May 30, 2014

அப்படியென்றால் பொது வெளி என்பது யாருக்கானது?

ஒரு போலீஸ்காரர் காஃபி ஷாப்பில் பெண்ணை ஆபாசமாக படம்பிடிக்கிறார் மற்றொருவர் தாழ்த்தப்பட்ட சிறுமிகளை வல்லுறவுக்காட்படுத்தி மரத்தில் தொங்க விட்ட கும்பலில் ஒருவராக இருக்கிறார்... ஒரு டிடிஆர் பெண்ணை ஏசி கோச்சில் ஏற அனுமதிக்காமல் அவளை மரணத்தின் பிடியில் தள்ளி விடுகிறார்..... - இது இந்தியா

பூமிப் பந்தின் எல்லா திசைகளிலும் வன்கொடுமைகளுக்கும், மிருகத்தனத்திற்கும் குறைவில்லை - அதிலும் அதிகாரம் என்று ஒன்று கையிலிருப்பின் பெண் உடல் என்பது பண்டம்..

பொது மக்கள் - அதாவது சமூகத்தில் வாழ்நிலைப் போராட்டங்களுக்கும் அவமானங்களுக்கும்  பலியாணவர்கள் அல்லது நல்வாழ்வு மறுக்கப்பட்டோர் செய்யும் குற்றங்களுக்கான உளவியில் காரணங்களை ஆய்வு செய்வது மேலும் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றுவது குறித்த வாதங்களை இந்த அதிகார வர்க்கத்திற்குப் பொருத்திப்பார்க்க முடியாது.

அதிகார வர்க்கத்தில் இருப்போர் செய்யும் பாலியல் குற்றங்கள் அதிகார வெறியின் அப்பட்டமான வெளிப்பாடு. அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழக்கப்பட வேண்டும். இடை நீக்கமோ அல்லது பணி நீக்கமோ போதுமான தண்டனையாகாது. பெண் உடலை அவமதிக்கும், சிதைக்கும் இத்தகையோருக்கு வழங்கப்படும் தண்டனை அவனது ஆணாதிக்க சிந்தனைக்கான தண்டனையாக இருக்க வேண்டும்.

பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான திட்டங்களும் பேச்சுகளும் வெறும் பேசு பொருளாகவும், தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடக விவாதப் பொருளாகவும் மட்டுமே இருந்து வருகிறது. வெளி உலகும், இரவும் பெண்களுக்கு எத்தகைய அச்சுறுத்தலாக இருக்கின்றன என்பதை ஆதாரபூர்வமாகத் தெரிந்துகொள்ள சம்பந்தபட்ட அரசுத் துறையினர் தங்களது குடும்ப உறுப்பினர் பெண்களை கால் நடையாகவும் பொது வாகனங்களிலும் பயணிக்க வைக்கலாம் - ஒருவேளை அப்போதாவது அவர்களுக்குப் புரியும் வாய்ப்பிருக்கிறது.

சாதாரணப் பெண்கள் போல் அவர்கள் வீட்டுப் பெண்களும் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் பகுதிகளிலும், சிப்காட் போன்ற தொழிற் வளாகத்திலும் தன்னந்தனியாக சுற்றி வரச் செய்தால் கண் துடைப்புக்காக செய்யப்படும் ஆய்வு போல் அல்லாது உண்மை நிலவரங்களை அவர்கள் கண்டறியலாம்.

மக்களைச் சுரண்டி சொகுசுக் கழிப்பறை கட்டி அங்கு கழிப்பதை சில நாட்களுக்கு நிறுத்திவிட்டு தங்கள் வீட்டுப் பெண்களை கரட்டுக்கு அனுப்பி வைத்தால் இயற்கை உபாதையைக் கூட பயமின்றி கழிக்க முடியாத அந்த அவலம் என்னவென்று அவர்களுக்குப் புரிய வாய்ப்பிருக்கிறது.

நாளுக்கு நாள் பொது வெளி என்பது பெண்களுக்கு ஆபத்தானதாகி வருகிறது. ஆண் துணை இன்றி பெண்கள் பொது வெளியில் நடமாட முடியாது எனும் நிலைதான் 65 கால சுதந்திர இந்தியாவின் சாதனை. ஆண் துணை இருந்தாலும் பெண்களுக்குப் பாதுகப்பில்லை என்பதை நிர்பயாக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். கலாச்சார காவலர்களால் பெண்களோடு செல்லும் ஆண்களுக்கும் பாதுகப்பில்லை.

அப்படியென்றால் பொது வெளி என்பது யாருக்கானது?

மோடி அவர்கள் அறிவித்துள்ள 10 அம்ச திட்டத்தில் மூன்றாவது அம்சம் கல்வி, சுகாதாரம், நீர்வளம், ஆற்றல், சாலை ஆகியவற்றுக்கு முன்னுரிமை எனப்பட்டுள்ளது.  பெண்கள் மேம்பாடு அல்லது பாதுகாப்பு குறித்து முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை அவருக்கு எடுத்துச் சொல்ல எவரும் இல்லையோ?

பெண்கள் நலனை புறக்கணிக்கும் 10 அம்ச திட்டத்தைக் கொண்டு அவரது அரசாங்கம் எப்படி தனது முதல் இலக்கை அடையமுடியும்? – அதிகாரத்துவத்தின் மீது நம்பிக்கையை கட்டி எழுப்புதல் – அதிகாரத்துவம் பெண்களின் பாதுகாப்பிற்காக – அடிப்படை உரிமையான – பாதுகாப்போடு உயிர் வாழ்தலுக்காக செய்யவிருப்பது என்ன?  

மேற்சொன்னக் கேள்வி மாநில அரசுக்கும் பொருந்தும். எல்லாப் பிரச்சினைகளுக்கும் மத்திய அரசைக் கைகாட்டி விடுவதும் அவர்களுக்கு கடிதம் எழுதிவிட்டு பெண்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் பொறுப்பை தமிழக அரசு தட்டிக் கழிக்க முடியாது. ஏன்றால் ஒரு பெண்ணாக நான் வேண்டுவது தமிழ் நாட்டிலும் சுதந்திரமாக, தைரியமாக நடமாடும் உரிமையை. 

இரவையும் இயற்கையையும் அச்சமின்றி அனுபவிக்கும் எனது உரிமையை எனக்கு உத்திரவாதம் செய்ய முடியாத எந்த அரசும் என்னை ஆள தகுதியற்றவர்கள். 


1 comment:

  1. //ஒரு போலீஸ்காரர் காஃபி ஷாப்பில் பெண்ணை ஆபாசமாக படம்பிடிக்கிறார்//

    // மற்றொருவர் தாழ்த்தப்பட்ட சிறுமிகளை வல்லுறவுக்காட்படுத்தி மரத்தில் தொங்க விட்ட கும்பலில் ஒருவராக //

    முதலில் சொல்லி இருப்பதைச் செய்தவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் தான் அதனால் தான் நான் பழி வாங்கப்படுகிறேன் என்ற "ஆயுதத்தையும்" கையில் எடுத்தார் அதில் மட்டும் "தாழ்த்தப்பட்ட" என்ற சொல்லைக் காணவில்லை இரத்தம்,தக்காளிச்சட்னி நினைவுக்கு வருகிறது

    ReplyDelete