Feb 19, 2017

நிகழ்கால அரசியல் வெற்றிடம்


மார்க்சை முன்வைத்து சாதி என்னும் கருத்துருவை புனரமைத்தல் - பி.ஆர். பாபுஜி
(கட்டுரையின் ஒரு பகுதி)
பாட்டாளி வர்க்க அரசியல் அமைப்புகளால் மட்டுமே பாட்டாளி வர்க்க புரட்சிகர செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால், தொழிலாளர் வர்க்கத்தின் முன்னணிப்படைகள் என உரிமை கோரும் இந்தியவில் உள்ள கம்யூனிஸ்ட் அமைப்புகள் சாதி பற்றிய மார்க்ஸின் கருத்துருவாக்கத்தைப் பின்பற்றுவதில்லை. இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் சாதிய பாகுபாட்டை அப்படியே நீடித்திருக்க வகை செய்யும் நிலவுகின்ற உழைப்புப் பிரினையை அடிப்படை சார்ந்து மாற்றி அமைக்கும் புரட்சிகர செயல்திட்டமும் அவர்களிடத்தில் இல்லை. 70 வருட அமைப்பார்ந்த அனுபவங்கள் இருந்தும், ஆயிரக்கணக்கானத் தொண்டர்களின் கற்பனை செய்தும் பார்க்க முடியாத தியாகங்களுக்குப் பிறகும், பல லட்சம் கணக்கான தொழிலாளர் கூட்டத்தின் அரசியல் அனுதாபத்தைப் பெற்றிருந்தும், மார்க்சின் அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்தினை படித்தறியாத காரணத்தால் இந்த கம்யூனிஸ்ட் அமைப்புகளால் ஒரு விரிவான புரட்சிகர செயல்திட்டத்தை இன்னமும் வகுக்க முடியவில்லை. நாங்கள் இப்படி சொல்வது ‘கல்வித் திமிர்’ அல்லது ‘குட்டி பூர்ஷுவ அறிவார்ந்த அகந்தை’ என்று தோன்றலாம். இருப்பினும், இதுவே வெளிப்படையான உண்மை. 17
கம்யூனிஸ்ட் அமைப்புகளின் இன்றைய நிலைமையைக் காணும்போது, 130 வருடங்களுக்கு முன்பு ஜெர்மன் தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு எங்கெல்ஸ் (1874:170) வழங்கிய அறிவுரைதான் நினைவுக்கு வருகிறது. “இதற்கு ஒவ்வொரு போராட்டத் துறையிலும் கிளர்ச்சித் துறையிலும் இரட்டித்த முயற்சிகள் தேவைப்படும். குறிப்பாக, எல்லாத் தத்துவார்த்தப் பிரச்சினைகளிலும் மேலும் தெளிவான உட்பார்வை பெறுவதும், பழைய உலகக் கண்ணோட்டத்திலிருந்து சுவீகரித்த மரபுச் சொற்றொடர்களின் சொல்வாக்கிலிருந்து மேன்மேலும் விடுவித்துக் கொள்வதும், சோஷலிசம் ஒரு விஞ்ஞானமாக ஆகிவிட்டதால் அதை ஒரு விஞ்ஞானமாகப் பின்பற்றுவது – அதாவது, அதைப் பயில்வது-அவசியம் என்பதை இடையறாது நினைவில் கொள்வதும், தலைவர்களின் கடமையாக இருக்கும்.”18, 18அ
மார்க்ஸின் சாதி பற்றிய கருத்துருவாக்கத்தோடு போதிய பரிச்சியமில்லாத நிலையும், கம்யூனிஸ்ட் அமைப்புகளிடம் பாட்டாளி வர்க்க புரட்சிகர செயல்திட்டம் இல்லாததும் ஒரு அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக ‘சாதியப் பிரச்சினையில்’. இந்த நிலைமையின் காரணமாகவே, பலவிதமான சாதியக் கட்சிகள், குழுக்கள், சாதிய இயக்கங்கள் மற்றும் போராட்டக் குழுக்கள் தோன்றிவிட்டன. அதேபோல், ‘புரட்சிகர’ கம்யூனிஸ்ட் (நக்சலைட்) குழுக்களின் சிலத் தொண்டர்களும் ‘தலித் இயக்கங்கள்’ எனப்படும் குழுக்களில் இணைந்து விட்டனர். வட இந்தியாவில் 19 பகுஜன் சமாஜ்வாடி கட்சி (பிஎஸ்பி) மற்றும் சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) தவிர ஆந்திராவில் ‘மாலா மஹானாடு’(பட்டியல் சாதிகளில் குறிப்பிட்டதொரு உட்பிரிவு), ‘மடிகா டண்டூரா’ (பட்டியல் சாதியில் இது மற்றொரு பிரிவு), சத்யஷோஷக் சமாஜம் (இதர பிற்படுத்தப்பட்ட அறிவுஜீவிகள் அடங்கிய சிறு குழு), பகுஜன் குடியரசு கட்சி (பிஎஸ்பியிலிருந்து உடைந்த குழு) போன்ற பல சிறு சிறு ‘தலித்’ குழுக்கள் உள்ளன. இவற்றில் எந்தக் குழுவும்/அமைப்பும் சாதி ஒழிப்பிற்கு வழிவகுக்கும் விதமாக நிலவும் உழைப்புப் பிரிவினையை வேரோடு மாற்றி அமைக்கும் செயல்திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை. “உழைப்பவருக்கே நிலம் சொந்தம்!”, “ஏகாதிபத்திய மூலதனத்தைப் பறிமுதல் செய்!” என்பன போன்ற பூர்ஷுவா ஜனநாயக கோரிக்கைகளைக் கூட இவர்கள் வைப்பதில்லை. பிராமணிய/மனுவாதக் கட்சிகள் எனப்படும் கட்சிகளோடுகூட கூட்டணி வைத்து கூட்டணி அரசாங்கம் அமைப்பதிலேயே அவர்களின் வேட்கை இருக்கிறது. அல்லது சில சட்டமன்ற/பாராளுமன்ற இடங்களைப் பிடிப்பது, மற்ற உட்சாதிகள்/இணைசாதிகளைக் காட்டிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை அதிகமாகப் பெறுவது என்பதே இவர்களின் இலட்சியம். ஆனால், பலவித நவ-முற்போக்கு சொல்லாடல்கள் மூலம் இந்தியாவிற்கு மார்க்ஸ் பொருந்தமாட்டார் (அல்லது போதமாட்டார்), இந்தியாவில் ‘சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு’ சொல்வதில் மார்க்சியம் ‘தோற்றுவிட்டது’ என்று சொல்வதில் மட்டும் இவர்கள் அனைவரிடத்திலும் வியக்கத்தக்க வகையில் ஒற்றுமை காணப்படுகிறது. இந்த அரசியல் சூழமைவில், மார்க்சின் சாதி பற்றிய கருத்துருவாக்கத்தை புனரமைப்பதற்கான முக்கியத்துவமும் அவசரத் தேவையும் முன்னெப்போதையும்விட இப்போது அதிகமாக இருக்கிறது.
(தொடர்புக்கு: brbapuji@yahoo.com)

No comments:

Post a Comment