இந்தியானாவில்
வாழும் பூர்வி பட்டேல் எனும் பெண்ணுக்கு, சிசுக்கொலை குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறைவாசம்
என வழங்கப்பட்டுள்ள தண்டனையானது பெண்ணின் கருப்பை உரிமை, பிள்ளை பெறும் உரிமை பற்றிய
விவாதங்களுக்கான அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அப்பெண்ணுக்கு இழைக்கப்பட்டுள்ள
அநீதியானது உலகளாவிய அளவில் பெண் உரிமை ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பையே ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு
கருக்கலைப்பு நடந்துவிட்டதாகக் கூறி பூர்வி பட்டேல் கடந்த ஜூலை மாதத்தில் மருத்துவ
உதவி நாடியுள்ளார். குழந்தை இறந்து பிறந்ததாகவும், என்ன செய்வதென்று தெரியாத நிலையில்
அவர் அவ்வுடலை ஒரு பையில் போட்டு குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
காவல் துறையினர் அவ்வுடலைக் கண்டுபிடித்து எடுத்ததோடு, சுயமாகக் கருக்கலைப்பு செய்துகொள்ள
பூர்வி சில மருந்துகளை இணையம் வழியாக வாங்கியதையும், “இப்போதுதான் குழந்தையைத் தொலைத்தேன்”
என்று அவர் தனது நண்பருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியையும் கண்டுபிடித்தனர். இதனடைப்படையில்
குழந்தைப் புறக்கணிப்பு மற்றும் சிசுக்கொலை குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டு
கைது செய்யப்பட்டார். தற்போது அவர் செய்தது குற்றமே என தீர்ப்பாகி 20 ஆண்டுகால சிறைத்
தண்டைக்கும் உள்ளாகி இருக்கிறார். சிசுக்கொலைக்காக சிறைத் தண்டனைப் பெற்ற முதல் பெண்மணி
அவர்தான் எனும் செய்தியும் குறிப்பிடத்தக்கது.
தான்
சிசுக்கொலை செய்யவில்லை, குழந்தை இறந்தேதான் பிறந்தது என்பது பூர்வி பட்டேலின் வாக்குமூலம்.
குழந்தை உயிருடன்தான் பிறந்தது என்றும், அவர் ஏற்கனவே கருக்கலைப்புக்கு முயன்று அது
தோல்வியுற்றதால் சுசுவைக் கொண்றார் என்றும் அரசு தரப்பு வாதங்கள் முன்வைத்திருக்கிறது.
ஆனால் குழந்தை உயிருடன்தான் பிறந்தது என்பதற்குப் போதுமான மருத்துவ ஆதாரங்கள் வைக்கப்படவில்லை
என்பது ஒருபுறம் இருக்க, சட்டம் அனுமதிக்கும் கருக்கலைப்பு காலமான 23-24 வாரம் எனும்
காலத்திற்குப் பிறகு பூர்வி கருக்கலைப்புக்கு முயன்றார் என்பதும் குற்றமாகி உள்ளது.
ஆனால் அவர் 25 வார கர்ப்பகாலத்தில் இருந்தார் என்றும் வாதிடப்படுகிறது.
இதற்கும்
அப்பால் சட்டத்தில் உள்ள முரண்களும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. உதாரணமாக, குழந்தை
புறக்கணிப்பு என்பது உயிருடன் பிறந்த குழந்தையை புறக்கணிப்பது என்பதாகும், ஆனால் மற்றொரு
குற்றமான சிசுக்கொலை என்பது கருக்கொலை என்பதாகும் என்றும், அப்படியிருக்கையில் இறந்து
பிறந்த ஒரு குழந்தையை ஒருவர் எப்படி புறக்கணிக்க முடியும் எனும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
சட்டங்களில் உள்ள முரண்கள் மற்றும் குறைபாடுகள் நாம் அறிந்ததே.
இவ்வழக்கையொட்டி
பெண்ணியவாதிகள் முன்வைக்கும் கேள்விகள் முக்கியமானவை. ஒரு பெண்ணின் கருப்பை உரிமை மற்றும்
பிள்ளை பெறும் உரிமை பற்றியும், பெண் உடல்
மீதான ஆணாதிக்க அதிகாரம் குறித்தும் முன்வைக்கப்படும் வாதங்கள் அவை. இச்சமூகத்தில்
பெண் தன் உடல் மீது எவ்வித உரிமையும் அற்றவளாக்கப்பட்டுவிட்டாள். பெண்மை எனும் பண்பு
விளக்கமும், பெண்மைக்குறிய இலக்கணங்களும் பெண்ணின் உடல் மீதான கட்டுப்பாட்டு விதிகளே
அன்றி அவை உடல்ரீதியானப் பண்புகள் அல்ல. அதேவேளை ஆண்மை என்பது உடல்ரீதியான பண்புகளாகவும்,
ஆண்மைக்குறிய இலக்கணமானது ஆளுதலுக்குறியதாகவும் உள்ளன. ஆண்மை என்பது பலம், பெண்மை என்பது
பலவீனம்; ஆண்மை என்பது பெருமை, பெண்மை என்பது சிறுமை எனும் அடையாளங்களாக விரிந்து ஆண்மை
என்பது அதிகாரம், பெண்மை என்பது கட்டுப்படுதல் எனும் எழுதா விதியாக நிலைபெற்றுள்ளது.
“பெண்
என்றால் கருப்பை”, “பெண் என்பவள் சுரப்பிகள் கொண்டு சிந்திப்பவள்” போன்ற பேச்சுகளை
சுட்டிக் காட்டும் சிமோன் தே பொவ்வா அவர்கள் மேலும் சில ‘பிரபல தத்துவவாதிகளின்’ ‘நற்பேச்சுகளையும்’
சுட்டிக்காட்டுகிறார்: குணத்தில் குறைபாடுடையவளாதலால் ஒருவள் பெண்ணாகிறாள் என்றார்
அரிஸ்டாட்டில், பெண் என்பவள் குறைபாடுடைய ஆண் என்பது புனித தோமையரின் விளக்கம்.
இவ்வாறாக
ஆணை வைத்தே பெண் என்பவள் விளக்கப்படுகிறாள். அதனால் ஆண் உயர்வானவனாகவும், பெண் தாழ்வானவளாகவும்
மாற்றப்படுகிறாள். குடும்பம் எனும் அமைப்பின் மூலம் வம்ச விருத்தி என்பதே ஆண் பெண்
உறவின் பிரதான நோக்கமாக நிறுவப்பட்டுள்ளது.
மனித இன விருத்திக்கு ஆண் பெண் இணை சேருவது அவசியமெனினும், இயல்பாக (இருந்த) இருக்க
வேண்டிய உறவானது காலப்போக்கில் உற்பத்தி உறவுகளின் வளர்ச்சிக்கு ஏற்ப அமைப்புரீதியான
கட்டுப்பாடுகள் நிறைந்த ஒன்றாகிப் போனது. எப்படி
உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் அபகரிப்பு நடவடிக்கைகளால் தனியுடமையானதோ அதேபோல் பெண்ணும்
தனியுடமை ஆக்கப்பட்டாள். தனியுடமை உற்பத்தி முறையில் வேலைப்பிரிவினையின் அடிப்படையில்
ஆண் தலைமை நிலை பெற்றான். இது தந்தை வழிச் சமூகம் அல்லது ஆணாதிக்கச் சமூகம் எனப்படுகிறது.
உற்பத்தி
சாதனங்கள் ஆணின் கட்டுப்பாட்டிற்குள் போனது போல் பெண்ணின் மறுஉற்பத்தி சக்தி மீதும்
ஆண் அதிகாரம் பெற்றவனானான். அதற்கேற்ற திருமண விதிமுறைகள், ஒழுக்க விதிமுறைகள், அமைப்புகள்
உருவாயின. உற்பத்திக்குத் தேவையானவற்றை கொடுப்பவன் (அபகரிப்பு மூலம் தன் உடைமயாக்கிக்
கொண்ட சாதனங்களைக் கொண்டு)அதிகாரம் படைத்தவனாகவும் பெறுபவன் (அந்நிலைக்குத் தள்ளப்பட்டவன்)
அடிமையாகவும் மாற்றப்பட்டான். பெறுபவன் தனது வாழ்வாதாரத்திற்காக உழைப்பது போக கொடுப்பவனின்
(அவன் எந்த உடல் உழைப்பையும் செலுத்தாத நிலையில்) செல்வச் சேகரிப்பிற்காகவும் உழைக்க
வேண்டும் என்பதே இவ்வுற்பத்தி முறையில் உள்ள முரண்பாடு மற்றும் பிரச்சினை. அதேபோல்
ஓர் உயிர் உருவாக வித்தைக் கொடுக்கும் ஆண் அதிகாரம் படைத்தவனாகவும், அதனை தன் உடலுக்குள்
பெற்று உயிர் வளர்த்து முழுமையடைந்த ஜீவனாக பெற்றெடுக்கும் பெண் அடிமையானாள். இந்த
மறு உற்பத்தியில் ஆணின் பங்கு பகுதியளவுதான் எனினும், கொடுக்கும் இடத்தில் அவன் இருப்பதால்
– அதாவது ஓர் உயிர் உருவாகத் தேவைப்படும் வித்தை தன் உடலிலிருந்து பிற உடலுக்குக் கொடுப்பதால்
அவன் சக்தி வாய்ந்தவனாக, உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான். அதேவேளை உயிர் உருவாகத் தேவைப்படும்
கருமுட்டை பெண் உடலில்தான் உள்ளது என்றாலும், அது முழுமையடைய ஆணின் வித்து தேவை, அதாவது
இரு உயிர்களின் கூட்டிணைவில் மட்டுமே ஓர் உயிர் உருவாகும். இது ஒரு இயற்கையான ஏற்பாடு
என்பதை சௌகரியமாக புறம்தள்ளிவிட்டு ஆணாதிக்கமானது பெண்ணின் கருப்பை மீது அதிகாரத்தை
வளர்த்துக்கொண்டது. பெண்ணை வெறும் பிள்ளை பெரும் இயந்திரமாக மாற்றியும் வைத்துள்ளது.
இவ்வாறெல்லாம்
பெண்ணியவாதிகள் விளக்கும்போதும், தங்கள் உடல் மீதான ஆணாதிக்க அதிகாரத்தை முறியடிக்க
முனையும்போதும் பெண்கள் பல்வேறுவிதமான எதிரிவினைகளை முன்னெடுக்கின்றனர். ‘எங்கள் கருப்பை
எங்கள் உரிமை, பிள்ளை பெறும் அல்லது மறுக்கும் உரிமை பெண்களிடமே உள்ளது’ போன்றவை அதில்
அடக்கம். இதன் ஒரு பகுதியாகவே கருக்கலைப்பு உரிமையை பெண்கள் போராடி (உண்மையில் அது
மாபெரும் போராட்டமே) வென்றனர். வைதீக மதங்களின் அதிகாரம் மேலோங்கி இருக்கும் நாடுகளில்
இன்னமும்கூட கருக்கலைப்பு பெரும் தண்டனைக்குறிய குற்றமாகவே உள்ளது. மேலும் சில நாடுகளில்
குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு கருக்கலைப்பு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின்
உடல் நலனுக்கு பாதிப்பு, கருக்கலைப்பு பெருகிவிட்டால் மனித இனம் எப்படி வளரும்? ஓர்
உயிரைக் கொல்வது பாவம் என்றெல்லாம் எதிர்வாதங்கள் வைக்கப்படுகின்றன. பெண்கள் மீதுதான்
இவர்களுக்கு எத்தனை அக்கறை, எத்தனை அன்பானவர்கள் இவர்கள் என்று நாம் எண்ண வேண்டும்
இல்லையா? ஆனால் பென்ணியவாதிகள் ஏன் இவ்வன்பை ஆதிக்கம் என்கின்றனர்? திமிர் பிடித்தவர்கள்
என்பதே ஆணாதிக்கவாதிகளின் பதிலாக இருக்கிறது.
பெண்கள்
பிரச்சினையில் ஆணாதிக்கவாதிகளின் கருத்துகளை கேட்கத் தயாராக இருக்கும் இச்சமூகம் பெண்களின்
கருத்துகளை ஏன் கேட்க மறுக்கிறது? பெண்களுக்காக வழக்காடுகின்ற உரிமையை, தீர்ப்பு வழங்கும்
உரிமையை ஆணாதிக்கவாதிகளுக்கு வழங்கும் இச்சமூகம் ஏன் பெண்களைப் பேசக்கூட அனுமதிப்பதில்லை?
உண்மை சுடும் என்பதாலா?
ஊணையும்
உயிரையும் ஈந்து பல்வேறு தியாகங்களைச் செய்து உயிரைப் பெற்றுடுக்கும் சக்தி வாய்ந்த
பெண் உயிரின் மகத்துவம் அரியாதவளாகவா இருப்பாள்? மனித இன வளர்ச்சிக்கு இது இயற்கையான
ஏற்பாடு என்பதை அறியாத அளவுக்கு அவள் முட்டாளா என்ன? பின் ஏன் பெண்ணியவாதிகள் கருக்கலைப்பை
ஆதரிக்கின்றனர்? ஏன் என்றால் பெண்ணியவாதிகள் ஓர் உயிரை உயிராகக் கருதுகையில் ஆணாதிக்கவாதிகள்
உயிரை உடைமையாகக் கருதுகின்றனர் என்பதே இதில் உள்ள வேறுபாடு. ஆம், தனியுடமைச் சொத்துக்களைப்
பாதுகாக்க குடும்பமானது வாகனமென்றால், வாரிசு என்பது அதன் அச்சாணி. அவ்வமைப்பு சிதைந்து
போகாமல் இருக்க உருவானவை பெண் பாலினத்திற்கான விதிகள். பெண் உடலை அந்நியமாக்கிய விதிகள்.
அவளது அனைத்து செயல்பாடுகளுக்கும் சமூகச் சாயல் பூசும் விதிகள். சமூக மேம்பாட்டிற்கு
எதிரானவர்கள் அல்ல பெண்ணியவாதிகள், ஆனால் நிச்சயம் அவர்கள் ஆணாதிக்கச் சமூகத்தின் மேம்பாட்டிற்கு
எதிரானவர்களே. அதன் அச்சாணியாகத் திகழும் வம்ச விருத்திக்காக நிலவும் பெண்ணின் கருப்பை
மீதான அதிகாரத்தை பெண்ணியவாதிகள் இந்தக் கோணத்திலிருந்துதான் எதிர்க்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும்
ஆணாதிக்கம் என்று குதர்க்கமாகப் பேசுவதாகத் தோன்றலாம். ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களை
இரண்டு வகையினராகப் பிரிக்கலாம்: 1) அறியாதவர்கள் – போதுமான சமூகக் கல்வியைப் பெறாதவர்கள்
2) சுயநலக்காரர்கள் – அனைத்தும் தெரிந்தும் தனியுடமையைத் தக்கவைத்துக்கொள்ள வழக்காடுபவர்கள்.
கருக்கலைப்பு
உரிமையில் நாம் பல்வேறு சூழல்களைக் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. அது வெறும் கருமுட்டை
வளரும் காலகட்டத்தை மட்டும் பொறுத்ததன்று. எல்லா நேரங்களிலும் பெண்ணானவள் விரும்பி
கர்ப்பம் தரிப்பதில்லை. பெரும்பாலான நேரம் தன் உரிமை என்னவென்று தெரியாத பெண் ஒன்று
குடும்ப உறவுகளின் அல்லது கணவரின் கட்டாயத்தின் பேரில் குழந்தை பெற நிர்பந்திக்கப்படுகிறாள்.
அடுத்து சமூக அழுத்தம். திருமணமாகாதப் பெண்கள், சிறுமிகள் எனில் காதல் வயப்பட்டு ஆணின்
நிர்பந்தத்திற்கு உள்ளாக நேர்கிறது. பெண் ஏன் உடன்படுகிறாள் என்று கேள்வி கேட்பது மிகவும்
சுலபம், ஆனால் அவளை உடன்படச் செய்ய ஆண் அதிகாரத்தையும், உணர்ச்சியையும் எப்படி கையிலெடுப்பான்
என்பது யாவரும் அறிந்ததே. உடலுறவுக்கு மறுத்தால் “என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா”
என்பது போன்ற பேச்சு, இல்லையேல் மிரட்டல்… மேலும், இதில் ஆணுக்கு எந்த பங்கும் இல்லையா?
ஆணிடம் ஏன் அத்தகைய கட்டுப்பாடுகள் எதிர்பார்க்கப்படுவதில்லை? இதுபோன்ற நிபந்தனைகளைக் கூட விட்டுவிடுவோம். காதலிக்கும்
இருவர் தங்களது அன்பை இருவரின் முழுச் சம்மதத்தோடு எப்படி வேண்டுமானாலும் பரிமாரிக்கொள்ள
உரிமை உண்டுதானே. இது ஒன்றும் சட்டப்படி குற்றமில்லையே, குறிப்பாக திருமண வயதை எட்டிய
பின்னர், தம் உறவை எப்படி வளர்ப்பது, எதைத் தவிர்ப்பது என்பது சம்பந்தப்பட்டவர்களின்
உரிமை.
இதில்
பெண் கர்ப்பமுற்றுவிட்டாள், அதை சுமக்கும் அல்லது கலைக்கும் உரிமை பெண்ணிடமே உள்ளது.
தன் உடல்நிலை, மனநிலை, குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரம் இவையெல்லாவற்றிற்கும் மேல்
ஆண் (அல்லது கணவன்) தன்னை நடத்தும் விதம், உறவுகளின் கொடுமைகளால் திருமண வாழ்வின் நிச்சயமின்மை
ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பெண் முடிவெடுக்கும் சூழ்நிலை உருவாகிறது. யாரும் பொழுதுபோகாமல்
கருக்கலைப்பில் ஈடுபடுவதில்லை, ஏனென்றால் அதனால் உண்டாகும் உடல்நலப் பிரச்சினைகள் மற்றவர்களை
விட சம்பந்தப்பட்ட பெண் நன்கறிவாள். திருமணத்திற்கு முன் கர்ப்பம் தரிக்கும் பெண் மேற்சொன்ன
காரணங்களோடு ஆணாதிக்க சமூக அவமானத்திற்கு அஞ்சியே அந்நிலைக்குத் தள்ளப்படுகிறாள். சில
நேரங்களில் பெண்கள் உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகள், சாதனங்களைத் தாண்டியும் பெண்
கருத்தரிக்க நேர்ந்தால் அதைக் கலைக்க முடிவெடுக்கலாம்.
ஒரு
சமூகத்தில் எந்தளவுக்கு ஆணாதிக்க வேர் ஆழ ஊன்றியுள்ளதோ அந்தளவுக்கு அச்சமூகமானது பெண்ணுக்கு
அதரவாக இருக்க வேண்டும். ஏனென்றால் பெண்ணின் அவல நிலைக்கு அச்சமூகமே காரணம்.
பிள்ளை
பெறும் விஷயத்தில் குடும்ப அமைப்பின் சமூக அழுத்தம், ஆணாதிக்கம் ஒருபுறமிருக்க, வல்லுறவுக்குள்ளாகி
கர்ப்பம் தரிக்கும் சிறுமிகள், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதால் கர்ப்பம் தரிக்கும்
பெண்களின் பிரச்சினைகளை நாம் எந்த உரிமைக்குள் பொறுத்திப் பார்ப்பது? இதில் பல்வேறு
விதமான உளவியல் சிக்கல்கள் உள்ளன. மேலும் தான் வல்லுறவுக்காளானதையோ அல்லது ஏமாற்றப்பட்டதையோ
தைரியமாக சொல்ல வழியில்லாதப் பெண்களுக்கு இதுபோன்ற வாரக் கணக்குகளின் அடிப்படையில்
நிலவும் சட்டம் எப்படி நியாயம் வழங்கும்?
இதற்கெல்லாம்
அப்பால், பல நேரங்களில் ஆண்களின் வன்முறையால் பெண் கருக்கலைப்பிற்கு உள்ளாகிறாள், போதிய
ஊட்டச்சத்தின்றி பெண்ணுக்கு கருக்கலைப்பு நேருகிறது, உச்சபட்சமாக பெண் குழந்தை பிறந்தால்
அது குறையாகவும், சுமையாகவும் கருதிக் கொல்ல்ப்படுகிறது.
பெண் சிசுக் கொலையில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இரத்தமும்
சதையுமாகப் பிறந்த குழந்தையைக் கொல்லப்படும்போது மௌனம் காப்பவர்கள், சந்தர்ப்ப சூழ்நிலையால்
கருக் கலைப்பை நாடும் உரிமையை மறுப்பது கேலிக்கூத்தானது. இதில் மருத்துவர்கள் செய்யலாம்,
சுயமாகக் செய்துகொள்ளக்கூடாது என்பதெல்லாம் சமூக அழுத்தம் தருவதற்கான ஏற்பாடு. மேலும்
அது வணிக நலன் சார்ந்தது, அதில் பெரிய மனிதாபிமானமெல்லம் ஒன்றுமில்லை.
என்கவுண்டர்
கொலைகள், தவறான மரண தண்டனை, அரசியல் கொலைகள், கலவரங்களில் துப்பாக்கிச் சூடு, போர்
மற்றும் இன்னபிற அராஜகங்கள் மூலம் அரசு செய்த, செய்கின்ற கொலைகள்; மேலும், முதலாளித்துவ
பொருளாதாரத்தின் விளைவாக ஏற்படும் ஏழ்மை, வறுமை, கடன்சுமைகள், பணிச் சுமை, மன நெருக்கடி
போன்றவற்றால் விவசாயிகள் உள்ளிட்டோர் செய்துகொள்ளும் தற்கொலை போன்றவற்றால் நேரும் மானுடப்
பேரழிவைக் காட்டிலும் பெண்களின் கருக்கலைப்பினால் ஒன்றும் பெரிய உயிர் இழப்பு ஏற்பட்டுவிடப்போவதில்லை.
மேலும் வரதட்சனைக் கொடுமை, குடும்ப வன்முறை, வல்லுறவு, ஆசிட் வீச்சு, அரசியல் போராட்டங்கள்,
பெண் சிசுக் கொலை காரணமாக கொல்லப்பட்ட பெண்களை விட பெண்களின் கருக்கலைப்பினால் நேர்ந்த, நேரும் உயிரிழப்பு விகிதம் நிச்சயம் சொற்பமே.
பெண் மீதான ஒழுக்கவாதக் கோட்பாட்டு விதிகளும், பெண்கள் மனநிறைவுடன் வாழ முடியாத இந்த
சமூக அமைப்புமே அச்சொற்ப மரணங்களுக்கும் காரணம்.
இறுதியாக,
சமூக அக்கறையுடன் கூடிய, நல்லறிவுக்கு அடையாளமான
உரையாடலையே பெண்ணியவாதிகள் என்றும் விரும்புவர் என்பதால் அறம் சார்ந்து சில பரிந்துரைகளை
முன்வைக்கலாம். திருமணமானப் பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்ளும் உரிமை விஷயத்தில்,
இருவர் ஏற்படுத்திக்கொண்ட உறவுக்கு மரியாதை அளிக்கும் விதமாக கருக்கலைப்பில் கணவனின்
சம்மதத்தைப் பெற வேண்டும் என்று நாம் பரிந்துரைக்கலாம். ஆனால் அது சில ‘முன் நிபந்தனைகளுக்கு
உட்பட்டது’. முதலில், கர்ப்பம் தரிக்க, குழந்தைப் பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் உரிமையும்,
குழந்தைப் பேறு பற்றிய போதிய அறிவும் அப்பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். கணவன்
மனைவி இருவரும் எவ்வித சமூக அழுத்தத்திற்கும் ஆட்படாது தமது விருப்பத்தை அடிப்படையாகக்
கொண்டு முடிவுகளை எடுக்கும் அறிவும் சுதந்திரமும் பெற்றவர்களாக இருப்பது இதில் அவசியம்.
பெண் முழுதும் உடன்பட்டு எடுத்த முடிவுக்கு அவள் பொறுப்பேற்கவேண்டும் என்ற அறத்தின்
அடிப்படையில் இதை நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இதே விதி ஆணுக்கும் பொருந்தும். அதேபோல் சமூகத்தின் அனைத்து குடிமக்களையும் ஏற்றத்தாழ்வற்ற
நிலையில் வாழவைப்பதாகச் சொல்லி ஆட்சியில் இருக்கும் அரசுகளுக்கும் இவ்விதி எல்லா விஷயங்களிலும்
பொருந்தும்.
இருவர்
உடன்படாத சூழலில் உண்டான கர்ப்பம், ஆணின் வன்முறையினால்
உண்டான கர்ப்பம், உறவில் பிணக்கு, குடும்ப வன்முறை, பொருளாதாரம், உடல்நலம், மனநலம்
போன்ற விஷயங்களால் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருப்பின் நிச்சயம் அப்பெண்ணுக்கு கருக்கலைப்பு
உரிமை இருக்க வேண்டும். கருக்கலைப்பு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். பிள்ளை
பெறும் உரிமை பெண்களுடையது என்பதும் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும். சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்ட
நாடுகளில் கருக்கலைப்புத் தொடர்பாக பெண்கள் முடிவெடுப்பதற்கு எதிராக வகுக்கப்பட்டிருக்கும்
அனைத்து நிபந்தனைகளும் முற்றிலுமாகக் கைவிடப்பட வேண்டும். மனித உரிமையின் அடிப்படையில்
பெண்ணுக்கு தன் உடல் மீது முழு உரிமை வழங்கப்பட வேண்டும். பிறந்திராத குழந்தைக்காக
கவலை கொள்ளும் ஆணாதிக்க அரசும், அரசு இயந்திரமும், சமூகமும் பிறந்து உயிருடன் வாழும்
பெண்கள் பாதுகாப்போடும், மனநிறைவோடும், ஆரோக்கியத்தோடும் எல்லாவற்றிற்கும் மேல் சாதி,
மத, வறுமைக் கொடுமையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாக வாழும் உரிமையை முதலில் உறுதி
செய்ய வேண்டும், அதை நடைமுறைப்படுத்துவதில் தமது கவனத்தை செலுத்த வேண்டும். ஆதிக்கங்கள்
ஒழிந்துவிட்ட சமூகத்தில் அழிப்பிற்கு அவசியம் ஏற்படாது.
நன்றி: உயிரோசை
No comments:
Post a Comment