வேளச்சேரியில் கடந்த 22 தேதி இரவு (23 அதிகாலை) அன்று வங்கிக் கொள்ளைத் தொடர்பாக 5 பேர் ‘என்கவுண்டரில்’ சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த என்கவுண்டர் தொடர்பாக பல ஐயங்கள் எழுந்துள்ளன. ஐயங்கள் முன் வைக்கபட்டு வருவதோடு, பல முரண்பாடுகளும் வெளிப்படத்துவங்கியுள்ளன. இந்த என்கவுண்டரை மனித உரிமை அமைப்புகள் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டன. உண்மைகள் மறைக்கப்படுவதாகவும், குற்றவாளிகள் உயிரோடு பிடிக்கப்பட்டிருந்தால் கொள்ளைகள் மற்றும் கொள்ளைத் சங்கிலிகள் தொடர்பாக பல உண்மைகள் வெளிவந்திருக்கும் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இது குறித்து ஆய்வு செய்ய மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த கீழ்க்கண்ட 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
1. பேரா. அ. மார்க்ஸ், தலைவர், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR),
சென்னை.
சென்னை.
2. பேரா. பிரபா. கல்விமணி, மக்கள் கல்வி இயக்கம் (PEM), திண்டிவனம்.
3. கோ. சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.
4. வழக்கறிஞர் ரஜனி (PUHR), மதுரை.
5. வழக்கறிஞர் மனோகரன், சென்னை.
6. மதுமிதா தத்தா, அமைதிக்கான மற்றும் நீதிக்கான பிரச்சார குழு (CPG), சென்னை.
7. சங்கர ராம சுப்பிரமணியன், பத்திரிகையாளர், சென்னை.
8. வழக்கறிஞர் சையது அப்துல் காதர், மனித உரிமை இயக்கங்களின் தேசிய
கூட்டமைப்பு (NCHRO),.
9. 9. (நிர்மலா)கொற்றவை, பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல்வாதத்திற்கு எதிரான
அமைப்பு (MASES),
10. சந்திரா, எழுத்தாளர், சென்னை.
நாங்கள் பிப்ரவரி 26, 27 தேதிகளில், சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று சுற்றியுள்ள பொதுமக்கள், காவல்துறை ஆணையர் திரிபாதி ஐ.ஏ.எஸ்., ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் காவல்துறை ஆய்வாளர்கள் கிறிஸ்டியன் ஜெயசீல் மற்றும் ரவி, கொள்ளையடிக்கப்பட்ட வங்கி அதிகாரி ஆகியோரை சந்தித்தனர் அருகிலுள்ள மக்கள் தெரிவித்த கருத்துக்களுக்கும், ஆணையர் திரிபாதி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய கருத்துக்களுக்கும் பல முரண்பாடு இருப்பதை எங்களால் காண முடிந்தது.
எங்கள் ஆய்வுக் குறிப்பை பகிர்ந்து கொள்ளும் முன்னர், இவ்வாய்வு முடக்கப்பட்ட தகவல்களை பகிர்வது அவசியமாகிறது. சம்பவம் நடந்த ஏ.எல் முதலித் தெருவில் காலை சுமார் 11.30 மணிக்கு நாங்கள் சென்றோம். அங்கு 10 முதல் 15 பேர் வரை எண்ணிக்கை கொண்ட காவல்துறையினர் காவல் பணியில் நிறுத்தப்பட்டிருந்தனர். மாஜிஸ்ட்ரேட் விசாரனை நடந்து கொண்டிருக்கிறது அதனால் நாங்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க இயலாது என்றனர். என்கவுண்டர் நடந்த வீடு ‘புலனாய்வுக்குட்பட்ட இடம்’ (sterile Zone) என்பதை நாங்களும் ஒப்புக்கொள்கிறோம், நாங்கள் அங்கு செல்ல மாட்டோம் ஆனால் என்கவுண்டர் நடந்த வீட்டருகில் உள்ள மற்ற தொடர்வீடுகளில் உள்ளவர்களிடம் தகவல்களை சேகரித்து செல்கிறோம். என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர்கள், மாஜிஸ்ட்ரேட் உத்தரவிருக்கிறதா, கமிஷனர் உத்தரவிருக்கிறதா என்று கேள்விகளை எழுப்பினர். நாங்கள் மனித உரிமை சார்ந்து செயல்படும் அமைப்பினர் என்றும் பரமக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கொலைச் சம்பவங்களில் உண்மை அறியும் குழுக்கள் செயல்பட்டுள்ளன என்றும் அ.மார்க்ஸ், கோ. சுகுமாரன், வழக்குறைஞர் ரஜினி ஆகியோர் தெரிவித்தனர். காவல் துறையினர் எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தயாராக இல்லை. பின்னர் எங்கள் வலியுறுத்தல் தாளாமல் அவர்கள் நின்றுகொண்டிருந்த தடுப்பு நுழைவுக்கு அருகிலேயே இருந்த முதல் வீட்டில் தகவல் சேகரிக்க அனுமதித்தனர். அதுவும் அந்த வீட்டுப் பெண்மனி வெளியில் நின்று கொண்டு நடப்பவற்றை கவனித்து வந்தார். நாங்களும் தொடர்ந்து வலியுறுத்தவே, அது சாத்தியமாயிற்று. அப்பெண்மனி முதல் மாடியில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பெண் மட்டும் இருப்பதால் பெண்கள் மட்டும் சென்று அவரிடம் பேசினோம். எவரும் தப்பி ஓடும் அளவுக்கு சாத்தியமில்லாத வகையில் மாடிப்படி மிகவும் குறுகலாக இருந்தது. வீடும் ஒற்றை படுக்கையறை கொண்ட சிறிய தீப்பெட்டி அளவு என்று சொல்லத்தக்க வீடு. எல்லா வீடுகளும் அந்த் அமைப்பில் தான் இருக்கும் என்று கண்டறிந்தோம். இந்த சிறிய வீட்டிற்குள் ஐந்து பேரை உயிரோடு பிடிப்பது சிரமான காரியம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. அப்பெண்மனி தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் அப்போது ஊரில் இல்லை, தன் கணவர் சொல்லித்தான் செய்தி தெரிந்தது என்றும் சொன்னார். நாங்கள் கீழிறங்கி வந்துவிட்டு சம்பவ இடம் உள்ள சிறிய சந்துக்கு வெளியே இருக்கும் மற்ற வீடுகளில் இருப்பவர்களிடம், சுற்று வட்டத்தில் உள்ளவர்களிடம் தகவல் சேகரித்தோம். அவை உண்மை அறியும் குழு – இடைக்கால அறிக்கையில் உள்ளது.
அங்குள்ள பெண்கள், ஆண்கள் எந்த தயக்கமும் இன்றி எங்களிடம் உரையாடினர். சிலர் அவர்களை கண்டதேயில்லை என்றனர். சுட்டுக்கொல்லபப்ட்டவர்கள் இருந்த வீட்டில் சமையலே நடக்காது என்று சொன்னார், மேலும் அந்த விடு சில காலம் காலியாக இருந்தது, மூன்று மாதத்திற்கு முன்னர் அவர்கள் அங்கு குடிவந்திருக்கக்கூடும் என்று ஒரு வயதான பெண்மணி கூறினார். இதற்கிடையில் காவல் துறை ஆணையரை மதுமிதா தொடர்பு கொண்டு எங்கள் பணியின் நோக்கத்தை விளக்க முயன்றுகொண்டிருந்தார், மற்றொருபுறம் இணை ஆணையர் திரு. சண்முக ராஜஸ்வரனிடம் அ.மார்க்ஸ் பேசியிருந்தார். அப்போது, தேவையான உதவிகளை செய்ய ஒரு அதிகாரி 1 மணி நேரத்திற்குள் அனுப்பப்படுவார் என்று சொல்லப்பட்டது. இப்படி நாங்கள் ஒவ்வொரு வீடாக சென்று கொண்டிருக்கையில் சிலர் எங்களை தொடர்ந்து வந்து கண்காணித்துக் கொண்டேயிருந்தனர். திடீரென்று இருவர் எங்களை நோக்கி எதிர்ப்புக் குரலை எழுப்பிக் கொண்டு யார் நீங்கள், எதற்கு இங்கே வந்தீர்கள், கொலை, கொள்ளை, செயின் அறுப்பு இவையெல்லாம் நடக்கும் போது நீங்கள் எங்கே போனீர்கள் என்று சொல்லிக்கொண்டு, “நீங்கள் முதலில் வெளியே செல்லுங்கள், நாங்கள் போலீசை 110 சதவிகிதம் ஆதரிக்கிறோம்.....” என்று கோஷங்களை வைத்தபடி மனித உரிமை அமைப்புக் குறித்து கொச்சையான வசைச் சொற்களைப் பயன்படுத்தினர். நாங்கல் செல்ல மாட்டோம் என்று எதிர்குரல் எழுப்பியபோது மேலும் இருவர் சேர்ந்து கொண்டு வாதங்கள் செய்தனர். வெளியே செல்லா விட்டால் அடிப்போம் என்றும், முதலில் உங்களைப் போன்றோரை என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும் என்றும் கூறினர். அவர்கள் பொது மக்களாக இருக்க வாய்ப்பில்லை, அங்கு வசித்த பெண்கள், மற்றவர்கள் அமைதியாகத் தான் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். ‘போலீஸ்’ ஆதரவு கோஷங்களை எழுப்பியவர்கள் எங்களை வெளியேறுமாறும் இல்லையென்றால் அடிப்போம் என்றும் குரல் எழுப்பினர். இவர்களை அழைத்து வந்த ’ஒரு நபர்’ எங்களை வெளியேறுமாறு ‘பணிவுடன்’ கேட்டுக்கொண்டார். அந்த ‘நபர்களால்’ எங்களுக்கு இவ்வளவு பெரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது கூட காவல்துறையினர் எங்களைப் பாதுக்காக்கவோ, அவர்களை அங்கிருந்து அப்புரப்படுத்தவோ முயலவில்லை. மோதல் துவக்கத்தில் இருந்த எஸ்.ஐ கூட சிறிது நேரத்தில் காணாமல் போனார். நடுவர் போன்று செயல்பட்ட அந்த ‘நபர்’ எங்களை வெளியேறுமாறு சொன்னார்.
இதற்கிடையில் காவல் துறை ஆணையர் தொலைபேசியில் இணைப்புக் கிடைத்து, அவரை சந்திக்க நேரமும் கிடைத்தது. மதியம் 1.30க்கு அவரை சந்தித்து எங்கள் ஐயங்களை முன்வைத்ததோடு, எங்களை தள்ளிய, வசைபாடிய, கொல்வோம் என்று மிரட்டிய அந்த எதிர்ப்பு சம்பவத்தைக் குறித்த புகாரையும் அளித்துவிட்டு சென்றோம்.
இதன் தொடர்ச்சியாக 27 அன்றும், ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் காவல்துறை ஆய்வாளர்கள் கிறிஸ்டியன் ஜெயசீல் மற்றும் ரவி, கொள்ளையடிக்கப்பட்ட வங்கி அதிகாரி ஆகியோரை குழுவின் பிரிவினர் சந்தித்தனர். ஏற்கணவே பத்திரிகைகளில் சொன்னதை மட்டுமே பேசமுடியும் என்று வங்கி அதிகாரி தெரிவித்தார். மருத்துவ மனையில் இருந்த காவல்துறை ஆய்வாளர்களிடமிருந்தும் வழக்கமான பதில்கள் மட்டுமே கிடைத்தது. (காண்க விரிவான அறிக்கை)
இதைத் தொடர்ந்து 27 மாலை பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. எங்கள் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த பொருள் குறிப்புடன் எமக்கு சொல்ல இருப்பது:
கொலை, கொள்ளை நடக்கும் போது வராத மனித உரிமை அமைப்புகள் இப்போது எதற்காக வந்திருக்கிறது எனும் கேள்வி வேடிக்கையாக உள்ளது. நியாயமாக இந்தக் கேள்வி காவல் துறையினரையும், அரசையும் பார்த்து மக்கள் கேட்க வேண்டும் குற்றங்கள் நடப்பதற்கு முன்னர் ஏன் தடுக்கபப்டுவதில்லை, ஏன் மக்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை, குழந்தைகள் ஏன் கடத்தப்படுகின்றனர், சில காவல் துறை கைதுகளில் ஏன் மரணங்கள், வன் புணர்ச்சிகள் நடக்கின்றன, குறிப்பாக தலித் மக்கள் மீதான வன்முறை நிகழ்வுகள் காவல் துறையினர் சிலரால் ஏன் கட்டவிழ்த்து விடப்படுகிறது என்றெல்லாம் அவர்களையும் அரசையும் நோக்கி கேள்வி எழுப்பவேண்டும். மனித உரிமை அமைப்புகள் எதற்காக காவல் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்? ஓரிருவர் மட்டுமே எங்களை நோக்கி எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர் அவர்கள் பொது மக்கள் இல்லை, ஏனென்றால் அந்த சுற்று வட்டாரப் பகுதிகளில் காவல் துறைக்கு சாதகமாகவும், மனித உரிமை அமைப்புக்கு எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. நிகழ்ச்சி நடந்த ஓரிரு தினங்களுக்குள் இப்படி ஒரு ஆதரவு பிரச்சாரம் எப்படி மேற்கொள்ளப்டுகிறது. மேலும் இந்த ஆதரவு போஸ்டர்களை ஒட்டியுள்ளது வியாபார சங்கங்கள். இது நமது ஐயத்தை கூடுதலாக்குகிறது. வியாபாரிகளுக்கு காவல் துறை உதவி தேவைப்படுகிறது, அதுவும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு பயன்படுத்தி கொள்ளை லாபம் பெறுவது உள்ளிட்ட அத்துமீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான ஒரு மறைமுக ஆதரவுக் கோரும் முயற்சியா என்பது புரியவில்லை. இத்தகையத் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் இருப்பதில்லை. உறவினர்களும் அருகில் இருப்பதில்லை என்பது
இவர்களது பாதுகாப்பின்மையை அதிகரிக்கிறது.
காவல் துறையினர் தங்கள் உயிருக்கு ஆபத்திருந்ததால்தான் சுட்டோம் என்று சொல்கின்றனர். அப்படி ஒரு ஆபத்திருக்குமாயின் அது அவசியம் என்று ஏற்றுக்கொள்வோமானால், பொது மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள அரசாங்கமே அவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கலாம், ஏனென்றால் எப்போது எங்கிருந்து எவர் தாக்க வருவர், நாம் கொல்லப்படுவோம் என்று தெரியாத சூழலில்தான் நாம் நடமாட வேண்டியுள்ளது.
இந்த என்கவுண்டரின் மற்றுமொரு அவலம் வட மாநிலத்தவர் எனும் குற்றவாளி அடையாளத்தை அழுத்தம் கொடுத்து உச்சரிப்பது. இதன் மூலம் தமிழர் தமிழரல்லாதார் எனும் பகை உணர்ச்சி விதைக்கபப்டுகிறது. இந்த பகை உணர்ச்சி விதைப்பும் ஒருவகையில் இந்த் என்கவுண்டரை நியாப்படுத்தும் ஓர் உளவியல் கருவியாக பயன்படுகிறது. இப்போது தமிழ் நாடு முழுவதிலும் வடமாநிலத்தவர் அடையாளங்கள் சேகரிக்கபப்ட்டு வருகின்றன, சோதனைக்கும், அவமதிப்புக்கும் உள்ளாக்கபப்டுகின்றனர். இதில் துயரம் என்னவென்றால், படிநிலையில் உயர்ந்திருக்கும் வடமாநிலத்தவர் விசாரிக்கப்படுகிறார்களா அல்லது பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களே இத்தகைய ‘விசாரிப்புக்களுக்கு’ ஆளாகிறார்களா என்று நாம் கவனிக்க வேண்டியுள்ளது. பொதுவாக ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழைகளே இத்தகைய ’நுண்ணாய்வு’களுக்கு (scrutiny) ஆளாகின்றனர். குற்ற நிகழ்வுகளில் இன முத்திரை, மொழி முத்திரை குத்தும் அடை மொழிகள் பயன்படுத்தப்படுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்கணவே அது துவங்கியும் விட்டது. இதில் கவனிக்கத்தக்க மற்றொன்று ‘தமிழர்கள்’ இத்தகைய விசாரிப்புகளுக்கு ஆளானால் இங்கு எவ்வளவு கொந்தளிப்புகள் நிகழ்கின்றன. ‘உலக மகா விஞ்ஞானி’ அப்துல் கலாம், ‘இணையில்லா’ நடிகர் ஷாருக்கான் ஆகியோர் குடியேற்ற அதிகாரிகளால் விதிகளின்படி விசாரிக்கப்பட்டதற்கே கூப்பாடு போட்ட அரசியல் கட்சிகள், அரசுகள், தலைவர்கள் வட மாநிலக் கூலித் தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்படும் இத்தகைய மனித உரிமை மீறல்களைக் கண்டிக்காமல் மௌனம் காத்து வருகின்றன. இது மிகுந்த் வருத்தத்திற்குரிய விசயம். அதிகார வர்க்கம் நிணைத்தால் எவரையும் எவருக்கும் எதிரியாக நிறுத்தலாம், ஒற்றுமையை சீர் குலைக்கலாம் என்பதற்கு மேலும் ஒரு உதாரணமாகியிருக்கிறது இச்செயல்.
வெயில் மழை பாராது மக்களைக் காக்கும் பணிகளை செய்து வரும் காவல் துறையானது இத்தகைய என்கவுண்டர்கள் மூலம் தனது ‘நன்மதிப்பினை’ இழக்கும் சூழல் உருவாகிறது. சில வேளைகளில் அவர்களுக்கு கிடைக்கும் தவறான தகவல்களின் பேரில் அவர்கள் சிலரை கைது செய்யும் நிலை ஏற்படுவதும் உண்டு. அப்போது தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சில அப்பாவிகள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள், தண்டிக்கப்பட்ட நிகழ்வுகள் உள்ளன. மதுபான கடத்தல் தொடர்பான என்கவுண்டர் வழக்கில் இருந்த ராஜஸ்தான் கூடுதல் இயக்குனர் ஜெனரல் திரு. ஏ.கே ஜெயின் மீது போலி என்கவுண்டர் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தலைமறைவாக இருந்த அவர் இன்று கோர்ட்டில் சரணடைந்துள்ளார். தாரா சிங் என்பவர் எஸ்.ஓ.ஜி அதிகாரிகளால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, அம்பேர் எனும் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிக்கு சட்டத்திற்கு புரம்பான வகையில் அழைத்துச் செல்லப்பட்டு, திட்டமிட்ட வகையில் கொல்லப்பட்டார் என்று சி.பி.ஐ விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளதையடுத்து ஜெயின் சரணடைந்துள்ளார் எனபதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
என்கவுண்டர்களை ஆதரிக்கக் கூடாது என்பதற்கான மற்றொரு செய்தி,
நாற்பது வருடஙக்ளுக்கு முன்னர் உயிரோடு பிடிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் வர்கீஸ் என்பவர் 1970ல், அப்போதைய ஐ.ஜி லக்ஷ்மனா என்பவரின் ஆணையின் பெயரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 1998ல் அந்தக் கொலையை செய்த முன்னாளைய தலைமைக் கான்ஸ்டபிள் ராமசந்திரன் நாயர் மனசாட்சியின் உறுத்தல் தாளாமல் உண்மையை சொல்லி விட்டார். இதைத் தொடர்ந்து முன்னாளைய ஐ.ஜி. லக்ஷ்மனாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2006ல் ராமசந்திரன் நாயர் மரணம் அடைந்தார், மரணிக்கும் தறுவாயில் தான் செய்தக் கொலைக் குற்றத்திற்காக தனக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று சொன்னார்.
வேண்டுமென்றே குற்றம் கண்டுபிடித்து காவல் துறையை விமர்சிப்பதோ, அவர்களுடைய சேவையை முற்றிலும் நிராகரிப்பதோ, கொள்ளையர்களை, கொலைகாரர்களை, ஆதரிப்பதோ மனித உரிமை ஆர்வலர்களின் நோக்கமன்று. மனித உயிர் மகத்தானது. எவரின் உயிராயினும் அது பாதுகாக்கப்பட வேண்டும். குற்றம் செய்தவர் முறையான நீதி விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். தண்டனைகளும் குற்றவாளியை திருத்தவும், மேற்கொண்டு தவறுகளில் ஈடுபடா வண்ணம் அவரது மனசாட்சியை தட்டி எழுப்பும் விதமாக இருக்க வேண்டும். அதிகார வர்க்க சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வு, முதலாளித்துவ சமூக அமைப்பு விதைக்கும் ‘உயர் ரக’ வாழ்க்கை பற்றிய பேராசை ஆகியவையும் ஒருவகையில் குற்ற நிகழ்வுகளுக்கு காரணமாக உள்ளன. ஆகவே ஒரு சாராரை மட்டும் குற்றம் சொல்வதும், படி நிலைக்கேற்றார் போல் அவர்களுக்கு அளிக்கபப்டும் தண்டனைகள் மாறுபடுவதும் ‘வல்லரசு’ கணவோடிருக்கும் சமூகத்திற்கு ஏற்றதன்று. பல கோடி ரூபாய் ஊழல்கள் செய்துள்ள அரசியல்வாதிகள், வாங்கியக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாத முதலாளிகள், வரிகளை கட்டாமல் ஏய்க்கும் முதலாளிகள் ஆகியோர் செய்வதும் கொள்ளைகளே. நமது விவசாய நிலங்களை கையகப்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக் கொடுப்பது ‘பெரும் கொள்ளை’. நம் நாட்டில் தொழில் செய்ய வந்து விட்டு இலவச மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மற்ற சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு தொழிற்சங்கங்களை கூட அனுமதிக்காமல், தொழிலாளர்கள் சட்டத்திலிருந்தும் விலக்களிக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள், இந்நாட்டு பெருமுதலாளிகள் உற்பத்தி செய்து சுருட்டும் செயலும் கொள்ளையே. கடல் பகுதிகளில் தொழில்களைத் துவங்க அனுமதிக்கக்கூடாது என்று சுற்றுச்சூழல் ஆணையத்தின் உத்தரவுகளையும் மீறி, இந்திய சட்டவிதிகள் ஒன்றும் செய்யவியலாத ‘காட்’ ஒப்பந்தங்கள், அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவிற்கும் இதர நாடுகளுக்கும் நம்மை பொருளாதார அடிமைகளாக்கும் பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும் இந்திய அரசின் ’தாராளவாத’ கொள்கைகள் மூலம் அதிகார வர்க்கம் பெறும் ஆதாயங்களுக்கு என்ன பெயர்? அடிக்கபப்டும் கொள்ளைகளுக்கு தண்டனை என்ன?
( வேளச்சேரி என்கவுண்டர் - சில கேள்விகள். இக்கட்டுரை ஃபிப்ரவரி 29 அன்று எழுதப்பட்டது.)
கொற்றவை, இக்கட்டுரையில் உங்களின் ஆதங்கம் நன்கு வெளிப்பட்டிருக்கிறது. சம்பவத்தன்று உங்களை நோக்கி எதிர்ப்புக்குரல் எழுப்பியவர்கள், சாதாரண மக்களாகக் கூட இருக்கலாம் என்பதை அவர்கள் கேட்ட பாமரத்தனமான அந்தக் கேள்வியே வெளிப்படுத்துகிறது. ( அந்த கேள்வியாவது : " திருட்டு, கொள்ளை நடக்கும் போது வராத நீங்க, இப்ப மட்டும் ஏன் வரீங்க ? " )
ReplyDeleteஇப்போதெல்லாம் மக்கள் எதோ ஒரு விஷயத்தில் தங்களை ' வெறி ' ஏற்றிக் கொள்ளவே விரும்புகிறார்கள். பொது இடங்களில் பார்க்கும் பெரும்பாலான மனிதர்களிடம், அடிபட்ட புலியின் சீற்றமே தெரிகிறது. எந்த இளிச்சவாயன் கிடைப்பான் , குதறி எடுக்கலாம் என்றே அவர்கள் காத்துக் கிடப்பது போலத் தெரிகிறது. நியாய தர்மங்களுக்கு இங்கு மதிப்பில்லை.
தமிழ் நாட்டில் மட்டும் தான் ஒரு தமிழன், சக தமிழனை உலக வெறுப்போடு பார்க்கிறான். இதே பிற மாநிலங்களில், அந்தந்த மக்களுக்கிடையே இருக்கக் கூடிய ஒரு பொதுவான " சிநேக " உணர்வைக் காண முடியும். தமிழ் நாட்டில் அதைக் காண்பது அரிது. நமக்கு எப்போதும் பிற மொழிக்காரர்களிடம்/ இனத்தவர்களிடம் தான் ' கவர்ச்சி ' அதிகம். அவர்களைத் தான் நாம் கொண்டாடுகிறோம்,அரியணையில் அமர்த்தவும் தயாராக இருக்கிறோம்.
இந்தக் கட்டுரையின் கடைசிப் பத்தியில் செருப்பால் அடித்தது போல நீங்கள் சொன்ன கருத்துக்கள், கேட்ட கேள்விகள், மக்களைச் சென்றடைய வேண்டுமானால், இதற்காகவே மெனக்கெட்டு ஒரு திரைப்படம் எடுத்து, அதில் எவனோ ஒரு மாஸ் நடிகன் இந்தக் கேள்விகளை மனப்பாடம் செய்து வசனமாகப் பேசினால் வேண்டுமானால் மக்கள் புரிந்து கொண்டு கைதட்டுவார்கள். அவர்களுக்கு கைதட்டுவது மட்டுமே கைவந்த கலையாக இருக்கிறது.