Showing posts with label க்ரூப்ஸ்கையா. Show all posts
Showing posts with label க்ரூப்ஸ்கையா. Show all posts

Dec 2, 2018

"உழைக்கும் மகளிர்” நூல் வெளியீடு


வணக்கம் தோழர்களே,

எவ்வளவு வன்மத்தை இந்த சமூக ஊடகம் (சமூகமும்) அள்ளித் தெளித்தாலும், அதன் நேர் எதிர் திசையில் உலகெங்கிலும் இருந்து முகமறியா நபர்கள் மற்றும் நண்பர்கள், தோழர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் எல்லாவற்றுக்கும் மேலாக பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மீதான அலாதியான நம்பிக்கையும் காதலும் என்னை தொடர்ந்து எழுத்தின் வாயிலாக இயங்கச் செய்துகொண்டே இருக்கிறது J

மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் இப்படித்தான் நிகழ்ந்தது. இப்போது நான்காவதாக ஒரு சிறு நூல் ஒன்றை மொழிபெயர்த்துள்ளேன்.  சிந்தன் பதிப்பக வெளியீடாக இந்நூல் வெளிவர இருக்கிறது. 

“உழைக்கும் மகளிர்” – தோழர் ந.கா. க்ரூப்ஸ்கயா எழுதி, தோழர் மிக் கொஸ்த்தெலொ அவர்களின் மொழிபெயர்ப்பில் மேனிஃபெஸ்டோ ப்ரெஸ் (இங்கிலாந்து) வெளீடாக வந்த இந்நூல் உரிமம் பெற்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

வரும் 9ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு #கூகை வெளீட்டு நிகழ்வை திட்டமிட்டிருக்கிறோம். அதுகுறித்தான விவரங்கள் விரைவில் பகிர்கிறேன். கால அவகாசம் குறைவாக உள்ளதால் உங்கள் அனைவரின் நாட்காட்டியில் இந்த நாளையும் நேரத்தையும் குறித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இதை எனது நேரடியான அழைப்பாக்க் கருதி நிகழ்வுக்கு வந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பாட்டாளி வர்க்கப் புரட்சி ஓங்குக! மார்க்சியமே சமூக விடுதலையின் ஒளிவிளக்கு. 

க்ருப்ஸ்கயாவும் “உழைக்கும் மகளிர்” நூலும்

நதேழ்தா கான்ஸ்டாண்டினோவா க்ரூப்ஸ்கயா (1869 – 1939), லெனின் என்னும் ஆளுமை மீதான பரவலான ஈர்ப்பால் மற்றுமொரு ஒரு புரட்சியாளர், கட்டுரையாளர் என்று குறைத்து மதிப்பிடப்பட்டதோடு துரதிர்ஷ்டவசமாக பலராலும் ‘லெனினின் மனைவி’ என்று மட்டுமே அறியப்பட்டவர்.

கல்வியாளராக அவர் ஒரு தனித்துவமான ஆளுமை என்றபோதும் க்ரூப்ஸ்கயாவின் எழுத்துகள் இதுவரை ஆங்கிலத்தில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளன. புரட்சியின் முதல் நாளிலிருந்தே அவர் தன்னை புரட்சிகர பணிகளில் இணைத்துக்கொண்டார்….
…. 1896இல் லெனினோடு கைது செய்யப்பட்டு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டு பின்னர் ஷூசென்ஸ்கொயேவில் மூன்றாண்டுகள் உள்நாட்டு சிறைத் தண்டனையை அனுபவித்த போது க்ரூப்ஸ்கயா முதல் முதலாக எழுதியதே “உழைக்கும் மகளிர்” என்னும் சிறு பிரசுரம்.
…. ருஷியப் பெண்களின் நிலை குறித்து வெளியான முதல் மார்க்சியப் படைப்பு என்னும் முக்கியத்துவம் வாய்ந்தது இச்சிறு பிரசுரம். ஜாரிசத்தின் கீழ் பெண்களின் உரிமையற்ற நிலையை ஆசிரியர் மிகவும் ஆழமாக ஆய்வு செய்கிறார். ஆண் உழைப்பாளர்களுக்கு நிகராக, சமமாகவும், மேலான வாழக்கைக்காகவும் போராடுபவர்களின் அணியில் சேரும்படி அவர் பெண்களுக்கு அழைப்பு விடுக்கிறார். “உழைக்கும் மகளிரும் உழைக்கும் வர்க்கத்தின் உறுப்பினர்களே. அவர்களது நலன்களும் அவ்வர்க்கத்தின் நலன்களோடு நெருக்கமாகப் பிணைந்துள்ளன.”

… இந்தச் சிற்றேடு க்ரூப்ஸ்கயா விளக்கும் விடுதலைக்கான பாதையை விரிவாக ஆய்வு செய்ய முற்படுகிறது. அவர் காலத்தில் வாழ்ந்த பெண் உழைப்பாளர்களின் நிலைமைகளை விளக்கி வந்த இந்நூல் க்ரூப்ஸ்கயாவின் மார்க்சியக் கண்ணோட்டத்தைச் சிறப்பாக வெளிக்காட்டுகிறது. இதில் அவர் குறிப்பிடும் நிலைமைகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கால ரஷ்யாவைப் பற்றிய வரலாற்றாசிரியர்களுக்கான ஆய்வுகளுக்காக மட்டுமின்றி இன்றைய உலகின் நிலைமைகளுக்கும் பெருமளவில் பொருந்திப் போகிறது. எவ்வித மாற்றங்களுமின்றி 26 வருடங்கள் கழித்து அப்படியே இந்நுல் வெளியாகிறது என்பதே அதன் பொருத்தப்பாட்டிற்கான சான்றாகும்.

… தொழிலாளர்களின் நலனுக்காக பெண்கள் தோளோடு தோள் நின்று போராடினால் மட்டுமே “சுதந்திரமான இன்பகரமான வாழ்க்கைக்கான சாவியை” பெண்கள் கண்டுபிடிக்க முடியும்.

ஓவியம்: மணிவண்ணன்

நான் நன்றி சொல்ல வேண்டிய தோழர்களின் பட்டியல் நீண்டது. நிகழ்வில் சந்திப்போம் J


May 18, 2018

உழைக்கும் மகளிர் (அறிக்கை)


ந. கா. க்ரூப்ஸ்கையா எழுதிய அறிமுகம்
இச்சேறேடு நீண்டகாலத்திற்கு முன் 1889ஆம் ஆண்டில் சைபீரியாவில் உள்ள யெனிசெய் மாகாண மினுசின்ஸ்க் பகுதியின் ஷுஷென்ஸ்கோயே கிராமத்தில் இருந்தபோது எழுதப்பட்டது. அங்குதான் நான் வ்ளாடிமிர் இலியீச்சுடன் (லெனின்) நாடு கடத்தப்பட்டேன். இதுதான் நான் எழுதிய முதல் சிற்றேடு என்பதால் என்னால் இயலுமா என்கிற நடுக்கம் எனக்கிருந்தது. வ்ளாடிமீர் இலியீச்தான் எனக்கு ஊக்கமளித்தார். அக்காலகட்டத்தில் இத்தகைய சிற்றேட்டை வெளிப்படையாக வெளியிட முடியாது, மீறினால் வெளியிடுபவர் கைது செய்யப்படுவார். இரகசியமாக சட்ட அங்கீகாரமின்றியே இவற்றை வெளியிட வேண்டியிருந்தது. 1900இல் ப்ளெக்கனோவ், அக்செல்ராட், சாஸுலிச், மார்தோவ் மற்றும் பொட்ரெசோவுடன் வ்ளாடிமீர் இலியீச்சும் இஸ்க்ரா இதழை தொகுக்க வெளிநாடு சென்றார். அப்போது ரஷ்யாவில் இரகசியமாக இஸ்க்ரவை ஒரு தேசிய நாளிதழாக தொகுக்கும் முயற்சி நடந்து வந்தது. நான் ஊஃபா நகரத்தில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்தேன். நான் மிகவும் மதிக்கும், விரும்பும் மூத்த புரட்சியாளராகிய வேரா இவனோவா சாஸுலிச்சிடம் உழைக்கும் மகளிர் கைப்பிரதியை வ்ளாடிமீர் இலியீச் காண்பித்தார். அவருடைய மதிப்பீடு எனக்கு மிகவும் முக்கியமானது. அதனைப் படித்த வேரா இவனோவா: “சிற்றேட்டில் சில தவறுகள் இருப்பினும் அவர் பிரச்சினையின் ஆணிவேரைப் பிடித்துவிட்டார்” என்று சொல்லி பதிப்பகத்தையும் பரிந்துரை செய்தார். இஸ்க்ரா இச்சிற்றேட்டை பதிப்பித்தது. ரஷ்யாவில் அது ஒரு இரகசிய அச்சகத்தில் மறுபதிப்பும் செய்யப்பட்டது. 1905இல் தான் வெளிப்படையாக அச்சிட்டு விநியோகிக்கும் நிலைமை உருவானது. நான் அவ்வப்போது பயன்படுத்திய “சப்லீனா” என்னும் புனைப்பெயரில் கையொப்பம் இட்டிருந்தேன். வெகு விரைவில் அது மீண்டும் தடைசெய்யப்பட்டது.
1900 தொடங்கி தற்போது 25 வருடங்கள் கழிந்துவிட்டன. ஃபிப்ரவரி மற்றும் அக்டோபர் புரட்சி உட்பட இக்காலகட்டத்தில் பல்வேறு எழுச்சிகளும் ஏற்பட்டன. பாட்டாளி வர்க்கம் ஆட்சியைப் பிடித்துவிட்டது. பாட்டாளி வர்க்கத்தின் நிலைமைகள் மாறிவிட்டன, அதனோடு உழைக்கும் மகளிர் மற்றும் விவசாய மகளிரின் நிலைமைகளும் மாறிவிட்டன. உழைக்கும் மகளிரின் நிலைமைகள், அவளது உரிமைகள் மற்றும் அரசாட்சியில் பெண்களை இணைத்தல் குறித்தெல்லாம் வ்ளாடிமீர் இலியீச் பேரார்வத்துடன் அழகாகவே எழுதியுள்ளார். அதேபோல் மற்ற தோழர்களும் இதுகுறித்து நல்லபடியாக நிறையவே பேசியுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அமைப்புகளும் தங்களுடைய நடவடிக்கைகளை பரந்த தளங்களில் நீட்டித்திருக்கின்றனர். இதன் விளைவாக ஒவ்வொரு நாளும் உழைக்கும் மகளிர் மற்றும் விவசாய மகளிர் மேலும் மேலும் அரசியல் விழிப்புணர்வு பெருகின்றனர், தன்னம்பிக்கை பெறுகின்றனர். புதிய வாழ்வை அமைத்திடுவதில் மேலும் ஊக்கத்துடன் பங்கெடுக்கின்றனர்.
இந்த உழைக்கும் மகளிர் அறிக்கையானது காலத்தால் பழையது.
இருப்பினும், இத்துண்டறிக்கையைப் படிக்கையில், இதனை மறுபதிப்பு செய்ய வேண்டும் என்ற தோழர்களின் திட்டத்தை நான் ஏற்கிறேன். அன்றைய உழைக்கும் மகளிரின் நிலைமைகள் பற்றிய விவரணங்களைப் படிக்கும்போது அங்கிருந்து நாம் இன்று எதுவரை முன்னேறியுள்ளோம் என்ன சாதித்தோம் என்பதை அறிந்துகொள்ள முடியும். அதேவேளை நாம் சாதிக்காதது என்ன, உழைக்கும் மகளிரின் முழுமையான விடுதலைக்காக நாம் இன்னும் தீவிரமாக, விடாப்பிடியாக எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.
உங்களுடைய சொந்த வாழ்வையோ அல்லது நீங்கள் அறிந்த ஒரு பெண் தொழிலாளியின் வாழ்வையோக் கூட சற்று திரும்பிப் பாருங்கள். நெக்ரசோவின் சொற்களில் சொல்வதானால், “ஓ! பெண்களின் பாடுதான் எவ்வளவு கடினமானது, பெண்ணைப் போன்றொதொரு துன்பப்படும் பிறவியும் உள்ளதோ. கிராமமோ, சிறு நகரமோ உழைக்கும் வர்க்கப் பெண்கள் “நிலையான, எப்போதைக்குமான தொழிலாளியாகவே இருக்கின்றனர்.” ஆண்களைக் காட்டிலும் அதிகம் உழைக்க வேண்டியுள்ளதோ இல்லையோ, கண்டிப்பாக பெண்கள் குறைவாக உழைப்பதில்லை. அவளும் அதே ஏழ்மையை, ஊட்டச்சத்துக் குறைபாட்டை, தூக்கமின்மையை பகிர்ந்துகொள்கிறாள். அதனோடு கூட துயரமும் அவமானமும் அவளை கூடுதலாகப் பீடிக்கிறது.”
இன்பமாக வாழ ரஷ்யாவில் யாருக்கு கொடுத்துவைத்திருக்கிறது (To whom in Russia is it given to live well) என்று நெக்ரசொவின் கவிதை ஒன்றிருக்கிறது. அதில் ஒரு விவசாயப் பெண் தன்னுடைய கசப்பான வாழ்வு பற்றி ஒரு யாத்ரீகரிடம், “பெண்ணின் மகிழ்ச்சிகரமான வாழ்விற்கும், சுதந்திரமான இன்பகரமான வாழ்க்கைக்குமான சாவியை மறந்து கடவுளானவர் அதை தொலைத்தும் விட்டார்… ஆம் தொலைந்துவிட்டது! ஏதோ ஒரு மீன் அதனை விழுங்கிவிட்டது என்று நினைத்துக்கொள்ளுங்கள்… எந்த மீன் அந்த விலைமதிப்பற்ற சாவியை விழுங்கியது… அது எந்தக் கடலில் நீந்திக் கொண்டிருக்கிறது என்பதை கடவுள் மறந்துவிட்டார்!” என்று கூறுகிறாளாம். அந்த விவசாய அடிமைப் பெண்ணால் புலம்பவும், என்றோ ஒருநாள் அந்த மறைத்துவைக்கப்பட்ட சாவியை கடவுள் கண்டுபிடித்துவிடுவார் என்ற நம்பிக்கையிலும் மட்டுமே வாழ முடிகிறது. அத்தகைய நம்பிக்கைகளை இப்போதைய பெண் தொழிலாளர் கைவிடுகிறாள், இருட்டில் தட்டுத்தடுமாறி அச்சாவியை தானே தேட முற்படுகிறாள். “பெண்ணின் மகிழ்ச்சிகரமான வாழ்விற்கும், சுதந்திரமான இன்பகரமான வாழ்க்கைக்குமான சாவியை அவள் எங்கு தேட வேண்டும்? சரியாக இதைத்தான் இந்த சிற்றேடு விளக்கப்போகிறது. தொழிற்சாலைகள், பட்டறைகளில் வேலை செய்யும் பெண்கள் அல்லது குடிசைத் தொழில் செய்யும் உழைக்கும் மகளிர் மற்றும் விவசாய மகளிரின் நிலைமைகளை நாம் ஆய்வு செய்வோம். உழைக்கும் மகளிரின் நிலைமை குறிப்பாக கடினமானதாக இருக்கிறது, ஏனென்றால் அவள் பாட்டாளி வர்க்கத்தின் அங்கம். அவளுடைய நிலைமைகள் ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்க நிலைமைகளோடு பிணைந்துள்ளது. பாட்டாளி வர்க்க வெற்றியே பெண் விடுதலைக்கான திறவுகோல். மேலும், குடும்ப அமைப்பினுள் பெண்ணின் சார்பு நிலையையும், அதனால் அவள் ஆணுக்கு அடிமையாக்கப்படுவதைப் பற்றியும் பார்ப்போம். அத்தகைய சார்பு நிலைமைக்கான காரணங்களையும் நாம் பேசுவோம். அதனூடாக பாட்டாளி வர்க்க விடுதலையோடு தான் ஒரே நேரத்தில் அவள் முழுச் சுதந்திரத்தையும் பெறமுடியும் என்பதையும் விளக்குவோம்.
இறுதியாக, ஒரு தாயாக உழைக்கும் மகளிருக்கு அந்த வெற்றியில் நலன்கள் உள்ளன என்பதையும் எடுத்துரைப்போம். தொழிலாளர்களின் நலனுக்காக பெண்கள் தோளோடு தோள் நின்று போராடினால் மட்டுமே “சுதந்திரமான இன்பகரமான வாழ்க்கைக்கான சாவியை” பெண்கள் கண்டுபிடிக்க முடியும்”.
- நதீஸ்டா கான்ஸ்டாண்டினோவா க்ரூப்ஸ்கையா (1869 – 1939)
லெனின் என்னும் ஆளுமை மீதான பரவலான ஈர்ப்பால் மற்றுமொரு ஒரு புரட்சியாளர், கட்டுரையாளர் என்று இருட்டடிப்பு செய்யப்பட்டதோடு துரதிர்ஷ்டவசமாக பலராலும் ‘லெனினின் மனைவி’ என்று மட்டுமே அறியப்பட்டவர். கல்வியாளராக அவர் ஒரு தனித்துவமான ஆளுமை என்றபோதும் க்ரூப்ஸ்கையாவின் எழுத்துகள் இதுவரை ஆங்கிலத்தில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது என்று டிமிட்ரி கொலெஸ்நிக்கும், அலெக்ஸ் கார்டனும் பதிவு செய்கிறார்கள்.

க்ரூப்ஸ்கையா தற்போது என் புதிய காதலி!


.... வேறு சொற்களில் சொல்வதானால், உழைக்கும் மகளிர் அறிக்கை தொலைந்து போகவில்லை என்றாலும்கூட, புறக்கணிக்கப்பட்டது. 1925 முதல் இன்றுவரை க்ரூப்ஸ்கையாவின் தொகுப்புகளில் அல்லாது அது தனியாக பதிப்பிக்கப்படவே இல்லை. ஒரு சில கூற்றுகள் மட்டுமே (விபச்சாரம் போன்ற) விவாதத்திற்கு அவசியப்படுமிடத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அறிக்கையும் இதற்கு முன்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை (ரஷ்ய புரட்சியாளர்களின் இதர படைப்புகளைப் போல்). ..
26 வருடங்கள் கழித்து தனி சிற்றேடாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வந்த இந்த அறிக்கையை தற்போது மேனிஃபெஸ்டோ பிரஸ்ஸின் அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வருகிறேன். மொழிபெயர்த்து வெளியிட்டதும் சில பிரதிகளை அவர்களின் விநியோகத்திற்காக அனுப்பும்படி கேட்டுள்ளார்கள்.
20 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை விரைவில் தமிழில்... மொழிபெயர்த்து முடித்தாலும் வெளியிடுவதற்கு தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது!
(The Woman Worker என்பதை உழைக்கும் மகளிர் என்று மொழிபெயர்த்துள்ளேன். தன்னுணர்வோடு ஆசிரியர் பெண் தொழிலாளி என்பதை தவிர்க்கிறார்.
மொழிபெயர்ப்பு பிழைகள் இருப்பின் kotravaiwrites@gmail.com க்கு எழுதுங்கள். நன்றி)
ஆசிரியரின் அறிமுகம் அடுத்த பதிவில்....