Showing posts with label தொலைக்காட்சி. Show all posts
Showing posts with label தொலைக்காட்சி. Show all posts

Dec 8, 2010

ஊடக முதலாளிகளுக்கு ஓர் வேண்டுகோள்,


இக் கடிதத்தை ஓர் கேள்வியுடன் தொடங்கவேண்டியுள்ளது. தொலைக்காட்சி என்ற மாபெரும் ஊடகத்தைக் கொண்டு நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் என்ற சுயநினைவோடு, உணர்ந்துதான் செய்கிறீர்களா? உங்கள் வெற்றியின் அளவுகோலை அளக்கும் T.R.P  என்ற ஒரு முறை இருப்பது போல் உங்கள் சேவைகளின் மதிப்பையும் அது சமூகத்தில் விதைக்கும் சிந்தனைகளையும் அதன் மூலம் நடக்கும் சீர்கேடுகளையும் அளக்கும் முறை என்று ஒன்றிருந்தால் உங்கள் துரோகங்களின் எண்ணிக்கையையும் கணக்கிடலாம். குறிப்பாக குழந்தைகளையும், பெண்களையும் நீங்கள் சந்தைப் படுத்துவது சொல்லக் கூசும் அளவுக்கு மிக மிக ஆபாசமாக உள்ளது.

எங்கள் குழந்தைகள் உங்கள் விற்பனைப் பொருள் ஆக்கப்படுவதைக் கண்டு அச்சுறும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.  தயவு செய்து குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதியுங்கள்.  உங்கள் காமிராவின் கோரப் பற்கள் புகழுக்கான ஆசையை  அவர்கள் மீது மென்று துப்பி அவர்கள் பண்புகளை, குழந்தமையை, சமத்துவத்தை பிடுங்கிச் செல்வது மிகுந்த வேதனையை அளிக்கிறது.   குழந்தைகளின் திறமைகளுக்கான நிகழ்ச்சி என்பதில் சினமாவைப் பிரதி எடுக்கும் நிகழ்ச்சிகளே தலையானதாய் உள்ளது, இப்போக்கு குழந்தைகள் மத்தியில் திறமைப் பற்றிய தவறான புரிதலை விதைக்கிறது.  புகழ் என்றாலே அது திரைத்துறையின் வாயிலாகத் தான் கிடைக்கும் என்று கற்றுத்தருகிறது. அப்புகழுக்காக தங்களை எவ்வகையிலும் பணையம் வைக்க ஐந்திலேயே அவர்களைத் தயார் செய்வது சமுதாய எதிர்காலத்திற்கு பெறும் கேடு என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

புகழை முன் நிறுத்தும் போட்டி நிகழ்ச்சிகளினால் மற்ற குழந்தைகளுக்கு (பெற்றோர்களுக்கும்)  ஏற்படும் உளவியல் சிக்கல்களைப் பற்றி சிந்திக்கும் நேரம் உங்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.  இசை, நடனம் இவைகளை கற்ற குழந்தைகள் மட்டுமே திறமைக் கொண்டவர்கள் என்ற உங்களது தவறான சித்தரிப்பினால் இன்று ஒவ்வொரு குழந்தையும் கல்விப் படிப்போடு சேர்த்து மற்றப் படிப்புகளைக்  (Extra-curricular activities)  கற்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். உடற்பயிற்சிக்கான விளையாட்டுகள், அறிவு விரிவாக்கத்திற்கான அறிவியல் பயிற்ச்சிகளை விட இசையும் நடனமுமே முதன்மை பெறுகின்றன உங்கள் தயவால்.  குழத்தை 5 வயது எட்டியவுடன் பாட்டு, நடன வகுப்பில் சேர்க்கப்படுகிறார்கள், பின்பு 6 அல்லது 7 வயதில் தொலைக்காட்சிக்கு நேர்ந்து விடப்படுகிறார்கள். 

மூன்று வேளை உணவுக்கு வருடக்கணக்காக உத்தரவாதம் இருப்பவர்களே இது போன்ற துறைகளை தேடிக் கற்கின்றனர். மேலும் இத்திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு பெரும்பாலும் பார்ப்பனியக் குழந்தைகளுக்கே அமைகிறது, ஆம் இசையும், நடனமும் அவர்களின் பிடியில்தானே இருக்கிறது. பார்பனியர் வகுத்த வர்ண பேதத்தை பறை சாற்றும் உங்கள் நற்பணிக்கு முதலாளிகளின் ஆதரவு கிட்டுவதில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. பார்பனியரல்லாத குழந்தைகளும் இசையும் நடனமும் கற்றுக்கொள்வதாக நீங்கள் சொல்ல்லாம், அவர்கள் முதலாளிகளின் பிள்ளைகள் அங்கு பொருளாதாரம் பார்ப்பனியக் கலையை விலை பேசிவிடும்.  ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகளின் திறமைகளுக்கான சந்தை உங்களிடத்தில் உண்டா சகோதரர்களே? அப்படியே அவர்களுக்கான நிகழ்சிகளை ஒளிபரப்பினாலும் அவர்கள் மீது பரிதாபத்தை ஏற்படுத்திவிடுவீர்கள் அல்லது அவற்றை வைத்து விளம்பரம் தேடுவீர்கள்.( நீங்கள் வெளியிடும் விளம்பரங்களில் அம்மாக்கள், பெண்கள், குழந்தைகள், ஆண்கள் யாரும் கருப்பு நிறமாய் இருந்ததேயில்லை, இருப்பின், வேலைக்காரி, மற்றும் உதிரித்தொழில் செய்வோர், இவர்கள்தான் இங்கு சமுதாயமாக இருக்கிறார்கள் இவர்கள்முந்தான் நீங்கள் உங்கள் கலாச்சாரத்தை விதைக்கிறீர்கள்)

திறமைகளுக்கான மேடை என்றால் ஏன் இவ்வளவு ஆர்பாட்டம், மாறுவேடப் போட்டி போன்ற ஒப்பனைகள்? பாடல்களுக்கேற்ப ஒப்பனைகள் என்ற பெயரில் குழந்தைகளுக்கு நீங்கள் தரும் உடைகள் எது போன்றவை. நடிகைகளின் மார்புகளையும், தொப்புளையும் சுரண்டிப் பிழைக்கும் பிழைப்பு போதாதென்று பெண் குழந்தைகளின் மார்புகளையும், தொப்புளையும் குறி வைக்கிறீர்கள்.  பாடலுக்கேற்ற பாவம் என்ற பெயரில் ஆண் சிறுவனைப் பார்த்து பெண் சிறுமி பாடல் வரிகளுக்கேற்ற பார்வைய செலுத்துவது திறமையை வளர்கிறதா பால் உணர்வை வளர்கிறதா என்று பரப்பரப்பை உண்டாக்க நீங்கள் ஒளிபரப்பும் slow motion முன்னோட்டக் காட்சிகளைப்போல குழந்தைகளின் பாவங்களை ஓட்டிப் பாருங்கள். உங்கள் கண் முன் படுக்கை அறை விரிவதை கண்டுணர்வீர்கள்.

ஆணாதிக்கச் சமூகத்தில், ஆணாதிக்க திரைப்படங்களையே எதிர்பார்க்க முடியும். ஆணாதிக்க சிந்தனையோடு எழுதப்பட்ட ஆபாசமான இரட்டை அர்த்தப் பாடலை போட்டிக்காக குழந்தைகள் திரும்ப திரும்ப பாடி மனப்பாடம் செய்யும் பொழுது பெண் பற்றிய எத்தகைய மனப்போக்கை ஆண் குழந்தைகளுக்குள் நீங்கள் வளர்த்துவிடுகிறீர்கள்? “வாடா வாடா பைய்யா என் வாசல் வந்துப் போடா”, “நீ மாசத்துல 3 நாளு எங்க போயி படுப்ப” போன்ற வரிகளின் அர்த்தம் தங்களுக்கும் புரியும் தானே? (இத்தருணத்தில் ஓர் ஐயத்தை கேட்கவேண்டும் இது போன்ற நிகழ்சிகளில் உங்கள் குழந்தைகளோ, உங்கள் குடும்பத்தாரின் குழந்தைகளோ, உங்கள் ஊழியரின் குழந்தைகளோ, நடுவர்களின் குழந்தைகளோ பங்கு பெறுகிறார்களா, அவர்கள் இவ்வரிகளை அதே பாவனையோடு மற்றவரின் நிகழ்சிகளில் பாடுவதுண்டா, ஆடுவதுண்டா?)

குழந்தைகளை இப்பொழுது. 2வயதிலிருந்தே பலாத்காரம் செய்கிறார்கள். யோசித்துப்பாருங்கள்.  ஆணாதிக்க படைப்புகள், ஆணாதிக்க சமூக அமைப்பு இப்பொழுது அதோடு சேர்து உங்கள் தொலைக்காட்சி நிகழ்சிகளும்.  விளம்பரம் என்ற பெயரில் முலைகளை பிதுக்கிக் காட்டி சுவரொட்டிகளை தெருவெல்லாம் ஒட்டி, இதழ்களின் அட்டைப்படங்களில் போட்டுப் போட்டு சமூகத்தில் கற்பழிப்புகளின் எண்ணிக்கையை வளர்க்க அன்றாடம் பாடுபடும் உங்கள் பணி அளவிடற்கறியது. இப்பொழுது சிறுமிகளையும் அப்பட்டியலில் சேர்க்க உதவிய உங்கள் நல்லெண்ணங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.  

உங்களிடம் நான் வேண்டுவதெல்லாம், நுகர்வு கலாச்சர அடிமைகளாகவும், பணம் புகழிற்கு அடிமைகளாகவும் எங்கள் குழந்தைகளை உருமாற்றம் செய்யாதீர்கள்.  உண்மையிலேயே திறமைகளுக்கான மேடை அமைத்துத் தருவதில் உங்களுக்கு அளவிட முடியாத ஆசை இருப்பின் சினிமாவின் பிரதி எடுக்கும் நிகழ்சியாக அல்லாமல், குழந்தைகள் குழந்தைகளாக இருக்க அனுமதிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புங்கள். முடிந்தால் குழந்தைகளை ஊடகத்திலிருந்து ஒதுக்கி விடுங்கள் அவர்கள் காண வேண்டிய உலகம் அரியது அதை ஓர் அறைக்குகள் (சினிமாவிற்குள்) அடைக்க நினைக்காதீர்கள்.

இசை, நடனத்திற்கான நிகழ்ச்சி நடத்தித்தான் நீங்கள் பிழைப்பு நடத்த வேண்டியிருந்தால், போட்டியல்லாத நிகழ்ச்சியாக நடத்துங்கள். அடிப்படைத் தேர்வுகளை திரை மறைவில் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான (பெரியவர்களுக்கும் கூட) சமமான ஓர் மேடையை அமைத்துக்கொடுங்கள்.  நடுவர்கள், ஆசிரியர்களாக செயல்பட்டு திறைமறைவில் அவர்களுக்கான வழிமுறைகளை வழங்கட்டும்.   பரபரப்பான முன்னோட்டங்கள், ஓட்டு வேட்டை, சுவரொட்டி வேட்டைகளை தடுத்து ஓர் ஆரோக்கியமான நிலை உருவாக அது உதவும்.  போட்டிகள் நிலவினால்தான் திறமைகள் வளரும் என்ற முதலாளித்துவ அரசியலை குழந்தைகளிடம் செயல்படுத்தாதீர்கள். பணம், அங்கீகாரம், புகழ் இவையெல்லாம கொண்டவரே வாழ்வதற்கான தகுதி பெற்றவர் என்று நீங்கள் பல்லாயிரம் வருடங்களாக முன்னிறுத்திவருகிறீர்கள். அவ்வரசியல் நீங்கள் மேலும் மேலும் உங்கள் பொருளாதாரத்தை வளர்க்கவும், பண்பற்ற குணமற்ற சமுதாயத்தை வளர்க்கவும் மட்டுமே உதவுகிறது.  இதுவரை  ஆண்களை, குடும்ப உறவுகளை சுயநலமிக்க உங்கள் முதலாளித்துவ அரசியல் ஆட்டிப்படைத்தது, அதன் அடுத்த குறி பெண்கள், குழந்தைகள்.

உங்களை எதிர்த்து நீதித்துறையை அனுகலாம்தான் அதற்கான பொருளாதார சூழலும், அரசியல் பலமும் எங்களைப் போன்ற எளியவர்களிடத்தில் இல்லை. அது பயன் தரப்போவதுமில்லை.  அப்படியே எதிர்க்கப்பட்ட வழக்கிலும் கூட குழந்தைகள் தங்கள் விருப்பத்தின் பேரில் பங்கேற்பதை குழந்தை ஊதியம் என்று கருத முடியாது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுளது. ஒருவேளை குழந்தைகள் தங்கள் விருப்பத்தோடு உடலை விற்க துணிந்தாலும் சட்டம் இப்படித்தான் பார்த்துக்கொண்டிருக்கும் போலிருக்கிறது.

முதலாளிகள் ஊடகங்கள் மூலம் சந்தைப்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் பணம் படைத்தவர்களுக்கே, ஆகவே நீங்களும் அவர்களின் இலக்கான படிநிலைக்குடும்பங்களின் பிள்ளைகளை பயன்படுத்தி சாமர்தியமாக பல நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள். அதே வேளையில் இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் உண்மை நிகழ்ச்சிகளின் மூலம் கிராமங்களை மூடநம்பிக்கையின் சின்னமாக காண்பிக்கிறீர்கள்.

உன்மையில் குழந்தைகளுக்கான சமூக அறிவை ஏற்படுத்த நீங்களும் உங்கள் விளம்பர நிறுவனங்களும் துடிப்பீர்களானால் பின்தங்கிய கிராமங்களில் இருக்கும் அரசாங்கப் பள்ளிகளை சீரமைக்கும் முயற்ச்சிகளை மேற்கொள்ள முடியுமா? முடிந்தால் நகரப்  பிள்ளைகளை அச்சீரமைக்கும் பணிகளுக்கு அழைத்து சென்று அவர்களையும் அதில் பங்கு பெற செய்யுங்கள். எங்கள் பிள்ளைகள் ஒடுக்கப்பட்ட பிள்ளைகளின் நிலையையும், பார்ப்பனியம் தன் குல, வர்ண, வர்க்கப் பேதத்தால் செய்த கொடுமைகளையும் கண்டுணரட்டும்.

பாடதிட்டத்தில் கற்றுத்தரப்படும் வரலாற்றுப்பாடங்கள் ஆதிக்க வர்க்கத்திற்கு துதி பாடும் (வடிகட்டப்பட்ட) வரலாறு. உண்மைகளைத் தெரிந்துக்கொள்ள அவர்களுக்கு உதவும் வகையில் களப்பணியாளர்களையும், மறைக்கப்பட்ட வரலாற்றை கற்றுணர்ந்த மேதைகளையும் பயன்படுத்தி வகுப்பறைக்கு அப்பாற்பட்ட கல்வியை போதிக்கும் நிகழ்ச்சிகள் ஏதாவது நடத்த முடியுமா?

தற்போதைய அரசியல் சூழலில் எதிர்காலும் குறித்து முற்றிலும் நம்பிக்கை இழந்து போய் இருக்கும் எங்களின் கடைசி நம்பிக்கை குழந்தைகள் (எதிர்காலத் தூண்கள் !!) அவர்களையும் பெரியவர்களாக்கி பிரிவினைகளையும், முதலாளித்துவ படிநிலைகளையும் மேலும் மேலும் வளர்த்து சமூக சீரழிவிற்கு நீங்கள் துணைபோவதை யோசித்துப் பாருங்களேன்.

நீங்கள் தயாரித்து அனுப்பும் குழந்தைகள் விளம்பரங்களால், ஊடகங்களால் சாரம் உறிஞ்சியெடுக்கப்பட்ட வெற்றுப் பொம்மைகள், நிகழ்வில் நடக்கும் எதையும் சற்றும் கவனத்தில் கொள்ளாத இளம் தலைமுறை, இவர்களுக்கு நெல் எப்படி விளைகிறது என்று தெரியாது, சுதந்திரப்போராட்டம், இழப்புகள், இந்திய ஜாதிகள், வர்க்க வேறுபாடுகள், அரசியல் சூழல்கள் எதுவும் தெரியாத நிலைக்கு தள்ளப்பட்ட அப்பாவிகள். இவர்களுக்கு அரசியல் எதற்கு என்று நீங்கள் கேட்கலாம், (நாளை அரசியலில் நடக்கும் குறைகளை ஊழல்களை இவர்கள் போன்றோரே வளர்த்து பிரச்சாரத்துக்கும் வருவார்கள்.) அதே கேள்வியோடு இவர்கள் வரலாற்றுத் தூண்கள் என நீங்கள் சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். இளம்தலைமுறை என்று நீங்கள் கொண்ட்டாட்டமாய் உங்கள் ஊடகத்தில் காண்பிப்பது யாரை, அவர்களின் மனவளர்ச்சி என்ன என்பதை சோதித்துப் பாருங்கள்.


மூன்று வேளை உணவு இல்லாவிட்டாலும் இல்லம்தோறும் உங்களை நுழைய வாய்ப்பளித்த இவ்வரசியலை நான் புரிந்துகொள்கிறேன், அய்யா நீங்களும் புரிந்துகொள்ளுங்கள். 

இனி இது குறித்து தாங்களிடம் நான் நிறைய விவாதிக்க இருக்கிறது என்பதை நானறிவேன்...நீங்களும்....





Dec 7, 2010

பொருளாதார அடிமைகளை உருவாக்கும் பெற்றோர்களுக்கான ஓர் அவசரக் கடிதம்:





புகழ் என்றால் தொலைக்காட்சியில், திரைப்படங்களில் தோன்றவேண்டும்.முகம் தெரியவேண்டும்.ரோட்டில் போவோர் வருவோர் உங்கள் குழந்தைகளின் முகம் பார்த்து இளிக்கவேண்டும். தாங்கள்தான் அவர்களின் பெற்றோர்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டும். பெரும் பணம் குறுகிய காலத்திலேயே சம்பாதிக்க வேண்டும். இதுமட்டுமே உங்களின் மனதில் லட்சியமாய் இருக்கிறது. அவர்கள் புகழ் சின்னமாக்கப்படுவதின் (branding) மூலம் நீங்கள் பேர் பெற விரும்புவது ஒருவகையான அடிமைத்தொழில் என்றே கருதத்தோன்றுகிறது.  

குழந்தைகள் உங்கள் வழியே உருவானவர்கள், உங்களுக்காக உருவானவர்கள் அல்ல என்ற கலீல் கிப்ரானின் வார்த்தைகளை நீங்கள் அறிந்ததுண்டா? குழந்தைகளுக்கான உலகம் (அவர்கள் எதிர்காலம் அல்ல) பற்றி ஏதாவது அறிவீர்களா நீங்கள். எப்பொழுது பார்த்தாலும் அவர்களை மதிப்பெண்கள் பெறவும், பரிசுகளைக் குவிக்கவும், புகழ்களை அள்ளிக்கொண்டு வரவுமே நிர்பந்திக்கும் நீங்கள் உருவாக்குவது மனிதம் நிறைந்த மனிதர்களை அல்ல, எதிர்காலத்தில் உங்களுக்கு நிறைய நிறைய பணம்  அல்லது புகழ் சம்பாதித்து தரும் இயந்திரங்களை.  

சிறு வயதில் தாங்கள் இப்படியெல்லாம் வியாபாரநோக்கோடு
வளர்க்கப்பட்டதை உண்ர்ந்து பிள்ளைகள் நாளை உங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும்பொழுது நீங்கள் கையாலாகவதராக கூனிக் குறுகி நிற்கவேண்டியிருக்கும்.  உங்கள் பேராசையை அவர்கள் லட்சியமாக விதைப்பதற்கு எதிர்காலத்திற்கான வித்து என்பது மனசாட்சியை தர்க்கம் செய்து ஏமாற்றுவது.  இங்கு ஹன்னா அரெண்ட் கூறும் ஓர் உளவியல் விளக்கத்தை குறிப்பிடுகிறேன் “காலத்தினூடாக நீடித்து இருப்பது பூமியில் இறப்பற்ற வாழ்வு” இருப்பு குறித்த அச்சமே வாரிசு உருவாக்கத்திலும் அவர்கள் மூலம் முத்திரைப் பதிக்கும் செயல்களிலும் (ஆணாதிக்க கண்ணோட்டத்துடனும், அவர்களின் நலனுக்காகவும்) ஈடுபட காரணமாய் அமைகிறது.  இந்த உளவியல் காரணங்களை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தத் தெரிந்தவர்கள் முதலாளிகள். குழந்தை வளர்ப்பை நீங்கள் அடிமைத்தனமாய் மாற்றும்பொழுது பெற்றோர்களாகிய நீங்கள் அக்குழந்தைகளுக்கு முதலாளிகள்.

எப்பாடுபட்டாவது தன் பிள்ளையை எல்லோருக்கும் தெரிந்தவராக ஆக்கும் முயற்சியில் இன்று பெற்றோர்களாகிய நீங்கள் முழு முனைப்புடன் ஈடுபடுகிறார்கள். ஆக இதில் குழந்தைகள் நலனைவிட பெற்றோர்களின் பேராசையே ஓங்கி இருக்கிறது.  அதன் விளைவு குழந்தைகள் என்ற பெயரில் நீங்கள் வளர்ப்பது பொருளாதார அடிமைகளையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பெற்றோர்களே குழந்தைகளுக்கான நலம் என்பதில் அவர்களுக்கு நீங்கள் அறிமுகம் செய்யும் அணைத்துமே பணம், புகழ், வசதி வாய்ப்புக்களை பெறுவதற்கான ஒன்றாய் மட்டுமே இருக்கிறதே ஏன்? பெரும்பாலும் இவை நடுத்தர, பணக்கார படிநிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமான மேடைகளாக உள்ளனவே? தெருவுக்குத் தெரு குழந்தைகளுக்கான பல்வேறு பயிற்ச்சி திட்டங்கள் செயல்படுகின்றன. குழந்தைகள் மூளை வளர்ச்சி குறித்து வரைபடம் வரைந்து படங்கள் காட்டி ஏதேதோ சொல்லி அச்சுறுத்துகிறார்கள். இதன் விளைவு காலையில் பள்ளி, வீடு திரும்பியவுடன் மற்ற வகுப்புகள். இயந்திரங்களுக்கு கூட சுமை (load)  பொருக்கும் அளவு என்று ஒன்று உள்ளது ஆனால் குழந்தைகளுக்கு?

இது அறிவை வளர்க்கும் பயிற்சிகள் என்றால் பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்கும் அவை தேவை தானே. அப்படி அது மிக மிக அவசியம் என்றால் அரசாங்கமே அவற்றைப் பாட திட்டத்தில் சேர்ப்பார்கள் தானே? ஊடக நிகழ்ச்சிகளுக்காக 24 மணி நேரமும் சிந்திக்கும் பெற்றோர்களே இதைப்பற்றி யோசிக்க நேரம் கிடைக்குமா உங்களுக்கு?

பொருளாதாரத்தை மட்டுமே குறிவைக்கும் பண்டங்களை சந்தைப்படுத்த ஊடகங்கள் தேவை. அவ்விளம்பரங்களைப் பெற ஊடகங்கள் T.R.P*  என்ற ஒரு தர மதிப்பீட்டில் முன்னணியில் இருக்கவேண்டும் அதற்கு மக்களும் பங்குபெறும் நிகழ்ச்சியாக இருந்தால் நம் முகம், நமக்கு வேண்டியவர் முகம் அதில் தெரிகிறதே என்று வாயைப் பிளந்துக்கொண்டு நாம் பார்க்கச்செய்யும் நிகழ்ச்சிகளே மெய்மை நிகழ்ச்சிகள். அதன் தற்போதைய பலி குழந்தைகள்.  இந்த தரங்கெட்ட செயலுக்கு பெற்றோர்களாகிய நீங்கள்  துணை புரிகிறீர்கள்.

பீட்சாவும், பாஸ்தாவும் அறிந்த உங்கள் குழந்தைகள் மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் உண்ணும் ஈ மொய்த்த மிட்டாய்களைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.  தங்கள் பெற்றோரின் பொருளாதார சூழல் அறிந்து அக்குழந்தைகள் அதை உண்டே திருப்திக்கொள்வார்கள். உங்கள் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் முத்திரையைச் சொல்லி அப்பொருளை வாங்கிக் கொடுத்தாலே ஆயிற்று என்று அடம் பிடிக்கும். நீங்களும் “என் குழந்தை எது கேட்டாலும் நான் மறுக்க மாட்டேன்” என்று மார்தட்டிக்கொள்ள அதை வாங்கிக்கொடுப்பீர்கள். பின் தொடர்ந்து அது கேக்கப்போகும் பொருட்களுக்காக ஓடி ஓடி உழைப்பீர்கள். வேண்டியதெல்லாம் வாங்கிக் கொடுப்பதென்பது எதிர்காலத்தில் உங்களை அவர்கள் கைவிட்டுவிடக்கூடாதே என்ற அச்சத்தினால் என்றும் கருதலாம்.  இப்படி எல்லாம் வாங்கிக்கொடுத்து வளர்க்கப்படும் நகரக் கலாச்சாரத்தின் பெரிய சாதனை ‘முதியோர் இல்லம்’.  அடியும் உதையும் வாங்கி புழுதிக்கு மத்தியில் வளர்க்கப்படும் ஊர்கலாச்சாரத்தில் முதியோர் இல்லங்களைக் காண்பது அரிது.  ஆனால் அதையும் (இலவச) தொலைக்காட்சிகள் குலைத்துவிடும் ஆபத்து தொலைவில் இல்லை.

இறுதியாக பெற்றோரிடம் சில கேள்விகள்:

  1. பொது மேடைகளில் புகழுக்காய்,காமப் பாடல்களை பெரியவர்களுக்கேற்ற முகபாவனையுடன் உதடுகளை அசைக்கும் உங்களது செல்லக் குழந்தைகளுக்கு அவற்றின் அர்த்தங்களை வரிக்கு வரி விளக்கியதுண்டா?
  2. அச்சிறுமி அல்லது சிறுவனுக்கு பாலியல் கல்வி பற்றி என்றாவது தாங்கள் வகுப்பெடுத்ததுண்டா?
  3. சினிமாப் பாடல் வரிகளை மணப்பாடம் செய்து அக்கதாநாயக மனோபாவத்துடன் வளரும் சிறுவர் பள்ளிகளில் சக சிறுமியை எப்படிப் பார்கிறார்கள் என்று தெரியுமா? (குழந்தைகள் பிற்காலத்தில் பெண்கள் ஆண்கள் மீதும், ஆண்கள் பெண்கள் மீதும்  வைக்கும் பாலியல் பார்வை எவ்வாறு அமையும்?)
  4. உங்களது குழந்தைப் பருவ இச்சைகளை நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது திணிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
  5. புகழினால் உங்கள் குழந்தைகள் அடையும் இலட்சிய மாதிரி என்ன? அதனால் நீங்கள் அடையும் மனநிறைவை விளக்கமுடியுமா?
  6. இன்று படுக்கையறைப் பாடல்களை மேடையில் பெருமையாய்ப் பாடும் உங்களது குழந்தைகள் நாளை பெரியவர்கள் ஆனதும் அதைப் பதிவு செய்துக் காட்டுவீர்களா?
  7. அப்படிக் காட்டும்பொழுது நீங்களும், உங்களது மகன் அல்லது மகள் அடையும் உணர்ச்சி எவ்வாறு இருக்கும்?
  8. உங்கள் மகன், மகள் மேடையில் பாடும் முனகல் பாடல்களை தெருவிலும் பாட அனுமதிப்பீர்களா..அப்படி அனுமதித்தால் வரும் விளைவுகளை சந்திப்பீர்களா?
  9. குறிப்பாக பெண் குழந்தைகளை கவர்ச்சி உடைகள் அணிந்து காமப் பாடல்களை பாட அல்லது அதற்கு ஆட  ஊக்கப்படுத்தும் பெற்றோர்களே..அக்குழந்தை வளர்ந்து தெருவில் செல்லும் பொழுதும் அதே போண்ற உடை அணிய அனுமதிப்பீர்களா? (அதை நீங்கள் மறுக்கும் பட்சத்தில் புகழுக்காக அன்று நீங்கள் அனுமதித்தீர்களே என்று உங்கள் மகள் கேட்கக்கூடும்..)
  10. நல்லது கெட்டது என்ற இருமைகளுக்கு மாற்றாய் தவிர்ப்பது,மற்றும் ஒதுக்கப்படவேண்டியது என பலவகை உணர்ச்சிகளை அவர்களுக்கு நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்களா? அவை உள்ளனவென்றாவது உங்களுக்குத் தெரியுமா?
  11. உங்களது குழந்தையின் உடல் உழைப்பு மற்றும் மன உழைப்பு அதனால் தோன்றும் மன உளைச்சலுக்கு நீங்கள் கூலி கொடுப்பீர்களா?
  12. உங்களைப் போன்ற பெற்றோரால் மற்ற குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் ஏற்படும் எதிர்காலம் குறித்த அச்சுறுத்தல் நிறைந்த மன உளைச்சலுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்வீர்களா?
  13. எல்லாவற்றிர்கும் மேலாய் அவர்கள் உங்கள் குழந்தைகளா இல்லை உங்கள் அடிமைகளா?
  14. ‘சிறுமி பாலியல் பலாத்காரம்’ என்று படிக்கையில் உங்கள் மனவோட்டம் எப்படி இருக்கும்? விளக்கமுடியுமா?
  15. பல்வேறு அரசியல் காரணங்களால் பின்தங்கியுள்ள குழந்தைகளின் நிலையை மாற்றியமைக்க நீங்கள் கொண்டாடும் ஊடகங்களும், நடிகர்களும் செய்துள்ளது என்ன என்பது பற்றி விளக்கமுடியுமா? 
விவாதிப்போம் பெற்றோர்களே.....அவர்கள் நம் குழந்தைகள் அல்லவா....