள அரசியலை முன்னெடுக்கும் ஒரு சில இடதுசாரி ஆதரவாளர்கள், எழுத்தாளர்களே.

வலதுசாரிகள் அச்சுறுத்தல்கள் என்னை ஒரு போதும் அசைத்ததில்லை... ஆனால் இடதுசாரிகளாக கும்பலாக சேர்ந்துக்கொண்டு ஒரு சிலர் செய்யும் தாக்குதல்களும், ஒடுக்குமுறையும், கொடுக்கும் பட்டங்களும் , மொழியும் மனம் வெறுக்கக் செய்து விட்டது..... அறிவு அகந்தை, அமைப்பு அதிகாரம், வரட்டுத் தனமான வாதங்கள், முன் முடிவுகளோடு முத்திரை குத்துதல் இதைத்தவிர இந்த 7 வருடங்களில் இந்தப் பிரிவினர் மத்தியில் நான் ஆரோக்கியமாக எதையும் காணவில்லை....


வாழ்க கருத்துக் சுதந்திரம்.... எங்களுக்கான உரிமைகளைத்தவிர.......