Jun 2, 2022

கமல்ஹாசன் அவர்களுடன் ஒரு சந்திப்பு: மலரும் நினைவுகள்

 



 

2009 இல் நிர்மலாவாக இருந்த எனக்கு பெண்கள் நிலை குறித்து கேள்விகள் எழத் தொடங்கியது! தாய் வழித் தெய்வம் குறித்த ஆய்வின் போது, பெண் கடவுள்கள் பின்னுக்குத் தள்ளப்பட்ட ‘கலை’ வரலாறு இன்னும் சில கேள்விகளை என்னுள் எழுப்பியது. திருமணத்திற்குப் பின் பெண்கள் ஏன் வீட்டிற்குள் அடைக்கப்படுகிறார்கள், ஆண்கள் வாழ்வு பெரிதாக மாறுவதில்லையே (அன்று நான் கொற்றவை அல்ல!). எந்த ‘தியாகமும்’ செய்ய வேண்டியதில்லாமல் சுதந்திரமாக அப்படியேதானே இருக்கிறார்கள் என்கிற கோவம்!

 அப்போது "பெண்ணிய” நோக்கில் எழுதப்பட்ட பல பதிவுகளைப் படிக்கத் தொடங்குகிறேன். மனதை வெளிப்படுத்த கவிதைகள் எழுதத் தோன்றியது. அதற்காக ‘இலக்கியமும்’ படிக்கத் தொடங்குகிறேன்! நூலகங்களுக்குச் செல்வேன்.. படிப்பேன் எழுதுவேன்!

 எனது கோவங்கள், உடைபட்ட நதிபோல் உடைபட்ட வாக்கியங்கள் ஆகின்றன! அதை கவிதை என்றே நான் நம்பினேன்! வசுமித்ர வந்து “இதெல்லாம் கவிதைனா அப்ப கவிதைய என்ன சொல்றது” என்று கேட்கும் வரை! வாழ்வு அன்று மாறியது… அது வேறொரு கதை!

 இப்படி நான் கவிதை என்று நம்பி ஒன்றை எழுதிக் கொண்டிருந்த போது இரு ஆளுமைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நினைவுப் பதிவே இது!

 எத்தனை மனிதர்கள் வர்ஷாவாக பிரபலமாக இருந்து அதே துறையில் இருக்கும் ஒரு நபரை நான் திருமணம் செய்துகொண்டேன். அவரும் ஒரு ‘செலப்ரிட்டியாகி’க் கொண்டிருந்தார். திரைத்துறையில் மட்டுமல்லாது ‘மேல் அடுக்கில்’ இருக்கும் பல பிரபலங்களை அறிந்தவராக, நண்பர்களாக பெற்றிருந்தார்! ‘புகழ் வெளிச்சம்’ மிக்க வாழ்க்கை! ஆனாலும் மனநிறைவற்ற ஒரு நிலை! அதன் வெளிப்பாடாக தொடங்கியதே கவிதை எழுதுதல்!

 பாஞ்சாலியின் கண்ணோட்டத்தில் மகாபாரதம், சீதையின் பார்வையில் இராமாயணம், சித்தர் பாடல்கள், பட்டுக்கோட்டையார், வாலி, திரை இசைப்பாடல்கள் என்று எல்லாம் கலந்து கட்டிப் படித்துக் கொண்டிருந்தேன். (மார்க்சியம் அப்போது படிக்கவில்லை).

 உள்ளுக்குள் எரிந்த தீ, கையில் எழுதுகோலாக மாறியது!

 தோன்றியதை எழுதினேன்! கவிதைக்கு என்ன இலக்கணம்! இலக்கணம் மீறிய கவிதை எனது இப்படி எனக்கு நானே ‘மகுடமும்’ சூட்டிக் கொண்டேன். வாலி எழுதிய நூலோ அல்லது அவரைப் பற்றிய சுயசரிதையோ ஏதோ ஒன்று படித்து, ரசித்து அவரை சந்திக்க ஆவல் எழுந்தது. அப்போதிருந்த வட்டம் காரணமாக திரைப் பிரபலங்களை சந்திப்பது அசாத்தியமில்லை!

 வாலி குறித்து ஒரு ‘கவிதை’ எழுதினேன்! அவர் பாடல் எழுதிய திரைப்படங்களின் பெயர்களை வைத்துக் கோர்த்து (சிரிக்காதீர்கள்) எழுதி அதை ‘ஃப்ரேம்’ போட்டு அவரிடம் கொடுக்க சென்றேன். நிறைந்த அன்போடு வரவேற்றார். கடைசி நிமிஷத்தில் எழுத்துப் பிழையை கவனித்து, மீண்டும் பிரிண்ட் செய்ய முடியாமல், அதை x மார்க் போட்டு வைத்திருந்தேன்! அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை! ‘உனக்கு தமிழ் நன்றாகவே வருகிறது. உன் தமிழ் எனக்குப் புடிச்சிருக்கு’ என்றார். நிறைய பேசினோம். அதற்கு முன்பு அவரை நான் சந்தித்தது பாட்டுப் பாடவா திரைப்பட வேலையின் போது. அதையும் அவருக்கு நினைவுபடுத்தினேன்! நெகிழ்ச்சியானதொரு சந்திப்பு! பின் 2,3 வருடங்களில் அவர் மறைந்தார். அந்த சிரித்த முகம் இன்னமும் என் மனதில் பதிந்துள்ளது.

 எனது கவிதை ‘சேவை’ தொடர்ந்தது. பட்டாம்பூச்சி என்று பெயர் வைத்து… (சிறகடித்து பறக்க வேண்டும் என்கிற வேட்கை) நான் எழுதிய ‘கவிதைகளைத்’ தொகுத்தேன். முதல் பிரதியை ஒருவரிடம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அச்சில் அல்ல, பிரிண்ட் வடிவில் நூலாக தயாரித்தேன்…

 நான் சந்திக்க விரும்பிய இன்னொரு திரை ஆளுமை! கமல்ஹாசன் அவர்கள்!

 என் முன்னாள் கணவருக்கும் கமல் அவர்களுக்கும் ஒரு நல்ல பிணைப்பு இருந்தது. மேலும் என் மகள் மீது நிறைய அன்பு காட்டுவார். அவளின் ஓவியங்களை பாராட்டி ஊக்குவிப்பார்.

 ஒரு நாள் நேரம் கொடுத்தார். ’கவிதை’ பிரதியோடு அவரை சந்தித்து ”ஒரு சிறிய முயற்சி, படித்து உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும்” என்றேன். சரி என்று வாங்கிக் கொண்டார். இன்று நினைத்தால் முன்னுரையே வேடிக்கையாக இருக்கும்! அதைப் போய் அவரிடம் கொடுத்தேனே என்று தோன்றுகிறது.

 சார் படிச்சாரு.. நல்லாருக்குன்னு சொன்னாரு” என்று அவர் தொடர்பாளர் மூலம் பின் ஒருநாள் செய்தி வந்தது!

 அறிவுத் தேடல் உள்ள மனிதர்! ஆகவே அனைத்தையும் குறித்து படிப்பார். ஓவியம் குறித்து இன்னும் எத்தனையோ விசயங்கள் குறித்து அவரிடம் ஆழ்ந்த அறிவு உள்ளது. அவரது தேடல், வேட்கை, குழந்தைகள் போல் புதிதாக கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஆகியவற்றை கண்டு நான் வியந்துள்ளேன்.

 எனது தேடலுக்கு மார்க்சியம் மூலம் விடை கிடைத்தபோது கொற்றவையாக மாறினேன். அரசியல் கண்ணோட்டம் இடதானது! எனது பாதை மாறியது!

 ஓரிரு நாட்களாக கமல் அவர்களை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்க்கும் போது, “உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது” என்று அவர் பாடியதை கேட்கும் போது, அந்த குரல் என்னை ஏதோ செய்கிறது! பழைய நினைவுகள் மனதில் ஓடின.

 வாழ்வின் துயரங்கள், அவலங்கள், போராட்டங்கள் தான் என்னை எத்தனை தூரம் விரட்டியுள்ளது! தற்போது எங்கு வந்து நிற்கிறேன் என்கிற ஒரு மலைப்பு!

 கடந்த காலத்தில் சில மகிழ்ச்சியான தருணங்களும் இருந்தன! கமல், வாலி, இசை ஆளுமை ஜாகிர் உசேன், சூரியா என பல கலைஞர்களை சந்தித்த அந்த தருணங்கள் … அவற்றுள் பசுமையானவை.

 கமல் அவர்களின் தற்போதைய தோற்றம் ஈர்ப்பதாக உள்ளது! மேலும், அவரது குரலுக்கு நான் என்றும் விசிறி! இளையராஜாவின் குரல் போல், கமலின் பாடல்கள் சிலதும், குரலும் ஆழ்மன துயரை கண்ணீராக வெளியேற்றும் சக்தி படைத்தது. அதனால் தான் அவர்கள் என் மனதை வேட்டையாடுகிறார்கள் என்று நினைக்கிறேன்!

உழைப்புச் சுரண்டல் மிக்கதொரு வாழ்வில், கலைஞர்கள் ஏதோ ஒரு வகையில் துயர் துடைப்பவர்கள் தானே! நடிகராக, பாடகராக, சந்திக்கையில் தன் பேச்சின் மூலம் ஊக்குவிப்பவராக கமல் பல விதங்களில் அதை செய்துள்ளார்.

 கமல்ஹாசன் என்னும் கலைஞன் வாழ்க வளமுடன்!

 #KamalHaasan best wishes for #VikramMovie 

 

 (ஆமாம், அந்த கவிதைகள் வெளிவந்தனவா? அது பற்றிய பதிவு மற்றொரு பதிவில்)

 

No comments:

Post a Comment