Jan 23, 2012

ebay.in பாலினவாத விளம்பரத்தை நீக்கியது....



மாசெஸ் எனும் அமைப்பு மூலமாக ebay.in வெளியிட்டிருந்த பாலினவாத விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கெதிராக change.org மூலமாக ஒரு கையெழுத்துப் பிரச்சாரம் 10.01.2012 அன்று துவங்கப்பட்டு எல்லோரிடம் அதற்கு ஆதரவு கோரப்பட்டது.  மூத்த எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட மானுட சமத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட பலர் உலகெங்கிலும் இருந்து அதில் கையெழுத்திட்டனர்.

ஈபேவுக்கு தொலைபேசி வழியாக, மென்கடிதங்கள் வழியாக கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது. சரியான பதில் கிடைக்கவில்லை. அதன் அத்தனை தளங்களிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பின்னர் பொத்தாம் பொதுவாக ஒரு பதில் சொன்னது.  அதை ஏற்றுக்கொள்ளாமல் அதை ஏன் ஏற்றத்தாழ்வாக, பாலினவாதமாக கருதுகிறோம் என்று மீண்டும் ஈபேவுக்கு கடிதங்கள் எழுதப்பட்டன. மனுவில் 100 பேர் வரை அப்போது கையெழுத்திட்டிருந்தனர். ஈபேவுக்கு மாசெஸ் உறுப்பினர் ஒருவரும் நேரடி மென் கடிதம் எழுதினார். நாளுக்கு நாள் ஆதரவு பெருகிய நிலையில் (132 கையெழுத்துக்கள்) ஈபேவின் விற்பனையாளர்கள் பொறுப்பின்றி சில காட்டமான பதில்களை கருத்துக் குழுமத்தில் வைத்தனர். ஆனாலும் நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை.

அடுத்து நேரிலேயே சென்று மனுவைக் கொடுத்து நம் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது என்று முடிவெடுத்து, அது குறித்தான தகவல்களை ஊடகங்களுக்கு இன்று அனுப்பினோம். Chennaionline.com இன்று மதியம் அதை உடனே வெளியிட்டது.  23.01.2012 (இன்று) மாலை ebay.in தளத்தின் முகப்புப் பக்கம் மாறி காட்சியளித்தது. ஆம் அது அந்த பாகுபாடு போற்றும் விளம்பரத்தை நீக்கியிருக்கிறது.

நமது மனுவிற்கு அடிபணிந்து அவர்கள் அதை செய்தார்கள் என்பதை அவர்கள் எழுத்துபூர்வமாகவோ, உளப்பூர்வமாகவோ கூட ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லையென்றாலும், எதிர்காலத்திலாவது விளம்பரங்களின் உள்ளடக்கும் குறித்து சற்று கவனம் கொள்வர் என்று நம்ப வாய்ப்பிருக்கிறது.

அம்மனுவிற்கு ஆதரவாக கையெழுத்திட்ட அணைவருக்கும் என் நன்றிகள்.

கொற்றவை
M.A.S.E.S – Movement Against Sexual Exploitation and Sexism.

No comments:

Post a Comment