கட்டுரையாளர் பற்றிய அறிமுகம்
மேகன் மர்பி ஒரு பெண்ணிய பத்திரிகையாளர். வான்கோவரில் பிறந்து அங்கேயே வாழ்பவர். அவருக்கு வட்டார அரசியலில் தீவிர ஆர்வம் உண்டு, குறிப்பாக அவை பாலினம், இனம் மற்றும் வர்க்க செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருப்பதால். மேகன் சிமோன் ஃப்ரேசர் பல்கலைக்கழகத்தில் மகளிரியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர், தற்போது பாலினம், பாலியல் பண்பு மற்றும் மகளிரியல் துறையில் முதுகலை மாணவி. மேகன் மர்பி ‘The F Word radio Show’ எனும் வானொலி அலைவரிசையில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் feminisms.org எனும் வலைத்தளத்தின் நிர்வாக ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். 2008 முதல் The F word உடன் தொடர்பிலிருக்கிறார்.
கட்டுரை – மேகன் மர்ஃபி
சர்வதேசிய பெண்கள் தினத்தன்று பெண்ணிய அலை எழுச்சி குறித்த ஏக்கத்தை வெளிப்படுத்துவது தவிர்க்கவியலாது. ஆனால் பல வகைகளில் அது பரவாயில்லை என்று கருதுகிறேன். சர்வதேசிய பெண்கள் தினம் என்பது வெறும் கொண்டாட்டத்திற்கான நாளல்ல என்பது எனது கருத்து. சொல்லப்போனால், அது ஒரு நினைவூட்டல். சர்வதேசிய பெண்கள் தினம் இன்னமும் நமக்கு வேண்டும் என்பதற்கான நினைவூட்டல்.
உலகெங்கிலும் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர். தொழிலாளர் எனும் அடிப்படையில் உரிமை, இனப்பெருக்க உரிமை, வறுமை ஒழிப்பு, பெண்களுக்கெதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்று பல்வேறு வகையில் போராடிக்கொண்டிருக்கின்றனர். புதிராக, பல மேற்கத்தியர்கள் நாம் சமநிலை சமுதாயத்தில்தான் வாழ்கிறோம் என்று கற்பனை செய்கின்றனர். அவர்கள் எங்கிருந்து உலகை காண்கின்றனர் என்று தெரியவில்லை. நான் நிற்கும் இடத்திலிருந்து காணும் போது நாம் செய்வதற்கு நிறைய இருக்கிறது.
வெள்ளி அன்று, வான்கோவர் மற்றும் மாவட்ட தொழிலாளர் ஆணையத்தின் வருடாந்திர சர்வதேசிய பெண்கள் தின இரவு விருந்தை பதிவு செய்த ஜாரா ஹோட்ஜ், rabble.ca நிறுவனர், களச் செயல்பாட்டாளர், பெண்ணியலாளர் ஜூடி ரெபிக்கின் எழுத்தை மேற்கோள் காட்டி பின்வருமாறு கூறினார்:
”நாம் நிறைய அடைந்திருக்கிறோம், ஆனால் செல்ல வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது,” மேலும் ரேபிக் சொன்னது, பாலியல் தொழிலுக்காக பெண்கள் கடத்தப்படுவதை தடுக்கும், போராடும் நாளை இல்லாமல் செய்வதும், தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டும் ‘வன் புணர்ச்சி கலாச்சாரத்தை’ முடிவுக்கு கொண்டுவருவதும் அவசியமாகிறது.
சர்வதேசிய பெண்கள் தினத்தை ஒரு விடுமுறை நாளாக, கொண்டாட்டமாக கருதுவோர் பலர் இருக்கின்றனர். அது அற்புதமான ஒன்றுதான், நாம் பெண்களை, பெண்களின் சாதனைகளை கொண்டாடுதல் வரவேற்கத்தக்கதே. அதேவேளை இதில் உணரக்கூடிய நிதர்சனம் என்னவென்றால், பெண்ணிய அசைவியக்கங்களின் தேவையை நாம் சில நேரங்களில் மறந்து விடுகிறோம், மூன்றாம் அலை பெண்ணியலாளர்களாக நாம் நமது முந்தைய தலைமுறை பெண்கள், நமது சார்பாக ஆற்றிய அளப்பறிய கடுமையான பணிகளை மதிக்கத் தவறுகிறோம்.
மூன்றாம் அலை, நான் என்னில் கண்ட அலை (நான் 1979ல் பிறந்தேன், அதில் வேறு தேர்வுகள் எனக்கு சாத்தியப்படவில்லை) என்பது, முதல் மற்றும் இரண்டாம் அலைகள் பின்னடைவு கொண்டவை எனும் தீர்மானகரமான கண்ணோட்டத்தை பிரதிபலிப்பவையாக உள்ளன. மூன்றாம் அலையை முழுமுற்றாக நன்றிகெட்ட ஒன்று என்றோ எல்லோரும் அங்கத-விரும்பிகள் (burlesque-loving), ஒழுங்கீன நடைகள், பின் நவீனத்துவவாதிகள் என்றோ தீட்டுவது நியாயமாகாது. இந்த தலைமுறை பெண்ணியலாளர்களிடமிருந்து மதிப்பு மிக்க கோட்பாடுகள், விமர்சனங்கள் வந்துள்ளன, ஆனால் இந்த குறிப்பிட்ட அலையை நான் திரும்பி பார்ப்பது போல் கற்பனை செய்கையில், அவமான உணர்வை போன்ற ஒன்றில் மூழ்கிப்போவது போன்ற உணர்வை கடக்க முடியவில்லை.
தீவிரப் பெண்ணியம் பேசுவோர், மார்பு கச்சையை எரிப்போர், மயிரடர்ந்த உடல் கொண்டோர் (hairy), ஆண்-வெறுப்பு, ஓரினச் சேர்க்கைப் பெண்கள், இரண்டாம் அலைப் பெண்ணியத்தை பிரதிபலிப்பவர்களாக உள்ளனர். மூன்றாம் அலைப் பெண்ணியத்தில் அரை நிர்வானம், குத்தூசி குதிகால் காலணிகள், பெண்களும், பருவ வயதினரும் மேடையில் ஆடைகளைதல் என்பவற்றில் சிக்கொண்டுள்ளோம். அதை பெண் விடுதலை என்கிறோம். ”பாலியல் சுதந்திரம்” எனும் போர்வையின் கீழ் தம்மைத் தாமே ‘தூய்மையற்றவள்’ (slut walk) என்று அணிவகுப்பதில் பெருமை கொள்கிறோம். பெண்களையும், சிறுமிகளையும் உயர் பாலியல்படுத்தும் (hypersezualize) ஒரு பண்பாட்டுகட்டத்தின் நடுவே, ”புறப்பொருளாக்குதல்” (objectification) எனும் சொல்லின் புரிதலை தொலைத்துவிட்டவர்கள், ’போர்ன்’ தொழில்முறையின் பெருகிவரும் வன்முறையை புறக்கணிக்கும் திறனை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் “மறைபொருள்” விவாதங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் ”பெண்ணிய போர்னின்” இருப்பு குறித்த விவாதத்தில் வலிய தடம் புரண்டு செல்கின்றனர். மூன்றாம் அலைக்காரர்கள் சிறிது குழப்பம் நிறைந்த கூட்டமாக இருக்கின்றனரோ என்று தோன்றுகிறது.
தனிப்பட்ட மகளிராக, பெண் எனும் இனத்தின் உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் இருந்து வரும் சூழலில் வெள்ளை பெண்கள், சலுகை பெற்ற, மேற்கத்திய பெண்கள்....ஒழுங்கீன நடை என்று அணிவகுக்கிறார்கள்? ஆடைகளைதலை விடுதலை என்று கட்டமைக்கின்றனர்? உண்மையில்?
லாரா பென்னி தெளிவாக எழுதியதுபோல்:
மற்ற எல்லோரையும் போல், பெண்கள், ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். கடந்த 50 வருடங்களாக நவதாராளவாத கண்ணோட்டத்தின்படி சுதந்திரம் என்பதன் பொருளாக ‘சுவையற்ற’ (bland) ஒரு தன்மைக்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். அப்போதைய காலகட்டத்தில் வெள்ளைப் பெண்கள் பணிப்பெண்ணை அமர்த்திக்கொண்டதால் வாழ்வு எளிதாக இருந்திருக்ககூடும், ஆனால் ஏணையோர், சிக்கனமான, எட்டி உதைக்கப்பட்ட பாலினப் புரட்சியின் பதிப்பிற்கு, பணியில், இல்லத்தில் சமத்துவம் என்பதற்கு பதிலாக, நாம் “தேர்வு”, ”நெகிழ்வுத்தன்மை” மற்றும் குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டுப் பணிகளை பாதிக்காத வகையில் அமையும் மோசமான ஊதியம் தரும் பகுதி நேர வேலைகள் ஆகியவற்றுக்கு சமரசம் செய்துகொண்டோம்.”
வருத்தம் தரும் வகையில் அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. ஒடுக்குமுறை, சுரண்டல், புறப்பொருளாக்குதல் சந்தேகத்திற்கிடமின்றி எவரேனும் ஒருவர் ‘தேர்வு’ எனும் ஆயுதத்தை உங்கள் முன் வீசுவர். அங்கத விமர்சகர்கள் கவனமாக இருங்கள். சில பெண்கள், மேடையில் ஆடை களைப்பு மூலம் தனிநபராக அதிகாரம் பெற்றுவிட்டதாக உணர்கிறார்கள்! பாலியல் தொழில்துறையை விமர்சிப்பதா இல்லை பாலியலை விலை கொடுத்து வாங்குபவரையா? நீங்கள் பாலியல் இன்பத்தை வெறுப்பவர் என்பது தெளிவாக தெரிகிறது. இது ஒரு மோசமான செயல்.
அதிகாரம் பெறுவதற்கு ஒரு பொருளில் இருக்கும் ”கவர்ச்சியை” (sexy) நீங்கள் விரும்பவேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது பாலியல்-நிறை (Sex-positivity). பாலியல்-நிறை எனும் கம்பளம் திடீரென்று சுரண்டல்வாத, பாலியல் தொழிலை பெண்களுக்கான விடுதலை என்று கூறுகிறது? இதை பற்றி என்ன நிணைக்கிறீர்கள்.
போராடுவதற்கு உண்மையில் நமக்கு எதுவும் இல்லையா? இருக்கிறதென்றே நினைக்கிறேன். பெண் உரிமைகளுக்கான போராட்டம் என்பதில் உடைகளைக் களைவது என்று நினைக்கும் அளவுக்கா நமது கற்பனைகள் வரண்டு விட்டது? கூச்சலிட்டு கதற வேண்டும் போல் இருக்கிறது.
இதை விட உருபாடியான எதையாவது நாம் செய்ய வேண்டும். விடுதலைக்கான பாதையை நாம் இவ்வளவு வன்புனர்வு செய்யக்கூடாது. விடுதலை எனும் பெயரில் உள்ளாடை அணிவதைத்தான் பெண்ணியம் என்று சொல்வோமானால் , நான் மற்றொரு அலைக்கு தயாராக இருக்கிறேன் பெண்களே.
பெண்கள் இன்னும் சுதந்திரம் பெறவில்லை என்று உணர்த்தவே உலக மகளிர் தினம் நிலவுகிறது. உலகெங்கிலும் பெண்கள் வன்புணர்வு செய்யபப்டுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், ஆண்களால் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். பாலியல் விற்பனையாகிறது என்பதால் அது நிலவுகிறது, அதாவது பெண்ணின் புட்டத்தின் பின்னிருந்து பணம் செய்கிறார்கள் என்பதால். அது நமக்கு செலவே அன்றி வரவில்லை. ‘ஒழுங்கீன நடை’, பெண்களுக்கானஅதிகார வெளி என்பதன் பெயரில் ஆடைகளையும் களி கூடங்கள், கவர்ச்சி ததும்பும் ’பெண் கலகக்காரர்கள், பெண் (அ லா ஃபெமென்) ஆகியோரை முன்வைத்து ஆண்களும், ஊடகங்களும் களம் இறங்குகிறார்கள். உன்மைதான். அவர்கள் அதை செய்வார்கள். ஏனென்றால் இவை எதுவும் ஆணின் பலத்தையோ, உரிமைகளையோ சவால் விடுவதில்லை. இதுபோன்ற பொருள்களால் தான் உரிமைகள் புனையப்படுகின்றன. உங்கள் மார்பகங்கள் மீது ஒட்டிக்கொள்ளும் கண்கள், கிடைக்கும் கவனம் ஆகியவை உங்களை பலசாலியாக உணரவைக்கலாம். ஆனால், இவையெல்லாம், பெண் எதிர்கொள்ளும் வன்முறையிலிருந்து அவளை எவ்வாறு பாதுகாக்கும் என்று ஐயம் கொள்கிறேன். குத்தூசி குதிகால் செருப்புகளும், பெரிய மார்புகளும் தந்தைவழி சமூக அதிகாரத்தை எவ்வாறு வீழ்த்தும் என்ற கேள்வி எழுகிறது.
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
நவ-தாராளவாத காலகட்டத்தில் பெண் விடுதலை என்பது எத்திசையில் செல்கிறது எனும் கேள்வியை, விமர்சனத்தை மிதவாத, சோஷலிச பெண்ணிய ஆர்வலர்கள் வைத்த வண்ணம் இருக்கிறார்கள். மேலை நாட்டு முதலாளித்துவ, பூர்ஷுவா பெண்கள் எடுத்துரைக்கும் ’உடல் பாகங்களை வெளிக்காட்டும் சுதந்திரம்’ என்பது குறித்து விவாதங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. உடலைக் கொண்டாடுதல் எனும் கருத்தாக்கமாக சுதந்திரம் எனும் பெயரில் பெண் உடல் மீது பல்வேறு வகையான உரிமை முழக்கங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
’கொண்டாடுதல்’ என்றால் என்ன எனும் கேள்வியை நான் விவாதத்திற்கு வைக்க விரும்புகிறேன். எவரின் வரையறையின் கீழ் அது கொண்டாட்டமாக இருக்கிறது? வதை என்று சொல்லப்படும் ஒன்று ஒருவருக்கு கொண்டாட்டமாக இருப்பின் அதையும் உடலைக் கொண்டாடுதல் என்பதில் பொருத்திக்கொள்ளலாமா. உடலை அறிதல், தன் உடலை தானே நுகர்தல், துய்த்தல், நுகரக் கொடுத்தல் என்பதெல்லாம் தனிப்பட்ட தேர்வு, அது முழுக்க முழுக்க சுதந்திரம் சார்ந்தது. அது சரியா, தவறா என்ற ஒழுக்கவாதத்தை நான் முன் வைக்கவில்லை. ஆனால், நாம் சுதந்திரம் என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒன்று உண்மையில் சுதந்திரம் தானா? அது நமது சொந்த தேர்வா? திணிக்கப்பட்ட தேர்வா என்ற கேள்விகளையாவது எழுப்ப வேண்டாமா. அந்த சுதந்திரமும் சமூக சுதந்திரத்தோடு பொறுத்திப்பார்த்து, பொறுப்புணர்வு சார்ந்து கையாள்வது அவசியமாகிறது என்று கருதுகிறேன். முதலாளித்துவம் முன் வைக்கும் தனிமனித சுதந்திரம் என்பது வெறும் நுகர்வு கலாச்சாரம் சார்ந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வர்க்க படிநிலை அடிப்படையில் அச்சுதந்திரத்தின் தன்மை மாறுபடுகிறது.
இந்திய சூழலில் சாதியத் தாக்கம் அதில் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆக நாம் உடல் சார்ந்த சுதந்திரத்தை (மற்ற எவ்வகை சுதந்திரமானாலும் சரி) முன் வைக்கும் போது ஒட்டு மொத்த சமூகத்திற்கு அத்தகைய சுதந்திரத்தை பெற்று தரும் முயற்சியில் ஈடுபடாமல் தன்னளவில் ஒன்றை அனுபவித்தல் என்பது ஒருவகையில் சுயநலம், பொறுப்பின்மை என்றும் சொல்லலாம். ‘கொண்டாட்டம்’ என்பது பணம் படைத்தோர், வலிமை படைத்தோர், சமூக வரையறையின் படி ‘அழகு’ படைத்தோர் மட்டுமே அனுபவிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. (குறிப்பாக உடல் சார்ந்த சுதந்திரம்) பணமில்லாதவர், ‘அழகற்றவர்’, மாற்றுத் திறனாளி, சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்டவர் ஆகியோருக்கான உடல் சுதந்திரம் என்னவாக இருக்கிறது.
கடுமையான உழைப்பிலிருந்து தன் உடலை மீட்டெடுக்கும் சுதந்திரம் ஒருவருக்கு எந்த அளவுக்கு சாத்தியமாகியிருக்கிறது. உழைப்பின் அளவை, அதற்கேற்ற கூலியை நிர்ணயிக்கும் உரிமை உழைப்பாளிக்கு இல்லை. உறவுகளோடு செலவிடும் நேரத்தை கூட முதலாளிக்கு அளித்தது போக மீதமிறுக்கும் நேரத்தை தன் குடும்பத்திற்காக உழைக்கும் நபர் ஒருவர் ஒதுக்க முடிகிறது. உழைக்கும் உடல் மீது செலுத்தப்படும் சுரண்டல் குறித்து எத்தனை சுதந்திர ’உடல் மொழி’ கவிதைகள் வெளிவந்துள்ளன. பொது வெளியில் பாலியல் சந்தைக்குட்படுத்தப்படும் பெண் உடல், தந்தையாலும், தாத்தாவாலும் இன்ன பிற ஆண்களால் சிதைக்கப்படும் பச்சிளம் பெண் குழந்தையின் உடல், பெண் உடல் மீதான இன்னும் இதர சுரண்டல்களை, ஒடுக்குமுறைகளை களைவதற்கான ‘உடல் மொழி’ எந்த விகிதாச்சாரத்தில் இருக்கிறது. கவிதைகளில், புனைவுகளில் உடலை அறிதல், உடலை எழுதுதல் என்பது பெரும்பாலும் பாலியல் உறுப்புகளை பாலியல் இன்பத்தை மையமாக வைத்து விவரித்தல், பாலியல் தேர்வுகளைக் கொண்டாடுதல் என்பதாக சுருங்கி நிற்கிறது. மேலும் பழம்பெருச்சாளிகள் பெண்ணுடலைத் தீட்டு என முன்வைக்கையில் அதை பெண் முன்னெடுத்து நடத்தும்போது அதற்கு ஆண்கள் தரும் வரவேற்பு இதைக் கத்தி மேல் பயணமாக மாற்றுகிறது. கற்றவர் கல்லாதவர் யாராயினும் அவர்கள் பெண்ணுடல் மீது வைக்கும் பார்வையானது சுதந்திரத்தை முன் வைத்தோ இல்லை ரசிப்பை முன் வைத்தோதான் இயக்கப்படுகிறது.
பெண்ணையும் பெண் சாதி பொஞ்சாதி எனக் கட்டமைக்கும் சாதிய மனம் எப்படி பெண்ணை பெண்ணாக முன் வைக்க உதவும். ஒவ்வொரு சாதியும் மிக அழுத்தமான மொழியில் பெண்ணின் பிறப்புறுப்பே சாதி காக்கும் உறுப்பென முன்வைக்கிறது. பார்ப்பனப் பெண்ணுக்கும் கீழ்சாதி ஆணுக்கும் பிறந்தவன் கண்டால் தீட்டு என அறிவிக்கப்பட்ட சண்டாளன், சாதித் தூய்மையும் பெண்ணை நேரடியாக யோனியென்றே முன்னிருத்துகிறது. இதற்கிடையில் முதலாளித்துவமானது தன்னை நிலைநிறுத்த கூலி உழைப்பு லாபம் மற்றும் பொருளாதார காரணிகளை விட அது நம்பும் மனசாட்சி முன் ஜென்மப் பலன்..விதி ஆகியவைகளை முன் வைத்து அது செய்யும் வியபார எத்தனங்கள் சொல்லில் அடங்காதவை. அதற்கிணையாக ஆணாதிக்கம்.
ஆணாதிக்கத்தை நேரடியாக முதலாளித் துவத்திற்கு இணையாக வைத்துப் பேசுவதென்பது முதலாளித்துவத்தின் கொடுமையை சற்றும் கீழிறங்கச் செய்யாது என்றே நம்புகிறேன். முதலாளி தொழிலாளிக்கு இருக்கும் பரஸ்பர உறவு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் உறவுகளில் இல்லை. அடிமைக்கு கூலி பெண்ணுக்கு கற்பு ஒழுக்கம் என்ற கருத்துக்கள் அவளுக்கு இடப்பட்டு அவளை அவளே பத்தினியாக்கவும், பரத்தமைக்கும் அவளே காரணகர்த்தாவாகவும் நிலை நிறுத்துகிறது. ஒரு பெண் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதென்பதே ஒரு ஆணின் துணையோடுதான் என்ற குடும்பச் சார்பு மிக மோசமாக இதை வெளிப்படுத்துகிறது. உடல் மொழி என்பது அடக்கப்பட்ட உறுப்புகளை கொண்டாடத்திற்கு கொண்டு செல்கையில் அதையும் ஆணாதிக்க மனம் மனதளவில் பாலியல் துய்ப்பாகவே எடுத்துக்கொள்ளும் அபாயம் இருப்பதை உணரமுடிகிறது. இது சற்றே, பரத்தமையை கடவுள் பெயரால் ஆணாதிக்கம் விதித்ததைப் போல இப்பொழுது சுதந்திரத்தின் பெயரால் பெண் உடலைக் கொண்டாடச் சொல்கிறது. இதில் அழகிய உடல்களுக்கான கொண்டாட்டத்தை மட்டுமே ஆண் அவனது அகராதியில் கொண்டாடுகிறான்.
நானறிந்தவரை இங்கு கிழவியின் உடல்கள் கொண்டாடப்பட்டதில்லை. குழந்தைகள் பற்றி எழுதுகையில் ஆண்கள் தகப்பனாகிறார்கள் காதலைப் பற்றி எழுதும்போது மகத்தான காதலனாக மாறுகிறார்கள். காமத்தையும் அவ்வாறே. பெண்ணோ தாலாட்டிலிருந்து ஒப்பாரி வரை ஒரு வகை சோக கீதத்தையே முன் வைக்கிறாள். இதற்கிடையில் நவீன கல்வி வழங்கிய சுதந்திரம் அவளை எழுதத் தூண்டிய போது அவள் வைக்கும் ஒவ்வொரு அடியும் பாலியல் சொல்லாடலென ஆண் வர்க்கம் முன் வைக்கையில் அவர்களது அடி மனத்தில் பெண் புணர்வதற்கு படைக்கப்பட்டவள் என்ற உணர்ச்சியே வெளிப்படுகிறது. இந்தியாவில் இருப்பது ஆணாதிக்க சாதி முறை ஆணாதிக்கக் கடவுள்கள் ஆனாதிக்க மனம் இவையே. எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும் அவனது சவப்பெட்டியைத் திறந்து பார்த்தால் அங்கு கொஞ்சம் ஆணாதிக்கம் துடித்துக் கொண்டிருப்பதைக் காணாலாம் என்று லெனின் சொன்னதை இங்கு நாம் புரிந்து கொள்ளலாம். முதலாளியை ஒரு மனிதனாக்கி அவனுக்குள்ளிருக்கும் கருணையையும் வெளிக்கொணற, இயற்கையை ரசிக்க வைக்க எல்லாவற்றையும் விலைபேசும் அவனது மனதை மானுடத்தின் அளவில்லா ஒன்றிணைப்புக் குறித்து அறியச் செய்யவும் பொதுவுடமை போராடுகிறது. இது அவனை முதலாளி என்ற பதத்தில் இருந்து இறக்கி தானும் ஒரு மனிதன் என்ற எண்ணத்தை அவனுக்கு நினைவூட்டவே போராட்டங்களை முன்வைக்கிறது. அதேபோல் ஆணாதிக்க மனத்தின் மூலம் பெண்ணை துய்ப்புக் கருவியாகவே நினைக்கும் ஆணின் மூளையிலிருந்து அவளை ஒரு மனுஷியாக மாற்றும் போராட்டத்தை பெண்ணிலை வாதம் முன்வைக்க வேண்டும். மாறாக இங்கு பெண்ணுடல் சுதந்திரம் என வழங்கப்படுவதெல்லாம் அடிமையை சுதந்திரம் என கூவ மட்டுமே அனுபவிக்கும் ஆணாதிக்க தழுவல்.
முலைக்கு வரிவிதித்த கொடுமையில் தன் முலையை வாழை இலையில் அரிந்து வைத்தவளில் அங்க இழப்பு எந்த மொழி. பாலியல் இன்பத்தை மையப்படுத்தி எழுதப்படும் ஒன்றை உடல் மொழி என்று சொல்வதை விட பாலியல் கவிதை என்றோ, பாலியல் இலக்கியம் என்றோ சொல்வது பொருத்தமாக இருக்கும். பெண் உடலை தீட்டென்றால் அதை பெண் புனிதமாக்கும் உத்தியை பயன்படுத்தி கையிலெடுப்பதென்பது குறைந்த பட்சம் ஆண்களுக்கும் வாய்ப்பை அளிக்கும். ஆணாதிக்க விளம்பரங்களில் பெண்ணுடல் காட்சிப் படுத்தி கொண்டாடுவதை விட இங்கு பெண்கள் தங்கள் உடலை கொண்டாட தங்கள் சொந்த வரிகளை எழுதவில்லை என்பதை நாம் உணரவேண்டும். அங்குல அங்குலமாக ஒரு பெண்ணை கொண்டாடுவது எப்படி என்று பெண்களுக்கே அது சொல்லித் தருகிறது. அதை ஆண் கொண்டாடுதல் என்பது அவனது ஆணாதிக்க பாலியல் வேட்கைக்கு தீனி போடுவதாகிறது. பெண்களாகிய நாம் சுதந்திரம் என்ற பெயரில் அதற்கு துணை நிற்ககூடாதென்றே நினைக்கிறேன்.
பெண் உடலைக் கொண்டாடுதல் என்பதற்கு அதிக ஆதரவும், உரிமையும் கோருபவர்களாக ஆண்கள் இருப்பது எனக்கு அச்சத்தை தருகிறது. அது வணிக ரீதியான சுரண்டலுக்கே பெரிதும் பயன்படுகிறது, மேலும் அது பண்ட பரிமாற்றமாக துணைகளில் எவறேனும் ஒருவர் மட்டுமே அறமற்று செயல்படும் அயல் உறவுகளாக மாறுவதோடு கொடூர மரணங்களிலும், கொலைகளிலும் தஞ்சமடைகிறது. கட்டற்ற சுரண்டல்வாத காமம் கொல்லைப்புறங்களில் வழிந்தோடி, ஆண் பெண்ணுக்கு வகுத்த பருவங்களாக குழந்தை, சிறுமி, பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, பேரிளம், பெண், மூதாட்டி வரை அனைவரையும் ஒரு சதையாக யோனியுறுப்பாகவே காண்கிறது, அங்கு வேறெதுவுமே இல்லை. ஆணாதிக்க மனம் எவரையும் விட்டு வைக்காது அங்கேயே குழி தோண்டி புதைத்தும் விடுகிறது.
(இம்மாத உயிர் எழுத்து இதழில் வெளிவந்துள்ளக் கட்டுரை)