Nov 17, 2022

பெண்ணியம் என்பது ஆண் வெறுப்பா?

 


பெண் ஒடுக்கப்படுகிறாள், சமமாக நடத்தப்படவில்லை, அவள் உடலுக்கு இங்கு பாதுகாப்பில்லை என்பது வெளிப்படையானது என்றாலும் அது முந்தைய காலம், தற்போது இல்லை என்று சிலரும், சில ஆண்கள் கெட்டவர்கள், சைக்கோக்கள் வேண்டுமானால் அப்படி நடந்துகொள்ளலாம் என்று சிலரும், பெண்கள்தான் தற்போது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று சிலரும் வாதிடுகிறார்கள். இன்னொரு சாரார் இயற்கைக்கு எதிராக பேசாதீர்கள்! ஆணும் பெண்ணும் வேறு வேறு தான், எப்படி சமமாக முடியும் என்கிறார்கள்! மாறுபட்டவர்கள் என்பதற்காக ஒடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. இந்த உலகம் மாறுபட்டவர்களுக்கானதே!

இக்கேள்விகளுக்கு 10 வருடங்களாக பதில் கூறி வந்தாலும், புதிதாக முளைத்துள்ள பெண் வெறுப்பாளர்கள் (Rightwing Misogynists / ignorants) எப்படி எதையும் படித்தறிவதில்லையோ, இதையும் படிப்பதில்லை. சமூகப் பிரச்சினைகள் பலதும் குறித்து பேசி இருந்தாலும், இத்தகைய “ஆம்பிளை” கண்களுக்கு எனது புகைப்படமும், பாலியல் ஒடுக்குமுறை குறித்த பதிவுகள் மட்டுமே தெரிகிறது! பாவம்!

விசயத்துக்கு வருகிறேன்!

சமூகத்தில் நிலவும் பல ஏற்றத்தாழ்வுகள் குறித்த விழிப்புணர்வு உள்ள அளவுக்கு பெண் ஒடுக்குமுறை குறித்த விழிப்புணர்வு இல்லை. குறிப்பாக பெண்களில் பலருக்கும் அது பற்றிய விழிப்புணர்வு இல்லை. நிலவும் ‘பண்பாடு’ சரியானதுதான், அதுதான் இயற்கை, நல்லது, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பெண்களும் நம்புகிறார்கள். இதுதான் ஆணாதிக்க சமூகத்தின் வெற்றி.  

முதலில் சில தெளிவுரைகள்:

·      பெண்ணியம் என்பது ஆண் வெறுப்பல்ல!

·      பெண்ணியம் என்பது பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று புனையப்படும் கட்டுக்கதை அல்ல!

·      பெண்ணியம் என்பது ‘பாலியல் சுதந்திரம்’ மட்டும் தொடர்பானது அல்ல! (அதுவும் அடக்கம். அது எதன் அடிப்படையில் என்பதற்கும் போதுமான உரையாடல்கள் உள்ளன).

·      பெண்ணியம் என்பது ஆணைப் போன்று குடிப்பது, புகை பிடிப்பது, உள்ளிட்ட ‘உரிமைகளைக்’ கோறுவதும் அல்ல!  உடல்நலன் என்று வருகையில் அது அனைவர்க்கும் தீங்கானதே!

·      மகளிரியல் என்பது ஆண்களின் நலனையும் உள்ளடக்கியதே! ஆண் பெண் சமத்துவமில்லாத துன்பகரமான வாழ்விலிருந்து ஆண்களையும் விடுவிப்பது அதன் தேவையாக உள்ளது.

பெண்ணியம் அல்லது மகளிரியல் என்பது பெண் என்னும் பாலின அடிப்படையில் விதிக்கப்படும் நடத்தை விதிகளை கேள்விக்கு உட்படுத்துவது, ஏன் அந்த பாகுபாடு உருவானது என்பதை வரலாற்றுபூர்வமாக எடுத்துரைப்பது, பாலின பாகுபாட்டை ஒழிப்பதற்காக வேலை செய்வது. மகளிரியல் சிந்தனையில் பல கண்ணோட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் இடையில் ஐக்கியம், முரன்பாடுகளும் உள்ளன. பொதுவாக பெண் ஒடுக்குமுறையை அங்கீகரித்துப் பேசும் கண்ணோட்டங்கள் இருப்பினும் உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டம் கொண்டது சோஷலிசப் பெண்ணியம். மார்க்சிய சித்தாந்தம் அதன் வழிகாட்டி.

மிக எளிமையாக சொல்ல வேண்டுமெனில், ஒரு பெண் முதலாளியாவதை, நாடாள்வதையெல்லாம் பெண்ணின் சாதனையாக கொண்டாடுவது பெண்ணியமாக இருந்தாலும், ஒடுக்கப்படும் பெண் இனத்தின் இந்த வளர்ச்சியை பாராட்டும் அதேவேளை, அந்த பெண்களின் வர்க்கத் தன்மையை, அவர்கள் யாரின் பிரதிநிதிகளாக செயல்படுவார்கள் என்பதை விமர்சனத்திற்கு உட்படுத்துவது சோஷலிசப் பெண்ணியம். பெண் விடுதலை பேசுவோரில் பெரும்பாலும் இது கலவையாகவும் வெளிப்படும். அனைத்திலும் முழுமுற்றானது என்று எதுவுமில்லை. நட்புமுரண்பாடு, பகை முரண்பாடு என்பது புரிய, வாசிப்பு தேவைப்படுகிறது.

ஆண் பெண் இருவருமே வர்க்கரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள். மகளிர் விடுதலை என்பது உழைக்கும் வர்க்க விடுதலையோடு தொடர்புடையது. தனியுடைமை தகர்ப்போடு தொடர்புடையது என்று ஏற்றுக்கொள்வதுதான் சோஷலிசப் பெண்ணியம்! இதை நமக்கு வழங்குவது மார்க்சியக் கண்ணோட்டம். மார்க்சிய சித்தாந்தத்தைப் படிப்பது அதன் முன்நிபந்தனை. மூன்றாம் பாலினமோ - பாலினம், வர்க்கம், இருத்தலியல் என அனைத்திற்காகவும் போராட வேண்டியுள்ளது என்பதையும் சேர்த்தே பேசுகிறோம்! இருமைக்குள் (நான்) எதையும் அடக்குவதில்லை!

பெண்ணியவாதிகள் பெண் விடுதலைக்காக மட்டும் போராடுவதோடு நிறுத்திக்கொள்வதில்லை! ஆனால் அதிலும் சாதி, வர்க்க,இன, மொழி, மத ரீதியான பிளவுகள் காரணமாக பெண் உரிமை பேசுவோரில் பலவிதமான போக்குகளைக் காண முடியும்.

நம் கண்ணுக்குத் தெரியாத நுண் உயிரிகளைக் காண எப்படி ஒரு  நுண்நோக்கி தேவைப்படுகிறதோ, அதுபோலத்தான் சமூக ஒடுக்குமுறைகளைக் காண ஒரு நுண்நோக்கி (microscope) தேவைப்படுகிறது. பல சித்தாந்தங்கள் அத்தகைய நுண்நோக்கிகளாக உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு வர்க்கத் தன்மை உண்டு.

பொதுவாக வலதுசாரி, இடதுசாரி என்ற பிரிவுகள் இருந்தாலும்.  உழைக்கும் வர்க்கப் பார்வையற்ற முற்போக்கு சிந்தனை என்னும் ஒரு பிரிவும் உண்டு. அதேபோல் வலதுசாரி எதிர்ப்பு / பார்ப்பன எதிர்ப்பு மனநிலை கொண்டவர்களாக சிலர் இருப்பார்கள், ஆனால் ஆணாதிக்கம், வர்க்கம் பற்றிய புரிதல் இவர்களுக்கு இருக்காது. அல்லது பாதி புரிதலோடு இருப்பார்கள். இவர்களில் பலர் ஒடுக்கப்படும் தரப்பின் பக்கம் இருந்து பேசினாலும், சில ஒடுக்குமுறைகளை அங்கீகரிக்க மாட்டார்கள். அல்லது குறிப்பிட்ட வழிமுறைகளில் அதை கையாளக் கூடாது என்று அவரவர் கண்ணோட்டத்தில் பேசுவார்கள். அதற்கும் வர்க்கத் தன்மையே காரணம்!  அல்லது அறியாமையாகவும் இருக்கலாம்.

சாதி, மதம், பாலினம், இனம், மொழி, திறன் இத்தியாதி அடிப்படையில் ஒடுக்கப்படுவதை – ஒடுக்குமுறை என்பது போல்

அதனோடு சேர்ந்து உழைப்புச் சுரண்டல் என்று ஒன்று நிலவுகிறது – அதனை சுரண்டல் என்கிறோம். வர்க்க முரண்பாடு!

பெண் / பாலின  அடிப்படையில் ஒடுக்கப்படுவது ஆணாதிக்கம் எனப்படுகிறது. அது தந்தை தலைமையிலான குடும்ப அமைப்பின் தோற்றத்தோடு தொடர்புடையது. அதோடு தனியுடைமை – அதாவது தனிச்சொத்து சேர்க்கும் அமைப்பும் உருவானது இரண்டும் சேர்த்தே இந்த சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்கும், சீரழிவுகளுக்கும் காரணம் என்பதுதான் மார்க்சிய விளக்கம். வர்க்க முரண்பாடு அடித்தளம்! படிநிலைகள் அதற்கு தேவைப்படும் ஏற்பாடு. ஒடுக்குமுறை என்பது அதன் கருவி என்று இதனை புரிந்துகொள்ளலாம்.

மனிதம் போற்றுவோம் என்போர், குறைந்தபட்சம் இவற்றையெல்லாம் படிக்க வேண்டும். ஆனால் நிலவும் சமூக அமைப்பின் சமூகமயமாக்கலில் ஊறி, திளைத்து போனவர்கள், அதிகாரப் பசி கொண்டவர்கள், மேலாண்மை சுகம் கண்டவர்களால் இதை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள இயலாது. யாருடைய ஏற்பிற்காகவும் சமூக மாற்றம் காத்திருப்பதில்லை.

ஒடுக்கப்படும் எதுவும் வெடித்துக் கிளம்புவதும், முரண்பாடுகளை களைந்தெறிய மாற்று ஏற்பாடுகளை உருவாக்குவதும் அறிவியல் ரீதியான இயக்கம். மார்க்சியம் அதையும் உணர்த்துகிறது. மார்க்சியம் படிங்க.

பெண்ணியம் என்பது ஆண் வெறுப்பும் அல்ல, பாலியல் பித்துமல்ல! அப்படி முத்திரை குத்துவதன் மூலம் பெண் விடுதலை இயக்கத்தில் பெண்கள் ஒருங்கிணைவதை தடுக்க முனையும்  வெறுப்பு அரசியல் பிரச்சாரம். Slut Shaming is its immediate weapon! but activists have seen worst than this! Nothing shall stop the movement of the oppressed. 


image courtesy: https://www.thequint.com/neon/gender/a-guide-to-feminism-for-men-everyone-anyone-can-be-a-feminist#11#read-more

related articles: https://saavinudhadugal.blogspot.com/2011/07/1.html (written in 2011!)

https://saavinudhadugal.blogspot.com/2020/06/blog-post_19.html

இந்த பொருள் தொடர்பாக பல நூல்களும், கட்டுரைகளையும் பலரும் எழுதியுள்ளனர். படித்தறியவும். 

No comments:

Post a Comment