நிர்பயா
என்று பொதுப்பெயரிடப்பட்ட புதுதில்லி மருத்துவ மாணவி ஒருவர் 2012ஆம் ஆண்டு டிசம்பர்
மாதத்தில், 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான வல்லுறுவுக்காட்பட்டு, உடலுறுப்புகள் சிதைக்கப்பட்ட
நிலையில் மரணதித்தார். இச்சம்பவமானது இந்தியாவின் ஆன்மாவை சற்றே அதிகமாக உலுக்கியது,
வரலாறு காணாதப் போராட்டங்கள் நிகழ்ந்தன. அதன் விளைவாக இந்திய அரசாங்கமானது முன்னாள்
நீதியரசர் வர்மாவின் தலைமையில் ஒரு நீதி விசாரணைக் குழுவை அமைத்தது. பல்வேறு தரப்பினரின்
பரிந்துரைகளையும் உள்ளடக்கி (கிட்டத்திட்ட 80,000 பரிந்துரைகள்) நீதியரசர் வர்மாக்
குழுமம் தனது அறிக்கையை சமர்பித்தது. அவ்வறிக்கை குறித்து நாம் மற்றொரு கட்டுரையில்
விரிவாகப் பார்ப்போம்.
இப்போது,
இந்தியாவின் மகள் என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் ஒரு ஆவணப்படமானது அம்மருத்துவ
மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. லெஸ்லீ
உட்வின் என்பவர் உருவாக்கியிருக்கும் அத்திரைப்படத்தை வெளியிட இந்திய அரசு தடை விதித்துள்ளது.
அந்த ஆவணப்படம் குறித்து நமக்கு பல்வேறு விமரசனங்கள் இருந்தாலும், ஒரு படைப்பைத் தடை
செய்யக் கோரும் போராட்டங்களை, தடை செய்யும் அரசாணையை நாம் எக்காரணம் கொண்டும் ஆதிரக்க
இயலாது.
ஒவ்வொரு
முறை இதுபோன்ற வல்லுறவு குற்றங்கள் நிகழும்போதும் குற்றவாளிகளின் மனநிலை குறித்த ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது என்பதை விவாதித்து வந்துள்ளோம். அதிலும் குறிப்பாக வல்லுறவுக்குள்ளாகும்
பெண் உடல் மீது நிகழ்த்தப்படும் துன்புறுத்தல்கள் மனிதர்கள் கற்பனை செய்தும் பார்க்க
முடியாத கொடுமைகளாகவும், வக்கிரங்களாகவும் இருக்கும்போது, மனநிலை குறித்த ஆய்வுகள்
மேற்கொள்ளப்படுவது அவசியமாகிறது.
அந்த
வகையில் இதுபோன்ற ஆவணப்படங்கள் வரவேற்கத்தக்கவை. விமர்சனனக்கள் ஒருபுறம் இருக்க, அன்று
நிகழ்ந்தது என்ன என்பது குறித்து முகேஷ் சிங் அளித்துள்ள வாக்குமூலப் பதிவிலிருந்து
நாம் சில முக்கியமான விஷயங்களை விவாதிக்க வேண்டியுள்ளது.
முகேஷ்
சிங் மற்றும் குற்றவாளிகளின் வழக்குறைஞர்கள் வெளிப்படுத்தியிருக்கும் பெண் பற்றிய கருத்துகள்
அப்பட்டமாக ஆணாதிக்க சிந்தனை கொண்டவை. பெண்கள் ஏன் இரவு நேரங்களில் உலாவுகின்றனர்,
ஆண் நட்பு ஒழுக்கக்கேடானது, பெண்கள் மலர் போன்றவர்கள், வைரத்திற்கு நிகரானவர்கள் அவர்கள்
பொத்தி வைக்கப்பட வேண்டியவர்கள், தெருவில் விட்டால் இப்படித்தான் சிதைந்து போகும் அல்லது
கவர்ந்து செல்லப்படும், அதையும் மீறி அவள் வல்லுறவுக்காளானால் அவளை பண்ணை வீட்டில்
வைத்து எரித்துக் கொன்று கௌரவத்தைக் காக்க வேண்டும் எனும் அறிவுரைகளை அவர்கள் அடுக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சொல்லும் (victim blaming) போக்கு படிப்பறிவற்றவர்கள்
மத்தியில் மட்டுமின்றி படித்தவர்கள் மத்தியிலும்,
இவ்வளவு ஏன் நீதித்துறை வரையிலும்கூட காண முடிகிறது.
இவற்றுக்கெல்லாம்
உச்சம் முகேஷ் சிங்கின் தற்காப்பு வாதம், வல்லுறவுக்குள்ளாகும்போது பெண்கள் எதிர்க்கக்கூடாது,
அமைதியாக இருந்துவிடுவதே அவர்களுக்குப் பாதுகாப்பு, எதிர்க்குபோது எதிராளிக்கு ஆத்திரம்
கூடுகிறது என்றெல்லாம் கூறியவர், தம்மை தூக்கில் போடுவது மேலும் ஆபத்தானது, இப்போதாவது
வல்லுறவு செய்துவிட்டு விட்டுவிடுகின்றனர், இனிமேல் தாம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க
கொலை செய்துவிடுவார்கள் என்று ஒரு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
பெண்
பற்றிய சமூக மனநிலையின் சாட்ச்சியங்கள் இவை. ஆணுக்கு எத்தகைய அதிகாரங்களை இச்சமூகம்
வழங்கியுள்ளது அதன் பாதகங்கள் என்ன என்பதை கேள்விக்குட்படுத்துவதை விடுத்து, ஆணாதிக்கவாதிகள்
மீண்டும் மீண்டும் பெண்களின் நடத்தைகளே அவர்களுக்கெதிரான வன்முறைகளுக்குக் காரணம் என்று
சொல்லி வருகின்றனர். பெண்களும் மிகவும் பொருமையாக, இன்னும் சொல்லப் போனால் பெருந்தன்மையாக,
தங்களை ஒடுக்கும் ஆண்களை பதிலுக்கு ஒடுக்குவது எனும் சிந்தனையை கைகொள்ளாமல், இது சமூக
அமைப்பின் பிரச்சினை என்று புரிய வைக்க முயற்ச்சி செய்து வந்துள்ளனர். பெண் குழந்தைகளை
கருவிலேயே அழிப்பதன் மூலம் பெண் இனப்படுகொலை செய்துவரும் இந்த ஆணாதிக்க சமூகத்தில்
பதிலுக்கு ஆண் குழந்தைகளைக் கருவிலேயே கொன்றால்தான் இவர்களுக்குப் புத்தி வரும் என்பன
போன்ற மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சமூகத்தை நோக்கி இன்னமும் பெண்கள்
நம்பிக்கையோடு உரையாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், குற்ற உணர்வின்றி பேசும்
ஒருவனுக்காக ஆஜராகும் வழக்குறைஞர்கள் போன்றோரோ மீண்டும் மீண்டும் பெண்களை வீட்டிலேயே
ஒடுக்கி வையுங்கள், பெண்களை கட்டுப்பாடுடன் வளர்க்க வேண்டும், விதி மீறும் பெண்களுக்கு
கற்பழிப்பு என்பது தண்டனை என்று ஆணாதிக்கத் திமிரோடு பேசி வருகின்றனர்.
மீண்டும்
மீண்டும் நாங்களும் இதையேக் கேட்கிறோம், ஆனால் அவர்களிடம் இதற்குப் பதில் இருப்பதில்லை:
வீட்டை விட்டு வெளியில் செல்லும் பெண்கள் மட்டும்தான் வல்லுறவுக்கு ஆளாகிறார்களா?.
குழந்தைகள், சிறுமிகள் எந்த ஆணாதிக்க விதிகளை மீறியதால் வல்லுறவுக்குள்ளாகின்றனர்,
கொல்லப்படுகின்றனர்? பெற்ற தந்தையே மகளை வல்லுறவுக்கு ஆளாக்குவதற்கும் பெண்கள்தான்
காரணமா? கீழ் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மூதாட்டியை வல்லுறவு செய்தான்
மேல் வீட்டில் வாடகைக்குக் குடியமர்ந்தவன், அதற்கு யார் காரணம்? கிராமத்துப் பாட்டிமார்கள்
இரவிக்கை அணியாதது நகரத்து இளைஞனை தூண்டியதா?
காதலை
ஏற்க மறுத்தால் அல்லது இன்னும் இதர பழி வாங்கலுக்காக பெண்கள் மீது அமிலத்தை விசுகிறார்களே
அதற்கும் பெண்களின் நடத்தைதான் காரணமா? சேலையே கட்டிக்கொண்டு வேலைக்குப் போனாலும் பெண்ணின்
பின்புறத்தைத் தட்டிப் பேசும் மேலதிகாரியின் வக்கிரத்திற்கும் பெண்ணின் நடத்தைதான்
காரணமா? பெண்ணை வீட்டிலேயே பூட்டி வைப்பதுதான் இதற்கெல்லாம் தீர்வா? வீட்டிலேயே இருக்கும்
பெண்கள் எந்தத் துன்புறுத்தலுக்கும்
உள்ளாவதில்லையா?
மது
அருந்துவதற்குப் பணம் தரவில்லையென்று கர்ப்பிணிப் பெண்ணை உயிரோடு கொளுத்திய கணவன் என்றொரு
செய்தி வெளியாகி உள்ளது, அவன் குடிகாரன் என்ற
‘புரிதலோடு’ அவனை அணுக வேண்டுமா? வாச்சாதியில், மணிப்பூரில், கஷ்மீரில், இலங்கையில்
இன்னும் உலகின் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையால், இராணுவத்தால் பெண்கள் கற்பழிக்கப்பட்டதற்கும்
பெண்களின் நடையும் உடையும், அவர்களது சுதந்திர கோஷங்களும்தான் காரணமா?
பெண்கள்
மீது நிகழ்த்தப்படும் இவ்வளவு கொடுமைகளையும் அன்றாடம் பார்த்து வரும் மனிதத் தன்மை
உள்ள எவருக்கும் எழ வேண்டிய முதல் கேள்வி “பெண்களின் நிலை ஏன் இவ்வாறு உள்ளது”, ஆண்களுக்கு
மட்டும் எங்கிருந்து இவ்வளவு அதிகாரங்கள் வந்தன என்பதாகத்தான் இருக்க வேண்டும். மாறாக, பெண் என்பவள் இப்படி, பெண் என்பவள் அப்படி,
இயற்கையிலேயே அவள் பலவீனமானவள், பாதுகாக்கப்பட வேண்டியவள், ஆணே அவளது பாதுகாவலன் என்று
சொல்வது அறிவுக்குப் புறம்பானதாகவும், மனிதத் தன்மையற்ற பேச்சாகவும் தோன்றவில்லையா?
ஆண்
பெண் என்பது இயற்கை உயிரினத்தின் வெவ்வேறு வடிவங்கள் அவ்வளவே. ஆனால் ஆணுக்கு ஒரு விதியும்,
பெண்ணுக்கு ஒரு விதியும் எழுதியது சமூகமே அன்றி அவை எதுவும் இயற்கையானவை அல்ல என்பதை
பெண்ணியவாதிகளும், முற்போக்குச் சிச்தனையாளர்களும், சமத்துவாதிகளும் தொடர்ந்து விளக்கி
வந்துள்ளனர். இருந்தபோதிலும், அவர்களின் குரல்கள் நசுக்கப்பட்டு வந்துள்ளன. சில வேளைகளில்
கொல்லவும்பட்டிருக்கின்றனர். இந்த ஏற்றத்தாழ்வால் பாதிக்கப்படப்போவது யாரோ ஒரு ‘ஒழுக்கங்கெட்டப்’
பெண் மட்டுமல்ல, ஏதோ ஒருநாள் சம்பந்தப்பட்ட ஆணாதிக்கவாதிகளின் குடும்ப உறவுகளில் ஒருவராகவும்
இருக்கலாம். ஏனென்றால், வல்லுறவு செய்ய வருபவனுக்கு எதிரில் இருப்பது பெண் உடல், தனது
காட்டுமிராண்டித்தனங்களுக்கு வக்காலத்து வாங்கிய
‘நல்லுள்ளத்தின்’ உறவு என்பதெல்லாம் தெரியாது.
மனித
வாழ்வின் தேவைக்காகவும், மனித உயிரின வளர்ச்சிக்காகவும் சிலவித ஏற்பாடுகள் செய்துகொள்வதென்பது
ஒரு வசதிக்காகவே அன்றி அதுவே நிலைபேறுடையதாகிவிட முடியாது. மேலும் அத்தகைய ஏற்பாடுகள்
மனித விதிகளே அன்றி இயற்கை விதிகள் கிடையாது. இதுபோன்ற பாகுபாடுகளும், ஒடுக்குமுறை
விதிகளும் சார்ந்து வாழும் தன்மையிலிருந்து எழுபவை. சார்ந்து வாழ்தல் என்பது இயற்கையானது, அதை அன்பினால் பரிவர்த்தனை செய்துகொள்ள
வேண்டுமேயன்றி அதிகாரத்தினால் அல்ல.
பெண்
என்பவள் இயற்கையில் ஓர் உயிரினம், அவளுக்கென்று ஒரு விதி எழுத இங்கு எவருக்கும் உரிமையில்லை.
பலம் பலவீனம் போன்ற இருமைகள் எல்லாமே மனிதர்களின் மதிப்பீடு. அது ஒரு கற்பிதம். இயற்கையில்
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தன்மை உண்டு அந்தந்த தன்மைக்கேற்ப ஒரு பயனும் உண்டு, அவ்வளவே.
மற்றபடி மனிதர்களுக்குள் நிலவும் உறவுகள் தேவையின் பொருட்டு வடிவமைக்கப்பட்டவை, அந்தத்
தேவையில் ஆண்களின் நலன் மட்டுமே மையமாக இருப்பதே இப்பிரச்சினைகளுக்குக் காரணம். ஆணைச்
சார்ந்து பெண் வாழும் சூழ்நிலையை உருவாக்கி, ஆண்களுக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கியதே
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் அனைத்து வன்முறைகளுக்கும் காரணம்.
அதிகாரத்தை
ருசித்துவிட்ட ஆணாதிக்கவாதிகள் அதைத் தக்கவைத்துக்கொள்ள ஒடுக்குமுறையையே கையிலெடுக்க,
பெண்ணியவாதிகளோ அறிவை கையிலெடுக்கின்றனர். ஆண் மைய சமூக அமைப்பை சமத்துவ முறையிலான
சமூக அமைப்பாக மாற்ற அவ்வறிவைக் கொண்டு போராடி வருகின்றனர். ஆனால் அதற்கு மதிப்பளிக்காது
பெண்களை குற்றம்சாட்டியும், அவர்களது உரிமைகளை மறுத்தும், பெண்களை ஒடுக்குவதை மட்டுமே
தீர்வாக இந்த ஆணாதிக்க சமூகம் முன்வைக்குமேயானால், பின்னர் பெண்களும் சமுத்துவத்திற்கான
பேச்சுவார்த்தைகளை கைவிட்டு, பெண்மைய்ய உலகாக இவ்வுலகை மாற்றுவதே தீர்வு என்ற முடிவுக்கு
வரும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். ‘பலவீனமாக்கப்பட்டவர்களை’ இப்படி மாறி மாறி ஒருவருக்கொருவர்
போட்டி போட்டுக்கொண்டும், ஒடுக்கிக் கொண்டும், சுரண்டிக் கொண்டும் வாழும் உலகை சமத்துவவாதப்
பெண்கள் விரும்புவதில்லை. அவர்களின் மனித நேயமும், சமூகப் பொறுப்புமே இந்த ஆணாதிக்க
சமூகத்தை இன்னமும் கருணையோடு அணுகச் செய்கிறது. ஆண்களைப் போன்று வன்முறையான வழிமுறைகள்
பெண்ணும் கையிலெடுப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டால் ஒருகவளை சோறு கூட ஆயுதமாக மாறக்கூடும்.
நன்றி - உயிரோசை
நன்றி - உயிரோசை
No comments:
Post a Comment