Jul 24, 2012

எனது மனுவைப் பார்பதற்கான பூதக்கண்ணாடி:


நான் ஒரு வலதுசாரியாகவோ, மதவாதியாகவோ இருந்திருந்தால், இதழாசிரியர்களிடம் மனமாற்றத்தைக் கோருவதற்குப் பதிலாக, அதுபோன்ற புகைப்படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த நடிகைகளையும், பெண்களையும் சாடியிருப்பேன்.  அவர்களுடைய படங்களைப் போட்டு பதாகைகள் செய்து நடிகர் சங்கம் வாசலில் போராட்டம் நடத்தியிருப்பேன். எனது மனுவை இந்து முன்னணி அலுவலகத்தில் சேர்த்திருப்பேன்.
ஒரு மார்க்சியப் பெண்ணியவாதியாக நான் ‘உருவாக்குபவர்களிடம்’ பொறுப்பைக் கோருகிறேன். அவர்கள் தங்களின் இதழ்களில் வெளியிடும் கவர்ச்சிப் படங்கள் மூலம் பெண்களை பாலியல் பண்டமாக்குவதற்கும் பெண் பற்றிய தவறான கருத்தியல் தாக்கங்களை வளர்தெடுப்பதற்கும் பொறுப்பேற்கச் சொல்கிறேன். அது என்னை உண்மையில் கவலையில் ஆழ்த்துகிறது. முதலாளிகளுடைய மனசாட்சியைத் தட்டி எழுப்புவதற்கான பேச்சுவார்த்தையே எனது மனு.
நம் காலங்களில் நிகழும் பல்வேறு சமூக அவலங்களிலிருந்து மக்கள் அந்நியப்பட்டுப் போயிருப்பதற்கும், கண்டு கொள்ளாமல் மௌனம் காப்பதற்கும் வெகுஜன ஊடகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. அச்செயலுக்கு பெண் உடல் ஒரு முக்கியக் கருவியாகப் பயன்படுத்தப்டுகிறது.
ஒரு பெண்ணாக இது என்னைப் பாதிக்கிறது. பெண் உடலை இந்த வணிகமயச் சுரண்டல்வாதத்திலிருந்தும், பாலியல் பண்டமயமாக்கப்படுவதிலிருந்தும் மீட்டெடுக்க விரும்புகிறேன்.
நான் ஒரு வலதுசாரியாகவோ / மத அடிப்படைவாதியாகவோ / பிற்போக்குப் பெண்ணியவாதியாகவோ (இரண்டுக்கும் பொருத்தமேயில்லை) இருந்தால், இந்நேரம் ‘கண்ணியமான’ உடையைக் கோரி நீதிமன்றப் படிகள் ஏறியிருப்பேன். ‘பர்தா’ உடைக்கு எனது ஆதரவைத் தெரிவித்திருப்பேன்.
என் கட்டுரைகளைப் படித்தவர்கள், மதவாதிகளுக்கு என்னுடைய பதிலுரைகளைப் படித்தவர்கள் நிச்சயம் இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள முடியும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
நண்பர்களே சாக்கு போக்குகள் வேண்டாம்……..
நன்றி,
கொற்றவை.

No comments:

Post a Comment