Showing posts with label DMK. Show all posts
Showing posts with label DMK. Show all posts

Sep 21, 2026

எங்கே செல்லும் இந்த பாதை!


ஐஐடி ஒரு சித்திரவதைக் கூடாரமாகவும், சாதிய வன்கொடுமைக் கூடாரமாகவும் செயல்படுவதை நாம் பல்லாண்டு காலங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தற்போது ஒரு 19-20 வயது தலித் மாணவர் த..லை! 7 மாதத்தில் ஐஐடி மும்பையில் 3 மாணவர்கள் த..கொலை என்கிறார்கள்.


இதையெல்லாம் நாம் காத்திரமாக பேசி வந்தோம்.

அதுமட்டுமா தேசிய அளவில் என்ன நடக்கிறது என்பது பெரும் விவாதமாகிக் கொண்டே இருக்கும். பிஜேபி அரசு (மோடி அவர்கள்) "ஒரு பைசா தொட விட மாட்டேன்,  தொட்டவனையும் விடமாட்டேன்" என்று தொடங்கி (அண்ணனும் அதே வசனத்தை சொல்கிறார் அல்லவா) இன்று எங்கு பார்த்தாலும் ஊழல்! எந்த ராமனை வைத்து அரசியல் செய்து ஆட்சிக்கு வந்தார்களோ, அந்த ராமனின் கோவிலையும் விட்டு வைக்க வில்லை! 

"பதவியேற்று நான்கு ஆண்டுகளே ஆன நிலையில், ஊழலை முற்றிலுமாக ஒழிப்பது சாத்தியமற்றது என்பதை மோடி உணர்ந்தார். எனவே, தனது நிர்வாகத்தின் கீழ் நடைபெற்ற பெரும் முறைகேடுகள் மற்றும் மோசடிகளின் அனைத்துத் தடயங்களையும் திறம்பட ஒடுக்குவதற்கான விரிவான நடவடிக்கைகளை அவர் ஆரம்பத்திலிருந்தே மேற்கொண்டார்." - https://thewire.in/politics/scams-chaos-grip-bjp-ruled-states-as-power-brokers-and-influence-pedlars-rule-the-roost

அதே போல் மதவாத பிளவுகள்-அணிதிரட்டல்கள், சிறுபான்மையினர், தலித்துகள் மீதான வன்முறை, இடதுசாரிகள் மீதான அரசியல் ஒடுக்குமுறைகள், வழக்குகள், தேர்தலை மையப்படுத்தி SIR மூலம் அரசியல் நீக்கம், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை பறிப்பு, EVM முறைகேடு! இது தொடர்பாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் தேர்தல் ஆணையம் மீது வழக்கு தொடர்ந்து FIR பதிவு செய்ய வேண்டும் என்று காவல் துறையை அணுக இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.  https://www.facebook.com/share/v/1CF9ifdz4e/

மேற்கு வங்கத் அரசியலில் பெரும் கூத்து நடக்கிறது.

பாஜகவின் பொருளாதாரக் கொள்கை, இந்தி திணிப்பு மற்றும் தனியார்மயத்தை உள்ளடக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்த மாநில அரசுகளை "வழிக்கு கொண்டுவருதல்" என்று ஒரு பக்கம்.  (தொடர்கிறது)

திருப்பதி லட்டு விவகாரத்தில் விலங்கின் (மாடு, பன்றி) கொழுப்பு இல்லை, கலப்பட நெய் என்று அறிக்கை வந்துள்ளது. இதை வைத்து பெரிய அரசியல் செய்து...

இன்னொரு பக்கம் பள்ளிக்கூடங்களின் அவலம் குறித்த அதிர்ச்சிகர அறிக்கைகளும், காணொளிகளும் #CJP & Team மூலம் வெளிவந்து கொண்டிருக்கிறது. 


ABVP போன்ற மாணவர் அமைப்பு மூலம் கல்லூரி வளாகங்களையும் விட்டுவைப்பதில்லை.

எல்லாரையும் பணமற்ற பரிவர்த்தனைக்கு மாற செய்து தற்போது மக்களின் அடி வயிற்றில் கை வைப்பது போல் #UPI செயலிக்கு கட்டணம் என்கிறது பாஜக அரசு (முதலாளிகளுக்காக, அதுவும் பன்னாட்டு முதலாளிகளுக்காக). உத்திரபிரதேசத்தில் சிறு வியாபாரிகள் அதை எதிர்க்கத் தொடங்கி விட்டார்கள். நியாயமாக முதல்வர் விஜய் இந்த கட்டணக் கொள்ளையை கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும். (செய்தாரா??)
 

நீதியரசர் உஜ்ஜல் புயான் மதவாத பண்பாட்டு அராஜகம், காவலில் நிகழும் வன்முறை மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொ..கள், ஜனநாயக விரோத போக்கு குறித்தெல்லாம் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

இப்படி பல நிகழ்வுகள். (நானே Track வைத்துக்கொள்ளவில்லை. following https://www.facebook.com/thewire.in may help you stay updated) 


இப்படி தேசிய அளவில் எதிரொலிக்கும் குரல் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும். ஆனால் தற்போது தேசிய அளவில் என்ன நடக்கிறது என்பது  தமிழ் நாட்டில் பேசு பொருளாகவே இல்லை. 

உலக அரசியலும் கூட பேசி வந்துள்ளோம். ஏகாதிபத்தியங்களின் இன அழிப்பை கண்டித்திருக்கிறோம். தற்போது இடதுசாரிகள், முற்போக்கு, ஜனநாயக இயக்க அறிக்கைகள் வருகின்றன. (தாக்கம் ஒன்றும் பெரிதாக இல்லை) ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் மறந்தும் பாஜக என்கிற பெயரையோ, அவர்களின் அரசியலையோ, கொள்கையையோ விமர்சிக்கக் கூடாது என்னும் "கொள்கையில்" இருப்பதால் பொதுச் சமூகத்திலிருந்து பாசிச விவாதம் பாயசமாகி விட்டது. 


பாசிச எதிர்ப்பை தீவிரமாகக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசியல், பாசிச எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ-ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்டிருக்கும் இடதுசாரி கூட்டணி அல்லாத ஓர் ஆட்சி தமிழ்நாட்டில் “அவர்களுக்கு” தேவைப்படுகிறது. நல்லவர் என்று மக்கள் நம்பும் ஒரு பிம்பம்! (ரஜினிகாந்த் ஒதுங்கி விட்டார்) அப்படிப்பட்டவரை  முன்னால் வைத்து ஆட்சி நடக்கிறது. அதற்கு ஆதாரமாக - எழுதிக் கொண்டு வந்ததைத் தாண்டி முதல்வர்  எதுவும் பேசுவதில்லை. அவரைத் தவிர முதல்வர் சார்பாக பிரதானமாக 4 பேர் தான் எதைப் பற்றியும் பேசுகின்றனர். (அதிலும் குறிப்பாக ஒருவர்!). இடதுசாரிகளை கணக்கெடுக்கச் சொல்லும் சுற்றறிக்கைகள். தலித்துகளின் இயக்க ரீதியான ஒற்றுமையை, இஸ்லாமிய இயக்கங்களின் ஒற்றுமையை உடைத்தாயிற்று. (எதிர்கட்சி ஆதரவு இயக்கங்கள், ஆளும் கட்சி ஆதரவு இயக்கங்கள்).


#தாவெகவினர் ஈடுபடுவது BINARY வெறுப்பு அரசியல், திசை திருப்பும் அரசியல், DE-Faming அரசியல், வரலாற்றையே திரிக்கும் அரசியல். தமிழ் நாட்டில் தற்போது பலமாக இருக்கும் “அவர்களது” எதிரியை குறிவைத்து அரசியல் செய்கின்றனர். இடதுசாரிகள் பக்கமும் அவ்வப்போது “moral questions” கேட்டு வந்து செல்கின்றனர். வேறு எந்த திட்டங்கள், மக்கள் பிரச்சினைகள் குறித்தும்  பேசுவதே இல்லை. 


தமிழ் நாட்டின் நிதிநிலை தற்போது வெளிவந்துள்ளது. PARTY FUND ஊழல் பணமெல்லாம் கஜானாவுக்கு வந்து விட்டது என்றார்கள். கடன் தான் ஏறியுள்ளது. 3 மாதங்களில்! மின்வெட்டினால் மக்கள் பெரிதும் அல்லல் படுகின்றனர். முன்பு திமுக என்றனர் தற்போது BSNL என்றதும் எனக்கு பகீர் என்றது. அடுத்த என்ன திட்டத்தை வைத்திருக்கிறார்கள் என்று! ஏனென்றால் நம் அனுபவம் அப்படி!  (மழை குறைந்தது, காத்து வரலை என்பது நேற்றைய காரணம்)! 


சாலையிலேயே வெ.டிக் கொ.ம் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சாதி ஆணவக் கொலைகளும் தொடரத்தான் செய்கின்றன, காவல் மரணங்களும் தொடர்கின்றன. சாதி ஆணவக் கொலையாக பதிவு செய்ய போராடினால் ஒடுக்குமுறை, மாணவர்கள் நீதி கேட்டு போராடினால் கடுமையான ஒடுக்குமுறை.  பெண்கள் பாதுகாப்பு குறித்து பெருமை பேசினர். சமரசம் சந்தி சிரிக்கிறது. 


இது ஒரு பக்கம் என்றால்… 


எந்த திட்டமும் முறைப்படி மக்களிடமும், அனைத்து கட்சிகளிடமும் கலந்து பேசி அறிவிக்கப்படுவதில்லை. எதேச்சிகாரப் போக்கில் அறிவிக்கப்படுகிறது. பின்பு போராட்டம் நடக்கிறது. திரும்பப்பெறப்படும் என்று அறிவிப்பு வருகிறது. அரசாணை வெளிவந்தாலும், முதல்வர் முடிவே எடுக்கல என்று ஒரு அமைச்சர் துணிச்சலுடன் தவறான தகவலை சொல்ல முடிகிறது. இந்த திரும்ப பெறுதல் எல்லாம் கூட இடைத் தேர்தல் வரை இருக்கலாம். போகப் போக என்ன நடக்கும் என்பது “அவர்களுக்கே” வெளிச்சம்! 


மக்களுடைய அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன, பாஜகவிவின் அரசியல் பொருளாதார கொள்கைகள் பற்றிய விவாதங்களே இல்லை - அது தமிழ்நாட்டையும் தானே பாதிக்கும். கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயிகள் பிரச்சினை, குடிதண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள், மேகதாது, வருசநாடு மேகமலை மக்கள் நிலை (வனத்துறை அமைச்சராவது சென்று சந்தித்தாரா?), நவோதையா பள்ளி திறக்க வேண்டும் என்கிற ஆணை என்று பல பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சில பிரச்சினைகளில் தவெக அரசு நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. ஆனால் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதித்தல், மக்கள் மத்தியில் இதை விவாத பொருளாக்குதல், மக்களை அணிதிரட்டி நம் உரிமைக்காக கடுமையான எதிர்வினைகளை பதிவு செய்து மாநில உரிமைக்காக அரணாக நிற்கும் அரசு என்று நிறுவுதல்  வேண்டாமா? 


அதற்கு முதல்வர் என்பவர் “ஆதிக்க சக்திகளை” நோக்கி காத்திரமாக எதிர்வினை ஆற்றக்கூடியவராக இருக்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பது என்ன? வெறுப்பரசியல். விஸ்வகுரு போலவே! தாவெகாவில் யார் பேசினாலும் வெறுப்பரசியலை உமிழ்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி அதை ஓட்டாக்கி வண்டி ஓட்ட நினக்கிறார்கள். செய்யட்டும். எல்லாரும்  செய்வது தான். But these people are going over board! Without any Political Ethics. Distorting History! 


அதையும் தாண்டி தமிழ்நாட்டின் நலன், மக்கள் நலன் என்று ஒன்று இருக்கிறது. அது ஒன்றிய அரசின் கொள்கைகளோடு தொடர்புள்ளது. அதைப் பற்றியும் பேசுவதும் எதிர்வினையாற்றுவதும் இல்லாதபோது, இவர்கள் யார் என்னும் ஐயம் எழத்தானே செய்யும்? 


இதில் விமான நிலைய மேலாண்மையை தனியார்மயமாக்க (ரகசிய) கடிதத்தை பிரதமருக்கு எழுதுவதெல்லாம் என்ன மாதிரியான போக்கு? பொதுச்சொத்து அனைத்தையும் தனியார்மயமாக்க எதற்கு ஓர் அரசு? அது எந்த அரசாக இருந்தாலும் சரி! (On June 18, 2026, GMR Group Chairman (Airports) and senior executives met with the Tamil Nadu Chief Minister, C. Joseph Vijay) https://tamil.oneindia.com/news/chennai/from-gmr-chief-meeting-in-june-to-privatization-letter-in-august-what-transpired-in-cm-vijay-airpor-832121.html


பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்ய சொன்ன காரணம் என்ன? தற்போது அங்கு சிப்காட் அமைக்கப்படும் என்கிறார்கள். இதையெல்லாம் எப்படி நியாயப்படுத்துகிறார்கள்? இதை கேள்வி கேக்கும் நிலையில் மக்கள் இல்லாத அளவுக்கு இணையத்திலும், வெளியிலும் abusive attacks நடக்கிறது. திசை திருப்பும் அரசியல், ஊழல் ஒழிப்பு என்னும் ஒற்றை கூச்சலில் அனைத்தையும் சுருக்கி விட்டார்கள். இன்னும் எவ்வளவு எழுதுவது என்று தெரியவில்லை! 


தமிழ்நாட்டின் அரசியல் போக்கு அச்சமூட்டுவதாக உள்ளது! ஒன்றிய அரசின் அழுத்தங்களைத் தாண்டி நாம் கல்வி, வேலை வாய்ப்பு, கட்டுமான வளர்ச்சி என்று சாதித்துக் கொண்டிருந்தோம்.. இனிமேல்??????  


இதில் என்ன கொடுமை என்றால் அன்றாடம் இந்த ஆட்சியின் அவலத்தைப் பற்றி எழுதவே நம் பொழுதும் ஆற்றலும் முழுமையாக செலவாகிறது. (அதுலையும் பாதி தான் முடியுது) மற்ற செய்திகளையோ, உலக அரசியலையோ கவனிக்கக் கூட நேரமில்லாத அளவுக்கு இவர்கள் நம் நேரத்தையும், கவனத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் என்ன பேச வேண்டும் என்பதையே இவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள் என்பது போல் உள்ளது. 


நம் வீடு பற்றி எரியும் போது நாம் அண்டை வீட்டைப் பற்றி கவலைப்பட முடியுமா என்று நாமும் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கே செல்லும் இந்த பாதை என்று இளையராஜாவிண் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது… 


ஊழல் ஒழிப்பு என்பது சாமானிய மக்களை எளிதில் சென்றடையும் கோஷம். ஊழல் ஒழிந்தால் தம் வாழ்வு சிறந்திடும் என்று மக்கள் நம்புகிறார்கள். அவர்களுக்கு அவ்வளவு தான் புரிதல். ஒவ்வொரு புதிய கட்சிகள் தோன்றும் போதும் இதைத்தான் முழுக்கமாக வைக்கின்றன. திரு மோடி தொடங்கி அண்ணன் விஜய் வரை. ஆனால் இவர்களுக்கு புரியாதது என்னவென்றால், முதலாளித்துவம் தான் ஊழலின் ஊற்று. இந்த ஆட்சியாளர்கள் அனைவரும் முதலாளிகளுக்கு ஆதரவான தனியார்மயக் கொள்கைகளை எதேச்சிகாரப் போக்கில் நிறுவுபவர்களாக இருக்கிறார்கள். இது ஊழல் இல்லையா? இதனால் பாதிக்கப்படப் போவது யார். ஏழைகளும், நடுத்தர வர்க்க மக்களும் தான். இது வளர்ச்சி அல்ல! “லாபம் என்றால் என்ன என்பதை படிக்காத வரை அல்லது இடதுசாரிகள் எடுத்து சொல்வதை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் என்ற அவதூறை நம்பும் வரை மக்களை ஏமாற்றுவது சுலபம்” 


#PPP என்பதும் அது போல தான் ஏமாற்று வேலை. நான் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்த்திருக்கிறேன். தனியார்-அரசு கூட்டு வேலைத்திட்ட முன்மொழிவு அனுப்பும் போதே இதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும், எவ்வளவு நிலத்தை கையகப்படுத்த முடியும் என்று என் முதலாளி கணக்கு போடுவார். அப்போது எனக்கு மார்க்சியமெல்லாம் தெரியாது. அரசியல் பக்கம் வராத ஒரு சராசரி “குடும்பப் பெண்” நான். 


உழைப்பாளிகளை முதலாளிகளிடம் அடகு வைப்பதுதான் இருப்பதிலேயே மிகப் பெரிய ஊழல்! அதற்கு துணை நிற்கும் எந்த கழகமும் ஊழல் கழகமே! 


ஒரு குட்டிக் கதை சொல்றேன்:


முதலாளிக்கும் டானுக்கும் சண்டை என்றால் அந்த இடத்தில் ஒரு புதிய டான் தேவைப்படுவான். மக்கள் ஒவ்வொரு டானையும் ஹீரோன்னு நினைச்சுக்குறாங்க! அடுத்தடுத்த டான்கள் தயாராகிட்டு இருக்காங்க. இதுக்கு நடுவுல இருக்குற டான் சூப்பர் ஹீரோவாக எல்லா முயற்சியும் போடுவாரு. அதனாலதான் “மேலிடத்த” பகச்சிக்காம அரசியல் செஞ்சு “செல்லுபடியாகுற அரசியல் மூலமா” மக்கள் ஆதரவும், தனியார்மயம் மூலமா முதலாளிகள் ஆதரவும் ஏகபோகமா கிடைக்குற வரைக்கும் கொஞ்சம் அடக்கி வாசிச்சுட்டு, அப்புறம் ஒரு ஆட்டம் ஆடலாம்னு நினைக்கும் போது இன்னொரு டான் இறக்கப்படுவார். 


இதுக்கு முடிவே இல்லையான்னு கேட்டீங்கன்னா, முடிவு உங்க கிட்ட தான் இருக்கு எந்த முதலாளிகளும் பேரம் பேச முடியாத இடதுசாரிகளை உங்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுப்பது. தமிழ்நாடு இடதுபக்கம் திரும்பும் நேரம் வந்துவிட்டது. அதுவே உண்மையான மாற்றம்.