அவனை நான் நன்கு அறிவேன்
அவன்
அ
வ
ன்
வெகு காலமாய் எம் தாயைப் புணர்ந்துக் கொண்டிருப்பவன்
தோட்டத்தில் அவள் ஈரத்துடன் நட்ட விதைகளைப்
பிடுங்கியவன்
சூரியக் கதிர்களை லிங்கமென சித்திரம்
தீட்டியவன்
அவளது
கருப்பையை முதலீடாக்கியவன்
ஸ்கலித எச்சிலை குறியீடுகளென
கோட்டைகளில் கொடியேற்றியவன்
உடல்களைச் செங்கலாக்கி கட்டிய
மாளிகைக்குள்
தன் நாற்காலியை மரத்த விரல்களால் இறுகப்பற்றிக் கொண்டு
அவளது யோனியை மேய்ச்சல் நிலமென்றாக்கியவன்
அவன்
நெற்கதிர்களுக்கு செந்நீராய் தெளிக்கப்பட்ட
தூமையை
கழிவென்றவன்
பால் வார்த்த முலைகளுக்கு
வரிகளை சுமத்தியவன்
காக்கும் எம் அம்மையை
வைசூரி
நீலி
என்று பயம் காட்டியவன்
தர்ம சூத்திரம் எழுதி
பெண் உடலுக்கு தீட்டறிவித்தவன்
இயலாத
தந்தைக்கு
தூமையை குடிக்கும் விதி விதித்தவன்
அவனே
ஆம்
அவன்
அவனேதான்
தற்போது
எம் தாய்களை
பெண்களை
சகோதரிகளை
குழந்தைகளை
மற்றும் அவர்களை
வரலாறெங்கும் புணர்ந்து கொண்டிருப்பவன்.
