Jun 24, 2022

திராவிட அரசியலின் வர்க்கச் சார்பு என்ன?

 தமிழ்நாடு / திராவிட மாடல் முற்போக்கானது! சமூக நீதி நிறைந்தது! வடக்கு போல் இல்லை என்று ஒரு வாதம் நிலவுகிறது! ”திராவிடம் தான் மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்று பிரபல ஊடகவியலாளர் சொல்கிறாராம். இவர் மார்க்சியத்தைப் படித்திருக்கிறாரா ஐயமே! படித்தும் இப்படி பேசுவார் என்றால் அது பிழைப்புவாதம்! அதோடு பாட்டாளி வர்க்கத்திற்கு இழைக்கும் துரோகம்! 

திராவிட அரசியல் என்பது நிலவுடைமை வர்க்கத்தின் தேவையிலிருந்து (பார்ப்பனரல்லாத கூட்டணியாக) உதித்தது, தற்போது முதலாளித்துவத்தோடு தகவமைகிறது!  அதில் ஆட்சியை பிடிக்கும் கட்சிகள் ”போட்டியின்” காரணமாக “முதலாளித்துவ ஜனநாயகத்தை” கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எந்த வகையிலும் அது மார்க்சியத்திற்கு இணையாகாது! மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதே தவறான சொல்லாடல்!

மார்க்சியம் என்பதே மண்ணுக்கேற்ற வகையில் ஆய்வு செய்து உத்திகளை கடைபிடிப்பது தான். அதற்கு எதற்கு முன்னொட்டு!

திராவிட அரசியலில் - பெரியார் இயக்கத்தால் உண்டான பகுத்தறிவு, பெண் விடுதலை இயக்கம், சாதி எதிர்ப்பு இயக்கத்திற்கென ஒரு நன்மதிப்பு உண்டு. ஆனால் அது பாட்டாளி வர்க்க விடுதலைக்கு போதுமானதல்ல! பார்ப்பன எதிர்ப்பு முதலாளித்துவ எதிர்ப்பாகாது!

உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் பார்ப்பனர்கள் வசம் என்றொரு கூட்டம் சொல்லி அனைத்தைம் பார்ப்பனியத்தின் மேல் போட்டுவிட்டு இடைநிலை சாதிகளின் வளர்ச்சி, முதலாளித்துவ, ஏகாதிபத்திய சக்திகளுடனான அரசுகளின் கூட்டணி பற்றி வாய் திறப்பதில்லை!

சமூக நீதி என்கிற சொல்லாடல் மூலம் உண்மையான சமத்துவம் எது என்பதையே மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்! உழைப்புச் சுரண்டலை ஒழிப்பதே உண்மையான சமூக நீதி! அது - அதாவது தனியுடைமை தகர்ப்பு திராவிட சித்தாந்தத்தில் இருக்கிறதா? சாதி ஒழிப்பிற்காவது தீர்வு உண்டா? மனசாட்சியோடு பேச வேண்டும்!

பகுத்தறிவு / முற்போக்கு சிந்தனை என்பது தொடக்கம்! நம் அவல வாழ்க்கை / சமூகப் பிரச்சினைகளுக்கான ஆணி வேர் பற்றிய முழுமையான கண்ணோட்டம் பெற மார்க்சியம் அவசியத் தேவை!

பகுத்தறிவு / பெரியார் / அம்பேத்கர் என்பது தொடக்கம்! கலகம் தொடங்கும்! தீர்வுக்கு மார்க்ஸ் அவசியத் தேவை!

#மார்க்சியம்

பெரியாரிடம் இந்த நிலைப்பாடு இருந்தது! ஆனால் திராவிட ஆட்சியாளர்களிடம் பாட்டாளி வர்க்க சார்பு உள்ளதா? தொழிலாளர் போராட்டங்கள் ஒடுக்கபப்டுவதில்லையா?



மார்க்சியம் நட்பு முரண்பாடு, பகை முரண்பாடு என்பதை கணக்கில் கொள்ளும்! பிஜேபி கூட்டணி சேராத திராவிட அரசியல் எங்களுக்கு நட்பு முரண்பாடு! பார்ப்பனியமும், முதலாளித்துவமும் பகை முரண்பாடு! RSS opp திராவிடத்திற்கு பார்ப்பனியம் பகை முரண்பாடு! முதலாளித்துவம்? இதை மனதில் வைத்து அணுகவும் :)

ஆதிக்கம் என்கையில் ஆதிக்க சிந்தனை மட்டும் நம் எதிரி ஆகாது! மூலதன ஆதிக்கமும் நம் எதிரியாக இருக்க வேண்டும்! அதை தகர்க்கும் கொள்கை அந்த “மாடலில்” இருக்க வேண்டும். அதுவல்லாத ஆட்சி என்பது முதலாளித்துவ “ஜனநாயக” ஆட்சி! சீர்திருத்தவாதம் போல் தோன்றும்! Its an existential game here.

 திராவிட மாடலின் போதாமை குறித்த எனது பதிவிற்கு வழக்கம் போல் சில திராவிட உணர்ச்சியாளர்கள் பொங்குகிறார்கள். மடக்கும் கேள்விகள் கேட்பதாக நினைப்பு! மார்க்சியம் படிச்சு அந்த கேள்விக்கு விடை தேடுங்க. இல்லையா ஒரு கம்யூனிஸ்ட் அமைப்புல போய் உங்க கேள்விகள கேளுங்க!

 திராவிட கட்சிகளுடன் ஏன் கூட்டணி என்பது உட்பட எல்லாத்துக்கும் பதில் சொல்வாங்க! உண்மையாகவே கற்றுக்கொள்ளும் நோக்கமும், சமூக விடுதலையில் அக்கறையும் இருந்தால் ஒருவர் அதைத்தான் செய்ய வேண்டும். உங்கள் வம்பளக்கும் தேவைக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க இயலாது! நன்றி நமக்கம்!

 தலித்தியம் ,பெண்ணியம், என அடையாள அரசியல் அனைத்திற்கும் இதே நிலைப்பாடுதான்! பெண்ணியத்திலும் மேட்டுக்குடி வர்க்க நிலைப்பாடு உண்டு. மார்க்சியக் கண்ணோட்டம் மட்டுமே அதை கட்டுடைக்க உதவும்! முற்போக்குடன் நட்பு முரண்பாடும்; தனியுடைமை ஆதரவிருந்தால் பகை முரண்பாடும் கொள்வதே பாட்டாளி வர்க்க அரசியல். அதுவே கம்யூனிஸ்ட் அரசியல். 

 

Jun 11, 2022

ஆடையும் பொள்ளாச்சி வல்லுறவும்

பொள்ளாச்சி வல்லுறவு நடந்த போது அந்த பெண்கள் என்ன உடை அணிந்திருந்தார்கள். செய்தவர்கள் யார் (தமிழன்!) வக்கிரம் புடிச்சவங்கள்ல ஆம்பிளை, பொம்பிளை, சாதி, மதம், மொழி, தெக்கு, வடக்கு, இனம் வேறுபாடு இல்லை! எல்லாத்துக்கும் அடிப்படை சமூகமயமக்கல்! பொது புத்திய தூக்கி எறிந்து விட்டு வளரனும்.

உடைல பண்பாட்டை தேடிட்டு இருக்கானுங்க! வக்கிர புத்திக்கும் பெண்களையே குத்தம் சொல்றது! தமிழர் உடை போடுறதால ஒரு ஆண் உத்தமனாகிடுறானா? மண்டைல அழுக்க வச்சிக்கிட்டு வெளிய வெள்ளையும் சொள்ளையுமா திரியுறது! புடவைய போத்த்திட்டு திரியுறதில்ல பண்பாடு!

எதிர்ல ஒரு பொண்ணு அம்மணமாவே உக்காந்திருந்தாலும் அவ விருப்பிம் இல்லாம அவளைத் தொடக் கூடாது என சொல்லி வளர்ப்பதே சிறந்த பண்பாடு!

ஆம்பிளைன்னா அப்படிதான் இருப்பான்! நீ தான் மூடிட்டு போகனும் என்று சொல்லி வளர்ப்பதே ஆணாதிக்கம்! இதுல பெருமை வேற!

இதுல வேற பலாப்பழம்னா ஈ மொய்க்கதான் செய்யும்! முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேலைக்கு தான் நட்டம்! அடேய்! மனுஷன நல்ல மனுஷனோட ஒப்பிடுங்க! ஆம்பிளைனா அப்படிதான் இருப்பான்னு சொல்றவன்/ சொல்றவள் தான் பெண்களுக்கு எதிரான அத்தனை கொடுமைகளுக்கும் பொறுப்பு.

Women have right to exist! Right to safety! Right to loiter! Right to late night roaming! Right to wear what they want! Right to be free.. as any other men! Stop oppressing women and paving way for Men to harass and exploit women in the name of Feminity!

Jun 3, 2022

பொதுவுடைமை என்றால் என்ன?

 


கம்யூனிசம் என்றால் இருப்பவர்களிடம் இருந்து பிடுங்கி இல்லாதவர்களிடம் கொடுப்பதா?

 இல்லை!

 “உன் கிட்ட மட்டும் எப்படி இருக்கு என் கிட்ட ஏன் இல்ல” என்று கேட்பது!

 "ஓ! எல்லாமே எங்க பாட்டர், முப்பாட்டர்களிடம் இருந்து அடித்துப் பிடுங்கி தொடங்குனுச்சா? ஓ அதை "மூலதனமா" வச்சு காலம் காலமா எங்க உழைப்பைச் சுரண்டி சேர்த்த சொத்துகளா என்று ஆய்வுப் பூர்வமாக அந்த ரகசியத்தைச் கண்டறிந்த மார்க்சிய தத்துவத்தைப் பற்றிக் கொண்டு உழைப்பாளர் விடுதலைக்காக போராடுபவது. உழைப்புச் சுரண்டல் அற்ற ஒரு சமுதாயத்தை (பொருளாதார அமைப்பை) நிறுவ இயக்குபவது!

இருப்பவினிடம் பிடுங்குதல் என்பது!

 எம்மிடமிருந்து பலவந்தமாக பிடுங்கப்பட்டதை திருப்பி எடுத்துக் கொள்வது. பொதுச்சொத்தை தனியுடமை ஆக்கி வைத்துள்ள நிலையை ஒழித்து மீண்டும் பொதுவுடமை ஆக்குதல். அனைவரும் உழைத்து உழைப்புக்கேற்ற பலனை சமமாகப் பிரித்து கொள்ளுதல் என்று பொருள்.

கம்யூனிசம் என்பது ராபின் ஹுட் ஹீரோயிஸம் அல்ல!

 செயற்கையாக உருவாக்கப்பட்ட லாபம், அதாவது உழைப்பு சுரண்டல் அதை ஒழித்தல் என்பதாகும்

 மூலதனம், லாபம் என்கிற பெயரில் உழைக்காமல் வாழும் கூட்டத்தை உழைப்பில் ஈடுபடுத்துவது, அதாவது நம்மை பலவந்தமாக கூலி உழைப்பில் ஈடுபடுத்தியது போல் அவர்களையும் சோஷலிச உழைப்பு முறையில் ஈடுபடுத்துவது! அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்! இதை வன்முறை என்று அச்சமூட்டுவார்கள்.

 முதலாளித்துவமே ஆகப் பெரிய வன்முறை தான்!

ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூக உறவுகளை சமத்துவ உற்பத்தி உறவுகளாக நிலை நாட்டுவது... அதாவது உழைப்பைக் கொள்ளை அடித்து ஒரு பக்கம் மட்டுமே குமித்து வைப்பதால் சாய்ந்திருக்கும் தராசை சமநிலைக்கு கொண்டு வருவதாகும்.

 கம்யூனிச கட்டத்திற்கு செல்லும் முன் சோஷலிசம் என்னும் கட்டம் உள்ளது. முதலாளிகள் தனிச் சொத்தாக கைப்பற்றி வைத்துள்ள உற்பத்தி சாதனங்களை பாட்டாளி வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது (சொத்தையெல்லாம் புடுங்கிப்பாங்க என்று அறை குறையாக இதை சொல்லி கம்யூனிஸ்ட்கள் குறித்து அச்சமூட்டுவார்கள்).

 முதலாளித்துவத்தை பணிய வைக்கும் போராட்டம் நீண்டு நெடியது. அதில் தாங்கள் சுரண்டி சேர்த்த சொத்துகளை காக்க மூலதனம் கொண்டு தொழிலாளர் வர்க்க அரசை ஒழிக்க பல சதிகள் நடக்கும்! அடக்குமுறைகள் ஏவப்படும்! உள்ளூர் பெரு முதலாளிகள், ஏகாதிபத்திய நாடுகள், நிதி நிறுவனங்களுடன் கைக் கோர்த்துக் கொண்டு பல நெருக்கடிகளை கொடுப்பார்கள்! குறிப்பாக பொருளாதாரத் தடை என்கிற பெயரில் சோஷலிச நாடுகளின் அத்தியாவசியப் பொருட் தேவைகளைக் கூட தராமல் அவர்கள் இருப்பை, வளர்ச்சியைக் கெடுப்பார்கள்.

இதைக் கண்டு சோஷலிசம் எங்கே தாக்குப் பிடிக்கிறது என்று கூப்பாடு போட வேண்டியது!

 ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்தின் சதிகளை முறியடிக்க சோஷலிச நாடுகள், கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. அமெரிக்காவை முறியடிக்க சைனா... போராடுகிறது!

 ரஷ்யாவை முடித்து வைத்தது ஏகாதிபத்தியம்..

 கியூபா, வெனிசுலாவில் நடப்பதை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

 உலகமயமாக்கல் என்பது ஏகாதிபத்தியத்தின் உச்சகட்ட சதி.. (இதெல்லாம் நடக்கும் என்று மார்க்ஸ் எங்கல்ஸ், லெனின் கணித்து சொன்னார்கள், மாவோ, ஹோசி மின், ஸ்டாலின் எல்லாம் என்ன செய்தார்கள் என்று படிக்கவும்).

 மூலதன ஆதிக்கத்தை எதிர்த்து போராடுகையில் இடைக்கால அரசியல் பொருளாதார சமரசங்களை சோஷலிச நாடுகள் எடுக்க நேர்கிறது. இதில் பாதை மாறிப் போக நேர்கிறது! பின்னடைவுகள் ஏற்படுகின்றன! ஆய்வுகள் செய்து மீண்டும் சரியான பாதைக்கு திரும்புவார்கள்!

 கம்யூனிஸ்டுகளே இப்படித்தான்! இன்னைக்கு எல்லாம் எங்கய்யா உண்மையான கம்யூனிஸ்ட் இருக்காங்க!

 சோசலிசம் தோத்துப்போச்சு! வளர்ச்சி இல்ல! பஞ்சம் பசி பட்டினி என்று கிளப்பி விடாமல்

 சோஷலிச நாடுகளில் என்ன நடக்கிறது, கம்யூனிஸ்ட் அரசியல் போராட்டம் என்றால் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு முன் நிபந்தனை மார்க்சியத்தை படிக்க வேண்டும். படித்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மனம் வேண்டும். அந்த மனதிற்கு தான் வர்க்க உணர்வு என்று பெயர்.

 #பொதுவுடைமை என்றால் என்ன!

 

Jun 2, 2022

கமல்ஹாசன் அவர்களுடன் ஒரு சந்திப்பு: மலரும் நினைவுகள்

 



 

2009 இல் நிர்மலாவாக இருந்த எனக்கு பெண்கள் நிலை குறித்து கேள்விகள் எழத் தொடங்கியது! தாய் வழித் தெய்வம் குறித்த ஆய்வின் போது, பெண் கடவுள்கள் பின்னுக்குத் தள்ளப்பட்ட ‘கலை’ வரலாறு இன்னும் சில கேள்விகளை என்னுள் எழுப்பியது. திருமணத்திற்குப் பின் பெண்கள் ஏன் வீட்டிற்குள் அடைக்கப்படுகிறார்கள், ஆண்கள் வாழ்வு பெரிதாக மாறுவதில்லையே (அன்று நான் கொற்றவை அல்ல!). எந்த ‘தியாகமும்’ செய்ய வேண்டியதில்லாமல் சுதந்திரமாக அப்படியேதானே இருக்கிறார்கள் என்கிற கோவம்!

 அப்போது "பெண்ணிய” நோக்கில் எழுதப்பட்ட பல பதிவுகளைப் படிக்கத் தொடங்குகிறேன். மனதை வெளிப்படுத்த கவிதைகள் எழுதத் தோன்றியது. அதற்காக ‘இலக்கியமும்’ படிக்கத் தொடங்குகிறேன்! நூலகங்களுக்குச் செல்வேன்.. படிப்பேன் எழுதுவேன்!

 எனது கோவங்கள், உடைபட்ட நதிபோல் உடைபட்ட வாக்கியங்கள் ஆகின்றன! அதை கவிதை என்றே நான் நம்பினேன்! வசுமித்ர வந்து “இதெல்லாம் கவிதைனா அப்ப கவிதைய என்ன சொல்றது” என்று கேட்கும் வரை! வாழ்வு அன்று மாறியது… அது வேறொரு கதை!

 இப்படி நான் கவிதை என்று நம்பி ஒன்றை எழுதிக் கொண்டிருந்த போது இரு ஆளுமைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நினைவுப் பதிவே இது!

 எத்தனை மனிதர்கள் வர்ஷாவாக பிரபலமாக இருந்து அதே துறையில் இருக்கும் ஒரு நபரை நான் திருமணம் செய்துகொண்டேன். அவரும் ஒரு ‘செலப்ரிட்டியாகி’க் கொண்டிருந்தார். திரைத்துறையில் மட்டுமல்லாது ‘மேல் அடுக்கில்’ இருக்கும் பல பிரபலங்களை அறிந்தவராக, நண்பர்களாக பெற்றிருந்தார்! ‘புகழ் வெளிச்சம்’ மிக்க வாழ்க்கை! ஆனாலும் மனநிறைவற்ற ஒரு நிலை! அதன் வெளிப்பாடாக தொடங்கியதே கவிதை எழுதுதல்!

 பாஞ்சாலியின் கண்ணோட்டத்தில் மகாபாரதம், சீதையின் பார்வையில் இராமாயணம், சித்தர் பாடல்கள், பட்டுக்கோட்டையார், வாலி, திரை இசைப்பாடல்கள் என்று எல்லாம் கலந்து கட்டிப் படித்துக் கொண்டிருந்தேன். (மார்க்சியம் அப்போது படிக்கவில்லை).

 உள்ளுக்குள் எரிந்த தீ, கையில் எழுதுகோலாக மாறியது!

 தோன்றியதை எழுதினேன்! கவிதைக்கு என்ன இலக்கணம்! இலக்கணம் மீறிய கவிதை எனது இப்படி எனக்கு நானே ‘மகுடமும்’ சூட்டிக் கொண்டேன். வாலி எழுதிய நூலோ அல்லது அவரைப் பற்றிய சுயசரிதையோ ஏதோ ஒன்று படித்து, ரசித்து அவரை சந்திக்க ஆவல் எழுந்தது. அப்போதிருந்த வட்டம் காரணமாக திரைப் பிரபலங்களை சந்திப்பது அசாத்தியமில்லை!

 வாலி குறித்து ஒரு ‘கவிதை’ எழுதினேன்! அவர் பாடல் எழுதிய திரைப்படங்களின் பெயர்களை வைத்துக் கோர்த்து (சிரிக்காதீர்கள்) எழுதி அதை ‘ஃப்ரேம்’ போட்டு அவரிடம் கொடுக்க சென்றேன். நிறைந்த அன்போடு வரவேற்றார். கடைசி நிமிஷத்தில் எழுத்துப் பிழையை கவனித்து, மீண்டும் பிரிண்ட் செய்ய முடியாமல், அதை x மார்க் போட்டு வைத்திருந்தேன்! அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை! ‘உனக்கு தமிழ் நன்றாகவே வருகிறது. உன் தமிழ் எனக்குப் புடிச்சிருக்கு’ என்றார். நிறைய பேசினோம். அதற்கு முன்பு அவரை நான் சந்தித்தது பாட்டுப் பாடவா திரைப்பட வேலையின் போது. அதையும் அவருக்கு நினைவுபடுத்தினேன்! நெகிழ்ச்சியானதொரு சந்திப்பு! பின் 2,3 வருடங்களில் அவர் மறைந்தார். அந்த சிரித்த முகம் இன்னமும் என் மனதில் பதிந்துள்ளது.

 எனது கவிதை ‘சேவை’ தொடர்ந்தது. பட்டாம்பூச்சி என்று பெயர் வைத்து… (சிறகடித்து பறக்க வேண்டும் என்கிற வேட்கை) நான் எழுதிய ‘கவிதைகளைத்’ தொகுத்தேன். முதல் பிரதியை ஒருவரிடம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அச்சில் அல்ல, பிரிண்ட் வடிவில் நூலாக தயாரித்தேன்…

 நான் சந்திக்க விரும்பிய இன்னொரு திரை ஆளுமை! கமல்ஹாசன் அவர்கள்!

 என் முன்னாள் கணவருக்கும் கமல் அவர்களுக்கும் ஒரு நல்ல பிணைப்பு இருந்தது. மேலும் என் மகள் மீது நிறைய அன்பு காட்டுவார். அவளின் ஓவியங்களை பாராட்டி ஊக்குவிப்பார்.

 ஒரு நாள் நேரம் கொடுத்தார். ’கவிதை’ பிரதியோடு அவரை சந்தித்து ”ஒரு சிறிய முயற்சி, படித்து உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும்” என்றேன். சரி என்று வாங்கிக் கொண்டார். இன்று நினைத்தால் முன்னுரையே வேடிக்கையாக இருக்கும்! அதைப் போய் அவரிடம் கொடுத்தேனே என்று தோன்றுகிறது.

 ”சார் படிச்சாரு.. நல்லாருக்குன்னு சொன்னாரு” என்று அவர் தொடர்பாளர் மூலம் பின் ஒருநாள் செய்தி வந்தது!

 அறிவுத் தேடல் உள்ள மனிதர்! ஆகவே அனைத்தையும் குறித்து படிப்பார். ஓவியம் குறித்து இன்னும் எத்தனையோ விசயங்கள் குறித்து அவரிடம் ஆழ்ந்த அறிவு உள்ளது. அவரது தேடல், வேட்கை, குழந்தைகள் போல் புதிதாக கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஆகியவற்றை கண்டு நான் வியந்துள்ளேன்.

 எனது தேடலுக்கு மார்க்சியம் மூலம் விடை கிடைத்தபோது கொற்றவையாக மாறினேன். அரசியல் கண்ணோட்டம் இடதானது! எனது பாதை மாறியது!

 ஓரிரு நாட்களாக கமல் அவர்களை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்க்கும் போது, “உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது” என்று அவர் பாடியதை கேட்கும் போது, அந்த குரல் என்னை ஏதோ செய்கிறது! பழைய நினைவுகள் மனதில் ஓடின.

 வாழ்வின் துயரங்கள், அவலங்கள், போராட்டங்கள் தான் என்னை எத்தனை தூரம் விரட்டியுள்ளது! தற்போது எங்கு வந்து நிற்கிறேன் என்கிற ஒரு மலைப்பு!

 கடந்த காலத்தில் சில மகிழ்ச்சியான தருணங்களும் இருந்தன! கமல், வாலி, இசை ஆளுமை ஜாகிர் உசேன், சூரியா என பல கலைஞர்களை சந்தித்த அந்த தருணங்கள் … அவற்றுள் பசுமையானவை.

 கமல் அவர்களின் தற்போதைய தோற்றம் ஈர்ப்பதாக உள்ளது! மேலும், அவரது குரலுக்கு நான் என்றும் விசிறி! இளையராஜாவின் குரல் போல், கமலின் பாடல்கள் சிலதும், குரலும் ஆழ்மன துயரை கண்ணீராக வெளியேற்றும் சக்தி படைத்தது. அதனால் தான் அவர்கள் என் மனதை வேட்டையாடுகிறார்கள் என்று நினைக்கிறேன்!

உழைப்புச் சுரண்டல் மிக்கதொரு வாழ்வில், கலைஞர்கள் ஏதோ ஒரு வகையில் துயர் துடைப்பவர்கள் தானே! நடிகராக, பாடகராக, சந்திக்கையில் தன் பேச்சின் மூலம் ஊக்குவிப்பவராக கமல் பல விதங்களில் அதை செய்துள்ளார்.

 கமல்ஹாசன் என்னும் கலைஞன் வாழ்க வளமுடன்!

 #KamalHaasan best wishes for #VikramMovie 

 

 (ஆமாம், அந்த கவிதைகள் வெளிவந்தனவா? அது பற்றிய பதிவு மற்றொரு பதிவில்)

 

May 24, 2022

அமலாபுரம் வன்முறை

 

ஆந்திராவில் உள்ள கொனசீமா என்னும் மாவட்டத்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கொனசீமா மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பரிந்துரையை எதிர்த்து வன்முறை வெடித்துள்ளது!

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! ராவ், ரெட்டி, ராஜு, சாயி, அன்னமைய்யா போன்ற பெயர்களைக் கொண்டவர்களை கௌரவிக்கும் வகையில் மாவட்டப் பெயர்கள் சூட்டும் போது வெடிக்காத வன்முறை அம்பேத்கர் அவர்களின் பெயரை வைக்க முடிவெடுக்கும் போது வெடிக்கிறது என்பது வெட்கக் கேடான செயல்.

இது அப்பட்டமான சாதி வெறி என்று நமக்கு கோவம் வந்தாலும். அதற்கு வழிவகுக்கும் அடித்தளத்தை சரியாக கண்டிறிய வேண்டியுள்ளது.
நான் படித்த வரையில் கீழ் உள்ள கட்டுரை அதை வர்க்கப் பார்வையோடு அனுகியுள்ளது!

//An invisible tension between a few upper class and Dalits is palpable in the region where the latter hold sway.//

//Konaseema is home to a few rich communities and entrepreneurs. The Dalits were a highly educated community and visible in all fields. The present clash over the name is not simple opposition to renaming the district after Dr Ambedkar. It is a symptom of deeply entrenched antagonism between assertive Dalits and their opponents. The renaming of the district has served as a spark.// (https://thefederal.com/states/south/andhra-pradesh/amalapuram-violence-just-a-tip-of-anti-dalit-sentiment-in-andhras-konaseema/


எந்த ஒரு ஏற்றத்தாழ்வும், படிநிலையும், அதனடிப்படையில் வெடிக்கும் வன்முறையும் ஆளும் வர்க்க நலன்களுக்காக நிகழும் அரசியல் என்பதை உணர வர்க்கப் பார்வை வேண்டும். படிநிலைகள் வெவ்வேறு வடிவங்களில் நிலைநாட்டப்படுகின்றன. வர்க்கமே அதன் அடிப்படை! வர்க்கம் என்றால் வெறும் பொருளாதாரம் என்று அவசரகதியில் கொந்தளிக்காமல்.. வர்க்கம் என்றால் என்ன என்பதை விரிவாக படிக்கவும்!

சாதி, தீண்டாமை ஆகியவை இந்திய சமூகத்தின் கொடூரமான சமூக படிநிலையமைப்பு! குறிப்பிட்ட பிரிவினரை குறிப்பிட்ட நிலையிலேயே நிலைத்திருக்க வைக்கும் ஏற்பாடு அது. மதரீதியாக அது ஒரு புனிதக் கோட்பாடாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அதை நடைமுறைப்படுத்தியதில் அரசின் பங்கு என்ன? ஏன் அது நடந்தது என்பதை மார்க்சிய அறிஞர்கள் பலர் விளக்கியுள்ளார்கள்!

குறிப்பிட்ட நிலை என்பதில் உழைப்புப் பிரிவினையே அடித்தளம்! உழைப்பு என்னும் இடத்தில், மிகவும் குறிப்பாக எந்த நாட்டிலும் இல்லாத வகையில் சில தொழில்களை “சுத்தம்”, ”அசுத்தம்” என்று வகை பிரித்து, பிறப்பின் அடிப்படையில் இன்னார் இப்படி பிறந்தவர்… இன்ன தொழில் செய்தவர் என்கிற அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்து, படிநிலைகளை உருவாக்கி;“அசுத்தம்” என்று வரையறுக்கப்பட்ட உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களை சமூக அடுக்கில் ’நிரந்தர ’அசுத்த’ உடல் உழைப்பாளர்களாக’ முடக்கிவைக்கக் கூடிய ஏற்பாடு இது! சமூக அடுக்கு என்பதில் உள்ளது வர்க்கம்!

இந்த “சாரத்தை” மனதில் வைத்துக் கொண்டு நடக்கக் கூடிய சாதிய வன்முறைகளை ஆய்வு செய்வோமெனில், தமக்கு ”கீழே” உள்ளவர்கள் முன்னேறுவதை ஆளும் வர்க்கங்கள் சகித்துக் கொள்ள முடியாமல் தாழ்த்தப்பட்டவர்களை தாக்குகின்றன. அதாவது பொருளாதார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், அரசியல் அதிகாரத்திலும் உயர் அடுக்கில் உள்ளவர்கள் - உடல் உழைப்பில் பெரிதாக ஈடுபடாமல் செல்வம் குவிக்கும் குடும்பங்கள், சாதிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என்று புரிந்துகொள்ளவும்!

பிறப்பால் தாம் உயர்ந்தவர் என்கின்ற “அடையாள வெறி” அனைத்து சமூகங்களிலும் காலப் போக்கில் உருவானது. அதன் மூலம் “போட்டியின்றி” பல சலுகைகளை, அதிகாரங்களை அவர்கள் நிறுவிக்கொள்ள முடியும்.

புராதனக் கம்யூனிச சமூகம் சிதைந்து தனிக் குடும்பங்கள் சொத்து குவிக்கும் சமூகமாக மாறியபின்னர் இந்தியாவில் - பார்ப்பனக் கூட்டமும், அன்றைய ஆளும் வர்க்கக் கூட்டமும் சேர்ந்து ஒரு படிநிலையமைப்பை மதரீதியாக நிறுவினர். அது வர்ணாசிரமக் கொள்கையாக தொடங்கி சாதியாக திடப்பட்டது. ஆணாதிக்கம், ஆண்டான் அடிமை முறை, மன்னராட்சி முறை, பண்ணையார் ஆதிக்கம், எஸ்டேட், ஆலை முதலாளிகள் ஆதிக்கம், காலனியாதிக்கம் என்பதையும் சேர்த்துக்கொள்ளவும்!

ஊழ்வினை, போன ஜென்மத்து பாவம், பிறப்பாலேயே நீங்கள் தாழ்ந்தவர்கள் உங்களின் இடம் இதுதான் (அவர்களின் இடம் இதுதான்) என்று பல்லாயிரக் கணக்காக இந்திய சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வை கடவுளின் சித்தம், ரத்தம், குலம், கோத்திரம் என்று மிகவும் ஆழமாக விதைத்துவிட்டனர். அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் இயல்பென நம்பவைத்து விட்டனர்!

ஒடுக்கப்படும் எதுவும் ஒருநாள் திமிறி எழும்! அது பெண் அடிமைத்தனமானாலும் சரி, சாதிய அடக்குமுறையானாலும் சரி, மதம், இனம், மொழி, உழைப்புச் சுரண்டல் என எதுவானாலும், ஒடுக்கப்படும் கூட்டம் ஒருநாள் திமிறி எழும்! இதுதான் வரலாறு.
அப்படி திமிறி எழுகையில் ஆளும் வர்க்கங்கள் அச்சம் கொள்கின்றன! பெண்கள் எதிர்க்கையில் “Slut-shaming” உள்ளிட்ட வசைகளையும், வன்முறையையும் கையிலெடுக்கும். அதே போல் தான் மதம், இனம், மொழி, தொழிலாளர் போராட்டங்கள் அனைத்தையும் பண்பாட்டு தளத்திலும், பொருளாதார தளத்திலும் ஆளும் வர்க்க அரசியலமைப்பின் துணையோடு ஒடுக்கப் பார்க்கும்!

சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டோர் திமிறி எழுகையில் நடப்பதும் இதுவே! பொது குளத்தில் நீர் எடுப்பது, பொதுவான சுடுகாட்டில் இடம் தர மறுப்பது, பொதுப் பாதையில் செல்ல மறுப்பது, சாதி ஆணவக் கொலைகள், இடஒதுக்கீட்டை எதிர்ப்பது, தனித் தொகுதியை எதிர்ப்பது, ஒடுக்கப்பட்ட தலைவர்களின் சிலைகளை அவமதிப்பது, அவர்களின் பெயர்களை சாலை / ஊர் / மாவட்டங்களுக்கு வைப்பதை எதிர்ப்பது வன்முறையில் ஈடுபடுவது என்பதெல்லாம் சாதி வெறி என்பதோடு வர்க்க ஒடுக்குமுறை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

கல்வியை மறுத்து, பொருளாதார மேம்பாட்டை மறுத்து ஒரு பெரும் பிரிவினரை சமூகத்தின் அடுக்கில் நிரந்தர கூலி உழைப்பாளிகளாக, மேல் அடுக்கில் உள்ளவர்களுக்கு சேவை செய்பவர்களாக வைத்திருந்த நிலை இனி தொடராது என்கிற அச்சமும், பேராசையும் இயக்கவில் ரீதியாக அவர்களை நகர்த்துகிறது!

”எங்களுக்கு கீழ இருந்த நீங்க இப்ப எங்களையே எதிர்க்குறீங்களா?” என்பது வெறும் சாதிய ரீதியான எதிர்ப்பு மட்டுமல்ல, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் அதிகாரம் என்று அனைத்திலும் நீங்க எங்க இடத்துக்கு வரப் பார்க்குறீங்களா என்பது வர்க்க ஆதிக்கமாகும்! இதைத்தான் உற்பத்தி உறவுகளில் நிலவும் வர்க்க முரண்பாட்டின் காரணமாக உண்டாகும் வர்க்கப் போராட்டம் என்று மார்க்சியம் வரையறுக்கிறது!

உற்பத்தி உறவுகள் என்றால் – மனிதர்கள் தங்களின் (பொருள்) தேவைகளுக்காக ஈடுபடும் “வேலைகளில்” தங்களை அறியாமலேயே ஓர் உறவு நிலையில் பிணைக்கப்படுகிறார்கள். அதில் உற்பத்தி சக்திகளைக் (means of production) கைப்பற்றிக் கொண்ட கூட்டம் இன்னாருக்கு இன்ன இடம் (உற்பத்தி உறவுகள்), இதுதான் கூலி, இதுதான் உங்களுக்கான உரிமைகள் என்று வரையறுக்கும் அதிகாரத்தைப் பெறுகிறது! அது ஆளும் வர்க்க நலன்களை உள்ளடக்கிய அரசியலமைப்பு ஆகிறது!

நிலவும் அதிகாரத்தை எதிர்த்து நடக்கும் அத்தனைப் போராட்டங்களும் வர்க்கப் போராட்டங்களே. அது சாதி, மதம், பாலினம், மொழி, இனம், திறன் என்று பல்வேறு அடையாளங்களின் அடிப்படையில் நிகழும்.

 

Ø
பெண்கள் முன்னேறுவது ஆண்களுக்கு போட்டியாக தோன்றுகிறது!

தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுவது ஆதிக்க சாதிகளுக்கு போட்டியாக

Ø கிறித்தவர்கள், முஸ்லீம்கள், இதர மதத்தினர் முன்னேறுவது இந்துக்களுக்கு போட்டியாக (மற்ற நாடுகளில் ஆளும் மதங்களுக்கு எதிராக சிறுபான்மை மதங்கள்)

Ø தமிழ் / திராவிட இன முன்னேற்றம் ஆரிய இனத்திற்கு போட்டியாக

Ø ஏழைகளின் முன்னேற்றம் பணக்காரர்களுக்கு போட்டியாக

Ø உழைப்பாளிகளின் முன்னேற்றம் முதலாளிகளுக்கு போட்டியாக
தோன்றுவது ஏன் என்பதை புரிந்துகொள்வது ஒன்றும் அறிவிற்கு அப்பாற்பட்டதல்ல!

ஒடுக்கப்படுவோரின் முன்னேற்றத்தை முடக்குகையில் அவர்கள் எதிர்ப்பதும், தமக்கான உரிமைகள், அங்கீகாரங்களைக் கோருவதும் உரிமைப் போராட்டமாகிறது (வர்க்கப் போராட்டம்). அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆளும் வர்க்கமானது ஒடுக்குமுறையிலும், வன்முறையிலும், அடையாள அரசியலிலும் ஈடுபடும். இந்துத்துவ அரசியல், பெண் வெறுப்பு அரசியல், தலித் எதிர்ப்பு அரசியல், இஸ்லாமிய (மத) வெறுப்பு அரசியல், மொழி ஆதிக்க அரசியல், இனவெறுப்பு அரசியல் என அனைத்திலும் அடித்தளமாக இருப்பது மேல்நிலையில் உள்ளோரின் பொருளாதார நலன்களே! அதை அரசியல்-பொருளாதார-பண்பாட்டு நலன்கள் என்று விரிவுபடுத்திக்கொள்ளலாம்! அதைத்தான் வர்க்க முரண்பாடு / வர்க்கப் போராட்டம் என்று மார்க்சியம் வரையறுக்கிறது! அதை முறியடிப்பதற்கான வழிமுறைகளையும் வழங்குகிறது. எத்தகைய சமூக அமைப்பில் நிரந்தரமாக இந்த ஏற்றத்தாழ்வுகள் ஒழியும் என்பதையும் விளக்கி, மாற்று சமூக அமைப்பையும் முன்வைக்கிறது!

ஆளும் வர்க்கங்களின் இந்த சுயநல அரசியலை தோலுறித்துக் காட்டி, ஒடுக்கப்படும் மக்களை கம்யூனிஸ்டுகள் ஒன்று திரட்டிவிடுவார்கள் என்பதால் தான் பொதுவுடைமை தத்துவத்தை எதிர்மறையாக சித்தரித்து ஒடுக்கப்பட்டோரை பிளவுபடுத்துவதில் ஆளும் வர்க்கங்கள் வெற்றியும் கண்டுள்ளன.

கம்யூனிஸ்ட் இயக்கங்களில் கூட ஒரு சிலர் இதற்கு பலியாகிவிட்டனர். ஒரு சிலர் தேர்ந்த சுயநலனோடு கம்யூனிஸ்ட் இயக்கங்களில் ஊடுறுவி அடையாள அரசியல் மூலம் வர்க்க உணர்வை சிதைத்தும் வருகின்றனர்.

இந்துத்துவ எழுச்சி, பார்ப்பன ஆதிக்கம், இடைநிலை சாதி ஆதிக்கம், பண்பாட்டு ஒடுக்குமுறை, ஒரே சாதியாக இருந்தாலும் அந்தஸ்த்து ரீதியான வெறுப்பு, பொருளாதார ரீதியாக முன்னேறி இருந்தாலும் சாதிய ரீதியான வெறுப்பு, ஆணாதிக்கம், மத ஆதிக்கம், பொருளாதார நலிவு, வேலையின்மை, தொழிலாளர் நலச் சட்ட திருத்தங்கள், தனியார்மயமாக்கல், இனவாத ஒடுக்குமுறை, மொழி ஆதிக்கம், மாநில உரிமைகள் பறிப்பு / ஒற்றை தேசியக் கொள்கைகள் என்று அதன் விளைவுகளை நாம் சமூக மட்டத்தில் எதிர்கொண்டு வருகிறோம்! இன்னமும் பார்ப்பனியம், இந்துத்துவ பாசிசம், ஆதிக்கசாதி வெறி, கம்யூனிஸ்டுகள் விலை போகி விட்டார்கள், தமிழினத் துரோகிகள் என்றே சுருக்குவோமெனில்….. (இதில் கார்ப்ரேட் பாசிசம், காவி பாசிசம் என்று பல்வேறு சொல்லாடல்கள் வேறு) ….

ஏற்றத்தாழ்வு மிக்க படிநிலை அமைப்புகளின் ஆணி வேரை சுட்டிக் காட்டினால்… இருக்கவே இருக்கிறது “முத்திரைகள்”…

ஒடுக்கப்படுபவரின் முன்னேற்றம் ஒடுக்குவோருக்கு எப்போதும் அச்சமூட்டுவதாகவே இருக்கும்! எதனால் என்பதை சரியாக புரிந்துகொள்வதில் தான் ஒடுக்கப்பட்டோரின் விடுதலை அடங்கியுள்ளது!

May 17, 2022

லிங்க வழிபாடு உள்ளிட்ட இந்துத்துவ வெறிபிடித்த அரசியலை புரிந்துகொள்ள...

 





(கம்யூனிச வெறுப்பை வளர்த்துக் கொண்டு வசைபாடுவோர், சாதிய முத்திரை குத்துவோர், இனவாத தேசியவாதிகள் இப்பதிவை படிக்காமலேயே ஒதுங்கிக் கொள்ளலாம்)

”மக்கள் தங்களின் மிகப் பிரபலமான கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களை காணும்போது சஞ்சலம் அடைய வாய்ப்புண்டு. ஆனால் இந்த ஆபத்தை சந்திக்க மறுத்தவர்கள் சமூகக் கடமையில் இருந்து தப்பி ஓடவே பார்க்கின்றனர்” - தேவி பிரசாத் சட்டோபாத்யாயா

லிங்க வழிபாடு உள்ளிட்ட இந்துத்துவ (ஆணாதிக்க) வெறிபிடித்த அரசியலை புரிந்துகொள்ள...

ஆதியில் மனிதர்கள் சுதந்திரமாக, கூட்டுச் சமூகமாக பொருள் ஈட்டி வாழ்ந்துவந்தனர். (பொருள் என்றால் உணவு உள்ளிட்ட மனிதர்களின் தேவைகள்). அதன் போக்கில் புரியாத புதிராக இருக்கும் இயற்கையை வணங்கி வந்தனர். அப்போது தாய்க் கிழவியின் தலைமையில் கூட்டுச் சமூகமாக வாழ்ந்து வந்தனர்.

 சாதியப் படிநிலைகளோ, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளோ இருக்கவில்லை. ஆண் பெண் பாகுபாடும் இருக்கவில்லை. இருவரும் இயற்கையோடு உறவாடி தமக்கான பொருள்களை ஈட்டி வந்தனர்… தேவையின் காரணமாக (பெண்களின் மகப்பேறு காலத்தில்) மனிதர்களிடையே இயற்கையான ஓர் உழைப்புப் பிரிவினை நிலவியது. பின்னர் தம் வாழ்க்கைத் தேவைகளுக்காக கண்டுபிடித்த பொருள் உற்பத்தி முறையின் விளைவாக மாற்றங்கள் ஏற்பட்டன.

 விவசாயம் உள்ளிட்ட உணவு உற்பத்தி முறையினால் நாடோடி சமூகங்கள் பல நிரந்தர குடியேற்றத்தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகள் தொடங்கின.. இரும்பு உள்ளிட்ட கருவிகளின் கண்டுபிடிப்பு விளைச்சலை அதிகப்படுத்தியது.

 போர் என்கிற பெயரில் பிடித்து வந்த அடிமைகளையும் கொடுமைப்படுத்தி உழைப்பில் ஈடுபடித்தி அதிகாரத்தை, நில வளங்களைக் கைப்பற்றியவர்கள் அதிக பொருள் சேர்க்கத் தொடங்கினர். மெல்ல மெல்ல இனக் குழு வாழ்வு, கூட்டுச் சமூக வாழ்வு மற்றும் தாய் வழிச் சமூகமும் சிதைந்து (சிதைக்கப்பட்டு) ஆண் தலைமையிலான ஆணாதிக்க குடும்ப அமைப்பு – அதாவது தனிச் சொத்து சேர்க்கும் குடும்ப அமைப்பு, அதனை நிர்வகிக்கும் அரசுருவாக்கம், அதற்கேற்ற பண்பாடு, மதம், காவல்துறை, இராணுவம் உள்ளிட்ட அதிகார நிறுவங்கள் தோன்றின என்று (மார்க்சிய) வரலாற்றாய்வாளர்கள் சமூக அமைப்புகளின் பரிணாம வளர்ச்சி மற்றும் பண்பாட்டுருவாக்கம் குறித்து ஆய்வுகளை முன் வைத்துள்ளார்கள்.

 உலகெங்கிலும் இவ்வாறே சமூக அமைப்புகள் பரிணமித்துள்ளன.

 தாய் தெய்வங்களை பின்னுக்குத் தள்ளி, ஆண் கடவுளர்கள் அதிகாரம் பெறுகின்றனர். இதுவும் உலக வரலாறு. இந்தியாவில் பார்ப்பனிய ஊடுறுவல் காரணமாக மதம், பண்பாடு, அரசியல் உள்ளிட்ட மக்களின் ஒழுங்கமைத்துக் கொள்ளும் அமைப்புகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. நிலவிய நம்பிக்கைகள், ஒழுங்கமைத்துக் கொள்ளும் முறைகளில் தங்கள் நலனுக்கும், அரசுகளின் நலனுக்கும் உகந்ததாக இருக்கும் அம்சங்களை உட்செறித்தும், “பிரச்சினைக்குரிய” அம்சங்களை நீக்கியும், நீர்த்துப் போகச் செய்தும் ஒரு சமூக அமைப்பு உருவானது.

 அரசுகளின் ஆதரவின்றி இது நடக்கவில்லை என்பதை உணராமல், மதம் மட்டுமே அனைத்திற்கும் காரணம் என்று வரட்டு நாத்திகவாத கூட்டம் பேசிக் கொண்டிருக்கும். அதனால் தான் அத்தகைய நாத்திகவாதம், வர்க்க உருவாக்கம் மற்றும் தனியுடைமை தகர்ப்பை முன் வைக்காத சமூக நீதி வாதம் / சீர்திருத்தவாதம் ஆகியவற்றை விமர்சனத்தோடு அணுக வேண்டும்! போதாமைகளை அடையாளம் கண்டு பொருளாயத அடிப்படையில் சமூகப் பிரச்சினைகளை அனுக வேண்டும் என்கிற அறிவை மார்க்சியம் வழங்குகிறது.

 ஆணாதிக்க சமூக உருவாக்கத்தின் போது தோன்றியதே லிங்க வழிபாடு என்கிற ஆய்வுகளும் உண்டு! பெண் என்பவள் கீழே, ஆண் என்பவன் மேலே என்பதன் குறியீடு என்னும் அளவுக்கு ஆணாதிக்க குறியீடுகளை கட்டுடைத்துள்ளனர்.

தற்போது இந்து மத மீட்பு, பாதுகாப்பு என்கிற பெயரில் பா.ஜ.க / ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் லிங்க அரசியல் உள்ளிட்ட மத அரசியலை புரிந்துகொள்ள மார்க்சியம் படிக்கவும். அப்போதுதான் காலம் காலமாக கையாளப்பட்ட தந்திரங்கள் என்ன, அதை முறியடிக்கும் வழி என்ன என்பது விளங்கும். இணைய வெளியில் “டிரால்” செய்து கொண்டு “நிறைவடைவதை”க் காட்டிலும் அவசியமான வழிமுறைகளை கண்டுபிடிக்க இயலும்! குறைந்தபட்சம், இந்த சமூக-அரசியல்-பொருளாதார இயக்கத்தை விளங்கிக் கொண்டு மாற்றத்திற்காக களம் காணும் கம்யூனிஸ்டுகளின் சித்தாந்தத்தை விளங்கிக் கொள்ள அது உதவும்!...

 கை கோர்ப்பதா வேண்டாமா என்பதற்கு முன் மாற்றுத் தரப்பின் “அரசியல்” ஏன், எதற்கு, எப்படி என்றாவது தெரிந்துகொள்ள வேண்டாமா?

 

May 11, 2022

Marital Rape and alternate

 


மனைவியே ஆனாலும் பாலுறவுக்கு கட்டாயப்படுத்தக் கூடாது என்பது மிகவும் சரி! அதை நான் ஆதரிக்கிறேன். அதேவேளை இணையர்களில் ஒருவருக்கு உடலியல் / பாலியல் தேவை இருப்பின் அதற்கு என்ன தீர்வை இந்த போலியான ஒழுக்கவாத சமூகம் வைத்திருக்கிறது.

 எந்த பாலினமானாலும் பாலியல் தேவை இருப்பவர்கள் திருமண உறவில் அது நிறைவேறவில்லை எனில் தன் துணையிடம் தன் தேவைகள் குறித்து வெளிப்படையாக பேசி திருமண உறவுக்கு அப்பாற்பட்டு தன் பாலியல் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் Right TO Sex உள்ளதா? அல்லது முறைப்படி பேசி விவாகரத்து பெற வழி உள்ளதா?

 பாலியல் வன்முறைகளுக்கும், ஏமாற்றுகளுக்கும் இதுவும் ஒரு காரணம் அல்லவா? இதனால் பாதிக்கப்படுவதும் பெண்கள் தான்! விவாகரத்தும் எளிதாக கிடைப்பதில்லை. சகித்துக் கொண்டு வாழ் என்று தான் இரு தரப்புக்கும் சொல்லப்படுகிறது.

 இதில் ஆண் எப்படியோ தன் பாலியல் தேவையை நிறைவேற்றிக்கொள்ளும் சலுகை அவனுக்கு உள்ளது. குடும்பம், குழந்தை, மானம் கௌரவம் என்று பார்த்து தம்பதிகள் விருப்பமில்லாத உறவில் நீடிக்க வேண்டியுள்ளது. சில வேளைகளில் ஈகோ காரணமாக துணைகள் விவாகரத்து தருவதுமில்லை!

 அல்லது உன்னை விட்டு வாழ இயலாது என்று எமோஷனல் ப்ளாக்மெயில் செய்வார்கள். இத்தகைய சூழலில் விவாகரத்து பற்றி பேசவே இயலாத நிலையில் இருக்கும் நபர் தன்னுடைய பாலியல் தேவையை எப்படி நிறைவேற்றிக் கொள்வார். எதற்காக அவர் தன் உணர்வுகளை தியாகம் செய்ய வேண்டும்.

 இதில் இன்னொரு கொடுமை - வெளியில் உறவை நாடி அமைத்துக் கொண்டால், அதை கள்ள உறவு என்று கொச்சைப்படுத்துவது! சம்பந்தப்பட்ட பெண்ணை / ஆணை தேடிப் போய் அடிப்பது. அவமானப்படுத்துவது. சட்டரீதியாக அவர்களை விடுவிக்காமல், சட்டத்தின் படி அவர்களை குற்றவாளி ஆக்குவது.

 வல்லுறவை, திருமணத்திற்கு அப்பாற்பட்ட ரகசிய உறவை ஆதரிக்கவில்லை. அதேவேளை மாற்று என்ன என்பதற்கு சொத்துகளை தம் ரத்தத்திற்கே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேராசையில் உருவான குடும்ப அமைப்பிடம் மனிதர்களின் இயற்கையான பாலியல் தேவைக்கு என்ன தீர்வுள்ளது?

 ETHICAL NON MONOGAMY என்று வெளிப்படையான உறவு முறைகளை சிலர் முன் வைக்கின்றனர்! ஆதி கால பலதார மணமுறை போன்றது! அது நடைமுறையில் எவ்வகையிலான உணர்வு ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எனக்கு தெரியவில்லை!

 திருமணம் என்பது மனிதர்களின் உணர்வுகளை, தேவைகளை, சுயமரியாதையை அடக்கி வைத்துக் கொண்டு வாழ சொல்லும் சிறைக் கூடமாக இருக்கக் கூடாது. ஏதோ ஒரு வகையில் பொருத்தம் இல்லையெனில் விவாகரத்தை எளிமையாக்கி, பிரிந்தாலும் கைவிடாத வகையில் நட்புறவினை வளர்த்துக் கொள்ள பழகிக் கொடுக்க வேண்டும்.

 பாலியல் தேவையை கொச்சைப்படுத்துவதை விடுத்து அதற்கு உரிய வடிகாலை ஏற்படுத்திக் கொடுப்பத்திக் கொள்ளும் வகையில் அறிவியல் பூர்வமாக அனுகுவதும் அடிப்படைத் தேவைதான்!

 உடலுறவில் நாட்டமில்லாத ஒருவரை கவுன்சிலிங். மருத்துவம், மருந்துகள் என்று கட்டாயப்படுத்தி தயார்படுத்துவதும் நடக்கிறது! இதுவும் பெரிய கொடுமை! அதேபோல் பாலுறவு தேர்வு என்பதற்கும் இடமில்லாத சூழலில், வேறு வழியின்றி திருமணம் செய்து கொண்டு சிக்கித் தவிப்பவர்களும் உள்ளனர்.

 மனிதர்களின் எந்த அடிப்படைத் தேவைக்கும் இங்கே சரியான அனுகுமுறையும் இல்லை, தீர்வும் இல்லை!

 எல்லாமே நியாயமற்ற வகையில் தனிக் குடும்பங்களின் செல்வக் குவிப்பிற்காக உருவாகி இருக்கும் ஒரு சமூக அமைப்பின் தேவைகளுக்கு ஏற்ற ஏற்பாடுகளாகவே உள்ளது.

 இதை மக்கள் உணராதவரை, போலியான ஒழுக்கவாத்ததை பேசிக் கொண்டு மனிதர்களின் வாழ்வை சிதைத்துக் கொண்டே இருக்கலாம்! ஒழுக்கம், குடும்பம் என்னாகுறது, குழந்தைகள் நலன்.. கண்ணியம், கட்டுப்பாடு என்று பேசிக் கொண்டு அனைத்து பண்புகளையும் எளியவர்கள் மேல் திணிக்கலாம்!

 #Democratize_Sex #Democratize_Marraige #Normalize_Divorce Socialize Couples on equality basis!

 மனிதர்களை கூலி அடிமைகளாக தயார்படுத்தும் கல்வி தான் இங்கே இருக்கிறது. சமூக இயக்கம், மனித மனம் மற்றும் உடலியக்கம் பற்றிய கல்வி என்பது அனைவருக்கும் கிடைப்பதில்லை. அப்படி ஒன்று இருக்கிறது என்று கூட அறியாத நிலையில் தான் பெரும்பான்மை மக்கள் உள்ளனர். உளவியல் கல்வி என்பதும் ஒரு தனித்துறை, அது உருவான சமூகப் பின்னணியின் காரணமாக அதிலும் போதாமை உள்ளது.

அது ஒருபக்கம்! பாலியல் தேவை குறித்து தொடர்கிறேன்!

பாலியல் தேவை உள்ளவர்களுக்கான பதிவு இது!

உடலுறவு தேவை என்பதையே கொச்சையாக பார்க்கும் சமூகம் இது! பாலியல் தேவையை துறந்து வாழ்பவரே இங்கே புனிதவான்கள்! ஏன் அப்படி? பாலியல் தேவை இருப்பவர் எந்த அறிவியலின் அடிப்படையில் “கேடு கெட்டவர்?” இதற்கெல்லாம் இங்கே பதில் இருக்காது. உடலுறவு இன்றி மனித இனமோ, எந்த உயிரினமோ தோன்றியதில்லை அல்லவா? அதை முறைப்படுத்திக் கொண்டு வாழ வேண்டும் என்கிற நிலைமை உண்டானதற்கு பொருளியல் வரலாற்று காரணிகள் உள்ளன. ஆனால் அது பற்றிய கல்வி இங்கே அனைவருக்கும் கிடைப்பதில்லை!

பாலியல் கல்வி பற்றி பேசுகிறார்கள். மனித சமூக உருவக்கம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்த கல்வி இல்லாத பாலியல் கல்வி முழுமையாகாது! அதே போல் பாலினக் கல்வி என்பதையும் பேச வேண்டியுள்ளது!

பாலியல் கல்வி என்பது, தம் உடலை, உடலின் பாலியல் தேவைகளை புரிந்து கொள்தை, கையாளவதை கற்றுக் கொடுக்கலாம். இணைகளிடம் தம் ஆசைகளை பேசிக் கொள்ளும் அளவுக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கலாம் ஆனால் உடலுறவில் நாட்டமில்லாத ஒருவருக்கு அது எந்த வகையிலும் தீர்வளிக்கப் போவதில்லை. உடன் வாழும் துணைக்கும் அது தீர்வளிக்கப் போவதில்லை. திருமணமான பின் உடலுறவு மறுக்கப்படும் நிலையில் இணையர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு சுரண்டலுக்கும், ஏமாற்றத்திற்கும் வழி இல்லாத வகையில் ஒரு தீர்வு தேவைப்படுகிறது. அது விவாகரத்தாக இருக்கலாம், அல்லது இணையர்கள் தமக்குள் பேசி, வெளியப்படையான வகையில் மாற்று வழிகளை முடிவு செய்யலாம். ஆனாலும் சட்டம் அதை ஏற்குமா என்கிற சிக்கல் உள்ளதல்லவா? சமூகமே பிற்போக்குத்தனமாக இருக்கும் சூழ்நிலையில் இணையர் அதை ஏற்கும் உணர்வுநிலையில் இருப்பாரா? அதனால் வரும் அவப்பெயர்களை, விளைவுகளை அவர்களால் தாங்க இயலுமா என்கிற சிக்கல் உள்ளதல்லவா?

மனிதர்கள் மனரீதியாக, உடல் ரீதியாக, பொருளாதார ரீதியாக இன்புற்று வாழ இந்த ஆண் தலைமையிலான குடும்ப அமைப்பிலும், சொத்து குவிக்கும் பொருளாதார அமைப்பிலும் தீர்வு இருக்கிறதா?

குறிப்பு: இன்பம் என்பது உடலுறவு மட்டுமல்ல! அனைத்து தேவைகளுக்கும், உரிமைகளுக்கும் பொறுந்தும்