Showing posts with label #gender. Show all posts
Showing posts with label #gender. Show all posts

Sep 25, 2015

பெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே

//அப்படியானால் படத்தில் என்னதான் இருக்கிறது? காதல் என்னும் பாவனையில் ஆண் பெண் உறவுக்கான ஏக்கம் காட்சி ரீதியாகவும் வசனங்களின் மூலமாகவும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. இவற்றை எந்த அளவுக்குச் சில்லறைத்தனமாகவும் ஆபாசமாகவும் வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கிறார்.// ((திரிஷா இல்ல நயந்தாரா திரை விமர்சனம் - tamil hindu)

திரைப்படங்களை / படைப்புகளை பெண்ணிய நோக்கிலிருந்தும் விமர்சனபூர்வமாக அணுகும் வெகு சிலரில் அரவிந்தனும் ஒருவர். அவருடைய திரை விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை. அனைவரும் படிக்க வேண்டிய ஒன்றும்கூட...

நான் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் பிட்டு படம்டி எனும் பாடல் கேட்டபோதே நிச்சயமாக இது ஒரு கேவலமானப் படமாகத்தான் இருக்கும் என்று யூகித்திருந்தேன். தன் மேல் நம்பிக்கை இல்லாத ஒருவரே இப்படி விடலைப் பருவ காம உணர்வுகளையும், பெண்களை தூற்றுபவர்களாகவும்.. அதிலும் குறிப்பாக காதலில் பெண்கள் ஏமாற்றுபவர்கள், மோசமானவர்கள் என்பதாக மிகைப்படுத்தி ஏதோ ஆணினத்தை இரட்சிக்க வந்தவர்கள் போல் தங்களை முன்வைப்பர்.

நடிகர் விஜய் இந்தப் பாதையைத்தான் முன்னெடுத்தார். அதற்கு அவர் தந்தையே வழிகாட்டி. அதேபோல் சிம்பு, தனுஷ் என்று பட்டியல் நீள்கிறது. பெண்களை சபிப்பதன் மூலம்… பெண்ணினத்தை தாழ்த்துவதன் மூலம் இவர்கள் ஒரு பெரும் கூட்டத்தை தங்களின் ரசிகர்களாக உருவாக்கலாம், ஆனால் பெண்களுக்கெதிரான மோசமான நஞ்சையே இவர்கள் விதைக்கின்றனர் என்பதை அவர்கள்தான் அறியவில்லை, அல்லது அறிந்தும் ‘பிழைப்பிற்காக’ முதுகெலும்பற்ற காரியத்தை செய்கின்றனர் என்றால் அவர்கள் வீட்டுப் பெண்கள் எப்படி இதை சகித்துக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை.

பெண் பற்றிய ஆபத்தான கருத்தியல்களை விதைப்பதிலும், ஆணாதிக்க கட்டமைப்பை அப்படியே கட்டிக்காப்பதிலும் திரைப்படங்கள் மற்றும் இதர ஊடகங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. உண்மையில், பெண்களைப் பற்றி மட்டுமின்றி ஆண்களையும் சதா சர்வ காலம் பெண்ணையே சார்ந்திருப்பவராகவும், பெண்ணுக்காக அலைபாய்பவராகவும், காமமே கண்ணாய் இருப்பவர்களாகவும் காட்டும் இந்த ஆபாச பிழைப்புவாதப் போக்கை உண்மையில் எதிர்க்க வேண்டியவர்கள் ஆண்களே.
ஆணையும் பெண்ணையும் பிரித்தாளும் செயல்களின் மூலம் இலாபமடைபவர்கள் முதலாளிகள் / நடிகர்கள் ஆனால் பெரும் நஷ்டமடைவது சமூகம். அந்த சமூகம் என்பதில் உங்கள் வீட்டுப் பெண்ணும் அடக்கம் என்பதை ஆண்கள் நினைவுகொள்ள வேண்டும்.
பெண் இனத்தை மீண்டும் மீண்டும் கொச்சைப் படுத்துவதும், குடித்துவிட்டு பெண்களை சபித்துக்கொண்டே இருப்பதும், பெண்களைத் தாழ்த்துவதுமாக இருக்கும் இவர்களுக்கு உண்மையில் பெண் உடலைக் காட்டாமல் பிழைப்பு நடத்தும் துணிவு இருக்கிறதா?
இதில் பெண்களின் பங்கு இல்லையா? அதில் நடிப்பவரும் ஒரு பெண்தானே என்றெல்லாம் அங்கலாய்ப்பவர்களுக்கு ஒரே ஒரு பதில்தான் என்னிடம் உள்ளது: ஆண், பெண் இருவரும் இதே ஆணாதிக்க சமூகத்தில்தான் பாடம் கற்கிறோம். பொது ஆணிற்கு இருக்கும் அதே அறியாமைதான் பொது பெண்ணிற்கும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, பெண் என்பவள் victimize செய்யப்பட்டவள், அவளுக்கு அத்தகைய வாய்ப்புகளே வழங்கப்படுகின்றன.ஆனால் அவர்களுக்கும் தார்மீக பொறுப்பு உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை.

ஆனால், முதன்மையில் இங்கு நாம் குறை சொல்வது ஆணினத்தை அல்ல, ஆணாதிக்க சமூகத்தின் சிந்தனைகளைக் கொண்டு தம் பிழைப்பை ஓட்ட நினைக்கும் அந்த ‘படைப்பாளர்கள்’ பற்றி மட்டுமே. அத்தகையவர்கள் ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம். இந்த சமூகத்தின் முன் எவர் ஒருவர் ஒரு படைப்பின் மூலம், செயலின் மூலம் ஒரு சிந்தனையை, ஒரு உடையாடலை, ஒரு படைப்பை முன் வைக்கிறாரோ – (அதாவது கருத்து சொல்லிகள்) அவர் பற்றிய விமர்சனமே இது. அத்தகையோருக்கு பொது புத்தியில் உள்ளவர்களைக் காட்டிலும் கூடுதல் பொறுப்புள்ளது….

ஜீ.வி பிரகாஷ், ஆதிக் மற்றும் அதுபோன்ற திரைத்துறையினர் தம் செயலுக்காக உண்மையில் வெட்கித் தலை குனிய வேண்டும்.

அரவிந்தனின் சொற்களில் சொல்வதானால் //ஆதிக் இப்போதுதான் திரை உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவரது பார்வை விசாலமாகி, திறமையும் கலை உணர்வும் வளர்ந்து செழித்து அவரால் பல நல்ல படங்களைத் தர முடியலாம். அப்படி நேரும் பட்சத்தில் தன் முதல் படத்தை நினைவுகூரும்போது அவருக்குக் கட்டாயம் கூசும்.//

Related Links: 

http://tinyurl.com/nbcbtsn
http://www.cinemapettai.com/news/ladies-hates-trisha-illana-nayanthara/ 

@CameoFilmsIndia   
SonyMusicSouth @Aadhikravi

Sep 6, 2013

ஆடைக் கட்டுப்பாடு தேவை எனும் பரிந்துரை மீதான விவாதம்



5 செப்டம்பர், 2013 – ஆசிரியர் தினமன்று புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை மாணவ மாணவியருக்கு #ஆடைக் கட்டுப்பாடு கொண்டுவர முடிவு செய்திருப்பதாக வந்த ஒரு செய்தி குறித்த விவாதம் நடந்தது. அந்த விவாதத்தின் காட்சிப் பதிவும், அதை ஒட்டிய எனது பார்வையும்:

நம் சமூகத்தில், ஏன் உலகெங்கிலும் கூட குற்றங்கள் நிகழும்போது பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் வழங்குவதற் பதில் அவரையே குற்றவாளியாக்கி, அவர்கள் மீது ‘கட்டுப்பாடுகள்’ கொண்டுவருவது என்பது வழக்கமாக நடந்துவருகிறது. குறிப்பாக பெண்களுக்கெதிரான குற்றங்களில் எப்போதும் அவளது நடை, உடை, பாவனை, நடத்தை இவையே குற்றத்திற்கு தூண்டுகோலாக அமைகிறது என்றொரு ‘ஆணாதிக்க’ கூச்சல் ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. பெண்ணை ஒடுக்கினால், கொச்சையாகச் சொல்லப்போனால், ”பொம்பளையக் கையக் கால ஒடிச்சு வீட்டுக்குள்ள உக்காரவச்சா எல்லாம் சரியாப் போகும்பா” என்பதே பொதுபுத்தியின் வரையரை.

இதை அப்படியே முன்மொழியுமாறு இருக்கிறது உயர்கல்வித் துறை இயக்குனர் செந்தமிழ் செல்வியின் பரிந்துரை.  கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இந்தத் தடை வரவிருக்கிறது, சில பொறியியல் கல்லூரியில் இது ஏற்கணவே நடைமுறையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் மருத்துவக் கல்லூரி, மற்ற கல்வி நிறுவனங்களுக்கு அது தேவை இல்லையா?

கவனச் சிதறல் ஏற்படாமல் இருக்கவும், பாலியல் அத்துமீறலிலிருந்து பெண்களைக் காக்கவும், சில ஒழுங்குகளை போதிக்கவுமே இதைப் பரிந்துரைப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு பெண்ணின் உடையைப் பார்த்து ஒரு ஆணுக்கு கவனச் சிதறல் ஏற்படும் என்றால், ஒரு ஆணுக்கு ஆணின் உடையையப் பார்த்தும் கவனச் சிதறல் ஏற்படும். அந்த ஆடையின் ’ரகத்தைப்’ பொறுத்து அந்த ஆடை குறித்து தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயல்பானது. இதற்கு பாலியல் பேதமில்லை.  அதேபோல் அந்த வாதத்தில் மனுஷ்யபுத்திரன் சொன்னதுபோல், தம் சக மானவரின் உடலமைப்பு, ‘அழகு’ இவற்றாலும் ஒருவருக்கு ‘கவனச் சிதறல்’ ஏற்படும். இவ்வளவு ஏன் ஆசிரியர்கள் அணிந்துவரும் உடைகளைக் கண்டு, ஆசியர்கள் பாடம் நடத்தும் விதத்திலிருந்து, ஆசிரியர்களின் கையாளும் திறன், அவர்களது மனப்பான்மை, இத்யாதி இத்யாதி காரணங்களாலும் கவனச் சிதறல் ஏற்படும். வீட்டில் ஏற்பட்ட ஒரு சண்டை காரணமாக, ஏன் அன்று நடந்த ஏதோ ஒரு சமூகப் பிரச்சனையின் காரணமாகக் கூட ஒரு மாணவருக்கு கவனச் சிதறல் ஏற்படலாம். கவனச் சிதறல் ஏற்பட்டால் உன்னை கல்லூரியிலிருந்து வெளியேற்றிவிடுவோம் என்றொரு சட்டம் கொண்டுவந்தாலும் வியப்பில்லை. ஆற்றலோடு இயங்கும் ஒரு மூளை ஒரே நேரத்தில் பல்வேறு விசயங்களை சிந்திப்பது என்பது வெகு இயல்பானது, மூளை பயணிக்கும் வேகத்தில் ஒலி கூட பயணிக்க முடியாது. இந்தச் செயல்பாட்டை எவரும் தடுக்கவும் முடியாது, ‘மூடிய’ ஆடைகளை அணிந்து வந்தாலும், சரி, ‘ஃபார்மல்ஸ்’ அணிந்துவந்தாலும் சரி, ஒருவர் தனக்கான உலகில் மூழ்குவதை எவரும் தடுக்கவியலாது. ஆசிரியரின் பாடம் நடத்தும் தன்மையும், அந்தக் கல்லூரி தரும் அனுபவம் மட்டுமே இதற்கு ஓரளவுக்கு தீர்வாக அமையும்.

இரண்டாவது வாதம், பாலியல் ஒழுங்கு பற்றியது. உலகமயமாக்கல் சூழலிலும், முதலாளித்துவத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் ‘சுதந்திரம்’ குறித்து நான் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன். கடுமையான சில கேள்விகளையும் வாதங்களையும்கூட முன்வைத்திருக்கிறேன். ஆனால் அது எல்லாமே எமது இனத்தோடும், எம் சக மனிதர்களோடும் நான் உரையாடலுக்காக முன் வைக்கும் எனது அவதானிப்புகள், கேள்விகள். உடை என்பது ஒருவித அடையாள மொழியாகிவிட்டச் சூழலில், அது அறிவு, அந்தஸ்து, முற்போக்கு, ஆளுமை என்று புறச் சூழல், ஊடகங்கள், சந்தைகள் கட்டமைத்துவருவதையும், அது தொடர்ந்து பெண்களைப் பாலியல் பண்டம் என்றே வரையறுத்து வருவதையும் எவரும் மறுத்துவிட முடியாது. பெண்களுக்கு அழகொன்றே அடையாளம் என்பதை வலியுறுத்தும் அரசியலே ஆடைகளின் வழி ஏற்றிவைக்கப்படுகிறது. நுகர்வுக் கலாச்சார அடிமைகளாகிப் போவதின் ஆபத்துகளை நாம் பேசுவது அவசியம். அதை உரையாடலுக்கு உட்படுத்தி, அறிவூட்டும் செயலையும், சுய-மரியாதை மீட்பையும் மேற்கொள்ள வேண்டுமே ஒழிய இதைக் கட்டுப்பாடுகள் மூலம் செய்வதை நான் சர்வாதிகாரம் என்றே சொல்வேன். மேலும் இந்தப் பரிந்துரையை மேற்கொள்வோர் யாருமே இதை ‘சந்தைப் பொருளாதாரச்’ சிக்கலாகப் பார்ப்பதில்லை. ஆகவே இது முழுக்க முழுக்க ஒரு ஆணாதிக்க மனோபாவத்திலிருந்து வெளிப்படும் ஒரு கூற்றே.

கல்லூரிகளில் ஒரு 5 மணி நேரம் ஆடைக் கட்டுபாடு கொண்டுவருவதால் மாணவர்களின் மனநிலை மாறிவிடுமா? அது பாலியல் குற்றங்களைத் தடுக்க எந்த வகையில் உதவப்போகிறது? கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது, ஆடை ஒரு பிரச்சனையா? கல்லூரிக்கு வெளியே மாணவியர் என்ன உடை அணிந்தாலும் பரவாயில்லையா? எனும் கேள்விகள் பரவலாக வைக்கப்படுகின்றன. இது நியாயமான கேள்விகள். என் இடத்திற்கு வரும்போது நீ இப்படித்தான் இருக்க வேண்டும், வெளியே போய் நீ எக்கேடு கெட்டால் என்ன என்பது என்ன வகையான சமூக அக்கறை? இங்கு வந்தால், அங்கும் ஒழுக்கம் வந்துவிடும் என்றொரு அபத்த வாதத்தை ரேவதி வைத்தார். ஒரு பேராசிரியருக்கு ஆணாதிக்க சமூக கட்டமைப்பு பற்றிய சிறு புரிதலுமில்லை என்பது வேதனை தரும் ஒரு விசயம். கல்விக் கூடங்களின் தரம் இதுதான். பெண்ணியத்தின் உச்சம் என்றொரு சொல்லைப் பயன்படுத்தினார். சிரிப்பு வருகிறது. பெண்ணியம் என்றால் என்ன? பெண்ணாக இருப்பது, பெண்மையோடு இருப்பதா? பெண்மை என்றால் என்ன என்பது பற்றி எத்தனை விவாதங்களைப் பெண்ணியவாதிகள் எடுத்துரைத்துள்ளனர். இதையெல்லாம் இவரைப் போன்ற பேராசிரியர்கள் படிப்பதே இல்லை போலும். 

பானு கோம்ஸ் அவர்கள் ஒரு பெண்ணின் உடற்கூறின் காரணமாக ஆண் தூண்டப்படுவான், அதனால் ‘புரொவோக்’ செய்யும் விதமாக உடை அணியக் கூடாது என்றார். பெண் உடல் மீது ஆணாதிக்க முதலாளித்துவம் செலுத்தும் ஆதிக்கத்தை சுட்டிக்காட்டிப் பேசியிருந்தால் அறிவுள்ளதாய் இருந்திருக்கும், அதைவிடுத்து தூண்டப்படும் உணர்ச்சி ‘அறிவியல்பூர்வமாக’  மெய்ப்பிக்கப்பட்டது என்றொரு வாதத்தை வைத்தார். ‘உயிரியல்’ உணர்வுகளுக்கு அறிவியல் பூர்வ உண்மை என்பதற்கும் வேறுபாடு தெரியாதிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மேலும், பெண்களுக்கும் அத்தகைய தூண்டுதல் உணர்வுகள் ஏற்படும், சமூக ஒடுக்குமுறை காரனமாகவே பெண்கள் ஆண்டாண்டு காலமாக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வந்துள்ளனர். அது அவர்களின் மரபு வழி பயணித்துவருகிறது என்பதே உண்மை. தாய் குனிந்து உணவு பரிமாறும்போது ஒரு ஆணுக்கு உணர்ச்சி எழாதா என்ற சுசீந்திராவின் கேள்விக்கு கலாச்சார அதிர்ச்சியடைந்தவராக என்ன இவ்வளவு ஆபாசமாகப் பேசுகிறீர்கள் என்ற இவரது கேள்வி ஒன்றே போதும் இவருடைய மனப்பான்மையை விளக்குவதற்கு. பெண்களுக்கும் ‘உச்ச உணர்வு’ (orgasm) ஏற்படும் தெரியுமா என்று கேட்டிருந்தால், என்ன இப்படி காம வெறி பிடித்துப் பேசுகிறீர்கள் என்று கேட்டிருந்தாலும் வியப்பதற்கில்லை.

மனுஷ்யபுத்திரன் சீருடை சம்பந்தமாக ஒரு மாற்றுக் கருத்து வைத்தார். சாதி, பொருளாதாரம் போன்ற ஏற்றத்தாழ்வு மிக்க நமது சமூகத்தில் அதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் அந்தப் பார்வைகளை நாம் கணக்கில் கொண்டு விவாதம் மேற்கொள்வதும் அவசியமே. உடைகள் மூலம் தமது அந்தஸ்த்தை பறை சாற்றிக் கொள்ளும் ஒரு வேட்கையில் அனைவரும் மூளைச் சலவைக்குள்ளாகிவிட்ட சூழலில், சீருடை தேவையில்லை என்று அவ்வளவு எளிதில் புறம் தள்ளிவிட முடியாதென்றே நான் நினைக்கிறேன்.  

ஒழுக்கம் என்பது மனதில் இருக்கிறது என்று ஒரு சாராறும், இல்லை இல்லை உடல் கெட்டால் எல்லாம் போச்சு என்று மறு சாராறும் பேசுகின்றனர். மனது, உடல் எல்லாம் ஒன்றுதான். இரண்டிற்கும் மூளை தான் அடிப்படை. மூளை தேக்கி வைக்கும் பதிவுகளே நமக்கு காட்சியாகவும், நினைவாகவும் வருகிறது. அதையே நாம் மனம் என்கிறோம்.  அந்த மூளையில் என்ன ஏற்றிவைக்கப்படுகிறதோ அதனை மாற்றி வைப்பது அத்தனை எளிதானதல்ல. ஆண்மை, பெண்மை, ஒழுக்கம், சமூகம், பொறுப்பு, பார்வை, என எல்லாப் புரிதல்களும் சமூகமயமாக்கலின் விளைவே. இந்த விவாதம் முடித்து வெளியே வரும்பொழுது வசுமித்ர தொலைபேசியில் அழைத்து ஒரு கேள்வி கேட்டான்: “கல்விக் கூடங்களில் கவனச் சிதறல் ஏற்படக் கூடாது என்பதற்காக ஆடைக் கட்டுப்பாடு என்கிறார்களே.. ஆனால் கல்லூரி பேராசிரியர்களும், முதல்வர்களும் தம்மிடம் படிக்கும் மாணவிகளை வன்புணர்வு செய்து, கொன்று அவள் அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டால் என்று நாடகமாடி முடிக்கிறார்களே. அத்தகைய பேராசிரியர்கள், முதல்வர்கள் ‘மூடிக் கொண்டு’ வரும் மாணவிகளை வன்புணர்வு செய்ய மாட்டார்கள், பாலியல் அத்துமீறலில் ஈடுபட மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளிக்க முடியுமா என்று உனக்கு கேட்கத் தோன்றவில்லையா” என்றார். உண்மைதான் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் ஒருவேளை பேராசியரும், சமூக ஆர்வலரும் வாயடைத்துப் போயிருக்கலாம். வாய்ப்புகள் குறைவு, அதற்கும் அவர்கள் மாணவியின் உடையையும், ‘attitude’ ஐயுமே குறை சொல்லியிருப்பார்களோ என்னவோ..

திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டு மரணமடைந்தார் என்று சொல்லப்பட்ட அருந்ததியர் சமூக மாணவி காயத்ரியின் நினைவாக……நிச்சயமாக அவர் ‘கவர்ச்சியாக’ உடை அணிந்திருக்க வாயிப்பில்லை……


நேர்பட பேசு , புதிய தலைமுறை தொலைக்காட்சியில் - ஆடைக் கட்டுப்பாடு பரிந்துரை குறித்த விவாதம் -