Showing posts with label நடிகர் சூர்யா. Show all posts
Showing posts with label நடிகர் சூர்யா. Show all posts

Sep 15, 2020

நான் அறிந்த சூர்யா!

 




1993களில் சரவணனாக நான் பார்த்த இளைஞன் நடிகர் சூர்யாவாக பரிணமித்து இன்றைக்கு சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் கலகக் குரலாக வளர்ந்து நிற்பது கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறேன். காலம் காலமாக அமைப்புகளில் இயங்கும் நபர்கள் அதிகாரத்தைக் கேள்வி கேட்பது நடந்தாலும், உயிர் தியாகங்கள் செய்தாலும் நடிகர் (அல்லது பிரபலம்) ஒருவர் கேட்கும் கேள்வி அதிகார மையங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இன்னொரு பக்கம் ஆட்சியைப் பிடிக்க அலைபாயும் சில கட்சிகளின் ‘ஆதரவாளர்களுக்கு’ பொறாமையை ஏற்படுத்துகிறது. இது மிகவும் சிறுபிள்ளைத்தனமான மனநிலை.

உண்மையான போராளிகளுக்கு ‘லைம் லைட்டை’ யார் அள்ளிக் கொண்டு போகிறார்கள் என்கிற கவலை இல்லை. அவர்களுக்குத் தேவை அதிகாரத்தை எதிர்க்கும் தங்களின் போராட்டங்களுக்கு வலுவான குரல்களும், ஆதரவுகளுமே. அந்த வகையில் சூர்யா (ஜோதிகா, கார்த்தி உள்ளிட்டோர்) போன்றோரின் குரல் மிகவும் முக்கியமானது. பலமானதும் கூட. ஏனெனில் அது பெருவாரியான மக்களிடையே நல்ல / சரியான சிந்தனையை / அரசியலைக் கொண்டு சேர்க்க உதவுகிறது. அதிகார மையங்களுக்கு அதுதான் பீதியைக் கிளப்புகிறது. சூர்யா தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகிறார். கூடுதலாக அவரின் உள்நோக்கம், வெளி நோக்கம், ஃபவுண்டேஷன், சாதி எல்லாம் தோண்டி எடுக்கப்படுகிறது.

சூர்யாவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவர்களின் தவறான செயல்பாடுகள் ஆதாரபூர்வமாக வெளியாகாதவரை அவர்களின் பேச்சும், செயல்பாடும் மட்டுமே கவனத்திற்குரியது. தவறு தெரியவரும்போது அதுகுறித்து கேள்வி எழுப்பிக்கொள்ளலாம். அதுவரை அவர் கேட்கும் கேள்விகளுக்கு அதிகார மையங்கள் பதில் சொல்லட்டும்.

நான் அறிந்த சூர்யா!

லயோலா கல்லூரியில் நான் விஸ்காம் படிக்கையில் அவர் பி.காம் படித்தார். (1992-1995). மிகவும் ‘சாது’. எனக்கு அவர் நண்பர் எல்லாம் இல்லை. சிவக்குமார் மகன் என்கிற ஒரு பிரபல்யத்தால் கவனிப்போம். அவ்வளவே.

பட்டப்படிப்பு முடிந்து ஒரு நண்பர்கள் குழுவோடு தொலைக்காட்சி தொடர் ஒன்றில் வின்சண்ட் செல்வா அவர்களிடம் உதவி இயக்குனராக நான் பணியாற்றிய போது நண்பர்களைக் காண அவ்வப்போது சரவணன் அங்கே வருவார். எதிரில் பார்த்தால் “ஹாய் நிம்மி” என்று சிரித்துவிட்டுப் போவார். பழக்கம் இல்லை எனிலும் அறிமுகம் இருப்பதற்கே அந்த மரியாதையைத் தருவார். சில வருடங்கள் கழித்து 2009இல் ஒரு பொது இடத்தில் பார்த்தபோதும் அதே “ஹாய் நிம்மி எப்படி இருக்க” என்னும் அன்பான விசாரிப்பு மாறவில்லை.

1999இல் ஓவியர் ஒருவருடன் எனக்கு திருமணம் முடிந்தது. 2000இல் என் மகள் பிறந்தாள். அவளும் ஓவியக் கலையில் நாட்டம் கொண்டு குழந்தை பருவத்திலேயே கண்காட்சிகள் வைப்பது, ஓவியப் போட்டிகளில் பங்கெடுப்பது என்றிருந்தாள். 2006ஆம் ஆண்டு குழந்தைகள் தினத்தன்று அவளுடைய முதல் தனி ஓவியக் கண்காட்சிக்கு திட்டமிட்டோம். அக்‌ஷரா ஹாசன், சுப்புலட்சுமி ஆகியோரை கண்காட்சியைத் தொடங்கி வைக்க அழைத்திருந்தோம். ஓவியம் தொடர்பாக வருணாவின் தந்தை நடிகர் சூர்யாவை, அவரது தந்தையை அவ்வப்போது சந்திப்பது உண்டு. வருணாவின் ஓவியக் கண்காட்சியில் முடிந்தால் கலந்து கொண்டு வாழ்த்துமாறு சிறப்பு அழைப்பு விடுத்திருந்தோம். நிகழ்ச்சி தொடங்கியபோதும் கூட அவர் வருவாரா என்னும் ஐயமே எனக்கு இருந்தது .
காரணமும் இருக்கிறது. ஏனென்றால் உடன் படித்த, நல்ல பழக்கம் உள்ள ‘பிரபல நடிகர்’ ஒருவரே நம்மை யாரோ போல் பார்த்து தவிர்க்க நினைத்த சூழலில், பழக்கமே இல்லாத ஒருவர் இத்தனை பிரபலமாக இருக்கிறாரே வருவாரா என்னும் சந்தேகம்!

சூர்யா விதிவிலக்கானவர். மரியாதை தெரிந்தவர்! நிகழ்ச்சி தொடங்கும் முன் சரியாக வந்து நின்றார். குழந்தையின் திறன் கண்டு அவ்வளவு மகிழ்ச்சி அவர் முகத்தில். அக்‌ஷரா, சுப்பு, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி யுகி சேது, கௌதமி என்று அனைவரும் அப்படித்தான் இருந்தார்கள்.

வருணா எல்லோர் முன்பாகவும் நேரலையாக ஓவியம் வரைந்து காட்டினாள். சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் வருணாவை வாழ்த்தி ஊக்குவித்தார்கள். கூடுதலாக சூர்யா அதை அருகில் அமர்ந்து ரசித்து அந்த கோடுகளுக்குப் பின் இருக்கும் குழந்தையின் மனதை கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களைப் பார்வையிட்டவர் திடீரென ஒரு ஓவியத் தொகுப்பைக் காட்டி “இதை எனக்குக் கொடுப்பியா வருணா” என்க என் மகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. பாக்கெட்டில் இருந்து 10,000 எடுத்துக் கொடுத்து ”இந்த ஓவியம் எனக்கு தான் சரியா” என்று வாங்கிக் கொண்டு “இந்த பணத்துல சாக்லெட்ஸ் வாங்கி சாப்பிடாம ஆர்ட் மெட்டீரியல்ஸ் வாங்கி இன்னும் நிறைய ஓவியம் வரையனும்” என்று கொடுத்துவிட்டு, ஒவ்வொரு ஓவியத்தைப் பற்றியும் அவளிடம் கேள்வி எழுப்பினார். வருணாவை எங்கே பார்த்தாலும் “என்னா ஆரிட்ஸ்டு” என்று மாறாத அன்போடு அழைப்பவர். கார்த்தியும் அப்படியே என்பதை வருணா கூற நான் கேட்டுள்ளேன்.

நிகழ்ச்சி தொடர்பான பேட்டியில் அவர் கூறியது “நாம் குழந்தைகளின் திறன்களை ஊக்குவிக்க வேண்டும்” (We have to tap the potential of the kids) என்றார். குழந்தைகள் உலகோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வது சூர்யாவின் இயல்புகளில் ஒன்று என்பதை நான் அன்று கண்டேன். பருவத்தே பயிர் செய் என்னும் வாக்குக்கு ஏற்ப குழந்தைகளின் திறனை இளம் வயதிலேயே கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் சேவை நோக்கி அவரை வழிநடத்தியிருக்க வேண்டும். (எனக்கு அவரோடு பழக்கம் இல்லை! 2010க்குப் பிறகு என் வாழ்க்கைப் பாதையை நான் மாற்றிக் கொண்டேன்!)

சூர்யா, கார்த்தியின் படங்களில் பெண்கள் சித்தரிப்பு தொடர்பாக நான் அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளேன். குறிப்பாக ஒரு விளம்பரம் தொடர்பாக நான் தொடர் பிரச்சாரமும் மேற்கொண்டேன். சூர்யா சமூக நீதி தொடர்பாகப் பேசுகையில் கூட இதில் கவனம் செலுத்தும் நீங்கள் சினிமாவில் பெண்களைப் பயன்படுத்தும் விதத்திலும் கவனம் செலுத்துங்கள் என்று பதிவு செய்துள்ளேன். சினிமாவில் பெண்கள் சித்தரிப்பு ஆணாதிக்க மனநிலையில் உள்ளதற்கு நாம் அவர்களை மட்டும் பொறுப்பாக்க இயலாது. எனினும், விமர்சனங்கள் மூலம் கவனத்தை ஈர்க்க முடியும். உயர்நிலையில் கதாநாயக அதிகாரம் இருப்பதால் உங்களால் முடியாதா என்கிற கேள்வியை எழுப்பி ஏதோ ஒரு மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்பதுதான் அந்த விமர்சனத்தின் நோக்கம். அதேவேளை தனிநபர்களாக அவர்களின் சமூக பங்களிப்புகளில் நியாயம் இருப்பின் அதனை வரவேற்கும் முதிர்ச்சியும், குறிவைத்துத் தாக்கப்பட்டால் ஆதரவு தெரிவிக்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தே இந்த பதிவை எழுதுகிறேன்.

மனிதர்களின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் காலப் போக்கில் மாறக் கூடியவை. வளர்ச்சி அடையக் கூடியவை. சூர்யாவின் வளர்ச்சியை திரைத்துறையிலும் சரி, சமூகத் தளத்திலும் சரி பாசாங்கற்ற உண்மையான பரிணாம வளர்ச்சியாகவே நான் காண்கிறேன்.

திரைத்துறை பிரபலங்கள் பெரும்பாலும் ஆளும் கட்சி “ஜால்ராக்களாக’ இருக்கையில் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க துணியும் பிரகாஷ் ராஜ் சூர்யா போன்ற “மைய நீரோட்ட பிரபல’ நடிகர்களின் குரல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர்களின் நற்செயல்களை வரவேற்போம்… முரண்பாடுகள் தெரியுமெனில் விமர்சிப்போம்…. ஆனால் அரசியல் உள்நோக்கத்தோடு “வெறுப்பரசியல்’ செய்வதும், அவதூறு செய்வதும் மிகவும் அற்பத்தனமானது. அரசியல் முதிர்ச்சியுமன்று.

சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷனில் படித்த குழந்தைகளின் நாடகத்தை ஒருமுறை காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பிரபல நடிகர்கள் தங்கள் ‘சேவைகளை’ ஏதேதோ வணிகத் துறைக்கும், சர்வதேச வலைப்பின்னல்களுக்கும் வழங்கிக் கொண்டிருக்க சூர்யா குழந்தைகளுக்குக் கல்வியைக் கொடுக்க நினைப்பதும், தொடர்ந்து அது தொடர்பாக பேசுவதும் வரவேற்கத்தக்கது. குறிப்பாக பா.ஜ.கவின் புதிய கல்விக் கொகை தொடர்பாக சூர்யா எழுப்பிய கேள்விகளும், விடுத்த அறைகூவலும் போற்றத்தக்கவை.

என் சமகாலத்தில் என்னுடன் படித்தவர்கள் ‘டாப் ஹீரோக்களாக’, திரைக் கலைஞர்களாக இருந்தும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். அவர்களுக்கு மத்தியில் சூர்யா நிச்சயமாக ஒரு நிஜமான கதாநாயகனாகவே உயர்ந்து நிற்கிறார்.

Suriya Sivakumar சவால்களும், விமர்சனங்களும் ஒன்றும் உங்களுக்குப் புதிதல்ல. அதுதான் உங்களை வளர்த்துள்ளது… இனியும் வளர்க்கும்… தொடருங்கள் உங்கள் ஆயுத எழுத்தை! ஓங்கி ஒலிக்கட்டும் அநீதிக்கு எதிரான உங்கள் குரல்! வாழ்த்துகள் 😊

(http://artistvarunastudio.blogspot.com/…/…/my-2nd-show.html…

)

#TNStandWithSuriya

 


Apr 8, 2018

விளம்பரம் என்னும் நஞ்சு...



திரு. சூர்யா நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உணர்ந்துதான் செய்கிறீர்களா, அல்லது வெறும் நடிகன் என்கிற உணர்விலிருந்து மட்டுமே உங்கள் தேர்வுகளை பொதுவெளியில் மேற்கொள்கிறீர்களா?
மீண்டும் மீண்டும் தவறான கருத்தியலை, பாகுபாட்டை நியாயப்படுத்தும் வகையிலான விளம்பரங்களிலேயே நடிக்கிறீர்களே, இதன் ஆபத்தை எப்போது உணர்வீர்கள்?
உஜ்ஜாலா கிர்ஸ்ப் & ஷைன் என்னும் விளம்பரத்தை இன்று காண நேர்ந்தது. அதில் என்ன திறமை இருந்தாலும் இந்த உலகம் ஒருவனின் உடையை வைத்துத்தான் மதிக்கிறது என்று ‘அக்கறையுடன்’ பேசியுள்ளீர்கள். குறைந்தபட்சம் அதையாவது பேசினீர்களே, மகிழ்ச்சி. ஆனால் அப்படி பாகுபடுத்திப் பார்க்கும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு பாதிக்கப்பட்டவருக்கு அறிவுரை வழங்குவது, அல்லவா? இது எவ்வளவு வன்முறையானது, ஆபாசமானது என்பதை உணர முடிகிறதா உங்களால்?
முதல் விளம்பரத்தில், ஒரு அதிகாரி உங்கள் மிளிரும், விரைப்பான உடையக் கண்டு சுரேஷ் என்பவராக உங்களை நினைத்து புன்னகையுடன் அழைக்கிறார், அது தாங்கள் இல்லை என்றதும் மங்கலான கசங்கிய சட்டையுடன் வரும் மற்றொருவரைப் பார்த்து அந்த அதிகாரியின் முகம் கோணுகிறது. சந்திப்பதை தவிர்த்து செல்கிறார். ஆம் இதுதான் சமூக யதார்த்தம்.
அடுத்த விளம்பரத்தில் நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கும் ஒருவர் தன்னுடைய MERITகளை சொல்லி பெருமை பேசுகிறார், ஆனால் அதே திறமைகளைக் கொண்டிருக்கும் உங்களின் உடைக்காக அந்த நிறுவனம் உங்களை தேர்ந்தெடுப்பதாகச் சொல்கிறது. உடனே “இந்த உலகம் நம்ம திறமையை மட்டுமல்ல, நம்ம டிரஸ்ஸையும் எடை போடும்” என்று உருக்கமாகப் பேசுகிறீர்கள்.
ஆனால் இதற்குத் தீர்வு – உஜாலாவுக்கு மாறுவதா? அல்லது அப்படி பேசிய அதிகாரியின் சட்டையைப் பிடித்துக் கிழிப்பதா? உங்கள் திரைப்படங்களில் அநியாயங்களை எதிர்த்தும், ஒடுக்குபவனை அடித்தும் பேசும் தார்மீக்க் கோபங்கள் எங்கு போனது? உங்களைப் போன்றோரை கதாநாயகனாக கட்டமைக்க ‘படைப்பாளிகள்’ அக்கறையோடு புனையும் வசனங்களையும், சிந்தனைகளையும் ஓய்வாக இருக்கும் போது அசை போட்டு பார்த்தாலே, கொஞ்சமேனும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுமே. அதில் பெண் விடுதலைக்கு இடமில்லை எனினும், அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டும், ஏற்றத்தாழ்வு கூடாது என்னும் Formula உணர்வையாவது எடுத்துக்கொள்ளலாமே.
இந்த நாட்டில் (உலகெங்கிலும்) மொழி, இனம், சாதி, மதம், பாலினம், உடல் திறன் என்று பல்வேறு ’அடையாளங்களை’ வைத்து மனிதர்கள் பாகுபாட்டிற்கு உள்ளாகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், அடித்துக் கொல்லப்படுகிறார்கள். எல்லாரும் உஜாலாவுக்கு மாறிவிட்டால் தப்பித்துக்கொள்லலாமா? உலகம் இப்படித்தான் இருக்கு நாமதான் மாறணும் என்பது என்னவிதமான சமூக அக்கறை, என்னவிதமான அரசியல் புரிதல்? பெண்களும், குழந்தைகளும் வன்புணர்வுக்குள்ளாகையில் அவர்களின் உடைதான் காரணம் என்று இந்த ஆணாதிக்க சமூகம் வியாக்கியானம் செய்கிறதோ, அதற்கு நிகரான ஒரு உபதேசத்தை நீங்கள் இந்த விளம்பரத்தில் செய்துள்ளீர்கள். அதைப் பார்க்க பார்க்க நெஞ்சு பதைபதைக்கிறது. விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்குத் தான் அதில் உள்ள ஆபத்தான வணிகப் பேச்சின் பாதிப்பு புரியும். நீங்கள் எல்லாம் ‘மேட்டுக் குடியினர்’ உங்களைப் போன்றோருக்கு ‘சமூக அக்கறை’ என்பது பொழுதுபோக்கு, பெயர், புகழ், புண்ணியம் சேர்க்கும் வழிமுறையாக இருக்கலாம். எங்களுக்கோ அது வாழ்க்கைப் போராட்டம். போராட்டமே எங்கள் வாழ்க்கை என்னும் நிலையில் உள்ளோம். போராடுபவர்கள் அதற்கும் உரிமை இன்றி சிறையிலடைக்கப்படுகிறார்கள். போலீஸும் அரசும் அப்படித்தன் ஒடுக்கும், விரைப்பான உடை அணிந்து சென்றால் விட்டுவிடும் என்று நாம் சொல்ல முடியாது சூர்யா.
இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் திரள் (உழைப்பாளிகள்) உடுத்த கோவணம் கூட இல்லாமல் இருப்பதைக் கண்ட காந்தி தன் மேலாடையைத் துறந்தார். இந்த விளம்பரத்தில் வருவது போல் - பிறப்பாலேயே ஒரு பிரிவினர் தீண்டத்தாகாதோர், நாகரீகமற்றோர், குற்றப்பழங்குடிகள் என்றெல்லாம் ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து தலைவனாய் மேலெழுந்த அம்பேத்கர் ’நாகரீக’ உடை அரசியலை கையிலெடுத்தார். அப்போதும் அவரது சாதியைச் சொல்லி ஆதிக்க சமூகம் அவரை அவமானப்படுத்தி, ஒதுக்கி வைத்து கொடுமைகள் செய்தது. தங்களை வன்புணர்வு செய்யும் இராணுவத்திற்கு எதிராக பெண்கள் சிலர் முழுவதுமாக ஆடைகளைத் துறந்து தங்கள் நிர்வாண உடலை ஆயுதமாக்கினர். இப்படிப்பட்ட போராட்டங்கள் எல்லாம் அதிகாரத்திற்கு எதிராக ஆயுதமேந்துவதாக இருந்ததே ஒழிய பாதிக்கப்பட்டவர்களுக்குப் (வணிக ரீதியான) பொருள்களை வழங்கி உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. முதலாளிகளே உங்கள் விடிவெள்ளி, அவர்கள் தயாரிக்கும் பொருள்களே எங்கள் ‘உயர்வுக்கு’ வழி என்பது எவ்வளவு சுயநலம் மிக்க போதனை.

சமத்துவத்தை நிலைநாட்ட யார் மாற வேண்டும்?

நீங்கள், இயலாதவர்களுக்கு கல்வி கொடுக்கும் இலட்சிய அமைப்பை நடத்துகிறீர்கள்.
முதலாளிகளுக்கு மலிவான கூலிகளை உற்பத்தி செய்வதற்கான கல்விதான் அது எனினும், அதன் பயனைக் கூட வீணடிப்பதில் திரைப்படங்களும், விளம்பரங்களும் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.
உலகெங்கிலும் வறுமையே மரணத்திற்கான முதல் காரணமாக இருக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள். ஒருநாளைக்கு 20 ரூபாயில் வாழும் நிலையில் 836 மில்லியன் மக்கள் இருப்பதாகவும், தினம் தினம் 7000 இந்தியர்கள் வறுமையின் காரணமாக இறப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் குழந்தைகள், பெண்களின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில், ஆனால் நமக்கிருக்கும் கவலையோ முதலாளிகளின் பொருள்களுக்கு நுகர்வோரைப் பிடித்துக் கொடுத்து (ஆம், ஆட்பிடிக்கும் வேலைதான் அது) அவர்களை காப்பதாகவே இருக்கிறது.
மிகவும் வேதனையாக உள்ளது சூர்யா.
திரைத்துரையில் பெரும்பாலும் எதையோ செய்து பிழைக்கிறீர்கள்… பிற்போக்குத்தனமான சிந்தனைகளை உயர்த்திப் பிடித்து இந்த சமூகத்தை பின்னுக்குத் தள்ளுவதில் முனைப்புடன் இருக்கிறீர்கள். அதை பொறுத்துக்கொள்கிறோம். ஆனால் விளம்பரங்களிலும் அதுபோன்ற கருத்தியல்களை போதித்து இச்சமூகத்தை சீரழிவிற்குத் தள்ளிவிடாதீர்கள். ஏனென்றால் திரைப்படம் என்பதை பார்க்க அல்லது பார்க்காமல் இருக்க குறைந்தபட்ச தேர்வு எங்களிடம் உள்ளது, ஆனால் விளம்பரம்என்பது எங்களின் அனுமதியின்றி எங்கள் படுக்கையறை வரை எட்டிப் பார்க்கும் சாதனம். அது மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிறது. குறிப்பாக குழந்தைகள் விளம்பரங்களால் மிகவும் ஈர்க்கப்படுகின்றனர். அவர்களின் சிந்தனைகளை விளம்பரங்கள் கட்டமைக்கவல்லது. குறிப்பாக தரம், அந்தஸ்து, வெற்றி, இலட்சியம் பற்றி விளம்பரங்கள் போதிப்பவை எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு மனிதனை மனிதன் வெறுக்கச் செய்தலே. அதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது பெரும் சவாலாக மாறி வருகிறது.
இச்சமூகத்தை நுகர்வு கலாச்சார அடிமைகளாக்குவதில் விளம்பரங்களே பெரும்பங்கு வகிக்கின்றன. அதனால் பயனடைவது முதலாளிகளே அன்றி மக்கள் அல்ல. Pl do not work hard to make a Capitalist Rich at the cost of our lives & problems.
கூடுதலாக இதற்கும் ஆலோசனை வழங்குங்கள்: பெண்கள் என்பதால் அவர்களின் உடலை இழிவாகப் பார்க்கும், நுகர நினைக்கும், வன்புணர்வால் சிதைக்கும் “எக்சக்குட்டிவ் லுக்கிலிருந்து” தங்களைக் காத்துக்கொள்ள பெண்கள் எதற்கு மாற வேண்டும்?
உங்களைப் போன்று உச்சத்தை எட்டாமல் கூலிக்கு மாறடிக்கும் நிலையில் உள்ளவர்களை நோக்கி நாம் இக் கேள்விகளை எழுப்பும் அவசியமில்லை, ஆனால் எல்லாவிதத்திலும் இன்று நீங்கள் ஓர் உயர்நிலையை எட்டியுள்ளீர்கள். தேர்வு செய்யும் சுதந்திரமும், அதிகாரமும் உங்களிக்கிருக்கிறது. அதை கூருணர்வுடன் பயன்படுத்துங்கள்.
உங்களின் சமூக அக்கறையின் காரணமாகவே இந்த வேண்டுகோளை நாங்கள் விடுக்கிறோம். அத்தோடு, இது உங்களுக்கு மட்டுமான வேண்டுகோளன்று விளம்பரங்களில் நடிக்கும் அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் இதுபோன்ற ஆபத்தான, பிற்போக்குத்தனமான, வணிகரீதியான சமூக அக்கறையை பண்டமாகப் பயன்படுத்தி விளம்பரங்களை உருவாக்கும் ‘படைப்பாளிகள்’ ஆகியோரிடமும் வைக்கும் வேண்டுகோள்.
விளம்பரங்கள் மிகவும் ஆபத்தான பிரச்சாரம் … சமூக பொறுப்புடன் செயல்படுங்கள்.
நன்றி
கொற்றவை

Feb 15, 2012

பெண்மையை இழிவுபடுத்தும் இமாமி முகப்பூச்சு விளம்பரத்தை தடை செய்ய வேண்டும்


மாசெஸ் அமைப்பு இமாமி முகப்பூச்சு விளம்பரத்தில் பெண்கள் இழிவு படுத்தப்படுவதைக் கண்டிக்கிறது.  நடிகர் சூர்யா மற்றும் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஒளிபரப்பப்படும் விளம்பரம் ஒன்றில் -  ஒரு பயிலாவன் பெண்களுக்கான முகப்பூச்சை பூசுவதை எள்ளல் செய்கிறது. அங்கு அவதாரமாக தோன்றும் சூர்யா / கான் அந்த பயில்வானை நோக்கி "ஐய்யோ இன்று பெண்களுக்கான க்ரீம், பிறகு நெயில் பாலிஷ், பின்னர் லிப்ஸ்டிக்கா" என்று கர்ஜிக்கவும், பயில்வான் தன்னை ஒரு பெண்ணின் உடையோடு கற்பனை செய்து பார்ப்பார். உடனே சூர்யா கையெடுத்துக் கும்பிட்டு "Fair & Handsome cream for men" உபயோகிங்க என்று ஆணையிடுவார். அதை உபயோகித்து வெள்ளையாகிவிடும் "ஆண்மை" நிறைந்த அந்த பயில்வானைச் சுற்றி தாவணி கட்டியப் பெண்கள் "ஹாய் ஹேண்ட்ஸ்ம், ஹாய் ஹேண்டஸ்ம்" என்று ஆடி பாடியபடி அவரை உரசிக்கொண்டு அவரது 'ஆண்மையை' போற்றுவர்.

இந்த விளம்பரத்தில் நாம் கவனிக்க வேண்டியது மீசை.  ஆண்மைக்கு அடையாளமாக சில மயிர்களை உயர்த்திப்பிடிக்கும் ஆணாதிக்கம், அந்த பயில்வானுக்கும், இந்தியில் ஷாருக்கானுக்கும் அதை செயற்கையாக ஒட்டி...அவர்களது ஆண்மையை எடுத்துரைக்கிறது.  சூர்யாவின் மீசை 'சிங்கம்' மீசை.

ஆணுக்கு பெண்ணைக் கவர்வதை விட்டால் வேறு வேலையே இல்லையா. கருமை நிறம் அத்தனை அவமானகரமானதா? பெண்மை என்பதும் ஆணாதிக்க கருத்தாக்கமே, அதை அவர்களே உருவாக்கி, அவர்களே எள்ளலும் செய்கின்றனர்.  பெண்கள் எப்பொழுதும் வெள்ளை நிறத்தோலையும், அழகான, வாளிப்பான ஆண்களைத் தான் விரும்புவர் என்பது பெண்களை இழிவு படுத்தும் ஒரு பிரச்சாரம். ஆண்மை பற்றிய 'கட்டளைகள்' ஆண்களுக்கும் மன அழுத்தம் கொடுப்பவை. பெண்ணால் நிராகரிக்கப்படுவது அவமானகரமானது என்று அவர்களை ஒரு தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுகிறது அது.

அந்த பிரச்சாரத்தில் பெண்களுக்கான முகப்பூச்சை பயன்படுத்துவது அவமானகரமானது என்பது போல் கர்ஜிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  அத்தோடு முகப்பூச்சு விளம்பரங்கள் அனைத்தும் நிறவெறி, இனவெறி, பாலினப் பாகுபாடு நிறைந்தவை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.  அதுமட்டுமல்லாமல் மூன்றாம் பாலினத்தவர் இழிவுபடுத்தப்படுவதற்கும் ஆண்மை, பெண்மைக் கருத்தாக்களே காரணம். இருமைவாதத்திற்குள்ளேயே விளம்பரங்களும், திரைப்படங்களும் தங்கள் கதைகளை உருவாக்குகின்றன. இது முற்றிலும் இயற்கைக்கு விரோதமானது. இருக்கும் தோற்றத்தை நிராகரித்து அழகூட்டிக்கொள்ளச் சொல்லும் அணைத்து பண்டங்களும் இயற்கைக்கு விரோதமானவையே.

ஆணாதிக்க முதலாளித்துவ பண்டங்கள் பெரும்பாலும் பாலினவாதத்தை, பிரிவினைவாதத்தை, இயற்கை நிராகரிப்பை முன் வைக்கும் விளம்பரங்கள் மூலமே சந்தைப்படுத்தப்படுகின்றன. இப்போக்கை இனியும் ஊக்குவிக்கக்கூடாது.

சமத்துவ சமுதாயத்தில், பெண் விடுதலையில் அக்கறையுடையோர் இவ்விளம்பரத்திற்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள பிரச்சாரத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  இவ்விளம்பரத்தை இமாமி நிறுவனம் திரும்பப்பெற வேண்டும்.  இல்லையெனில் நீதிமன்றத்த்தை அணுகவும் மாசெஸ் அமைப்பு தயங்காது.  அந்நிறுவனம் இவ்வெதிர்ப்பை பொருட்படுத்த நிறையே பேரின் கையெழுத்து தேவைப்படுகிறது.  ஆதரவு தெரிவியுங்கள் தோழர்களே.

கையெழுத்திட - https://www.change.org/petitions/ask-emami-group-to-stop-telecasting-gender-discriminating-advertisement-fair-and-handsome-cream-for-men-bailwan-advertisement-should-be-withdrawn

மாசெஸ் அமைப்பில் இணைய தொடர்பு கொள்க - kotravaiwrites@gmail.com

முகப்புத்தக பக்கம்: http://www.facebook.com/pages/MASES-Movement-Against-Sexual-Exploitation-and-Sexism/280244415362023

m.a.s.e.s blog - http://masessaynotosexism.wordpress.com/