Feb 13, 2017

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும் - நூலிலிருந்து.....



அறிவியல் என்பது உறுதியான உண்மையையும், இலக்கையும் கொண்டது. உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தம் பற்றிய நுண்ணிய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்பொழுது, இந்தியா என்பது ஒரு பின்தங்கிய முதலாளித்துவ நாடு என்பதும் இங்கு, ஏகாதிபத்தியம்-நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவத்துக்கு முந்தைய எச்சசொச்சங்கள் என அனைத்தையும் ஒழித்துடுவதற்கான சோஷலிசப் புரட்சிக்குத் தயார் செய்யும் தொடக்க காலத்திலிருந்தே சாதியமைப்பு ஒழிப்பிற்கான செயல்திட்டத்தையும் முன்வைக்க வேண்டும், உடனடி நடவடிக்கைகள், நீண்டகால நடவடிக்கைகள் என வகுக்கவேண்டும் என்பதும் எங்களது தெளிவான நம்பிக்கை. சாதி என்பது நிலக்கிழாரிய எச்சம் மட்டும் கிடையாது. முதலாளித்துவமானது, தன்னுடைய நலனை மேலும் வளர்த்தெடுப்பதற்காக தன் அமைப்போடு அது சாதியை வெளிப்படுத்துகிறது. இது ஒரு முதலாளித்துவ சாதியமைப்பாகும். அது பொருளாதார அடித்தளத்தோடு (உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தம்)உயிர்ப்புடன் (ஆர்கானிக்கலி) பின்னிப் பிணைந்துள்ளது மேலும் கருத்தியல்-அரசியல்-சமூக மேற்கட்டுமாமனத்தில் அதன் திறன்வாய்ந்த இருப்பானது கட்டுக்கோப்பாக உள்ளது.
கட்டுரையின் நீளம் கருதி எங்களது நிலைப்பாடு குறித்து தற்போது நாங்கள் சுருக்கமாக மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இருப்பினும், ஒரு நீடித்த, பொருளார்ந்த விவாதத்தைப் புதிதாகத் தொடங்குவதற்கு இது போதுமானதாக இருக்கும். -

சாதியின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த ஒரு வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வை:

சாதியமைப்பு பற்றி முழுமையான வரலாற்றை இங்கு கொடுப்பதல்ல எங்களது நோக்கம். சாதிக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான தொடர்பு, சாதி மற்றும் வர்க்கத்திற்கு இடையிலான தொடர்பு மற்றும், சாதியமைப்பு என்பது எவ்வாறு அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் எனும் மார்க்சிய உருவகத்திற்குள் பொருந்துகிறது என்று புரிந்துகொள்ளத்தக்க வகையில் வரலாறு விவாதிக்கப்படும்.
முதலில், சாதியமைப்பின் தோற்றம் மற்றும் இந்தியாவில் மட்டும் அது குறிப்பிட்ட வடிவில் பரிணமித்துக்கொண்டே இருப்பதற்கான காரணங்கள் யாவை என்பது குறித்து உறுதியாக ஏதும் கூற முடியாது, ஏனென்றால், ஆய்வாளர்களும் அதற்கான தெளிவான காரணங்களை இதுவரை கூற முடியவில்லை. ஆதிகால அல்லது புராதனச் சமூக உழைப்புப் பிரினையானது, அதே புற ரீதியான சமூக அடித்தளத்திலிருந்து உருவான மதச் சடங்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவான சமூகச் சடங்குகள் வழியாக இந்தியாவில் சாதியமைப்பாக படிமப்பட்டுப் போனது. அதேபோல், இந்திய சாதியமைப்புக்கு ஒத்ததாக, எகிப்தில் அகமணமுறை மற்றும் அரசமரபு சார்ந்த தொழில்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு கில்ட்-அமைப்பாக இறுகியது. ஆனால், அதற்குப் பின்னால் இருந்த மதத்தின் அடிப்படையிலான சமூக அற விதிமுறைகளின் அடித்தளமானது அந்தளவுக்கு திட்டவட்ட ஒழுங்குமுறை கொண்டதாக இல்லாத காரணத்தாலும், சமூக-பொருளாதார மட்டத்தில் நிகழ்ந்த மாற்றங்களுக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் நெகிழ்வுத் தன்மை இல்லாது போனதாலும் அந்த அமைப்பு நீடித்திருக்க முடியவில்லை.
இந்தியாவில் மட்டும் சாதியமைப்பு எவ்வாறு தோன்றியது, வளர்ந்தது என்பதற்கான காரணங்களைத் தேடும் முயற்சியில் நாம் பின் வரும் சில காரணிகளைக் குறிப்பிடலாம்: வானிலை, காலநிலை, வாழ்வதற்கும், விவசாய உற்பத்திக்கும் உகந்த சூழல், வரலாறு மற்றும் அதிலிருந்து உருவாகும் உழைப்பு நடைமுறை வளர்ச்சியின் மந்தப் போக்கு, ஒப்பீட்டளவில், தொடக்கம் முதலே உழைப்புப் பிரிவினையின் வரம்புகுள் உடல் உழைப்பு மற்றும் மூளை உழைப்புக்கு இடையில் திறன்மிக்க வகையிலான உழைப்புப் பிரிவினை (மேலும் உடல் உழைப்பின் வரம்பிற்குள் மேலும் மேலும் உட்பிரிவினை) மற்றும் சமூக விதிமுறைகளை கட்டியெழுப்புவதில் அதிக ஓய்வு நேரம் கொண்டிருந்த ஒட்டுண்ணி அறிவுஜீவிகளின் (பிராமண மதகுருக்கள்) திறமை மற்றும் தொலைநோக்குப் பார்வை. ஆனால், இவைகூட ஊகங்களும், அனுமானங்களுமே ஒழிய வரலாறு கிடையாது. வரலாற்று ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு நாம் கண்டிப்பாக விவாதிக்கக்கூடியது என்னவெனில்: சாதியமைப்பு எவ்வாறு தோன்றியது, வரலாற்று மாற்றங்களுக்கு ஏற்றவகையில் அது தன்னை எவ்வாறு தகவமைத்துக்கொண்டு இன்னமும் உறுதியாக இருக்கிறது? நாமும் அதையே சுருக்கமாக விவாதிப்போம். ஏனென்றால் தற்போதைய சூழ்நிலை பற்றிய விவாதத்திற்கும், சாதியொழிப்புக்கான திட்ட வடிவமைப்பிற்கும் இது அவசியம்.
இரண்டாவது, போகிற போக்கில் மார்க்சியர்கள் மீது சுமத்தப்படும் குற்றம் என்னவெனில், மார்க்சும் எங்கெல்சும் விளக்கிய வரலாற்று சமூக வளர்ச்சியின் மூன்று கட்டங்களையும் (அடிமையுடைமை-நிலவுடைமை-முதலாளித்துவம்), ‘ஆசிய பொருள் உற்பத்தி முறை’ மற்றும் ‘தன்னிறைவு பெற்ற கிராமச் சமூகங்களின் தேக்கநிலை’ பற்றிய அவர்களது கூற்றுகளையும் அப்படியே இயந்திரத்தனமாகப் பிரயோகிக்கின்றனர் என்பதாகும். இது அப்பட்டமான அறியாமை. ஆசிய பொருளுற்பத்தி முறை பற்றிய கருத்து மற்றும் கிரேக்கம், ரோம் போன்றே இந்தியாவிலும் அடிமையுடைமை முறை நிலவியது போன்ற கருத்துகள் அரை நூற்றாண்டுக்கு முன்னரே மறுத்தலிக்கப்பட்டுவிட்டது (முதலில் கோசாம்பியால்). தற்போது நாம் அதில் காணப்படும் சிற்சில வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டால், ஏறக்குறைய மார்க்சிய வரலாற்றியலாளர்கள் அனைவரும் இதில் ஒத்த கருத்து கொண்டவர்களாகவே உள்ளனர். கிராமச் சமூகங்களின் தேக்கநிலை குறித்த கருத்திலும் இதேதான் நடந்தது. எனினும், ஏற்கனவே நிலவி வந்த இந்திய நிலவுடைமை அமைப்பில் 13ஆம் நூற்றாண்டு வாக்கில் சில மாற்றங்கள் நேர்ந்தது என்பதும், அது மார்க்ஸ் விளக்கிய ‘கீழைத்தேய கொடுங்கோன்மை’க்கு ஒத்த முறையில் இருக்கிறது என்பதும் நிறுவப்பட்ட உண்மையாகும். அதேபோல், 1850களில் இருந்த சிந்தனையோடு ஒப்பிடுகையில், 1870களில், கிராமச் சமூகங்களின் தேக்கம் மற்றும் ஓரியல்பான தன்மை குறித்து மார்க்சின் சிந்தனையோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது என்பதும் கவனத்திற்குரியது. இந்த விஷயம் குறித்து இர்ஃபான் ஹபிப் மற்றும் சுனிதி குமார் கோஷ் உள்ளிட்ட அறிஞர்களின் கட்டுரைகள் 1980களின் தசாப்தத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. இங்கு நாம் விவாதிக்க வேண்டிய தொடர்புடைய மற்றொரு கூற்றும் உள்ளது. மார்க்சிய ஆய்வுமுறை என்பது ஐரோப்பாவை மாதிரியாகக் கொண்டது, இந்திய சமூகத்தை, குறிப்பாக சாதியமைப்பை ஆய்வு செய்வதற்கு அது உதவாது என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. இது ஒரு மேலோட்டமான கண்ணோட்டமாகும். ஐரோப்பிய சமூகத்தின் இயக்கவியல் பற்றிய ஆய்விலிருந்து மார்க்சியம் தோன்றியது (முதலாளித்துவ வளர்ச்சியின் செவ்வியல் மாதிரி) மேலும், ஜெர்மன் தத்துவம், பிரிட்டிஷ் அரசியல் பொருளாதாரம் மற்றும் ஃப்ரெஞ்சு சோஷலிசம் ஆகியவை அதன் முக்கிய ஆதாரமாக இருந்தது.
ஆனால், #மார்க்ஸ் மற்றும் #எங்கெல்சின் பொது நோக்குநிலையானது ஒட்டுமொத்த உலகிற்குமானதாகவே இருந்தது. வரலாற்று வளர்ச்சியினை பொதுமைப்படுத்துவதிலிருந்து பெறப்பட்ட இயங்கியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஆகியவை வாழ்வை, இயற்கையை ஆய்வு செய்வதற்கும், செயலூக்கத்துடன் அதில் தலையிடவும் தேவையான ஒரு உலகக் கண்ணோட்டத்தையும், வழிமுறையையும் வழங்குகிறது. இந்தக் காரணத்தினாலேயே மார்க்சியமானது, ருஷியா மற்றும் சீனா மட்டுமல்லாது லத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஆப்ரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் சமூக-பொருளாதார அமைப்புகளின் மாறுபட்ட அம்சங்களை ஆய்வு செய்யவும், வர்க்கப் போராட்ட உத்திகளை வகுத்திடவும் பயன்படுத்தப்பட்டது. இச்சூழமைவில் (கான்டெக்ஸ்ட்), மார்க்சும் எங்கெல்சும் சாதியமைப்பு பற்றி சில விளக்கங்களையும் 6,7 கருத்துரைகளையும் ஜெர்மன் சித்தாந்தம் (1845-46) படைப்பிலிருந்து மூலதனம் தொகுதி 1இல் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதும், அது #சாதியமைப்பு பற்றி புரிந்துகொள்வதற்கான முக்கியப் பார்வையை வழங்குகிறது என்பதும் கவனத்திற்குரியது. (மேலும் விளக்கங்களுக்கு, சாதியமைப்பு பற்றிய மார்க்ஸின்க ருத்துரு, பி.ஆர். பாபுஜியின் ஆய்வுக் கட்டுரையையும், ரங்கநாயகம்மாவின் சாதி குறித்து மார்க்ஸ் கட்டுரையையும் பார்க்கவும்).
(அடைப்புக் குறிக்குள் உள்ள இந்த குறிப்பு கட்டுரையாளர்களுடையது. #ரங்கநாயகமா மற்றும் #பாபுஜி கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப்பட்டிருக்கிறது )
- அர்விந்த் நினைவு அறக்கட்டளை ஆய்வுக் குழு

No comments:

Post a Comment