Showing posts with label puberty. Show all posts
Showing posts with label puberty. Show all posts

May 20, 2025

பூப்புனித நீராட்டு விழாவை தடை செய்யவும்!

 

ஞாயிறு அன்று ஒரு பயணத்தின் போது ஒரு சிறுமியின் புகைப்படத்துடன் பூப்புனித நீராட்டு விழா FLEX BANNER ஒன்றை பார்த்தேன்! ஒரு பெண் குழந்தையை (even if she attained puberty) அப்படி காட்சிப் படுத்துவதைக் கண்டு வேதனையுற்றேன்! நிச்சயமாக என்னால் என் மகளை அப்படி ஒரு பின்னணியில் காட்சிப்படுத்த இயலாது. உலகில் உள்ள மகள்கள் அனைவரும் என் மகள்களே என்னும் அன்பை போதிக்கும் மார்க்சியவாதியாக அந்த மகளையும் என் மகளாகவே கண்டேன்.

மிகுந்த வேதனையுடனும், கொந்தளிப்புடனும் உடனே ஒரு Tweet செய்தேன், “Pls ban Puberty Function, புனித நீராட்டு விழாவை தடை செய்யவும்” முதல்வர் அவர்களை Tag செய்தேன்!

அடுத்த நொடி, பார்ப்பனிய ஆணாதிக்க இணையவெளி கும்பல் தாக்குதல் தொடங்கியது! பெரும்பாலும் சங்கிகள், திராவிட அரசியல் வெறுப்பு கொண்ட கும்பல் மற்றும் பெண் வெறுப்பு கொண்ட கும்பல் அவை! இதுகள் இதைத்தான் செய்யும் என்பதையும் நாம் அறிவோம் தானே! மேலும், இதுகளின் எந்த கேவலப் பேச்சுகளும் என்னை எந்த விதத்திலும் நிறுத்தப் போவதுமில்லை. ஆனால் எனக்கு மலைப்பாக ஒரு விசயம் இருக்கிறது – இவர்கள் எல்லாம் யார்? Troll செய்ய எப்படி இவர்களுக்கு இவ்வளவு நேரம் கிடைக்கிறது? ஏன் கேட்கிறேன் என்றால் மனிதர்களாக இருந்தால் இவ்வளவு அநாகரீகமாக பேச வாய்ப்பில்லை! கலாச்சார காவலர்களாக தம்மைத் தாமே நியமித்துக்கொண்டு இவர்கள் என்ன செய்கிறார்கள்? பெண் வெறுப்பிலும், சாதி வெறியிலும் செயல்படுகிறார்கள்! இவர்களை எப்படி மனிதர்கள் என்று நம்புவது?

மேலும், பெண்கள் தொடர்பான ஒரு பிற்போக்குத்தனத்தைக் குறித்து கவனப்படுத்தும்போது, இந்த மீசைகள் ஏன் முறுக்கிக்கொண்டு வருகின்றன? ஓ! புரிகிறது! அவர்கள் ஆண்கள்! ஆண்களாக இருப்பதை விட மனிதர்களாக இருப்பதன் மகத்துவத்தை அறியாதவர்களை நான் எப்படி மனிதர்கள் என்று ஏற்றுக்கொள்வது!

பூப்புனித நீராட்டு விழாவை கலாச்சாரத் தேவை, அது தெய்வீகச் சடங்கு என்று பல காரணங்களைக் கூறுகின்றனர். தொன்மம், சடங்கு எல்லாம் ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையோடு தொடர்புடையது. இது விளங்க மார்க்சியம் கற்கவும்! அதுமட்டுமின்றி, அறிவு, அறிவியல் வளர்ச்சியோடும் தொடர்புடையது! மனிதர்கள் அறிவியவல் வளர்ச்சிக்கு ஏற்ப தமக்கு வசதியான விசயங்களை மாற்றிக்கொள்கின்றனர், ஆனால் “பெண்கள் மற்றும் சடங்கு” விசயங்கள் என்று வரும்போது மதவாத மூளைச் சலவையினால் கொந்தளிக்கின்றனர். அறியாமையாலும்!

பூப்புனித நீராட்டு விழாவின் தொன்மத்திற்குள் நான் வரவிரும்பவில்லை. நான் பேசப் போவது பெண்களின் சுயமரியாதை சார்ந்தும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதியும், மேலும் இத்தகைய சடங்கோடு தொடர்புடைய ‘பொருளாதார” அமைப்பு பற்றியும் தான்.

பெண் பருவம் எய்துவது ஓர் இயற்கை சுழற்சி. உயிரியல் இயக்கம். ஆனால் மத ரீதியாக அதன் மீது பலவிதமான கருத்தியல்களும், புனிதங்களும், தீட்டுக் கருத்தியலும், தீட்டு கழிப்புகளும் ஏற்றப்பட்டிருக்கிறது.  மாதவிடாய் குறித்து நிறைய புத்தகங்களும் உள்ளன! தேவை எனில் வாங்கிப் படிக்கவும்!

நிலவுடைமை சமூகப் பண்பாடு தான் இந்த பூப்புனித நீராட்டு விழா! அப்போது இப்படி FLEX பேனர் எல்லாம் அடித்து காட்சிப்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. தற்போது சிறுமிகளை இப்படி காட்சிப்படுத்துவது அவசியமா? பருவம் எய்திய செய்தியை உலகிற்கே தெரிவிக்க வேண்டிய தேவையுள்ளதா? எங்கள் விட்டில் பருவம் எய்திய பெண் இருக்கிறாள். திருமணத்திற்கு தயாராக இருக்கிறாள் என்று தெரிவிப்பதற்கு அந்த காலத்தில் தேவை இருந்திருக்கலாம், இப்போது உள்ளதா? சாதிய-அகமணமுறையின் அங்கம் தானே இது!

அந்த பெண்கள் தான் ஆசைப்படுகிறார்கள் என்று ஒரு வாதம்! அந்த பெண் பிள்ளைகளுக்கு அப்படி ஒரு நிகழ்வை அறிமுகப்படுத்தியது யார்? இதுவும் பிறந்தநாள் பார்ட்டி போன்றதுதானே? பணக்கார வீட்டுப் பிள்ளைகள் தங்கள் அந்தஸ்தைப் பறை சாற்றிக்கொள்ள எதையோ செய்வதைப் பார்த்து நம் வீட்டுப் பிள்ளைகள் ஆசைப்படுவது போல் தான் இதுவும். ”அவளுக்கு அப்படி செஞ்சாங்க, எனக்கும் செய்ங்க” என்று பெண் பிள்ளைகள் கேட்கும் நிலைக்கு நாம் தானே அவர்களை தள்ளுகிறோம். மேலும், இது நிலவுடைமை சமூகத்தின் “கௌரவத்தோடு” தொடர்புடையது. சீர் செய்வதை பகட்டாக காட்டிக்கொள்ளும் பணக்காரத் திமிரோடும் தொடர்புடையது என்பதை மறுக்க முடியுமா? இப்படி பணக்கார குடும்பங்கள் செய்கையில், அது ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் அழுத்தத்தைத் தருகிறது என்பதை மறுக்க இயலுமா?

தீட்டுக் கருத்தியலும், தீட்டுக் கழிப்பிலும் பெண்களை உடன்படுத்துவது அநீதி இல்லையா?

பார்ப்பனிய மூளைச் சலவை தானே இது?  

ஹோமம், யாகமெல்லாம் தமிழர்களின் சடங்கா? (எனை வந்தேறி என்னும் மூடர்களே!)

என் உடம்பு தீட்டு என்று சொல்ல நீ யாரடா என்று கேட்க ஒரு பெண்ணுக்கு உரிமை இல்லையா?

பெண்களை இந்த பிற்போக்குத்தனங்களில் இருந்து விடுவிக்கச் சொல்லி ஒரு முதலமைச்சரிடம் மன்றாட ஒரு பெண்ணாக எனக்கு உரிமை இல்லையா?

மனிதர்களாக இருந்தால் இதையெல்லாம் யோசிக்க மனம் வரும்! இணைய ரௌடிகளுக்கு அறிவும் இல்லை, மனிதாபிமானமும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள்.

பெண் என்பதால் அவள் உடலை மாறுபட்ட வகையில் காண்பதும், அதன் அடிப்படையில் சடங்கு சம்பிரதாயங்கள் செய்வதும், அதில் தீட்டு பார்ப்பதும், கழிப்பதும், ஒதுக்குதலும் – கேவலமாக இல்லையா? கேட்டால் இது Taboo Breaking, Celebrating Feritily என்று எடுத்துக்கொள்ளக் கூடாதா என்றொரு மடக்கும் கேள்வி!

Taboo Breaking என்றால் முதலில் பெண்களை கற்பக்கிரகத்திற்குள் அனுமதிக்கச் சொல்லுங்கள், மாதவிடாயின் போது கோவிலுக்கு வரக்கூடாது என்பதை நீக்குங்கள், ஐயப்பன் கோவிலுக்கு செல்ல ஏன் தடை? இன்னும் இப்படி நிறைய உள்ளன உடைக்க!

பிற்போக்கு ஆணாதிக்க கும்பல் தமக்கு வசதியாக வாதங்களை வளைத்துக்கொள்ளும்!

இதுபோன்ற விழாக்களால் ஒலியமைப்பு உள்ளிட்ட பல சிறு தொழில்கள் பிழைக்கின்றன என்பதில் மாற்று கருத்தில்லை! ஆனால் இது ஒரு பெண்ணின் சுயமரியாதையோடும், Privacyயோடும் தொடர்புடையது என்பதை மதிக்கக் கூடாதா? அதிலும் சிறுமிகள் என்னும் போது உங்கள் நெஞ்சம் பதபதைக்கவில்லையா?

நீங்கள் மனிதர்கள் இல்லாததால் உங்களுக்கு பதறாது, எனக்கு (என்னைப் போன்றோருக்கும்) ஒரு பெண்ணாக, மனுஷியாக சிறுமிகளை அவ்வளவு பெரிய Bannerஇல் பூப்பெய்துவிட்டாள் என்று பறை சாற்றுவதைப் பார்ப்பது பதறுகிறது! அவள் உடல் மீது ஆதிக்கம் செலுத்தும் கட்டம் தொடங்கி விட்டதே என்று கவலை வருகிறது! வேட்டையாடக் காத்திருக்கும் சிங்கத்திற்கு இறையாக்க ஒரு கிடாவை தயார்படுத்துவது போல் நடந்துகொள்கிறார்களே என்று தவிப்பாக உள்ளது!

அரசாங்கம் கண்டிப்பாக இதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் சொல்வதுதான் – பாலின சமத்துவம் மற்றும் கூருணர்வு ஏற்படுத்தும் கல்வியை வழங்க வேண்டும். மூடநம்பிக்கை ஒழிப்பில், முதன்மையானது பெண்கள் உடலை மையப்படுத்தி நடக்கும் சடங்குகளை மக்களே கைவிடும் வகையில் சுயமரியாதை இயக்கத்தை அரசு நடத்த வேண்டும்.

பண்பாடு, சடங்கு, விழாக்கள் எல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல் அதை சுற்றி இயங்கும் ‘தொழில்-பொருளாதார’த்தால் கட்டிக்காக்கப்படுகின்றன. அந்த பொருளாயத அதிகார அமைப்புதான் பிற்போக்குத்தனங்களை ஒழிக்க விடாமல் செய்கின்றன. மத நிறுவனங்களும், அந்த பொருளாதார அமைப்பின் அங்கம்தான் என்கிற புரிதலோடு இதை அணுக வேண்டும்.

-       கொற்றவை

20.5.2025

*இந்த பதிவுக்கு ஏற்ற புகைப்படத்தை தேடும் போது ஒரு நூலின் அட்டைப்படத்தைக் கண்டேன். அதை மேலே பகிர்ந்திருக்கிறேன். இன்னும் நான் வாசிக்கவில்லை. ஆனால் அது பகுத்தறிவு சார்ந்த நூல் என்பதை அறிய முடிகிறது.     

That Tweet