Sep 4, 2022

டாட்டா குழுமம் முன் வைக்கும் புதுமைப் பெண்




டாட்டா குழுமம்  தன் நகை விற்பனை ப்ராண்ட் ஒன்றின் விளம்பரத்தில் புதுமைப் பெண்களை கொண்டாடுவதாக அறிவித்திருக்கிறது!

முதலாளித்துவம் பெண்களுக்கு சுதந்திரம் வழங்கியுள்ளது என்று முழங்கும் நவதாராளவாத, பெண்ணியவாதிகளே.. நீயா நானாவில் வீட்டு வேலை செய்யும் பெண்களின் கலகக் குரல்களை கேளுங்கள்! உழைக்கும் வர்க்கப் பெண்கள் நடத்தப்படும் விதத்தைப் பாருங்கள்! முதாளித்துவம் இதை ஒழிக்காது! சாதி மேல் எல்லாவற்றையும் போட்டுவிடவும் முடியாது! அங்கு நிலவுவது வர்க்க வேறுபாடு!

முதலாளித்துவம் பெண்களை விடுவிக்கவில்லை! மலிவான கூலிக்கு பெண்கள் ஏற்ற கூலி உழைப்பாளிகளாக இருப்பார்கள் என்பதால் அது பயன்படுத்திக் கொள்கிறது! போட்டி நிறைந்த பொருளாதாரத்தை தக்க வைத்துக் கொள்ள சாதி, மதம், இனம், மொழி, பாலினம் என்று மக்களை துண்டாடி வைத்து  வாய்ப்புகளை தன்னுடைய இலாபத்திற்கு ஏற்ற வகையில் பகிர்ந்து கொடுப்பது தான் முதலாளித்துவம்! விளைவு நாம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சாக வேண்டும்! இதுதான் வர்க்க அரசியல்!

வேலை வாய்ப்பின்மைக்கு திறமையில்லை என்று ஏமாற்றும்! ஆண் பெண் பகைமை வளர்வது இதனால் தான்! அதே போல் தான் சாதி உள்ளிட்ட அனைத்து பகைமைகளும்.  மேலும் முதலாளித்துவத்திற்கு பெண்கள் ஓர் அழகான தயார் நிலையில் உள்ள “பண்டம்”! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! முதலாளித்துவ வளர்ச்சியில் பெண்களுக்கு நண்மையே இல்லையா? இருக்கிறது.. முந்தைய நிலவுடைமை சமுதாய அடக்குமுறைகளைக் காட்டிலும் முதலாளித்துவ உற்பத்தி முறை பெண்களுக்கு நிறைய கதவுகளை திறந்துவிட்டிருக்கிறது! அது அதன் இலாப தேவையில் இருந்தும்.. தொடரும் பெண்களின் போராட்டங்களிலிருந்தும் கிடைத்த பயனே ஒழிய! முதலாளித்துவ ஜனநாயகம் அன்று! முதாளித்துவ ஜனநாயகம் என்பது உழைப்புச் சுரண்டலுக்கான ஜனநாயகம் மட்டுமே!

எல்லாவற்றிலும் வர்க்கப் பிளவு உண்டு என்பது இதுதான்! அதனால் தான் நான் அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன்.. நான் பெண்ணியவாதி அல்ல மார்க்சியவாதி!

இப்போது டாட்டா குழுமத்தின் முதாளித்துவ பெண்ணியத்திற்கு வருவோம்!

அதன் நகை விளம்பரத்தில் உள்ள வாசகங்கள் புகைப்படத்தில் உள்ளது!

“பாரம்பரியத்தையும் காப்பவள், இருமைத் தன்மயில் ஈர்கப்பட்டு” என்கிற இந்த புகழாரத்தில் உள்ள அரசியல் என்ன?

பெண்கள் குடும்பத்தையும் நிர்வகித்து, வேலை / தொழில் / - அதாவது வீட்டிற்கு வெளியேவும் சாதிப்பவள், அதாவது வீட்டு வேலை வெளி வேலை இரண்டையும் சமமாக சமாளிப்பவள் என்கிற பொருளில் வருகிறது!

குடும்ப பரமாரிப்பு என்னும் முதல் பாத்திரத்தில், பாரம்பரியத்தை நிராகரிக்கும் பெண்ணாக ஒருத்தி இருந்தால் அவள் புதுமைப் பெண் கிடையாது! அதுவும் தமிழகத்தின் ‘புதுமைப் பெண்’ அப்படியென்றால் மற்ற மாநில / மொழிப் பெண்கள் யாரும் அப்படி “ஜொலிப்பதில்லையா”! என்ன மாதிரியான சொல் விளையாட்டு இது என்பது புரிகிறதா? சந்தைக்கு ஏற்ற புகழாரங்கள்!

இதுதான் முதலாளித்துவத்தின் அடையாள அரசியல் மயக்க ஊசி! பெண்களை பெண்மைத் தன்மைக்குள் வைத்துக் கொண்டே மகிமைப்படுத்துவது!ஆண் தலைமையிலான குடும்ப அமைப்பு, அவளின் மறு உற்பத்தி சக்தி (குழந்தைப் பேறு), இரட்டை உழைப்புச் சக்தி மற்றும் பரம்பரை தூய்மை, சொத்து ஆகியவற்றை பாதுகாப்பதற்காக உருவான பெண்மைக் கடமையை உயர்த்திப் பிடிக்கிறது!

Glorifying Womanhood within the feminine characteristics that originated for the benefit of the Patriarchal Family, Women’s reproductive capacity, her labour and the protection of  lineage and the Private Property!

பாரம்பரியத்தை நிராகரிப்பவளாக ஒரு பெண் இருந்தால் அவள் புதுமைப் பெண் அல்ல ‘வேசி’! ஆம், பெண்மையை நிராகரிப்பவர்களை அப்படித்தானே இந்த சமூகம் சொல்கிறது! பெண்மையை நிராகரிப்பவளால் முதலாளித்துவத்திற்கு என்ன பயன்? பாலின அடிப்படையில் அத்தியாவசியமான பொருட்களை தவிர்த்து நுகர்வுக்கான, அலங்கரிப்புக்கான, அந்தஸ்து show-offக்கான எந்த சரக்கையும் அவளிடம் விற்க இயலாதே! எனவே பண்டத்திற்கு ஏற்ப Slogan களை எழுதி, தேவைப்படும் வகையில் பெண்களை புதுமைப் பெண்களாக்கியும், பாரம்பரியக் காவலர்களாக்கியும், சாதனைப் பெண்களாக்கியும், சிறந்த இல்லத்தரசி ஆக்கியும் கொண்டாடி, தம் சரக்குகளை அவர்கள் தலையில் கட்டும்.

நகைகளை விரும்பும் பெண்கள் புதுமைப் பெண்கள் அல்ல!

நகைகளை நிராகரிப்பவள் தான் புதுமைப் பெண்!

 “பெண்கள் என்ன நகை மாட்டும் ஸ்டாண்டா” – என்று பெரியார் கேட்டார்!

எல்லா பெண்களும் இப்படி விழித்துக் கொண்டால் .. சரக்கு எப்படி விக்கும்! அதான் பெரியார், அம்பேத்கர், மார்க்சியம்லாம் படிக்காதீங்கன்னு அச்சுறுத்துகிறார்கள்!

”நீ பெண்” என்று போற்றுபவர்கள் முன் வைக்கும் பெண்மைத் தன்மை எதுவென கவனித்து பெண்கள் அவற்றை ஏற்கவும், நிராகரிக்கவும் தெளிவு பெற வேண்டும்!

பழமையை நிராகரித்து புதுமையை ஏற்பது என்பது ஒரு தலை கீழ் மாற்றம்!

”அந்த காலத்து பொம்பளைங்க ஆட்டுக்கல்லுல சட்டினி அரைச்சுக் கொடுப்பாங்க.. அவ்வளவு ருசியா இருக்கும்.. ஆனா இந்த காலத்து பொம்பளைங்க… என்பார்கள்!

“மவனே உனக்கு அவ்ளோ ருசியா கெட்டிச் சட்டினி வேணும்னா நீயே அரைச்சு சாப்புடு” என்று சொல்வதற்கு பதில் பல பெண்கள் “பாரம்பரியத்தை காப்பாத்துறேன்” என்று அதில் மாங்கு மாங்கென்று சட்டினி அரைப்பதை பெருமையாக பேசிக் கொள்வார்கள். அதற்கு கல்லில் அரைப்பதன் மருத்துவ குணம் என்று வேறு எடுப்பு தொடுப்பு வரும்!

மருத்துவ குணம் இருக்கலாம்! அது பொம்பள அரைச்சா மட்டும் தான் வருமா? மேலும் நவீன கருவிகள் எந்த தேவையில் இருந்து உருவானது? ஏன் உருவானது? அதுவும் முதலாளித்துவத்தின் உற்பத்தி தானே! அவர்கள் சந்தைப்படுத்துகிறார்கள், நாம் வாங்குகிறோம்!

மனிதனின் உழைப்பு நேரத்தைக் குறைக்கும், உடலுக்கு தீங்கற்ற எந்த பொருளும் வரவேற்கத்தக்கதே! இதுதான் கம்யூனிஸ்ட் அனுகுமுறை! பழமை என்று எதையும் நிராகரிப்பதோ அல்லது புதுமை என்று எதையும் வரவேற்பதோ வரட்டுவாதம்! கம்யூனிஸ்டுகள் அப்படி இல்லை! ஒரு பொருள் உற்பத்தியில் நடைபெறும் சுரண்டல் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்புகளை அவர்கள் விமர்சனப் பூர்வமாக அனுகுவார்கள். ஆனால் இதை எதிர்மறையாகத்தான் இந்த சமூகம் எடுத்துக்கொள்ளும்!

முதலாளித்துவம் ஏன் இத்தகைய நவீன கருவிகளை உற்பத்தி செய்கிறது! தன்னுடைய செல்வ வளர்ச்சிக்காக! இரண்டாவது வீட்டு வேலை நேரத்தை குறைத்து பெண்கள் தம் உற்பத்திக் கூடத்தில் வந்து வேலை செய்தால், மலிவான கூலி உழைப்பாளரும் கிடைக்கிறார். இலாபமும் பெருகும்!

விற்பனை செய்பவனை விட்டுவிட்டு, இந்த சுயநல அரசியல் தெரியாமல், ஆணாதிக்க சமுதாயம்  பெண்களை பகடி செய்து கொண்டிருக்கும். ஆணாதிக்க மூளை கொண்ட பெண்களும் மற்ற பெண்களை “நீயெல்லாம் ஒரு பொம்பளையா”, “நீ சோம்பேறி.. நாங்கல்லாம் அந்த காலத்துல”, “உன் புருஷனுக்கு அம்மில அரைச்சாதான் புடிக்கும்னா அப்படியே செஞ்சுதான் போடேன்.. இப்ப நீ வேலைக்கு போகலன்னு யாரு அழுதா” என்கிற ரீதியில் ஏளனம் செய்து கொண்டிருப்பார்கள்! புருஷன்களோ “எங்கம்மா மாதிரி உன் கைப்பக்குவம் இல்ல.. ஏன்னா எங்கம்மா அம்மில தொவையல் அரைச்சாங்க” என்பார்கள்.. இந்த குத்தல் பேச்சுக்கு அஞ்சியே பெண்கள் தங்களை “நானும் நல்ல பொண்ணுதான், பொண்டாடிதான், அம்மாதான்” என நீருபிக்கும் அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள். துணிவுள்ள பெண்கள் அதை நிராகரித்து தம் சுயத்தை நிறுவுகிறார்கள்! முதலாளித்துவம் அவர்களுக்கும் சரக்குகளை வைத்துள்ளது!

பழமை / பண்பாடு / பாரம்பரியம் என்பதில் உருவான “கடமைகள்” ஏன், எதற்கு உண்டானது என்பதை கற்றரிய வேண்டும்! அதற்கு பெண்கள் முற்போக்கு அரசியல் விழுப்புணர்வு அடைய வேண்டும்!

பெண்மையை நிராகரிப்பது என்பது பெண் என்னும் உயிரியல் அடிப்படையை நிராகரிப்பது அல்ல! உயிரியல் / உடலியல் / பாலினத் தேர்வு மாறுபாடுகள் இருந்தாலும் அதற்கென ஒரு அறிவியல்பூர்வமற்ற பாலின அடிப்படையிலான ‘பாத்திரம்’ கொடுப்பதை நிராகரிப்பது என்பதாகும்.

Sex, rather genital identity is biological! Gender is Social! Gender roles are MAN made! Rejecting Gender Roles is the meaning of the real புதுமைப் பெண்!

*டாட்டா குழுமம் மட்டுமல்ல அனைத்து (முதலாளித்துவ) சரக்கு உற்பத்திக்கும் இது பொருந்தும்!

*நகைகளை முதலீடு என்று நம் மீது திணிப்பதும் இந்த பொருளாதார அமைப்பின் தேவையினால் தான்! அதற்காக நகை வாங்குவது அவரவர் விருப்பம். ஆனால் பெண் என்பதால் நகை சேர்க்க வேண்டும் என்பது ஆணாதிக்க மூளைச் சலவை! அதை எதிர்க்க வேண்டும்!

எதை வேண்டுமானாலும் நுகரலாம்! அது தனி மனித சுதந்திரம்!  ஆனால் அதன் அரசியல் தெரிந்து நுகர்தல் நன்று! அவர்கள் நம்மை ஆள்வதை விடுத்து, நம் விருப்பம் தேர்வுகளை நாமே முடிவு செய்து எதையும் நுகர்வோமெனில், ஏமாற்று சாத்தியமில்லை!

-            கொற்றவை, 5.9.2022

Related Campaign:

https://masessaynotosexism.wordpress.com/2012/01/25/our-first-campaign-against-ebay-in/

https://masessaynotosexism.wordpress.com/our-campaign-diary/

#பெண்ணியம் #மார்க்சியம் #Feminism #class_politics #வர்க்கப்போராட்டம் #TataGroup #tanishqjewellery



R

No comments:

Post a Comment