Jan 2, 2015

தற்கொலை எனும் சமூக-அரசியல் கொலை


தற்கொலை முயற்சி என்பது தண்டனைக்குறிய குற்றமல்ல என்று அறிவிக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டப் பிரிவான 309ஐ நீக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுநாள் வரை தற்கொலை செய்து இறப்பவர்களை தண்டிக்க முடியாத நிலையில், அம்முயற்சியில் தோல்வியுற்றவர்கள் தண்டனைக்குள்ளாகி வந்தனர்.  மனமுடைந்து வாழ்வைத் துறக்க முயற்சித்த அந்நபர்களுக்கு தண்டனை என்பது மேலும் துன்பகரமானது; வாழும் உரிமை உள்ளது போல் வாழ்வை முடித்துக் கொள்ளும் உரிமையும் ஒருவருக்கு உண்டு; தற்கொலை கோழைத்தனம் என இப்படியாகப் பலவிதமானக் கருத்துகளை நாம் கேட்டு வந்திருக்கிறோம்.

உலகளவில் ஓர் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும், அதில் 1,35,000 பேர் இந்தியர்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. வருடந்தோறும் தற்கொலை எண்ணிக்கைகள் கூடுகிறதே ஒழிய குறைவதில்லை. தற்கொலை செய்துகொள்பவர்களில் 15-29 வயது வரம்பிற்குள் இருப்பவர்களே அதிகம் பேர்  என்றும், 2012ஆம் ஆண்டில் 75% கீழ்-மத்தியத்தர வருமானம் உள்ள நாடுகளில்தான் அதிகளவில் தற்கொலைகள் நடைபெற்றுள்ளன என்றும் தெரிவிக்கிறது. அதேபோல் இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகளும், உடல்நலமும் தற்கொலைக்கு முதன்மை காரணங்களாக உள்ளன. (மேலும் விவரங்களுக்கு http://ncrb.nic.in/CD-ADSI-2012/suicides-11.pdf)

பொருளாதாரம், குடும்ப பிரச்சினை, உடல்நலம், காதல் பிரச்சினை, என அப்புள்ளி விபரங்கள் காரணங்களை வகைப்படுத்துதன் மூலம் தற்கொலை என்பது தனிநபர் பிரச்சினையாக, ஒருவரது மனத்திடத்தின் குறைபாடாக இன்னும் முத்தாய்ப்பாக கோழைத்தனம் என்று முத்துரை குத்தும் செயலைதான் செய்து வருகின்றன. ஆனால் சமூக அரசியல் பிரக்ஞையுள்ள எவரும் இவ்வனைத்து காரணங்களையும் ஒரே ஒரு காரணியின் கீழ் வகைப்படுதவே விரும்புவர். அதுவே ‘சமூகம்’ என்னும் காரணி - அதாவது தற்கொலை என்பது தற்கொலை அல்ல அது ஒரு சமூகக் கொலை. இன்னும் சொல்லப்போனால் அது ஒரு சமூக-அரசியல் பிரச்சினையாகும்.

குடும்ப பிரச்சினை, தொழிலில் நஷ்டம், இன்னும் இதர என எந்த காரணங்களை எடுத்துக்கொண்டாலும் ஏற்றத்தாழ்வு நிறைந்த ஒரு சமூக அமைப்பில் வாழ்வது என்பது கடும் நெருக்கடிகள் நிறைந்த ஒன்றாக இருக்கிறது என்பதே நிதர்சனம். குடும்ப பிரச்சினைக்கு சமூக அமைப்பு எப்படி காரணமாக இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். அடிப்படையில் ஒரு சமூக அமைப்பை அதில் நிலவும் பொருளாதார அமைப்பைக் கொண்டே நாம் எடைபோட வேண்டும். பொருளாதாரம் என்பது வெறும் பணம் மட்டுமல்ல, பொருளாதாரம் என்றால் ஒரு சமூகத்தின் தேவைக்கான உற்பத்தி, பரிவர்த்தனை, பண்ட விநியோகம், நுகர்வு மற்றும் செல்வ விநியோகம் ஆகிவற்றை உள்ளடக்கியதாகும். இது ஒரு பரந்த துறையாகம். இருப்பினும் அதன் அடிப்படை கட்டமைப்பு குறித்துச் சொல்வதானால் உற்பத்தி செய்வதற்கான கருவிகள், சாதனங்கள் மற்றும் மூலதனம் ஒரு குறிப்பிட்ட சிலரிடம் இருக்க மற்றையோர் தங்களது உழைப்புச் சக்தியை விற்று பிழைப்பு நடத்த வேண்டும் என்னும் நிலை கொண்ட அமைப்பாகும். இதனை நாம் முதலாளித்துவ அமைப்பு என்கிறோம். அதனோடு நிலத்தை தனியுடமையாகக் கொண்டு இயங்கும் நிலப்பிரபுத்துவ அமைப்பும் இங்கு பிரதானமாக நிலவுகின்றது. இவ்விரண்டிலும் மேல் கீழ் அதிகார ஓட்டம் என்பது உள்ளார்ந்த பண்பாக இருக்கின்றது. இலாபம் மற்றும் செல்வக் குவிப்பே அதன் குறிக்கோளாக இருக்கையில் சமத்துவம் அற்ற, ஏற்றத்தாழ்வு நிறைந்த ஒரு வாழ்வையே அதனால் மக்களுக்கு அளிக்க முடிகின்றது. தம் வாழ்விற்காக, தம் உயர்விற்காக மனிதர்களை பந்தையக் குதிரைகளாக மாற்றி வைத்திருப்பதே இந்த தனியுடமை பொருளாதார அமைப்பின் சாதனை.

இந்த உற்பத்தி முறை இயல்பானதுதானே என்று கருதுவீர்களேயானால் அது தவறு. ஆனால் அதுபற்றிய விவாதத்திற்கான வேறு ஒரு சமயத்தில் மேற்கொள்வோம். இப்போது நமது விவாதப் பொருளுக்கு திரும்புவோமானால், குடும்ப பிரச்சினைக்கும் அல்லது தற்கொலைக்கான மேற்சொன்ன மற்ற காரணங்களுக்கும் பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கு விடை காண முயற்சிப்போம்.

நான் மேலே சொன்னதுபோல் அதிகார ஓட்டம், ஏற்றத் தாழ்வு, போட்டி பண்புகள் நிறைந்த ஒரு கட்டமைப்பில் அதனை வாழவைக்கத் தேவையான அனைத்து அலகுகளிலும் (மேற்கட்டுமானம்) அதே பண்புகள் நிறைந்திருக்கும். ஆக குடும்பப் பிரச்சினை என்பது ஏதோ ஒரு குடும்பத்தின் பிரச்சினை மட்டுமன்று. அடிப்படையில் தற்போதைய வடிவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் குடும்பம் என்னும் அமைப்பில் நிலவும் சமத்துவமற்ற தன்மை என்பது ஒரு சமூகப் பிரச்சினை. அதாவது குடும்ப உறுப்பினர் ஒருவர் மற்றவரை தாக்குவது, கொடுமைபடுத்துவது போன்றவை தனிநபர் அளவிலான குணம் சார்ந்த பிரச்சினை மட்டுமன்று, ஒரு மனிதர் எவ்வாறு சமூகவயப்படுத்தப்படுகிறார் என்பதில் தொடங்கி, இந்த பொருளாதார அமைப்பு ஒரு மனிதரின் மேல் என்னவிதமான எதிர்பார்ப்புகளைத் திணித்திருக்கிறது, ஒரு குடும்பத்தின் சமூக பாத்திரம் என்ன என்பது வரை நாம் கவனமாக விவாதிக்க வேண்டியுள்ளது.

அவ்வெளியில் நின்று நாம் சிந்திக்கத் தொடங்கினால் குடும்பமாக இருந்தாலும் சரி, தனிநபராக இருந்தாலும் சரி ஒருவருக்கு ஏற்படும் மனநெருக்கடிகளுக்கும், இழைக்கப்படும் கொடுமைகளுக்கும், மறுக்கப்படும் உரிமைகளுக்கும் சமூக-அரசியலின் தாக்கம் பெரிதும் இருக்கிறது. உதாரணமாக, வரதட்சனை கொடுமை காரணமாகவோ அல்லது கடன் தொல்லை காரணமாகவோ குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ளும் பெண் அல்லது பெற்றோர் ஏராளம் பேர் உள்ளனர். தற்கொலை முயற்சி வெற்றி என்றால் அவர்கள் இறந்து விடுவார்கள், தோல்வி என்றால் முந்தைய நிலையில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இப்போது அந்த தண்டனை கிடையாது அவ்வளவுதான், ஆனால் அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டிய சமூகக் காரணிகள் இறுதிவரை களையப்படாமலே இருக்கும்.

அடுத்ததாக, தற்கொலைக்கான முதன்மைக் காரணங்களில் இரண்டாவது காரணம் உடல்நலக் குறைபாடு. மருத்துவச் செலவை சமாளிக்க முடியாதது, கோமா நிலை, தாங்கொணாத் துயரினால் மரனத்தை நாடுதல் என இதில் பல்வேறு வகையான நெருக்கடிகள் அடங்கும். ஆனால் இதுவும் அந்த தனிநபர் சார்ந்த பிரச்சினையாகத்தானே சொல்லப்படுகிறது. அடிப்படை உரிமைகளில் ஒன்றான மருத்துவ உரிமை இந்த ‘ஜனநாயக’ ’குடியரசில்’ உறுதி செய்யப்படுகிறதா? மருத்துவ சிகிச்சை என்பது கற்பனை செய்தும் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறது. அரசின் மருத்துவத் துறையோ ஆட்கொல்லி நிறுவனங்களாக இருக்கிறது. மருத்துவத் துறையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் ஏகபோகமானது ஒன்று மருத்துவம் பார்த்து மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளை அடித்துக் கொல்கிறது அல்லது மனிதர்களை பரிசோதனை எலிகளாக கையாண்டு கொல்கிறது.  இப்பின்னணியில் மருத்துவம் என்பதை எட்டாக்கனியாக மாற்றியதும், அதற்கு செலவு செய்ய முடியாமல் மேற்கொள்ளப்படும் தற்கொலை முடிவிற்கும் யார் காரணம்?
சமீபத்திய தற்கொலை முயற்சிகளில் கல்வித் துறையின் பங்கு அதிகரித்து வருகிறது. நேரடியாக கல்வி, மதிப்பெண்கள் சார்ந்த மன அழுத்தங்கள் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளுக்கான வங்கிக் கடன்கள் மறுக்கப்படுதல், ஆண் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத் துறையினரின் பாலியல் தொல்லை, ராகிங் கொடுமைகள் என காரணங்களின் பட்டியல் நீள்கிறது. விவசாயி ராஜாவின் மகன் மருத்துவம் படிக்கச் சென்று இந்தியன் வங்கியில் கல்விக் கடன் கிடைக்காததால் அர்மேனியாவில் தற்கொலை செய்து கொண்டதை அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிட முடியுமா?

இதற்கெல்லாம் உச்சபட்சமாக ஆணாதிக்கம் நிறைந்த சாதி இந்தியாவில் கௌரவக் கொலைகள் அதிகரித்து வரும் சூழலில், கொலைகளுக்கே நியாயம் கிடைக்காத போது ஒரு பெண்ணை அல்லது காதலர்களைக் கொன்று தற்கொலை செய்து கொண்டார்கள் என்று எளிதாக வழக்கை முடித்து விடலாம்.

இப்படி நம்முடைய அன்றாட வாழ்வில் நமது ஒவ்வொரு செயலுக்கும், சிந்தனைக்கும் பின்னால் சமூக-அரசியல்-பொருளாதார காரணங்கள் இருக்கையில் தற்கொலை முயற்சி என்பதை வெறும் தனிநபர் பிரச்சினையாகவோ அல்லது ஒருவருக்கு தனது உயிரை மாய்த்துக் கொள்ள உரிமை உண்டு என்று மனித உரிமை சார்ந்த பிரச்சினையாகவோ மட்டும் பார்ப்பது சரியாக இருக்குமா?

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குதல், தற்கொலை முயற்சியை குற்றமாகக் கருதாதிருத்தல் போன்ற அறிவிப்புகளால் அரசு தன்னை  பெரும் மனித உரிமை காவலராகக் காட்டிக்கொள்ள முனைகிறது. ஆனால் உண்மையில் அது மக்கள் காவலர் என்னும் தனது கடமையை தட்டிக் கழிக்கவே பார்க்கிறது.

என்ன செய்யலாம்?

தற்கொலையை குற்றமாகக் கருதும் சட்டம் வேண்டும் என்பதல்ல எமது வாதம். ஒவ்வொரு தற்கொலைக்கும் அதற்குக் காரணமாகும் தனிநபர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவதுபோல் மக்களை வாழவைக்கவியலாத இந்த கையாலாகாத அரசும், அதன் பிரதிநிதிகளும் குற்றவாளிகளாகக் கருதப்பட வேண்டும்.  

தற்கொலை வழக்குகளை விசாரிக்க மனித உரிமை ஆணையம் போன்று மக்கள் வாழ்வுரிமைக்கான ஆணையம் ஒன்றை அமைக்கலாம். ஒவ்வொரு தற்கொலையும் ஒரு சமூகக் குற்றமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.  காரணங்கள் தீர விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சினையிலிருந்து விடுபட தேவையான உதவிகளை அரசு செய்துதர வேண்டும்.  மேலும், தற்கொலை தடுப்புப் பிரிவு அமைக்கப்பட்டு அதன் மூலம் உளவியல் ரீதியான உடனடி உதவிகள் நீட்டிக்கப்படலாம்.

அரசுக்கு இது சுமையாகி விடும், அரசை மிரட்டி பலர் ஆதாயம் காண்பார்கள் போன்ற வாதங்கள் பொருளற்றவை. ஏனென்றால் மகிழ்ச்சியாக இருக்கும் எவரும் தம் வாழ்வோடு விளையாடி, உயிரைப் பணையம் வைத்து அரசை மிரட்டி ஆதாயம் தேடும் அளவுக்கு செல்லப் போவதுல்லை. மக்கள் அவ்வளவு அற்பமானவர்கள் அல்ல (அதெல்லாம் முதலாளிகளின், ஏகாதிபத்தியங்களின் பண்பு).  மேலும் ஒவ்வொரு மக்களும் மகிழ்ச்சிகரமாக வாழ வழி செய்வது அரசின் கடமையாகும். ஆக, எவ்வகையான போதாமையாக இருப்பினும், அதனை ஈடுசெய்வது அரசின் கடமையே. என்ன மாதியான உதவிகளை, வாழ்க்கை வசிதகளை அரசு வழங்கும் என்பதை வகுக்க, அவற்றுக்கான நடைமுறை விதிகளை வகுக்க மக்கள் வாழ்வுரிமைக்கான ஆணையம் தலைமையிலான ஒரு குழுவைக் கொண்டு வரையறுத்து ஒழுங்குபடுத்தலாம்.  ஓய்வு பெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள், எதிர்கட்சிப் பிரதிநிதிகள் தேவைப்பட்டால் தொழிற்துறை வல்லுனர்கள் ஆகியோரைக் கொண்டு அக்குழுவை அமைக்கலாம். நிச்சயமாக இந்த வாழ்வுரிமை அளிக்கும் செயல்பாடுகளில் அரசுசாரா நிறுவனங்களை, தொண்டு நிறுவனங்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது. வகுக்கப்பட்ட விதிகள், உதவிகள் குறித்து மக்களிடம் கருத்து கேட்டு தேவைப்படும் இடங்களில் திருத்தங்கள் செய்து அவற்றை சட்டமாக்க வேண்டும்.

அவ்வளவு பணத்திற்கு அரசு எங்கே போகும் என்ற கேள்வி பூர்ஷுவா மட்டத்தில் எழும். அதானி போன்ற நிறுவனங்களுக்கு 6,200 கோடி ரூபாய் கடனாக வழங்க வங்கிகள் மூலம் வகை செய்ய முடிகிறது, மேலும், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களும் அமைத்துக் கொடுத்து, அதில் இலவச மின்சாரம், தண்ணீரும் கொடுத்து, வரி விலக்கும் கொடுத்து முதலாளிகளை காப்பதற்கு அரசிடம் பணம் இருக்கிறதென்றால் மக்களைக் காப்பாற்றவும் அரசிடம் பணம் இருக்க வேண்டும். இந்நாட்டில் வந்து தொழில் தொடங்கி, பொய்யாக நஷ்டப் பாட்டு பாடி தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து கொள்ளை இலாபங்களை வாரிச் சுருட்டி, வரி ஏய்ப்பு செய்யும் நோக்கியா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்களிடமிருந்து வாராக் கடன், நிலுவையில் இருக்கும் வரிகள் போன்றவற்றை வசூல் செய்தாலே போதும் ஒவ்வொரு இந்தியப் பிரஜைக்கும் அடிப்படை வாழ்வாதாரங்களை இந்திய அரசு உறுதி செய்ய முடியும்.

சட்டங்களை வகுப்பதும், வகுத்த சட்டங்களை போலி ஜனநாயக முகமூடிகளை அணிந்து ரத்து செய்வதும் மட்டுமல்ல ஒரு அரசின் பணி. ஒவ்வொரு சமூகப் பிரச்சினையை உண்மையான சமூக அக்கறையோடு ஆய்வு செய்து, குறிப்பாக அப்பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் வருவதற்கான காரணங்களையே வேரோடு களைவதற்கான அறிவுபூர்வமான நிரந்தர தீர்வுகளைக் கண்டு ஒவ்வொரு குடிமகரும் மகிழ்ச்சியாக வாழ வழி செய்யும்போது மட்டுமே  ‘இறையாண்மை உடைய ஜனநாயக, சமதர்ம, சுதந்திரக் குடியரசு’ நாடாக இந்தியா இருக்க முடியும் . இல்லையேல் எவர் மடிந்தால் எனக்கென்ன, இறப்பிற்கு காரணமாக எம்மையோ, எமது அரசு இயந்திரங்களையோ மக்கள் காரணம் சொல்லி விடக்கூடாது, அத்தகைய தலைவலிகளிலிருந்து எம்மை விடுவித்துக்கொள்ள அத்தனை சட்ட திருத்தங்களையும் யாம் செய்வோம் என்று அரசு கருதுவதாகவே நாம் பொருள் கொள்ளமுடியும்.

பிரச்சினைகளின் வேர்களைக் களையாமல் தற்கொலை முயற்சியை (அல்லது தற்கொலை) குற்றமாகக் கருதுவதில்லை போன்ற மேலோட்டமான போலி மனித உரிமை சட்ட திருத்தங்களை அரசு கொண்டு வருமேயானால், அரசானது தான் கையாலாகாத அரசு என்பதை ஒப்புக்கொண்டு எவ்வித குற்றவுணர்வுமின்றி மீண்டும் மீண்டும் ஒரு சமூக-அரசியல் கொலைக்கு தயாராகிறது என்பதை நாம் உறுதி செய்துகொள்ளலாம்.



நன்றி - உயிரோசை மாத இதழ், மதுரை (பக்க வரையறையின் காரணமாக சுருக்கப்பட்ட வடிவம் இதழில் வெளியானது. முழு வடிவம் இங்கே...)

No comments:

Post a Comment