Mar 29, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள் – ஆணாதிக்கத்தின் கற்பனாவாதச் சிறகு




காட்சியமைப்பு, ஒளிப்பதிவு இன்னும் இதர தொழில்நுட்பத் துறைகளில் எவ்வளவு முன்னேறினாலும் ’காதல்’ எனும் குண்டு சட்டியை விட்டு தமிழ் திரைப்படங்கள் வெளியேறவில்லை என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் மு.உ.க.  தாய் மீது பிடிப்பு, அதனால் பாதிக்கப்படும் மனநலம், அதைத் தொடர்ந்து தன் வாழ்வில் நுழையும் பெண் மீதான பிடிப்பு என்ற வழக்கமான ’ஈர்ப்புக்கூடிய மிகையுணர்ச்சிக் காதல்’ (obsessive Romantic Love).  கதைகளில் வரும் அதே அலுப்புத் தட்டும் கதாப்பாத்திர சித்தரிப்புகள். 

பி.பி.ஓவில் பணியாற்றும் ஓர் இளைஞனின் காதல், அவனது பின்னணி, காதலில் பிரச்சனை, எப்படி அவ்விளைஞன் பிரச்சனைகளை எதிர்கொள்கிறான், அதன் தொடர்ச்சியான முடிவு என்று ஓரிரு வரிகளில் கதையை சுருக்கிவிடலாம். பி.பி.ஓ இளைஞர்கள், இளைஞிகள்!!  என்றால் அவர்களுக்கென்று ஒரு சித்தரிப்பை தற்போதைய சினிமாக்கள் செய்து வருகின்றன. இக்கதையில் வரும் ராமும் அப்படி ஒரு ’ஹாண்ட்சம்’ இளைஞர், அவரின் ‘கதாநாயகத் தன்மை, அழகு, கவர்ச்சி, ஒழுக்கவாதம்’ இவற்றை சித்திரிக்கும் வகையில் முதல் காட்சி – சக பணியாளரான ஒரு பெண், குட்டைப் பாவாடையில் (அது சீருடை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்) ராமை சுற்றி வந்து, ‘டேக் மீ’ ராம், அதாவது என்னை எடுத்துக்கோ ராம் என்பார் அதுவும் சாதாரணமாக இல்லை, ‘முற்போக்கு உடல் மொழியுடன்’.  ஆம் அப்பெண் தன் மேல் சட்டையின் முதல் இரு பொத்தான்களை அவிழ்த்து விட்டு, தன் மார்புக் கோட்டை காட்டியாவது ‘ஹாண்ட்சம்’ ராமை கவர்ந்து விட வேண்டும் என்று வலை வீசுகிறார். ஹீரோ ‘ராம்’ (ராமர்) இல்லையா அதனால் அப்பெண்ணிடம் ‘மூட’ சொல்லிவிட்டு, தான் வேறொரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொல்லி மறுத்துவிடுவார். படம் முழுக்க பி.பி.ஓ பெண்கள் அல்லது தற்போதைய ’படித்த ’, ‘நாகரீக’, ‘முற்போக்கு’ பெண்கள் பற்றிய ஆணாதிக்க சித்தரிப்பே வழிந்தோடுகிறது.  பெண்கள் குடிப்பதை சந்தானம் கிண்டல் செய்வது, மீண்டும் மீண்டும் அப்பெண் ராமை சுற்றி வருவது, ராம் வேறொருவனை திருமணம் செய்து கொண்டாலும், விவாகரத்து வாங்க வைத்து திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வது, மனநல மருத்துவராக வரும் ஜெயப்பிரகாஷின் ‘எள்ளல்கள்’, பெண்கள் பற்றிய சந்தானத்தின் மற்ற ‘நகைச்சுவை’ வசனங்கள் என்று எல்லாம் ஆணாதிக்க பெண் கருத்தாக்கங்கள்.

ஹீரோ ராம் ஒரு பெண்ணை (சாரு) தீவிரமாக விரும்புகிறார். பணி காரணமாக ஏற்படும் நட்பு ஆழமாக வளரும் சூழலில் அப்பெண்ணுக்கு சில ரவுடிகளால் தொந்தரவு ஏற்படுகிறது. அப்பெண் ராமை நல்ல நண்பராகவே கருதி பழகி வருகிறார் (வழக்கம் போல), தீவிர ஈர்ப்பின் காரணமாக (obsession) ராம் சாருவை எவரும் ஏதாவது சொல்லி விட்டால் ‘கொலை’ கூட செய்யத் தயங்காதவர். சாருவும் ராமும் சேர்ந்து ஒரு மென்பொருளை உருவாக்கி, அதை ஒரு போட்டியில் விவரிக்க வேண்டிய அன்று சாரு ஒரு காரில் சிலரால் இழுத்து செல்லப்படுகிறார். அதை பார்க்கும் ராம் முன்பு ரவுடி ஒருவர் சாருவை எச்சரிக்கும் காட்சியோடு தொடர்புபடுத்தி பதறி ஓடுகிறார். விபத்து நேர்கிறது. சித்தப் பிரமை பிடித்தவராகி வீடு திரும்புகிறார். உட்கார்ந்த இடத்திலேயே சில நாட்கள் உட்கார்ந்திருக்கிறார். பிறகு சாரு வருகிறார். அவருடன் அந்த வீட்டிலேயே வாழ்கிறார். வாரக் கடைசியில் காதலியோடு பெங்களூருவில் கழிக்கிறார். மற்ற நாட்களில் சென்னையில் வேலை.

சென்னையில் புதிய CEO (லதா) வருகிறார், அவர் சாருவைப் போல் இருக்கிறார். ஆனால் ராம் அவரைக் கண்டு எந்த உணர்வையும் வெளிப்படுத்தாததைத் தொடர்ந்து லதா அவரைப் பற்றிய பின்னணியை ஒரு மனநல மருத்துவரிடம் பகிர, மீதி கதை நகர்கிறது. சாருவுக்கும், லதாவுக்குமான தொடர்பு தெரியவருகிறது. ராமின் பின்னணிக் கதையைச் சொல்ல கிராமத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறார்கள். கணவனை இழந்த ஒரு பெண் மகனை எவ்வளவு சிரமங்களுக்கிடையில் வளர்க்கிறாள் என்று சொல்ல நிணைத்த இயக்குனர் அதற்கு ஆணாதிக்க தாய்மைவாத சித்தரிப்புகளை மட்டுமே கைகொண்டுள்ளார். இளம்பிள்ளைவாதம் கண்டுள்ள சிறுவயது மகனுடன் இளமை நிறைந்த பெண் விதவையாகி நிற்கிறாள்.  ஆண்களால் அவளுக்குத் தொல்லை நேர்கிறது.  உடனே அவள் அந்த ஆணைத் அடித்து துரத்திவிட்டு அடுத்த நாள் தன் அழகை சிதைத்துக் கொள்கிறாள். பார்ப்பன புரோகிதர் அவளுக்கு நலம் விரும்பி (well wisher). ஒரு பெண் இளம் வயதில் விதவையானால் மொட்டையடித்து, சுடு பூசனியை கொடுத்து கடிக்கச் சொல்லி பற்கள் உதிரச் செய்து அவள் அழகை சிதைக்க வேண்டும், அவள் அழகற்றவளாக இருந்தால் தான் அவள் வேறொரு ஆணை நாடமாட்டாள், வேறொரு ஆணும் அவளை நாடமாட்டாள் எனும் பெண்களுக்கெதிரான பார்ப்பன (மனுஸ்மிருதி உள்ளிட்ட) பரிந்துரையை நயம்பட எடுத்துரைக்கிறார் இயக்குனர். பல இடங்களில் பார்ப்பனிய ஆதரவை இயக்குனர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆம் நிறைய ‘கெட்டவர்களை’ காட்டும் படங்களில் பெரும்பாலும் ‘புரோகிதர்கள்’ ரொம்ப நல்லவர்களாக காட்டப்படுவதும் அவர்களைத் தவிர இரட்சகர்களே இல்லை எனும் சித்தரிப்பும் பார்ப்பன-இந்துத்துவப் பிடிப்பன்றி வேறில்லை. அவள் பிழைப்புக்கு பார்ப்பனப் புரோகிதர் பரிந்துரைப்பது ‘வட்டிக்கு விட்டுப் பிழைத்தல்’ உடல் உழைப்பின்றி பிழைக்கும் புரோகிதக் கும்பல் உடல் உழைப்பை, வேறொரு தொழிலை பரிந்துரைக்கும் சாத்தியம் குறைவுதான் போலும். வட்டியை வசூலிப்பதற்கான ’கெட்டப்சேஞ்’, அதைத் தொடரும் அவரது உடல் மொழி. இங்கு ஆதிக்கச் சாதி  கருத்தியலை வைப்பது யதார்த்தமாக இல்லை. சாம பேத தாண தண்டம் நாலும்  தோத்துப் போகும் போது தகிடு தத்தம் என்ற இன்னொரு குரலும் சேர்ந்தே ஞாபகத்திற்க்கு வருகிறது. மற்ற சாதிகளிடத்தில் பிராமணியம் வரையறுக்கும் கடமைகளை பிராமணியம் கறாராக கைக்கொள்ளும் போது அது தனக்குத் தானே மீறலின் பொருட்டு வைத்திருக்கும் பரிகாரங்கள் ஏறாளம்.  எரிச்சல் குமட்டிக் கொண்டு வந்த இடங்களில் இதுவும் ஒன்று. ஆணால் கொடுக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரத்தில் அந்தப் பெண் சிறப்பாக நடித்துள்ளார்.

இத்தகைய ' மிகையுணர்ச்சி தாய்மை' சித்தரிப்பின்றி வந்த தென் மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தைப் பற்றி இங்கு சொல்வது அவசியமாகிறது. அதில் தாயாக வரும் பெண் தன்னம்பிக்கையின் உருவமாய் இருப்பாள். எவரையும் நம்பாமல் தன் உடல் உழைப்பை நம்புவாள். தாய்வழிச் சமூகத்தின் எச்சமாக இருக்கும் கிராமங்களில் பெண்கள் ‘பார்ப்பனியச்’ ஒடுக்குமுறைகளுக்கு இசையாமல் தன்னம்பிக்கையுடன் உழைத்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியுள்ள வரலாறும் உள்ளது. தெ.மே.ப வில் காட்டப்படும் பெண் அத்தகையவள். வன்முறையை எதிர் கொண்ட பின்னரும் வழக்கமான ‘வீரத் தாய்களைப்’ போல் இல்லாமல் மகனுக்கு ’வாழ்வு’ காத்திருக்கிறது, பகையை பகையால் வெல்ல முடியாது, அதை கவனி, அடிதடி வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டு மடிவாள். அறுத்துக் கட்டும் பண்பாடு கொண்டது ‘தமிழ்ச் சமூகம்’ ஆனால் விதவைக்கு மொட்டையடித்து மூலையில் உட்கார வைத்தது பார்ப்பனியப் பண்பாடு. மதவாதக் கருத்தாக்கங்களால் அக்காலக்கட்டத்தில் பண்பாட்டு இறுக்கம் காரணமாக பெண்கள் மறுமணம் செய்யவில்லை. இயக்குனர்கள் தங்களின் மற்ற மிகையுணர்சிப் புனைவுகளுக்கிடையே பெண் / பண்பாடு பற்றிய சித்தரிப்புகளை, ஆணாதிக்க, முதலாளித்துவ சமூக அமைப்பின் உளவியல்களை ஏன் கட்டுடைக்க முயல்வதில்லை.  அரை நிர்வானப் பாடல்காட்சிகள் வடிவமைக்க செலவிடும் நேரத்தில் சிறிதளவை இவர்கள், தங்கள் ஆணாதிக்க அறிவு நிலையை மீட்டுக்கொள்ள செலவிடலாம்.

பெரும் சிரமத்துக்கு மத்தியில் மகனை வளர்க்கும் அந்த தாய் மகன் வளர்ந்து பி.பி.ஓவில் சேர்ந்து ‘செட்டில்’ ஆன பின்னர் மடிந்துபோகிறாள். அதனால் சித்த பிரமை பிடித்தவன் போல் ஆகிறான் மகன். உடனே சாரு வந்து அவனை தோளில் சாய்த்து ‘நான் இருக்கேண்டா உனக்கு, எப்பவும் உன் கூடயே இருப்பேன்’ என்று சொன்னவுடன் தாய் மீது ‘அளவற்ற பாசம்’ கொண்ட ராம் சாருவின் மீது ‘சாய்ந்துவிடுகிறார்’.  எத்தனை காலங்களுக்கு இந்த நுரைதள்ளும் புளித்துப் போன அரைத்த மாவை சகித்துக் கொள்வது. ( பகலில் தாய், இரவில் வேசி, முற்பகலில் தோழி, பிற்பகலில் சகோதரி, இத்யாதி இத்யாதி....) பெண் என்பவள் எப்பொழுதும் ஒரு ஆணுக்கு ஆதரவான சொற்களையே சொல்லவேண்டும், உடலைச்  சத்திரம் போன்று திறந்து வைத்திருக்க வேண்டும், அந்த சத்திரத்தில் ஒருவனுக்கு மட்டுமே, அதுவும் வீர சாகசங்கள் செய்யும் ‘கதாநாயகனுக்கு’ மட்டுமே திறந்து வைத்திருக்க வேண்டும். ஒரு பெண்ணின் தோளில் சமூகத்தால் பாதிப்புக்குள்ளான ‘so called bad people’ அத்துணை பேரும் ஏன் சாய்ந்து கொள்ளக்கூடாது. அன்பு அத்தகையவர்களுக்கும் கிடைத்தால் அவர்களும் இந்தக் கதாநாயகர்கள் போல் ‘நல்லவர்’ ஆகி விடலாமே. அது தவறு என்று சொல்வீர்களானல் இதற்குப் பெயர் ‘அன்பு’, ‘காதல்’ என்பது வெறும் ஆணாதிக்க வெற்றுச் சொற்கள், வெற்றுக் கருத்தாக்கம்.  அப்படியென்றால் அதற்குப் பெயர் காதல் இல்லை, அது காமம் எனும் உடல் தேவைக்கும், தன் விந்தணுவை ‘தூய்மையாக விதைத்து’ வாரிசு பெற்றெடுக்கும் தேவைக்கு ‘சிறந்த பெண்மை’ நிறைந்த பெண்ணைக் கண்டடையும் ஒரு வேட்டை.  அதேபோல் ஏன் ஒரு பெண் தாய்மை கூடிய அன்பை பலருக்கும் கொடுக்கக் கூடாது எனும் விதி நிலவுகிறது. தாய்மை எனும் அந்த பரந்த உணர்வு ஏன் ஒருவருக்கு மட்டுமே உடமையாக்கப்படுகிறது?  ‘தாய்மை’ எனும் அன்பு உலகளாவிய பரந்த செயல்பாட்டுக்கு ஏன் அனுமதிக்கப்படுவதில்லை. தாய் என்பவளில் ஒரு சிறந்த வேலைக்காரி, அதுவும் தனக்கு மட்டுமான வேலைக்காரியை தக்கவைத்துக்கொள்ளும் மனப்பான்மையன்றி வேறென்ன?

தங்களை கவனித்துக் கொள்ளும் சுயநலத் தேவை, பாதுக்காப்பின்மை உணர்வின் வெளிப்பாடு ஆகியவையே தன் தாய் போல் ‘பொறுமை’ நிறைந்த பெண்ணைத் தேடச்செய்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் பெண்கள் கூட தங்களுக்கு துணை தேடும்போது தந்தை போல் ஒருவர் வேண்டும் என்று தேடுவது குறைவாகத்தான் இருக்கிறது, அவளுக்கும் தாய் போல் ஒருவனே தேவைப்படுகிறார். இது அறிவியலா, கற்பிதமா அல்லது ‘தந்தையாகிய’ ஆண்கள் பெரும்பாலும் அத்தகைய குணங்களைக் கொண்டிருப்பதில்லையா? அல்லது தந்தைகளுக்கென்று பொருளீட்டுவதைத் தவிர அன்பு, அடக்கம், பொறுமை, அரவணைத்து தோள் கொடுத்து காக்கும் எந்த ‘கடமை’யும் இல்லையா. அப்படி இருப்பின் ஆண்கள் வருத்தப்படவேண்டிய விசயம் இது. 

அப்படியில்லையென்றால் ஆணாதிக்க தாக்கமின்றி அன்பு, பாசம், அரவணைப்பு, என்று பெண்ணுக்கு தாங்கள் கொடுக்கும் இடம் ஆகியவை திரைப்படங்களில் மதிக்கப்படுவதில்லை, யதார்த்தமாக காட்டப்படுவதில்லை என்று ஆண்கள் கோபம் கொண்டு ஆணாதிக்க திரைப்படங்களுக்கு எதிர்வினையாற்றலாம்.

பல மில்லியன் வருட பரிணாமப் பின்னணியில் ஆண், பெண் எனும் உயிரியல் (மற்ற உயிரியல்களும்) எண்ணற்ற மரபியல் மாற்றங்களைக் கண்டுள்ளது. கடுமையான சுற்றுச்சூழல் மாற்றங்கள், வேட்டைமூலம் உணவு சேகரிப்பு குறைதல் அதைத் தொடர்ந்த உற்பத்தி முறையில் மாற்றங்கள், ‘விதைப்பு’, ‘வேளான்மை’ ஆகியவற்றைப் பெண்கள் கண்டுபிடித்தல் என்று மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்ணே கலவிக்கு, உயிர் மறு உற்பத்திக்கு தகுதியான ஆணைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றிருந்தாள் என்று வரலாற்றாசிரியர்கள் நிறுவியுள்ளனர்.  வேளான் பொருளாதாரம் தோன்றிய பின்னர், கடுமையான உடல் உழைப்பு குறைந்து குறைவான உழைப்பில் பொருள் சேர்ப்பு நடக்கிறது. ஒரு கட்டத்தில் கலவி ’பொழுதுபோக்காகிறது’, பெண் பெரும் ‘சொத்து’ படைத்தவள் ஆகிறாள். அவளது அதிகாரம் மேலும் கூடுகிறது. தனக்கும் தன் பிள்ளைகளுக்கும், சொத்துக்கும் ‘ஒழுங்கான’ பாதுகாப்பு வழங்கும் ஆணை மட்டுமே அக்காலத்தியப் பெண்கள் கலவி கொள்ள தேர்ந்தெடுத்தனர். அதுவரை சுதந்திரக் காதல் (கலவி) மட்டுமே இருந்து வந்துள்ளது. பெண்ணைக் கவரும் சாதனைகள்  செய்ய ஆணுக்கு ‘டெஸ்டோஸ்டிரோன்’ எனும் சுரபி அதிகமாக சுரப்பது அவசியமாகிறது. அச்சுரபியும் அவன் பெண்ணோடு கலவி கொள்ளும்போதோ அல்லது பெண்ணின் அருகாமையில் இருக்கும்போதோ இன்னும் அதிகமாக சுரக்கச் செய்யும் தன்மையில் இருக்கிறது.

அச்சுரபி இரண்டு நரம்பு தூதர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு இயங்கும் என்று விளக்குகிறார் மருத்துவர் ஷாலினி. டோபமைன், என்டார்ஃபின் எனும் அச்சுரபிகள் பேரானந்தத்தை உணரச்செய்பவை. வேட்டை, விளையாட்டு பெண் வழிச்சேறல் ஆகியவற்றில் ஈடுபடும்போது ஆணுக்கு இச்சுரபிகளின் அளவு அதிகரிக்கும். அதனால் ஆண் பெண்ணின் பாராட்டைப் பெற எல்லா முயற்சியையும் மேற்கொண்டான் என்கிறார். அது இன்றும் தொடர்கிறது. பெண்களுக்கும் அத்தகைய உணர்ச்சிகள், வேட்கைகள் உண்டு. அதை கட்டுபடுத்த வேண்டும் எனும் கட்டளைகளால் அவளது மரபணுவிலேயே பெறும் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

அத்தோடு ஆணுக்கு தன் மரபணு சுத்தமாக எந்த கலப்பும் இல்லாமல் பிறந்து பெண்ணின் ‘சொத்துக்களை’ தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனும் எண்ணம் வளர்கிறது.  உற்பத்தி முறை மாற்றம், தனிச்சொத்து பேணும் முறை வளரத் தொடங்குகிறது. ஆகவே ‘தனித்த’ மரபணு விதைப்புக்கு ஆணின் தலைமையில் ‘உறவு – ஒப்பந்தத்தை’ ஏற்படுத்திக்கொள்ளும் வழிமுறையை உருவாக்குகிறான். அதுவே திருமணம். 

மாதவிடாய் பொறாமை, கர்ப்பப் பொறாமை, செல்வாக்குப் பொறாமை, மரபுவளப் பொறாமைகள் இருப்பதாக பட்டியலிடுகிறார் மருத்துவர் ஷாலினி  பெண்ணை, அவளது மறு உற்பத்தி சக்தியை, அவள் சம்பாதித்த சொத்துக்களை உடமையாக்கிக் கொள்ளுதல் எனும் தேவை, சூழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக பெண் அடிமையாக்கப்பட்டாள், அவளுக்கென்று கடமைகள் வகுக்கப்பட்டன, ஆணுக்கு ஆறுதலான தோளை சுமந்து நிற்பதைத் தவிர வேறு தேர்வுகள் அவளுக்கு கொடுக்கப்படவில்லை. நாள் பட நாள் பட ஆணைச் சார்ந்தே வாழும் நிலைக்கு பெண் தள்ளப்பட்டாள். பெண் மீது ஆண் கொண்டிருந்த சார்பு, அவனது பாதுகாப்பின்மை உணர்வு, பெண்ணின் உடல் பலத்தின் மீது அவன் கொண்டிருந்த பொறாமை பெண்ணைப் பெண்ணாக இல்லாமல் செய்ததுவே வரலாற்றின் வெற்றி. அத்தகையப் பெண் திரைப்படங்களில் ஆணின் ‘காதல்’ பொருள் மட்டுமே ஆகிப்போனது அவல நிலை. 

ஆணின் பொறாமைகள், அவர்களின் இயலாமை ஆகியவை பெண் மீது ஏற்றி வைத்த ‘கடமை’ உணர்ச்சிகளை பெண்மை என்று சித்தரிக்கும் ஆணாதிக்க மனோபாவமே இத்தகைய பெண் கதாப்பாத்திரங்களில் தெரிகிறது.  உற்பத்தி முறையில் மாற்றம், தனிச்சொத்துக் காரணமாக ஏற்பட்ட பொறாமை, பெண் பற்றிய சித்தரிப்புகள் ஆகியவை பெண்ணையே பெண்ணுக்கு எதிராக நிற்கவைத்துள்ளது.


விதவைத் தாய் பற்றிய சித்தரிப்பு அலுப்புத் தட்டுகிறதென்றால், வேறொருவனுக்கு நிச்சயிக்கப்பட்டப் பெண் மற்றொருவனைக் காதலிக்க ‘அழுத்தமான’ காரணங்கள் தேவைப்படுகிறது இயக்குனர்களுக்கு. ஆணாதிக்கப் பழமைவாத, மதவாத ‘கற்பு’ கருத்தாக்கத்திலிருந்து இவர்களால் வெளியேறமுடிவதில்லை. ஆகையால் ஆணுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் பெண் ‘கொடூரமானவனாக, கெட்டவனாக’ இருக்க வேண்டும். முன் பின் பழக்கமில்லாத ஒரு ஆணுடன் நிச்சயம் செய்யப்படும்போது ஒரு பெண் யாரையும் காதலிக்கவில்லை, சந்தர்ப்பவசத்தால் வேறொரு ஆணை சந்திக்க நேர்ந்து அவனது குணங்கள் பிடித்துப் போனால் அவள் காதலில் விழுவது இயல்பு. இதில் என்ன ஒழுக்க மீறல் இருக்கிறது.  அப்படி வேறொருவனைக் காதலிக்க நேர்ந்தால் அப்பெண் அதை நேர்மையாக வெளிபடுத்தி, சம்பந்தப்பட்ட நிச்சயிக்கப்பட்ட அணிடம் தன் காதலை விளக்கி நடக்கவிருக்கும் திருமணத்தை ரத்து செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளும் விதமாக இதுவரை ஏதாவது திரைப்படங்கள் வெளிவந்துள்ளனவா. 

அப்படி வெளிப்படையாக சொன்னால் அந்த ஆண் அதை ஏற்றுக்கொள்வானா எனும் கேள்வி எழலாம், அவனை ஏற்றுக்கொள்ள விடாமல் இருப்பது சமூக அமைப்பே. திருமணம் என்பது ’ஆண்மைக்கான’ ஒரு சான்றிதழாக கருதப்படுகிறது. அதிலும் பணக்கார படிநிலையென்றால் அது அந்தஸ்து சார்ந்த விசயமாகிவிடுகிறது. ஒடுக்கபப்ட்ட சமூகம் என்றால் ‘கற்பு’ சார்ந்த விசயமாகிவிடுகிறது. சாதியும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.  அதனால் ‘பையன்’ வீட்டார் அதை ஒரு ‘ஈகோ’ பிரச்சனையாக எடுத்துக் கொள்ளும் சூழல் நிலவுகிறது. எப்படிப்பட்ட நெருக்கடிகள் இருந்தாலும், காதல்வயப்பட்ட ஆணும், பெண்ணும் தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் உரிமை இருக்கிறது, அதற்கான முயற்சிகளை, போராட்டங்களை அவர்கள் மேற்கொள்கிறார்கள் என்று மாற்று பார்வை கொண்ட கதைகள் மிகக் குறைவு. பெரும்பாலான இயக்குனர்கள் பெண்ணியச் சிந்தனையை, மானுட சமத்துவ சிந்தனையை பெற்றிருக்கவில்லை என்றே தோன்றுகிறது.  ‘கெட்ட’ கதாப்பாத்திரப் புனைவுகள், அதைத் தொடர்ந்து கதாநாயகின் மனமாற்றம் அதுவும் ஒரு ஆண் ‘சாகங்கள்’ செய்து தன்னை நிரூபித்த பின்னர் ஏற்படும் மனமாற்றம் பிற்போக்குத்தனம் நிறைந்தது. அது முழுமையான ‘ஆண்மை’ வாதம் மட்டுமே.

தமிழ் திரைப்படங்கள் (இந்தியத் திரைப்படங்களும்) ’ஆண்மை’ சாகசத்தை தவிர வேறெதையும் பிரகடனம் செய்வதில்லை. மிகவும் அரிதாகவே பெண் விடுதலையை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.  ஆண்மை, பெண்மை எனும் பாலினவாத சித்தரிப்பு மட்டுமல்லாமல் மூன்றாம் பாலினத்தவர் பற்றிய சித்தரிப்பும் ஆணாதிக்க மதவாதக் கருத்தாங்களை கொண்டேப் புனையப்படுகின்றன. நாயகனையும், நாயகியையும் சேர்த்து வைத்து கதையை முடிக்கும் இறுதிக் கட்டத்தில் சில நீதிகளைப் பரிந்துரைப்பர் நமது இயக்குனர்கள் . அவ்வகையில் மு.உ.க வில் ’நல்லவர்களான’ ஆணும், பெண்ணும் சேர்வதற்கு பலியாகும் ‘கெட்ட வில்லன்கள்’ யார் தெரியுமா, ’நம்பிகள்’ (gay) எனும்  ஓரினச்சேர்கையாளர்கள். (அது ஒரு கனாக் காலம் திரைப்படத்திலும், தனுஷ் சிறையில் இருக்கும் போது ஒரு ‘கே’ அவரை ‘உறவுக்கு’ அழைப்பார்...அது கொலை அளவுக்கு சென்று விடும்..10 வருட ஜெயில் தண்டனை கிடைக்கிறது.....)

சாருவுக்கு நிச்சயிக்கப்பட்ட  அந்தப் பணக்கார மாப்பிள்ளை ஓரினச்சேர்கை பழக்கம் கொண்டவர். அவரது ‘ஆண்’ காதலர்கள், தன் காதலன் ஒரு ‘பெண்ணை’ திருமணம் செய்து கொள்வதை சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு பொறாமை கொண்டவர்கள். நட்பைத் தாண்டி ‘வேறு சில பழக்கங்களை’ கொண்டிருப்பவர்கள்.  ‘நம்பி’ காதலனுக்கு நிச்சயம் செய்யப்படும் பெண்களைத் துரத்தி துரத்தி கொலை செய்துவிடுவார்கள். அப்படித்தான் அவர்கள் சாருவையும் தூக்கிச் செல்கிறார்கள். அப்போது ‘ஆணாகிய’ ஹீரோ அவளைக் காப்பாற்ற பறந்தோடி வருகிறார். அடி உதைகளை வாங்கி பெண்ணைக் காப்பாற்றுகிறார். ஓரினச்சேர்கையாளர்கள் கொடூரமானவர்கள், சமூக விரோதிகள், சைக்கோக்கள் எனும் அச்சு வார்ப்பு  ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே.  தீவிரவாதிகள் என்றால் இஸ்லாமியர்கள், பாலியல் வியாபாரம் செய்யும் பெண் தாதா என்றால் தெலுங்குக்காரி, ஓரினச்சேர்கையாளர்கள் என்றால் கட்டாயப்படுத்தியாவது ஆணை புணர்பவர்கள், போதைப்பழக்கம் உடையவர்கள், காதலனுக்காக பெண்களைக் கொலை செய்யத் தயங்காதவர்கள் எனும் சித்தரிப்புகள் எத்தகைய ஆபத்தான கருத்தாக்கங்களை உருவாக்குகின்றன, அதன் விளைவுகள் என்ன என்பதை நாம் கண்டு வருகிறோம்.  23.2.2012 அன்று ‘கே’ உரிமைகள் தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி. மல்ஹோத்ரா ஆஜராகி “ஓரினச்சேர்க்கை ஒழுக்கக்கேடானது......எனவே இருநபர் சம்மதத்துடனான ஓரினச் சேர்க்கை குற்றம் அல்ல என்ற ஐக்கோர்ட்டு தீர்ப்பினை ஏற்க இயலாது” என்று வாதிட்டுள்ளார். எதிர்பால் உறவுகளில் எந்த அத்துமீறலும், நோயும் ஒழுக்கக்கேடும் விளைவதில்லையா.  உலகில் உள்ள எயிட்ஸ் நோய் முழுமையும் ஓரினச் சேர்க்கையாளர்களால் தான் பரவியுள்ளது என்பதற்கு ஆதார பூர்வ தரவுகள் ஏதேனும் உள்ளனவா.  நோய் வருவதால் அவர்கள் உறவு கொள்ளக் கூடாதென்றால் எதிர்வாதமாக ஒரு கேள்வி எழுகிறது. இன்று பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களால் புற்று நோய் உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்கள் வருகின்றன, அதனால் உண்பதையே நிறுத்திவிடலாமா, தொழில் நிறுவனங்களின் விஷக் கழிவுகளால் காற்று மாசுபட்டு உயிர் கொல்லி நோய்கள் வருகின்றன, சுவாசிப்பதையே நிறுத்திவிடலாமா.  வேடிக்கையாக இருக்கிறது.

மூன்றாம் பாலினம் பற்றிய எந்த அறிவும் வெகு ஜனத்தளத்தில் இல்லாதபோது அவர்களை சதா 24 மணி நேரங்களிலும் வெறுமனே புணர்ச்சிக்காக மட்டும் அலையும் வெறி பிடித்தவர்களாய்  காட்டப்படுகிறது. இவற்றை பொது மக்கள் எப்படி பார்ப்பார்கள் என்ற ஒரு சிறிய கவலையாவது அவர்களிடம் இருக்க வேண்டும். வெறி பிடித்து கொலை செய்யும் அளவுக்கு எத்தனை தொழிலதிபர்கள், அரசு சார் அதிகாரிகள் மற்றும் விதிவிலக்கல்லாத திரைப்பட இயக்குனர்கள் இருக்கிறார்கள் அவர்களின் காம வெறியை இன்னும் ஆழமாகச் சொல்லி பொது ஜனத்துக்கு உதவலாமே. மூன்றாம் பாலினத்தவர் கொலை செய்ய மாட்டர்கள் என்று நாம் இங்கு விளக்க வரவில்லை. சம்பந்தப்பட்ட கதையே மூன்றாம் பாலினம் சம்பந்தப்பட்ட கதையாக இருந்து அவர்கள் கொள்ளும் நெருக்கடிகள் அதன் விளைவாக வரும் கொலை மற்றும் தற்கொலைகளை புரிந்து கொள்ளவாவது செய்யலாம். இது ஏதோ கொலைக்காரராக குப்பத்துக்காரர்களை சித்தரிப்பது, தேச விரோதியாக இஸ்லாமியர்களைச் சொல்லுவது என்பது போல் ஆகி இயக்குனர் புது மாதிரியாக இருக்க வேண்டும் என மாற்றுப் பாலியல்காரர்ககளை வைத்திருக்கிறார். இதைத்தான் இதுவரை யாரும் சொல்லாத கதை என இயக்குனர்கள் பொதுவாகச் சொல்லுகிறார்கள் போலும்.

நோய் வராமல் இருக்கும் தடுப்பு முறைகளைப் பரிந்துரைப்பதே முறையான வழிமுறை, அதைவிடுத்து சமூக நலன் எனும் பெயரில் உயிரியல் மாற்றங்களை மறுப்பது இயற்கைக்கெதிரானது, மனித உரிமைகளுக்கெதிரானது, அறிவியலுக்கெதிரானது.  வெகுஜன ஊடக சித்தரிப்பின் மூலம் தேவையற்ற அச்ச உணர்வு, கருத்தாக்கங்கள் பரவும் அபாயம் உள்ளது. பின்பு அவையே சமூக விதியாக, யதார்த்தம், உண்மை என்று கருத்தப்படும் போக்கும் உள்ளது. ஆகவே பாலினவாத சித்தரிப்புக்களை கூறுணர்வோடு, அறிவியல் பூர்வமாக அணுகுவது அவசியமாகிறது.

இறுதியாக, திரைப்படங்களில் பெண்களைக் காப்பாற்ற பெண்கள் அல்லது மாற்றுப்பாலினத்தவர் ஏன் வருவதில்லை. ஒற்றை ஆள் மட்டுமே இரட்சகராக இருப்பது யதார்த்தத்தில் எந்தளவுக்கு சாத்தியம்.  திரைப்படம் வெறும் புனைவு தானே, இதுவெல்லாம் வெற்று வாதம் என்று சொல்வோரிடம் ஒரு கேள்வியை முன்வைக்க வேண்டியுள்ளது.  அத்தகையப் புனைவுகளில் கூட பெண்கள் பறந்து வந்து காப்பாற்றுவது போல் காட்டப்படுவதில்லையே.  ஏன். ஆணைத்தவிர பெண்களை, சமூகத்தை எவரும் காப்பாற்ற முடியாதா. பெண் தன்னைத் தானே தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளே இல்லையா எனும் கேள்விகளுக்கு ஆணாதிக்கவாதிகளிடம் நேர்மையான, அறிவியல்பூர்வ பதில்கள் கிடைப்பதில்லை.  இந்த திரைப்படம் வெளியிடப்பட்ட துவக்க காலத்தில் விதியாசமான காதல் கதையெனும் ’நிலைப்படுத்துதல்’ (Positioning) மேற்கொள்ளப்பட்டது. இப்போது ‘தாய்மை’ தூக்கிப்பிடிக்கப்பட்டு வருகிறது. மொட்டையடித்து ஒரு ‘தாதா’ போல் மாறிய தாயின் ‘உருமாற்ற’ புகைப்படங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சுவரொட்டிகள் காணப்படுகின்றன. வணிக நோக்கங்களுக்காக பெண் எல்லா வகையிலும் பயன்படுகிறாள். ‘சதைப் பிண்டமாக, காமத் தூண்டுதலுக்கான கவர்ச்சிப் படங்களோடு ஒரு இடத்தில், அடி உதை பெறும் - கதாநாயகன் வந்து காப்பாற்றும் பரிதாபத்துகுறிய பிறவியாக, அதுவுமல்லாமல் போனால், ஆணைக் காத்து நிற்க வேண்டிய தாயாக என்று வனிக தேவைக்கேற்ப அவளது ‘இடம்’, ‘பாத்திரம்’ விளம்பர முன்வைப்புக்கு பயன்படுகிறது.

ஆணின் சாகசங்கள், அவனுக்கான பரிதாபங்கள், இரக்க உணர்வுகள் என  எல்லாம் பெண்ணை நோக்கிச் சொல்வது “நீங்கள் எங்கள் அடிமைகள், எங்களுக்காக உருவாக்கப்பட்டவர்கள், எங்களை மகிழ்விப்பதும், கவனித்துக்கொள்வதும், வாழ்வைத் தியாகம் செய்வதுமே உங்கள் பணி. அதனால் உங்களுக்கான குணாதியங்களையும் நாங்களே வடிவமைப்போம். எங்கள் காதலை மறுக்கும் அதிகாரம் உங்களுக்குக் கிடையாது. அப்படி மறுத்தாலும் நாங்கள் செயற்கரிய சாகசங்கள் செய்தால் எங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இல்லையென்றால் முகத்தில் அமிலம் வீசுவோம், இவற்றை மறுப்பீர்களானால் நீங்கள் தத்தாரிகள், வேசிகள்...... சுருங்கச் சொல்வதானால்....சமூகத்தை சீர்குலைக்கும் பெண்ணியவாதிகள்.....எங்களை நாங்கள் நல்லவர்களாக, சாகச வீரர்களாக காட்டிக்கொள்ள ஆணல்லாத எந்த பாலின அடையாளத்தையும் எங்களுக்கு எதிரானவர்களாகவே சித்தரிப்போம்.....” வாழ்க பாலின சமத்துவம்.

(* மருத்துவர் ஷாலினி சொன்ன குறிப்புகள் - பெண்ணின் மறுபக்கம், விகடன் வெளியீடு).

இக்கட்டுரை 361 டிகிரி மார்ச் மாத இதழில் வெளிவந்துள்ளது.

Mar 23, 2012

தொடர் உண்ணாநிலை போராட்டம் - நாள் இரண்டு






கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினரின் தொடர் உண்ணாநிலை போராட்டம் குறித்து நிறைய பேருக்கு மென் கடிதம் அனுப்பியிருந்தேன். அதற்கு பதில் அளித்த Naanarkaadan Oviyanilaa எனும் தோழர் பின் வரும் வாழ்த்துறையும், அறிக்கையும் அனுப்பியிருந்தார். அது இன்றைய தினம் போராட்டக்கூட்டத்தினரிடையே வாசிக்கப்பட்டது. ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றி.





போராட்டம் வெல்ல நாமக்கல் மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றம் வாழ்த்துகிறது . இந்தப் போராட்டத்திற்குப் பொருத்தமான தோழர் பகத்சிங் கின் அறிக்கை.......

லாகூர் சதிவழக்கு விசாரணை நடைபெற்ற சிறப்பு நீதிமன்றத்தில்,பகத்சிங்கால் எழுதப்பட்டு,ஐந்து தோழர்களால் கையொப்பமிடப்பட்டு,வாசிக்கப்பட்ட அறிக்கையின் சிறு பகுதி....

....புரட்சியின் இலக்கை அடைவதற்காக கைக்கொள்ள வேண்டிய வழிமுறை சமாதானப் பூர்வமானதாய் இருக்க வேண்டுமா அல்லது வேறுவகைப்பட்டதாய் இருக்கவேண்டுமா என்பதை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு,அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களிடமே இருக்கிறது என்று நாங்கள் அறிவிக்கிறோம்.புரட்சியாளர்கள் பிறர்க்கென வாழும் கோட்பாட்டை உடையவர்களாதலால்,அவர்கள் சமாதானத்தை நேசிப்பவர்கள். அவர்கள் நேசிக்கும் சமாதானம்,கோழைத்தனத்தின் விளைவாய் பிறப்பதும்,துப்பாக்கி முனையில் பேணப்படுவதுமான போலி சமாதானம் அல்ல.நீதியையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக்கொண்ட உண்மையான நிரந்தரமான சமாதானமே.தவிர்க்க முடியாத கட்டாய சூழ்நிலையில் எடுக்கப்படும் நடவடிக்கையாக, கடைசிப் புகலிடமாக மட்டுமே புரட்சியாளர்கள் வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் கையிலெடுக்கின்றனர்.
மனிதனுக்காக சட்டம்-ஒழுங்கேயொழிய, சட்டம்-ஒழுங்கிற்காக மனிதன் அல்ல என்று நாங்கள் கருதுகிறோம்.

மக்களது விருப்பதின் வெளிப்பாடாக இருக்கும் வரை மட்டுமே சட்டத்தின் புனிதத்தை பேண முடியும்.எப்போது அது ஒடுக்கும் வர்க்கத்தின் கையில் வெறும் கருவியாக மாறிவிட்டதோ,அப்போதே அது தனது புனிதத்தையும் தனிச்சிறப்பையும் இழந்துவிடுகிறது.பொதுமக்களின் சமூகத்தேவைகளுடனான தனது பொருத்தத்தை சட்டம் இழந்த உடனேயே அது, அநீதி இழைப்பதற்கும் கொடுங்கோலாட்சி செலுத்துவதற்குமான கருவியாக மாறிவிடுகின்றது.

தற்போதைய அரசாங்கத்தின் சட்டங்கள்,எமது மக்களின் நலனுக்கு எதிராக,அந்நிய ஆட்சியாளர்களின் நலனுக்காகவே இருக்கின்றன.அதனாலெயே அறநெறிகளின்படி,எமது மக்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் அச்சட்டங்களுக்கு கிடையாது.........

---------- பகத்சிங்


இன்று தோழர் பகத்சிங்கின் நிணைவு நாள். அதையொட்டி கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக நடந்துவரும் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் அவரது சிந்தைனைகளை நிணைவுகூர்ந்து பேசுவது என்று நேற்று முடிவு செய்தோம். அதற்கு பொருந்திவருமாறு நாமக்கல் மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றம் தோழரும் கடிதம் அனுப்பியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக விடுதலைப் பாதையில் பகத்சிங் எனும் புத்தகத்திலிருந்து எங்களைத் தூக்கிலிடக் கூடாது, சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற தலைப்பில் பகத்சிங் எழுதிய கடிதத்தின் இறுதி பத்திகளை வாசித்தேன்:

கைதிகளைச் சுடும் படைப்பிரிவிற்கு உத்தரவிடுங்கள்:

எங்களது இறுதி முடிவைப் பற்றிய கேள்வியைப் பொறுத்து எங்களை சில வார்த்தைகள் கூற அனுமதியுங்கள். எங்களைக் கொலை செய்வதென்று நீங்கள் தீர்மானித்துவிட்டதால் அதனை நீங்கள் நிச்சயமாய் நிறைவேற்றி விடுவீர்கள். உங்கள் கையில் அதிகாரம் இருக்கிறது. இந்த உலகத்தில் அதிகாரமே மிகப்பெரும் நியாயத்தைக் கொடுக்கிறது. “வல்லான் வகுத்ததே வாய்க்கால்” எனும் முதுமொழியே உங்களை வழிநடத்தும் உந்து சக்தி என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் மீதான விசாரனை முழுவதுமே அதற்கு ஓர் சான்று.

நாங்கள் எதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்றால், உங்களது நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நாங்கள் அரசுக்கெதிராகப் போர் தொடுத்துள்ளோம். ஆகையால் நாங்கள் போர்க்கைதிகளே. எனவே நாங்கள் போர்க் கைதிகளைப் போலவே நடத்தப்பட வேண்டும். அதாவது தூக்கிலிடுவதற்குப் பதிலாக நாங்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று கோருகிறோம். உங்களது நீதிமன்றம் சொன்னதைத்தான் நீங்களும் மனதிற் கொண்டுள்ளீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையதே. எஙகளுடைய மரணதண்டனையை நிறைவேற்றுவதற்காகக் கைதிகளைச் சுடும் படைப்பிரிவொன்றை அனுப்பி வைக்குமாறு மிகுந்த கனிவுடன் இராணுவத் துறைக்கு உத்தரவிடுவீர்கள் என்று நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்கிறோம்.


தங்கள்......

பகத்சிங்
                                                                                                                                     
ராஜகுரு

சுகதேவ்.





இவர் பெயர் தோழர் பெருமாள். இன்றைய பேச்சாளர்களில் என்னை மிகவும் கவர்ந்த பேச்சாளர். இடிந்தகரை பகுதிக்கருகிலிருந்து வந்துள்ளார். மீனவ சமூகத்தை சார்ந்தவர்.

கோட்பாட்டு சொல்லாடல்கள், தத்துவார்த்த கேள்விகள் என்றெல்லாம் கவலைகொள்ளாமல், மண்ணின் மைந்தராக, ஒடுக்கப்பட்ட குரலாக அவர் பேசியது ”உண்மை”. வயிற்றெரிச்சலோடு நாங்கள் என்ன உங்களிடம் உங்கள் சொத்தையா கேட்கிறோம் நியாத்தைதானே பேசுகிறோம் எனும் தொணியிலிருந்தது.

உதயகுமார் வெறும் தலைவர் அல்ல, எங்களில் ஒருவர் எனும் உணர்வை வெளிப்படுத்தும் அப்பகுதி மக்கள் அவர் மீது எத்தகைய அன்பையும், நம்பிக்கையும் கொண்டுள்ளார்கள் என்பதை நேரில் காணும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்தது.
_________________________

கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினரின் தொடர் உண்ணாநிலை போராட்த்தில் நாளை கணிணி தொழிற்துறையினர் கலந்து கொள்கின்றனர். கணினி தொழில் நுட்ப பணியாளர்கள் இதில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.



தோழர்களே, வெகுஜன ஊடகங்கள் பெரிதாக இந்த போராட்டம் குறித்து பேசுவதில்லை, ஆகையால் முடிந்தவரை நீங்கள் உங்கள் தொடர்பு வட்டங்களுக்கு இந்த போராட்ட செய்தியை எடுத்துச்செல்லவேண்டும்.





பெரும் திரளான மக்கள் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று வெளிப்படுத்துவதே அம்மக்களுக்கு நாம் செய்யக்கூடிய உதவி.



Mar 22, 2012

கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தொடர் உண்ணாநிலைப்போராட்டம்



கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தொடர் உண்ணாநிலைப்போராட்டம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

தாயகம், ம.தி.மு.க. அலுவலகம், எழும்பூர், சென்னை. அணைவரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் கடந்த பல பத்தாண்டுகளாகவும், கடந்த 7 மாதங்களாக இடிந்தகரை பகுதி மக்களின் ஒருங்கிணைந்த தீவிரமான போராட்டமாக உருவெடுத்தது இடிந்தகரையில் இன்று ஒரு நெருக்கடியான நிலையை எட்டியுள்ளது. மத்திய அரசின் பொய், புரட்டு, இந்திய அணு விஞ்ஞானிகளின் அறிவியலுக்குப்புறம்பான பிரச்சாரம் இவையெல்லாவற்றையும் மீறி உழைக்கும் மக்களின், மீனவ மக்களின் போராட்டம் அசாத்திய உறுதியுடனும் கொள்கைப் பிடிப்புடனும் தொடர்ந்து வந்துள்ளது. மக்கள் மலையென நம்பிய தமிழக அரசு தான் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, சங்கரன்கோவில் தேர்தல் வரை காத்திருந்து இப்போது அணு உலையைத் திறக்க உத்தரவிட்டிருக்கிறது.

இந்தச்சூழ்நிலையில் தொடர்ந்து அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் மக்களை அச்சுறுத்தும் நோக்கத்தோடு ஆயிரக்கணக்கில் போலிஸார், துணை இராணுவம் மற்றும் தொழில் துறை பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களுடன் இடிந்தகரையை முற்றுகையிட்டுள்ளனர். இது சட்டத்திற்குப்புறம்பானது மட்டுமல்ல, ஜனநாயகம் என்ற கருத்திற்கே எதிரானதும் கூட.

அரசு தன் அதிகாரத் தின் கோர முகத்தை இடிந்தகரை போராளி மக்கள் மீது செலுத்துமானால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய அநீதியாக இருக்கும். எனவே கீழ்க்காணும் கோரிக்கைகளை முன்வைத்து கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் பல அமைப்புகள் ஒருங்கிணைந்து ஒரு தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை ஒழுங்கு செய்திருக்கிறோம். உண்ணாநிலைப் போராட்டத்தின் முதல்நாளான 22 மார்ச் 2012 அன்று பெண் படைப்பாளிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் உண்ணாநிலையில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்:
1. கூடங்குளம் பகுதியில குவிக்கப்பட்டிருக்கும் காவல்துறையினரை திரும்பப் பெறவேண்டும். ஓர் அறவழிப்போரட்டத்தை ஒடுக்கும் நோக்கோடு போடப்பட்டிருக்கும் காலவரையற்ற 144 தடையுத்தரவு நீக்கப்படவேண்டும்.
2. குடி நீர், மின்சாரம், சுகாதார வசதிகளை முடக்குவதன் மூலம் ஒரு மக்கள் போராட்டத்தை ஓர் அரசு முடக்க நினைப்பது மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் செயலாகும். இதேபோல் உணவு, மருத்துவ வசதிகள், குழந்தைகளுக்கு தேவையான பால் போன்ற அத்தியாவசிய தேவைகள்கூட காவல்துறையால் தடுக்கப்படும் நிலை தொடரக்கூடாது.
3. இடிந்தகரையில் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் குழந்தைகள் பள்ளித் தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. இது குழந்தைகளின் அடிப்படை உரிமையையே மறுப்பதாகும். உரிய பாதுகாப்புடன், குழந்தைகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவேண்டும்.
4. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மீனவ மக்களுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
5. தங்கள் வாழ்வாதாரங்களையும் தங்கள் சந்ததிகளின் வாழ்வுரிமைக்காகவும், ஒட்டுமொத்த தமிழகத்தின் பாதுகாப்புக்காகவும் போராடிவரும் மக்களின் கோரிக்கையை ஆதரிக்காவிட்டாலும் அவர்கள் மேல் ஏவிவிடப்படும் நியா யமற்ற வன்முறை, அரசு ஜனநாயக நியதிகளுக்குப் புறம்பாக நடத்திவரும் காட்டுமிராண்டித்தனம் ஆகியவற்றை எதிர்க்க ஜனநாயக சக்திகள் முன்வரவேண்டும்.

Mar 21, 2012

An open appeal to NHRC and SNHRC


STOP REPRESSIVE MEASURES AND ECONOMIC BLOCKADE IN KOODANKULAM which is against the constitutionally guaranteed fundamental rights.

Children are the most affected without supply of food. Electricity and Water supply has been cut. People are denied of their ‘RIGHTS TO LIVE’

pl send this as a mail to

sgnhrc@nic.in, js-nhrc@nic.in, ionhrc@nic.in, shrc@tn.nic.in covdnhrc@nic.in

or fax it to SNHRC – 24951484

NHRC:

1. 91-11-23384863 (Administration)

2. 91-11-23386521 (Law Division) For Complaints-filing

3. 91-11-23073876 (Investigation)

Mar 13, 2012

வேளச்சேரி என்கவுண்டர் - சில கேள்விகள்




வேளச்சேரியில் கடந்த 22 தேதி இரவு (23 அதிகாலை) அன்று வங்கிக் கொள்ளைத் தொடர்பாக 5 பேர் ‘என்கவுண்டரில்’ சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த என்கவுண்டர் தொடர்பாக பல ஐயங்கள் எழுந்துள்ளன. ஐயங்கள் முன் வைக்கபட்டு வருவதோடு, பல முரண்பாடுகளும் வெளிப்படத்துவங்கியுள்ளன. இந்த என்கவுண்டரை மனித உரிமை அமைப்புகள் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டன. உண்மைகள் மறைக்கப்படுவதாகவும், குற்றவாளிகள் உயிரோடு பிடிக்கப்பட்டிருந்தால் கொள்ளைகள் மற்றும் கொள்ளைத் சங்கிலிகள் தொடர்பாக பல உண்மைகள் வெளிவந்திருக்கும் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இது குறித்து ஆய்வு செய்ய மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த கீழ்க்கண்ட 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. 






1.         பேரா. அ. மார்க்ஸ், தலைவர், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR),    
          சென்னை.
2.         பேரா. பிரபா. கல்விமணி, மக்கள் கல்வி இயக்கம் (PEM), திண்டிவனம்.
3.         கோ. சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.
4.         வழக்கறிஞர் ரஜனி (PUHR), மதுரை.
5.         வழக்கறிஞர் மனோகரன், சென்னை.
6.         மதுமிதா தத்தா, அமைதிக்கான மற்றும் நீதிக்கான பிரச்சார குழு (CPG), சென்னை.
7.         சங்கர ராம சுப்பிரமணியன், பத்திரிகையாளர், சென்னை.
8.         வழக்கறிஞர் சையது அப்துல் காதர், மனித உரிமை இயக்கங்களின் தேசிய  
            கூட்டமைப்பு    (NCHRO),.
9.         9.        (நிர்மலா)கொற்றவை, பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல்வாதத்திற்கு எதிரான   
                        அமைப்பு (MASES),
10.       சந்திரா, எழுத்தாளர், சென்னை.

நாங்கள் பிப்ரவரி 26, 27 தேதிகளில், சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று சுற்றியுள்ள பொதுமக்கள், காவல்துறை ஆணையர் திரிபாதி ஐ.ஏ.எஸ்., ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் காவல்துறை ஆய்வாளர்கள் கிறிஸ்டியன் ஜெயசீல் மற்றும் ரவி, கொள்ளையடிக்கப்பட்ட வங்கி அதிகாரி ஆகியோரை சந்தித்தனர் அருகிலுள்ள மக்கள் தெரிவித்த கருத்துக்களுக்கும், ஆணையர் திரிபாதி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய கருத்துக்களுக்கும் பல முரண்பாடு இருப்பதை எங்களால் காண முடிந்தது.

எங்கள் ஆய்வுக் குறிப்பை பகிர்ந்து கொள்ளும் முன்னர், இவ்வாய்வு முடக்கப்பட்ட தகவல்களை பகிர்வது அவசியமாகிறது.  சம்பவம் நடந்த ஏ.எல் முதலித் தெருவில் காலை சுமார் 11.30 மணிக்கு நாங்கள் சென்றோம். அங்கு 10  முதல் 15 பேர் வரை எண்ணிக்கை கொண்ட காவல்துறையினர் காவல் பணியில் நிறுத்தப்பட்டிருந்தனர். மாஜிஸ்ட்ரேட் விசாரனை நடந்து கொண்டிருக்கிறது அதனால் நாங்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க இயலாது என்றனர். என்கவுண்டர் நடந்த வீடு ‘புலனாய்வுக்குட்பட்ட இடம்’ (sterile Zone) என்பதை நாங்களும் ஒப்புக்கொள்கிறோம், நாங்கள் அங்கு செல்ல மாட்டோம் ஆனால் என்கவுண்டர் நடந்த வீட்டருகில் உள்ள மற்ற தொடர்வீடுகளில் உள்ளவர்களிடம் தகவல்களை சேகரித்து செல்கிறோம். என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர்கள், மாஜிஸ்ட்ரேட் உத்தரவிருக்கிறதா, கமிஷனர் உத்தரவிருக்கிறதா என்று கேள்விகளை எழுப்பினர். நாங்கள் மனித உரிமை சார்ந்து செயல்படும் அமைப்பினர் என்றும் பரமக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கொலைச் சம்பவங்களில் உண்மை அறியும் குழுக்கள் செயல்பட்டுள்ளன என்றும் அ.மார்க்ஸ், கோ. சுகுமாரன், வழக்குறைஞர் ரஜினி ஆகியோர் தெரிவித்தனர். காவல் துறையினர் எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தயாராக இல்லை. பின்னர் எங்கள் வலியுறுத்தல் தாளாமல் அவர்கள் நின்றுகொண்டிருந்த தடுப்பு நுழைவுக்கு அருகிலேயே இருந்த முதல் வீட்டில் தகவல் சேகரிக்க அனுமதித்தனர். அதுவும் அந்த வீட்டுப் பெண்மனி வெளியில் நின்று கொண்டு நடப்பவற்றை கவனித்து வந்தார். நாங்களும் தொடர்ந்து வலியுறுத்தவே, அது சாத்தியமாயிற்று. அப்பெண்மனி முதல் மாடியில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பெண் மட்டும் இருப்பதால் பெண்கள் மட்டும் சென்று அவரிடம் பேசினோம். எவரும் தப்பி ஓடும் அளவுக்கு சாத்தியமில்லாத வகையில் மாடிப்படி மிகவும் குறுகலாக இருந்தது. வீடும் ஒற்றை படுக்கையறை கொண்ட சிறிய தீப்பெட்டி அளவு என்று சொல்லத்தக்க வீடு. எல்லா வீடுகளும் அந்த் அமைப்பில் தான் இருக்கும் என்று கண்டறிந்தோம். இந்த சிறிய வீட்டிற்குள் ஐந்து பேரை உயிரோடு பிடிப்பது சிரமான காரியம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. அப்பெண்மனி தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் அப்போது ஊரில் இல்லை, தன் கணவர் சொல்லித்தான் செய்தி தெரிந்தது என்றும் சொன்னார். நாங்கள் கீழிறங்கி வந்துவிட்டு சம்பவ இடம் உள்ள சிறிய சந்துக்கு வெளியே இருக்கும்  மற்ற வீடுகளில் இருப்பவர்களிடம், சுற்று வட்டத்தில் உள்ளவர்களிடம் தகவல் சேகரித்தோம். அவை உண்மை அறியும் குழு – இடைக்கால அறிக்கையில் உள்ளது.

அங்குள்ள பெண்கள், ஆண்கள் எந்த தயக்கமும் இன்றி எங்களிடம் உரையாடினர். சிலர் அவர்களை கண்டதேயில்லை என்றனர். சுட்டுக்கொல்லபப்ட்டவர்கள் இருந்த வீட்டில் சமையலே நடக்காது என்று சொன்னார், மேலும் அந்த விடு சில காலம் காலியாக இருந்தது, மூன்று மாதத்திற்கு முன்னர் அவர்கள் அங்கு குடிவந்திருக்கக்கூடும் என்று ஒரு வயதான பெண்மணி கூறினார். இதற்கிடையில் காவல் துறை ஆணையரை மதுமிதா தொடர்பு கொண்டு எங்கள் பணியின் நோக்கத்தை விளக்க முயன்றுகொண்டிருந்தார், மற்றொருபுறம் இணை ஆணையர் திரு. சண்முக ராஜஸ்வரனிடம் அ.மார்க்ஸ் பேசியிருந்தார். அப்போது, தேவையான உதவிகளை செய்ய ஒரு அதிகாரி 1 மணி நேரத்திற்குள் அனுப்பப்படுவார் என்று சொல்லப்பட்டது. இப்படி நாங்கள் ஒவ்வொரு வீடாக சென்று கொண்டிருக்கையில் சிலர் எங்களை தொடர்ந்து வந்து கண்காணித்துக் கொண்டேயிருந்தனர். திடீரென்று இருவர் எங்களை நோக்கி எதிர்ப்புக் குரலை எழுப்பிக் கொண்டு யார் நீங்கள், எதற்கு இங்கே வந்தீர்கள், கொலை, கொள்ளை, செயின் அறுப்பு இவையெல்லாம் நடக்கும் போது நீங்கள் எங்கே போனீர்கள் என்று சொல்லிக்கொண்டு, “நீங்கள் முதலில் வெளியே செல்லுங்கள், நாங்கள் போலீசை 110 சதவிகிதம் ஆதரிக்கிறோம்.....” என்று கோஷங்களை வைத்தபடி மனித உரிமை அமைப்புக் குறித்து கொச்சையான வசைச் சொற்களைப் பயன்படுத்தினர். நாங்கல் செல்ல மாட்டோம் என்று எதிர்குரல் எழுப்பியபோது மேலும் இருவர் சேர்ந்து கொண்டு வாதங்கள் செய்தனர். வெளியே செல்லா விட்டால் அடிப்போம் என்றும், முதலில் உங்களைப் போன்றோரை என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும் என்றும் கூறினர். அவர்கள் பொது மக்களாக இருக்க வாய்ப்பில்லை, அங்கு வசித்த பெண்கள், மற்றவர்கள் அமைதியாகத் தான் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். ‘போலீஸ்’ ஆதரவு கோஷங்களை எழுப்பியவர்கள் எங்களை வெளியேறுமாறும் இல்லையென்றால் அடிப்போம் என்றும் குரல் எழுப்பினர். இவர்களை அழைத்து வந்த ’ஒரு நபர்’ எங்களை வெளியேறுமாறு ‘பணிவுடன்’ கேட்டுக்கொண்டார். அந்த ‘நபர்களால்’ எங்களுக்கு இவ்வளவு பெரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது கூட காவல்துறையினர் எங்களைப் பாதுக்காக்கவோ, அவர்களை அங்கிருந்து அப்புரப்படுத்தவோ முயலவில்லை. மோதல் துவக்கத்தில் இருந்த எஸ்.ஐ கூட சிறிது நேரத்தில் காணாமல் போனார். நடுவர் போன்று செயல்பட்ட அந்த ‘நபர்’ எங்களை வெளியேறுமாறு சொன்னார்.

இதற்கிடையில் காவல் துறை ஆணையர் தொலைபேசியில் இணைப்புக் கிடைத்து, அவரை சந்திக்க நேரமும் கிடைத்தது. மதியம் 1.30க்கு அவரை சந்தித்து எங்கள் ஐயங்களை முன்வைத்ததோடு, எங்களை தள்ளிய, வசைபாடிய, கொல்வோம் என்று மிரட்டிய அந்த எதிர்ப்பு சம்பவத்தைக் குறித்த புகாரையும் அளித்துவிட்டு சென்றோம்.

இதன் தொடர்ச்சியாக 27 அன்றும், ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் காவல்துறை ஆய்வாளர்கள் கிறிஸ்டியன் ஜெயசீல் மற்றும் ரவி, கொள்ளையடிக்கப்பட்ட வங்கி அதிகாரி ஆகியோரை குழுவின் பிரிவினர் சந்தித்தனர். ஏற்கணவே பத்திரிகைகளில் சொன்னதை மட்டுமே பேசமுடியும் என்று வங்கி அதிகாரி தெரிவித்தார். மருத்துவ மனையில் இருந்த காவல்துறை ஆய்வாளர்களிடமிருந்தும் வழக்கமான பதில்கள் மட்டுமே கிடைத்தது. (காண்க விரிவான அறிக்கை)

இதைத் தொடர்ந்து 27 மாலை பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. எங்கள் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த பொருள் குறிப்புடன் எமக்கு சொல்ல இருப்பது:


கொலை, கொள்ளை நடக்கும் போது வராத மனித உரிமை அமைப்புகள் இப்போது எதற்காக வந்திருக்கிறது எனும் கேள்வி வேடிக்கையாக உள்ளது. நியாயமாக இந்தக் கேள்வி காவல் துறையினரையும், அரசையும் பார்த்து மக்கள் கேட்க வேண்டும் குற்றங்கள் நடப்பதற்கு முன்னர் ஏன் தடுக்கபப்டுவதில்லை, ஏன் மக்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை, குழந்தைகள் ஏன் கடத்தப்படுகின்றனர், சில காவல் துறை கைதுகளில் ஏன் மரணங்கள், வன் புணர்ச்சிகள் நடக்கின்றன, குறிப்பாக தலித் மக்கள் மீதான வன்முறை நிகழ்வுகள் காவல் துறையினர் சிலரால் ஏன் கட்டவிழ்த்து விடப்படுகிறது என்றெல்லாம் அவர்களையும் அரசையும் நோக்கி கேள்வி எழுப்பவேண்டும். மனித உரிமை அமைப்புகள் எதற்காக காவல் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்? ஓரிருவர் மட்டுமே எங்களை நோக்கி எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர் அவர்கள் பொது மக்கள் இல்லை, ஏனென்றால் அந்த சுற்று வட்டாரப் பகுதிகளில் காவல் துறைக்கு சாதகமாகவும், மனித உரிமை அமைப்புக்கு எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. நிகழ்ச்சி நடந்த ஓரிரு தினங்களுக்குள் இப்படி ஒரு ஆதரவு பிரச்சாரம் எப்படி மேற்கொள்ளப்டுகிறது. மேலும் இந்த ஆதரவு போஸ்டர்களை ஒட்டியுள்ளது வியாபார சங்கங்கள். இது நமது ஐயத்தை கூடுதலாக்குகிறது. வியாபாரிகளுக்கு காவல் துறை உதவி தேவைப்படுகிறது, அதுவும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு பயன்படுத்தி கொள்ளை லாபம் பெறுவது உள்ளிட்ட அத்துமீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான ஒரு மறைமுக ஆதரவுக் கோரும் முயற்சியா என்பது புரியவில்லை.  இத்தகையத் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் இருப்பதில்லை.  உறவினர்களும் அருகில் இருப்பதில்லை என்பது
இவர்களது பாதுகாப்பின்மையை அதிகரிக்கிறது.

காவல் துறையினர் தங்கள் உயிருக்கு ஆபத்திருந்ததால்தான் சுட்டோம் என்று சொல்கின்றனர். அப்படி ஒரு ஆபத்திருக்குமாயின் அது அவசியம் என்று ஏற்றுக்கொள்வோமானால், பொது மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள அரசாங்கமே அவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கலாம், ஏனென்றால் எப்போது எங்கிருந்து எவர் தாக்க வருவர், நாம் கொல்லப்படுவோம் என்று தெரியாத சூழலில்தான் நாம் நடமாட வேண்டியுள்ளது.

இந்த என்கவுண்டரின் மற்றுமொரு அவலம் வட மாநிலத்தவர் எனும் குற்றவாளி அடையாளத்தை அழுத்தம் கொடுத்து உச்சரிப்பது. இதன் மூலம் தமிழர் தமிழரல்லாதார் எனும் பகை உணர்ச்சி விதைக்கபப்டுகிறது. இந்த பகை உணர்ச்சி விதைப்பும் ஒருவகையில் இந்த் என்கவுண்டரை நியாப்படுத்தும் ஓர் உளவியல் கருவியாக பயன்படுகிறது. இப்போது தமிழ் நாடு முழுவதிலும் வடமாநிலத்தவர் அடையாளங்கள் சேகரிக்கபப்ட்டு வருகின்றன, சோதனைக்கும், அவமதிப்புக்கும் உள்ளாக்கபப்டுகின்றனர். இதில் துயரம் என்னவென்றால், படிநிலையில் உயர்ந்திருக்கும் வடமாநிலத்தவர் விசாரிக்கப்படுகிறார்களா அல்லது பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களே இத்தகைய ‘விசாரிப்புக்களுக்கு’ ஆளாகிறார்களா என்று நாம் கவனிக்க வேண்டியுள்ளது. பொதுவாக ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழைகளே இத்தகைய ’நுண்ணாய்வு’களுக்கு (scrutiny) ஆளாகின்றனர்.  குற்ற நிகழ்வுகளில் இன முத்திரை, மொழி முத்திரை குத்தும் அடை மொழிகள் பயன்படுத்தப்படுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்கணவே அது துவங்கியும் விட்டது. இதில் கவனிக்கத்தக்க மற்றொன்று ‘தமிழர்கள்’ இத்தகைய விசாரிப்புகளுக்கு ஆளானால் இங்கு எவ்வளவு கொந்தளிப்புகள் நிகழ்கின்றன.  ‘உலக மகா விஞ்ஞானி’ அப்துல் கலாம், ‘இணையில்லா’ நடிகர் ஷாருக்கான் ஆகியோர் குடியேற்ற அதிகாரிகளால் விதிகளின்படி விசாரிக்கப்பட்டதற்கே கூப்பாடு போட்ட அரசியல் கட்சிகள், அரசுகள், தலைவர்கள் வட மாநிலக் கூலித் தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்படும் இத்தகைய மனித உரிமை மீறல்களைக் கண்டிக்காமல் மௌனம் காத்து வருகின்றன. இது மிகுந்த் வருத்தத்திற்குரிய விசயம். அதிகார வர்க்கம் நிணைத்தால் எவரையும் எவருக்கும் எதிரியாக நிறுத்தலாம், ஒற்றுமையை சீர் குலைக்கலாம் என்பதற்கு மேலும் ஒரு உதாரணமாகியிருக்கிறது இச்செயல்.

வெயில் மழை பாராது மக்களைக் காக்கும் பணிகளை செய்து வரும் காவல் துறையானது இத்தகைய என்கவுண்டர்கள் மூலம் தனது ‘நன்மதிப்பினை’ இழக்கும் சூழல் உருவாகிறது.  சில வேளைகளில் அவர்களுக்கு கிடைக்கும் தவறான தகவல்களின் பேரில் அவர்கள் சிலரை கைது செய்யும் நிலை ஏற்படுவதும் உண்டு. அப்போது தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சில அப்பாவிகள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள், தண்டிக்கப்பட்ட நிகழ்வுகள் உள்ளன. மதுபான கடத்தல் தொடர்பான என்கவுண்டர் வழக்கில் இருந்த ராஜஸ்தான் கூடுதல் இயக்குனர் ஜெனரல் திரு. ஏ.கே ஜெயின் மீது போலி என்கவுண்டர் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தலைமறைவாக இருந்த அவர் இன்று கோர்ட்டில் சரணடைந்துள்ளார். தாரா சிங் என்பவர் எஸ்.ஓ.ஜி அதிகாரிகளால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, அம்பேர் எனும் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிக்கு சட்டத்திற்கு புரம்பான வகையில் அழைத்துச் செல்லப்பட்டு, திட்டமிட்ட வகையில் கொல்லப்பட்டார் என்று சி.பி.ஐ விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளதையடுத்து ஜெயின் சரணடைந்துள்ளார் எனபதை  நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

என்கவுண்டர்களை ஆதரிக்கக் கூடாது என்பதற்கான மற்றொரு செய்தி,


நாற்பது வருடஙக்ளுக்கு முன்னர் உயிரோடு பிடிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் வர்கீஸ் என்பவர் 1970ல், அப்போதைய ஐ.ஜி லக்‌ஷ்மனா என்பவரின் ஆணையின் பெயரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 1998ல் அந்தக் கொலையை செய்த முன்னாளைய தலைமைக் கான்ஸ்டபிள் ராமசந்திரன் நாயர் மனசாட்சியின் உறுத்தல் தாளாமல் உண்மையை சொல்லி விட்டார். இதைத் தொடர்ந்து முன்னாளைய ஐ.ஜி. லக்‌ஷ்மனாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2006ல் ராமசந்திரன் நாயர் மரணம் அடைந்தார், மரணிக்கும் தறுவாயில் தான் செய்தக் கொலைக் குற்றத்திற்காக தனக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று சொன்னார். 

வேண்டுமென்றே குற்றம் கண்டுபிடித்து காவல் துறையை விமர்சிப்பதோ, அவர்களுடைய சேவையை முற்றிலும் நிராகரிப்பதோ, கொள்ளையர்களை, கொலைகாரர்களை, ஆதரிப்பதோ மனித உரிமை ஆர்வலர்களின் நோக்கமன்று. மனித உயிர் மகத்தானது. எவரின் உயிராயினும் அது பாதுகாக்கப்பட வேண்டும். குற்றம் செய்தவர் முறையான நீதி விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். தண்டனைகளும் குற்றவாளியை திருத்தவும், மேற்கொண்டு தவறுகளில் ஈடுபடா வண்ணம் அவரது மனசாட்சியை தட்டி எழுப்பும் விதமாக இருக்க வேண்டும். அதிகார வர்க்க சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வு, முதலாளித்துவ சமூக அமைப்பு விதைக்கும் ‘உயர் ரக’ வாழ்க்கை பற்றிய பேராசை ஆகியவையும் ஒருவகையில் குற்ற நிகழ்வுகளுக்கு காரணமாக உள்ளன. ஆகவே ஒரு சாராரை மட்டும் குற்றம் சொல்வதும், படி நிலைக்கேற்றார் போல் அவர்களுக்கு அளிக்கபப்டும் தண்டனைகள் மாறுபடுவதும் ‘வல்லரசு’ கணவோடிருக்கும் சமூகத்திற்கு ஏற்றதன்று.  பல கோடி ரூபாய் ஊழல்கள் செய்துள்ள அரசியல்வாதிகள், வாங்கியக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாத முதலாளிகள், வரிகளை கட்டாமல் ஏய்க்கும் முதலாளிகள் ஆகியோர் செய்வதும் கொள்ளைகளே. நமது விவசாய நிலங்களை கையகப்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக் கொடுப்பது ‘பெரும் கொள்ளை’. நம் நாட்டில் தொழில் செய்ய வந்து விட்டு இலவச மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மற்ற சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு தொழிற்சங்கங்களை கூட அனுமதிக்காமல், தொழிலாளர்கள் சட்டத்திலிருந்தும் விலக்களிக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள், இந்நாட்டு பெருமுதலாளிகள் உற்பத்தி செய்து சுருட்டும் செயலும் கொள்ளையே.  கடல் பகுதிகளில் தொழில்களைத் துவங்க அனுமதிக்கக்கூடாது என்று சுற்றுச்சூழல் ஆணையத்தின் உத்தரவுகளையும் மீறி, இந்திய சட்டவிதிகள் ஒன்றும் செய்யவியலாத ‘காட்’ ஒப்பந்தங்கள், அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவிற்கும் இதர நாடுகளுக்கும் நம்மை பொருளாதார அடிமைகளாக்கும் பல்வேறு ஒப்பந்தங்களைச்  செய்து கொள்ளும் இந்திய அரசின் ’தாராளவாத’ கொள்கைகள் மூலம் அதிகார வர்க்கம் பெறும் ஆதாயங்களுக்கு என்ன பெயர்? அடிக்கபப்டும் கொள்ளைகளுக்கு  தண்டனை என்ன? 

( வேளச்சேரி என்கவுண்டர் - சில கேள்விகள். இக்கட்டுரை ஃபிப்ரவரி 29 அன்று எழுதப்பட்டது.)

Mar 1, 2012

பெண்கள் தின நிகழ்வு







மாசெஸ் அமைப்பின் துவக்கம் மற்றும் இமாமி விளம்பரத்திற்கு எதிரான பிரச்சார நிகழ்வு. தோழர்கள் சிவகாமி, அ. மார்க்ஸ், முனைவர் பத்மினி, கோ. சுகுமாரன், மோனிகா ஆகியோர் உரையாற்றுகின்றனர். மேலும் சில எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இது தவிர… பிரபல ஓவியர்கள் கலந்து கொள்ளும் ஓவியப் பட்டறை நடக்கவிருக்கிறது. அது மாலை 3 மணி அளவில் துவங்கும். ஆர்வமுள்ளவர்கள் ஓவியர்களை சந்தித்து உரையாடலாம், நிகழ்வுக்கான ஓவியங்களை அங்கு வரைந்து பங்களிக்கலாம்.

Feb 29, 2012

மாசெஸ் அமைப்பு துவக்க விழா மற்றும் ஓவியப் பட்டறை

10.3.2012, ICSA HALL, 5pm – MASES formal launch and campaign against EMAMI Fair & Handsome Cream For Men advertisement. Com. Sivakami, Prof. A. Marx, Prof. Padmini, Ko. Sugumaran are the speakers. Few more Writers / activists would participate.


On this occassion a Painting Workshop is organized. Eminent Artists would be participating. Interested People could come attend the workshop and interact with Artists & contribute works for exhibition. The exhibition will be open at 7p.m. (Artist Viswam has given his consent as of now… few more eminent artists would participate)..


10.03.2012, இக்சா மையம் மாலை 5 மணி – மாசெஸ் அமைப்பின் துவக்கம் மற்றும் இமாமி விளம்பரத்திற்கெதிரான பிரச்சாரத்தையொட்டி ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தோழர்கள் சிவகாமி, அ. மார்க்ஸ், முனைவர் பத்மினி, கோ. சுகுமாரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். மேலும் சில எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள்.


இது தவிர… பிரபல ஓவியர்கள் கலந்து கொள்ளும் ஓவியப் பட்டறை நடக்கவிருக்கிறது. அது மாலை 3 மணி அளவில் துவங்கும். ஆர்வமுள்ளவர்கள் ஓவியர்களை சந்தித்து உரையாடலாம், நிகழ்வுக்கான ஓவியங்களை அங்கு வரைந்து பங்களிக்கலாம்.


7 மணி அளவில் ஓவியக் கண்காட்சி நடைபெறும். (இப்போதைக்கு ஓவியர் விஸ்வம் அவர்கள் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். மேலும் சில ஓவியர்கள் அணுகப்பட்டு வருகிறார்கள்)….


நிகழ்வுக்கு மேற்சொன்னவர்கள் வழங்கியுள்ள ஆதரவும்… வழிகாட்டுதலும் குறிப்பிடத்தக்கவை…அவர்களுக்கு என் நன்றிகள்.