Oct 11, 2020

ஆணாதிக்க சமூகம் ஆண்களுக்கும் கேடானது! எப்படி?

 


உடலியல் அறிவியலை மறுத்து ஆணுக்கான பாலின அடையாளத்தை ஆதிக்க கருத்தியலுக்காக, உழைப்புச் சுரண்டலுக்காக உருவாக்கியது. அதனால் ஆண்மையை நிரூபி, ஆண்மையுடன் இரு, ஆண்மையுடன் பொருளீட்டு, ஆண்மையுடன் போர் செய், ஆண்மையுடன் நடந்துகொள் என்கிற கட்டளைகள் மூலம் ஆண்களைப் பாலியல்ரீதியாக துன்புறுத்துகிறது.

பொருள் ஈட்டிப் பராமரிக்கும் குடும்பச் சுமையை முழுமுற்றாக ஆணின் தலையில் ஏற்றுகிறது. பெண்களைப் பாதுகாக்க முடியாத சமூகப் பொறுப்பைத் தட்டிக் கழித்து பெண்களைப் பாதுகாக்க இயலாதவன் ஆண் மகன் இல்லை என்கிறது. செல்வத்திற்காகவும், வளத்திற்காகவும் தனி நபர்கள் சிலரின் வேட்கைக்கான போரில் வீரத்தின் பெயரால், நாட்டுப் பற்றின் பெயரால் ஆண்களை இராணுவப் பணி என்று பலியிடுகிறது. (தற்போது பெண்களையும் தான்).

விருப்பம் இருக்கிறதோ இல்லையோ திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறது. குழந்தைப் பெற்றுக்கொள்ளச் சொல்கிறது. குழந்தைப் பேரின்மையை பெருத்த அவமானமாக பறைசாற்றுகிறது. (பெண்களை மலடி, ஆண்களை மலடன்). அதன் மூலம் தம்பதிகளை fertility centres நோக்கி ஒடச் செய்து, தனி நபர்கள் செல்வத்தில் கொழிக்க வழி செய்கிறது. இன்னொரு பக்கம் பெண் உடலை பரிசோதனைக் கூடமாகவும் ஆக்குகிறது.

ஆணாதிக்க சமூகமானது - குழந்தையை ‘சிறந்த’ முறையில் வளர்ப்பவன் என்றால் இருப்பதிலேயே ‘உயர்வான’ பள்ளியில் சேர்க்க வேண்டும், சாத்தியமற்ற வசதிகளைச் செய்து தர வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும் என்கிற அந்தஸ்துசார் அழுத்தத்தை குடும்ப அமைப்பின் வாயிலாக ஏற்படுத்துகிறது.

சிறந்த – உயர்ந்த என்கிற வார்த்தை ஜாலங்கள் தனி நபர்கள் சிலர் (பெரு முதலாளிகள்) சொத்து சேர்பதற்கான ஏற்பாடுகளே. குடும்பம் வாயிலாக அதை நடைமுறைப்படுத்த தோன்றிய அமைப்பே தந்தை தலைமையிலான குடும்ப அமைப்பு.

உ.ம் – அடிப்படை உரிமையான கல்வியை தனியார்மயமாக்கி சாமானியருக்கு கல்வியை எட்டாக் கனியாக்கி வைத்திருக்கிறது. அந்தக் கல்வியும் கூட உழைக்கும் கூலிகளை உருவாக்கும் ஒரு பட்டறை மட்டுமே. அதைக் கூட இலவசமாக வழங்க மறுத்து செல்வந்திர்களின் நலனுக்காக ’தரம்’ என்கிற பெயரில் தனியார்மயமாக்கி வைத்துள்ளது.

தரத்தை’ உறுதி செய்ய முடியாத அரசுகள் நமக்கெதற்கு? யாரோ ஒருவர் செல்வம் சேர்க்க நாம் உழைத்துக் கொட்ட வேண்டுமா என்கிற கேள்விகள் ஆணாதிக்கவாதிகளுக்கு ஏற்படுவதில்லை. அவர்கள் கவலையெல்லாம் பெண்ணின் உடை, நடத்தை, #கலாச்சார சீர்கேடு அவ்வளவே!

சமூக சீர்கேடு, பொருளாதார சீர்கேடு, சாதியச் சீர்கேடு, இராணுவத்தின் அராஜகம் குறித்தெல்லாம் கவலையே இல்லை! குறிப்பாக பெண்களை வல்லுறவு செய்து அராஜகம் செய்கிறார்களே – அதற்கும் பெண்கள் உடைதான் காரணமா?

 


No comments:

Post a Comment