அபியும்
அனுவும் என்றொரு படத்தின் பாடலை நேற்று தற்செயலாக கண்டேன். அதுபற்றிய விபரங்களை கூகிளில் தேடியபோது பெரும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி எனக்கு காத்திருக்கிறது என்பதை அறியாமல் போனேன். அப்படத்தை இயக்கி இருப்பவர் #B_R_Vijayalakshmi. திரைத்துறையில் என்னுடைய ஆசிரியை இவர். BRV என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் இவர் இந்திய சினிமாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
பாட்டுப் பாடவா
என்றொரு படத்தை இயக்கி (ஒளிப்பதிவும் அவரே) 22 வருடங்கள் கழித்து தற்போது ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் என்பதைக் கண்ட போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ‘மேடம்’ – 1995இல் விஸ்.காம் படிக்கையில் அவருடன் Internshipகாகப் போய் சேர்ந்ததே ஒரு விபத்து! அப்போது அவர் இராவணன் என்றொரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தார். அதில் நான் கடைநிலை உதவியாளராக சேர்ந்தேன். உதிவியாளர்களை அவ்வளவு அன்பாக, சரிசமமாக நடத்திய ஒரு ‘Boss’ ஐ நான் அதுவரை கண்டதில்லை. அப்படத்தில் ஏறத்தாழ அவர் மகள் போலவே அவரை சுற்றி சுற்றி வருவேன். ஒளிப்பதிவு குறித்த அடிப்படைகளை கற்று வந்தேன்.
எங்கு
போனாலும் யாருடனாவது சண்டை போட்டுவிட்டு வேலையை விட்டுவிட்டு வருவது வாடிக்கையானதால் அப்படத்தில் வேலை செய்யாமல் பாதியிலேயே வந்துவிட்டேன். (பிரச்சினை வேறொருவருடன்). அதன் பிறகு ‘பாட்டுப் பாடவா’ – நான் முழுமையாக வேலை பார்த்த ஒரு படம். இளையாராஜாவை சந்தித்தது, கவிஞர் வாலியுடன் உரையாடியது. SPB, மோகன் நடராஜன், ரஹ்மான், வடிவுக்கரசியம்மா, லாவண்யா, ராஜசேகர்.. (மற்றும் பலர்) ஆகியோருடன் பணி புரிந்தது எல்லாம் பசுமையான நினைவுகள். SPB என்னை சின்ன மேடம் என்று அழைத்தது இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. மோகன் நடராஜன் அவ்வளவு கிண்டல் பிடித்தவர். இளையாராஜாவை முதன் முதலில் பார்த்தபோது கண்களில் ஆனந்தக் கண்ணீர். கனவா நனவா என்றே வாய் பிளந்து நின்றிருந்தேன். “உட்கார்” என்றபோது “இருக்கட்டும் பரவாயில்லை” என்றேன். “உக்காருன்னு சொல்றேன்ல” என்றார் (அவருக்கு ஏன் இதெல்லாம் நினைவிருக்கப் போகிறது!), பயந்து உட்கார்ந்தேன். அந்த பதின் பருவத்தில், ஒவ்வொரு இரவும் HOW to Name it கேட்டு கேட்டு வலிய அழும் ஒரு Obsession எனக்கிருந்தது. இசைஞானியைக் காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியது BRV யால்.
பாட்டுப்
பாடவா திரைப்படப் பாடல்கள் இன்றும் ஒரு தனி ரகம். அவ்வளவு சிறப்பாக இசையமைத்திருந்தார் இளையராஜா.
இதற்கடுத்ததாக
மேடமுடன் Vasantham Colony என்றொரு தொலைக்காட்சி தொடரில் வேலை செய்தேன். ஒரு ஷெட்யூல் முடிந்தபின் செல்லவில்லை. அதன் பின்னர் என் வாழ்க்கை திசை மாறிப் போனது. பெண் பற்றிய சமூகப் புரிதலாலும் என்னுடைய அறியாமையாலுமே நான் அத்துறையை விட்டு விலக நேர்ந்தது. வருத்தம் தான்… என்ன செய்வது… அதன் பின்னர் BRVயுடன் தொடர்பற்று போனது.
ஏறத்தாழ15
வருடங்கள் கழித்து SUN Kudumbam விருது விழாவில் அவரைக் கண்டபோது வசுவுடன் சென்று மேடம் என்று மகிழ்ச்சியில் அழைத்தபோது “நிம்மி” என்று அதே அன்புடன் கட்டியணைத்தார். “ரொம்ப திறமைசாலிப் பொண்ணு” என்று வசுவிடம் கூறினார். அதன் பிறகு ஓரிருமுறை சந்தித்துப் பேசினோம். பின் வழக்கம் போல் நான் ஒதுங்கிவிடுவேன். ஆனால் நேற்று அபியும் அனுவும் இயக்குனர் அவர் என்று கண்டபோது, ஏதோ என் தாய் எதையோ சாதிக்க கிளம்பியது போல் ஒரு உணர்வு. வாழ்த்து செய்தி அனுப்பினேன். பார்த்துவிட்டு உன் கருத்தைப் பகிர் என்று பதில் வந்தது. நன்றியோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. இதுதான் BRV.
அக்காலத்தில்
ஆண்கள் மட்டுமே கைகொண்ட ஒரு துறையை தேர்ந்தெடுத்து 10 வருடங்களில் 22 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியதோடு, கதாசிரியராக, இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட
சாதனையாளர் அவர். எத்தனையோ ஆண் இயக்குனர்கள், திரைத்துறை தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி தமிழில் பேசப்படுவதைக் கண்ட நான் இதுவரை பி.ஆர். விஜயலக்ஷ்மி குறித்து ஏதும் காணவில்லை. ஆனால் அந்தப் பெண் திரைத்துறையிலிருந்து
தற்காலிகமாக விலகி SAREGAMAவில் தயாரிப்பு நிர்வாகியாகி பல விஷயங்களை தொலைக்காட்சியில் சாதித்ததோடு தற்போது மீண்டும் சினிமாவுக்கு இயக்குனராக திரும்பியிருக்கிறார். வாழ்த்துக்கள் மேடம். Going to watch the film on
Friday!
விரும்பியதை
செய்ய வயது ஒரு தடை இல்லை என்று எனக்கு அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.. பாதியில் விட்ட துறையில் அவர் வழியில் மீண்டும் கால் பதிக்க…. ம்ம் பார்ப்போம்!
கூடுதலாக: https://en.wikipedia.org/wiki/B._R._Vijayalakshmi
கூடுதலாக: https://en.wikipedia.org/wiki/B._R._Vijayalakshmi