May 31, 2021

நீலம் பண்பாட்டு மைய ஆதரவுவாதிகளின் தேர்ந்தெடுத்த பண்புவாதம்

 நீலம் பண்பாட்டு மையத்தின் கம்யூனிச காழ்ப்புணர்ச்சி மிக்க டிவீட்டிற்கு நேர்ந்த எதிர்வினைகளை ஒட்டி ஆங்காங்கே சில விளக்கங்கள் தரப்படுகின்றன. இரண்டு பதில்கள் என் கவனத்திற்கு வந்தன.

 1. கம்யூனிஸ்ட் கட்சியில் இட ஒதுக்கீடு கேட்பதே வேடிக்கையானது என்றும் அப்படிப் பார்த்தால் ஒன்றிய அரசில் 6 தலித்துகள் உள்ளனரே அவர்கள் தான் தலித் காவலர்களா என்று லாஜிக்காக மடக்கியும்; எத்தனை பேர் தோழர் டி.ராஜா பொதுச்செயலாளர் என்ற உயரிய பொறுப்பில் உள்ள சிபிஐ கட்சியில் இணைந்துள்ளனர் என்றும் அறச்சீற்றத்தோடு முடிவடைகிறது.

படித்துவிட்டு வந்த சிரிப்பை என்னால் அடக்க இயலவில்லை. காரணம்: இதே நபர் தான் இடதுசாரி கட்சிகளும் சாதியத்திலிருந்து தப்பவில்லையா என்ற கேள்விக்கு “இடதுசாரி கட்சிகள் தோன்றி 100 வருடம் நெருங்குகிறது. ஆனால் தலைமைப் பதிவில் எத்தனை பேர் (தலித்துகள்) உள்ளனர் என்னும் கேள்வி எனக்கும் உள்ளது” என்று பேசியிருக்கிறார். அவர் தான் இன்றைக்கு மேற்சொன்ன பதிலை கொடுக்கிறார்.

 இது காலம் செய்த மாயமா… இல்லை பதவி செய்த மாயமா தெரியவில்லை. ஆனால் மார்க்சியக் கட்சியில் இருந்து கொண்டு இவர் மார்க்சிய அடிப்படையில் சாதியப் பிரச்சினையை விளக்கி நான் கண்டதில்லை. சாதி ஒரு மன நோய் என்பதாகவே பேசிக் கொண்டிருப்பவர். மார்க்சியம் குறித்த எதிர்மறை எண்ணத்தை உருவாக்குவதில் இவர் பங்கு ஒன்றும் குறைவில்லை.

 2. இரண்டாவது விளக்கம்: அவர்கள் சொற்களில் தவறிருக்கலாம் கேள்வி நியாயமானதே என்று தொடங்கி… அதற்காக இப்படியா பழி வாங்கும் விதமாக தாக்குவீர்கள். ஜனநாயகம், தோழமை, பொதுவுடைமை பண்பு என்று நமக்கே வகுப்பெடுக்கிறார் ஒருவர். கான்ஸ்பிரசி தியரி, மதிப்பிழக்கம், சமூக நீக்கம் செய்யப் பார்க்கிறீர்களா.. ஐயகோ… என்று நீண்டு… உங்கள் எண்ணம் நிறைவேறாது என்று முடிகிறது.

 ஆஹா! என்னவொரு ஜனநாயகப் பண்பு. தேர்ந்தெடுத்த நியாயவாதம்!

அம்பேத்கரை விமர்சித்த ஒரே காரணத்திற்காக ரங்கநாயகம்மா, நான், வசுமித்ர மூவரும் தொடர்ந்து தாக்கப்பட்டபோது எங்கே போனது இந்த “போதனை”? எவ்வளவு ஆபாசமான, கொச்சையான தாக்குதல்கள். கொலை மிரட்டல்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் நடந்திராத அதிசயத்தை இவர்கள் எல்லாம் சேர்ந்து நிகழ்த்திக் காட்டினார்களே. சக கம்யூனிஸ்ட் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார்… யார் தலைமையில்? தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில்…

 அப்போது இதே நீலம் பண்பாட்டு மையமும், பா. இரஞ்சித்தும் அதை கொண்டாடினார்கள். மாறி மாறி டீவீட் செய்து மகிழ்ந்தார்கள். கருத்து சுதந்திரம் பேசும் பா. இரஞ்சித் அதை நியாயப்படுத்தினார். இதுதான் ஜனநாயகமா? இது தான் தோழமைப் பண்பா? அல்லது இதுதான் அம்பேத்கரியமா?

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். தெரியவில்லை எனில் பண்புடன் விளக்குங்கள்… என்கிறார்களே இதை ஏன் அன்றைக்கு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை.

 

// தலித்துகளின் உரிமைகளுக்காகச் சமரசமற்ற காத்திரமான உரையாடலை நிகழ்த்தியவர் பாபாசாகேப் அம்பேத்கர்// மறுப்பதற்கே இல்லை. ஆனால், அதனோடு சேர்ந்து மார்க்சியம் குறித்தும், கம்யூனிஸ்டுகள் குறித்தும் ஒரு எதிர்மறை எண்ணத்தையும் உருவாக்கிவிட்டார் என்பதே துயரம்.

 

இன்றைக்கு ஒரு சில சமூக ஊடக பதிவிற்கே இந்தளவுக்கு துடித்துக் கொண்டு மறுப்பும், விளக்கமும் தெரிவிக்க வருகிறார்களே. தலித்துகள் உள்ளடங்கிய இந்திய பாட்டாளி வர்க்கம் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள பாட்டாளி மக்களின் விடுதலைக்கான ஒரு தத்துவத்தை, அதை ஏற்றுக் கொண்டு உழைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருப்பார்கள், வேடிக்கை பார்க்க வேண்டுமா?

 

கம்யூனிஸ்டுகள் தான் வன்முறையாளர்களாயிற்றே, சாத்வீகத்தில் நம்பிக்கையுடைய அம்பேத்கரிஸ்டுகள் ஏன் ஒரு கம்யூனிஸ்டுக்கு எதிராக சாதி வெறியன் என்று சதி செய்து சிறைக்கு தள்ளப் பார்த்தார்கள்?

ஆனால் காலம் காலமாக கம்யூனிஸ்டுகளை, மார்க்சிய தத்துவத்தை பழிக்கும் நபர்களிடம் கம்யூனிஸ்டுகள் பேசிக் கொண்டுதானே இருக்கிறோம், வழக்கா தொடுத்தோம்?

அதெப்படி அது தங்களுக்கு வந்தால் தலைவலி, அடுத்தவருக்கு இவர்களே செய்தால் அது அம்பேத்கரிய போராட்டமா?

பா. இரஞ்சித்திற்கோ அல்லது ஒரு சில அடையாள அரசியல் கும்பலுக்கோ வக்காலத்து வாங்கித் தான் இங்கு தலித்திய ஆதரவாளர் பட்டம் பெற வேண்டிய அவஸ்தை கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை.

 

பா. இரஞ்சித் விமர்சிக்கப்படுவது போல் தோழர் திருமாவளவன் ஏன் விமர்சிக்கப்படுவதில்லை என்னும் வேறுபாட்டை கண்டால், serving capitalism, NGO politics and only playing hate politics against BCs & Dravidian Parties & Communists என்பதன் பொருள் புரியும்.

அம்பேத்கர் மீதும், தலித் மக்கள் விடுதலை மீதும் உண்மையான அக்கறை இருப்பதால் தான் இதுவரை கம்யூனிஸ்டுகள் பலர் இவர்களைப் போன்ற மேட்டுக்குடி தலித்துகளின் கம்யூனிச எதிர்ப்பு வன்மங்களை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் இனியும் அது நீடிக்காது.

 

இந்த பண்பாட்டு கும்பலோடு சேர்ந்து கொண்டு சி.பி.எம் மின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி செய்த வரலாற்று தவறை இனியாவது உணர வேண்டும். இப்போது உங்களை தொட்டதும் கூப்பாடு போடுகிறீர்கள் அல்லவா? இனியாவது ஏற்றுக்கொண்ட தத்துவத்திற்கு உண்மையாக நடக்குமாறு “தலித்திய அடையாள அரசியல்வாதிகளுக்கு” கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தட்டும்.

தலித்திய அடையாள அரசியல் செயல்படும் ஆபத்தை கண்டே 20 வருடங்களுக்கு முன் ரங்கநாயகம்மா அம்பேத்கரின் சிந்தனையை ஆய்வு செய்து விமர்சன நூல் எழுதினார். அதை நான் படித்தபோது அவசியம் கருதி மொழிபெயர்த்தேன். அன்று தொடங்கி இன்று வரை எங்களுக்கு எவ்வளவு துன்புறுத்தல்கள்? இணையவெளியில் இதை ஊக்குவித்து, அடுத்த நிலைக்கு கொண்டு சென்றவர்கள் யார்?

 

நடைமுறையில் கருப்பு, சிவப்பு, நீலம் என்று எல்லாரோடும் கைக் கோர்த்தே போராடுவோம். அதை யாரும் இங்கே உடைக்க நினைக்கவில்லை. அது முடியவும் முடியாது. ஆனால் தத்துவார்த்த அடிப்படையில் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு / தலித் விடுதலைக்கான தீர்வு யாரிடம் உள்ளது என்ற விவாதம் வருகையில் இரக்கமின்றி, பூர்ஷுவா கருணைவாத சால்ஜாப்புகள் இன்றி விமர்சிக்க சிலர் உள்ளனர். அவர்களை நீங்கள் முதலில் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளுங்கள்.

 

கேள்வி கேட்டால் உங்கள் தத்துவத்தை முன் வைத்து பதில் சொல்லுங்கள். கருத்தை கருத்தால் எதிர்கொண்டு பழகுதல் தான் இடதுசாரிகளின் ஜனநாயகப் பண்பு. நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களோ முதலில் அதை கொடுத்துப் பழகுங்கள். சமத்துவம் நாடும் நீங்கள் அனைவருக்கும் அதே கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டுங்கள்.

 

பி. கு: அது கருத்தா வசையா என்பதே விவாதமல்ல… ஏனென்றால் ரங்கநாயகம்மா குறித்து வந்த வசைகளின் தொகுப்பு ஏற்கனவே வசுமித்ரவின் அம்பேத்கரும் அவரது தம்மமும் நூலில் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த நூலும் வருகிறது. பொருமை காக்கவும்!

 

No comments:

Post a Comment