Apr 25, 2022

No Nepotism என்பதில் வருணா உறுதியாக இருப்பவள்



 

வருணாவின் பேட்டி விகடனில் வந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி! விகடன் தடம் இதழுக்காக 2018இல் “நினைவில் மிதக்கும் பனிக்குடம்” என்ற தலைப்பில் வருணா பிறந்த கதையை கூறி இருந்தேன். 4 வருடங்கள் கழித்து வருணா வரைந்த ஓர் ஓவியத்திற்காக அவளை பேட்டி எடுத்திருக்கிறார்கள்.

பெற்றோரின் புகழ் வெளிச்சத்தில் ‘தான்’ அறியப்படக் கூடாது (No Nepotism) என்பதில் வருணா உறுதியாக இருப்பவள். பதின் பருவ வயது தொடங்கியதும், சுயாதீனமாக தனது முயற்சிகளையும், தேர்வுகளையும், முடிவுகளையும் எடுக்கும் வகையில் தான் அவள் வளர்ந்திருக்கிறாள்.

சிறு வயதிலேயே கலீல் ஜிப்ரானின் கவிதை வரிகளை மீண்டும் மீண்டும் நான் அவளுக்கு சொல்வதுண்டு “உங்கள் குழந்தைகள்
உங்களுடையவர்கள் அல்லர்
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களேயன்றி
உங்களிடமிருந்து அல்ல
உங்களுடன் இருந்தாலும் அவர்கள்
உங்களுக்கு உரியவர்களல்லர்.
அவர்களுக்கு உங்கள் அன்பைத் தரலாம்; …
எண்ணங்களை அல்ல.
அவர்களுக்கென்று சுய சிந்தனைகள் உண்டு.” (தீர்க்கதரிசி)

இதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும் என்று நாங்கள் பேசிக் கொள்வோம்.

12ஆம் வகுப்பில் Class Topper ஆனது தொடங்கி இன்றைக்கு அவள் பெற்ற வேலை வரை எல்லாமே அவளது முயற்சியாலும், அவள் திறமையாலும், தனக்குத் தானே அவள் வைத்துக் கொள்ளும் இலக்குகளாலும், அவளுடைய Strategies ஆலும் கிடைத்தவையே.

எப்படி பெற்றோரின் புகழ் வெளிச்சத்தில் பிள்ளைகள் குளிர் காயக் கூடாதோ, அதே போல் பிள்ளைகளின் புகழ் வெளிச்சத்திற்கு பெற்றோர் CREDIT எடுகக்கூடாது.

வருணா இப்படி ஓர் ஓவியம் வரைந்து, அது வைரலானது என்பதே இந்தியா டுடேவில் செய்த வந்த பின்னரே எனக்குத் தெரியும். அதன் பின் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். புகழ் கிடைக்கிறது என்பதால் அல்ல… கடந்து வந்திருக்கும் வாழ்க்கையின் வலி எதுவும் தன்னை தாக்கவிடாமல் ஒரு பறவை போல் எப்படி இவள் சிறகடித்துப் பறக்கிறாள் என்னும் மகிழ்ச்சி அது.

ஆம், பிள்ளைகளைப் (தாய்ப்) பறவைப் போல் வளர்த்தோமெனில் அவர்களே தங்களுக்கான திசையைத் தேடி பறப்பார்கள் என்று நான் உணர்ந்த நாள் அது. சொல்லப் போனால் அந்த பேட்டி வந்ததே வருணா சொல்லித்தான் எனக்கு தெரியும்.. வாட்சப்பில் அந்த சுட்டியை அனுப்பி வைத்தாள். படித்த பின் ”என்னடி இது” என்று வியந்தேன்.. நான் அடைந்த மகிழ்ச்சியை விளக்க சொற்கள் இல்லை. பின்னர் அடுத்தடுத்து பல ஊடகங்களில் அவள் ஓவியம் பற்றிய செய்திகள். பெரிய பெரிய ஆளுமைகளின் பாராட்டுகள். அதற்கு காரணமாக இருந்த அனைத்து ஊடகங்களுக்கும் மிக்க நன்றி.

விகடன் கட்டுரை வருணாவை கொற்றவையின் மகள் என்று அறிமுகப்படுத்தியுள்ளது. படிக்கும் போது மகிழ்ச்சி! இருந்தாலும் கூடவே ஒரு தர்ம சங்கடம்…. Do I Deserve this.. வருணா கொற்றவை மகள் என்று அறியப்படுவது அவசியமா என்று! மேலும் இது முழுக்க முழுக்க அவளது உழைப்பு, அவளது சாதனை!

கொற்றவையின் மகள் என்பதால் வருணாவிற்கு எந்த சிறப்பு சலுகையும் கிடைக்கவில்லை! (சொல்லப் போனால் சாதிய / அரசியல் / கலாச்சார நெருக்கடிகள் தான் அதிகம்) 😉

ஆனால் வருணாவின் அம்மா கொற்றவைக்கு பெருமையும், மகிழ்ச்சியும் கிடைத்திருக்கிறது. அதற்கு ஒரே ஒரு காரணம்: மகளை சுதந்திரமாக இயங்க விட்டது! சுதந்திரம் அவளுக்கு பொறுப்பை வழங்கியது! சுயமரியாதையும், சுயமாக வரித்துக் கொண்ட பொறுப்புமே அவளை வடிவமைத்துள்ளது. கடின உழைப்பிற்கும் அது வித்திட்டது. பல இரவுகள் தூங்காமல் வரைந்து கொண்டே இருப்பாள். சமூக ஊடகங்களில் அதனை பதிவிட்டு.. அதன் மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு.. அதன் மூலமே தனக்கென ஒரு வேலையையும் பெற்றாள். பெற்றோரின் வட்டமோ, சிபாரிசுகளோ எதும் அதில் இருக்கவில்லை. அதனால் அதன் பலனும் அவளுடையதே.

பெற்றோர் விவாகரத்து பெற்றுவிட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் பெண் பிள்ளைகளை சமூக ஊடகங்களில் இயங்க விடாதீர்கள்… அவர்கள் சீரழிந்து போவார்கள், அவர்களை கண்கானித்துக் கொண்டே இருங்கள் என்று “மிரட்டுபவர்களுக்காகவும்” இந்த பதிவு 😊


சரியான (சமூக-அரசியல்) விழிப்புணர்வை உங்கள் பிள்ளைகளுக்குக் கொடுத்தால் அவர்கள் அனைத்து கட்டுக்கதைகளையும் (MYTH) உடைப்பார்கள் 😉


விகடன் சுட்டி கீழே உள்ள பதிவில் 😊

கு. ஆனந்தராஜ் அவர்கள் வெகு சிறப்பாக பேட்டி எடுத்து தொகுத்துள்ளார். விகடனுக்கும்,
கு. ஆனந்தராஜ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!


https://www.vikatan.com/lifestyle/women/artist-varuna-talks-about-her-viral-coffee-painting