Mar 9, 2018

காதலெனும் கொலைக் கருவி.. கூர் தீட்டும் புனிதர்கள் நாமே!


அடைய விரும்புவது காதல் அல்ல
வாழ விரும்புவது காதல்

ஒரு பெண் விருப்பமில்லை என்று சொன்னால் விருப்பமில்லை! விரும்பவும் வெறுக்கவும் மறுக்கவும் அவரவருக்கென்று தனிப்பட்ட காரணங்களும், உரிமையும் உண்டு. சில நேரங்களில் காரணமே இல்லாமலும் போகலாம். ஆனால் ஆணோ பெண்ணோ ஓர் உறவில் இருவருக்கும் இல்லை என்று சொல்லும் உரிமை உண்டு. இதை நாம் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

ஏற்க மறுக்கும் உரிமை, பிரிந்து போகும் உரிமை என்பது உரிமை சார்ந்தது மட்டுமல்ல உணர்வுபூர்வமாக மகிழ்ச்சிகரமாக வாழ்வது தொடர்பானதும் கூட. விருப்பமில்லாத ஒருவருடன் வாழ்வது என்பது பொய்மை நிறைந்ததாகவே இருக்கும். கட்டாயப்படுத்தி தன் காதலை ஏற்க வைக்கும் போதோ அல்லது தன்னோடு வாழவைக்கும் போதோ ஒரு பெண் (அல்லது துணை) மிரட்டலுக்கோ, சமூக அழுத்தங்களுக்கோ பயந்துதான் ஒருவரோடு வாழ்வாரே தவிர்த்து காதலால் அல்ல. அந்த நொடியே நீங்கள் கொடிய வன்புணர்வாளராகி விடுகிறீர்கள். உடல் ரீதியான வன்புணர்வு ஒருபக்கம், ஆயின் மன ரீதியான வன்புணர்வு என்பது மிகவும் கொடியது.

காதலின் பெயரால் பெண்களை அச்சுறுத்தும் ஆண்களே,
அன்பு பெருக்கெடுத்துப் பார்க்க வேண்டிய கண்கள் அச்சத்தோடோ அல்லது வெறுப்பை அடக்கிய ஒரு சோகத்தோடு உங்களைக் காண்கையில் உங்களால் காதல்வயப்பட முடியுமா? உங்கள் மீது துளியும் விருப்பமின்றி ஒரு பெண் உங்களிடம் அன்பாக என்ன பேசுவாள். எப்படி உங்களோடு உறவு கொள்வாள். ஒவ்வொரு நொடியும் பொய்யாக சிரித்து, பொய்யாக அணைத்து அல்லது அணைப்பிற்கு இணங்கி ஒரு துணை உங்களோடு உறவாடுகிறது என்றால் உண்மையில் அது யாருக்கு அவமானம். அங்கு நீங்கள் உங்கள் சுயமரியாதையை, மனிதத்தன்மையை இழந்தவராகிறீர்கள் என்பது உங்களுக்குப் புரிகிறதா?

கூலிக்காக விருப்பமே இல்லாத ஒரு உழைப்பில் ஈடுபடுவது போல்   ஒரு பெண் உங்களுடன் இயந்திரத்தனமாக வாழ்வதையா நீங்கள் விரும்புகிறீர்கள். இதில் உங்களால் என்ன அன்பைப் பெற்றுவிட முடியும். அன்பு வேண்டித்தானே காதல் செய்கிறீர்கள்? உங்களிடத்தில் தனக்கு அந்த அன்பு தோன்றவில்லை என்று ஒரு பெண் சொன்னால், கட்டாயப்படுத்துவதன் மூலம் எப்படி அன்பைப் பெற முடியும்?
விருப்பமில்லாத உணவை உங்களால் எப்படி உண்ண முடியாதோ, விருப்பமில்லாத ஒரு செயலை செய்யச் சொன்னால் நீங்கள் எப்படித் துன்பப்படுவீர்களோ அப்படித்தானே அன்பு செய்தலும்.

உங்கள் அன்பிற்கு மட்டும் ஏன் ஒரு விசேஷத் தன்மையைக் கற்பித்துக்கொள்கிறீர்கள்? அல்லது உங்கள் அன்பை ஏற்க மறுப்பதை உங்களை நிராகரிப்பதாக, அதாவது உங்களின் ஆண்மைக்கான நிராகரிப்பாக ஏன் கருதுகிறீர்கள். உங்கள் ஆளுமையல்ல அவள் பிரச்சினை, அவளுக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவே! உலகிலேயே நீங்கள் ஆகச்சிறந்த மனிதராக, பேரழகனாக இருப்பினும் ஒரு பெண்ணுக்குப் பிடிக்காமல் போகலாம். அதை வைத்தா நீங்கள் உங்களை மதிப்பிடுவீர்கள்? ஒரு பெண்ணின் ஏற்பும் மறுப்பும் தான் உங்களின் ஆளுமையை, உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்குமா? இது பேரவலம்! காதல் என்பது வாழ்வின் ஒரு அங்கம். அதுவே வாழ்க்கையாகி விடாது!

தன்னை மற்றொருவர் மேல் திணிக்கும் ஒருவர் மனிதராக இருக்கவே முடியாது. ஆனால் ஆண்டாண்டு காலமாக இந்த ஆணாதிக்கச் சமூகம் அதற்கான உரிமையை உங்களுக்கு நிபந்தனையின்றி வழங்கியுள்ளது. அதற்கான விளைவை அனுபவித்துக் கொண்டிருக்கிறது... ஆனால் இதிலும் வழக்கம் போல் பாதிக்கப்பட்டோரோ பலிகொடுக்கப்படுகிறார்கள்!

பெண் என்பவள் பிறக்கவே தகுதியற்றவள்!
அப்படியே பிறந்தாலும் அவள் வளர்க்கபப்டுவதே ஓர் ஆணுக்கு இன்பம் சேர்க்கவே!
அந்த இன்பம் சேர்த்தலும் குடும்பச் சொத்தைப் பாதுகாக்கும் ஒரு வாரிசைப் பெற்றுக் கொடுக்கவே!
பெற்றுக் கொடுத்த பின் உழைத்தலும் காத்தலும் வளர்த்தெடுத்தலும் தலைமுறை உருவாக்குதலும்!
இவ்வளவு தான் பெண்ணின் தேவை இங்கே!

இப்படி ஒரு சுயநலம் பிடித்த சமூகத்தில் வளரும் ஒரு ஆண் வேறு என்ன கற்றுக்கொண்டு வளர முடியும். நிலமும், வளமும் போல் பெண்ணும் இங்கு உடைமை. தன் உடைமை, தனியுடைமை! தான் இன்புற்றிருக்கு எதையும் அழித்தேனும் வாழ்வது! அதுதான் இந்தத் தனியுடைமை சமூகத்தின் ஆகச்சிறந்த பண்பாடு. இந்தப் பண்பாட்டில் ஸ்வாதியோ, ஹாசினியோ, நந்தினியோ, நிர்பயாவோ, அஸ்வினியோ மட்டுமல்ல இன்னும் ஓராயிரம் பெண்களை நாம் காவுகொடுத்துக் கொண்டே இருப்போம்!

ஆண்களும், பெண்களுமாய், ஒட்டுமொத்த சமூகமாய் கொன்றவனை, கொடியவனை அடித்தோ, உதைத்தோ, சபித்தோ, நீதி மன்றம் மூலம் தண்டித்தோ நம் கடமையை ஆற்றிக்கொண்டு நாளை மற்றொரு பெண் குழந்தையை, பெண்ணை காவு கொடுக்கத் தயாராவோம்.

கூடுதலாக கடவுள் ஏன் இப்படிப்பட்ட மிருகங்களைப் படைத்தார் என்று அங்கலாய்த்து நம்மை புனிதர்களாக்கிக் கொள்வோம்.

பெண்ணின் இந்த அவல நிலைக்கான சமூக அரசியல் காரணங்களை தானாய் ஆய்ந்து அறியாதும், அதை ஆய்ந்து அறிந்து சொல்வோரை தூற்றியும் காதலெனும் கொலைக் கருவியைக் கூர் திட்டும் புனிதர்களாய் வாழ்ந்து மடிவோம்!

No comments:

Post a Comment