Jun 1, 2021

உழைக்கும் மகளிர் நிலை

 


..  ஆனால் பெண்களின் உழைப்பு வழக்கமானதாக இல்லாத தொழிற்துறைகளில் அவளின் கூலி மிகவும் குறைவானது என்பதால் பெண் வாழ்வதற்குப் போதுமான வருவாயின்றி, ஒன்று பெற்றோரையோ அல்லது கணவனையோ சார்ந்தே வாழ வேண்டியுள்ளது.  அதற்கும் வழியில்லை எனில், விபச்சாரம் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டும் நிலைக்கு ஆளாகிறார்க்ள்.  சமீபத்தில், 1899 மே மாதம் இரிகாவில் இதனால் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கலகம் ஏற்பட்டது. சணல் ஆலையில் பெண்கள் கூலி உயர்வு கேட்டுப் போராடியதோடு, தொழிற்சாலை நிர்வாகம் குறித்துப் புகார் அளிக்க ஆளுநர் அலுவலகத்திற்கு கூட்டாகச் சென்றனர்.  போகும் வழியில், அப்பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அலெக்சாண்ட்ரோவ் பூங்காவில் சிறை வைக்கப்பட்டனர்.  வேலையை விட்டுக் கிளம்புகையில், ஃபீனிக்ஸ் தொழிற்சாலை ஆண்களும், மற்றும் சிலரும் பலவந்தத்தைப் பிரயோகித்து, சிறைவைக்கப்பட்ட பெண்களை விடுவித்தனர். உடனே ஆளுநர் இராணுவத்தை வரவழைத்தார். 5 முதல் 15 மே வரை ரிகா ஒரு போர்க்களமானது.

 இராணுவத்தினர் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நத்த, தொழிலாளர்கள் அவர்கள் மீது கல் வீசினர், கட்டிடங்களுக்குத் தீ வைத்தனர்.  அதனைத் தொடர்ந்து அவர்களுடைய சீற்றம் விபச்சார விடுதிகள் மீது திரும்பியது.  ஒரே இரவில் 11 விடுதிகளை அடித்து நொறுக்கினர்.  தொழிலாளர்கள் எதனால் விபச்சார விடுதிகளை நொறுக்கினர்?  வேலை நிறுத்தப் போராட்டத்திற்கும், தொழிலாளர்களின் கலகத்திற்கும் என்ன தொடர்பு?  விபச்சார விடுதிகளுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?  தொழிற்சாலை அதிகாரிகளிடம் தங்கள் மனைவிகளின் சம்பளம் வாழ்வாதாரத்திற்குப் போதுமானதில்லை என்று முறையிட்டபோது, அப்படியெனில் விபச்சாரம் செய்து அவர்கள் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி அவமதித்துள்ளனர்.

 ஆக, மிகவும் மோசமான கூலி போதாமல் பெண்கள் பிழைக்க முடியவில்லை என்றால், விபச்சாரம் செய்து அதை சமாளிக்கலாம் என்பது வெளிப்படையாக பரிந்துரைக்கப்பட்டது.  அப்படியென்றால் தன்னுடைய பிச்சைக்கார வாழ்விற்காக, பட்டினியைப் பொறுக்க முடியாது, சில வேளைகளில் பட்டினிச் சாவிலிருந்து தப்பிக்க தன்னையே விற்உம் ஒரு ஏழைப் பெண்ணை நாம் எப்படி குறை சொல்ல முடியும்?  ஒரு விபச்சாரியாக இருப்பது ஒன்றும் கொண்டாட்டமானதல்ல என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஏழ்மை என்றால் என்னவென்றே தெரியாத, நன்றாக உண்டு கொழுத்து வாழும் பூர்ஷுவாக்களும் அவர்களது மனைவிகளும் தொழிற்சாலை மகளிர் மற்றும் சிறுமிகளின் இந்த இழிவான நிலை பற்றி மிகவும் வக்கிரத்துடனும், பாசாங்கு கூடிய வெறுப்புடனும் “விபச்சாரி” என்றழைப்பதை நீங்கள் கேட்க வேண்டும்.  மறுபுறம் பூர்ஷுவா பேராசிரியர்களோ விபச்சாரிகள் ஒன்றும் அடிமைகள் அல்ல, அவர்கள் தம் விருப்பத்தின் பேரிலேயே அப்பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்று கூறுகின்றனர்.  தூசும், விசவாயுவும் சூழ்ந்திருக்கும் ஒரு பணிமனையில் மூச்சுவிடக் கூட அல்லல்படும் பெண் தொழிலாளர்கள் தம் விருப்பத்துடனே ஒரு நாளைக்கு 16 முதல் 18 மணி நேரம் வேலை செய்வதாக நாகூசாமல் பேசுகின்றனர்.

நிலைமை இவ்வாறிருக்க, சொற்பக் கூலி பெறும் ஒரு பெண் போதிய வருமானத்திற்காக தன்னையே விற்றுக்கொள்ள வேண்டிய  அவசியமின்றி கணவனால் அல்லது பெற்றோரால் பராமரிக்கப்படுகிறாள் என்றால், எவரின் துணையும் இன்றி தன் சொந்தக் காலில் வாழும் பெண்ணைப் போன்று அவள் சுதந்திரமானவளாக இருக்க முடியாது.  தனித்து வாழ முடியாத காரணத்தால் அத்தகைய பெண்கள் தங்களைப் பராமரிப்பவர்களுக்கு அடி பணிந்தே வாழ வேண்டியிருக்கும்!

-        ந.கா. க்ரூப்ஸ்கயா, உழைக்கும் மகளிர். தமிழில் – கொற்றவை. சிந்தன் புக்ஸ் வெளியீடு    


No comments:

Post a Comment