Sep 9, 2022

வன்மத்தை ஊட்டி வளர்க்கப்பட்ட தோழமைகளின் கேள்வியும்! எனது பதில்களும்

கேள்வி  1“என்ன இருந்தாலும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மேல கோவம் இருக்கதான் செய்துல்ல தோழர்

5,6 வருஷமா பதில் சொல்லிட்டுதான் இருக்கோம்! மறுபடியும் சொல்றேன்!

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் பாசிசத் தனமாக வசுமித்ர மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்  கீழ் புகார் கொடுத்திருந்தாலும், தலித் மக்களுக்கான பாதுகாப்பிற்கான ஒரு சட்டத்தை ஒரு அடையாள அரசியல் கூட்டம் தங்களுடைய வன்மத்தை தீர்த்துக்கொள்ள தவறாக பயன்படுத்தி இருந்தாலும், நானும் வசுவும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் ஆதரவாளர்களே! அன்றும், இன்றும்! சாதி ஒழியும் வரை ஆதரவாளர்களாகவே இருப்போம்! அதன் கீழ் நாங்கள் சிறைபட வேண்டிய சூழல் வந்தாலும் சிறையில் இருந்தபடி அதற்கு ஆதரவாகவே இருப்போம்! தலித் உழைக்கும் மக்கள் விடுதலைக்கும் சேர்த்து வழி வகுக்கும் மார்க்சியத்தின் தேவை குறித்து எழுதிக் கொண்டே தான் இருப்போம்!

கேள்வி 2: அம்பேத்கரிஸ்ட்கள் மேல ஏன் இவ்ளோ வெறுப்பு!

பதில்: அம்பேத்கரியம் என்றால் என்ன?

உங்களை அடையாள அரசியலில் மூளை சலவை செய்து வழிநடத்தும் அறிவுஜீவிகளை நோக்கி வைத்த கேள்விகளுக்கு  இன்னும் பதில் வரவில்லை! மேலும் இந்த கேள்விக்கு எனது இரண்டு நூல்களில், பல முகநூல் பதிவுகளில் பதில் உள்ளது!

அம்பேத்கரிஸ்ட், பெரியாரிஸ்ட், தமிழ்தேசியம் என்கிற பெயரில் பரப்பப்படும் அடையாள அரசியலைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்! அம்பேத்கரை அல்ல, பெரியாரை அல்ல, தமிழ் தேசிய உணர்வு உள்ளிட்ட தேசிய இன விடுதலைப் போராட்டங்களை அல்ல  என்பதற்கு போதுமான விளக்கங்கள் கொடுத்தாயிற்று! விமர்சனம் இன்றி ஏற்றுக்கொண்டால் தான் ஞானஸ்தானம் கிடைக்குமெனில், அது தேவையே இல்லை!

3.  உங்களுக்கு தனிப்பட்ட வன்மம்!

உங்களுக்கு இருப்பதை ஏன் எங்களுக்கு இருப்பதாக சொல்கிறீர்கள்!

உண்மையில் வசு மீது வழக்கு தொடுத்தது சிபிஎம் என்னும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவான தீண்டாமை ஒழிப்பு முன்னணி! இதற்கு பின்னால் இருந்தவர்கள் யார் என்பது உலகறிந்ததே. கம்யூனிஸ்ட் கட்சியை வைத்து வழக்கு தொடுக்கும் முதலாளித்துவ பலமும், புத்திசாலித்தனமும் படைத்தவர்கள் அவர்கள்!

ஆனால் இதற்காக நாங்கள் கம்யூனிச அரசியல் மீதோ, மார்க்சியத்தின் மீதோ வன்மத்தை வளர்த்துக்கொள்ளவில்லை, சிபிஎம்மையும் வெறுக்கவில்லை.

இந்த குறிப்பிட்ட பிரச்சினையில் அவர்கள் கருத்துச் சுதந்திரத்தைக் கைவிட்ட ஜனநாயகமற்ற போக்கை கடுமையாக விமர்சிக்கிறோம். விமர்சித்துக் கொண்டே இருப்போம்! சிபிஎம் மட்டுமல்ல, எந்த ஒரு இயக்கத்தோடும் குறிப்பிட்ட விசயத்தில் உடன்பட இயலாத அம்சங்களை விமர்சித்துக் கொண்டுதான் இருப்போம். இருக்கிறார்கள்!

சிபிஎம் தோழர்களும், மற்ற கம்யூனிஸ்ட் தோழர்களும், பெரியாரிஸ்ட், அம்பேத்கரிஸ்ட்களில் சிலரும் அதே அரசியல் முதிர்ச்சியோடு உரையாடுபவர்களாக இருக்கிறார்கள். முதிர்ச்சியற்று பேசுபவர்களை முடக்கிவிடுகிறேன்.

ஒவ்வொரு கம்யூனிஸ்ட் இயக்கங்களிலும், தோழர்களிடையேயும் கூட பல கருத்து முரண்பாடுகள் இருக்கும். அதை உள்ளேயும் வெளியேயும்உரையாடிக் கொண்டே இருப்பார்கள்”. அதற்கு விமர்சனம் சுய விமர்சனம் என்று பெயர்! ஆனால் முதன்மை எதிரி யார், இலக்கு என்ன அதை புரிந்துகொள்ள மார்க்சியம் என்னும் வழிகாட்டியின் வளமை, உழைக்கும் வர்க்க ஒற்றுமை, பொதுவுடைமை சமுதாயம் படைத்தல் என்பதில் தான் அனைவரும் ஐக்கியப்படுகிறோம்!

விமர்சனம், முரண்பாடு என்பதற்கு இடதுசாரிகளிடையே உள்ள அனுகுமுறையை அறிந்தால் வன்மம், சாதி வெறி, நீங்களே பிரிஞ்சு இருக்கீங்க மொத நீங்க ஒண்ணு சேருங்க என்கிற உளறல்கள் வராது!

4.  EWS ஆதரவாளர்கள் தான நீங்க?

நான் எப்ப ஆதரிச்சேன்! ஆதரிச்சது ஒரு குறிப்பிட்ட கம்யூனிஸ்ட் கட்சி. அதற்கு சாதிச் சாயம் பூசுவதுதான் அபத்தம்!

இடஒதுக்கீட்டை எப்படி பார்க்க வேண்டும் என்று மார்க்சிய அனுகுமுறை உள்ளது. அதனடிப்படையில் ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சியும் சில திட்டங்களை முன் வைக்கும்! அதில் நமக்கு உடன்பாடு இருக்கலாம், மறுப்பும் இருக்கலாம்! ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒவ்வொரு பிரச்சினையும் எப்படி அனுகுகிறார்கள், ஆய்வு செய்கிறார்கள் என்பது புரிய வேண்டுமெனில் முதலில் மார்க்சியம் படிக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் குறைந்தபட்சம் உரையாட வேண்டும்!

சரி.. நான் EWS ஆதரவாளரா? என்றால் பிஜேபி அரசு  பிரித்தாளும் சூழ்ச்சியுடன் கொண்டுவந்த இந்த திட்டத்தை நான் எதிர்க்கிறேன்! ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அதை ஆதரித்ததை நான் ஏற்கவில்லை!

இதை கட்சியில் இருந்தாலும் சொல்வதற்கான சுதந்திரத்தைக் கொடுக்கும் இயக்கம் தான் கம்யூனிஸ்ட் இயக்கம்!

இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களும் நாங்கள் அல்ல! இடஒதுக்கீடும், அதை ஆளும் வர்க்கம் பயன்படுத்திக்கொள்ளும் சாதுர்யம் குறித்தும் முன்வைக்கப்படும் உரையாடலை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்! எனது இரண்டாம் நூலில்! அதற்காக இடஒதுக்கீட்டை எதிர்க்கிறோம் என்று பொருள் அல்ல! இடஒதுக்கீடு ஒரு தர்காலிக நிவாரணிதான் என்று அம்பேத்கர் சொன்னதை எப்படி புரிந்துகொள்வீர்கள்? முதலில் மார்க்சியத்தை, அரசியல் பொருளாதாரத்தை படிங்க! அதை படித்தால் இதையெல்லாம் எப்படி அனுக வேண்டும் என்கிற புரிதல் ஏற்படும்! ஒவ்வொன்றிலும் உள்ள சாதகம் என்ன பாதகம் என்ன என்று ஆய்ந்தறிய முடியும்! அதை முன் வைத்துத் தான் விவாதிக்க வேண்டுமே ஒழிய, இடதுசாரிகளுக்கு சாதியச் சாயம் பூசுவது அறிவார்ந்த செயல்பாடு கிடையாது!

ஒரு குறிப்பிட்ட திட்டத்தை ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கின்றன, மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் எதிர்க்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள வாசிப்பும், அவர்களோடு உரையாடல் அனுபவமும் இருந்தால் மட்டுமே புரியும்!

கம்யூனிஸ்ட்கள் என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா? அவர்கள் எது செய்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

கண்டிப்பாக எந்த கம்யூனிஸ்டும் அப்படி சொல்ல மாட்டார். ஆனால் தத்துவார்த்த அனுகுமுறை சிக்கலை, சாதி, ஆணாதிக்கம், சுயநலம், தரகர்கள் என்பது போல் அவதூறு செய்வதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்! சாதி அடிப்படையில் கம்யூனிஸ்ட்களை அனுகுவது மிகவும் மோசமான சாதியவாதம்! அவர்களின் ஆய்வுமுறையில் உள்ள போதாமை என்று பேசுவதே அறிவார்ந்த செயல்பாடு! ஆனால் அது பற்றியும் கட்சிக்குள்ளேயே தோழமைகள் விவாதிதுக் கொண்டுதான் இருப்பார்கள். மறுபரிசீலனை செய்து அறிக்கைகள் வெளியிடுவார்கள். இப்படி ஒரு தொடர் செயல்பாடு கம்யூனிஸ்ட்களிடம் உண்டு! (இது எனது புரிதல்). 

கம்யூனிஸ்ட்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரிந்திரிப்பது மற்ற சாதி வாரிக் கட்சிகளின் பிரிவினை போல் அல்ல! அது தத்துவார்த்த அடிப்படையில்! இந்திய சமூகம், உலகளாவிய பிரச்சினைகள் பற்றிய ஆய்வுமுறை தொடங்கி, புரட்சிக்கான செயல்திட்டத்தை வகுப்பதில் உள்ள நட்பு முரன்பாடு அது!

மார்க்சியம் தரும் வளமைதான் இது! ஒரு சமூக அறிவியல் ஆய்வுக் கருவியை ஒவ்வொருவரும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தி, கண்டுபிடிப்பினை முன் வைத்து, வேலைத்திட்டத்தை வழங்க முடியும்! அதற்கு சாதிச் சாயம் பூசுவது அறியாமை அல்லது வன்மம்! சொல்லப் போனால் அதற்கொரு வர்க்கத் தன்மை உண்டு - அதுதான் முதலாளித்துவ சார்பு!

அனைத்து கம்யூனிஸ்டுகளின் இலக்கும் உழைப்புச் சுரண்டல் அற்ற, ஒடுக்குமுறைக் இல்லாத, படிநிலை அமைப்புகள் இல்லாத ஒரு பொன்னுலகை படைப்பதுதான்! அதற்கான வழிமுறைகளில் பாதைகள் வேறுபடலாம், இலக்கு ஒன்று தான்! தவறுகள் இழைக்கலாம்! அந்த தவறுகளை சரியாக விமர்சிக்க குறைந்தபட்ச மார்க்சிய வாசிப்பு வேண்டும்.

அப்ப ஆளுக்கு ஒண்ணு சொல்லிட்டிருக்கீங்க, உங்களுக்கே புரிதல் இல்லன்னு தான அர்த்தம்! இதை சொன்னா உங்களுக்கு ஏன் கோவம் வருது. அப்படி இல்லை! இதற்கு விளக்கம் எழுதினால் இன்னும் நீளும்!

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் என்னும் நூலில் ஒரு விளக்கம் உள்ளது. பிறகு அதனை பகிர்கிறேன்.

இறுதியாக அம்பேத்கரியம், பெரியாரியம் என்பது குறித்த மார்க்சிய அனுகுமுறை புரிய வேண்டுமெனில் முதலில் மார்க்சியத்தைப் படியுங்கள். அவற்றின் போதாமை குறித்த மார்க்சிய விமர்சனங்களை படியுங்கள்! எங்களுக்கு முன்பே எழுதிய ஆசான்கள் உள்ளனர்!

 5.  ஆமா இத்தனை வருஷமா என்னத்த சாதிச்சுட்டீங்க, உங்களால புரட்சி வந்துடுச்சா? சாதி ஒழிஞ்சுடுச்சா?

புரட்சி என்றால் என்ன, சாதி என்றால் என்ன? வர்க்கம் என்றால் என்ன? வர்க்கப் போராட்டம் என்றால் என்ன? சாதியும் வர்க்கமும் எப்படி பின்னிப் பிணைந்திருக்கிறது. அதற்காக கம்யூனிஸ்டுகள் செய்தது என்ன, செய்வது என்ன, செய்யப் போவது என்ன எல்லாவற்றுக்கும் பதில்கள் உண்டு. புத்தகங்களை தேடிப் படிங்க! ஒவ்வொரு படிநிலையும் எப்போது, எப்படி ஒழியும் என்பதற்கு எல்லாம் விளக்கங்கள் உள்ளன!

படிக்காமையே மயக்க ஊசி போட்டுட்டு இருக்குற ஒரு சிலரின் அவதூறு பிரச்சாரங்களை வைத்து பேசாதீர்கள்!

நம்மையெல்லாம் பிரித்தாளக் கூடிய சூட்சமங்களை அடையாளங்கள் வழி அரங்கேற்றுவது முதலாளித்துவம்! அதற்கு சிலர் துணை போகின்றனர். அது புரிய மார்க்சியம் படிங்க. கம்யூனிஸ்ட் இயக்கங்களோடு உரையாடுங்க! தலித்தியம் மட்டுமில்லை பெண்ணியம் என்று சொல்லப்படும் ‘இயத்தையும்’ நான் ஏற்பதில்லை! அப்ப இது என்ன வெறி! ஆணாதிக்க வெறியா? அடையாள அரசியல் என்றால் என்னவென்று வாசிக்கவும். 

பி.கு: உழைக்கும் மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட எந்த ஒரு பாதுகாப்பு திட்டங்களையும் எதிர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! இன்னும் சொல்லப் போனால் அம்பேத்கரை விமர்சனமின்றி புகழ்ந்து கொண்டே இருந்தால் கிடைக்கும் அனுகூலங்கள் அதிகம்!

அனுகூலங்களை விட உன்னதமானது உழைக்கும் வர்க்க விடுதலை!  ஏனென்றால் என் விடுதலையும் அதில் தான் அடங்கியுள்ளது! ஆளும் முதலாளித்துவ வர்க்கம் தரும் அனுகூலங்களைப் பெற்றுக் கொண்டால் நான் வெறும் அடிமை! உழைக்கும் வர்க்கம் புரட்சியின் வழியில் உண்டாக்கப் போகும் பொதுவுடைமை சமூகத்தில் நான் (நான் இல்லையெனில் அடுத்த தலைமுறை) ஒரு சுதந்திர மனுஷியாக, சுய மரியாதையுடன் வாழ முடியும்! அது தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இருக்க இயலாது! அதற்கு வழி காட்டும் மார்க்சிய சித்தாந்த்ததையும், கம்யூனிஸ்ட் அரசியலையும் என்றென்றும் உயர்த்திப் பிடிப்பேன். கம்யூனிஸ்ட் அமைப்புகளில் உள்ள ஒரு சிலர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போட்டு முடக்கப் பார்த்தாலும்!  

அப்படின்னா எங்களுக்கு அதெல்லாம் அக்கறை இல்லன்னு சொல்றீங்களா என்று பொங்காமல், உழைக்கும் வர்க்கம், வர்க்கப் போராட்டம்  என்பதன் பொருள் புரிய மார்க்சியம் படிங்க!

அன்புடன்

கொற்றவை, 10.9.2022


அனுகூலம் என்பது - கிடைக்கக் கூடிய ஆதரவு, புகழ்ச்சி, அரவணைப்பு, சாதி மறுப்பாளர் என்கிற அக்மார்க் சான்றிதழ் என்னும் பொருளில்! அதுக்கும் எதாச்சும் ஒரு வன்மமான பொருளை எடுத்துட்டு வராதீங்க! இப்படி வெறுப்பையும், வழக்கையும் எதிர்கொள்ள வேண்டி இருக்காது என்னும் பொருள்

No comments:

Post a Comment