மாசெஸ் அமைப்பு இமாமி முகப்பூச்சு விளம்பரத்தில் பெண்கள் இழிவு படுத்தப்படுவதைக் கண்டிக்கிறது. நடிகர் சூர்யா மற்றும் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஒளிபரப்பப்படும் விளம்பரம் ஒன்றில் - ஒரு பயிலாவன் பெண்களுக்கான முகப்பூச்சை பூசுவதை எள்ளல் செய்கிறது. அங்கு அவதாரமாக தோன்றும் சூர்யா / கான் அந்த பயில்வானை நோக்கி "ஐய்யோ இன்று பெண்களுக்கான க்ரீம், பிறகு நெயில் பாலிஷ், பின்னர் லிப்ஸ்டிக்கா" என்று கர்ஜிக்கவும், பயில்வான் தன்னை ஒரு பெண்ணின் உடையோடு கற்பனை செய்து பார்ப்பார். உடனே சூர்யா கையெடுத்துக் கும்பிட்டு "Fair & Handsome cream for men" உபயோகிங்க என்று ஆணையிடுவார். அதை உபயோகித்து வெள்ளையாகிவிடும் "ஆண்மை" நிறைந்த அந்த பயில்வானைச் சுற்றி தாவணி கட்டியப் பெண்கள் "ஹாய் ஹேண்ட்ஸ்ம், ஹாய் ஹேண்டஸ்ம்" என்று ஆடி பாடியபடி அவரை உரசிக்கொண்டு அவரது 'ஆண்மையை' போற்றுவர்.
இந்த விளம்பரத்தில் நாம் கவனிக்க வேண்டியது மீசை. ஆண்மைக்கு அடையாளமாக சில மயிர்களை உயர்த்திப்பிடிக்கும் ஆணாதிக்கம், அந்த பயில்வானுக்கும், இந்தியில் ஷாருக்கானுக்கும் அதை செயற்கையாக ஒட்டி...அவர்களது ஆண்மையை எடுத்துரைக்கிறது. சூர்யாவின் மீசை 'சிங்கம்' மீசை.
ஆணுக்கு பெண்ணைக் கவர்வதை விட்டால் வேறு வேலையே இல்லையா. கருமை நிறம் அத்தனை அவமானகரமானதா? பெண்மை என்பதும் ஆணாதிக்க கருத்தாக்கமே, அதை அவர்களே உருவாக்கி, அவர்களே எள்ளலும் செய்கின்றனர். பெண்கள் எப்பொழுதும் வெள்ளை நிறத்தோலையும், அழகான, வாளிப்பான ஆண்களைத் தான் விரும்புவர் என்பது பெண்களை இழிவு படுத்தும் ஒரு பிரச்சாரம். ஆண்மை பற்றிய 'கட்டளைகள்' ஆண்களுக்கும் மன அழுத்தம் கொடுப்பவை. பெண்ணால் நிராகரிக்கப்படுவது அவமானகரமானது என்று அவர்களை ஒரு தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுகிறது அது.
அந்த பிரச்சாரத்தில் பெண்களுக்கான முகப்பூச்சை பயன்படுத்துவது அவமானகரமானது என்பது போல் கர்ஜிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அத்தோடு முகப்பூச்சு விளம்பரங்கள் அனைத்தும் நிறவெறி, இனவெறி, பாலினப் பாகுபாடு நிறைந்தவை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மூன்றாம் பாலினத்தவர் இழிவுபடுத்தப்படுவதற்கும் ஆண்மை, பெண்மைக் கருத்தாக்களே காரணம். இருமைவாதத்திற்குள்ளேயே விளம்பரங்களும், திரைப்படங்களும் தங்கள் கதைகளை உருவாக்குகின்றன. இது முற்றிலும் இயற்கைக்கு விரோதமானது. இருக்கும் தோற்றத்தை நிராகரித்து அழகூட்டிக்கொள்ளச் சொல்லும் அணைத்து பண்டங்களும் இயற்கைக்கு விரோதமானவையே.
ஆணாதிக்க முதலாளித்துவ பண்டங்கள் பெரும்பாலும் பாலினவாதத்தை, பிரிவினைவாதத்தை, இயற்கை நிராகரிப்பை முன் வைக்கும் விளம்பரங்கள் மூலமே சந்தைப்படுத்தப்படுகின்றன. இப்போக்கை இனியும் ஊக்குவிக்கக்கூடாது.
சமத்துவ சமுதாயத்தில், பெண் விடுதலையில் அக்கறையுடையோர் இவ்விளம்பரத்திற்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள பிரச்சாரத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்விளம்பரத்தை இமாமி நிறுவனம் திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்த்தை அணுகவும் மாசெஸ் அமைப்பு தயங்காது. அந்நிறுவனம் இவ்வெதிர்ப்பை பொருட்படுத்த நிறையே பேரின் கையெழுத்து தேவைப்படுகிறது. ஆதரவு தெரிவியுங்கள் தோழர்களே.
கையெழுத்திட - https://www.change.org/petitions/ask-emami-group-to-stop-telecasting-gender-discriminating-advertisement-fair-and-handsome-cream-for-men-bailwan-advertisement-should-be-withdrawn
மாசெஸ் அமைப்பில் இணைய தொடர்பு கொள்க - kotravaiwrites@gmail.com
முகப்புத்தக பக்கம்: http://www.facebook.com/pages/MASES-Movement-Against-Sexual-Exploitation-and-Sexism/280244415362023
m.a.s.e.s blog - http://masessaynotosexism.wordpress.com/
