Showing posts with label பெண்ணியக் கவிதை. Show all posts
Showing posts with label பெண்ணியக் கவிதை. Show all posts

Jan 19, 2012

மாதுளை வனம்




தளவாடங்கள் அறிவதில்லை
அறியப்போவதேயில்லை
கனவுகளின் வெப்பத்தை
துளைக்கும் பணியை அவை மிக நேர்த்தியாகவே செய்கின்றன

படைப்பின் பொருட்டு விலங்கிடப்பட்ட பிராணிகள்
கால்களை இழுத்தபடி
அழுகிய புண்களைச் சுவைத்தபடி
சாத்தான்களை அடையாளம் காட்டத் துவங்கிவிட்டது
உடல்களிலிருந்து
கிழிந்து தொங்குகிறது அர்த்தங்கள்

காலம் ஆணாயிருக்கிறது
எச்சரிக்கையாயிருக்கிறது
அதுவே
கற்பிதமாயும் இருக்கிறது

பிடுங்கி எறியப்பட்ட மாதுளையை
அதெனா* கையில் எடுக்கிறாள்
அர்த்தங்கள் எரியூட்டப்பட்டன
வழியும் உதிரச் சொட்டுக்களை
நட்டுவைக்கிறாள்
இவ்வுலகெங்கும் வேர்விட

ஆம்...
எரியப்படும் கற்களுக்காக
ஆவலாய் காத்திருக்க வேண்டியதிருக்கிறது
தோன்றுவது சிற்றலைகளே..
சிற்றலைகள் எங்கும் உடைவதில்லை
சுழன்று கொண்டே தெளியும்
கற்களை
மிக சமாதானமாய்
ஆறுதலாய்
அது விரும்பாதவண்ணம்
உள்ளிழுத்துக்கொண்டு....

அதுவோர்
பெயரற்ற சமாதி.

  *அதெனா கிரேக்க பெண் தெய்வம்.


(புது எழுத்து (20th issue) இதழில் வெளிவந்துள்ள கவிதை)

Dec 29, 2011

எம் தாயைப் புணர்ந்துக் கொண்டிருப்பவன்



அவனை நான் நன்கு அறிவேன்
அவன்
ன்
வெகு காலமாய் எம் தாயைப் புணர்ந்துக் கொண்டிருப்பவன்
தோட்டத்தில் அவள் ஈரத்துடன் நட்ட விதைகளைப்
பிடுங்கியவன்
சூரியக் கதிர்களை லிங்கமென சித்திரம்
தீட்டியவன்
அவளது
கருப்பையை முதலீடாக்கியவன்
ஸ்கலித எச்சிலை குறியீடுகளென
கோட்டைகளில் கொடியேற்றியவன்
உடல்களைச் செங்கலாக்கி கட்டிய
மாளிகைக்குள்
தன் நாற்காலியை மரத்த விரல்களால் இறுகப்பற்றிக் கொண்டு
அவளது யோனியை மேய்ச்சல் நிலமென்றாக்கியவன்

அவன்

நெற்கதிர்களுக்கு செந்நீராய் தெளிக்கப்பட்ட
தூமையை
கழிவென்றவன்

பால் வார்த்த முலைகளுக்கு
வரிகளை சுமத்தியவன்
காக்கும் எம் அம்மையை
வைசூரி
நீலி
என்று பயம் காட்டியவன்

தர்ம சூத்திரம் எழுதி
பெண் உடலுக்கு தீட்டறிவித்தவன்
இயலாத
தந்தைக்கு
தூமையை குடிக்கும் விதி விதித்தவன்

அவனே
ஆம்
அவன்
அவனேதான்

தற்போது
எம் தாய்களை
பெண்களை
சகோதரிகளை
குழந்தைகளை
மற்றும் அவர்களை
வரலாறெங்கும் புணர்ந்து கொண்டிருப்பவன்