Showing posts with label கூடங்குளம். Show all posts
Showing posts with label கூடங்குளம். Show all posts

Oct 8, 2012

கூடங்குளம் போராட்டத்தைக் இழிவு படுத்தும் விதமாக தா.பாண்டியன் அவர்களின் தொடர் பேச்சுக்கு கண்டனம்.


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் அவர்கள் 10.10.12 ஆனந்த விகடன் இதழுக்களித்த பேட்டியில் கூடங்குளம் போராட்டம் குறித்தும், போராட்ட தலைவர்கள் குறித்தும், ஏனைய மக்கள் போராட்டம் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு மூத்த அரசியல்வாதி பொதுவுடைமைச் சிந்தனையுடைய ஒரு கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து கொண்டு உதிர்த்திருக்கும் இப்பொறுப்பற்ற சொற்கள் மிகவும் வருத்தமளிக்கும் ஒன்றாக இருக்கிறது. மக்கள் போராட்டம் குறித்தும், கூடங்குளம் அணு உலை குறித்த அவரது கருத்தும், போராட்டத்தலைவர் குறித்த அவரது ஏளனமான வார்த்தைகளும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

”கூடங்குளமோ…குருவிக் குளமோ…அணு மின் நிலையங்கள் வேண்டும். இப்போது போராடும் பாதிரியார்கள் ஜப்பானில் குண்டு போடும்போது என்ன செய்தார்கள்?” என்று கேட்கிறார். மற்றொரு பதிலில் ”……. பாதிரியார்களுக்கு மின்சாரத்தைப் பற்றிக் கவலை இல்லை. எனக்கு மின்சாரம்தான் முக்கியம்!” என்கிறார். மக்களை குழி தோண்டி புதைத்து விட்டு யாருக்காக அந்த மின்சாரம் என்று தா.பாண்டியன் அவர்கள் விளக்க வேண்டும்.

ஏறத்தாழ 40 வருட கடும் உழைப்பைச் செலுத்தி, உடல் நலம் பாதிக்கப்பட்டு, குழந்தைகளைக் கூட வறுமைக்கு இரையாக்கி, மக்களின் பொது எதிரி யார், அவர்கள் எவ்வகையில் மக்களைச் சுரண்டுவார்கள் என்பதை விஞ்ஞானபூர்வமாக விளக்கிய பேராசான் காரல் மார்க்சைப் படித்த ஒருவர் அணு சக்தியில் மின்சாரம் தயாரிப்பதை ஆதரித்து பேசுவதும், மக்களது போராட்டங்களைக் கொச்சை படுத்திப் பேசுவதும் வியப்பளிக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது. அதை விடக் கொடுமை “போராடினால் எல்லாம் கிடைத்துவிடுமா” என்று கேட்டிருக்கிறார். “உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்” என்று காரல் மார்க்ஸ் எதற்கு சொன்னார், கூடிக் கும்மாளம் போடவா. ஒன்று கூடி உங்கள் உரிமைகளுக்காகப் போராடுங்கள் என்பதற்காகத் தானே. கூடங்குள இயக்கத்தை கும்பமேளாவோடு தொடர்பு படுத்தி அங்கும் மக்கள் கூடுகிறார்கள் என்ற பதிலின் மூலம் தனது கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு கும்பமேளாதான் என்கிற அவரது கருத்தை நமக்கு உணர்த்துகிறது.

மக்கள் போராட்டம் குறித்து, கூடங்குளம் போராட்டக்காரர்கள் குறித்து தா. பாண்டியன் பகிர்ந்துள்ள கருத்துக்களை, அதில் வெளிப்படும் மத வெறுப்பை அடிப்படையாகக் கொண்டு அவரது மக்கள் விரோதப் போக்கை கண்டிப்பதோடு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாசெஸ் கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு
கொற்றவை
மாசெஸ் அமைப்பு.
சென்னை.

நகல் 1 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – மாநிலத் தலைமை அலுவலகம்
நகல் 2 இந்தியக் கம்யூனிஸ் கட்சி – மாநில நிர்வாகக் குழு.
நகல் 3 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – மைய்ய நிர்வாக் குழு.

மேற்சொன்ன அறிக்கையில் கையெழுத்திட விரும்புவோர் உங்களின் பெயர்களை இங்கு பதிவு செய்யவும். இவ்வறிக்கை நாளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அனுப்பி வைக்கப்படும்.

புகைப்படக் குறிப்பு: சென்னை, சி.பி.ஐ அலுவலகம் முன்பு தோழர்கள் சிலர் தா.பாண்டியன் அவர்களின் பேச்சுக்களைக் கண்டித்து கூடி தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

Mar 23, 2012

தொடர் உண்ணாநிலை போராட்டம் - நாள் இரண்டு






கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினரின் தொடர் உண்ணாநிலை போராட்டம் குறித்து நிறைய பேருக்கு மென் கடிதம் அனுப்பியிருந்தேன். அதற்கு பதில் அளித்த Naanarkaadan Oviyanilaa எனும் தோழர் பின் வரும் வாழ்த்துறையும், அறிக்கையும் அனுப்பியிருந்தார். அது இன்றைய தினம் போராட்டக்கூட்டத்தினரிடையே வாசிக்கப்பட்டது. ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றி.





போராட்டம் வெல்ல நாமக்கல் மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றம் வாழ்த்துகிறது . இந்தப் போராட்டத்திற்குப் பொருத்தமான தோழர் பகத்சிங் கின் அறிக்கை.......

லாகூர் சதிவழக்கு விசாரணை நடைபெற்ற சிறப்பு நீதிமன்றத்தில்,பகத்சிங்கால் எழுதப்பட்டு,ஐந்து தோழர்களால் கையொப்பமிடப்பட்டு,வாசிக்கப்பட்ட அறிக்கையின் சிறு பகுதி....

....புரட்சியின் இலக்கை அடைவதற்காக கைக்கொள்ள வேண்டிய வழிமுறை சமாதானப் பூர்வமானதாய் இருக்க வேண்டுமா அல்லது வேறுவகைப்பட்டதாய் இருக்கவேண்டுமா என்பதை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு,அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களிடமே இருக்கிறது என்று நாங்கள் அறிவிக்கிறோம்.புரட்சியாளர்கள் பிறர்க்கென வாழும் கோட்பாட்டை உடையவர்களாதலால்,அவர்கள் சமாதானத்தை நேசிப்பவர்கள். அவர்கள் நேசிக்கும் சமாதானம்,கோழைத்தனத்தின் விளைவாய் பிறப்பதும்,துப்பாக்கி முனையில் பேணப்படுவதுமான போலி சமாதானம் அல்ல.நீதியையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக்கொண்ட உண்மையான நிரந்தரமான சமாதானமே.தவிர்க்க முடியாத கட்டாய சூழ்நிலையில் எடுக்கப்படும் நடவடிக்கையாக, கடைசிப் புகலிடமாக மட்டுமே புரட்சியாளர்கள் வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் கையிலெடுக்கின்றனர்.
மனிதனுக்காக சட்டம்-ஒழுங்கேயொழிய, சட்டம்-ஒழுங்கிற்காக மனிதன் அல்ல என்று நாங்கள் கருதுகிறோம்.

மக்களது விருப்பதின் வெளிப்பாடாக இருக்கும் வரை மட்டுமே சட்டத்தின் புனிதத்தை பேண முடியும்.எப்போது அது ஒடுக்கும் வர்க்கத்தின் கையில் வெறும் கருவியாக மாறிவிட்டதோ,அப்போதே அது தனது புனிதத்தையும் தனிச்சிறப்பையும் இழந்துவிடுகிறது.பொதுமக்களின் சமூகத்தேவைகளுடனான தனது பொருத்தத்தை சட்டம் இழந்த உடனேயே அது, அநீதி இழைப்பதற்கும் கொடுங்கோலாட்சி செலுத்துவதற்குமான கருவியாக மாறிவிடுகின்றது.

தற்போதைய அரசாங்கத்தின் சட்டங்கள்,எமது மக்களின் நலனுக்கு எதிராக,அந்நிய ஆட்சியாளர்களின் நலனுக்காகவே இருக்கின்றன.அதனாலெயே அறநெறிகளின்படி,எமது மக்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் அச்சட்டங்களுக்கு கிடையாது.........

---------- பகத்சிங்


இன்று தோழர் பகத்சிங்கின் நிணைவு நாள். அதையொட்டி கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக நடந்துவரும் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் அவரது சிந்தைனைகளை நிணைவுகூர்ந்து பேசுவது என்று நேற்று முடிவு செய்தோம். அதற்கு பொருந்திவருமாறு நாமக்கல் மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றம் தோழரும் கடிதம் அனுப்பியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக விடுதலைப் பாதையில் பகத்சிங் எனும் புத்தகத்திலிருந்து எங்களைத் தூக்கிலிடக் கூடாது, சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற தலைப்பில் பகத்சிங் எழுதிய கடிதத்தின் இறுதி பத்திகளை வாசித்தேன்:

கைதிகளைச் சுடும் படைப்பிரிவிற்கு உத்தரவிடுங்கள்:

எங்களது இறுதி முடிவைப் பற்றிய கேள்வியைப் பொறுத்து எங்களை சில வார்த்தைகள் கூற அனுமதியுங்கள். எங்களைக் கொலை செய்வதென்று நீங்கள் தீர்மானித்துவிட்டதால் அதனை நீங்கள் நிச்சயமாய் நிறைவேற்றி விடுவீர்கள். உங்கள் கையில் அதிகாரம் இருக்கிறது. இந்த உலகத்தில் அதிகாரமே மிகப்பெரும் நியாயத்தைக் கொடுக்கிறது. “வல்லான் வகுத்ததே வாய்க்கால்” எனும் முதுமொழியே உங்களை வழிநடத்தும் உந்து சக்தி என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் மீதான விசாரனை முழுவதுமே அதற்கு ஓர் சான்று.

நாங்கள் எதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்றால், உங்களது நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நாங்கள் அரசுக்கெதிராகப் போர் தொடுத்துள்ளோம். ஆகையால் நாங்கள் போர்க்கைதிகளே. எனவே நாங்கள் போர்க் கைதிகளைப் போலவே நடத்தப்பட வேண்டும். அதாவது தூக்கிலிடுவதற்குப் பதிலாக நாங்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று கோருகிறோம். உங்களது நீதிமன்றம் சொன்னதைத்தான் நீங்களும் மனதிற் கொண்டுள்ளீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையதே. எஙகளுடைய மரணதண்டனையை நிறைவேற்றுவதற்காகக் கைதிகளைச் சுடும் படைப்பிரிவொன்றை அனுப்பி வைக்குமாறு மிகுந்த கனிவுடன் இராணுவத் துறைக்கு உத்தரவிடுவீர்கள் என்று நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்கிறோம்.


தங்கள்......

பகத்சிங்
                                                                                                                                     
ராஜகுரு

சுகதேவ்.





இவர் பெயர் தோழர் பெருமாள். இன்றைய பேச்சாளர்களில் என்னை மிகவும் கவர்ந்த பேச்சாளர். இடிந்தகரை பகுதிக்கருகிலிருந்து வந்துள்ளார். மீனவ சமூகத்தை சார்ந்தவர்.

கோட்பாட்டு சொல்லாடல்கள், தத்துவார்த்த கேள்விகள் என்றெல்லாம் கவலைகொள்ளாமல், மண்ணின் மைந்தராக, ஒடுக்கப்பட்ட குரலாக அவர் பேசியது ”உண்மை”. வயிற்றெரிச்சலோடு நாங்கள் என்ன உங்களிடம் உங்கள் சொத்தையா கேட்கிறோம் நியாத்தைதானே பேசுகிறோம் எனும் தொணியிலிருந்தது.

உதயகுமார் வெறும் தலைவர் அல்ல, எங்களில் ஒருவர் எனும் உணர்வை வெளிப்படுத்தும் அப்பகுதி மக்கள் அவர் மீது எத்தகைய அன்பையும், நம்பிக்கையும் கொண்டுள்ளார்கள் என்பதை நேரில் காணும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்தது.
_________________________

கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினரின் தொடர் உண்ணாநிலை போராட்த்தில் நாளை கணிணி தொழிற்துறையினர் கலந்து கொள்கின்றனர். கணினி தொழில் நுட்ப பணியாளர்கள் இதில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.



தோழர்களே, வெகுஜன ஊடகங்கள் பெரிதாக இந்த போராட்டம் குறித்து பேசுவதில்லை, ஆகையால் முடிந்தவரை நீங்கள் உங்கள் தொடர்பு வட்டங்களுக்கு இந்த போராட்ட செய்தியை எடுத்துச்செல்லவேண்டும்.





பெரும் திரளான மக்கள் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று வெளிப்படுத்துவதே அம்மக்களுக்கு நாம் செய்யக்கூடிய உதவி.



Mar 22, 2012

கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தொடர் உண்ணாநிலைப்போராட்டம்



கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தொடர் உண்ணாநிலைப்போராட்டம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

தாயகம், ம.தி.மு.க. அலுவலகம், எழும்பூர், சென்னை. அணைவரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் கடந்த பல பத்தாண்டுகளாகவும், கடந்த 7 மாதங்களாக இடிந்தகரை பகுதி மக்களின் ஒருங்கிணைந்த தீவிரமான போராட்டமாக உருவெடுத்தது இடிந்தகரையில் இன்று ஒரு நெருக்கடியான நிலையை எட்டியுள்ளது. மத்திய அரசின் பொய், புரட்டு, இந்திய அணு விஞ்ஞானிகளின் அறிவியலுக்குப்புறம்பான பிரச்சாரம் இவையெல்லாவற்றையும் மீறி உழைக்கும் மக்களின், மீனவ மக்களின் போராட்டம் அசாத்திய உறுதியுடனும் கொள்கைப் பிடிப்புடனும் தொடர்ந்து வந்துள்ளது. மக்கள் மலையென நம்பிய தமிழக அரசு தான் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, சங்கரன்கோவில் தேர்தல் வரை காத்திருந்து இப்போது அணு உலையைத் திறக்க உத்தரவிட்டிருக்கிறது.

இந்தச்சூழ்நிலையில் தொடர்ந்து அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் மக்களை அச்சுறுத்தும் நோக்கத்தோடு ஆயிரக்கணக்கில் போலிஸார், துணை இராணுவம் மற்றும் தொழில் துறை பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களுடன் இடிந்தகரையை முற்றுகையிட்டுள்ளனர். இது சட்டத்திற்குப்புறம்பானது மட்டுமல்ல, ஜனநாயகம் என்ற கருத்திற்கே எதிரானதும் கூட.

அரசு தன் அதிகாரத் தின் கோர முகத்தை இடிந்தகரை போராளி மக்கள் மீது செலுத்துமானால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய அநீதியாக இருக்கும். எனவே கீழ்க்காணும் கோரிக்கைகளை முன்வைத்து கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் பல அமைப்புகள் ஒருங்கிணைந்து ஒரு தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை ஒழுங்கு செய்திருக்கிறோம். உண்ணாநிலைப் போராட்டத்தின் முதல்நாளான 22 மார்ச் 2012 அன்று பெண் படைப்பாளிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் உண்ணாநிலையில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்:
1. கூடங்குளம் பகுதியில குவிக்கப்பட்டிருக்கும் காவல்துறையினரை திரும்பப் பெறவேண்டும். ஓர் அறவழிப்போரட்டத்தை ஒடுக்கும் நோக்கோடு போடப்பட்டிருக்கும் காலவரையற்ற 144 தடையுத்தரவு நீக்கப்படவேண்டும்.
2. குடி நீர், மின்சாரம், சுகாதார வசதிகளை முடக்குவதன் மூலம் ஒரு மக்கள் போராட்டத்தை ஓர் அரசு முடக்க நினைப்பது மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் செயலாகும். இதேபோல் உணவு, மருத்துவ வசதிகள், குழந்தைகளுக்கு தேவையான பால் போன்ற அத்தியாவசிய தேவைகள்கூட காவல்துறையால் தடுக்கப்படும் நிலை தொடரக்கூடாது.
3. இடிந்தகரையில் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் குழந்தைகள் பள்ளித் தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. இது குழந்தைகளின் அடிப்படை உரிமையையே மறுப்பதாகும். உரிய பாதுகாப்புடன், குழந்தைகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவேண்டும்.
4. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மீனவ மக்களுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
5. தங்கள் வாழ்வாதாரங்களையும் தங்கள் சந்ததிகளின் வாழ்வுரிமைக்காகவும், ஒட்டுமொத்த தமிழகத்தின் பாதுகாப்புக்காகவும் போராடிவரும் மக்களின் கோரிக்கையை ஆதரிக்காவிட்டாலும் அவர்கள் மேல் ஏவிவிடப்படும் நியா யமற்ற வன்முறை, அரசு ஜனநாயக நியதிகளுக்குப் புறம்பாக நடத்திவரும் காட்டுமிராண்டித்தனம் ஆகியவற்றை எதிர்க்க ஜனநாயக சக்திகள் முன்வரவேண்டும்.

Feb 28, 2012

கூடங்குளம் போராட்டம் - தொடரும் ஒடுக்குமுறை




கூடங்குளம் போராட்டக்காரர்களின் ஐயங்களுக்கு அறிவியல் பூர்வ விளக்கங்களை அளிக்க முடியாத மத்திய அரசு, தன் அவதூறுகளுக்கு ஆதரவு திரட்டும் பணியில் உளவியல் ரீதியான ஒடுக்குமுறையை ஏவுகிறது. ஒரு ஜெர்மானியர் சுப.உதயகுமாரனோடும், போராட்டக்குழுவினரோடும் தொடர்பில் இருந்தார் என்று குற்றம் சாட்டி நாடு கடத்தப்பட்டிருக்கிறார். அது தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகளில் ஆதாரப்பூர்வ தகவல்கள் எதுவுமில்லை. ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர், விஞ்ஞானி எனும் அடிப்படையில் லால் என்பவருடன் அவர் உரையாடியிருக்கிறார் என்பதாக குழுவினரின் தகவல்கள் சொல்கிறது. இது ஒரு புறம் இருக்கட்டும்.

பன்னாட்டு நிறுவங்கள் சந்தை ஊடுறுவலுக்கான கள ஆய்வை மேற்கொள்ள, மக்களின் நன்மதிப்பைப் பெற, வரி ஏய்ப்பு செய்யவென பல காரணங்களுக்காக தொண்டு நிறுவனங்களை நிறுவியுள்ளன. தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் பல இன்று பெருமுதலாளித்துவ நிறுவனங்களாக செயல்படுகின்றன. அவை தங்களுக்கென வசூல் இலக்கை வைத்து, அதற்கென பணியாளர்களை வைத்து செயல்படுவதை நான் கண்டுள்ளேன். அத்தகைய நிறுவனப் பணியாளர்கள் ஒருவித அதிகாரப் போக்கோடு சேவைஎனும் துருப்புச் சீட்டை முன்வைத்து வீடுகளுக்குள் புகுந்து இப்போதே செக்கைகொடுங்கள் என்று அன்பு மிரட்டல்களைவைத்தனர். எத்தனையோ தொண்டு நிறுவனஙகள் கோடிக் கணக்கில் பணம் சேர்த்து வைத்துள்ளன. இங்கு செயல்படக்கூடிய பண்பாட்டு காவல் மையங்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் பணம் நிதியுதவியாகப் பெறப்படுகிறது. நமது பண்பாட்டைக் காக்கும் அக்கறை அவர்களுக்கு ஏன் வருகிறது. Corporate Social Responsibility என்பதே ஒரு ஏய்ப்பு தான்.

அவையெல்லாம் நல்லகாரியங்களுக்கு பயன்படுத்தப்படவேண்டும், அரசை எதிர்க்கும் போராட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வீர்களானால் வெளிநாட்டில் நிதியுதவி பெரும், இந்தியாவில் வாழும் வெளிநாட்டவரிடமும் நிதியுதவி பெரும் அணைத்து தொண்டு நிறுவனங்களையும், பண்பாட்டு மையங்களையும், ஆய்வு நிறுவனங்களையும் தடை செய்ய வேண்டும். 

இந்திய நாடு பிச்சைக்காரர்களை உருவாக்கும்.... இந்தியர்கள் பெண்களை, குழந்தைகளை வன்புணர்சி செய்து கொடுமைகளுக்கு ஆளாக்குவர், இந்தியக் குடும்ப வாரிசுகள் தங்கள் பெற்றோர்களைத் தெருவில் கைவிடுவர், இந்தியக் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளைக் கைவிட்டுச் செல்வர்.... இந்திய அரசுகள் கல்வியை தனியார் மையமாக்கும். இந்திய அரசுகள் மருத்துவப் பராமரிப்பை உரிய வசதிகளோடு, போதிய அளவில் வழங்காது, பெண்களுக்கு, சிறுபான்மையினருக்கு அநீதியிழைக்கும்.... இவற்றையெல்லாம் களைய வெள்ளைக்காரன் வருவான்....அவனது நிறுவனங்களின் பணம் பெறப்படும்.... இந்திய அரசுகள் செய்ய மறுக்கும் பணியை வெளிநாட்டவர் செய்யலாம்...ஏனென்றால் அவர்கள் மறைமுகமாக இந்திய அரசின் பொறுப்பின்மைக்குஉதவி செய்கிறார்கள்.....


ஆனால் இந்திய அரசின் அந்நிய நாட்டு உறவின்விளைவாக மேற்கொள்ளப்படும் உயிர் கொல்லிதிட்டங்களுக்கெதிராக போராடும் மக்கள் அமைப்புகள் வெளிநாட்டவர்ர் எவரிடமும் பணம் பெறக்கூடாது....அவர் தன்னார்வலராக இருந்தாலும் கூட.....கட்டவிழ்த்துவிட்ட அவதூறுக்கு வலு சேர்க்கும் விதமாக இன்னும் எத்தனை உளவியல் தாக்குதல்கள் நடக்கப்போகிறது?

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்து நீர் வளங்கள் உள்ளிட்ட அணைத்து வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் தாரை வார்த்துக் கொடுக்கும் அரசுகளின் ஒப்பந்தங்களின்பின்னால் இருப்பது எவரின் பணம்?

தமிழக அரசு இப்பிரச்சனையில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். தமிழக அரசு அமைத்த வல்லுனர் குழு போராட்டக் குழு அமைத்த வல்லுனர் குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மக்களையும் சந்திக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் அளித்திருக்கும் அறிக்கையை தமிழ அரசு ஏற்கக்கூடாது. இன்று சுப. உதயகுமாரன் உள்ளிட்ட குழுவினரை முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சந்திப்பது போராட்டத்தின் ஒரு முக்கியக் கட்டமாக உள்ளது. அத்தரப்பினரின் கோரிக்கைகள் இதுவரை மத்திய அரசு காது கொடுத்துக் கேட்கவேயில்லை. தமிழக முதல்வராவது அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்க மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அந்நிய நாட்டு நெருக்கடிகளுகாக அம்மக்கள் கைவிடப்படுவது மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது.   உயிர் கொல்லி திட்டத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் தமிழர்கள் உயிர் பறிபோகக்கூடிய சூழலை தமிழக அரசு தடுக்க வேண்டும். 


Feb 5, 2012

மாண்பு மிகு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு,




4.2.2012 கூட்டத்தை முடித்து விட்டு வீடு வந்தவுடன் தொலைக்காட்சியில் ஒரு செய்தியைப் பார்க்க நேரிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் .சிதம்பரம் பாளையங்கோட்டையில் அணு  உலையை விரைவில் திறக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார். இன்னும் எத்தனை நாளுக்குத்தான் ’22 வருடங்கள் எங்கேயிருந்தார்கள் அவர்கள், யார் இந்த சுப. உதயகுமாரன், எங்கிருந்து பணம் வருகிறது இவர்களுக்கு” எனும் முட்டாள்தனமான கேள்விகளையே இவர்கள் வைத்துக் கொண்டிருக்கப்போகிறார்கள். ’கூகிள் சர்ச்’ செய்தாலே போதுமான வரலாறு கிடைக்கிறதே, அதன் மூலம் இது கடந்த 23 வருட காலப் போராட்டம் என்பதை ஒரு குழந்தை கூட படித்து அறிந்து கொள்ளும். கார்ப்பச்சேவ் பதவி இழந்தது, ராஜீவ் காந்தியின் மறைவு என்று பல்வேறு காரணங்களால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பிறகு 1997 - அப்போதைய பிரதமர் ஹெச்.டி. தேவே கவுடா மற்றும் ருஷிய பிரதமர் போரிஸ் யெல்ஸ்டன் 1988ல் மீன்டும் ஒரு துணை ஒப்பந்தத்தை கையெழுத்திட்டனர்.  1989ல் நடந்ததை மேலே குறிப்பிட்டுள்ளேன்...இப்படி தொடர்ந்து போராட்டங்கள் வெவ்வேறு அமைப்பின் கீழ், தலைமைகளின் கீழ் நடந்து வந்திருக்கிறது. இதற்கு மேலும் ஆதாரமாக, நேற்றைய கூட்டத்தில் ஞாநி  அவர்கள் சொன்னதை இங்கு பகிர்கிறேன். 1987, செப்டம்பர் மாதம் நடந்த கூட்டத்தில், அணு  உலைகளினால் ஏற்படவிருக்கும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு போராட்டத்தில் அவர் பேசியுள்ளார், அவர் சொன்னது “சென்ற தலைமுறையக் கடந்து இன்று அடுத்த தலைமுறைக்கு இப்போராட்டம் நீண்டு தொடர்ந்து வந்திருக்கிறது” ஆம்...இது தான் உண்மையை, ஆனால் இந்த உண்மையை மத்திய அரசு மறைக்கிறது. வெகுஜன ஊடகங்களாவது இப்போராட்ட வரலாற்றை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
தொழில்நுட்பம் உச்சத்தில் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் இணைய இணைப்பு என்பது பயணங்களின் போதுகூட நமக்கு கிடைக்கிறது.  2G அலைக்கற்றை ஊழலில் தொடர்பிருப்பதாக சொல்லப்படும். சிதம்பரம் அவர்களுக்கு இது கூடவா தெரியாமல் இருக்கும். பாளையங்கோட்டையில் பேச செல்வதற்கு முன் கூட கூகிளில் அவர் தேடியிருந்தால், போராட்ட வரலாற்றை அவர் படித்திருக்கலாம். இத்தருணத்தில் படைப்பாளர் இயக்கத்தினரிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், சிதம்பரம், தினமலர், காங்கிரஸ், RSS ஆகியோர் மாற்று அறிவை அதாவது சமூகத்திற்கு நன்மை விளைவிக்கக்கூடிய பரிந்துரைகளைக் கொண்ட மாற்றுச் சிந்தனையாளர்கள் எழுதிய புத்தகங்களைத் தேடி கற்பதில்லை என்பது தெரிகிறது. குறைந்தபட்சம் அணு சக்திக் கதிர்களால் ஏற்பட்டிருக்கும்  ஆபத்து குறித்த உலக அறிஞர்களின் ஆய்வுகள், கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்கள் இயக்கத்தின் அறிவியல்பூர்வ தகவல்களைக் கொண்ட வெளியீடுகள், மத்திய அரசின் வல்லுனர் குழுவினரின் அறியாமையை வெட்ட வெளிச்சமாக, ஆதாரபூர்வமாக பேசும் வெளியீடுகள், மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களை நம் கைக்காசுகளைப் போட்டாவது வாங்கி அணுப்புவோம்.
சிதம்பரம் மற்றொரு அரைத்த மாவை மீண்டும் அரைத்தார் – அது தான் அப்துல் கலாமின் பரிந்துரைகள். ”அப்துல் கலாமே சொல்லிவிட்டார்” அப்துல் கலாமே பேசிவிட்டார்....அப்துல் கலாமே சாப்பிட்டு விட்டார் என்று பேச்சுக்கு பேச்சு அவரை இழுத்தார்....மிக்க மகிழ்ச்சி.

மாண்பு மிகு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு,
அப்துல் கலாம் யார்...எங்கிருந்து வந்தார் என்பது தாங்களுக்குத் தெரியாததல்லவா. குடியரசுத்  தலைவராக கேப்டன் லட்சுமி பாயை இடது சாரிகள் முன்வைத்தபோது பாரதிய ஜனதாவால் நிறுத்தப்பட்டவர் அப்துல் கலாம். ஆனால் வாஜ்பேயி அவர்களை விட மிக மோசமான இந்துத்துவ குணங்கொண்டவராக இருக்கிறார் கலாம். அய்யா நீங்கள் கூறும் திருவாளர் அப்துல் கலாம்தான் பாராளுமன்றத்தில் காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேவின்  அதிகாரப்பூர்வ குருவான சாவர்க்கரின் படத்தை திறந்து வைத்தவர். பகவத் கீதை என்ற நூலை சத்தியம் என்று நம்பும் பரிதாப ஆத்மா...அய்யா வாஜ்பேயி யார் 1942ல் பட்டேஸ்வர் கிராமத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளார்களுக்கு எதிராக மக்கள் திரள,  போலிஸ் அடக்க, மக்கள் கொந்தளிக்க  பிரிட்டிஷ் அரசு அவர்களை, அந்தப் பழங்குடி மக்களை துவம்சம் செய்து மக்கள்  தலைவர்களைக் காட்டிக் கொடுக்கச் சொன்னது. மக்கள் மறுத்தனர். ஆனால் மக்கள் தலைவர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டனர். அய்யா காட்டிக்கொடுத்த அந்த உன்னத ஆத்மாக்கள் நம்பர் 1. பிரேம் பிகாரி வாஜ்பாயி. நம்பர் 2 அடல் பிகாரி வாஜ்பாயி...அய்யா எப்படி இருக்கிறது பாருங்கள் வரலாறு. மிக்க மகிழ்ச்சி இந்த அப்துல் கலாமும், வாஜ் பேயிம் அவர்கள் சார்ந்த அமைப்புகளும் சொல்வதனால் எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் இந்தியாவை மனநோயாளர்களின் நாடு என்றழைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறீர்கள் என்றே அர்த்தம். அய்யா இந்தியாவை அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று கேட்டு ஆட்சி நடத்துவதற்கு பதில் அவர்களை  சர்வாதிகாரிகளாய் மாற்றி மக்கள் குடியரசை ஒழியுங்கள் நிம்மதியாய் போகும். நீங்கள் இந்த அணு உலைக் கருத்தாக்கத்துக்கு உங்களால் முடிந்த அளவுக்கு ஆதரவு தெரிவித்து அதைத் அன்னை சோனியா காந்தியின் கையில் கத்தரிக்கோல் பிடித்து ரிப்பன் வெட்ட நினைக்கிறீர்கள்.  நாங்கள் முடிந்த அளவுக்கு போராடுகிறோம்.  அய்யா உள்துறை அமைச்சரான உங்களுக்கு அப்துல் கலாமும், அணு உலையும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கும் மேல் உதயகுமாரன், புஷ்பராயன், ஜேசுராஜன், அம்மக்களின் வாழ்வாதாரம், இயற்கை மாசுபடாதிருத்தல் ஆகியவை எங்களுக்கு  முக்கியம்.
அணுகுண்டுகள் பற்றி அதன் பேரழிவு பற்றி கவிஞரொருவர் ஒரு மிக அற்புதமான கவிதையொன்றை இயற்றியிருக்கிறார். அதைத் தங்களின் பார்வைக்கும் வைக்கிறேன். ’சில இரவுகளில்’ -
சில இரவுகளில்
எனது தூக்கம் திடீரென்று கலைக்கப்படுகிறது
எனது கண்கள் திறக்கின்றன
அணு ஆயுதங்களைக் கண்டுபிடித்த
அந்த விஞ்ஞானிகளைப் பற்றி நினைக்கிறேன்
ஹிரோஷிமா - நாகசாகியில் நிகழ்ந்த
பயங்கர இனப்படுகொலை பற்றிய செய்தியைக் கேட்டபோது
இரவில் அவர்கள் எப்படித் தூங்கியிருப்பார்கள்?

தாங்கள் செய்வது சரியல்ல என்ற உணர்வு
அவர்களுக்கு ஒரு வினாடியாவது ஏற்பட்டதா?
ஏற்பட்டிருந்தால் காலம் அவர்களை
குற்றவாளிக் கூண்டில் ஏற்றாது
இல்லையென்றால் வரலாறு அவர்களை
ஒரு போதும் மன்னிக்காது.

அய்யா அணுகுண்டுகளுக்காக அதன் பேரழிவிற்காக இந்த உருக்கம் மிகுந்த கவிதையை எழுதியது வேறு யாருமல்ல அணு உலை வேண்டும் வேண்டும் வேண்டும் என்று அப்பாவி மக்களின் வாழ்வாதரத்தின் மீதும் உயிரிலும் அடித்து விளையாடும் நீங்கள் கூறும் அப்துல் கலாம் திறந்து வைத்த புகைப்படத்தில்...பாரளுமன்றத்தில் இன்னும் காந்தியை திறந்த கண்களால் வெறித்துக்கொண்டிருக்கும் சாவர்க்கர் அவர்களின் வழிமரபான அய்யா அடல் பிகாரி வஜ்பேயிதான். ஆனால் பாருங்கள் அவரும் தான் பிரதமராய் இருந்தபோது பொக்ரானை வெடித்துவிட்டு suo motu அறிக்கையில் 5 வது விளக்கமாக
இப்போது இந்தியா மறுக்கமுடியாதபடி ஒரு அணு ஆயுத அரசாக உள்ளது. இந்தத் தகுதி " நாங்கள் தேடி எங்களுக்கு வழங்கப்பட்டதல்ல; மற்றவர்கள் எமக்கு மானியமாக அளித்த அந்தஸ்தும் அல்ல. அது "எம் விஞ்ஞானிகளும் பொறியியலாளர்களும் தேசத்துக்கு வழங்கிய கொடை.” மேலும்  " மனித குலத்தின் ஆறில் ஒரு பங்குக்கு, இந்தியாவுக்கு உள்ள உரிமை.” மிக்க மகிழ்ச்சி. ஆனால் தாங்கள் விரும்பாத வகையில்தான் இதை சுட்டிக்காட்டியதற்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஒரு குறிப்பிட்ட எல்லை வரை ஒரு இந்திய குடிமகளாக எனது வீட்டின் மின்சாரத் தேவைகளுக்கு நீங்கள் என்னைத் துணைக்கழைப்பதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. அப்படி ஒரு மின்சாரத்தை நான் விரும்பவில்லை. மன்னித்திவிடுங்கள்.  அய்யா ஒரு இடைத்தகவலாக நீங்கள் வழிமொழியும் அப்துல்கலாமும் பொக்ரான் அணுகுண்டு வெடிப்பில் ஒரு தொழில் நுட்ப வல்லுனர். அவரிடம் இப்பொழுது கேளுங்கள் அணு குண்டு நல்லதா என்று...மிக எளிதாக அவரால் சொல்ல முடியும். கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று. நீங்களும் உங்கள் கடமையைச் செய்கிறீர்கள். ஆனால் அய்யா அது ஒரு மத்திய உள்துறை அமைச்சராக மக்கள் மேல் அபிமானம் கொண்ட ஒருவரைப் போல் இல்லை. கடமையைச் செய் இல்லையெனில் நீ துரோகி...நாசமாய்ப் போக என்று கூறுவதைப் போல் உள்ளது. அதே போல் சுப. உதயகுமாரை நீங்கள் அடிக்கடி விளிப்பது மிகவும் அறுவெறுக்கத் தக்க ஒன்றாக உள்ளது. இன்றைய நிலையில் அவர் அப்துல் கலாம் வாஜ்பேயி ஏன் உங்களை விட மிகக் கீழான வசதியில் மக்களின் சார்பாக நிற்கும் ஒரு மனிதன் அவ்வளவே. அய்யா ஒரு சிறிய ஆலோசனை தாங்கள்  ஏன் பாரதிய ஜனதாவிலோ அல்லது ஆர்.எஸ்.எஸ்.ஸிலோ இணையக் கூடாது.( கூடங்குள மக்கள் கிறித்தவர்கள் என்ற அளவில் பூசிய மதச் சாயம் குறித்து நீங்கள் விரிவாக விளக்காமல் போனதற்காக)   எங்களுக்கு இப்பொழுது நீங்கள் அடிக்கடி முன் மொழியும் பெயராக ஆகிவிட்ட அப்துல் கலாம் மற்றும் சோனியா காந்தி என்ற பெயர்களில் வெறுப்புக் கூடிக்கொண்டே போகிறது. அதிலும் பின்னவருக்குப்  பின் இணைக்கப்பட்டிருக்கும் காந்தி என்ற பதத்திற்கு உள்ள  பொருள் இன்னும் கொச்சையாக உள்ளது. அது சம்பந்தப்பட்ட  நபரான மோகன் தாஸ் கரம் சந்தை ஞாபகப்படுத்துவதோடு, அது என்னை அவரை மகாத்மா என்றழைக்க கூச்சப்படவும் வைக்கிறது. ஆனால் பெயருக்கும் கவிதைக்கும் அறிக்கைக்கும் உளறலுக்கும் உள்ள வித்தியாசங்களை நானறிவேன் என்பதை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். மேலும் கூடங்குள அணு உலைக்கு செலவான தொகை 13,500 கோடிகள் என்பது ஸ்பெக்ட்ராம் கொள்ளையில் அடிக்கப்பட்டதைவிட மிகக் குறைவாகவே உள்ளது. ( estimated 2G scam value is 176,645 crore (US$ 39 billion) எனவே அய்யா அவர்கள் நிதி விவகாரங்களில் இந்தியாவுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதாலும், சம்பந்தப்பட்ட வழக்கில் தாங்கள் இணைந்திருப்பதாலும்...அது குறித்து உங்கள் மனந்திறந்த விளக்கத்தை அதே  பாளையங்கோட்டையில் வைத்து விளக்கினால் நான் மகிழ்வேன்.
அப்துல் கலாமென்ன ஒட்டுமொத்த மானுட அறிவுக்குமான அளவுகோலா ஐயா, அவருக்கு மட்டும் தான் அறிவியல் அறிவு இருக்கிறதா?    Dr. சாந்தா போன்றோர் அணு  சக்திக் கதிர்களால் புற்று நோய் வராது என்று சொல்வது எத்தனைப் பெரிய துரோகம் என்பதை வரலாறு சொல்லும். இப்படி சூதும் வாதும் செய்யும் நீங்கள், போபர்ஸ் ஊழல், 2ஜி ஸ்பெக்டரம் ஊழல், காமன் வெல்த் ஊழல் ஆகிய ஊழல்களில் பங்கு வகித்த உங்கள் கட்சியாளர்கள், தலைமைகள், RSS, பா.ஜ.கவினருக்கு  சுப. உதயகுமாரன் பற்றியும், கூடங்குள மக்களைப் பற்றியும் பேசுவதற்கான அறுகதை கிடையாது என்பதை குறித்துக்கொள்ளுங்கள். 
கலாமை விடவா இவர்கள் மக்களை நேசிக்கிறார்கள் என்று  நீங்கள் கேட்பதிலிருந்து மக்கள் அறிவற்றவர்கள், உங்கள் அடிமைகள் என்று உறுதி செய்ய விரும்புகிறீர்கள் என்பதை அறியமுடிகிறது....ஆனால் மக்கள் எல்லாக் காலத்திலும் மடையர்களாக இருப்பதில்லை, அவர்களுக்கு அறிவு வந்துவிட்டது என்பதால் ஐயமும், பதட்டமும் கொண்டே இப்படி பேசுகிறீர்கள் என்பது எங்களுக்கும் புரிகிறது.....கலாம் எங்கே மக்களை நேசிக்கிறார்.  அவர் தனக்கு கிடைக்கும் புகழாரங்களை நேசிக்கிறார்.  அவர் ஒரு அரசியல் பகடைக் காய் அவ்வளவுதான்...அவர் சொல்வதெல்லாம் மானுடம் வாழவேண்டும் என்ற நோக்கோடு அல்ல, மக்களையெல்லாம் கொன்று விட்டு, இயந்திரங்கள் மட்டும் நிறைந்த ஒரு வல்லரசு இந்தியாவை உருவாக்க வேண்டும், ‘இந்தியா’ வாழவேண்டும் என்பதற்காக மட்டும் தான். எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் அவர் தன்னைக் குழந்தைகள் பிரியர் என்று சொல்லிக் கொள்கிறார். அணுக்கதிர் வீச்சினால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும் என்ற கூறுணர்வின்றி பிதற்றிக் கொண்டிருக்கிறார். அதை எந்தக் கேள்வியும் இன்றி நீங்கள் சொல்வதாலேயே நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறீர்கள். கருத்துச் சுதந்திரம் என்று ஒன்று உள்ளதே அது பற்றி உங்களுக்குத் தெரியாதா ஐயா....உங்கள் கட்சிக்கெதிராக எதுவும் பேசமுடியாத அடிமையாக ஒருவேளை நீங்கள் இருக்கலாம்....மக்களாகிய நாங்களும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது ஐயா.
2G அலைக் கற்றை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உங்கள் வீட்டுக்கெல்லாம் ‘ரெயிட்’ ஏவப்படவில்லை, ஆனால் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வரும் ஒரு போராட்டக் குழுவினரின் மதப் பின்னணியை வேண்டுமென்றே பெரிது படுத்தி கிறித்தவ என்.ஜி.ஓக்களிடம் சோதனை நடைபெற்றது.  இவ்வளவு மோசமான ‘இந்துத்துவ’ ஒடுக்குமுறை நிலவும் ஒரு நாட்டில் அவர்கள் மதம் மாறியதால் மட்டுமே ஏதோ தப்பிப் பிழைத்தார்கள் என்று தான் சொல்வேன்.  இப்போராட்டத்தில் கிறித்தவர்கள் அல்லாதோரும், மத நம்பிக்கை அற்றோரும், மானுடத்தின் மீது, இயற்கை மீது அக்கறை கொண்டவர்கள் அணைவரும் இணைந்திருக்கிறார்கள் என்பதை ஏன் ஐயா மறைத்துப் பேசுகிறீர்கள். கீழ்த்தரமான மதச்சாயம் பூசுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ளுங்கள்.  13,500 கோடி முதலிடு போட்டாயிற்று என்று கூவுகிறீர்களே....யாரிடம் கேட்டு நீங்கள் முதலீட்டைப் போடுகிறீர்கள், மக்களிடம் அணுமதி பெற்றா ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறீர்கள்...அப்படியே மக்கள் மத்தியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினாலும் ‘எந்த மக்களிடம்’ அதை நடத்துவீர்கள் என்று நாங்கள் சொல்லவும் வேண்டுமா ஐயா?
மாட மாளிகைகளும், கார்ப்ரேட் நிறுவனங்களும், அந்நிய முதலாளிகளின் முதலீடும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மட்டும் தான் எதிர்காலம் என்று நீங்கள் சொல்கிறீர்கள், அப்பகுதி மக்களின் மேம்பாட்டுக்கு என்று சொல்லும் நீங்கள் அதை ஏற்கும் அல்லது மறுக்கும் உரிமையை ஏன் அப்பகுதி மக்களிடம் விடாமல் உங்கள் ஆட்சி அதிகார வலைக்குள்ளேயே வைத்திருக்கிறீர்கள் சிதம்பரம் ஐயா அவர்களே....
முடிந்தால் அறிவியல் பூர்வமான வாதங்களை வைத்து ஏதாவது பேசுங்கள், இல்லையேல் சொல்லுங்கள் உங்களுக்கு சில புத்தகங்களை நாங்கள் அணுப்பி வைக்கிறோம்.
இறுதியாக “நீங்கள் சொல்லும் ’எதிர்காலம்’  என்ற வார்த்தைகளில் எங்களுக்கான ’கல்லறைச் செங்கல்கள்’  எத்தனை உற்பத்தியாகிறது என்பதை நாங்கள் அறிவோம்”. 
இப்படிக்கு,
உங்கள் பாஷையில் சொல்வதானால்...
தேசத்துரோகி* கொற்றவை.

உதவிய நூல்கள் மற்றும் சுட்டி:
1. விடுதலைத் தழும்புகள் சு.போ. அகத்தியலிங்கம், தமிழ் புத்தகாலயம்
2.  ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள் எஸ்.வி. ராஜ துரை, அடையாளம்
3.  பா.ஜ.கவின் அணு ஆயுத சோதனையும், விளைவுகளும் தமிழில். சிங்கராயர், சவுத் விஷன்
4.  கூடங்குளம் அணுமின் திட்டம் (ஜனவரி, 2012) பூவுலகின் நன்பர்கள்
*  இந்திய ’தேசம்’ என்பது  இம்மண்ணில் பிறந்த அணைவருக்குமான இடம் என்பதை மறுக்கும் வகையில், அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளும் வெற்றுப் பொம்மையாய் இருப்பதை விட நியாயத்திற்காக குரல் கொடுக்கும் ‘துரோகி’யாய் இருப்பது சுயமரியாதை கூடிய ஒன்று. 



Feb 4, 2012

கூடங்குளம் அணுஉலை - அழிவின் விளிம்பில் மக்கள்



கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டம் – அழிவின் விளிம்பில் கூடங்குளம் மக்கள், (தமிழக கேரள மீனவர்கள் உட்பட) தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த விளம்புநிலை மக்கள் தன்னம்பிக்கையின் பிரதியாகவே எனக்கு காட்சியளிக்கின்றனர்.  127 பேர் காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய பின்னர் இந்த பிரச்சனை பெரும் கவனம் பெற்றிருப்பினும் இது இருபது வருட காலத்திற்கும் மேற்பட்ட போராட்டம் என்பதை நாம் அறிவோம்அணு உலையினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், ஏற்படவிருக்கும் பாதிப்பு குறித்தும் எண்ணற்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உலகெங்கும் தகவல்கள் பரவிக் கிடக்கின்றன. ஆகையால் அணு உலையின் பாதிப்பு குறித்து நான் பேசுவதைத் தாண்டி அம்மக்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்படுவதையும், அவமதிக்கப்படுவதையும் கண்டித்துப் பேசுவதை அவசியம் என்று கருதுகிறேன்.


படைப்பாற்றல் மிக்க எழுத்துக்களை நான் எழுதுவதில்லை, ஒரு எழுத்தாளர் என்ற அடிப்படையிலும் நான் இங்கு பேசவரவில்லை. இதை நான் சொல்லக் காரணம் உள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் களத்தில் நின்று அதிகாரத்திற்கெதிராக உறுதிப்பாட்டோடு அறவழியில் போராடி வருகிறார்கள், தன்னப்பிக்கையும், அறவுணர்வும் இம்மக்களை வழிநடத்துகிறது. சுப உதயகுமாரன், புஷ்பராயன் ஆகியோர் அம்மக்களுக்கு எத்தகைய அறிவியல் அறிவூட்டத்தை செய்திருக்கிறார்கள் என்பது கவனத்திற்குறியது. பாராட்டுக்கும் உறியது. அதேபோல் சமூக ஆர்வலர்கள் களப்பணிகளை செய்து பல்வேறு தகவல்களை அணு உலையின் பாதிப்புகள் குறித்தும், கூடங்குளம் மக்களின் உறுதிப்பாடு குறித்தும் எழுதி வந்திருக்கின்றனர். நான் வெறும் பார்வையாளராக இருந்து அவற்றை கவனித்து மட்டுமே வந்திருகிறேன். கிடைக்கபெற்ற தகவல்களை வைத்து நான் படைப்பாளர்கள் அரங்கில் பேசுவதென்பது எனக்கு ஒரு குற்ற உணர்வை எழுப்புகிறது.... ஆனால் அம்மக்களின் போராட்டத்தில் நியாயம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வதற்கான ஒரு வாய்ப்பாய் இதை நான் பயன்படுத்திக்கொள்கிறேன்அத்தோடு அம்மக்களையும், அப்போராட்டக் குழுவினரையும் கொச்சை படுத்தும் தினமலர் பத்திரிகையின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.   ’பார்ப்பன இந்துத்துவ’ பத்திரிகையின் பார்வை இப்படி இருக்கிறதென்றால், மதச்சார்பற்ற மத்திய அரசு போராட்டம் நடத்துவதற்கு அந்நிய சக்திகள் உதவுகின்றன என்று கூறி ‘ரெயிடுகளை’ நடத்துகிறது, பரம எதிரிகளாக இருந்தாலும் பரவாயில்லை எப்படியாவது கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு களங்கம் கற்பித்தே தீருவோம் என்று இவ்விசயத்தில் பாஜாகவுடன்  சேர்ந்து கொண்டு மதச்சாயம் பூசுகிறது. ஜனநாயகத்திற்கும், அறவழிப்போராட்டத்திற்கும் இதை விட ஒரு பெரும் அவமதிப்பை நிகழ்த்திவிட முடியாது. அச்செயலை ஏவிவிட்ட மத்திய அரசும், அவர்களின் சேவகர்களும் தங்கள் அதிகார அங்கியை சிறிது நேரம் கழற்றி வைத்துவிட்டு, மனசாட்சிக்குட்பட்டு அவர்களது இச்செயலை சுயவிமர்சனம் செய்து பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

போராட்டக் குழுவினருக்கு பலவகைகளில் நெருக்கடி கொடுத்துள்ளனர், தாங்கள் கட்டவிழ்த்துவிட்ட பொய்க்கு ஆதாரம் சேர்க்கும் பதட்டத்தில் அங்கு சுற்று வட்டாரத்தில் உள்ள கிறித்தவ என் ஜி ஓக்களிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது கணக்கில் 2 ரூபாய் குறைகிறது என்று 1.ரூபாய் வட்டியும்,  24 ரூபாய் குறைகிறது என்று 11 ரூபாய் வட்டியும் கட்டச்சொன்னதும், தூத்துக்குடி தேவாலயத்தின் பிஷப் யுவனுக்கு நோட்டீஸ் அணுப்பியதையும் என்னவென்று சொல்வது. ’இந்துத்துவ’ பிடிப்பு எதெற்கெல்லாம் துணை நிற்கிறது பாருங்கள்.  

People’s Movement Against Nuclear Energy, அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கம் எனும் அமைப்பினர் வெளிப்படையாகவே செயல்படுகின்றனர், கணக்குகளை காட்டி வருகின்றனர்.  300 பெண்கள் வரை தினமும் காலை முதல் மதியம் 6 மணி வரை போராட்ட கூரையின் கீழ் ஒன்று கூடி உண்ணாவிரதம் கடைபிடிக்கின்றனர். இடிந்தகரை மீனவர்கள் புதன்கிழமைகளில் நடக்கும் மீன் விற்பனையிலிருந்து 10%  உதவித் தொகையாக அளித்துவருகின்றனர், மற்றபடி இயக்கங்கள் சில நன்கொடைகள் தருகின்றன. மாணவர்கள் கிராமங்களில் சென்று நன்கொடை வசூலிக்கின்றனர்போராட்ட அமர்வுக்காக கீற்று அமைக்க இடிந்தகரை மீனவக் கிராமத்திலும் , கூடங்குளம் மக்களிடமும் ஒவ்வொரு குடும்ப்பத்தினர் விகிதம் தலா 200 ரூபாய் வசூலிக்கப்பட்டது, அங்குள்ள முருகன் கோயில் மற்றும் சர்ச்சுகளுக்கு சொந்தமான ஒலி பெருக்கிகளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் , ஆண்கள் வேலைக்கு செல்கிறார்கள், பெண்கள் போராட்டக் கூரையின் கீழ் ஒன்றிணைந்து அமர்கிறார்கள். இதில் என்ன பெரிய சமூக விரோதப் போக்கிருக்கிறது, சதி இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.

கூடங்குளம் மக்களின் அறவழிப் போராட்டத்தை குலைக்க, வன்முறையை தூண்டி விட பல்வேறு முயற்சிகளை செய்து பார்த்தது இந்து முன்னணி. காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரும் அதில் பங்கு கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.   ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன் பேசிய இந்து முன்னணி இளங்கோவன் அர்த்தமற்ற, ஆதாரமற்ற வாதங்களை வைத்தார். பெண்களால் தான் அங்கு பிரச்சனை வலுத்தது என்று பொருள் படும் வகையில் பேசினார். பெண்களின் பங்களிப்பே இப்போராட்டத்தின் பலம்.....அப்பெண்களின் உறுதிப்பாடு சமூக மேம்பாட்டிற்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கும் ஒன்றாக இருக்கிறதுபெண்கள் சமூகப் பங்களிப்பு செய்வதையும், போராடுவதையும், பெண்களை இணைத்துக் கொண்டு போராடும் சமத்துவ அமைப்புகளையும் மதவாதிகளால், முதலாளித்துவத்திற்கு துணை நிற்கும் அரசு அமைப்புகளால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் இவர்களின் இந்த ‘சிறுபிள்ளைத்தனமான, கோழைத்தனமான’ பேச்சு. இத்தருணத்தில் எனக்கொரு கேள்வி எழுகிறது, இந்துத்துவ மடங்கள் எங்கிருந்து பணம் பெருகின்றன? வெளிநாட்டு வாழ் 'இந்து' இந்தியர்களிடம் பெற்ற நன்கொடைகள் அணைத்தும் நேர்மையான முறையில் ஈட்டப்பட்ட பணம் தானா? கிறத்தவர்களிடம் பணம் பெறுவதே இல்லையா....தங்கள் சொத்துக்களையெல்லாம் எழுதித் தந்து விட்டு இந்து' ஆன்மீக மடங்களில் இணைந்த வெள்ளைக்காரர்கள் யாரும் கிறித்தவர்கள் இல்லையோ???

இப்போராட்டத்தை ஒடுக்க நிணைக்கும் அதிகார வர்க்கத்தினரிடம் மற்றொரு கூடுதல் தகவலையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கூடங்குளம், இடிந்தகரை மற்றும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் சுற்றுவட்டார மக்கள் ‘மடமை’யிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள், சரியான முறையில் அரசியல் படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அறிவியல் அறிவு ஊட்டப்பட்டிருக்கிறது, அதனால் அவர்கள் தங்கள் முழு அறிவோடும், சுயநிணைவோடுமே PMANE யுடன் துணை நிற்கிறார்கள். மத்திய அரசு வல்லுனர் குழுவின் அறிவுப் பின்புலத்தையும், கடலறிப்பு பற்றிய அறியாமை குறித்தும், அவர்கள் புறக்கணிக்கும் நிலவியல் ஆயுவ்கள் குறித்தும் நமக்கு பல்வேறு ஆய்வுத்தகவல்கள் கிட்டியுள்ளன. மத்திய அரசு அமைத்த வல்லுனர் குழு அறிந்திராத பல தகவல்களை அப் பெண்கள் அறிந்து வைத்திருப்பார்கள் என்பதை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பெண்களை முறையாக அரசியல்மயப் படுத்தி, அறிவூட்டி அவர்களை இணைத்துப் போராடும் போராட்டக் குழுவினரை, அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அவர்களது கணவன்மார்கள், குடும்பதார் ஆகியோரை பாராட்டாமல் இருக்க முடியாது

1988ல் சோவியத் அதிபர் மிக்கைல் கார்ப்பச்சேவ் மற்றும் அப்போதையப் பிரதமர் ராஜீவ் காந்தி கூடங்குளத்தில் அணுசக்தி உற்பித்திக்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்ட காலம் தொடங்கி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வந்திருக்கின்றன.  பேச்சிப்பாரை நீரமைப்பிலிருந்து நீர் எடுக்கப்படும், கழிவு நீர் கடலில் கலக்கப்படும் எனும் அறிவிப்பை ஒட்டி 1989லேயே 10,000 மக்கள் தேசிய மீனவர் தொழிலாளர் சங்கம் (National Fish workers union) எனும் அமைப்பின் கீழ் ஒன்றுகூடி போராடினர்.  அப்போது பெரும் கலவரங்கள் நடந்தது. இந்த 20 வருட எதிர்ப்பின் பின்னணியில் மத்திய அரசு பல விசயங்களை மூடி மறைக்கிறதுமுதலீட்டியத்தைப் பெருக்கிக் கொள்ளவும், உலகமயமாக்கல் சூழலில் பொருளாதார வளர்ச்சி 8 – 9% என்று பெருமை பாடுவதற்குமான இது போன்ற திட்டங்களில் வழக்கமாக சொல்லப்படும் வேலை வாய்ப்பு, மேம்பட்ட வாழ்க்கை முறை, வாழ்வாதார உயர்வு ஆகியவை நடைமுறைப்படுத்தப்படாமல் விளிம்புநிலை மக்கள், பழங்குடியினர் வாழ்வும், கிராமப்புரங்களும் சிதைவுறுவதைப் போலவே, கூடங்குளத்திலும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. தொழிலதிபர் சிலருக்கு தெருவிளக்கு பொருத்துவது, உலைக்கூடத்திற்கு நடைபாதை போடுவது போன்ற ஒப்பந்த வேலைகள்  கிடைத்தனகொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அணைத்தும் பொய்யான கதைகள் என்பதை அறிந்த அம்மக்கள் 2001ல் அணுசக்திக்கெதிரான மக்கள் அமைப்பின் கீழ் ஒன்றிணைந்தனர் என்பதை இங்கு நாம் நிணைவில் கொள்ள வேண்டியுள்ளது. அரச விஞ்ஞானிகள், அப்துல் கலாம், ஆட்சியாளர்கள், இந்து முன்னணி, தினமலர் இவர்களின் ‘சுயநல’வாத பேச்சுக்களை பொது மக்கள் புறந்தள்ள வேண்டும்

இங்கு மக்களுக்கு புத்தியுறைக்கும் அரச விஞ்ஞானிகளும் அரச அறிஞர்களும் கல்வி என்ற ஒன்றை எந்த பதத்தில் அழைக்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனாலொன்ரை உறுதியாகச் சொல்லமுடியும். அது அரசிற்கு சேவை செய்யும் ஒரு அடிமையின் மூளையை குறிவைக்கும் ஒரு பொறி அவ்வளவே. ஒவ்வொரு அரசும்  கல்வியை மக்களின் சொத்தென்றழைக்கிறது. அரசு தன் அதிகாரத்தை, அதிகாரம் எனும் அந்த சொத்தை பாதுக்காகவே கல்வியை ஒரு ஆயுதமாக கொள்கிறது. அதன்  பார்வையில் கல்வி என்பது அரசுக்கு சேவகம் செய்யும் ஒரு அமைப்பே தவிர கல்வி என்ற பரந்து பட்ட அர்த்தத் தளத்தில் அது இல்லை. அரசின் விதிக்கப்பட்ட வரைமுறைகளைக் கொண்ட கல்வி என்ற ஒன்றை கற்ற அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் ஊழலில் திளைப்பதும், அராஜகத்திற்கு உறுதுணையாகவும் இருப்பதைப் பார்க்கும் பொழுது இக்கல்வி முறையில் எனக்கு சந்தேகம் வருகிறது. கல்வி என்பது வெறும் மூளைச் செயல் பாட்டோடு ஒரு வெற்று உறுப்பைப் (appendicitis)  போல் துருத்திக்கொண்டு இருக்கிறது. பண்பையும், சமத்துவத்தையும், மேலும் தானும் சமூகத்தில் எளிய மனிதர்களைப் போல் ஒரு மனிதன் என்ற ஒரு புரிதலை, அரசு சார் கல்வி வழங்குவதேயில்லை. மக்கள் தாங்கள் சார்ந்த நலன் ஒன்றை, அதன்  அணுபவத்தை, அழிவிலிருந்து மீள்வதை முன் வைத்தால் இவ்வரசும், அரசு சார் அறிஞர்களும் அவர்களுக்கு புரியுமாறு சொல்லுங்கள் என்று கூவுகிறது. இதே அறிஞர்கள்தான் கையூட்டை பல வழிகளிலும் வாங்குகிறார்கள். இது ஏன்.   அரசு வழங்கும் கல்வி என்பது ஒரு பெரும் ஒடுக்குமுறை. கல்விக்கூடங்கள் என்பது அதிகாரத்திற்கு  சேவகம் செய்யும் அடிமைகளை உருவாக்கும் ஒரு கூடம்.... அவ்வளவே... சமூக மேம்பாட்டிற்கான, சமத்துவத்தை வலியுறுத்தும் மாற்று அறிவைத் தேடிக் கற்றவர்கள், மக்கள் மத்தியில் அதைப் பரப்புரை செய்பவர்கள் 'துரோகிகள்'.  

அணு உலைகளால் ஆபத்து இல்லையென்றால் ஏன் பல்வேறு நாடுகள் அவ்வுலைகளை முடிவருகின்றன? நம் நாட்டில் கூட மேற்குவங்கத்தில் ஹரிபூரில் இருந்த அணு உலை ஏன் மூடப்பட்டது. ப்போதுவரை மேற்கு வங்கத்தில் அணு உலைகள் கூடாது எனும் நிலைப்பாட்டைத்தான் மம்தா பேனர்ஜி கொண்டுள்ளார்.  தமிழகத்தின் இப்போதைய முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களும் கூடங்குளத்தில் மக்களின் அச்சம் போக்கப்படும் வரை அணுமின் நிலையத்தின் பணிகளை முடக்கி வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றியிருக்கிறார்.  ‘அரசியல்’ விளையாட்டுகளுக்கும், இந்துத்துவ வெறிக்கும், அந்நிய முதலீட்டியத்தின் பெருக்கத்திற்கும், போட்டுவிட்ட ஒப்பந்தங்களுக்காகவும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் குலைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. போராட்டக்குழுவினரின் மீது அவதூறுகள் சுமத்துது, அதற்கு மதச்சாயம் பூசுவது, அறவழிப் போராட்டத்தினை ஒடுக்கி வன்முறையை தூண்டும் முயற்சிகள் ஆகியவை  கண்டனத்துக்குறியவைவிளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை மேம்பாட்டில், சுற்றுச் சூழல் மாசுக்கட்டுப்பாட்டில் அக்கறையுடைவர்களாக  அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்திற்கும், அம்மக்களுக்கும் நானும் எனது ஆதரவை பதிவு செய்கிறேன்.   

இயற்கைவிரோத திட்டங்களை அறிவிக்கும் அரசு, தங்களுக்கு தோன்றும்போது மட்டும் அரசை விமர்சிக்கும் எதிர்கட்சிகள், அவர்களின் எல்லா பரப்புரைகளையும் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளும் அரசு அதிகாரிகள், சேவகர்கள் அணைவரும் நேர்மையானவர்கள், சந்தேகத்திற்கப்பார்பட்டவர்கள், ஆனால் வாழ்வாதாரம் பரிபோகிறது, இத்திட்டம் இயற்கையை, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஒன்று, உயிர்கொல்லி திட்டம் என்பதை அறிவியல் பூர்வமான தரவுகளை வைத்து அறவழியில் போராடும் மக்கள் சமூக விரோதிகள், துரோகிகள்...மெய்சிலிர்க்கிறது எனக்கு. வாழ்க ஜனநாயகம்!   இனியாவது பொதுமக்கள் யார் ‘சமூக விரோதிகள்’ என்பதை சரியாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டு

இக்கூட்டட்தை ஒருங்கிணைத்த அணுசக்திக்கெதிரான படைப்பாளிகள் இயக்கம், savetamils.org மற்றும் எனுக்கு அழைப்புவிடுத்த சந்திரா தங்கராஜ் ஆகியோருக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.. நன்றி வணக்கம்....
(4.2.2012 அன்று சென்னை லயோலா கல்லூரியில், அணு உலைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நான் பேசியது - http://www.youtube.com/watch?v=3quyl8cmNhQ )