கொற்றவை
பெண்ணியத்தின் முக்கியமான பேசு பொருள். தமிழகத்தின் ஆளுமைமிக்க குரல். தான்
சார்ந்த உரையாடல்களில் தனித்துவ அரசியலினை பேசுபவர். இன்று பெரும் விவாதப்
பொருளினையும் அடையாள அரசியலினையும் பேசுகின்ற பெண்ணிய கருத்தியல் வாதி. இன்று பெண்களின் உரிமைகள், அவர்கள் மீது
நிகழ்த்தப்படும் கொடுமைகள் அதிகார வங்குரோத்தின் பக்கம் கவனிக்கப்படாமலிருக்கிறது.
இதனால் பெண்ணியம் சார்ந்த உரையாடல்களை உலகெங்கும் பரப்பி விஸ்தரிக்க வேண்டிய
நிலையிருக்கிறது. அதிகார அரங்கானது பெண்களுக்கான உரிமைகளை தக்க நேரங்களில்
வழங்காமல் அவர்களின் தனித்துவ பண்பிற்கு முட்டுக்கட்டையாக அமைந்திருக்கிறது.
வீடுகள் தொட்டு தொழில் புரியும் காரியாலயங்கள் வரை இவையே நடந்தேறுகின்றன.
இதிலிருந்து மீண்டெழுவதற்கு பல பெண்கள் தங்களது அறச்சீற்றத்தினை எறியத்
தொடங்குகின்றனர். மார்க்ஸியம், பெண்ணியம், சினிமா என பல்வேறு குரலாய் இயங்கிக்கிக் கொண்டிருக்கிறார் கொற்றவை.
உரையாடல் தொடர்கிறது பகுதிக்கா அவரிடம் மூன்று கேள்விகளைக் கேட்டேன்.
சாஜித், தினகரன் நாளிதழ், இலங்கை
1) பெண் அடையாளம் சார்ந்து
அதிகமாய் எழுதியும் பேசியும் வருகிறீர்கள். அதற்கான கலை வடிவமாக எதனை
கருதுகிறீர்கள்?
பெண்
அடையாளம் என்பதைக் காட்டிலும் பெண் விடுதலை என்று சொல்லலாம். ஒலி-ஒளி ஊடக
வடிவத்தின் தாக்கம் அளப்பறியது. தனிப் பாடல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி ஆகியவற்றை
நான் முதன்மையானதாகக் கருதுகிறேன். அதனைத் தொடர்ந்து எழுத்து, ஓவியம்.
2) கொற்றவை எனும் பெயருக்கு
பின்னால் ஒழிந்தித்திருக்கும் காத்திரமான அரசியல் எத்தகையது?
சுயமரியாதையையும், சமத்துவத்தையும் நிலைநாட்டியே தீர்வது
என்னும் வெறி கொண்ட அரசியல் அது. கொற்றவை என்று பெயர் வைத்துக்கொள்ள இரண்டு
காரணங்கள் உள்ளன. ஒன்று தூய தமிழ் பெயர். இரண்டாவது நான் யார் என்பதை உணர்த்த.
பார்ப்பனிய ஆதிக்கம் மற்றும் தந்தை வழிச் சமூக ஆதிக்கம் குறித்து படித்த போது போர்
தெய்வமாக இருந்து மன்னாதி மன்னர்களும் வணங்கிச் செல்லும் பெண் (கடவுள்கள்) எல்லாம்
பின்னர் பெண்டாட்டிகளாக ஆக்கப்பட்டு இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை
அறிந்து கோபம் கொண்டேன். நான் ஆள்பவளும் இல்லை. ஆளப்படுபவதற்கு இணங்குபவளும்
இல்லை.
3) எல்லாவற்றையும் சினிமா
பேசத்துவங்குகிறது. எதனை இன்னும் அழுத்தமாக பேச வேண்டுமென நினைக்கிறீர்கள்?
சினிமா
எல்லாவற்றையும் பேசுவதில்லை, உண்மையில் அது பொய்களைச் சார்ந்திருக்கிறது, பொய்களைக்
கட்டமைக்கிறது. சினிமாக்கள் உண்மையை பேசவேண்டும். சமூகத்தால் மறைக்கப்படும்
உண்மைகளைப் பேச வேண்டும். அதிகாரத்தின் கோர முகங்களை அம்பலப்படுத்தி மக்களை ஒன்று
திரட்டி அதனை கிழித்தெரிய தொண்டாற்ற வேண்டும். அதனோடு பெண் உடலை பண்டமாக்கி
கொண்டாட்டம் என்று வழங்குவதை விடுத்து மக்களின் யதார்த்த வாழ்வியல் கலைகளை,
கொண்டாட்டங்களை பிரதிபலிப்பதும், மேம்பட்ட
ரசனைகளை வளர்ப்பதும் அவசியம்.