Showing posts with label பார்ப்பனியம். Show all posts
Showing posts with label பார்ப்பனியம். Show all posts

May 27, 2021

“யார் உண்மையான பிராமணர்” என்றொரு விவாதம்

யார் உண்மையான பிராமணர்” என்றொரு விவாதம் நடக்கிறது!

உண்மையில் இப்படிப்பட்ட விவாதங்களே தவறானவை! அவசியமில்லாதவை! புண்ணை நோண்டி முகர்ந்து பார்ப்பது போன்றது அது! (மன்னிக்கவும்).

 மேன்மைத் தன்மை”, அல்லது “புனிதத் தன்மை” அல்லது ”உயரிய” குணம் என்ற ஒன்றை அடிப்படையாகக் கொள்ளும் பார்வைதான் பார்ப்பனிய படிநிலை உருவாக்கத்தின் அடிப்படை..

 உங்களில் யார் வேண்டுமானாலும் பிராமணர் ஆகலாம்? யார் உங்களை தடுத்தது? நீங்கள் அதற்குரிய தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள்… ” என்பது விவேகானந்தர் வாதம் (இந்தியா காலத்தை எதிர்நோக்கி, யேன் மிர்தால்) .. நமக்கு அது தேவையா?

அந்த காலத்தில் “குணங்களுக்கு” ஏற்ப ஒரு “இடம்” வழங்கப்பட்டது… உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது, சூத்திரனும் பிராமணன் ஆகலாம்! இதெல்லாம் என்ன மாதிரியான பேச்சு?

 இந்த” குணம் உயர்ந்தது என்று வகுக்கும் அதிகாரத்தை யார் கொடுக்கிறார்கள்? யார் எடுக்கிறார்கள்?

 மார்க்சியம் கற்றோரால் எளிதில் சொல்லிவிட முடியும் “ஆளும் வர்க்கத்திற்கு சார்பான குணங்கள் உயர்ந்தவை, தொல்லை கொடுக்கும் குணங்கள் தாழ்வானவை” என்று! ஆனால் இதை ஏற்றுக்கொள்ளத்தான் இங்கு ஆட்கள் குறைவு!

 குணம்” என்பது மருவி பின்புபிறப்பு” என்று ஆனது. ஆனால் ஆழ்ந்து ஆய்வு செய்தால் “தொழிலின்” (அதாவது உழைப்பு, வேலை) அடிப்படையில் தான் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டு அது கோட்பாடானது! இதையும் மார்க்சியமே உணர்த்தும்!

இதையெல்லாம் விட்டுவிட்டு “யார் உண்மையான பிராமணர்கள்?” என்று தொடங்கி “அப்படிப்பார்த்தால் இன்னார் தான் (அதாவது பிறப்பால் பிராமணரல்லாதவர்) உண்மையான பிராமணர்?” என்று சொல்வதன் மூலம் அவர்கள் பிராமணிய தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றல்லவா பொருளாகிறது.

இதற்கு பெயர் பகுத்தறிவல்ல! வருத்தமாக உள்ளது!

 மனிதனாக பிறந்த எவரும் சுயமரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. அனைத்து உயிர்களும் சமமாக வாழ இடம் வேண்டும். உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ இல்லை என்னும் இடத்தில் ஒருவரை (யாராக இருந்தாலும்)உயர்ந்த குணம்” கொண்டவர் என்று பகுத்து அவரை போற்றுவதற்கான தேவை என்ன உள்ளது?

 நற்குணங்களை கொண்டவர்களை மதிப்போம், பாராட்டுவோம், பின்பற்றுவோம் பிரச்சினையில்லை! அதற்கு ஒரு “நற்சான்றிதழ்” எதற்கு.. அதுவும் ஒரு சமஸ்கிருத (ஆரிய… ப்ளா ப்ளா) அங்கீகாரம் எதற்கு?

 அதேபோல் தீய குணங்கள் கொண்டோர்.. அதாவது “மதங்கள் சொல்லும் நற்குணங்கள்” அல்ல மற்றவரை துன்புறுத்தும் வகையிலான குணங்களைக் கொண்டோரை தண்டிக்கவும், நல்வழிப்படுத்தவும் தேவை இருக்கிறது. அதற்காக ஒரு சுரண்டலான படிநிலை அமைப்பில் கற்பிக்கப்பட்டிருக்கும் உயர்வு தாழ்வு குறித்து எது உண்மையில் உயர்ந்தது என்று வாதிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

 தீயவர் உருவாக காரணமாக இருக்கும் நிலைமைகள் என்ன என்பதை குறித்து ஆய்வு செய்யலாம்.. அதை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று விவாதிக்கலாம்! ஆனால் இதற்கும் சரியான ஒரு சமூக விஞ்ஞான வழிகாட்டி தேவையல்லவா? பகுத்தறிவு என்கிற பெயரில், பிராமண எதிர்ப்பை மட்டுமே மனதில் கொண்டு ஒரு குரூப் இயங்கிக் கொண்டிருக்கிறது!

 அவர்களில் பலருக்கு - உழைப்புச் சுரண்டல் பற்றி கவலையே இல்லை! தங்கள் சாதியினர் முதலாளியாகவோ, ஆட்சியாளராகவோ ஆகிவிட்டால் போதும்… தங்கள் சாதி மக்கள் சுரண்டப்பட்டால்… பரவாயில்லை… உழைச்சு முன்னேறு என்று சொல்லிக் கொள்ளலாம்!

பிராமண எதிர்ப்பு மிக மிக அவசியம் அதில் எனக்கு மாற்று கருத்தே இல்லை! ஆனால் பிராமணியம் என்றால் என்னவென்பதை சமூக-அரசியல்-பொருளாதார அறிவோடு ஆய்ந்தறிந்து பேச வேண்டும்.. அதை விடுத்து ஒரு வெறுப்பு அரசியல் மனநிலையிலிருந்து கொதித்தெழுவதும், “நீ மட்டும் தான் பெரியாளா, நானும் தான்” என்பதும், “உன்னை விட நான் பெரியாளு… ஏன்னா நான் தான் ஆதி….” என்பதும் “நீ பெரியாளே இல்ல… அந்த இலக்கணப்படி அவர் தான் பெரியாளு” என்பதும்… எந்த வகையிலும் நாம் ஒழிக்க நினைக்கும் பார்ப்பனியத்தை அசைக்கக் கூட உதவாது!

 தயவு செய்து பகுத்தறிவுக்கு அப்பால் உங்கள் சமூக அக்கறையை வளர்த்துக்கொள்ளுங்கள்! அதாவது கடவுள் மறுப்பு, மத மறுப்பு, பிறப்பின் அடிப்படையிலான பார்ப்பன எதிர்ப்பு, தேர்ந்தெடுத்த விஞ்ஞானவாதம் என்பதைக் கடந்த சமூக-அரசியல்-பொருளாதார பகுத்தறிவு தேவை! உலகத்தில் உள்ள செல்வங்களை எல்லாம் படைத்தும் உயிர் வாழக் கூட உணவின்றி செத்து மடியும் உழைக்கும் வர்கத்தின் நிலையிலிருந்து அனைத்தையும் பார்ப்பதும், ஆராய்வதும் தேவை. அதற்கு மார்க்சியத்தைக் கற்பது உதவும்! முயன்று பாருங்கள்!

  

Jan 5, 2011

துரோகங்களின் பட்டியல் - பாகம் - 3, பெண்ணின் கேள்விகள்.



·        தொல்பழங்காலச் சமூகத்தில் சரிசமமாக, ஏன் முதன்மையாக இருந்த பெண்ணினத்தை, சூத்திரர், விபச்சாரி, வீட்டுக்குள்ளேயே அடக்கி வைக்கப்படவேண்டியவள், பொருளாதாரத்திற்காக அவள் என்றுமே ஆணையே சார்ந்திருக்கவேண்டும், இப்படி பல கோட்பாடுகளை எழுதி பெண்ணினத்திற்கு துரோகம் செய்தது.

·        பால்ய விவாகத்திற்கான கட்டளைகளை மநு பிறப்பித்தது.  அதில் குறிப்பிட்டபடி ஒர் பெண் குழந்தை 9 வயது அடைந்தவுடன் திருமணம் செய்து கொடுக்கப்படவேண்டும், அதை செய்யத் தவறும் தந்தை அப்பெண்ணின் தூமையைக் குடிக்கவேண்டும்.

பெண் பற்றிய மநுவின் பார்வை (அவரது வழித்தோன்றல்களுக்கானதும் கூட)

·      பீஜம், யோநி இவ்விரண்டையும் நோக்குமிடத்து, பீஜம் உயர்வு ஏனெனில், தோன்றூம் உயிர் அணைத்தும், அதன் தன்மையச் சார்ந்திருக்கிறது என்று ஆண் மகனை உயர்த்தி பெண் இரண்டாம் நிலையானவள், கீழ் நிலையானவள் என்று நிறுவியது. மேலும்:
·       ஆடவரின் அழகினையும் வயதையும் பாராட்டாமல் அவர்தம் ஆண்மையை மட்டுமே பொருட்படுத்தி மாதர் ஆடவர்பால் மனம் பற்றிக் கலப்பர்.
·    நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும் மாதர்தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும் போதும் அவர்கள் கணவனின் காவலை விரும்புவதில்லை.
·        இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால், மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது.
·        படுக்கை, ஆதனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மநு படைத்தார்
·        மாதர்க்குப் பிறவியைத் தூய்தாக்கும் சம்காரங்கள் மந்திர பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று.  இவர்களுக்கு வெள்ளையுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது எனவே, பொய்யைப்போல மாசு வடுவினராக மாதர்ர் இயன்றிருக்கின்றனர்.
·        பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப்படுவனவற்றயும் கேட்பீராக.
·        மற்றும் சத்யவதி போன்ற ’ஈனக்குலப்’ பெண்களும், மேலோரான கணவரைப் பெற்றதனாலும், தங்கள் கற்புத்திறனாலும், கணவரின் மேன்மையினாலும், தாங்களும் இவ்வுலகில் மேன்மையுற்றார்கள்.
·        மாதரைக் காத்தல் இவ்வளவு தொல்லை நிறைந்த தாயினும், நன்மக்களை ஈன்று, நல்லின்பம் தருகிறவர் ஆதலினால், அவர்களை ஆடை அணிகளால் அழகு செய்ய வேண்டியது.

மேற்கூறிய அவரது தர்மத்திலிருந்து பெண் கீழ்மைக்குணம் கொண்டவள் என்றும், வேசி என்றும், பிள்ளைப் பெறும் சாதனம் மட்டுமே என்றும் நிறுவியது, பெண்கள் நகை, பணம், வசதி இவைகளுக்கு அடிமையாக்கப்பட்ட சூத்திரத்தை அதை ஆண்கள் பெண்களுக்கானது என தீர்மானித்ததை நாம் புரிந்துகொள்ளலாம்.

மேலும் குடும்பப் பெண்ணிற்கான அறங்களாக அவர் விதிப்பவை:

·    கணவன் சூதாடுகிறவனாயினும், குடியனாக விருந்தாலும், பிணியாலனாயினும், மனைவி அவனுக்குச் செருக்குற்றுப் பணிபுரியாதிருந்தால் (பெண் ஆணுக்கு தானே மனமுவந்து வேலை செய்யவேண்டும் என்பதோடு, இங்கு பெண்ணுக்கு அறிவானது திமிர் என்று குறிப்பிடப்படுகிறது. அறிவு யாருக்கும் பணியா குணம் கொண்டது என்ற உளவியல் பார்வையையும் நாம் இதில் காணலாம்.) அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவை மறுத்து, மூன்று மாதம் விலக்கி வைக்கவும்.


·        மலடியான மனைவியை எட்டாண்டுகளின் மேலும், தக்காமல் அடிக்கடி பிள்ளையிறக்கும் வயிற்றினளைப் பத்தாண்டுகளின் மேலும், பெண் குழந்தையையே பெறுபவளைப் பதினோராண்டுகளின் மேலும், பொல்லாங்கு சொல்கிற பெண்ணை உடனேயும் நீக்ககிவிட்டு, வேறு மணம் செய்துகொள்க. இம்மனைவியர்க்கு மனமகிழ்ச்சிப் பொருள் யாதும் கொடுக்க வேண்டியதில்லை.

·        முப்பது வயதுள்ள ஆணுக்குப் பனிரண்டு வயதுள்ள பெண்ணையும், இருபத்தி நான்கு வயதுள்ளவன் எட்டு வயதுப் பெண்ணையும் மணக்கலாம்.  (வயதான காலத்தில் ஆண்களுக்குப் பணிவிடை செய்ய பெண்ணானவள் இளமையுடன் இருக்க வேண்டும் என்று செய்த ஏற்பாடு.)

·        புத்திரனில்லாது இறந்து போனவனின் மனைவி, கணவன் கோத்திரத்து ஒருவனைக் கூடி விதிப்படி மகனைப் பெற்றுக் கொண்டு, அவனுக்குக் கணவன் ஈட்டிய பொருளைக் கொடுக்கவும்.

·        பிள்ளை பிறந்தபின் கணவனிறந்து போனால், பின்னர் மனைவி மற்றவனுக்கொரு பிள்ளையும் பெறுவாளாயின், இரு பிள்ளைகளும் தனித்தனி அவரவர் தந்தையின் பொருளை அடைய வேண்டியதே யன்றி இரண்டையும் ஒன்றாக்கிப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. (இவற்றிலிருந்து ஆணுக்குப் பெண் எதற்காகத் தேவைப்படுகிறாள் என்று மநு கற்றுக்கொடுக்கிறார்.  அவன் விந்தைத் தாங்கிப் பிள்ளைப் பெற்று அவன் குலத்தை வளர்ர்கவும், (ஊரை ஏமாற்றி) சம்பாதித்து வரும் சொத்துக்களை காக்கவும். )

(அடைப்புக்குறிகளுக்குள் இருப்பவை என்னுடையது.)


இப்படியாக மநு ஜாதிய ஒடுக்குமுறையை மட்டுமல்லாது, பாலின ஒடுக்குமுறைகளையும் வகுத்துக்கொடுத்திருக்கிறார். அவ்வழி வந்தோரும், உன்னதங்களின் பெயரால், கடவுளின் பெயரால் பெண் மீது ஏற்றிவைத்த கருத்தாடல்களானது பல்வேறு துணைகளைக் கொண்டு ஆண்களின் மனதில் ஆழப் பதிந்தும் விட்டது. அதை வைத்து பெண்களின் மனதில் அவர்களின் நடத்தை விதிகளை எவ்வாறு வளர்த்தெடுத்தார்கள் என்பதை பெண்ணிய ஆய்வுகள் நமக்குத் தருகின்றன.

கற்பு என்ற ஒன்று இவர்களால் நிறுவப்படும் முன்னர் தாய் வழி மரபில் ஆணுக்கு பிள்ளை மீது எந்த உரிமையும் இல்லை, அவர் அவ்வப்போது மனைவியின் வீட்டுக்கு வந்து செல்பவராக இருந்திருக்கிறார்.  அப்போது தனிச்சொத்துப் பிரச்சனையெல்லாம் இருக்கவில்லை. 

இந்த  சுயநலப்பொருளாதாரக் காரணிகளை மனதில் கொண்டு தொன்மக் கதைகள் மூலம் பதிவிரதை, பத்தினித் தன்மை என்ற புதிய தத்துவங்களை ரிஷி மனைவிகளின் பெயரால் அவர்கள் உருவாக்கியது, பெண் எவ்வாறெல்லாம் நடக்கவேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பே ஒழிய அது கடவுளின் விதியல்ல.  அவர்கள் உருவாக்கிய கடவுள் கணவர்களின் நடத்தையை வைத்தே அவர்களின் ஆணாதிக்க தன்மையை நாம் புரிந்துக்கொள்ளலாம்.  அதோடு அவர்களின் பெண் பித்தையும் நாம் புரிந்துக்கொள்ளலாம்.  அவர்களின் பெண் பித்தின் தன்மையே அவர்களை அச்சுறுத்தியிருக்கிறது, அப்படி மற்ற குலத்து ஆண்கள் பார்ப்பனிய குலப் பெண்களை கவர்ந்து சென்று விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும், கலப்புத் திருமணங்களை தடுக்கவும், அதன் மூலம் வர்ணக்கலப்பு, ஜாதிக்கலப்பு, சொத்து கைமாறுவது நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்கான ஏற்பாடுகளாய்தான் தோன்றுகிறது.  இதுவே தந்தை வழி மரபின் சாதனை.

ரிஷிப் பத்தினிகள் மட்டுமல்ல, கடவுளரின் மனைவிகளும் இவர்களின் விதிகளுக்குட்பட்டவர்களே, கரணம் தப்பினால் கடவுளாகிய கணவர் சாபம் கொடுத்துவிடுவார்.

தாய் வழி மரபில் பிறந்த குலப் பெண்கள் ’செருக்கற்று’ கணவர்களுக்கு பணி செய்யவேண்டும் என்றோ, பெண்ணின் நடத்தை விதிகள் குறித்தோ எங்கும் குறிப்புகள், விதிகள் காணக்கிடைக்கவில்லை. அதை வைத்துப் பார்க்கும்பொழுது ஒரு பார்ப்பனிய ஆண் வேறு குலப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் கணவனே கண் கண்ட தெய்வம் என்று கிடக்கமாட்டாள் என்ற புரிதலோடும், அதே நேரம் இவர்களுடைய ஆணாதிக்கப் போக்கை சகிக்கமுடியாமல் பாப்பனியப் பெண்கள் மற்ற இன ஆண்களைத் திருமணம் செய்துக் கொண்டு போய்விட்டால் தங்களுக்குப் பணிவிடை செய்யப், பிள்ளைப் பெற்றுத் தர பெண்களே இல்லாமல் போய்விடும் நிலை வந்துவிடுமே என்று பார்ப்பனிய உயர் ஜாதி அறிவு முக்காலத்தையும் நன்கு அறிந்து வைத்திருக்கிறது.

இவ்வளவு விதிகளையும், கதையாடல்களையும், அச்சுறுத்தல்களையும், தண்டனைகளையும் பெண்கள் மீது பார்ப்பனியம் திணித்து வைத்திருக்கும் சமூக வரலாற்றில் எப்படி சாத்தியம் பெண் விடுதலை?

பொருளாதாரமும், கல்வியும் மறுக்கப்பட்ட பின்னணியில் ஒரு பெண்ணுக்கான சுதந்திர வெளியாக பார்ப்பனிய ஆச்சாரியார்கள் வகுத்துக் கொடுத்தது கோயிலும், கடவுளும், மதச் சடங்குகளும்.  அங்கும் அவள் கணவனின் நலனுக்காக அவள் உடலை வருத்திக்கொண்டு வேண்டுதல்கள் வைப்பதின் மூலம் அவள் ஓர் உத்தமியாகிறாள்.  ஒரு பெண்ணின் அங்கிகாரமானது புனிதத்தின் பெயரால் ( கற்புக்கரசி) என்பதைத் தவிர வேறு சாத்தியங்களே இல்லாத நிலையில் முழுக்க முழுக்க பெண் மத நம்பிக்கைகளில் தன்னை இழந்து நிற்கிறாள்.  அதை நிராகரிக்கும் ஏன் கேள்வி எழுப்பும் பெண்களைக் கூட வேசிகள் என்றே குறிப்பிடுகிறார்கள்.  கற்பு ஒரு கற்பிதம் என்று கூறும் பெண்கள் அதை பாலியலை முன் வைத்து மட்டுமே பேசுபவர்களாய் சித்தரித்து, தனக்காக சுதந்திரத்தைக் கோறுபவர்கள், உங்கள் கணவர்களையும் கவர்ந்துக் கொண்டு போய்விடுவார்கள்  என்று அச்சுறுத்தி பெண்ணுக்குப் பெண்ணையே எதிரியாய் நிறுத்தியும் விட்டார்கள். 

கடவுளின் பெயரால் இவர்கள் செய்யும் அரசியலை சரியாக கண்டுணர்ந்தவர் பெரியார்.  பார்ப்பனிய இந்து மதத்தை ஒழித்தாலொழிய பெண் விடுதலை சாத்தியமில்லை  என்று முழங்கிய பெரியாரைக் கண்டு பார்ப்பனியர்கள் அச்சுறுவதிலும் அவரை வெறுப்பதிலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை.  ஆனால் பெரியார் தாயுள்ளம் கொண்டவன் அல்லவா, அதனால்தான் பார்ப்பனியர் வீட்டுப் பெண்களுக்கும் சேர்த்து பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அதை அம்பேத்கர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ஐயாவின் முயற்சியால் கிடைத்த சொத்துரிமையின் சுகங்களை, அவரின் சுயமரியாதை இயக்கப் பெண்களின் கடும் போராட்டங்களால் கிடைத்த பெண் உரிமைகளை, சுய மரியாதையை, விதவைகள் திருமண சாத்தியத்தை  அனுபவித்துக்கொண்டே பார்ப்பனியர்கள் அவரை துரோகி என்றழைப்பதையும் காணலாம்.

விலை உயர்ந்த பண்டங்களை மனைவிக் கேட்டால் கூட அச்சுறாத ஆண், தன் மனைவி பெரியாரின் புத்தகத்தைக் கேட்டால் அச்சுறுவது ஏன் என்று புரிந்துக் கொள்ளக்கூடியதுதான். 

ஆண்களுக்கு:  இன்று நீங்கள் பெண்கள் மீது கொண்டிருக்கும் பார்வைக்கும், அதிகாரத்திற்கும் பாடதிட்டம் வகுத்திக்கொடுத்தவர்கள் யார் என்று, பெரும் உழைப்பைச் செலுத்தி ஆராய்ந்து அவர்களின்  முகத் திரையைத் தோலுரித்துக் காட்டும் வேலைகளில் பெண்கள் இறங்கினால் ‘பெண்ணியவாதிகள்’ அடங்காப்பிடாரிகள், குடும்பத்துக்கு ஆகாதவர்கள், குடிப்பவர்கள், பாலியல் சுரண்டல் செய்பவர்கள் என்றெல்லாம் நீங்கள் கூறுகிறீர்கள். பெண்களிடத்தில் இந்த உன்மைகள் போய்ச் சேரா வண்ணம் முயன்ற வரையில் தடுக்க முயற்சி செய்வீர்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நாளை உங்கள் பெண் வாரிசு கணவனால் சித்திரவதைகளுக்குள்ளானால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் சேர்த்துப் போராடுபவர்கள் இந்தப் பெண்ணியவாதிகளே.  


பெண்களுக்கு:     வேதம், உபநிடதம், சாங்கியம், வேதாந்தம் உள்ளிட்ட தத்துவ தரிசனங்கள், புனித நூல்கள், இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட காப்பியங்கள், கடவுள் கதைகள்,  சங்க இலக்கியங்கள் (ஔவையார், காக்கப் பாடினியார் போன்ற சிலரைத் தவிர) உள்ளடக்கிய  இந்த அறிவு சார் படைப்புத் துறையில் ஏன் பெண்கள் இடம் பெறவில்லை என்று எப்பொழுதாவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? பார்ப்பனியம் சமூகத்தின் மேல் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மதத்தின் பெயரால் செயலாற்றிய பக்தி இலக்கியக் காலத்தில் தோன்றிய காரைக்கால் அம்மையார், ஆண்டாள் இவர்கள் கூட கடவுளைப் பாடினார்களே தவிர பெண்ணுக்கான சுதந்திரத்தை, நடத்தை விதிகளை ஏன் உருவாக்கவில்லை என்று ஒரு கேள்வியை வைக்க வேண்டும்.   பெண்ணிய எழுத்தாளர்கள் இந்தப் படைப்புத்துறைக்கு வரும் முன்னர் வரை  ஆண் படைப்பாளர்களால் தான் இதுவரை பெண் கதாப்பாத்திரங்கள், கற்பு நெறிகள், சமூக நெறிகள், குடும்ப நெறிகள் ஆகியவை படைக்கப்பட்டிருக்கின்றன, அது அப்படியே சினிமா, சீரியல் என்று இன்றும் தொடர்கிறது, ஆண் படைப்பாளிகளின் வழிகாட்டுதலில் எந்த சந்தேகமும் எழாத சில மேட்டுக்குடிப் பெண் எழுத்தாளர்களும் அந்த குணங்களைக் கொண்டப் பெண் கதாப்பாத்திரங்களையே உருவாக்கி பெண்ணினத்திற்கு துரோகம் செய்வதை உங்களுக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது.  

பெண்கள் என்ன செய்ய வேண்டும்..?.


Jan 3, 2011

துரோகங்களின் பட்டியல் - பாகம் -1

பார்ப்பனிய துரோகங்கள்:



  • இந்தியச் சமூகத்தில் (சிந்து சமவெளி நாகரீகம் தொட்டு) பார்ப்பனியம் மனித குலத்திற்கு செய்திருக்கும் துரோகங்கள் எண்ணிலடங்காதவை என்று மீண்டும் மீண்டும் வரலாற்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 
  • வேதம், வர்ணாஸ்ரமம் ஆகியவற்றைத் தோற்றுவித்து மனிதருக்குள் பிறப்பால் பிரிவினைகளை வகுத்து இன்று ஜாதி எனும் புதைச் சேற்றுக்குள் மக்களை மூழ்கடித்த மனுஸ்மிருதி, கூட்டிக்கொடுத்து குலக்குழு மக்கள் தலைவர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு அரச ராஜ்ஜியத்தை விரிவு படுத்தும் ராஜ தந்திரத்தை வகுத்துக்கொடுத்த கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், அவர்கள் வழி வந்த பார்பனிய ஆசாரியார்களின் தத்துவங்கள் முதல் இன்றைய பாடப் புத்தகங்கள் வரை பார்பனியம் முன் வைக்கும் தத்துவம், வரலாறு யாவும் கற்றுத்தருவது பிரிவினைகளை, குலத்தைக் கெடுத்து அதிகாரத்தை வளைக்கும் தந்திரங்களை.
  • இயற்கையின் விஞ்ஞான பூர்வ புரிதலோடு தொல்பழங்காலச் சமூகத்தில் நிலவிய உலகாயதம் என்ற பொருள்முதல்வாத தத்துவத்தை அழித்து, பெருங்கருணையால் சக மனிதனை மனிதனாய் அரவணைக்க போதிக்கும் பௌத்த, சமண நெறிகளை பழித்து, திரித்து, ஒழித்துக்கட்டி, இயற்கையை வெல்ல முடியும் என்று உன்மையற்ற கருத்துமுதல்வாதக் கொள்கைகளைப் பல்வேறு தத்துவங்களின் பெயரால் மனித மனங்களில் விஷத்தை ஊற்றியது.
  • இயற்கையைப் போற்றி அதனோடு ஒன்றி வாழ்ந்த மக்களின் சடங்குகளை மூடநம்பிக்கைகளாக கேலி செய்து இயற்கையைக் கட்டுக்குள் கொண்டுவருவது அல்லது அதை வெற்றிக்கொள்வதற்கான சூத்திரம் என்று சொல்லி புரியாத சமஸ்க்ருத மொழிகளில் மந்திரங்களைக் கூறி யாகங்களை வளர்த்து மக்களை இயற்கைக்கு எதிரிகளாய், இயற்கையைக் கண்டு அச்சுறும் அறிவிலிகளாய், இயற்கையை வெல்ல முடியும் என்று பேராசைகாரர்களாய் (ஜோதிடம், பரிகாரம், ராசி கற்கள், எண் கணிதம் போன்றவை) மக்களை முழுக்க முழுக்க மதியற்றவர்களாய் ஆட்டிவைத்துக்கொண்டிருப்பது.
  • தொல்பழங்காலக் கலைகளை, பிந்தைய நாட்டுப்புறக் கலைகளை இழிவு படுத்தி அதிலும் வர்ண பேதங்களைப் புகுத்தி பார்ப்பனியக் (செவ்வியல் என்ற பெயரில்) கலைகளை மொத்த இந்தியாவின் பொது அடையாளமாக முன்னிறுத்துவது.
  • இயற்கையின் இயங்கியல் காரணங்களை நிராகரித்து கடவுள் என்ற ஒரு புனைவைத் தோற்றுவித்து, கடவுளின் நேரடி ஆசீர்வாதம் பெற்றவர்களாய் அவர்களை சித்தரித்துக்கொண்டு வேதம், உபநிடதம், ஸ்மிருதி, புராணம், என அனைத்தையும் தமிழ் இலக்கியம் முதற்கொண்டு அனைத்திலும் புகுத்தியதோடு, எல்லாவற்றையும் பார்ப்பனக் கடவுளின் பெயரால் இயற்றி இல்லாத ஒருவருக்காக அடித்துக்கொள்ளும் நிலையை உருவாக்கியது.
  • கடவுளின் தரகர்களாக இன்று வரை தங்களை முன்னிறுத்தி பொருளாதார நிலையில் காலம் காலமாக ஒரு நிரந்தர உத்தரவாதத்தை அவர்களுக்கு சாதகமாக உருவாக்கி மக்களை பகுத்தறிவற்றவர்களாக கையாள்வது.
  • சமத்துவ மடப் பள்ளிகளாய் இருந்த பௌத்த, சமணக் கோவில்களை அழித்தது.
  • பாவம், புண்ணியம் என்ற கற்பனாவாத கதையாடல்கள் மூலம் அரசர்களை ஒருபுறம் அச்சுறுத்தி அதை கழிக்க யாகங்கள் வளர்த்து அரசர்களை தங்கள் பிடிக்குள் வைத்து இருந்து பல்வேறு மத அரசியல்களை நடத்தியது. (அதன் தொடர்ச்சியாக இன்றுவரை மக்களையும் ஏமாற்றி வருவது.)
  • மத அதிகார நிறுவனங்களின் அடையாளமான கோவில்களை பிரம்மாண்ட வடிவில் (தங்களுக்குள் இருந்த சைவ வைணவ போட்டிகளுக்கும் ஆதரவு சின்னங்களாய்) கட்டவைத்து, அதன் அருகிலேயே நிலங்களைப் தானமாக (பிச்சையாக) பெற்று அக்கிரஹாரம் என்ற பெயரில் அவர்கள் குல நலன்களை நன்கு நிறுவிக்கொண்டது.
  • அப்படித் தானமாகப் பெற்ற நிலங்களை ரத்து செய்து, வைதீக பாப்பனியத்திற்கு சவாலக அமைந்த களப்பிரர்களை தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரியாய் சித்தரித்து அவர்களின் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்று இப்போது வரை வரலாற்றிலும், பாடப்புத்தகங்களிலும் பதிவது.
  • சொல்லப்போனால் களப்பிரர்கள் காலம்தான் தமிழுக்குப் பொற்காலமாக இருக்கிறது, அவர்கள் காலத்தில்தான் பல இலக்கண நூல்கள் இயற்றப்பட்டிருக்கிறது. புதிய தமிழ் பாக்கள், விருத்தங்கள் அறிமுகமாகின்றன. கவிதை குறித்த புதியக் கோட்பாடுகள் தோன்றுகின்றன. வேங்கட நாட்டை ஆண்ட கள்வர் பாரம்பரியத்தில் தோன்றியவர்களே களப்பிரர்கள் என கூறப்படுகிறது.  தமிழ் எழுத்து பிரம்மியிலிருந்து வட்டெழுத்தாக மாறியது இவர்கள் காலத்தில்தான்.
  • தர்மகீர்த்தி போன்ற பல மொழிகளில் நூற்கள் எழுதிய ப்கழ்பூத்த அறிஞர்களில் பலர் தமிழர்கள் என்பதும், இவர்களில் பலர் களப்பிரர் காலத்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
  • சிதறிக்கிடந்த செய்யுட்கள் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றதும், சிலப்பதிகாரம் போன்ற பெருங்காப்பியங்களும், பதிணென் கீழ்கணக்கு நூல்களான அறநூல்கள் இயற்றப்பட்டதும் தொகுக்கப்பட்டதும் இந்தக் காலக் கட்டத்தில்தான்.  பள்ளிக்கூடங்கள் பல தொடங்கப்பெற்றுச் சிறுவர்களுக்கு வர்ணமுறை பாராது முறையான எழுத்தறிவு புகட்டப்பெற்றது களப்பிரர்கள் காலத்தில்தான்.
  • இக்காலத்தில் தமிழ்நாட்டில் போர்கள் பற்றிய செய்திகள் மிகவும் குறைந்திருக்கின்றன. (அதனால் தான் பார்ப்பனர்களுக்கு இது இருண்டக் காலம், பிழைப்பு நடக்கவில்லையே). கி.பி. 3 - 6
  • மூவேந்தர்களுக்குள் இருந்த அரசியல் போட்டிகளின் காரணமாக கி.பி. 1311இல் மாலிக்காபூரைத் தமிழ் நாட்டிற்குள் அழைத்து வந்தது சுந்தர பாண்டியன்.  இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் அசோகர் பேரரசு, குப்தர் பேரரசு, ஔரங்கசீப் பேரரசு என்று இந்திய வரலாற்றில் 2500 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த எந்த அரசின் ஆதிக்கத்திலும் தமிழக நிலப்பகுதி ஆட்பட்டிருக்காது.  இத்தகைய வாய்ப்பைத் தமிழ் நாடு பெற்றதற்குக் காரணம் Political Geography என்று சொல்லக்கூடிய நிலவியலே காரணம். இத்தகைய வாய்ப்பைப் பெற்ற தமிழ் நாட்டை இசுலாமியர்கள் தாக்கிச் சீரழித்தனர் என்று கூறுவது.
  • மருது பாண்டிய சகோதரர்களுக்கு பல உதவிகள் செய்த ஹைதர் அலி சுல்தான் என்பதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல், இசுலாமியர்களை இந்துக்களுக்கு எதிரிகளாய் நிறுத்தி இந்துத்துவ வெறியை வளர்த்து வருவது.
  • வைதீக அரசியல் செல்லுபடியாகாத நெருக்கடியில், மொழி மூலம் அரசியல் நடத்த தமிழுக்கு தெய்வீகத் தன்மையைப் புகுத்தி சைவத் தமிழ், வைணவத் தமிழ், இசைத் தமிழ், தெய்வீகத் தமிழ் என்று பக்தி இலக்கியம், பக்தி இசை, மேன்மை, தெய்வீகம் என்ற பார்ப்பனியப் புனிதங்களை மொழிமேல் திணித்தது. (ஆரிய மரபை தமிழ் மரபாக்கும் அரசியல்). அதுவரை நற்றமிழ், தண்டமிழ், வண்தமிழ் என்ற அடைமொழிகள்தான் இருந்திருக்கிறது
  • சுதந்திரப் போராட்ட வரலாற்றுச் சம்பவங்களில் பார்ப்பனிய பங்களிப்பு, அவர்களின் வெற்றிகள், பார்ப்பனியத் தலைவர்களைத் தூக்கிப் பிடித்தல், ஒடுக்கப்பட்ட மக்களின் பங்களிப்பை மறைத்தல், ஒரு தலித்திற்கு உதவி செய்த ஆங்கிலேயரைக் கொன்ற பார்ப்பனிய (இந்துத்துவவாதியான ) வாஞ்சிநாதனை வீரனாக சித்தரித்தல், காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே இந்த்துத்துவவாதியான சாவர்க்கரால் தூண்டப்பட்டவன் என்பது போன்ற துரோகச்செயல்களை வரலாறாக பதிவு செய்யாமல் இருட்டடிப்பு செய்வது.
  • தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுத்து (மநு காலம் தொட்டு) அவர்களை அடிமைகளாகவே வைத்திருந்தது..பெரும் போராட்டங்கள் நடத்தி தற்போது அவர்கள் வளர்ந்து வரும் காலத்தில் கூட நுழைவுத்தேர்வு ரத்திற்கு எதிராக உயர் சாதி இந்துக்கள் (பார்பனர்களால் தானே அவர்கள் உயர் சாதி ஆனார்கள்) குரல் எழுப்புவது. 

பட்டியல் இன்னும் இருக்கிறது...தொடரும்...அதன் தொடர்ச்சியாக பெண் இனத்திற்கு இவர்கள் செய்த துரோகங்களின் பட்டியல் வளரும்......

பார்ப்பனியமும், முதலாளித்துவமும் செய்யும் ஒடுக்குமுறைகளை விமர்சிக்காமல், அவ்வரலாற்றைப் பேசாமல், அதிலிருந்து விடுபடும் வழிகளை மட்டும் பேசுவது பாழடைந்த கட்டிடத்தை மேல்வாரியாக ஒட்டு வேலை செய்து காப்பாற்றுவது போன்றதாகும். ஒடுக்குமுறைகளுக்கெதிரான எழுத்துக்களிலும், பெண்ணிய எழுத்துக்களிலும் இவற்றை குறிப்பிடுவது தவிர்க்கவியலாதது..
                                         .........தொடரும்.