Dec 5, 2014

அரசின் அதர்மம்



 தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் நடந்த 12 பச்சிளம் குழந்தைகளின் உயிரழ்ப்பு அனைவரது மனதையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே வாரத்தில் பிலாஸ்பூரில் அரசு மருத்துவமனை ஒன்றில் நடந்த குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் விளைவாகப் 12 பெண்கள் இறந்தனர் என்ற செய்தியும் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வளவு உயிர் இழப்புகளுக்கும், துயரங்களுக்கும் நடுவிலும் மத்திய மாநில அரசுகள் சடங்குரீதியான அறிவுப்புகளை வெளியிட்டு, தப்பித்தல் மனப்பான்மையுடனேயே செயல்படுகின்றன. ஊட்டச் சத்து குறைபாடு, குறைமாத குழந்தைகள், இளம் தாய்மார்கள் கர்ப்பமுற்றது என்று காரணங்கள் ஒருபுறம் சொல்லப்பட்டாலும் இலக்குகளை பூர்த்தி செய்யச் சொல்லி மருத்துவர்களுக்குக் கொடுக்கப்படும் நெருக்கடி, செவிலியர்கள் பற்றாக்குறை, போதிய வசதியின்மை, சுகாதாரமின்மை, மருத்துவர்கள் பற்றாக்குறை, போதிய பயிற்சியின்மை, முறையான கண்காணிப்பின்மை என்று ‘இன்மை’களின் காரணத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஏதோ தற்போதுதான் ஆய்வு செய்து கண்டுபிடித்ததுபோல் அரசு அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. கிராமப்புற பகுதிகளில், அடித்தட்டு மக்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடுள்ளதைப் பற்றியும், அது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்றும் அமர்த்தியா சென் உட்பட பல அறிஞர்கள், ஆர்வலர்கள் குரல் எழுப்பி வந்துள்ளனர். நலத்திட்டம், விசாரணை, ஆய்வு என்கிற பெயரில் அரசு இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க முனைகிறது. கல்வி, சுகாதாரம், மருத்துவம், உணவு, இருப்பிடம் ஆகியவை ஒருவரின் அடிப்படைத் தேவைகளை எவ்விதக் குறைபாடும், பாகுபாடும் இன்றி ஏற்படுத்திக் கொடுத்து, அவற்றை சரியாகப் பராமரிப்பதும் அரசின் கடமையாகும். உண்மையில் இப்பணிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்டதே அரசு*. ஆனால் முக்கியத் துறைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கிவிட்டு சடங்கு ரீதியாக அவற்றை நடத்தி வருவதே இக்கொடுமைகளுக்குக் காரணம்.

தனியார் சேவையே அரசின் சேவை என்பதே இங்கு நிதர்சனம். தனியார் நிறுவனங்கள் கொழுத்த இலாபத்தோடு வாழ்வதற்காக எவ்வளவுக்கெவ்வளவு பொதுத்துறை நிறுவனங்களை மோசமாகப் பராமரிக்க முடியுமோ அதைச் செய்கிறது அரசு. இதில் மத்திய மாநில அரசுகளுக்குள் எந்தப் பேதமும் இல்லை.

இதற்கு முன்பு நமக்கெல்லாம் ஒரு நம்பிக்கை இருந்தது ‘ஓட்டு’ என்னும் ஒரு நம்பிக்கை. மக்களை ஏமாற்றும், மக்கள் நலன்களைப் புறக்கணிக்கும் கட்சிகளுக்கு ஓட்டளிப்பதில்லை என்று மக்கள் முடிவெடுக்கும் சாத்தியங்கள் இருந்தன. ஆனால் தற்போது தேர்தல் வெற்றி என்பதும் மக்கள் கையில் இருப்பதைவிட பெருநிறுவனக் குழுமங்களிடமே இருக்கின்றது என்றால் அது மிகையல்ல. பெருநிறுவன முதலாளிகளோ பன்னாட்டு நிதி நிறுவனங்களின் அடிவருடிகள். மூலதனக் குவிப்பு ஒன்றே இவர்களது குறிக்கோள்.

இன்றைய காலகட்டத்தில் முதலாளிகள் தீர்மானிப்பவரே ஆட்சி அதிகாரத்தில் அமர முடியும். அவர்களின் தயவில் ஆட்சியில் அமரும் ‘முதலமைச்சர்’ அல்லது ‘பிரதமர்’ எப்படி முதலாளிகளுக்குத் துரோகம் செய்வார்? ஆக அவர்களால் முடிந்ததெல்லாம் பொதுத்துறை நிறுவனங்களை சீரழியச் செய்வதே. அதன் முதல்படி மோசமான பராமரிப்பு. மருத்துவத் துறையில் இப்போக்கு சகித்துக் கொள்ள முடியாத அளவுக்குச் சென்று விட்டது.

எதேச்சிகாரம் நிறைந்த அரசின் இயந்திரத்தில் பணிபரிபவர்களுக்கும் அதே மெத்தனப் போக்குத்தானே இருக்கும். மக்களின் வரிப்பணம்தான் தங்களுக்குச் சம்பளமாக வழங்கப்படுகிறது என்ற ஒரு தன்னுணர்வுகூட இல்லாமல் அரசுத் துறை அலுவலர்கள், குறிப்பாக மருத்துவத் துறைப் பணியாளர்கள் பலர் மக்களை அலைக் கழிப்பதையும், சேவை செய்ய மறுப்பதையும் நாம் அன்றாடம் காணலாம். இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி உண்மையில் மக்கள் சேவை ஆற்ற வேண்டிய அரசோ மக்களின் இடுப்பெலும்பை முறித்து தனது சேவையை தனியாருக்கு ஆற்றுகிறது.

மக்கள் இனியும் இறைஞ்சிக் கொண்டிராமல், அரசு விடுக்கும் அறிக்கைகளை நம்பிக் கொண்டிருக்காமல், அரசின் முதலாளிகளை கதிகலங்க வைக்கும் போராட்டங்களில் ஈடுபட வேண்டும். உதாரணமாக, அரசு மருத்துவமனையில் அசம்பாவிதங்களோ, மரணமோ நேர்ந்தால் சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளின் கதவுகளையும் இழுத்து மூடி பூட்டு போடும் போராட்டம் போன்ற போராட்ட முறைகளில் ஈடுபடலாம்.

நாம் கத்தினால் அரசின் செவிகள் திறக்காது, ஆனால் முதலாளிகள் முகம் சுருங்கினாலே போதும் அரசு பதறி அடித்துக் கொண்டு மாற்றங்களைக் கொண்டு வரும். ஆக பொதுத்துறை நிறுவனங்களை காக்க தனியார் நிறுவனங்களைக் கைப்பற்றுவோம். பொதுத்துறை நிறுவனங்களை மூடினால் அதே ‘சேவையில்’ ஈடுபட்டிருக்கும் சுற்று வட்டார தனியார் துறை நிறுவனங்களுக்கு இழுத்து பூட்டு போடுவோம்.

நமக்காக அவர்களைக் குரல் கொடுக்க வைப்போம்!

இது ஒரு நீண்ட காலப் போராட்டமாக அமையும். மேலும் இதற்கெதிராக நிச்சயமாக கடுமையான ஒடுக்குமுறைகள் நிலவும் என்பதில் ஐயமில்லை.

இதுபோன்ற நூதனப் போராட்ட முறைகளை முன்னெடுப்பதோடு நாம் சட்டரீதியாகவும் உடனடி தீர்வுக்கு வழி வகை செய்யலாம். முதல் அமைச்சர்கள், பிரதம மந்திரி மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கண்டிப்பாக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவம் பெற வேண்டும், அதை மீறினால் அவர்களது பதவிகள் பறிக்கப்படும் என்று ஒரு அவசரச் சட்டம் இயற்றப்பட்டால் அரசு மருத்துவமனைகளின் தலையெழுத்து திரைப்படங்களில் வருவது போல் ஒரே இரவில் மாறிவிடும்!

இது அதிகப்படியான கற்பனையோ! ஆனால் கற்பனையை மெய்யாக்கும் வலிமை மக்கள் சக்திக்கு உண்டு.


*அரசு தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட விளக்கத்தின்படி… பொதுபுத்தியின் புரிதலின்படி

No comments:

Post a Comment