Showing posts with label krupskaya. Show all posts
Showing posts with label krupskaya. Show all posts

Aug 12, 2021

பெண் விடுதலை சிந்தனைகள்


பெண் தொழிலாளியின் நிலைமை என்பது நாடெங்கிலும் மிகவும் மோசமாகவே உள்ளது. ஆணைப் போலவே அவளும் துன்பப்படுகிறாள். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வர்க்கத்தை சார்ந்தவளாக ஆணைப் போலவே அவளும் ஓய்வின்றி உழைக்கிறாள், ஏழ்மையில் வாடுகிறாள். உழைக்கும் மகளிரும் பாட்டாளி வர்க்க அங்கமே, ஆகவே அவளுடைய நலனும் அந்த வர்க்க நலன்களோடு தொடர்புடையது.

பாட்டாளி வர்க்கம் மேலான நிலையைப் பெறும்போது உழைக்கும் மகளிரின் நிலைமைகளும் மாறும். பாட்டாளி வர்க்கம் அறியாமையிலேயே உழலும், உரிமைகளின்றி வாழும் எனில், உழைக்கும் மகளிர்க்கும் இன்றைய அதே துன்பகரமான வாழ்வே நீடிக்கும். ஆகவே பாட்டாளி வர்க்கம் மேலான வாழ்வை வென்று பெறுகிறதா இல்லையா என்பதைப் பற்றி உழைக்கும் மகளிர் கவலைகொள்ளாதிருக்கவோ பாரா முகமாக இருக்கவோ முடியாது. பாட்டாளி வர்க்க நலன் என்பது அவளுடைய சொந்த நலனும், அவசியமான நலனும் ஆகும். ஒரு ஆண் தொழிலாளியைப் போலவே பெண் தொழிலாளிக்கும் இது மிகவும் முக்கியமானது. “பாட்டாளி வர்க்க நலன்” என்றால் என்ன?

தொழிலாளர்களின் உழைப்புதான் அனைத்து செல்வங்களையும் தோற்றுவிக்கிறது, இருப்பினும் அந்த உழைப்பிற்கு ஈடாக அவர்கள் வாழ்வதற்கும் உழைப்பதற்கும் கூட தேவையான உணவு கிடைப்பதில்லை. இதைக் காணும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை நிலைமைகள் குறித்து அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். உழைப்பாளர்கள் தங்களுக்காக உழைக்கவில்லை, மாறாக பூர்ஷுவாக்கள் என்றழைக்கப்படும் ஆலை முதலாளிகளுக்காக, நிலவுடைமையாளர்களுக்காக, சுரங்கம், கடைகள் ஆகியவற்றை வைத்திருக்கும் எஜமானர்களுக்காக உழைக்கிறார்கள்.

அனைத்து சட்டங்களும் சொத்துடைமை வர்க்கத்திற்குச் சேவை செய்யவே வகுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாடும் பூர்ஷுவாக்களின் நலனுக்காகவே இயங்குகிறது. நாட்டின் சட்டதிட்டங்களை வகுப்பதிலோ, நிர்வாகத்திலோ தொழிலாளர்களுக்கு எந்தப் பங்குமில்லை. உழைப்பது ஒன்றே அவர்களின் வேலை. வரிகள் கட்ட அவர்கள் ஓயாது உழைக்க வேண்டும். தங்கள் சுயமரியாதை மடிவதைக் கண்டும் கடும் குளிர், பசி, பட்டினி போன்ற கொடுமைகளையும் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்.

இந்த நிலைமையைத் தொழிலாளர்கள் மாற்ற நினைக்கின்றனர். இனியும் அவர்களுக்கு வர்க்கங்கள் வேண்டாம், ஏழை பணக்காரன் வேற்றுமை இருக்கக் கூடாது. ஆலைகள், நிலங்கள், தொழிற்சாலைகள், பட்டறைகள் சுரங்கங்கள் போன்றைவை தனியாரின் உடைமைகளாக இன்றி ஒட்டுமொத்த சமூகத்தின் பொது உடைமையாக, அவர்களால் நிர்வகிக்கப்படுவதாக இருக்க வேண்டும். எஜமானர்கள் எப்போதும் தங்களை வளப்படுத்திக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். தங்களுக்காக உழைக்கும் தொழிலாளர்களின் உடல் நிலை, வாழ்க்கை வசதி, நலம் – வளம், குறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. உழைக்கும் மனிதனின் வாழ்க்கையை அவர்கள் எண்ணுவதில்லை, மாறாக இலாபம் ஒன்றே அவர்களின் குறிக்கோள்.

உற்பத்திக் கட்டுப்பாடுகள் தனியார் முதலாளிகளிடமிருந்து சமூகத்தின் கைகளுக்கு மாறும்போது எல்லாம் மாறிவிடும். சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் நல் வாழ்க்கை வாழ, ஒவ்வொருவரின் தேவையும் நிறைவு பெற, மகிழவும், கொண்டாடவும் தேவையான ஓய்வு நேரம் கிடைக்க, மனிதர்கள் அனுபவிக்க வேண்டிய அனைத்து விதமான இன்பங்களும் கிடைத்திட அச்சமூகம் வழிவகுக்கும். தங்களுக்குத் தேவையான சரக்கு இருக்காதோ என்று தொழிலாளர்கள் அப்போது அச்சம் கொள்ள வேண்டியிருக்காது.

இயந்திரங்களின் வரவால் மனித உழைப்புத் திறன் அதிகரித்துள்ளது. அதன் விளைவாக புதிய விவசாய முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு, மண் வளம் அதிகரித்துள்ளது. ஆகவே அதுகுறித்து யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. எல்லோருக்கும் போதுமான அளவு சரக்குகள் இருக்கும். இன்றைய நிலையில் மக்கள் ஏழ்மையில் வாட, போதிய உணவு தானியங்கள் இல்லை, உடை இல்லை என்பதல்ல காரணம். அத்தனை தானியங்களும் வாங்குபவரை எதிர்நோக்கி ரயில் நிலையங்களில், கிடங்குகளில் அழுகிக் கிடக்கின்றன. மறுபுறம் தொழிலாளர்கள் பட்டினியில் வாடி இறக்கின்றனர். ஒரு தொழிற்சாலை முதலாளியின் சேமிப்புக் கிடங்கு விற்பனையாகாத சரக்குகளின் குவியலால் வெடித்துவிடும் போல் உள்ளது. ஆனால் அவனது தொழிற்சாலை வாசலில், சாக்குத் துணி அணிந்தபடி தொழிலாளர்கள் வேலை கேட்டு காத்துக்கிடக்கின்றனர்.

உற்பத்தியானது சமூகத்தால் நிர்வகிக்கப்படும் போது, அனைவரும் உழைத்தே வாழ வேண்டும். ஆனால் இன்றுள்ளது போல் உழைப்பது அவ்வளவு கடினமானதாக இருக்காது. உழைக்கும் இடத்தில் நிலவும் வெறுக்கத்தக்க சூழல் இலகுவாக்கப்படும். காற்றோட்டமில்லாமல், நாறும், நோய்த் தொற்றுங்கள் ஏற்படும் தொழிற்சாலைகள் போலின்றி, நன்கு ஒளியூட்டப்பட்ட, தாராளமான இடம் நிரம்பிய, உலர்ந்த, காற்றோட்டமுள்ள கட்டிடங்களாக அது மாற்றப்படும். இன்றைக்குப் போல் நீடித்த பணி நேரமிருக்காது. ஏனென்றால், இன்றைக்குப் போல் கர்ப்பிணிகள், குழந்தைகள், உழைப்பாளிகள் மட்டும் கடுமையாக உழைக்க மற்றொரு பிரிவினர் வேலை வாய்ப்பின்றி சும்மா இருக்க நிர்ப்பந்திக்கப்படும் நிலை இருக்காது. அனைவரும் உழைத்து வாழ வேண்டும். அதேவேளை அது தற்போது உழைக்கும் வர்க்கம் அனுபவித்துவரும் நிர்ப்பந்திக்கப்பட்ட உழைப்பாகவோ, அயர்ச்சியூட்டுவதாகவோ, இழிவான நிலையிலோ இருக்காது.

முதியவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், பலவீனமானவர்கள் ஆகியோரைப் பராமரிக்கும் பொறுப்பை சமூகமே ஏற்றுக்கொள்ளும். ஏதோ ஒரு புழக்கடையில் மரணித்துக் கிடப்போமோ, யாரையோ சார்ந்து பிச்சையெடுத்து வாழ்ந்து அனாதையாக மரணித்துவிடுவோமோ என்ற கவலைகள் இருக்காது. தாங்கள் படுத்த படுக்கையாகி விட்டால் குடும்பம் அனாதையாகி விடுமோ என்று யாரும் அச்சம் கொள்ள வேண்டியிருக்காது. ஏனென்றால் குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாக, அறிவாளிகளாக, நல்ல குடிமகன்களாக உருவாகத் தேவையான பயனுள்ள அறிவைக் கொடுத்து சமூகத்தால் நல்ல முறையில் வளர்த்தெடுக்கப்படுவார்கள்.

அத்தகைய நிலைமையை வேண்டுவோரும், அதற்காகப் போராடுபவர்களுமே சோஷலிஸ்டுகள் ஆவர்.

ந.கா. க்ரூப்ஸ்கயா,

உழைக்கும் மகளிர்


Jul 25, 2019

சர்வதேசக் குழந்தைகள் வாரம்




கம்யூனிஸ்ட் இளைஞர் இண்டர்நேஷனலின் செயற்குழு, மூன்றாவது சர்வதேசக் குழந்தைகள் வாரத்தை ஜூலை 24 முதல் 30 வரை கொண்டாட முடிவு செய்துள்ளது. குழந்தைகள் இயக்கம் ருஷ்யாவில் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. ஆகவே இதைப் பிரபலப்படுத்த “குழந்தைகள் வாரம்” உபயோகப்படுகிறது.

“குழந்தைகள் இயக்கத்துக்கும், குழந்தைகள் ஸ்தாபனத்துக்கும் என்ன அவசியம்?” என ஒருசில தோழர்கள் கேட்கலாம்.  “அவர்கள் வளரட்டும், மேலும் முதிர்ச்சி அடையட்டும், பிறகு அவர்கள் கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கத்தில் சேருவார்கள். இப்பொழுது அவர்களுக்கு என்ன புரியும்? அவர்கள் விளையாடட்டும், பள்ளிக்குச் செல்லட்டும்” என்று அவர்கள் சொல்லலாம்.

10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களையும் சிறுமிகளையும் உட்கொண்ட சிறுவர் கம்யூனிஸ்ட் கழகமே இளம் பயனீர் கழகமாகும்.*

இளம் பயனீர் கழகம் அதன் உறுப்பினர்களுக்குக் கூட்டுணர்ச்சியைப் புகட்டுகிறது. இன்பத்தையும் துன்பத்தையும் கூட்டத்துடன் பகிர்ந்துகொள்ள அவர்களைப் பழக்கப்படுத்துகிறது. தங்கள் கூட்டத்தின் நலனே தங்கள் நலன் என்று போதித்து கூட்டத்தின் உறுப்பினராகத் தங்களைக் கருதிக்கொள்ளுமாறு அவர்களுக்குப் போதிக்கிறது.  கூட்டுப் பழக்கங்களை, அதாவது ஒரு ஸ்தாபன ரீதியில் கூட்டாக வேலை செய்யும், இயங்கும் திறமையை வளர்க்கிறது.  தனது விருப்பத்தைவிட கூட்டத்தினரின் விருப்பத்தையே மேலாக மதிக்கவும், தனது  முன்முயற்சியை கூட்ட்த்தினரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றவும், கூட்டத்தினரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றவும், கடைசியாக, தாங்கள், மனிதகுலத்தின் மலர்ச்சிக்காகப் போராடும் தொழிலாளி வர்க்கத்தின் உறுப்பினர்கள், சர்வதேசப் பாட்டாளி வர்க்கம் என்ற மாபெரும் சேனையின் உறுப்பினர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தி குழந்தைகளின் கம்யூனிஸ்ட் மனவுணர்வை வளர்க்கிறது.

மேலே கூறியவை மட்டுமே குழந்தைகளை எவ்வளவு சீக்கிரமாக இவ்வியக்கத்தில் சேர்க்கிறோமோ அவ்வலவுக்கு நல்லது என்பதை நிரூபிக்கிறது. “நாங்கள் எங்கள் தந்தையைக் காண்பதேயில்லை; அவர் பகல் நேரத்தில் வேலை செய்கிறார், சாயங்காலம் கூட்டங்களுக்குச் செல்லுகிறார்” என்று தொழிலாளர்களின் குழந்தைகள் கூறுவதை அடிக்கடி கேட்கலாம்.  அவர்கள் தாயும் வேலை செய்கிறாள் அல்லது வீட்டு வேலைகளிலும் குழந்தைகளை கவனிப்பதிலும் ஈடுபடுகிறாள்.  அகவே அவர்கள் எதையும் பார்க்காமல் வீட்டில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்;  அல்லது அலுப்புத் தாங்காமல் குறும்புச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.  அல்லது தெருவில் திரியும் சிறுவர்களோடு சேர்ந்து கொள்கிறார்கள். சிறுவர்கள் கழகம் அவர்களுக்கு அநேக இன்பமான வாய்ப்புகளைத் தரும். அவர்களது செயல்களையும், முன்முயற்சிகளையும் வளர்த்து அவர்களது எண்ணங்களின் வளர்ச்சிக்கு உதவும்.

இயல்பாகவே, இளம் பயனீர் கழகம் பெரியவர்களின் கழகத்தைப் போன்று இருக்கக் கூடாது. அவ்வாறு பெரியவர்கள் கழகத்தின் மறுபதிப்பாக இருந்தால் உண்மையிலேயே கெடுதல்தான். ஆனால் அதில் கம்யூனிஸத் தன்மையை ஊட்ட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அது கோஷ்டிப் பாட்டுகள், விளையாட்டுகள், நீந்துதல், இயற்கைக் காட்சிகளைக் காணச் செல்லுதல், தீக்கணப்பைச் சுற்றி அமர்ந்து பேசுதல், தொழிற்சாலைகளைப் பார்வையிடுதல், பாட்டாளி வர்க்கத்தினரின் விழாக்களில் கலந்து கொள்ளுதல் போன்ற உல்லாச நிகழ்ச்சிகளுக்கு வழி செய்ய வேண்டும்.  இவை அனைத்தும் குழந்தைகளின் மனதில் அழியாத உளப்பதிவை ஏற்படுத்தி, ஒரு ஸ்தாபனத்தின், ஒரு கூட்டின் அமைப்பை அவர்களுக்கு நன்றாக எடுத்துக் காட்டும்.  பாட்டாளி வர்க்கத்தினரின் விழாக்களில் கலந்து கொள்ளுதலும், தொழிலாளர்களின் கிளப்புகளையும், தொழிற்சாலைகளையும், தொழிலாளர் கூட்டங்களை பார்வையிடுதலும் குழந்தைகளுக்கும் தொழிலாளி வர்க்கத்தினருக்கும் இடையே நெருங்கிய தொடர்பை உண்டு பண்ணும். முடிந்த அளவுக்கு எல்லா வகைகளிலும் இத்தொடர்பை ஊக்கப்படுத்த வேண்டும். மாதர் சங்கக் கிளைகளும், ஆலைகளிலுள்ள கட்சி குழுக்களும், தொழிற்சங்கங்களும் இளம் பயனீர்களுக்கு ஆதரவு தரவேண்டும்; குழந்தைகளிடையே வர்க்க ஒருமைப்பட்டு உணர்வை புகட்டத் தங்களால் இயன்றது அனைத்தையும் செய்ய வேண்டும்.


குழந்தைகள் இயக்க வாரத்தின்போது தொழிலாளர் கழகங்கள் இளம் பயனீர்களை தங்கள் பொறுப்பில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களைத் தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் சென்று தங்கள் வேலையை அவர்களுக்குக் காட்ட வேண்டும்.  விசேஷமாகப் பொறுக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் அவர்களுக்குத் தங்கள் இளமைப் பருவத்தைப் பற்றியும், தாங்கள் நிகழ்த்த வேண்டியிருந்த போராட்டத்தைப் பற்றியும் கூற வேண்டும். சுருங்க்க் கூறின் சர்வதேசக் குழந்தைகள் வாரத்தில் தொழிலாளி வர்க்கம் இளம் பயனீர்களைத் ‘தத்து’ எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் எப்போதும் குழந்தைகளே. ஆகவே தான் இளம் பயனீர் கழகம் விளையாட்டுகளுக்குப் பெரிதும் முக்கியத்துவமளிக்கிறது. ஏனென்றால் குழந்தைகளின் உடற்கட்டை வளர்க்க விளையாட்டுகள் கண்டிப்பாகத் தேவை. அவை உடல் பலத்தை வளர்க்கின்றன, குழந்தைகளின் கைகளை வலுவுறச் செய்கின்றன, உடல் லாவகத்தை அதிகரிக்கின்றன, கண்பார்வையைக் கூர்மையாக்குகின்றன; அவர்களது நுண்ணறிவையும் சமயோசித புத்தியையும், முன்முயற்சியையும் வளர்க்கின்றன.  குழந்தைகளின் ஒழுங்கமைப்புத் திறமை, தன்னடக்கம், பொறுமை, நிலைமையை சீர்தூக்கி ஆராயும் திறமை போன்றவற்றை அதிகரிக்கின்றன.  நல்ல விளையாட்டுக்களும் கெட்ட விளையாட்டுக்களும் இருப்பது உண்மைதான்.  சில விளையாட்டுகள் குழந்தைகளைக் கொடியவர்களாகவும், முரடர்களாகவும் செய்கின்றன. பிற இனத்தினரை வெறுக்கத் தூண்டுகின்றன, குழந்தைகளின் நரம்பு மண்டலத்துக்குக் கேடு விளைவிக்கின்றன. சூதாடும் உணர்ச்சியையும் செருக்கையும் வளர்க்கின்றன.  வேறு சில விளையாட்டுகள் குழந்தைகளைச் சரியான முறையில் போற்றி வளர்க்கின்றன. குழந்தைகளின் மனதிடத்தை வலுப்படுத்துகின்றன. நீதி உணர்வை வளர்க்கின்றன. வேறு சில அவர்களைக் கம்யூனிஸ்டுகளாக்குகின்றன. கடைசியாகக் கூறியதை நிறைவேற்றுவதே இளம் பயனீர்கள் எடுத்துக்கொண்டுள்ள காரியம். இங்குதான் அவர்களுக்கு கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கம் உதவி புரிகிறது.


இளம் பயனீர்கள் விளையாட்டுகளில் மட்டும் ஈடுபடுவதில்லை. இக்காலக் குழந்தைகள் பலவற்றைக் கண்டுள்ளனர், கேட்டுள்ளனர்; மனிதகுலத்தின் மலர்ச்சிக்கும், புது வாழ்விற்குமான போராட்டத்தில் அவர்கள் கலந்துகொள்ள விரும்புகிறார்கள். இதில் அவர்களுக்குள்ள பங்கு ஒருவேளை பெரிதாக இல்லாமல் இருக்கலாம்;  மருந்துச் செடிகளைத் திரட்டுதல், தொழிற்சாலைகளுக்கு முன்னுள்ள வெற்றிடங்களைச் சுத்தப்படுத்தி அங்கே பூச்செடிகளை நடுதல், பச்சிளங்குழந்தைகள் விடுதிக்காகத் துணிகளைத் தைத்தல், கூட்டங்களுக்கான வரவேற்பிதழ்களை விநியோகம் செய்தல், தொழிலாளர் கிளப்புகளை அலங்கரித்தல் போன்றவையே அவை. ஆனால் இந்தக் கூட்டுப் பணிகள், தான் சமுதாயத்துக்கு உதவும் ஒரு உறுப்பின்ன் என்பதை இளம் பனீர் உணருமாறு செய்து, வேறு ஆக்க வேளைகளைச் செய்யுமாறு அவனைத் தூண்டி விடுகின்றன.  சோவியத் ஸ்தாபன்ங்கள் இளம் பயனீரிடம் கவனம் செலுத்த வேண்டும், அவர்களின் நடவடிக்கைகளின் மண்டலத்தை விரிவாக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

குழந்தைகள் இயக்கம் பள்ளிக்கூடத்துக்கு விசேஷ முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் குழந்தைகளின் “சுய ஆட்சியை” வலுவுறச் செய்ய உதவுகிறது.  புதிய போதனை முறைகளைக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. குழந்தைகளின் படிப்பு ஆர்வத்தையும் அறிவு வேட்கையையும் அதிகரிக்கிறது.  முற்போக்கான ஆசிரியர்கள் இளம் பயனீர்களைப் போற்ற வேண்டும். சர்வதேசக் குழந்தைகள் வாரத்தில் பள்ளிகள் இளம் பயனீர்கள் முன்னுள்ள வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இளம் பயனீர்கள், புதிய பள்ளியை நிர்மாணிப்பதில் ஆசிரியர்களுக்கு முழுமனத்துடன் உதவ வேண்டும், பள்ளியின் நடுமையங்களாகத் திகழ வேண்டும்.

ஜூலை 24 முதல் 30 வரைப்பட்ட இந்த வாரத்தில் ருஷ்ய சோவியத் கூட்டாட்சி சோஷலிசக் குடியரசின் குழந்தைகள் இயக்கத்துக்கு ஒரு திடமான அடிப்படையை ஏற்படுத்த வேண்டும்.

- ந. கா. க்ரூப்ஸ்கயா, இளைஞர்களைக் கம்யூனிச முறையில் பயிற்றி வளர்த்தல், பக்.149-153


புகைப்படங்க: https://weirdrussia.com/2015/05/19/young-pioneer-organization-of-the-ussr/ (இந்த சுட்டியை சொடுக்கிப் படிக்கவும்) 

Dec 2, 2018

"உழைக்கும் மகளிர்” நூல் வெளியீடு


வணக்கம் தோழர்களே,

எவ்வளவு வன்மத்தை இந்த சமூக ஊடகம் (சமூகமும்) அள்ளித் தெளித்தாலும், அதன் நேர் எதிர் திசையில் உலகெங்கிலும் இருந்து முகமறியா நபர்கள் மற்றும் நண்பர்கள், தோழர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் எல்லாவற்றுக்கும் மேலாக பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மீதான அலாதியான நம்பிக்கையும் காதலும் என்னை தொடர்ந்து எழுத்தின் வாயிலாக இயங்கச் செய்துகொண்டே இருக்கிறது J

மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் இப்படித்தான் நிகழ்ந்தது. இப்போது நான்காவதாக ஒரு சிறு நூல் ஒன்றை மொழிபெயர்த்துள்ளேன்.  சிந்தன் பதிப்பக வெளியீடாக இந்நூல் வெளிவர இருக்கிறது. 

உழைக்கும் மகளிர்” – தோழர் ந.கா. க்ரூப்ஸ்கயா எழுதி, தோழர் மிக் கொஸ்த்தெலொ அவர்களின் மொழிபெயர்ப்பில் மேனிஃபெஸ்டோ ப்ரெஸ் (இங்கிலாந்து) வெளீடாக வந்த இந்நூல் உரிமம் பெற்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

வரும் 9ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு #கூகை வெளீட்டு நிகழ்வை திட்டமிட்டிருக்கிறோம். அதுகுறித்தான விவரங்கள் விரைவில் பகிர்கிறேன். கால அவகாசம் குறைவாக உள்ளதால் உங்கள் அனைவரின் நாட்காட்டியில் இந்த நாளையும் நேரத்தையும் குறித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இதை எனது நேரடியான அழைப்பாக்க் கருதி நிகழ்வுக்கு வந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பாட்டாளி வர்க்கப் புரட்சி ஓங்குக! மார்க்சியமே சமூக விடுதலையின் ஒளிவிளக்கு. 

க்ருப்ஸ்கயாவும் உழைக்கும் மகளிர்நூலும்

நதேழ்தா கான்ஸ்டாண்டினோவா க்ரூப்ஸ்கயா (1869 – 1939), லெனின் என்னும் ஆளுமை மீதான பரவலான ஈர்ப்பால் மற்றுமொரு ஒரு புரட்சியாளர், கட்டுரையாளர் என்று குறைத்து மதிப்பிடப்பட்டதோடு துரதிர்ஷ்டவசமாக பலராலும்லெனினின் மனைவிஎன்று மட்டுமே அறியப்பட்டவர்.

கல்வியாளராக அவர் ஒரு தனித்துவமான ஆளுமை என்றபோதும் க்ரூப்ஸ்கயாவின் எழுத்துகள் இதுவரை ஆங்கிலத்தில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளன. புரட்சியின் முதல் நாளிலிருந்தே அவர் தன்னை புரட்சிகர பணிகளில் இணைத்துக்கொண்டார்….
…. 1896இல் லெனினோடு கைது செய்யப்பட்டு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டு பின்னர் ஷூசென்ஸ்கொயேவில் மூன்றாண்டுகள் உள்நாட்டு சிறைத் தண்டனையை அனுபவித்த போது க்ரூப்ஸ்கயா முதல் முதலாக எழுதியதேஉழைக்கும் மகளிர்என்னும் சிறு பிரசுரம்.
…. ருஷியப் பெண்களின் நிலை குறித்து வெளியான முதல் மார்க்சியப் படைப்பு என்னும் முக்கியத்துவம் வாய்ந்தது இச்சிறு பிரசுரம். ஜாரிசத்தின் கீழ் பெண்களின் உரிமையற்ற நிலையை ஆசிரியர் மிகவும் ஆழமாக ஆய்வு செய்கிறார். ஆண் உழைப்பாளர்களுக்கு நிகராக, சமமாகவும், மேலான வாழக்கைக்காகவும் போராடுபவர்களின் அணியில் சேரும்படி அவர் பெண்களுக்கு அழைப்பு விடுக்கிறார். “உழைக்கும் மகளிரும் உழைக்கும் வர்க்கத்தின் உறுப்பினர்களே. அவர்களது நலன்களும் அவ்வர்க்கத்தின் நலன்களோடு நெருக்கமாகப் பிணைந்துள்ளன.”

இந்தச் சிற்றேடு க்ரூப்ஸ்கயா விளக்கும் விடுதலைக்கான பாதையை விரிவாக ஆய்வு செய்ய முற்படுகிறது. அவர் காலத்தில் வாழ்ந்த பெண் உழைப்பாளர்களின் நிலைமைகளை விளக்கி வந்த இந்நூல் க்ரூப்ஸ்கயாவின் மார்க்சியக் கண்ணோட்டத்தைச் சிறப்பாக வெளிக்காட்டுகிறது. இதில் அவர் குறிப்பிடும் நிலைமைகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கால ரஷ்யாவைப் பற்றிய வரலாற்றாசிரியர்களுக்கான ஆய்வுகளுக்காக மட்டுமின்றி இன்றைய உலகின் நிலைமைகளுக்கும் பெருமளவில் பொருந்திப் போகிறது. எவ்வித மாற்றங்களுமின்றி 26 வருடங்கள் கழித்து அப்படியே இந்நுல் வெளியாகிறது என்பதே அதன் பொருத்தப்பாட்டிற்கான சான்றாகும்.

தொழிலாளர்களின் நலனுக்காக பெண்கள் தோளோடு தோள் நின்று போராடினால் மட்டுமேசுதந்திரமான இன்பகரமான வாழ்க்கைக்கான சாவியைபெண்கள் கண்டுபிடிக்க முடியும்.

ஓவியம்: மணிவண்ணன்

நான் நன்றி சொல்ல வேண்டிய தோழர்களின் பட்டியல் நீண்டது. நிகழ்வில் சந்திப்போம் J


May 18, 2018

க்ரூப்ஸ்கையா தற்போது என் புதிய காதலி!


.... வேறு சொற்களில் சொல்வதானால், உழைக்கும் மகளிர் அறிக்கை தொலைந்து போகவில்லை என்றாலும்கூட, புறக்கணிக்கப்பட்டது. 1925 முதல் இன்றுவரை க்ரூப்ஸ்கையாவின் தொகுப்புகளில் அல்லாது அது தனியாக பதிப்பிக்கப்படவே இல்லை. ஒரு சில கூற்றுகள் மட்டுமே (விபச்சாரம் போன்ற) விவாதத்திற்கு அவசியப்படுமிடத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அறிக்கையும் இதற்கு முன்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை (ரஷ்ய புரட்சியாளர்களின் இதர படைப்புகளைப் போல்). ..
26 வருடங்கள் கழித்து தனி சிற்றேடாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வந்த இந்த அறிக்கையை தற்போது மேனிஃபெஸ்டோ பிரஸ்ஸின் அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வருகிறேன். மொழிபெயர்த்து வெளியிட்டதும் சில பிரதிகளை அவர்களின் விநியோகத்திற்காக அனுப்பும்படி கேட்டுள்ளார்கள்.
20 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை விரைவில் தமிழில்... மொழிபெயர்த்து முடித்தாலும் வெளியிடுவதற்கு தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது!
(The Woman Worker என்பதை உழைக்கும் மகளிர் என்று மொழிபெயர்த்துள்ளேன். தன்னுணர்வோடு ஆசிரியர் பெண் தொழிலாளி என்பதை தவிர்க்கிறார்.
மொழிபெயர்ப்பு பிழைகள் இருப்பின் kotravaiwrites@gmail.com க்கு எழுதுங்கள். நன்றி)
ஆசிரியரின் அறிமுகம் அடுத்த பதிவில்....