தங்கலான் தமிழ் சினிமாவின் ஜொலிக்கும் தங்கமே!
விடுதலை அரசியலை கலை நயத்துடன் படைப்பாக்கியதில் மின்னும் தங்கலான்!தங்கலான் ஒரு திரைப்படமாக, கலையாக, கட்டிப் போடும் ஊடக அனுபவமாக சமூக பொருளாதார அரசியலாக என்று பல பரிமாணங்களில் எனைக் கவர்ந்தது.
திரைப்படம் காணும் முன் நான் விமர்சனங்களைப் படிப்பதை தவிர்ப்பேன். இருப்பினும் தங்கலான் குறித்து எதிர்மறை விமர்சனங்களையே TIMELINEஇல் அதிகம் காண முடிந்தது. இன்னும் கூடுதலாக வரலாற்று தரவுகளை முன் வைத்து நடந்த dissection பதிவுகளையும் காண முடிந்தது. படம் பார்த்து முடித்தவுடன் “படம் நல்லாதான இருக்கு, எதுக்கு வேற மாதிரி பேசிக்கிறாங்க” என்று தான் தோன்றியது.
வரலாற்றில் உழைக்கும் மக்களுக்கு* என்ன நடந்திருக்கிறது என்பதை வரலாறும் புனைவுமாக ஒரு புதிய வகை genre ஆக தனித்துவமானதொரு படைப்பு.
அடிமைப்பட்ட வரலாற்றையும், விடுதலைப் போராட்டத்தையும் சொல்லிவிட்டு, தங்கம் தேடிச் செல்லும் Expedition என்னும் சாகசப் பயணமாக முதல் பாதியிலும், வாழ்வா சாவா போராட்டமாகிப் போகும் இரண்டாம் பாதியாகவும், இறுதியில் எது விடுதலை, எது உண்மையான செல்வம், எது மகிழ்ச்சி என்று அகம்-புறம் போராட்டமாகவும் இழைக்கப்பட்டு ஒரு பேரனுபவமாக அமைகிறது தங்கலான்.
இப்படியாக உழைக்கும் கூட்டம் அடிமையாக்கப்படுவதில் இந்திய சமூகத்திற்கே உரிய சாதிய ரீதியான உழைப்புப் பிரிவினை எப்படி வலு சேர்க்கிறது என்பதை நுணுக்கமான திரைக்கதை வழி பதிவு செய்கிறார்கள். அந்த காலகட்டத்தில் இருந்த மத எதிர்ப்பு கலக சீர்திருத்த போக்குகள் குறித்த பதிவுகளும் ஈர்க்கின்றன. இதையெல்லாம் ஒன்றாகக் கோர்த்து ‘ஜனரஞ்சகமாக’ கொடுப்பதுதான் கலை என்னும் போது, பா.இரஞ்சித் தங்கலான் மூலமாக பாராட்டுக்குறிய கலைஞனாகவும் மிளிர்கிறார்.
அடிமைப்பட்டுக் கிடக்கும் கூட்டம் விடுதலைக்கான வழியை எப்படி வேண்டுமானாலும் தேடும். தங்கலான் குறிப்பிட்ட வழியில் தன் இனத்திற்கு விடுதலை வாங்கித்தர நினைக்கிறான். அதற்காக அவன் வெள்ளைக்கார துரையோடு ஒரு சாகசப் பயணம் மேற்கொள்கிறான். அந்த சாகசப் பயணத்தில் அவன் எடுத்துக்கொள்ளும் TASK என்ன? அதில் அவன் எதிர்கொள்பவை என்ன, இறுதியில் விடுதலை கிடைத்ததா? எதிலிருந்து விடுதலை தேவைப்படுகிறது அல்லது விடுதலை எப்படி சாத்தியப்படும் என்று எடுத்துரைப்பதற்கு மிகவும் கடினமானதொரு தத்துவத்தை கலவையான genreகளில் திரைப்படமாக்கி இருப்பது புதியதொரு அனுபவத்தைத் தருகிறது.
குறிப்பிட்ட சிலரிடம் செல்வம் எப்படி குவிகிறது என்பதை மார்க்சியம் ஆதி மூலதனத் திரட்டல் என்று விளக்குகிறது. அதே போல் தங்கலானிலும் மிராசுதார் வரும்போது விக்ரம் பேசும் வசனங்கள், அவர்களின் நிலங்கள் எரிக்கப்பட்டு உழைக்கும் அடிமைகளாக்கப்படுதல் போன்ற பதிவுகளின் மூலம், அந்த பாடமே படமாக்கப்பட்டதாக நான் காண்கிறேன். பா. இரஞ்சித்-தமிழ்ப் பிரபா கூட்டனி அதை அப்படித்தான் எழுதினார்களா எனக்கு தெரியாது. ஆனால் எப்படிப்பட்ட ஆண்டான் அடிமை (அபகரிப்பு) வரலாற்றை பேசினாலும், சமூக அமைப்பின் பரிணாம வளர்ச்சியை மார்க்சியம் விளக்கியுள்ளதோடு என்னால் தொடர்புபடுத்தாமல் இருக்க இயலாது. ஒருவகையில் கருத்து முதல்வாதமாக அடிமை வரலாற்றை பேசிக்கொண்டிராமல் பொருளாயத அடிப்படையில் தான் எல்லாமே நடந்தது என்று வாக்குமூலம் கொடுப்பது போன்றதொரு உணர்வு. மகிழ்ச்சி
பெண் தன் ரத்தத்தைக் கொடுத்தேனும் நிலத்தைக் காக்கும் தேவதை, ஆனால் அவளை சூனியக்காரி என்று முத்திரை குத்திய வரலாறு என பல் வேறு விசயங்கள் குறியீடாக படம் நெடுக இழையோடுகிறது. வழக்கமாக கதாநாயகன் பரிசுத்தவானாக இருப்பான், ஆனால் இதில் நாயகன் தங்கத்திற்கு ஆசைப்படுகிறான், அதற்காக எந்த எல்லைக்கும் செல்கிறான். இனத்தின் விடுதலைக்காகவே என்றாலும், இறுதியில் அவன் எதற்காகப் பணிக்கப்பட்டான் எப்படி மாறிப்போனான் என்கிற தொன்மத்தின் தொடர்ச்சியான சுயம் உணர்தல் நிகழ்கிறது. பொருளாயத நிலைமைகளே மனிதர்களின் உணர்வுநிலைகளைத் தீர்மானிக்கிறது என்கிற மார்க்சிய அரிச்சுவடிக்கு இதுவும் ஒரு உதாரணம். இப்படி தங்கலானில் படமாகவும், பாடமாகவும் ரசிக்கத்தக்க அம்சங்கள் நிறையவே உள்ளன.
AVATAR - பூர்வகுடி மக்களின் நிலங்களை, வளங்களைக் கையகப்படுத்த நடக்கும் அட்டூழியங்களை (காலனியாக்கம், ஏகாதிபத்தியம்) நவீனமும் தொன்மமும் கலந்து பேசியது. சமூக அரசியல் நாடகமாக, நாட்டுப்புற கதைகளின் வழி மூதாதையர் மண் காக்க நடத்திய போராட்டங்களை மாய யதார்த்த கதையாடலாக ஒரு பரவச அனுபவத்தை, கொடுத்தது. அதே நேரம் ‘அந்நியர்கள்’ உழைக்கும் மக்கள், பூர்வகுடிகள் மேல் தொடுக்கும் போராட்டங்கள், இயற்கையோடு ஒன்றி வாழ்தலே உண்மையான மகிழ்ச்சி என்கிற பாடத்தையும் எடுத்தது. தங்கலான் எனக்கு அதற்கு நிகரானதொரு தமிழ் படைப்பாகவே தெரிகிறது.
தங்கலான் படைப்பாளிகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், உசுரையேக் கொடுத்து நடித்திருக்கும் நடிகர்களுக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும், படைப்பிற்கு உயிர்ப்பூட்டும் இசையமைத்துள்ள GV Prakash அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
#Thangalaan #ThangalaanReview