Jan 5, 2015

கொடிது கொடிது பெண்களாய் பிறப்பது கொடிது...


இந்தியா என்றாலே அதன் பன்மைக் கலாச்சாரமும், ‘ஒழுக்க நெறியும்’, குடும்ப அமைப்பின் மகத்துவமும் புகழ்ந்துரைக்கப்படும் நிலை மாறி இப்போது இந்தியா என்றால் அது ஒரு வல்லுறவு தலைநகரமாக, பெண்களுக்குப் பாதுகப்பற்ற நாடாக , பெண்களின் அடிப்படை உரிமைகளான வாழும் உரிமை, உடல் நலம், திருமண உரிமை ஆகியவைகூட மறுக்கப்படும் நாடாக உலக வரைபடத்தில் காட்சி அளிக்கிறது. வளர்ந்து வரும் நாடு இந்தியா என்று சொல்வதைக் காட்டிலும் பெண்கள் விஷயத்தில் பிற்போக்குத்தனம் பெருகி வரும் நாடாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகி விடாது. 

ஆனால் இந்தியா பற்றி நாம் இப்படி தொடங்கும்போது இவர்கள் அவநம்பிக்கைவாதிகள், கேடுகெட்ட பெண்ணியவாதிகள், விளம்பரப்பிரியர்கள், வேலையற்ற கம்யூனிஸ்டுகள் என்று வசைபாடப்படுவோம்.  ஏன்றால் ‘நல்லதே நினை, நல்லதே நடக்கும்’ என்னும் மாயாவாத மதவாத நம்பிக்கைகளை சாஸ்வதம் என்று நம்பும் ‘ஆன்மீக’ நாடல்லவா இது. ஆகவே, நாம் எப்போதும் எதிர்மறைகளையோ, குறைகளையோ பேசக்கூடாது. 2 வயது பெண் குழந்தைகளின் பாலுறுப்பை கீறி ஒரு ஆண் தனது  ‘ஆண்மையை’ திணித்து இரத்தம் பீறிட வல்லுறவு செய்து கொன்றாலும் ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ என்று பாடுவதோ அல்லது அப்பாடல் பாடப்படும் சபாக்களுக்கோ சென்று தாள-சுருதிகள் பிழையின்றி போடப்படுகிறதா, ஆலாபனைகளில் பிருகா சரியாக விழுகின்றதா என்று கவலை கொள்வதே உத்தமம்.

பெண்களுக்கெதிரான வன்முறைகள், அவர்களுக்கிழைக்கப்படும் கொடுமைகள் பற்றிய புள்ளி விபரங்கள் போதுமான அளவுக்கு அன்றாடம் வெளியிடப்பட்டு வருகின்றன. உலகளவில் பெண்கள் வாழ்வதற்கான பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் இன்றும் பட்டிமன்ற தலைப்பாக ‘இந்தியா 2020இல் வல்லரசாகுமா 2040இல் வல்லரசாகுமா’ என்றே விவாதம் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் நம்மைப் பொறுத்தவரை மங்கல்யான் ஏவுகனைகளை வெற்றிகரமாகத் தொடர்ந்து விண்ணில் ஏவும் அரசே வல்லரசு. நம் நாட்டு வளங்களை அந்நிய மூலதனத்திற்குத் தாரை வார்க்கும் ஒப்பந்தங்களைப் போடுவது, ‘சக்தி வாய்ந்த’ அனு உலைகளை அமைப்பதுமே வல்லரக்கான இலக்கணம். நாடு இத்தகைய வளர்ச்சிகளை துய்த்துக் கொண்டிருக்கும்போது ஆங்காங்கே சில நூறு பெண்கள் கொடுமைக்குள்ளாவது ஒரு விஷயமா. அதிலும் பாருங்கள்! பெண்கள் பலவீனமான பாலினம், அவர்களை பலவீனமாகப் படைத்தது ஆண்டவன் குற்றம், அதற்கு யார் என்ன செய்ய முடியும்? மேலும், வல்லரசில் பெண்களுக்கு என்ன இடம் இருக்கிறது? அரசு என்றாலே அது ஆண்பால்தானே?  என்னதான் இந்தியா தாய் நாடாக இருந்தாலும், இந்தியா ஒரு வல்லரசி நாடாவதை எவர்தான் விரும்புவர்?

இந்தியப் பெண்களின் அவல நிலைக்குப் பின்னால் இருக்கும் இந்திய மனநிலை இதுவே. மற்ற நாடுகள் மட்டும் என்ன ஒழுங்கா? இதைவிட மோசமானக் கொடுமைகள் நடக்கவில்லையா என்று கேட்போரும் உண்டு. ஆனால் நாம் இந்தியர்கள் என்றளவில் நாம் வாழும் நாட்டில் பெண்களின் நிலையை உயர்த்த சிந்திப்பது அவசியம்தானே. ஆனால் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும், பெண்களை உடன்கட்டை ஏறச் செய்து, வரதட்சனை என்னும் கொடிய தீயில் பெண்களை காவு கொடுத்து, இன்னும் இதர கொடுமைகள் செய்து  இன்றைக்கும் ஒரு பெண் குழந்தை என்பதே பெரும் சுமையாக கருதும் நிலை இந்தியாவைத் தவிர வேறெங்கும் நிலவுமா என்பது சந்தேகமே.

இந்தியாவில் பெண்கள் நிலை குறித்து ஒற்றை வரியில் சொல்வதானால், பெண் என்பவள் அடக்கப்பட வேண்டியவள், அவள் ஆளப்பட வேண்டியவள், அவள் ஆணுக்கான, ஆணின் தலைமையிலான குடும்பத்திற்கு ஒரு பணிப் பெண்.  பெண்களுக்கெதிரான அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படையாய் இருப்பது இக்கருத்தியலே.

பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதே ஒரு பொய், ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகம் படிக்கிறார்கள், வேலை வாய்ப்பில் அவர்களுக்கே முக்கியத்துவம், நிறைய சம்பாதிக்கிறார்கள், நவநாகரீகமாகத் திரிகிறார்கள், சொல்லப்போனால் ஆண்கள்தான் பாவம், ஆண்கள்தான் அடங்கிப் போகிறார்கள் என்பதே பெரும்பாலாரின் வாதமாய் இருக்கிறது. நம் நாட்டில் எங்கே சாதி இருக்கிறது? தலித்துகள் எங்கே ஒடுக்கப்படுகிறார்கள்? எல்லாத் துறையிலும் அவர்கள்தான் இப்போது பெருகி வருகிறார்கள். பிராமணர்கள்தான் ஒடுக்கப்படுகிறார்கள் என்று பேசுபவர்களுக்கும் மேற்சொன்னவர்களுக்கும் எந்த வேறுபாடுமில்லை. எந்த ஒரு மேலாதிக்கத்தையும் மேலாதிக்கமாகப் பார்க்காமல் உயர்வு தாழ்வு என்பதை ஒரு இயற்கையான நடைமுறையாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை கொண்டவர்கள் அவர்கள். அதனால்தான் அவர்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கின்றனர், அல்லது அந்நிலை அவர்களுக்குத் தகும் என்கிற வாதத்தை முன்வைக்கின்றனர்.

பேருந்தில் ஒரு இளைஞி வல்லுறவுக்காட்பட்டாலும் சரி, வீட்டிற்குள் ஒரு பாட்டி வல்லுறவுக்காட்பட்டாலும் சரி இவர்கள் பெண்களின் உடையையும், கலாச்சாரத்தையுமே குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால், வரதட்சனைக் கொடுமையால் ஒரு பெண் கொல்லப்படும்போதோ அல்லது ஏழ்மையால் ஒரு பெண் தன் மனதில் இரும்பைக் காய்ச்சி ஊற்றி தன் பிள்ளைகளின் வாயில் விஷத்தை ஊற்றிக் கொல்லும்போதோ இத்தகைய கதாகாலட்சேபவாதிகளால் பெண்களிடம் குற்றத்தைக் காண முடியவதில்லை. வெறும் அனுதாபங்களோடு நிறுத்திக்கொள்வார்கள். அல்லது ‘மற்றையோர்’ நிலையிலிருந்து குற்றவாளிகளை தூக்கிலிடச் சொல்லி பரிந்துரைப்பார்கள்.

உண்மையில், இந்தியாவில் பெண்களின் நிலைக்கு அத்தகைய குற்றவாளிகளைவிட நிலவும் தந்தை ஆதிக்க சமூக அமைப்பிற்கும், ஏற்றத்தாழ்வு மிக்க பொருளாதார அமைப்பிற்கும் நிபந்தனையற்ற ஆதரவு தருபவர்களே முதன்மை காரணம். குறிப்பிட்ட குற்றத்திற்கு தனிநபர் காரணமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பெண்களுக்கெதிரான குற்றங்கள் பெருக ஆணாதிக்க சமூக அமைப்பே காரணம். அதைக் களைவதற்காகப் பெண்கள் பெண்ணியம், பெண் உரிமை என்று பேசும்போதும், போராடும்போதும் அதை ஏளனப்படுத்துவோரும், அப்பெண்களை ஆபாசமாகப் பேசுவோரும் ஆணின் அதிகார மனதிற்கு மறைமுகமாக தீனி போடுகின்றனர்.

குறிப்பிட்ட சதவிகிதம் பெண்கள் கல்வியில், பொருளாதார ரீதியில் சில படிகள் முன்னேறியுள்ளனர், உண்மைதான்; பல்வேறு துறைகளில் முதன்மைப் பங்கு வகிக்கின்றனர் என்றாலும் பாலினம் என்ற அடிப்படையில் அவளது உடலுக்கு எவரும் பாதுகாப்பை உறுதி செய்திட முடிவதில்லை. அச்சமின்றி அவள் சுதந்திரமாகப் பொதுவெளியில் நடமாட முடியாது. ஆண்களைப் போல் இரவு 12 மணிக்கு தெருவோர தேனீர் கடையில் கூட்டமாக நின்று அரசியல் பேச முடியாவிட்டாலும் பரவாயில்லை, இயற்கைத் தேவையான சிறுநீர் கழிக்க பகிலிலாவது அவள் அச்சமின்றி பொது வெளியை பயன்படுத்த முடியுமா? பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பு பெருகியிருக்கலாம், விண்கல தொழில்நுட்ப பிரிவில் முக்கியப் பணி ஆற்றியிருக்கலாம், ஏன் ஒரு பெண் ஜனாதிபதியாகக்கூட ஆகி இருக்கலாம் ஆனால் பள்ளிகளில், குறிப்பாக அரசு பள்ளிகளில், பொது வெளியில், ஏழைகளாக இருந்தால் வீட்டிலாவது சுகாதாரமான கழிப்பறை இருக்கிறதா?  இதுதான் ‘வியத்தகு இந்தியா’வில் பெண்கள் நிலை.

எத்தனை குற்றங்களைதான் நாம் பட்டியலிடுவது? 60 வயது முதியவர் 3 வயது சிறுமியை வல்லுறவு செய்தார் என்பதில் தொடங்கி சமீபத்தில் ஒடிசாவில் 16 வயது சிறுவன் 6 வயது சிறுமியை வல்லுறவு செய்தது, வேலூரில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 11 வயது சிறுமியை வல்லுறவு செய்து கொன்றது (இன்னும் விசாரணையில் உள்ளது), வாடகை டாக்சியில் பெண்கள் வல்லுறுவு (தொடர்ச்சியாக), இவ்வளவு ஏன் கௌஹாத்தில் ஐ.ஐ.டி என்னும் ‘பெருமை’ வாய்ந்த கல்வி நிறுவனத்தில், ஒரு பேராசிரியர் அலுவலக உதவியாளர் பெண் ஒருவரை வல்லுறவு செய்தது… இன்னும் எத்தனை எத்தனை. வரதட்சனை பிரச்சினையில் கர்பிணிப் பெண் அடித்துக் கொலை. ஆதிவாசிகள் உரிமைப் போராட்டத்தில் காவல் துறையினரால், இராணுவத்தினரால் வல்லுறவு சித்திரவதை, சாதிய ரீதியான கௌரவக் கொலை…. தேசிய குற்ற ஆவணங்கள் மையத்தின் பதிவின் படி ஒவ்வொரு 1.7 நிமிடங்களுக்கும் பெண்களுக்கெதிரான வன்முறை பதிவு செய்யப்படுகிறது, அதோடு ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கும் ஒரு வல்லுறவு புகார் மற்றும் ஒவ்வொரு 4.4 நிமிடங்களுக்கும் ஒரு சிறுமி குடும்ப வன்முறைக்குள்ளாகிறாள் என்று தெரிவிக்கிறது.

இவ்வளவு குற்றங்கள் நடந்தும் தண்டனைகளை கூட்டுவது பற்றியும், பெண்களையே பொறுப்பேற்கச் சொல்வதுமாகத்தான் அரசு பெண்கள் பிரச்சினையை கையாண்டு வருகிறது. 2013இல் நீதியரசர் வர்மா குழு பரிந்துரைத்த எந்த சட்டபூர்வ சீர்திருத்தங்களும் நடைமுறைபடுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி பெண்களுக்கான பாதுகாப்பு திட்டத்திற்காக நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 1000கோடி ரூபாய் (2013-14) மேலும் ஒரு 1000 கோடி (2014-15) ரூபாய் பணம் இன்னமும் பயன்படுத்தப்படவில்லை என்று பாராளுமன்ற குழு கேள்வி எழுப்பும் நிலையில்தான் பெண்களுக்கான பாதுகாப்பு பிரச்சினை உள்ளது. 660 நிர்பயா மையங்கள் அமைக்கப்படும் அதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவியும், மறு வாழ்வும் அளிக்கப்படும் என்று ஜூலை 3ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால் இதுவரை அவ்வறிவுப்பு காகிதத்தில் மட்டுமே உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, குற்றமிழைத்தவருக்கு தண்டனை இவையெல்லாம் உடனடி நடவடிக்கைகள். அவற்றை காலதாமதமின்றி செயல்படுத்த வேண்டும். ஆனால், பெண்களின் நிலையை உயர்த்த, அவர்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழ அடிப்படை சிந்தனை மாற்றங்களை உருவாக்குவதற்கான செயல்திட்டத்தை அரசு வகுக்க வேண்டும். பாலின உணர்வூட்டல் (gender sensitizing) கல்வியை வகுக்க வேண்டும். பாலியல் கல்வி என்பது வேறு.  பாலினக் கல்வி என்பது வேறு பாலியல் கல்வி என்பது இயற்கையான பாலியல் அடையாளம்  பற்றிய உயிரியல் கல்வி, ஆனால் பாலினக் கல்வி என்பது ஆணாதிக்க சமூகத்தில் ஆணாதிக்க சிந்தனையோடு சமூகமயமாக்கப்பட்ட மனங்களுக்கு சமத்துவ சிந்தனையை போதித்தலாகும். இதுவே நிரந்தர தீர்வை வழங்கும்.

நன்றி: தினகரன் நாளிதழ்

(இந்தியாவில் பெண்கள் நிலை என்று எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு மேற்சொன்ன தலைப்பை கொடுத்திருப்பது அப்பத்திரிகையினரின் முடிவாகும்)

No comments:

Post a Comment