Apr 27, 2019

நான் சாதி வெறி பிடித்தவளாகவே இருந்துவிட்டுப் போகிறேன்!



நான் சாதி வெறி பிடித்தவளாகவே இருந்துவிட்டுப் போகிறேன்!
‘புகழ் மிக்க’ தலித்தியவாதிகள் அல்லது இடது தாராளவாதிகளாக தங்களை முன்னிறுத்திக் கொள்வோர், சாதியப் பிரச்சினை குறித்து பேசும்போதெல்லாம் நான் எனது விமர்சனங்களை வைத்து வருகிறேன். சமூகத்தின் கட்டுமானம் குறித்தும், சாதியப் பிரச்சினை குறித்தும், சாதி ஒழிப்பு குறித்தும் இவர்கள் கொண்டிருக்கும் பார்வையில் சில போதாமைகள் உள்ளன என்பதே அதற்கு காரணம்..
மனித சமூக உறவுகள் பற்றிய புரிதலில் உள்ள குறைபாடு அது. அதனை விஞ்ஞான பூர்வமாக விளக்கும் தத்துவம் மார்க்சியம்.
தலித்தியவாதிகளுக்கு மார்க்சியம் குறித்த தவறான புரிதலானது அம்பேத்கரிடமிருந்து தொடங்குகிறது. ஒடுக்கப்படுவதின் வலியிலிருந்து கண்டால் மட்டுமே அது புரியும் என்பதே இவர்களின் வாதம்! மீண்டும் மீண்டும் சொல்கிறேன் ஒரு பெண்ணாக ஒடுக்கப்படுவதின் வலியை உணர்வதில் உங்களை விட நான் எந்த விதத்திலும் குறைந்தவளாக இருக்க முடியாது! ஏனென்றால் நாம் இருவருமே உடல் ரீதியாக கொடுமைகளுக்கு உள்ளாகிறோம்.
அதற்கான விடையை தேடிய போதே எனக்கு மார்க்சியம் விடிவெள்ளியாக அமைந்தது.
அதனை தொடர்ந்த செயல்பாடுகளினூடாக நான் அடையாள அரசியலின் ஒரு பிரிவாக தலித்திய பிரிவினைவாத அரசியலை சிலர் முன்னெடுப்பதை காண நேர்ந்தது. அவர்கள் மார்க்சிய வெறுப்பை கொண்டிருந்தனர். எந்நேரமும் கம்யூனிஸ்டுகளை பழித்தனர். கம்யூனிஸ்டுகளின் தியாகங்களைக் கூட பொருட்படுத்தவில்லை. அதனால் கம்யூனிஸ்டுகளுக்கோ எனக்கோ எந்த அவமானமும், இழப்புமில்லை. ஆனால் இழப்பு அவர்கள் யாருக்காக போராடுவதாக முன் வைக்கிறார்களோ அவர்களுக்குத்தான். ஆம் உழைக்கும் வர்க்கத்திற்கே இழப்பு!
ஆகவே அவர்கள் எங்கிருந்து இத்தகைய தவறான மார்க்சிய வெறுப்பை கற்றார்கள் என்று ஆய்ந்தபோது, அது அம்பேத்கரில் தொடங்கி, ராஜா காலே என்று வளர்ந்து இன்று தாழ்த்தப்பட்டோரில் ஒரு குறிப்பிட்ட சாதி ஆதிக்க அரசியல் தலைமையின் கீழ் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. ஆகவே சாதியப் பிரச்சினைக்கான தீர்வாக இத்தகைய அடையாள அரசியல்வாதிகள் (பெரும்பாலும் இவர்கள் குட்டி பூர்ஷுவா மனநிலை உடையவர்கள், முதலாளித்துவ எதிர்ப்போ, தனியுடைமை ஒழிப்போ இவர்களுக்கு பிரதானம் அல்ல! அம்பேத்கரை முன்வைத்து தலைகீழ் சாதியவாத அரசியலை பிழைப்புவாதமாக மேற்கொண்டு உழைக்கும் வர்க்க அணிதிரட்டலுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறார்கள் (அறிந்தும் அறியாமலும்).
இத்தகைய சூழலில் நான் அம்பேத்கர் போதாது என்னும் நூலை மொழிபெயர்த்தேன். நான் ஏற்கனவே எனது சிறு குறிப்புகளில் கூறியுள்ளது போல் அதில் மொழிபெயர்ப்பு சிக்கல்களும், மொழிபெயர்ப்பு தவறுகளும் உள்ளன (கருத்துரீதியாக அல்ல). அதனை ஒவ்வொருவரும் சுட்டிக் காட்டுகையில் நான் விளக்கம் கொடுத்துள்ளேன். ரங்கநாயகம்மாவும் கொடுத்துள்ளார். (உ.ம். lower, upper – மேல், கீழ் vs Deppressed class – தாழ்த்தப்பட்ட மக்கள்…. இப்படியாக).
மொழிபெயர்ப்பு தவறுகளுக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். ஆனால் எனது விமர்சனத்தில் நான் உறுதியாகவே உள்ளேன். சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரிடம் தீர்வு இல்லை! அவர் முன்வைப்பது சீர்திருத்தங்களை உள்ளடக்கிய சட்டவாதம். அதன் எல்லை குறிப்பிட்ட அளவேயானது. அது ஏன் தீர்வை தராது என்பதை புரிந்துகொள்ள முதலில் மார்க்சியத்தை கற்றிருக்க வேண்டும்.
அதன் பின்னர் மார்க்சியத்தில் தீர்வு இல்லை எனில் அதனை ஆதாரங்களுடன் மெய்ப்பித்து, ‘அம்பேத்கரியத்தை’ முன் வைத்து இந்த சமூகத்தின் ஏற்றதாழ்வுகளுக்கும், வறுமைக்கும், ஒடுக்குமுறைக்கும், குறிப்பாக உழைப்பு பிரிவினைக்கும் எது காரணம் என்று விளக்க வேண்டும். அதனை எப்படி ஒழிப்பது, புதியதோர் உலகத்தை எப்படி படைப்பது என்பதை வேலைத்திட்டத்துடன் முன் வைக்க வேண்டும்.
சாதி என்றால் என்ன? அதன் அடிப்படை என்ன? அது எப்படி உருவானது? எப்படி வளர்ந்தது? சாதியப் பாகுபாடு எந்தெந்த தளங்களில் எல்லாம் வேலை செய்கிறது. அதன் தொடக்கம் எப்படி இருந்தது, தற்போதைக்கு அது எப்படி தகவமைந்துள்ளது? அது எதனால் நிகழ்ந்தது? (அம்பேத்கர் விளக்கியிருக்கிறார், அதன் மீதான விமர்சனங்களும் ஏராளமாக உள்ளன. நான் சொல்வது தற்போதைய தலித்திய அறிவுஜீவிகள், திரைத்துறை ‘புகழ்மிக்க’ அண்ணன்கள் விளக்க வேண்டும்.
அம்பேத்கர் நவீன இந்தியாவின் தந்தை என்கிறார்கள். மகிழ்ச்சி! நவீன இந்தியா என்றால் என்ன?
ஒருவர் பிச்சைக்காரனாகவும் மற்றொருவர் கோடீஸ்வரனாகவும் இருப்பது நவீன இந்தியா! இதை வடிவமைத்தவர் அம்பேத்கரா? சாதியக் கொடுமைகளும், மாட்டுக் கறி உண்பதற்கும் தடை விதிக்கும் பாசிச அரசு இருப்பதே நவீன இந்தியா! இதை வடிவமைத்தவர் அம்பேத்கரா?
பெண்கள் மீது எத்தகைய பாலியல் வன்கொடுமைகள் நிகழ்கின்றன… குடும்ப வன்முறைகள் நிகழ்கின்றன! இதுதான் நவீன இந்தியாவின் நிலை! இதை வடிவமைத்தவர் அம்பேத்கரா?
இந்துத்துவ பார்ப்பன வெறியும், முதலாளித்துவ அராஜகமும் நிலவும் சுரண்டல் மிக்க இந்தியாவின் தந்தை என்று அம்பேத்கரை சொல்வது உண்மையில் நாம் அவரை அவமதிப்பதற்கு சமம்.
அப்படியென்றால் ஏன் அம்பேத்கரை இப்படி பூதாகரமாக உயர்த்திப் பிடித்து கடவுள் தன்மைக்கு மாற்றுகிறார்கள்?
இது அவர்களின் சுயசாதி பற்றிலிருந்து மேற்கொள்ளப்படும் உணர்ச்சிகரமான, பிழைப்புவாத அரசியல் என்பதைத் தாண்டி வேறெப்படி வரையறுப்பது? இது நட்பு முரண்பாடே ஆகும்! சிலர் முதலாளித்துவத்தின் கைகூலிகளாக அறிந்து செய்கின்றனர். சிலர் அறியாமையின் காரணமாக தங்களுக்கான தலைவரும் மீட்பரும் வேண்டி இத்தகைய உணர்ச்சிகரமான அரசியலுக்கு ஒத்து ஊதுகிறார்கள்.
எனக்கு மார்க்சியம் தெரியாமல் போகட்டும், நான் சாதி வெறி பிடித்தவளாகவே கூட இருந்துவிட்டுப் போகிறேன். மார்க்சியத்தில் தீர்வில்லாமல் கூட போகட்டும். ஆனால் சாதி ஒழிப்பிற்கும், (குறிப்பாக இடைநிலை சாதிகளை சாதி வெறியிலிருந்து எப்படி மீட்பது? தாழ்த்தப்பட்ட மக்கள் தலித்துகளாக அணிதிரட்டப்பட்டால், அவர்களை எந்த அடையாளத்தின் கீழ் அணிதிரட்டுவது?) வறுமை ஒழிப்பிற்கும், பெண் விடுதலைக்கும், மாற்றுப் பாலினர் மற்றும் இதர ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலைக்கும், தேசிய இன சிக்கலுக்கும் சரியான வழிகாட்டுதலை வழங்கக்கூடிய தத்துவம் எது? இவை பற்றி விஞ்ஞானபூர்வ உலக கண்ணோட்டத்தை வழங்கக் கூடியவர் யார்?
பிரச்சினையின் ஆணி வேரை சுருக்கமாக முன்வைத்து, அதற்கான தீர்வையும் வேலைத்திட்டத்தையும் முன் வைக்க முடியுமா அவர்களால்?
அப்படி வைப்பார்கள் எனில், நான் எனது விமர்சனங்களை கைவிட்டு அவர்களின் 'தத்துவத்தையும்’, வேலைத்திட்டத்தையும் சேர்த்து பிரச்சாரம் செய்ய தொடங்குவேன்.

No comments:

Post a Comment