Jun 25, 2022

சுழல் தொடரில் எனக்குள்ள விமர்சனம்!

 


சுழல் – வெப் சீரீஸ் – இரண்டு பிரச்சினைகள் மீது பயணிக்கிறது! தொழிற்சாலை தீ விபத்து, சிறுமிகளுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்!

சண்முகம், தொழிற்சங்க தலைவரின் கதாப்பாத்திர வடிவமைப்பு மார்க்ஸையே பின்பற்றினாலும் குடும்பத்தில் அவர் நடந்துகொள்ளும் விதம், அதனால் குடும்பம் சிதைந்து, பெண் பிள்ளைகள் எந்த நிலைக்கு ஆளானார்கள் – சரி விட்டுவிடுவோம்.

தொழிற்சாலை தீ விபத்து  பற்றி இறுதியில் ஒரு கதை சொல்கிறார்களே! அப்படியென்றால் முதல் காட்சியில் காட்டப்படும் தொழிலாளர் போராட்டம், தொழிலாளர்கள் அடிவாங்குவது! இது குறித்தும் கேள்வி எழக் கூடாதா? நண்மைக்கு என்று முடிவான பின்னர், தொழிலாளர்களை அடியும், மிதியும் வாங்க விட வேண்டிய அவசியம் என்ன? இவர்கள் சொல்லும் கட்டுக்கதையை அந்த போராட்டமின்றியே அரங்கேற்றியிருக்க முடியும்! பொய்யான உணர்ச்சியை தூண்டிவிட்டு பதட்டமடைய வைக்கும் திரைக்கதை ஏற்புடையதா?

அடுத்து, பாலியல் குற்றவாளி என்று இருவரை கைது செய்கின்றனர். முதலில் கைதானவர் பற்றி ஒரு கதை வருகிறது! அப்போது படைப்பாளர் நம்மிடையே இரக்கபாவத்தை கோருகிறார். ஓடிப்போனவர்கள் பற்றி அவருக்கு பகுதி அளவு உண்மை தெரியவருகிறது, ஆனால் அவர் ஊராரிடம் சொல்லவில்லை, குறைந்தபட்சம் சண்முகத்திடம் கூட சொல்லவில்லை! ஏனென்றால் பணத்தை பறித்துக் கொண்டார். மேலும் அவரும் பாதிக்கப்பட்ட நிலையில் ஏதோ ஒரு பித்து பிடித்த மனநிலையில் இருக்கிறார் என்கிற சப்பைக் கட்டு! எதற்கு? கதை நகர வேண்டுமே அதற்காக!

இரண்டாவது ஒருவர் மீது சந்தேகப்பட்டு சன்முகமும், ரெஜினா (போலீஸ்) தூக்கிச் சென்று “விசாரிக்க” உணர்ச்சிகரமாக ஒரு கதை சொல்லப்படுகிறது. அதான் கண்ணால் காண்பது பொய் என்று முன்னரே சொன்னேனே, அந்த மெசேஜ் நமக்கு சொல்லப்படுகிறது!  இந்த காட்சி முடிந்த உடன் நமக்கு யார் மேல் கோவம் வருகிறதென்றால் பாதிக்கப்பட்ட தரப்பின் மேல்! ஏண்டா இப்படி முட்டாள்தனமா, அராஜகமா நடந்துக்குறீங்க. தொழிற்சங்க பிரதிநிதியாக இருக்கிறார். அந்த குடும்பத்தோடு அவ்வளவு நெருங்கி பழகுகிறார், நல்ல முதலாளிக்கு இருவரும் விசுவாசமாக இருக்கிறார்கள்! ஆனால் தன் முதலாளியிடம் நிறுத்தி நியாயம் கேட்க கூட யோசிக்காத மூர்க்கம்! ஏனென்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்! நியாயம்தானே என்று கொண்டு சென்று, பின் இது நியாயமா என்று பாதிக்கப்பட்டவர்கள், பார்வையாளர்களையும் சேர்த்து குற்ற உணர்வுக்கு ஆளாக்கும் வகையிலான ஒரு திருப்பம்!  அப்போதுதானே ஒரு ஆக்‌ஷன் பில்டப்ஸ் கிடைக்கும்!

சில வருடங்களுக்கு முன் அதேபோல் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் அந்த சிறுமியை எந்த ஒரு கட்டத்திலும் PREDATOR குறித்து எச்சரிக்கவே இல்லை! ஏனென்றால் அவள் அந்த துயரை மனதில் போட்டு புதைத்துவிட்டாள். இன்னும் இதர காரணங்கள் மனநல மருத்துவரால் விளக்கப்படுகிறது! பின்னர் உண்மை வெளி வருகையில், இது எதுவுமே இயல்பாக இல்லாமல், செயற்கையாக திணிக்கப்பட்டுள்ளதாகவே உணர முடிகிறது! மனநலன் சார்ந்து சமாளித்த பின்னர், யாரும் அது சார்ந்து கேள்வி எழுப்ப இயலாதல்லவா! மருத்துவமனையில் சண்முகம் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை கவனித்தவர்களுக்கு, இறுதி காட்சியில் மார்க்ஸை காட்டும் போது ஏன் கோவம் வருகிறது என்பது புரியும்.  

பாதிக்கப்பட்டவர் சிறுமியாக இருந்தபோது யாரிடமும் 'சொல்ல தெரியவில்லை’. வளர்ந்து பெரியவளாகி, அந்த இடத்தில் அவளைப் போலவே ஒருத்தி இருக்கும் போது கூடவா எச்சரிக்க தோணாது! நான் பாதிக்கப்பட்ட இடத்திற்கு என் மகளை அனுப்பவே மாட்டேன்! சிறு வயதில் சொல்ல துணிச்சல் இல்லை தான், ஆனால் வளர்ந்த பின்..??  அதுவும் இத்தனை தூரம் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிலையில்.. ??? Predator உடன் நம் நெருங்கிய உறவு வளர்கையில், அந்த உறவோடு தொடரிபில் இருக்கையில்???? மேலும் பாதிக்கப்பட்டவர் தன் ரத்த உறவுகளை இன்னும் கூடுதலாக பாதுகாக்கும் ஒரு மனநிலைக்கும், மனப்பதட்டத்திற்குமே உள்ளாவார்! 

படைப்பாளி அதற்கொரு விளக்கம் கொடுத்துவிடுவதாலேயே அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அது வெறும் Screen play writing CRAFT சார்ந்த நியாயமற்ற உத்தி என்று சொல்லக் கூடாதா?

திரைக்கதை பாணியே எப்படி இருக்கிறதென்றால் - ஒன்றை சந்தேகிக்கும் வகையில், வெறுக்கும் வகையில் வலிந்து காட்டி, பின்னர் அது  / அவர்கள் அப்படியில்லை என்று ஒரு கட்டுடைப்பு! “பார்த்தீங்களா இந்த  PREJUDICE தான் உங்க கிட்ட பிரச்சினை, எப்படி உங்கள ஏமாத்துனோம்” என்று புளங்காகிதம் அடைய விரும்பினார்கள் போல் இருக்கிறது. Mystery கதைகளில் இயல்பாக பார்வையாளர்களுக்கு ஒரு சந்தேகம் வரும், இயல்பாகவே அவரில்லை என்னும் விலகல் நடைபெறும். ஆனால் இங்கே எல்லாம் செயற்கை.

இப்படி ஒவ்வொன்றாக யோசிக்கையில், எல்லாமே சுவாரஸ்யம் மற்றும் இன்றைய சந்தைக்கு தேவையான எல்லாரையும்  உள்ளடக்கிய ஒரு பேக்கேஜிங் செய்திருக்கிறார்கள். அதில் தவறில்லை, ஆனால் Convincing ஆக இருக்க வேண்டும், யாரை ‘கெட்டவராக’ காட்டுகிறார்கள் என்பதில் கூருணர்வு இருக்க வேண்டுமல்லவா? 

ஜனகனமன என்றொரு படம் வந்தது. அதில் ஒவ்வொரு முடிச்சாக கட்டவிழும். ஓர் அதிர்ச்சி காத்திருக்கும். அது இயல்பாக, நம்பும்படியாக இருந்தது. அப்படி ஓர் உணர்வை சுழல் எனக்கு தரவில்லை. திரைக்கதையில் மெனக்கெடலும் இல்லை, நேர்மையும் இல்லை! தொழிற்சாலை பின்னணி என்பதே ஒரு பேக்கேஜிங் உத்திதான்! உத்திகளில் தவறில்லை, ஆனால் அதை கூருணர்வுடன் கையாண்டிருக்கலாம்!

பிரம்மாண்டம், Visual Treat, Detailing, கண்களுக்கு குளிர்ச்சியான பல விசயங்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு இன்னும் இதர தொழில்நுட்ப விசயங்கள், கடின உழைப்பு என்பதற்காக செயற்கையாக கோர்கப்பட்ட  Mystery / Mystic / politically Class Insensitive content ஐ விமர்சனங்கள் இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன?

சுழல் – பிரம்மாண்டமான Making மூலம் காதில் பூச்சுற்றும் முயற்சி!

ரசிப்பவர்களின் ரசனையை நான் கேள்வி கேட்காத போது, எனது விமர்சனத்தை தேவையில்லாத ஒன்று, வேண்டுமென்றே குறை கண்டுபிடிக்கிறீர்கள் என்று சொல்ல யார்க்கும் உரிமை இல்லை!

இதுபோல் பாதிக்கப்பட்டால், ஒருவர் என்னதான் செய்ய வேண்டும்? காவல்துறை என்னதான் செய்ய வேண்டும்? யார் மீதும் சந்தேகப்படக் கூடாதா? என்று ஒரு கட்டம் வரை குழம்பி நிற்க வேண்டியுள்ளது! இறுதியில் யாரை முதலில் சந்தேகப்பட வேண்டும் என்கிற ‘MESSAGE’ அவசியமானது! தெளிவானதும் கூட. ஆனால் அதை சொல்வதற்கு, எங்கெல்லாம் சென்று வருகிறார்கள், அதற்கு எடுத்துக் கொண்ட பின்னணியில் ஒரு நேர்மை இல்லை, கூருணர்வு இல்லை என்பதே எனது விமர்சனம்!  அதோடு யாரை நல்லவர்களாக காட்டுகிறார்கள் என்னும் போது, தொழிற்சங்க பின்னணியும் சேர்ந்து வருவதால், ரத்தம் உறிஞ்சிக் கொழிக்கும் ஆலை முதலாளிக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது!

தொழிற்சாலை, சன்முகம் மாதிரியான ஒரு தொழிற்சங்க தலைவர், உறுப்பினர் பின்னணியில்லாமல் ஒருவேளை இந்த கதை எழுதப்பட்டிருந்தால், சொல்ல வந்த கருத்தை கொண்டாடி இருக்கலாம்!

அப்படியே கொண்டாடுபவர்கள் கொண்டாடுங்கள்! ”ரசனை சார்ந்து - நீ ஏன் இப்படி பார்க்குற” என்று கேள்வி கேட்கும் உரிமை எனக்குமில்லை, மற்றவருக்குமில்லை.

Additional links:

https://www.facebook.com/Kotravai.N/posts/pfbid0H9LWxNZHMfxaGkMeYwf6xR9o8DRKhYGmSoZr32M6ZU5mgubUM6m5DzopGpMLjdyAl 

https://www.facebook.com/Kotravai.N/posts/pfbid0R4tkMxqp6bNCjWxhhBDppdKp9f9pz3zoNTYJ1jJc48WcGi2ss6CCQ2ns72PK254Pl

https://www.facebook.com/Kotravai.N/posts/pfbid02svEBgnTqDWHn74mJwgwCsajLL7DFsuioqVGLcSgSLzJ18Gzfzdj9MgMAPcaSZS4ol

 அந்த முதலாளி தமிழனாகவே இருந்திருக்கலாமே! சேட்டு என்று வைத்துவிட்டு, அவன் மற்றும் அவனது மகன் மூலம் பார்வையாளர்களை நோக்கி வைக்கும் கேள்விகள் / சொல்லும் மெசேஜ் “ஏன் அப்படி இருக்கக் கூடாதா?” என்கிற பரந்த மனப்பான்மை சார்ந்த பிரச்சினையல்ல… படைப்பாளர் ஏன் அப்படி அவர்களை வைத்தார்கள் என்று அணுக வேண்டிய பிரச்சினை!

”அவங்கள்லையும் நல்லவங்க இருக்கலாம், இவங்கள்ள கெட்டவங்களும் இருக்கலாம்!” – எத்தகைய அரசியல் பின்னணியில் இந்த பாடம் கற்பிக்கப்படுகிறது? இனம், மொழி, பிரப்பு, மூலதன ஆதிக்க அரசியல் எதிர்ப்பு போராட்ட உணர்வை பகடி செய்யும் நடுநிலைவாதமிது! பிரிவினைவாதத்தை வளர்ப்பவர்கள் என்று சொல்லாமல் சொல்வதாகவே என்னால் எடுத்துக்கொள்ள முடிகிறது! 

 

 

No comments:

Post a Comment