Oct 31, 2021

கம்யூனிஸ்ட் யார் என்று டி.என்.ஏ டெஸ்டிங் லேப் நடத்துபவர்களின் கவனத்திற்கு

 


முத்துராமலிங்கத் தேவர் சாதியத் தலைவரா? அவரை ஒற்றை சிமிழிற்குள் அடைக்கப் பார்கிறீர்களே! அவரை படித்திருக்கிறீர்களா? அவரின் வரலாற்றுப் பாத்திரம் தெரியுமா? மொட்டையாக அணுகுறீர்களே நீங்களெல்லாம் ஒரு கம்யூனிஸ்டா!? (இப்படி கேட்பது மார்க்சியவாதிகள்)

சரியான கேள்விதான்!

 ஆனால் இதே நிலைப்பாட்டை அம்பேத்கரை விமர்சிக்கையில் ஏன் இவர்களால் வைக்க இயலவில்லை!

 தேவரை மட்டுமல்ல எவர் ஒருவரையும் மார்க்சியக் கண்ணோட்டத்தில் அவரின் வரலாற்று பாத்திரம் என்ன என்பதை வரலாற்று பொருள்முதல்வாதப் பார்வையில் தான் அணுக வேண்டும்! தேவரைப் பற்றிய திறனாய்வு செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! சாதி ஒழிப்பின் அடையாளமாக அவர் இல்லை! 

 பெரியாரையும் அம்பேத்கரையும் அப்படி அணுகினால் இங்கு நடப்பது என்ன?

 இவர்கள் இருவரை மட்டும் குறிப்பாக ஏன் பேசுகிறோம்? ஏனென்றால் சாதி ஒழிப்பிற்கு அவர்களிடம் தான் தீர்வு உள்ளது என்று மீண்டும் மீண்டும் முன் வைக்கிறார்கள்.

 அவர்களை முன் வைத்து சாதியை ஒழிக்க மார்க்சியத்தில் தீர்வில்லை! கம்யூனிஸ்டுகளுக்கு இந்த மண் புரியவில்லை! அவர்களுக்கு சாதி ஒழிப்பில் அக்கறை இல்லை! என்ன பெரிதாக செய்துவிட்டார்கள் கம்யூனிஸ்டுகள் போன்ற வாதங்களை வைப்பது யார்? பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள் (பலரின்) இந்த சாடலுக்கு யார் காரணம்? இந்த வெறுப்பை அல்லது தவறான புரிதலை ஏற்படுத்துவதில் அந்த தலைவர்களின் பங்கு என்ன? யாரை விமர்சித்தாலும் வந்து பாடம் நடத்தும் “மார்க்சிய நடுநிலைவாதிகள்” இதுகுறித்து என்ன அறிவிக்கை வைத்திருக்கிறார்கள்?

 தேவரின் வரலாற்றுப் பாத்திரம் இருக்கட்டும்! தேவர் ஜெயந்தியின் வரலாற்று நிகழ்காலம் என்ன? அதன் பொருத்தப்பாடு என்ன? அதன் தேவை என்ன? அது அவசியா? இல்லையா போன்ற கேள்விகளையும் கேட்கலாமே?

நாங்கள் எடுத்துக் கொண்ட ஆய்வு சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு யாரிடம் உள்ளது என்பதுதானே! அதற்கு தீர்வு உள்ளதாக கூறியது அம்பேத்கர்! புத்தரா கார்ல் மார்க்ஸா என்ற ஒப்பீட்டை செய்தவர். பௌத்த மதமாற்றம் சாதியை ஒழிக்கும் என்கின்ற பிரச்சாரத்தையெல்லாம் நீங்களும் தானே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?

 இந்த பின்னணியில் அம்பேத்கரின் சிந்தனைகளை திறனாய்வு செய்யத் தொடங்கினோம்! அதனை இங்கே எப்படி எதிர்கொண்டார்கள்?

மீண்டும் சொல்கிறேன், தலித் அறிவுஜீவிகள், அம்பேத்கரின் அபிமானிகள் (தலித்துகள்) கோபம் கொள்வதை, வசைபாடுவதை, வழக்கு தொடுப்பதை புரிந்துகொள்கிறோம்! ஆனால் வசுமித்ர மீது வழக்கு தொடுத்தது சிபிஎம் – அதன் பிரிவான தீண்டாமை ஒழிப்பு முன்னணி! இவர்களைப் பார்த்து நீங்கள் ஒரு கம்யூனிஸ்டா? இது ஒரு கம்யூனிஸ்ட் அமைப்பா என்று கேட்டீர்களா?

 குறைந்தபட்சம் பொதுவெளியில் அத்தகைய பாசிச நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தீர்களா? அமைப்பு பாசத்தில் எங்களுக்கு பாடம் நடத்துகிறீர்கள்! கற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறோம்! ஆனால் இதே அரசியல் நேர்மை உங்கள் அமைப்பை நோக்கியும், மார்க்சிய தத்துவம் மீதும்.. எல்லாவற்றுக்கும் மேல் உழைக்கும் வர்க்க விடுதலை மீதும் இருக்கட்டும்!

 உங்களுக்கு மட்டுமே எல்லாம் இருக்கிறதா?” – நாங்கள் அப்படி மார் தட்டிக்கொள்வதில்லை!

 எங்கள் கேள்விகள் தேவரை எப்படி மதிப்பிடுவது என்பது பற்றி அல்ல சிபிஎம்மில் (ஒரு சிலரிடம்) காணப்படும் பாசாங்கு / சால்ஜாப்பு / இரட்டை வேடம் / அடையாள அரசியல் மற்றும் தனி நபர் வன்மம் பற்றியது! கருத்துச் சுதந்திரத்தை போட்டு நசுக்கிய மிக மோசமான ஒரு செயலுக்கு அமைப்பு காட்டும் கள்ள மௌனம் பற்றியது.

 சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரிடம், பெரியாரிடம் தீர்வு உள்ளதா என்பது குறித்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஏன் வெளிப்படையாக கராரான மதிப்பீட்டை வைக்க தயங்குகின்றன. அம்பேத்கர் மார்க்ஸ் தொடரும் உரையாடல் என்கிற பெயரில் வைக்கப்படும் ”உரையாடல்கள்” குறித்த திறனாய்வு என்ன?

 இவற்றை பற்றி கேள்வி கேட்டாலே எங்களை வசைபாடுவதும், சாதிய முத்திரை குத்துவதும், ஆபாசமாக கமெண்ட் செய்வதும், வழக்கு தொடுத்து மிரட்டப் பார்ப்பதும் சரியா? குறிப்பாக கம்யூனிஸ்டுகள் இதை செய்யலாமா என்னும் கேள்வியை முதலில் அவர்களை நோக்கி எழுப்புங்கள். திறனாய்வுக்கான எதிர்வினைகள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு பாடம் நடத்துங்கள்.

 நீங்கள் ஒரு கம்யூனிஸ்டே இல்லை என்று முகநூல் டி.என்.ஏ டெஸ்டிங் லேப் நடத்துவதற்கு பதில் மார்க்சியக் கண்ணோட்டத்தில் சாதியப் பிரச்சினையை எப்படி அணுகுவது! பெரியார், அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர் உள்ளிட்ட முன்வைக்கப்படும் சாதி ஒழிப்பு “ஐகான்கள்” பற்றிய திறனாய்வையும் செய்யலாம்.

 இதை செய்யாதவர்களுக்கு எங்களை கேள்வி கேட்க எந்த அதிகாரமும் இல்லை! பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கில்லை!

 

Oct 23, 2021

மார்க்சியமும் - அம்பேத்கரும்! ஜெய் பீம் என முழங்கும் கம்யூனிஸ்டுகளின் கவனத்திற்கு

 அம்பேத்கருடன் தோழர் ஏவின் மனோ காணும் அகநேர்காணல்

-------------------------------------------------------------
முன்குறிப்பு:இந்த அக நேர்காணல் கற்பனையானதென்றோ,அண்ணல் அம்பேத்கர் சொல்லாத வார்த்தைகளை இட்டுக்கட்டி சொல்கிறேன் என்றோ படிப்பவர்கள் நினைத்து விடவேண்டாம்.அம்பேத்கர் தனது வாழ்நாளில் பேசியதும்,எழுதியதுமான 37 தொகுதி நூல்களை ஆதாரமாகக் கொண்டே இந்த உரையாடலை அல்லது அகநேர்காணலை தொகுத்துள்ளேன்.
கேள்விகள் என்னுடையவை போலவே; பதில்கள் அண்ணல் அம்பேத்கருடையது.வாருங்கள் நேர்காணலுக்குள் செல்வோம்.முன்னதாக,
புத்தர்:நான் மறைந்த பின்னர் ஆனந்த சன்ன என்ற பிக்குவுக்கு பிரம்மதண்டம்
(அதாவது கடுமையான தண்டம்) விதிக்க வேண்டும்
ஆனந்தா: சுவாமீ, என்னவிதமான கடுந்தண்டனையை விதிப்போம்,
புத்தர்: ஆனந்த,பிக்கு என்னதான் விரும்பியதைச் சொல்லட்டும். மற்ற பிக்குகள் அவரோடு பேசவுங்கூடாது, அவருக்கு ஆலோசனை கூறவுங் கூடாது. அவருக்காகப் பரிந்து பேசவுங்கூடாது.
-புத்தபகவானின் இறுதிவார்த்தைகள்.
*******
1:கம்யூனிஸ்டுகள் நடத்தும் தொழிலாளர் இயக்கத்தைப் பற்றி உங்கள் கருத்தென்ன?.நீங்கள் அவர்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்புள்ளதா?.
நான் அதில் சேரும் சாத்தியக் கூறே இல்லை. நான் அவர்களின் பரம்பரை எதிரி.கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் தொழிலாளர்களைத் தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காக சுரண்டுபவர்கள்.
*******
2:மார்க்சிய மூல நூல்களைப் படித்திருக்கிறீர்களா?.
எல்லாக் கம்யூனிஸ்ட் தலைவர்களும் சேர்ந்து எத்தனை புத்தகங்கள் படித்திருப்பார்களோ அவற்றை விட நான் அதிகம் படித்திருக்கிறேன்.அவர்கள் எப்போதுமே எந்தப் பிரச்சினைக்கும் செயல்பூர்வமான அணுகு முறையை மேற்கொண்டதில்லை.
********
3:கம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்கங்கள் குறித்து உங்கள் கருத்தென்ன?.
அவர்கள் (கம்யூனிஸ்டுகள்) அர்த்தமுள்ளவர்கள்தான்.ஆனால், தவறான வழிகாட்டுதலில் இயங்குபவர்கள்.அவர்களை விட தொழிலாளி வர்கத்துக்கு பேரழிவைக் கொண்டு வந்தவர்கள் வேறு எவரும் இல்லை.இன்று தொழிலாளி வர்கத்தின் முதுகெலும்பு உடைக்கப்படுகிறது.
முதலாளிகளின் கை மேலோங்கியிருக்கிறது.
பொது மக்களுக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் நெருங்கிய நட்பும் இல்லை.இவற்றுக்கெல்லாம் காரணம் இந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் தான்.தாங்கள் ஒரு காலத்தில் வென்றெடுத்த அதிகாரத்தை இவர்கள் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்.இவர்கள் வேலையே தொழிலாளர்களிடையே அதிருப்தியை வளர்ப்பதுதான்.அதிருப்திதான் புரட்சியைத் தூண்டும்,புரட்சியின் மூலம் தொழிலாளி வர்க்க கட்சியை நிறுவ முடியும் என்றெல்லாம் இவர்கள் கணக்கு போடுகிறார்கள்.இதற்காகவே இந்த அதிருப்தி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு பிளவு,சிதறல் இவற்றையே ஒரு அமைப்பு அலையாக தொடர்ந்து விளைவித்து வருகிறார்கள்.
இவர்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கும் தொடர் வேலை நிறுத்தங்களுக்கு என்ன அர்த்தம்?.இது சிதறுதலை திட்டமிட்டு செயல்படுத்தும் ஒரு முயற்சிதானே?.வெற்றிகரமான புரட்சிக்கு அதிருப்தி மட்டுமே போதாது.அரசியல் சமூகஉரிமைக்கான நியாயம்,அவசியம்,முக்கியத்துவம் ஆகியவை பற்றிய உண்மையான நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றிகரமான புரட்சி சாத்தியமாகும்.ஒரு புரட்சிகர மார்க்சிஸ்ட் வேலைநிறுத்தம் நடத்தலே வேலை என்று அலைய மாட்டான்.புரட்சிகர சிண்டிகலிஸ்டுகளின் காலங்களில் அப்படித்தான் நடந்தது.வேலை நிறுத்தத்தை மார்க்சிஸ்டுகள் ஒரு புரட்சிகர நடவடிக்கையாக எப்போதுமே தீர்மானித்துக் கொண்டதில்லை.எல்லா வழிகளுமே அடைக்கப்பட்ட பிறகுதான் இறுதி புகலிடமாக வேலைநிறுத்தம் கையாளப்பட வேண்டும் என்பதே மார்க்சியம்.
இந்த உண்மைகளை கம்யூனிஸ்டுகள் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்.தொழிலாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கத் தங்களுக்கு கிடைத்த தெய்வீக சாதனமாக வேலை நிறுத்தங்களை ஒவ்வொரு கட்டத்திலும் திணித்தார்கள்.இதனால் அதிருப்தி வளர்ந்ததோ இல்லையோ அவர்களுக்கு ஆற்றலும் அதிகாரமும் தந்த தொழிற்சங்க இயக்கமே உருத்தெரியாமல் சிதைந்து வருகிறது.இன்றைய தினம் அவர்கள் தெருவுக்கு வந்துவிட்டார்கள்.
முதலாளித்துவ அமைப்புகளில் புகலிடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
பொருளற்ற செயல்கள் அப்படித்தானே முடிய வேண்டும்?. இன்றைய கம்யூனிஸ்டு எப்படி இருக்கிறான்?.சுற்றுவட்டத்தில் மாபெரும் தீ விபத்தை உண்டாக்குவதற்கான வெடிகுண்டை எறிந்த ஒருவன் தன் சொந்த வீட்டையும் சேர்த்து எரித்துவிட்ட நிலையில் இருக்கிறான்.
********
4:கம்யூனிஸ்டுகள் ஆட்சியதிகாரத்திற்கு வந்தால் என்ன நடக்குமென்று எதிர்பார்க்கிறீர்கள்?.
இந்த நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுப்போனால்- நான் குறிப்பிட்ட காரணங்களால் அது தோற்றுத்தான் போகும்- அதன் விளைவாக கலகம்,அராஜகம்,கம்யூனிசம் தோன்றும்.வாரிசு வழி அதிகாரத்தை மக்கள் சகித்து கொள்ள மாட்டார்கள் என்று ஆட்சியிலுள்ளவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் இந்தநாடு அழிந்தே போகும்.கம்யூனிசம் இங்கு வரலாம்.ரஷ்யா நமது நாட்டில் மேலாண்மை பெற்று தனிமனித சுதந்திரத்தை நசுக்கி,நமது சுதந்திரத்தையும் ஒழித்து விடும்.
மேலும் “சமத்துவ அந்தஸ்து பெறும் தங்கள் முயற்சியில் தாழ்த்தப்பட்டோர் ஏமாற்றமடைந்தால் அவர்கள் கம்யூனிச அமைப்பு முறையை விரும்பக்கூடும்; அப்போது நாட்டின் கதி அதோ கதியாகிவிடும்”
********
5:பொருள்முதல்வாத தத்துவமான மார்க்சியத்திற்கு மாற்றாக நீங்கள் எதை பரிந்துரைக்கிறீர்கள்?.
கம்யூனிசத்திற்குப் பதிலளிக்க முடியாத எந்த மதமும் நிலைத்திருக்க முடியாது.கம்யூனிசத்திற்கு மாற்றாக இருக்கும் தகுதி படைத்த ஒரே மதம் புத்த மதம்தான்.
*******
6:தற்போதைய சூழலில் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் தரும் விஷயமாக எதை பார்க்கிறீர்கள்?.
உலகை அழிக்கும் குறிப்பாக அதன் தென்கிழக்கு ஆசியப் பகுதியைப் பாதிக்கும் மூன்றாவது அம்சம் ஒன்றும் உள்ளது.காரல் மார்க்சும் அவர் ஈன்றெடுத்த கம்யூனிசமும்தான் அந்த மூன்றாவது அம்சம்.இதன் தாக்கம் கடுமையாக உள்ளது. மார்க்சியமும்,கம்யூனிசமும் சமயசார்பற்ற விவகாரங்கள் சம்பந்தப்பட்டவை.இவை அனைத்து நாடுகளின் சமய சார்பு அமைப்பின் அடித்தளத்தையே ஆட்டம் காண செய்துள்ளன.
*******
7. அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய அனுபவம் எப்படி இருந்தது?
என்னிடம் பலர் எப்போதும் சொல்கிறார்கள்; “ஓ, நீங்கள்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் கர்த்தாவாயிற்றே” என்று.எனது பதில் இதுதான்: “நான் கூலிக்கு எழுதுபவனாக இருந்தேன். நான் எதைச் செய்ய வேண்டும் என்று எனக்குச் சொல்லப்பட்டதோ அவற்றை என் சித்தத்தில் மிகவும் எதிரான முறையில் செய்தேன்”.
*******
8:கார்ல் மார்க்ஸ் 'மதம் மனிதனுக்கு அபின் போன்றது' என்கிறார்.மதத்தைப் பற்றி தங்கள் கருத்தென்ன?.
ஷோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் சொல்வது போல மதமே தேவையில்லை என்று நான் நம்பவில்லை.மனிதனுக்கு மதம் கண்டிப்பாகத் தேவை. நீதி, தர்ம சாஸ்திரங்களைப் போல மனிதகுலத்தை எந்த அரசாங்கமும் பாதுகாக்கவோ, ஒழுங்குபடுத்தவோ இயலாது.
மனித குலம் முன்னேறுவதற்கு மதம் முற்றிலும் இன்றியமையாதது.காரல் மார்க்சைப் படித்த பிறகு சமய மறுப்பாளர் குழு ஒன்று உருவாயிற்று என்பதை நான் அறிவேன்.சமயம்,மதம் பயனற்றது,வீணானது என்பது அவர்களது கருத்து.அவர்கள் மதத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை அதனை மதிப்பதில்லை.காலையில் அவர்கள் காலையுணவு உண்பார்கள்.அதில் ரொட்டி,பாலோடு வெண்ணெய்,கோழி இறைச்சி முதலியவை இருக்கும்.பின்னர் மதியம் முழுச்சாப்பாடு,ஆழ்ந்த தூக்கம்;அடுத்து திரைப்படங்கள் பார்த்தல், இத்தியாதி.இதுதான் அவர்களது வாழ்க்கைக் கோட்பாடு.இவைதான் நடைமுறை திட்டம்.
மதம் ஏழைகளுக்கு அவசியமானது. மதம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவசியமானது. ஒரு மனிதன் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ்கிறான். வாழ்க்கையின் ஆணிவேர், அடிவேர் நம்பிக்கையில்தான் பொதிந்துள்ளது. இந்த நம்பிக்கை இழக்கப்படுமானால் வாழ்க்கை என்ன ஆவது? மதம் நம்பிக்கையை அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு ஒரு செய்தியைக் கூறுகிறது- பயப்படாதீர்கள், வாழ்க்கை நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கும், இது உறுதி என்று - இதனால்தான் ஏழைகளும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களும் மதத்தை அரவணைத்துக்கொண்டிருக்கின்றனர்...
எனது சித்தாந்தத்தின் ஆணிவேர் மதத்தின் வேரூன்றியிருக்கிறதே தவிர அரசியல் விஞ்ஞானத்தில் அல்ல. எனது மாபெரும் குருவான புத்தரின் போதனைகளிலிருந்தே இவற்றை நான் பெற்றேன்.
********
9.பௌத்த மதமாற்றத்தில் தங்களது சொந்த சாதியைச் சேர்ந்த மஹர் சாதியினரிடத்தில் மட்டும் கலந்தாலோசிக்கவும், அவர்களை மட்டும் மதமாற்றம் செய்யவும் நீங்கள் நினைத்தது ஏன்?.
மகர்களுக்கான தனி மாநாடு கூட்டக் காரணம்.பிற வகுப்புகளை இதில் சேர்க்காததால் அவர்களுக்கு எதுவும் இழப்பில்லை. அவர்களுக்கு மதம் மாற விருப்பம் இல்லையே; எனவே இந்த மாநாட்டில் தங்களையும் சேர்க்கவில்லையே என்று அவர்கள் வருந்த நியாயமில்லை. அவர்கள் மதத்தை விட்டு நீங்க முடிவு செய்திருந்தால், இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாமல் போன காரணத்தினால் அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள போவதில்லை. மகர்களைப் போலவே தீண்டத்தகாத மற்ற மதத்தைச் சார்ந்தவர்களும் தங்கள் தங்கள் மாநாடுகளைக் கூட்டவும், எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளவும் எந்தத் தடையும் இல்லை. அப்படி கூட்டுங்கள் என்றுதான் நான் சொல்லுவேன். என் திறமைக்கேற்ற அளவில் என்னாலான உதவிகளும் செய்வேன்.
*******
10:கம்யூனிஸ்டுகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதென்ன?.
கார்ல் மார்க்ஸ்சால் கவரப்பட்டிருப்பவர்களுக்கு ஒன்று சொல்லுகிறேன்.தர்மசக்கர பரவர்தன சுத்தத்தை படியுங்கள்.அதில் புத்தர் என்ன சொல்லுகிறார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.இந்தப் பிரச்சினையில் நீங்கள் போதிய அளவு திருப்தியடைவீர்கள்.புத்தர் தமது மதத்துக்கான அடித்தளத்தை கடவுள் மீதோ அல்லது ஆன்மா மீதோ அல்லது இவைபோன்ற வேறு எந்த இயல்நிலை கடந்தவற்றின் மீதோ இடவில்லை.மக்களின் துன்ப துயரங்களின் மீதே அவர் தலையாய முக்கிய கவனம் செலுத்தினார்.எனவே மார்க்சியம் அல்லது கம்யூனிசத்தை பொறுத்த வரையில் பௌத்தம் அதனை போதிய அளவில் பெற்றுள்ளது.மார்க்ஸ் சொன்னதை புத்தர், மார்க்ஸ் பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார்.
********
11:புத்தரையும்,கார்ல் மார்க்ஸையும் ஒப்பிட்டு கட்டுரை எழுத வேண்டிய தேவை எங்கிருந்து பிறந்தது?.
நான் அரசியல் துறை மாணாக்கனாக இருந்துள்ளேன்.பொருளாதாரத் துறை மாணவனாக இருந்துள்ளேன்.
பொருளாதாரத் துறை பேராசிரியராக இருந்துள்ளேன்.கார்ல் மார்க்ஸையும் கம்யூனிசத்தையும் பற்றி ஆராய்வதில் நான் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளேன்.அதே சமயம் புத்தரின் தம்மத்தை படிப்பதிலும் பெரிதும் ஆழ்ந்து ஈடுபட்டுள்ளேன்.இரண்டையும் ஒப்பிட்டு பார்த்த பிறகு, ஒரு திட்டவட்டமான தீர்மானமான முடிவுக்கு வந்தேன்.உலகை இன்று ஒரு மாபெரும் பிரச்சினை எதிர்நோக்குகிறது.உலகில் 'துக்கம்' நிலவுகிறது.அந்த துக்கம் அகற்றப்பட வேண்டும் என்பதே அந்தப் பிரச்சினை.இதற்கு புத்தர் தெரிவித்துள்ள யோசனைகள்தான்,பரிகாரங்கள்தான் மிகவும் பாதுகாப்பானது, ஆரோக்கியமானது.இதுவே சிறந்தது என்ற திட்டவட்டமான முடிவுக்கு வந்தேன்.
*******
12.நீங்கள் முன்வைத்த இந்துமசோதா சட்டத்தின் புரட்சிகர அம்சம் என்ன?
இந்துச் சட்ட மசோதாவை தீவிரமானது என்றோ புரட்சிகரமானது என்றோ வர்ணிக்க முடியாது. முன்னேற்றத்திற்கான புதிய வழிமுறைகளை அனுமதிக்கிற இந்த மசோதா பழமைவாத நடைமுறைகளை எதிர்க்கவில்லை……
எந்த அடிப்படையில் சட்ட மசோதா வரையப்பட்டிருக்கிறது என்பதைப் பொருத்தவரை, இந்து சாஸ்திரங்கள், ஸ்மிருதிகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவை திருத்தப்பட்டுள்ளன. சொத்துரிமைக்கு வகை செய்வது தயாபாக் முறை. ப்ரித்தீஸ்வரன்யா அடிப்படையில் குழந்தை, தந்தையின் ஜாதியைப் பெறுகிறது. கௌடில்ய, பராஷரா ஸ்மிருதிகள் விவாகரத்துக்கு ஆதரவு தருகின்றன. ப்ருஹஸ்பதி ஸ்மிருதி பெண்களுக்கு சொத்துரிமை வழங்குகிறது……
இந்த மசோதாவின் எந்தவொரு பகுதியாவது ஸ்மிருதிகளின் அடிப்படையில் அமையவில்லை என்று யாராவது எனக்குக் காட்ட முடியுமா?.....
********
13. இஸ்லாமியர்கள் குறித்து உங்களது கருத்துக்கள் என்ன?
பாகிஸ்தானிலோ அல்லது ஹைதராபாத்திலோ இருக்கும் தாழ்த்தப்பட்ட இன மக்கள் முஸ்லீம்கள் அல்லது முஸ்லீம் லீக்கின் மீது நம்பிக்கை வைப்பது அவர்களுக்கு பெருங்கேட்டைத்தான் விளைவிக்கும். இந்துக்களை வெறுப்பதனாலேயே முஸ்லீம்களை நண்பர்களாக பாவிப்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பழக்கமாகிவிட்டது. இது ஒரு தவறான கண்ணோட்டமாகும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவை முஸ்லீம்கள் வேண்டுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களின் ஆதரவைத் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு தருவதே இல்லை. எப்பொழுதுமே ஜின்னா இரட்டை வேடம் போட்டு வருகிறார். அவருக்குத் தேவைப்படுகிறபோது தாழ்த்தப்பட்ட இன மக்கள் தனிப்பிரிவினர் என மிக அழுத்தமாகச் சொல்வார். அவருக்குத் தேவைப்படாத போது அவர்கள் இந்துக்கள் என்று அதே அழுத்தத்தோடு கூறுவார். முஸ்லீம்களும், முஸ்லீம் லீக்கும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முஸ்லீம்களை ஆளும் வர்க்கமாக்கிவிட வேண்டும் என்னும் வெறியில் இருப்பதால் தாழ்த்தப்பட்ட இன மக்களின் கோரிக்கைகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவே மாட்டார்கள். இதை நான் என் அனுபவத்திலிருந்து கூறுகிறேன்.....
இந்திய ராணுவத்தில் முஸ்லீம்களின் செல்வாக்கை குறைத்து, விரோத சக்திகளை வெளியேற்றிவிட வேண்டும். நமது பூமியை நாம் காப்பாற்றுவோம். இந்தியாவில் முஸ்லீம் சாம்ராஜ்யத்தை பாகிஸ்தான் விரிவுபடுத்தி விடும் என்று தவறான கருத்துக் கொண்டிருக்க வேண்டாம். இந்துக்கள் அதை மண்ணைக் கவ்வச் செய்வார்கள். சாதி இந்துக்களிடம் சில பிரச்சினைகளில் நான் சண்டையிடுகிறேன் என்பது உண்மைதான், ஆனால் நமது பூமியைக் காப்பாற்றுவதற்காக நான் எனது உயிரையும் கொடுப்பேன் என்று உங்கள் முன் சத்தியம் செய்கிறேன்……
********
14.சட்டத்தைப் பற்றி உங்களது அறிவுரை என்ன?
சட்டம் சமயசார்பற்றது; எவரும் அதை மீறலாம்; ஆனால் சகோதாரத்துவம் அல்லது சமயம் புனிதமானது; எல்லோரும் அதற்கு மதிப்பும் மரியாதையும் தரவேண்டும்.
********
15.சூத்திரர்கள் - சத்ரியர்கள் பற்றிய ஆய்வு குறித்து உங்களது முடிவு என்ன?
சூரிய வம்சத்தைச் சேர்ந்த சத்திரியர்கள் பராக்கிரமிக்கவர்கள். சந்திர வம்சத்தைச் சேர்ந்த சத்திரியர்களோ இயல்பாகவே மனோதிடமற்றவர்கள், தன்மானமில்லாதவர்கள்.
சந்திர வம்சத்தைச் சேர்ந்த சத்திரியர்கள் கல்வி கற்பதில் அவ்வளவாக நாட்டமில்லாதவர்கள். சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அப்படியல்ல. அவர்கள் அறிவு வளத்தில், கல்வி கேள்விகளில் பிராமணர்களுக்கு சமதையானவர்களாக, இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கும் மேம்பட்டவர்களாக இருந்தனர்.
சூத்திரரர்களும் ஆரியர்களே. சூத்திரர்கள் சத்திரிய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். பழங்கால ஆரிய சமுதாயத்தினரின் மிகச்சிறந்த சக்திவாய்ந்த மன்னர்களில் சிலர் சூத்திரர்களாக இருந்தனர் என்பதால் சூத்திரர்களும் சத்திரியர்களின் ஒரு முக்கிய வர்க்கத்தினராக இருந்தனர்.
*******
16.இறுதியாக,மார்க்சியத்தைப் பற்றிய உங்களது மதிப்பீடு என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?.
மார்க்சியம் ஒரு பன்றித் தத்துவம்.
********
ஜெய்பீம் என முழங்கும் கம்யூனிஸ்டுகளின் கவனத்திற்கு