Jul 17, 2023

உடலரசியல் என்பது பாலியல் புரட்சி மட்டுமல்ல!

உடலரசியல் என்பது பாலியல் புரட்சி மட்டுமல்ல! உடலரசியல் என்பது பணம் கொண்ட முதலைகள் உழைக்கும் உடல்கள் மீது நிகழ்த்திடும் உழைப்புச் சுரண்டலை ஒழிப்பதும் தான்!

(அதை மட்டுமே பேசுவதாக அவதூறு செய்யும் முற்போக்கு எதிர்ப்பு மனநிலை கொண்டவர்களுக்கு!) 


ஆண் பெண் உறவில் பாலியல் நாட்டம் கடந்து அரசியல் பார்வை என்று ஒன்று இருக்கிறது! 

“முதலாளித்துவ சமுதாயத்தில் பின்பற்றப்படுகின்ற நுகர்வு வழிபாடு, வெகுஜனக் கலாச்சாரத் தரங்கள், நெருக்கமான உறவுகளை சுற்றுப்புற உலகத்தின் அழுத்தத்திலிருந்து தப்புவதற்குரிய பிரத்யேகமான வடிவமாக மாற்றுதல் ஆகிய காரணிகளும் இருபாலினருக்கும்* இடையிலுள்ள உறவுகளை மாற்றியிருக்கின்றன என்னும் உண்மையை நாம் மறக்க முடியாது. விஞ்ஞ்சான-தொழில்நுட்பப் புரட்சி பெண்களின் பொருளாதார நிலையில், ஆகவே அவர்களுடைய உளவியல் போக்குகளில் புதிய கூறுகளைப் புகுத்தியிருக்கிறது. சோவியத் தத்துவஞானி இஅந்திரேயெவா பின்வருமாறு எழுதுகிறார்: “அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த சில நாடுகளிலும் மரபு வழிப்பட்ட திருமண உருமாதிரிகள் சிதைவடைதல் வெகு தூரம் போய்விட்டதென்பது உண்மையே. பொருளாதார சுதந்திரத்திற்கான போராட்டம், சிறு குடும்பம், பிறப்பு விகிதம் குறைந்திருத்தல் இவை அனைத்தும் சமூக ரீதியாக பெண்களின் பால் நடவடிக்கைக்குப் புதிய பின்னணியைப் படைத்திருக்கின்றன. நகரமயமாக்கல், நகர வாழ்க்கையின் முகமறியாத் தன்மை ஆகியவற்றின் விளைவாய் சமூகக் கண்காணிப்பின் வடிவங்கள் பலவீனமடைதல் பாலுறவு ஒழுக்கத்தின் மரபு வழிப்பட்ட வழிவங்களைச் சர்ச்சைக்கு உள்ளாயிருக்கின்றன. பாலுறவு வாழ்க்கையில் பெண்களுடைய பாத்திரத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. துல்லியமாக இந்நிகழ்வுகளே ஆன்கள் மற்றும் பெண்அளின் பாலுறவு நடத்தையில் புதிய சகாப்தத்தைத் தொடங்கியிருக்கின்றன; இந்த சகாபத்தம் பாலுறவு புரட்சி என்று அழைக்கப்பட்டது.”

……

சமூகப் புரட்சிக்குப் பதிலாக பாலுறவுப் புரட்சியை முன் வைக்கும் முயற்சி முதலாளித்துவ சித்தாந்திகளுக்கு மட்டுமின்றி, அராஜகவாத சித்தாந்திகளுக்கும் குறியடையாளமே. இத்தகைய “தத்துதவ ரீதியான” மாதிரிகள் மனிதனுடைய பாலுறவு மற்றும் திருமண-குடும்ப உறவுகளின் வளர்ச்சியில் நெடுங்காலத்துக்கு முந்திய கட்டங்களை நினைவூட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  உதாரணமாக, வரைமுறையற்ற பாலுறவை உயர்த்திப் போற்றி, ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலுள்ள உறவுகளுக்கு அது மாதிரியளவாக இருக்க வேண்டும் என்பது வர்க்கத்தன்மை இழந்தவர்களின் குணாம்சம்.  அவர்கள் அதை உண்மையான “சுதந்திரக்காதல்” என்கிறார்கள். ஆனால் அது உண்மையில் காதலை நிராகரிப்பதாகும்; விலங்குலகத்துக்கும் ஆதிகால மனித சமூகத்துக்கும் இடையிலிருந்த மாறும் கட்டத்தில் நிலவிய வரைமுறையற்ற புணர்ச்சிக்குத் திரும்ப வேண்டும் என்று கூறுவதாகும்.

…….

…..

சோவியத் நாட்டில் 1920களின் ஆரம்பத்தில் தோன்றிய “பாலுறவுப் புரட்சிக்காரர்களின் ”தத்துவக்” கருத்தோட்டங்களை கிளாரா ஜெத்கினுடன் வி.இ. லெனின் நடத்திய உரையாடலில் ஆழமான பகுப்பாய்வுக்கு உட்படுத்தினார். ”பாலுறவு வாழ்க்கையைப் பற்றி இளைஞர்களின் மாறிய அணுகுமுறை “கோட்பாட்டு ரீதியானது’, அது தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது.  பலர் தங்களுடைய நிலை ’புரட்சிகரமானது’, ‘கம்யூனிச’ நிலை என்று கூறுகிறார்கள்.  அது உண்மை என்று அவர்கள் மனப்பூர்வமாக நம்புகிறார்கள். ஒரு வயாதிகனாகிய என்னை, இது கவர்ச்சிக்கவில்லை. நான் சிடுசிடுப்பான சந்நீயாசி அல்ல. எனினும் இளைஞர்களின் – பல சமயங்களில் பெரியவர்களின் கூட – “புது பாலுறவு வாழ்க்கை” என்றழைக்கப்படுவது எனக்கு முற்றிலும் முதலாளி வர்க்க விபச்சார விடுதியின் மற்றொரு ரகமாகத்தான் தோன்றுகிறது. இதற்கும் கம்யூனிஸ்டுகளான நாம் புரிந்துகொள்கின்ற சுதந்திரமான காதலுக்கும் கடுகளவு ஒற்றுமை கூட இல்லை. கம்யூனிச சமுதாயத்தில் ஒருவருடைய உடற்பசியைத் தீர்ப்பதும் காதலுக்காக ஏங்குவதும் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடிப்பதைப் போன்றதே என்ற பிரபலமான தத்துவத்தை நீங்கள் நிச்சயமாகக் கேட்டிருப்பீர்கள்.  நம்முடைய இளைஞர்கள் இந்த ‘ஒரு டம்ப்ளர் தண்ணீர்’ தத்துவத்தைக் கேட்டு வெறியடைந்துவிட்டார்கள். முற்றிலும் வெறியடைந்துவிட்டார்கள்… பிரபலமான ‘ஒரு டம்ப்ளர் தண்ணீர்’ தத்துவத்தை நான் முற்றிலும் மார்க்சியம் அல்லாத தத்துவமாகக் கருதுகிறேன்.  பாலுறவு வாழ்க்கையில் மனிதனுக்கு இயற்கையால் தரப்பட்டவை மட்டும் வெளியாகவில்லை, கலாச்சாரத்திலிருந்து பெறப்பட்டவையும்-உயர்ந்தமட்டமோ, தாழ்ந்தமட்டமோ-வெளியாகின்றன.  பாலுறவுக் காதல் வளர்ச்சியடைந்து மேலும் நாகரிகமடைவது எவ்வளவு முக்கியம் என்பதை எங்கல்ஸ் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் சுட்டிக்காட்டினார்… பாலுறவு விவகாரங்களில் அடக்கமின்மை முதலாளி வர்க்கத் தன்மையே, அது சீரழிவின் அறிகுறி.”

உயிரினம் என்ற முறையில் மனிதனுடைய சாராம்சத்தை இருபாலினருக்கும் இடையிலுள்ள உறவாக மட்டுமே வகைப்படுத்த முடியாது. ஆண், பெண் உடலுறவு மனிதனுடைய ஒத்திசைவான சுயவெளியீட்டில் பிரிக்க முடியாத கூறாக இருந்தபோதிலும், அவனுடைய எல்லாத் தேவைகளையும் விருப்பார்வங்களையும் இலட்சியங்களையும் அந்தத் துறையை மட்டும் கொண்டு பூர்த்தி செய்ய முடியாது.

பரஸ்பரக் காதல், கூட்டு உழைப்பு, கணவன் மனைவிக்கும் இடையிலான சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பாட்டாளி வர்க்கத் திருமணத்தின் புதிய தண்மையைப் பற்றி எங்கல்ஸ் முக்கியமான முடிவுகளுக்கு வந்தார்….. //

இப்படியாக எது ஒன்றையும் உழைக்கும் வர்க்க சமூகப்-பொருளாதார அரசியல் கண்ணோட்டத்தில் அணுகும் உடலரசியல் கொண்டவர்களுக்கு.. இது தனியுடைமை / ஆணாதிக்கப் போலி ‘பாலுறவு ஒழுக்கம் / பத்தினித் தன்மை’ தொடர்பானதல்ல!  உழைக்கும் வர்க்க உடலரசியல் தரும் ஒரு வாழ்க்கை முறை / மனநிலை / தேர்வு! ஏனென்றால் இந்த அமைப்பின் கீழ் பாலியல் உரிமையிலும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது! பணமும், அதிகாரமும் கொண்டவர்களுக்கு விபச்சாரமும் தாராளவாத கருத்துக்களும் வாய்ப்புகளை வழங்குகின்றன, இங்கும் ஒரு சாரார் பாலியல் உரிமை மறுக்கப்பட்டவர்களாக, சுரண்டலுக்கு உள்ளாகின்றனர்! சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும், அனைத்து மனித உறவுகளிலும் இது தாக்கம் செலுத்துகிறது என்னும் நிலைமைகளை உணர்ந்து செயல்படுவது என்றாகும். 

பாலியல் ஒடுக்குமுறையை எதிர்ப்பதென்பது பெண் உடலை உற்பத்தி அலகாக மாற்றி வைக்கும் அடக்குமுறையை எதிர்ப்பதென்பதாகும். ஒதுக்கப்பட்டவர்களுக்காக” நாத்திகர்கள்  கோவில் நுழைவு  போராட்டம் நடத்துவது போல் தான் இதுவும்! (அதுக்காக கடவுளை ஏற்றுக்கொண்டதாகி விடாது!)

புனிதங்களைக் கட்டுடைப்பது! ஆதிக்கத்தைக் கட்டுடைப்பது! அதேவேளை இந்த நுகர்வு கலாச்சார விழுமியங்கள் கொண்ட ஆணாதிக்க சமூகத்தில் ”டிசைன் டிசைனாக உருட்டிக்கொண்டு வரும் நபர்களுக்கு’  உடலை இரையாக்கக் கூடாது என்னும் ‘உஷார் தன்மையோடு’…. இருப்பது என்னும் அளவுக்கு பெண் விடுதலை பேசுவோருக்கு தெளிவு உண்டு!

ஏனெனில் என் உடல் என் ஆயுதம்!

& some people’s ecstasy is in “knowledge” than a hard fuck!

 Read: 

குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் - எங்கல்ஸ்

வரலாற்றில் குடும்பமும் காதலும்

ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் - கிளாரா ஜெட்கின் (ஆசிரியர்), விளாடிமிர் இல்லிச் லெனின் (ஆசிரியர்)

பெண்களும் சோசலிசமும் - அகஸ்ட் பெபல் 


*ஆண் பெண் என்று பேசுவதால் கம்யூனிஸ்ட்களை homophobia உடையவர்கள் என்ற ஒரு கருத்தை முதலாளித்துவ தாராளவாதிகள் பரப்புவதுண்டு. குடும்பம் (அல்லது ஆண் பெண் உறவு) என்பது உற்பத்தி அலகாகிவிட்டது என்னும் ஆய்வுப் பார்வையிலிருந்து அதை முன் வைத்து விவாதங்கள் நடக்கின்றன என்கிற புரிதல் தேவை! இன்றைய காலகட்டம் போல் Sex /Gender Specturm குறித்த விவாதங்கள் தீவிரமாக மேலெழாத காலகட்டம், அன்றைய நிலையிலான பிரதான முரண்பாடு / புரட்சிக்கான செயல்பாடுகள் என்கிற வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு எதையும் அணுக வேண்டும். அதற்கு மார்க்சியம் படிப்பது முன்நிபந்தனை!

*அதேபோல் கட்டற்ற பாலிறவு குறித்த மாற்றுக் கருத்துகளை வைப்பதால் கம்யூனிஸ்ட்களும் ஆணாதிக்கவாதிகள், பெண் விடுதலையை புறந்தள்ளியவர்கள் என்கிற பேச்சும் உண்டு. இதுவும் முதலாளித்துவ / தாராளவாத / குட்டிமுதலாளித்துவ அவதூறுகளே.

*சாதியப் பிரச்சின குறித்த அவதூறுகளும் இத்தகையதே.

*பாலுறவு / சாதியப் பிரச்சினை உள்ளிட்டவற்றை புரிந்துகொள்வதில் போதாமை அனைவருக்குமே இருக்கும்! கம்யூனிஸ்ட்களிடையே சிலரிடம் ஒரு வரட்டுவாத போக்கும் இருக்கலாம்! அதையும் உரையாடலுக்கு உட்படுத்தியபடியே இயக்கங்களும், தனிநபர்களும் முன்னேறிக்கொண்டிருக்கின்றனர்.

கம்யூனிஸ்ட் என்பதாலேயே ‘பரிசுத்த ஆவி’ உட்புகுந்தது போல் யாரும் முற்றும் அறிந்தவர்களாக இருக்கவும் முடியாது!

இங்கே ஏற்றத்தாழ்வு நிலவுகிறது, அநீதி நிலவுகிறது, சுரண்டல் நிலவுகிறது  அதை மாற்ற வேண்டும் என்கிற ஏதோ ஒரு புள்ளியில் தான் வலது பக்கம் போகாமல் இடது பக்கம் வருகிறோம்…. அதன் தொடர்ச்சியாக கற்றலும், இயங்குதலும் நடைபெறுகிறது!

ஆனால் மற்ற எந்த இயக்கங்களுக்கும் / நபர்களுக்கும் இல்லாத செழிப்பான, விஞ்ஞானபூர்வ வழிகாட்டுதல் கொண்டது மார்க்சியம்… அதனை படித்தால் மட்டுமே உணர முடியும்.. படித்தாலும் உணர உழைக்கும் வர்க்க உணர்வை தட்டியெழுப்பும் அரசியலூக்கமும் தேவைப்படுகிறது!

எதுவொன்றைப் பற்றியும் இவ்வளவு ஆழமான பார்வைகள் தேவைப்படுகையில்…. வெளியுலகத்தில் அனைத்தும் “கலவிமயமானதே” என்னும் போக்கைக் காணும்போது… கடுப்பா வருது! அதுக்கும் மேல… மார்க்சியத்துல அது இல்ல, இது இல்ல… என்று கொளுத்திப் போடும் ‘அறிவுஜீவிகள்’…. 

 

 

No comments:

Post a Comment