May 11, 2022

Marital Rape and alternate

 


மனைவியே ஆனாலும் பாலுறவுக்கு கட்டாயப்படுத்தக் கூடாது என்பது மிகவும் சரி! அதை நான் ஆதரிக்கிறேன். அதேவேளை இணையர்களில் ஒருவருக்கு உடலியல் / பாலியல் தேவை இருப்பின் அதற்கு என்ன தீர்வை இந்த போலியான ஒழுக்கவாத சமூகம் வைத்திருக்கிறது.

 எந்த பாலினமானாலும் பாலியல் தேவை இருப்பவர்கள் திருமண உறவில் அது நிறைவேறவில்லை எனில் தன் துணையிடம் தன் தேவைகள் குறித்து வெளிப்படையாக பேசி திருமண உறவுக்கு அப்பாற்பட்டு தன் பாலியல் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் Right TO Sex உள்ளதா? அல்லது முறைப்படி பேசி விவாகரத்து பெற வழி உள்ளதா?

 பாலியல் வன்முறைகளுக்கும், ஏமாற்றுகளுக்கும் இதுவும் ஒரு காரணம் அல்லவா? இதனால் பாதிக்கப்படுவதும் பெண்கள் தான்! விவாகரத்தும் எளிதாக கிடைப்பதில்லை. சகித்துக் கொண்டு வாழ் என்று தான் இரு தரப்புக்கும் சொல்லப்படுகிறது.

 இதில் ஆண் எப்படியோ தன் பாலியல் தேவையை நிறைவேற்றிக்கொள்ளும் சலுகை அவனுக்கு உள்ளது. குடும்பம், குழந்தை, மானம் கௌரவம் என்று பார்த்து தம்பதிகள் விருப்பமில்லாத உறவில் நீடிக்க வேண்டியுள்ளது. சில வேளைகளில் ஈகோ காரணமாக துணைகள் விவாகரத்து தருவதுமில்லை!

 அல்லது உன்னை விட்டு வாழ இயலாது என்று எமோஷனல் ப்ளாக்மெயில் செய்வார்கள். இத்தகைய சூழலில் விவாகரத்து பற்றி பேசவே இயலாத நிலையில் இருக்கும் நபர் தன்னுடைய பாலியல் தேவையை எப்படி நிறைவேற்றிக் கொள்வார். எதற்காக அவர் தன் உணர்வுகளை தியாகம் செய்ய வேண்டும்.

 இதில் இன்னொரு கொடுமை - வெளியில் உறவை நாடி அமைத்துக் கொண்டால், அதை கள்ள உறவு என்று கொச்சைப்படுத்துவது! சம்பந்தப்பட்ட பெண்ணை / ஆணை தேடிப் போய் அடிப்பது. அவமானப்படுத்துவது. சட்டரீதியாக அவர்களை விடுவிக்காமல், சட்டத்தின் படி அவர்களை குற்றவாளி ஆக்குவது.

 வல்லுறவை, திருமணத்திற்கு அப்பாற்பட்ட ரகசிய உறவை ஆதரிக்கவில்லை. அதேவேளை மாற்று என்ன என்பதற்கு சொத்துகளை தம் ரத்தத்திற்கே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேராசையில் உருவான குடும்ப அமைப்பிடம் மனிதர்களின் இயற்கையான பாலியல் தேவைக்கு என்ன தீர்வுள்ளது?

 ETHICAL NON MONOGAMY என்று வெளிப்படையான உறவு முறைகளை சிலர் முன் வைக்கின்றனர்! ஆதி கால பலதார மணமுறை போன்றது! அது நடைமுறையில் எவ்வகையிலான உணர்வு ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எனக்கு தெரியவில்லை!

 திருமணம் என்பது மனிதர்களின் உணர்வுகளை, தேவைகளை, சுயமரியாதையை அடக்கி வைத்துக் கொண்டு வாழ சொல்லும் சிறைக் கூடமாக இருக்கக் கூடாது. ஏதோ ஒரு வகையில் பொருத்தம் இல்லையெனில் விவாகரத்தை எளிமையாக்கி, பிரிந்தாலும் கைவிடாத வகையில் நட்புறவினை வளர்த்துக் கொள்ள பழகிக் கொடுக்க வேண்டும்.

 பாலியல் தேவையை கொச்சைப்படுத்துவதை விடுத்து அதற்கு உரிய வடிகாலை ஏற்படுத்திக் கொடுப்பத்திக் கொள்ளும் வகையில் அறிவியல் பூர்வமாக அனுகுவதும் அடிப்படைத் தேவைதான்!

 உடலுறவில் நாட்டமில்லாத ஒருவரை கவுன்சிலிங். மருத்துவம், மருந்துகள் என்று கட்டாயப்படுத்தி தயார்படுத்துவதும் நடக்கிறது! இதுவும் பெரிய கொடுமை! அதேபோல் பாலுறவு தேர்வு என்பதற்கும் இடமில்லாத சூழலில், வேறு வழியின்றி திருமணம் செய்து கொண்டு சிக்கித் தவிப்பவர்களும் உள்ளனர்.

 மனிதர்களின் எந்த அடிப்படைத் தேவைக்கும் இங்கே சரியான அனுகுமுறையும் இல்லை, தீர்வும் இல்லை!

 எல்லாமே நியாயமற்ற வகையில் தனிக் குடும்பங்களின் செல்வக் குவிப்பிற்காக உருவாகி இருக்கும் ஒரு சமூக அமைப்பின் தேவைகளுக்கு ஏற்ற ஏற்பாடுகளாகவே உள்ளது.

 இதை மக்கள் உணராதவரை, போலியான ஒழுக்கவாத்ததை பேசிக் கொண்டு மனிதர்களின் வாழ்வை சிதைத்துக் கொண்டே இருக்கலாம்! ஒழுக்கம், குடும்பம் என்னாகுறது, குழந்தைகள் நலன்.. கண்ணியம், கட்டுப்பாடு என்று பேசிக் கொண்டு அனைத்து பண்புகளையும் எளியவர்கள் மேல் திணிக்கலாம்!

 #Democratize_Sex #Democratize_Marraige #Normalize_Divorce Socialize Couples on equality basis!

 மனிதர்களை கூலி அடிமைகளாக தயார்படுத்தும் கல்வி தான் இங்கே இருக்கிறது. சமூக இயக்கம், மனித மனம் மற்றும் உடலியக்கம் பற்றிய கல்வி என்பது அனைவருக்கும் கிடைப்பதில்லை. அப்படி ஒன்று இருக்கிறது என்று கூட அறியாத நிலையில் தான் பெரும்பான்மை மக்கள் உள்ளனர். உளவியல் கல்வி என்பதும் ஒரு தனித்துறை, அது உருவான சமூகப் பின்னணியின் காரணமாக அதிலும் போதாமை உள்ளது.

அது ஒருபக்கம்! பாலியல் தேவை குறித்து தொடர்கிறேன்!

பாலியல் தேவை உள்ளவர்களுக்கான பதிவு இது!

உடலுறவு தேவை என்பதையே கொச்சையாக பார்க்கும் சமூகம் இது! பாலியல் தேவையை துறந்து வாழ்பவரே இங்கே புனிதவான்கள்! ஏன் அப்படி? பாலியல் தேவை இருப்பவர் எந்த அறிவியலின் அடிப்படையில் “கேடு கெட்டவர்?” இதற்கெல்லாம் இங்கே பதில் இருக்காது. உடலுறவு இன்றி மனித இனமோ, எந்த உயிரினமோ தோன்றியதில்லை அல்லவா? அதை முறைப்படுத்திக் கொண்டு வாழ வேண்டும் என்கிற நிலைமை உண்டானதற்கு பொருளியல் வரலாற்று காரணிகள் உள்ளன. ஆனால் அது பற்றிய கல்வி இங்கே அனைவருக்கும் கிடைப்பதில்லை!

பாலியல் கல்வி பற்றி பேசுகிறார்கள். மனித சமூக உருவக்கம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்த கல்வி இல்லாத பாலியல் கல்வி முழுமையாகாது! அதே போல் பாலினக் கல்வி என்பதையும் பேச வேண்டியுள்ளது!

பாலியல் கல்வி என்பது, தம் உடலை, உடலின் பாலியல் தேவைகளை புரிந்து கொள்தை, கையாளவதை கற்றுக் கொடுக்கலாம். இணைகளிடம் தம் ஆசைகளை பேசிக் கொள்ளும் அளவுக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கலாம் ஆனால் உடலுறவில் நாட்டமில்லாத ஒருவருக்கு அது எந்த வகையிலும் தீர்வளிக்கப் போவதில்லை. உடன் வாழும் துணைக்கும் அது தீர்வளிக்கப் போவதில்லை. திருமணமான பின் உடலுறவு மறுக்கப்படும் நிலையில் இணையர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு சுரண்டலுக்கும், ஏமாற்றத்திற்கும் வழி இல்லாத வகையில் ஒரு தீர்வு தேவைப்படுகிறது. அது விவாகரத்தாக இருக்கலாம், அல்லது இணையர்கள் தமக்குள் பேசி, வெளியப்படையான வகையில் மாற்று வழிகளை முடிவு செய்யலாம். ஆனாலும் சட்டம் அதை ஏற்குமா என்கிற சிக்கல் உள்ளதல்லவா? சமூகமே பிற்போக்குத்தனமாக இருக்கும் சூழ்நிலையில் இணையர் அதை ஏற்கும் உணர்வுநிலையில் இருப்பாரா? அதனால் வரும் அவப்பெயர்களை, விளைவுகளை அவர்களால் தாங்க இயலுமா என்கிற சிக்கல் உள்ளதல்லவா?

மனிதர்கள் மனரீதியாக, உடல் ரீதியாக, பொருளாதார ரீதியாக இன்புற்று வாழ இந்த ஆண் தலைமையிலான குடும்ப அமைப்பிலும், சொத்து குவிக்கும் பொருளாதார அமைப்பிலும் தீர்வு இருக்கிறதா?

குறிப்பு: இன்பம் என்பது உடலுறவு மட்டுமல்ல! அனைத்து தேவைகளுக்கும், உரிமைகளுக்கும் பொறுந்தும்

No comments:

Post a Comment